நாடகப் பேராசிரியர் சங்கரதாஸ் சுவாமிகளுக்கு முன்னால் போய் நின்றார் டி.எஸ்.கண்ணுசாமிப் பிள்ளை. இவர், சுவாமியின் மாணவர்களில் ஒருவர். பெண் வேஷம் கட்டுவதில் புகழ்பெற்றவர். கண்ணுசாமிப் பிள்ளையுடன் வந்த அவரது பிள்ளைகள் மூன்று பேரையும் கூர்ந்து பார்த்த சுவாமி, ‘‘கண்ணு, உன் பிள்ளைகளை நம் நாடகக் கம்பெனியில் சேர்த்துவிடு. நான் கவனித்துக் கொள்கிறேன்’’ என்கிறார். அதைக் கேட்டு கண்ணுசாமி திடுக்கிடுகிறார்.
‘‘குழந்தைகள் படிக்கிறார்கள்.. படிப்பு கெட்டுவிடும் சுவாமி!’’
‘‘நான் அவர்களுக்குத் தமிழ் சொல்லித் தருகிறேன். படித்து, என்ன வக்கீல் உத்தியோகமா பண்ணப் போகிறார்கள்?’’
குழந்தைகளின் விதியை நிர்ணயம் செய்துவிட்டார் சுவாமி. அப்போது, சுவாமிகளை ஆசிரியராகக் கொண்டு, சிறுவர்களே நடிக்கும் ‘மதுரை தத்துவ மீனலோசனி வித்துவ பால சபா’ தொடங்கப்பட்டிருந்தது.
கண்ணுவினுடைய குழந்தைகளின் படிப்புக்கு முற்றுப்புள்ளி. பெரியவன் டி.கே.சங்கரன். அவனுக்கு மாச சம்பளம் 10 ரூபாய். சின்னவன் முத்துசாமிக்கு 8 ரூபாய். மூன்றாவது குழந்தை 5 வயது டி.கே.சண்முகத்துக்கு 15 ரூபாய். அப்பா கண்ணுசாமி நாடகக் கம்பெனியில் பின்பாட்டுக்காரர், அவருக்கு 65 ரூபாய். கடைசி, நாலாவது குழந்தை பகவதி. கைக் குழந்தை. அதனால் நடிக்க முடியாது. ஆகவே, சம்பளமும் கிடையாது.
ஆண்டு 1918. தமிழகம், கலை சார்ந்த பொழுதுபோக்காக நாடகங்களைக் கொண்டிருந்தது. கூத்துக் கலையின் இடத்தில் நாடகம் வந்தமர்ந்தது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்த நாடக சபாக்களில், நூற்றுக்கணக்கான குழந்தைகள், பள்ளிக்குச் செல்லும் வாய்ப்புகளை இழந்து, நாடகமாடி மக்களை மகிழ்வித்துக் கொண்டிருந்தார்கள். ‘குழந்தைகள் மூன்றுவேளையும் எங்கேயாவது வயிறார சாப்பிட்டுக்கொண்டு இருக்கட்டும்’ என்று மன நிம்மதி கொண்டனர் பெற்றோர். சில விதி விலக்குகள் இருந்தாலும் கடுமை நிறைந்த வாழ்க்கை.
5 வயதுக் குழந்தையாக நாடக கம்பெனியில் சேர்ந்தவர் அவ்வை சண்முகம் என்று புகழ்பெற்ற, பின்னால் மேலவை உறுப்பினராகவும் இருந்த நடிகர் டி.கே.சண்முகம். 1918-ம் ஆண்டு தொடங்கி 1972 வரை தன் நாடக உலக அனுபவங்களை ‘எனது நாடக வாழ்க்கை’ என்ற பெயரில் எழுதியிருக்கிறார். கவி கா.மு.ஷெரீப் நடத்திய ‘சாட்டை’ வார இதழில் எழுதியதன் தொகுப்பே இந்த நூல்.
டி.கே.எஸ்.சகோதரர்கள் என்று புகழ்பெற்ற நால்வரில் மிகு புகழ்பெற்ற கலைஞர் டி.கே.சண்முகம். இந்த நூல், சண்முகத்தின் வாழ்க்கை வரலாறு போலத் தோன்றினாலும், அது 50 ஆண்டு கால, தமிழக நாடக உலக வரலாற்றைச் சொல்கிறது. டி.கே.எஸ் நடித்த முதல் நாடகம் ‘சத்தியவான் சாவித்திரி’. இதில் அவர் நாரதர். ‘சீமந்தினி’, ‘சதி அனுசுயா’, ‘சுலோசனா சதி’, ‘பார்வதி கல்யாணம்’ போன்ற அடுத்தடுத்த நாடகங்களிலும் அவர் நாரதர் வேஷமே போட்டார். சண்முகம், கதாநாயகனாக நடிப்பதற்கென்றே சுவாமி எழுதிய நாடகம் ‘அபிமன்யு சுந்தரி’.
ஊர்தோறும் நாடகம் போடும் குழு, நாடகக் கொட்டகை வாசலில் அதற்கென்று இருக்கும் இடத்தில், இரவு ஏழரை மணி தொடங்கி மூன்றுமுறை வேட்டு போட்டால், ‘நாடகம் தயார்,
இன்று இரவு நாடகம் உண்டு’ என்பது விளம்பரமாகிவிடும்.
மேடையில் நடிக்க வரும் கடவுள் முதல் எமன் வரைக்கும் ஆடிக்கொண்டே தோன்ற வேண்டும். நாடகம், சனி - ஞாயிறுகளில் நடப்பதில்லை. தமிழர்கள், குமாஸ்தாக்களாகத் தம்மை உணரத் தொடங்கிய பிறகு வந்த வழக்கமே சனி - ஞாயிறு விடுமுறை என்பது. செவ்வாய், வியாழக்கிழமைகளில் நாடகம் நடந்தது; அல்லது தினந்தோறுமே நடந்தது. இரவு 10 மணி முதல் விடியும் வரைக்கும்.
இந்த ‘எனது நாடக வாழ்க்கை’ நூலில், முக்கியமான அம்சமாக நாம் காணக் கூடியது ஒன்று. தன் சமகாலத்து நடிகர்கள், தாம் அறிந்த நடிகமணிகள் அனைவரையும் அவர்கள் திறமையை மெச்சி டி.கே.சண்முகம் பாராட்டும் பண்பு. அதோடு, நாடக மேடை தந்திருக்கும் மகத்தான கலைஞர்களான கிட்டப்பா, மதுரை மாரியப்ப சுவாமிகள், எம்.ஆர்.சாமிநாதன், என்.எஸ்.கிருஷ்ணன் என்று இப்போதும் பேசப்படுகிற நடிகர்கள் பெரும்பாலோர் சுவாமிகள் பிறகு சண்முகம் மாணவர்களாக இருக்கிறார்கள். சண்முகத்தைக் குருவாகக் கொண்டவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்.
அரும்பி வளர்ந்துகொண்டிருந்த தேசிய சுதந்திர எழுச்சி நாடகக் கலையைத் தூண்டியதைப் பார்க்கிறோம். தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலரின் (தமிழறிஞர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் சகோதரர்) ‘கதரின் வெற்றி’, அந்த வகையில் முதல் நாடகம். சுதந்திரப் போராட்டம் 1947-ல் முதல் வெற்றியாக வெளிப்பட்டமைக்கு நாடக மேடைக் கலைஞர்கள் மகத்தான பங்கு ஆற்றியதை வரலாறு இன்னும் கவனம் கொள்ளவில்லை. ‘கதரின் வெற்றி’ நாடகத்தில் சண்முகம் சகோதரர்கள் பங்குகொண்டார்கள்.
டி.கே.சண்முகம் அவர்களின் வளர்ச்சி, பொருளாதார ரீதியில் அல்ல, சமூக மனரீதியில் காலத்தோடு ஒருங்கிணைந்தது. காங்கிரஸ் என்கிற போராட்ட இயக்கம், சுதந்திரத்துக்கு பிறகு, அதிகார இயக்கமாக பரிணமித்தது. தந்தை பெரியார், தோழர் ஜீவா, ம.பொ.சி. போன்ற தலைவர்கள் சமூகச் சரிவாய்ப்பு, பொதுமை, தமிழ் மேன்மை போன்ற திக்கில் பயணித்தார்கள். சண்முகத்துக்கு இந்தப் புதிய அரசியல் பிடித்தது. அவற்றோடும், அவர்களோடும் தன்னை இணைத்துக்கொண்டார். சண்முகம், குறிப்பிட்டுச் சொல்லும் படியான ‘தமிழ் அபிமானி’ என்று அக்காலத்து ஊடகங்கள் அவரை அடையாளம் கண்டன.
மேடைக்கு வெளியே, நாடக வெளியைக் கொண்டுசென்று, நாடகக் கலைக்கு சமூக தளம் உருவாக்கவும் அவர் முயன்றார். சாமிநாத சர்மாவின் ‘பாணபுரத்து வீரன்’ நாடகத்தை மதுரகவி பாஸ்கரதாஸ் உதவியுடன் ‘தேசபக்தி’ எனும் பெயரில் புதிய நாடகமாக சண்முகம் தயார் செய்தார். பாரதியின் பாடல்கள் முதன்முதலாக நாடக கம்பெனி மேடையில் ஒலித்தது, அந்த நாடகத்தில்தான். நடிகர்கள் படிக்கவும், எழுதவும் ‘அறிவுச் சுடர்’ என்ற கையெழுத்துப் பத்திரிகையையும் சண்முகம் நடத்தியிருக்கிறார்.
நாடகக் கொட்டகைகள், சினிமா கொட்டகைகளாக மாறிக்கொண்டிருந்தன. அதனால் நாடகம் பாதிக்கப்பட்டது. அறிவியல் தொழில்நுட்பம் புதிய சாதனைகளைச் செய்யும்போது, பழைய அமைப்புகள் பாதிக்கப்படவே செய்யும். நாடகம் நாடகமாகவும், சினிமா சினிமாவாகவும் இருக்க வேண்டும் என்பது பற்றிய அடிப்படைப் புரிதல் இல்லாமையால், நாடகம் சினிமாவின் சாத்தியங்களை மேடையில் கொண்டுவர சிரமப்பட்டுத் தள்ளாடியது. சினிமா, நாடகமாக நடத்தப்பட்டது. சண்முகம் சகோதரர்களின் பெருமுயற்சிகளில் ஒன்று, நாடகக் கலை வளர்ச்சிக்காக மாநாடு நடத்தியது. இதுவே தமிழ்நாட்டில் நடந்த நாடகம் சார்ந்த முதல் மாநாடு. பம்மல் சம்பந்த முதலியார், தியாகராஜ பாகவதர், ஆர்.கே.சண்முகம், நவாப் ராஜமாணிக்கம், என்.எஸ்.கிருஷ்ணன், அறிஞர் அண்ணா, கி.ஆ.பெ. போன்ற பலர் பங்குகொண்ட மாநாடு அது.
நாடகம் பற்றிய இன்றைய புரிதலோடு சண்முகம் அவர்களை அணுகக் கூடாது. மேடை, நடிப்பு, பாட்டு மூலம் சமூகத்துக்கு ‘செய்தி’சொல்வது மட்டுமே, அவ்வை சண்முகம் போன்ற கலைஞர்களின் நோக்கம். அது மட்டுமே தமது பணி என்று வாழ்ந்தவர்கள் அவர்கள். அந்தப் பணியை முழுமையாகவும், விசுவாசமாகவும் செய்த நாடகக் கலைஞர் டி.கே.சண்முகம். அதுவே அவரது வாழ்வும் தொண்டும்!
(நன்றி: தி இந்து)