கதையில், குறிப்பாக நாவலில் வாசிப்பார்வம் எப்படி உருவாகிறது? அடுத்தது என்ன என்ற ஆவலை தொடர்ச்சியாக அது ஊட்டுவதன் மூலம்தான். அடுத்தது என்ன என்று ஒவ்வொரு தருணத்திலும் தெரிந்திருக்கையில் ஒரு நாவல் நமக்கு எப்படி அர்த்தப்படும்? சமகால வரலாற்று நாவல்களின் சவால் இது. சமகால வரலாற்றில் நாமறியாத தகவல்கள் குறைவு.
அபூர்வமான தகவல்களைப் பெரும்பாலும் கலைப்படைப்புகள் கண்டுபிடிப்பதில்லை. அவை தகவல் சார்ந்த புதுமைகளுக்காக முயல்பவை அல்ல. அறிந்தவற்றின் ஆழங்களையே அவை நாடுகின்றன. அறிந்த விஷயங்கள் மீதான புதிய கோணம், அறிந்த தகவல்களின் புதிய வகை தொகுப்பு ஆகியவை மூலம் ஆர்வத்தையும் கலையனுபவத்தையும் ஊட்டவே அவை முயல்கின்றன.
தமிழின் சமகால வரலாற்று நாவல்கள் எனப் பலவற்றை நாம் சுட்டிக்காட்டலாம். பொன்னீலனின் ‘புதிய தரிசனங்கள்’, கெ. முத்தையாவின் ‘உலைக்களம்‘, ‘விளைநிலம்’, ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’, ‘மண்ணகத்துப் பூந்துளிகள்’, ‘பாதையில் படிந்த அடிகள்’, ‘குறிஞ்சித்தேன்’, ‘வளைக்கரம்’ வாசந்தியின் ‘நிற்க நிழல் வேண்டும்’, ‘மௌனப்புயல்’ முதலியவை உடனடியாக நினைவுக்கு வருபவை.சமகால வரலாற்றை அவை தங்கள் கோணத்தில் ஆராய்ந்து அர்த்தப்படுத்தி அளிக்கின்றன. இன்று நம் வாழ்க்கையில் வரலாறு அரசியலுக்குத்தான் அதிகமும் பயன்படுகிறது. ஆகவே சமகால வரலாற்று நாவல்களில் பெரும்பாலானவை அரசியல் நாவல்களே.
சமகால வரலாற்று நாவல் என்ற வடிவுக்குப் பல பிரச்சினைகள் உண்டு. பண்டைய வரலாறு என்பது கால ஓட்டத்தில் அழுத்திச் சுருக்கப்பட்டு ஒருவகையில் சாராம்சப் படுத்தப்பட்டிருக்கும். உதாரணமாக ராஜராஜசோழனின் வரலாற்றில் அவனுடைய குணாதிசயம், ஆட்சி-முறை, அவன் எதிர்கொண்ட பிரச்சினைகள் ஆகியவை சார்ந்து ‘முக்கியமான’ தகவல்கள் மட்டுமே இன்று கிடைக்கின்றன. பிற, காலத்தில் மட்கிவிட்டன.
ஆனால், எம்.ஜி.ஆரின் வரலாற்றில் உண்மையும் பொய்யும், அவசியமானவையும் அவசியமற்றவையுமாக தகவல் பெருங்குப்பை நம்மீது வந்து மோதுகிறது.பழைய வரலாறு என்பது ஏற்கனவே கதையாக மாறிய ஒன்று. இலக்கியம் அதை மீண்டும் கதையாக்குகிறது. சமகால வரலாறு என்பது தகவல்களின் பெருங்குவியல்
பழைய வரலாறு ஏற்கெனவே சாராம்சப்படுத்தப்பட்டிருப்பதனால் அது சார்ந்து துல்லியமான சில தரப்புகள் கலாச்சார மதிப்பீட்டில் உருவாகியிருக்கும். ராஜராஜனை சிவனருட் செல்வனாகவோ, வேளாள ஆதிக்கத்தின் உச்சப்-புள்ளியாகவோ, தமிழ் மன்னர்களில் தலைசிறந்தவனாகவோ பார்க்கும் மதிப்பீடு தமிழில் உண்டு; அவற்றை ஏற்றோ மறுத்தோ நாம் எழுதலாம். எம்.ஜி.ஆரைப் பற்றிய மதிப்பீடுகள் எண்ணற்றவை, ஆளுக்கு ஆள் மாறுபடுபவை.
கடைசியாக ஒன்று, ராஜராஜனின் வரலாறு இன்று ஐதீகச்சாயல் மிகுந்து உள்ளது. இவ்வைதீகங்கள் அவன் கதைக்கு ஒரு கனவுத்தோரணையைத் தருகின்றன. அவற்றை இன்றைய படைப்பாளி குறியீடாகவோ படிமமாகவோ மாற்றிக்-கொள்ளலாம். பழைய வரலாற்று நாவல்களில் எளிதாக ஒரு கனவுச்சாயல் உருவாகி வருகிறது. அது புனைவை விறுவிறுப்பாக ஆக்குகிறது.
உதாரணமாக ராஜராஜசோழன் சைவத் திருமுறைகளை மீட்டது பற்றிய ஐதீகத்தை கற்பனையால் விரிவுபடுத்திக் கொள்ளலாமெனில் நான் இப்படி எழுதுவேன். சைவத்திருமுறைகளை மீட்கும் பொருட்டு ராஜராஜன் பொன்னாலான சைவக்குரவர்களை உருவாக்கினான். அவை மிக உயர்ந்த, இலட்சிய சிற்ப வடிவில் இருந்தன. அவை அச்சைவக்குரவர்களின் பலதோற்றங்களில் ஒன்று மட்டுமே. அவற்றை கொண்டுபோய் சிதம்பரம் நூல்களஞ்சியத்தைத் திறந்தபோது அவற்றுக்கு ஈடான திருமுறைப் பகுதிகள் மட்டும் வெளிப்போந்தன. பிறகு எளிமையும் கனிவும் கொண்ட ஒரு சிவனடியார் மண்ணில் செய்யப்பட்ட சைவக்குரவர் சிலைகளுடன் வந்தபோது பக்தியில் நெகிழ்ந்துருகிய பாடல்கள் வெளிவந்தன.
ஐதீகங்கள் இவ்வாறு மறுஆக்கம் செய்யப்படுவதனூடாகவே ஒரு சமூகம் மரபை புரிந்து, உள்வாங்கிக்கொள்கிறது. பழைய வரலாறு இவ்வாறு தொடர்ந்து உருமாறுகிறது. ஆனால் சமகாலவரலாறு தகவல்களின் கறாரான இரும்புப்பிடிக்குள் உள்ளது. அதை கற்பனை மீறவே முடியாது. உதாரணமாக எம்.ஜி.ஆருக்கு இரண்டு முகம் உண்டு என்பது தெரிந்ததே. ஒரு குறிப்பிட்டவகை தரிசனத்தை என் படைப்பில் நிலைநாட்டுவதற்காக உண்மையில் எம்.ஜி.ஆர். என்ற ஆளுமை இருமனிதர்கள் சேர்ந்து உருவாக்கியது என்றும் சினிமாவில் தெரியும் எம்.ஜி.ஆர். தம்பி, மேடைகளில் வரும் எம்.ஜி.ஆர். அண்ணா, இருவரும் இதை பிறர் அறியாத ரகசியமாக வைத்திருந்தார்கள் என்றும் ஒரு கதையை நான் எழுதிவிடமுடியாது. அது மிகவும் செயற்கையாகத் தொனிக்கும்.
ஆகவே ஒரு சமகால வரலாற்று நாவல் தகவல்களின் உலகுக்குள்ளேயே, தகவல்களின் மறு வடிவமாக, இயங்கவேண்டியுள்ளது. இந்நிலையில் ஒரு சமகால வரலாற்று நாவலை தோற்கடிக்கும் பல அம்சங்களில் முதன்மையானது நாவலாசிரியன் நாவலில் முன்வைக்கும் தரப்புக்கு ஏற்ப வரலாற்றுத் தகவல்களைக் குறைவாகவோ திரித்தோ தருவதுதான். இதன் மூலம் உண்மையில் உருவாகி வருவது சமகால வரலாற்றின் ‘குறைவுபட்ட’ ஒரு சித்திரிப்புதான்.
உதாரணமாக அவசரநிலைக்காலம் பற்றிய ‘புதிய தரிசனங்கள்’, ‘உலைக்களம்’ இரண்டு நாவல்களுமே மிக்க குறைபட்ட சித்திரத்தையே தருகின்றன. ஒரு காங்கிரஸ்காரனும், கட்சி சார்பில்லாத அன்றைய குடிமகன் ஒருவனும், தங்கள் தரப்பை இதைப்போலவே எழுதினால், அவற்றையும் இந்நாவல்களுடன் இணைத்தால், மட்டுமே அவசர நிலைக் காலகட்டத்-தின் முழுமையான சித்திரம் நமக்குக் கிடைக்கமுடியும்.
இலக்கியம் வரலாற்றை முழுமைப்படுத்துவது என்று நான் நம்புகிறேன். வரலாற்று சித்திரம் தகவல்களினாலும், அத்தகவல்களை பலவாறாக கோக்கும் கண்ணோட்டங்களினாலும் ஆனது. எந்த வரலாற்று நூலிலும் ஒரு கோணம் மட்டுமே இருக்கும். ஆனால் வரலாறு இலக்கியமாகும்போது இவ்வனைத்து கோணங்களும் பிணைந்து உருவாகும் ஒட்டுமொத்தச் சித்திரம் அதில் இருக்கும். ஆனால், அது மட்டும் இருந்தால்கூட அது இலக்கியப் படைப்பு ஆவதில்லை. கூடவே வரலாற்றாய்வில் எது தவறவிடப்-படுகிறதோ அது, மானுடமனம்சார்ந்த ஒரு தளம் என அதை மிகத் தோராயமாக கூறலாம்.
உண்மையில் இலக்கியப் படைப்பில் இருக்கும் வரலாற்றின் மீது மனிதமன ஓட்டங்களை ஏற்றிப்பார்க்கும் கலைஞனின் பார்வையின் விளைவு அது. வரலாற்றின் மீது உள்ளுணர்வுசார்ந்த ஆய்வுமுறை ஒன்றை பிரயோகித்துப் பார்ப்பதன் விளைவு அது. வரலாற்றின் மீது அடிப்படையான மானுட அறம் ஒன்று கலைஞனின் தரப்பாக பரவும்போது ஏடிற்படும் விசேஷ அழுத்தம் அது. தமிழில் எழுதப்பட்ட அத்தனை சமகால வரலாற்று நாவல்களிலும் ஒரு தரப்பு மட்டுமே உணர்ச்சிகரமாக முன்நிறுத்தப்பட்டுள்ளன. ஒரு அரசியல் / வரலாற்று நூல் அளிக்காத உபரியான தரிசனம் எதையும் அவை அளிப்பதுமில்லை.
*
மலையாள எழுத்தாளரான தகழி சிவசங்கரப்பிள்ளை கடல் சார்ந்த நிலப்பகுதியான ஆலப்புழையில் பிறந்து வளர்ந்து அதைப்பற்றி மட்டும் எழுதியவர். அவரை ‘குட்டநாட்டின் வரலாற்றாசிரியன்’ [குட்டநாடு ஆலப்புழாவின் மறுபெயர்] என்பதுண்டு. ஆரம்பகாலம் முதலே தகழி அரசியல் ஈடுபாடு உடையவர். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்தவர், தேடப்பட்டு தலைமறைவாக அலைந்தவர், தேர்தலில் போட்டியிட்டவர். ஆரம்பகாலப் படைப்புகளில் தகழியும் கட்சிசார்பான, சித்தாந்தம் சார்பான கோணத்தில் தன் நாவல்களை எழுதினார் ‘இரண்டு கைப்பிடியளவு’, ‘தோட்டியின் மகன்’, ‘அனுபவங்கள் பிழைகள்’ முதலிய நாவல்கள் இதற்கு உதாரணமாகக் கூடியவை.
இப்போக்கில் முதல் திருப்புமுனையாக அமைந்த நாவல் அவருடைய ‘ஏணிப்படிகள்’. இந்நாவலில் தகழி சித்தாந்தப் பிரச்சாரத்தை விட்டுவிடுகிறார்.மாத்ருபூமி வார இதழில் வெளிவந்து அக்காலகட்டத்தில் மிகப்பரபரப்பான வாசிப்பைப் பெற்றது. சி.ஏ. பாலனின் மொழி பெயர்ப்பில் தேசிய புத்தக நிறுவனத்தால் 1975இல் வெளியிடப்பட்டுள்ளது. மூல ‘ஏணிப்படிகள்’ 1964இல் எழுதப்பட்டது.
‘ஏணிப்படிகள்’ முந்தைய நாவல்களைப் போலன்றி ‘ஒட்டுமொத்த’ சித்திரத்தை உருவாக்க சிரத்தை மேற்கொண்ட ஒரு சமகால வரலாற்று நாவல். ஒருதரப்பை மட்டும் முன்வைப்பது அதன் நோக்கமல்ல. ஒரு குறிப்பிட்ட விஷயத்தை மையமாக்க குவிப்பதும் அதன் இலக்கு அல்ல. சுதந்திரத்திற்கு முந்தைய திருவிதாங்கூர் சமஸ்தான அரசில் சிறிய குமாஸ்தாவாக நுழையும் கேசவபிள்ளை படிப்படியாக அதிகாரத்தின் ‘ஏணிப்படிகளில்’ ஏறி, இறுதியில் சீப் செகரடரி என்ற மிக உயர்ந்த பதவியை அடைவதுதான் இந்நாவலின் ‘கதை’. ஒவ்வொரு படியை ஏறவும் ஏதாவது ஒன்றை உதற வேண்டியுள்ளது. தன் காதலை உதறும் கேசவபிள்ளையின் இளம்பருவ சித்திரத்தில் தொடங்கும் நாவல் தன் அறவுணர்வை முற்றிலும் உதறிவிட்டு அதிகார வர்க்கத்தின் தரகராக நிற்கும் கேசவபிள்ளையின் காட்சியில் முடிகிறது.
இந்தக்கதைநகர்வை யதார்த்தமான நம்பகத்தன்மைக்காகவே மிகுந்த கவனம் எடுத்துக் கொண்டு செதுக்கியிருக்கிறார் தகழி. நாவலெங்கும் அசாதாரணமான நிகழ்ச்சிகள் ஏதுமில்லை. பரபரப்பான நிகழ்ச்சிகள் நடந்தாலும்கூட அவை பரபரப்பாகச் சொல்லப்படவில்லை.வடக்கு திருவிதாங்கூரில் ஒரு கிறாமப்புற விவசாயியின் மகனாக பிறந்து கடுமையாக கஷ்டபட்டு பிஏ படித்த கேசவபிள்ளை வேலைக்காக திருவனந்தபுரம் வருகிறார். சிபாரிசுக்காக யாருமில்லை. தெரிந்தவர்களும் யாருமில்லை. மன்னராட்சியின் நிர்வாக அமைப்பில் ஒரு எல்லையில் ஒட்டிக்கொள்வதுமட்டும்தான் அவரது ஆசை. தலைமைச்செயலர் வீட்டுமுன் பழி கிடக்கிறார். ‘விடாதே, கோபம் உள்லவரானாலும் கனிவும் உள்ளவர்’ என்று வாயில் காவலன் சொல்கிறான்.
கடைசியில் ஒருநாள் தலைமைச்செயலர் காரை நிறுத்தி என்ன என்று கேட்டபோது ”பிஏ படித்திருக்கிறேன்.சாப்பிட வழியில்லை’ என்று கண்ணிருடன் சொல்கிறார் கேசவ பிள்ளை.முதலில் சில தடவை எரிந்துவிழுந்த தலைமைச்செயலர் ஒருநாள் கேசவபிள்ளையை உள்ளே கூப்பிட்டு கீழ்மட்ட குமாஸ்தாவாக நியமனம் செய்கிறார். ஏணிப்படிகளில் கேசவபிள்ளை கால்வைக்கிறார்.
அவரது பக்கத்து சீட் தங்கம்மாவுடையது. மெல்ல பழக்கம் காதலாகிறது. ஆனால் ஊருக்கு கூப்பிடும் அப்பா கேசவபிள்ளைக்கு திருமணம் நிச்சயித்திருப்பதைச் சொல்கிறார். அவரது நண்பரின் மகள் கார்த்தியாயினி என்ற கிராமத்துப் பெண்.கேசவபிள்ளை கொதிக்கிறார், எதிர்த்துப் பேச முடியவில்லை. வழியில் அவரைச் சந்திக்கும் அப்பாவின் நண்பர் கிட்டுமாமா ‘அவள் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி. அவளைக் கட்டுகிறவன் பாக்கியவான். ஜாதகத்தை பார்த்தேன்’ என்கிறார். ”ஆனால் இன்னொன்றும் உள்ளது, வாழ்க்கை முழுக்க அவளுக்கு மனநிம்மதி இல்லை” என்றும் சொல்கிறார். கேசவபிள்ளையின் மனதில் அது ஆழப்பதிகிறது.
சிறிய மனப்போராட்டத்துக்குப் பின் கேசவபிள்ளை கார்த்தியாயினியை மணம்செய்ய சம்மதிக்கிறார். அதை தங்கம்மாவிடம் மறைத்து அவளிடமே பணம் கடன் வாங்கி ஊருக்குப்போய் கார்த்தியாயினியை கரம்பிடிக்கிறார். ஏணிப்படிகளுக்காகச் செய்த முதல் துரோகம் அது. இந்த துரோகத்தைச் செய்யும்போது குற்றவுணர்வு அவரை நெடுநாள் வருத்துகிறது. ஆனால் ஆழத்தில் ஊறியுள்ள சுயநலமே வெல்கிறது.
கார்த்தியாயினியும் தங்கம்மாவும் அவரது வாழ்க்கையின் இரு பெண்கள். கார்த்தியாயினிக்கு கணவன் சமையலறை அல்லாமல் வேறு உலகமேயில்லை.தங்கம்மா அந்தரங்கத்தில் மிக ஆவேசமான காமவிருப்புள்ளவள். புயல் போல கேசவ பிள்ளையை அவள் சுழற்றி எடுத்துக் கொள்கிறாள். அவளுடனான அவர் உறவு தொடர்கிறது. தாலிகட்டிய மனைவியை ஊரிலேயே விட்டுவிட்டு திருவனந்தபுரத்தில் தங்கம்மாவுடன் உறவில் இருக்கிறார் கேசவபிள்ளை. கார்த்தியாயினி கண்ணிருடன் ஏக்கத்துடன் காத்திருக்கிறாள். தங்கம்மா ஒருநாள் கேசவபிள்ளையின் காமச்செயல்பாடு போதாமலாகி அவரை உதைத்து துரத்துகிறாள். அவர் ஊருக்குப்போய் கார்த்தியாயினியை காண்கிறார். அப்போதுதான் அவர்கள் கணவன் மனைவியாகிறார்கள்.
தன் நிலத்தை அரசாங்கம் அரசுவேலைக்கு எடுத்துக் கொண்டதன் விலையை பெற அதிகாரத்தின் படிகள் தோறும் அலையும் கோபாலன்நாயர் கேசவபிள்ளையை தேடிவருகிறார். கைக்காசையெல்லாம் லஞ்சமாக்க கொடுத்து தனக்கு உரிமைப்பட்ட அப்பணத்தைப் பெற முயலும் கோபாலபிள்ளையிடம் பதிமூன்று ரூபாயை பேரம்பேசி வாங்கிக் கொள்கிறார் கேசவ பிள்ளை. முதல் லஞ்சம். இது அவரது மனசாட்சியை பாதிக்கும் விதம் இன்னும் சற்று குறைவுதான். காரணம் ஏணிப்படிகளின் அடுத்த படி மட்டுமே அவரது கவனத்தில் உள்ளது.
தலைமைச்செயலகத்துக்கும் திவானுக்குமான அதிகாரப்போட்டியில் ஒருநாள் கறிவேப்பிலை போல தலைமைச்செயலர் தூக்கி வீசப்படுகிறார். தங்கம்மாவின் சித்தப்பா கிருஷ்ணபிள்ளை திவானாகிறார். அவரது மனைவி பகவதிக்குட்டி பேரழகி. திவானின் காரியதரிசி அவளுடைய காதலன். மனைவி மூலமே அதிகார வாசல்களைக் கடந்து கருவறை வரை வந்தவர் கிருஷ்ண பிள்ளை. தங்கம்மாவை வைத்து எப்படியாவது தலைமைச்செயலகத்துக்குச் செல்லும்படி பியூன் மாதேவன் பிள்ளை உபதேசம் செய்கிறார். ” பெரிய ஆளாகும்போது எங்களை மறக்கக் கூடாது” என்கிறார். கேசவபிள்ளை புன்னகைச் எய்வதுடன் சரி.
தங்கம்மாவின் பெற்றோர் அவளுடைய எதிர்காலக் கணவனாகவே கேசவபிள்¨ளையை எண்ணி அவருக்காக சிபாரிசு செய்கிறார்கள். கேசவபிள்ளை ஏணிப்படிகளின் அடுத்த படியை எட்டுகிறார். அவருடன் படித்து அவருக்கே சூபரிண்டெண்டாக வந்து அவரை முன்பின் தெரியாதவர் போல நடத்தும் [தனிப்பட்ட மூறையில் இவ்வனுபவம் எனக்கும் அலுவலக வாழ்வில் உண்டு.] ராமச்சந்திர பிள்ளையை தன்னைத்தேடிவரச்செய்து ‘ ஒன்றுமில்லாவிட்டாலும் நானும் நீயும் கல்லூரித்தோழர்கள்!’என்று சொல்லவைக்கிறார் கேசவபிள்ளை. அதிகாரத்தின் முதல் சுவை!
மெல்லமெல்ல அதிகாரத்தின் போதை கேசவபிள்ளையின் பேச்சை பார்வையை மாற்றுகிறது. அவரை உதறும் தங்கம்மா ராமச்சந்திரபிள்ளையின் காதலியாகிறாள்.அத்தகவலை வந்து சொல்லும் முன்னாள் சக ஊழியர் கோவிந்தன் நாயர் கேசவபிள்ளை அதிர்ச்சி அடைவதில்லை என்று காண்கிறார். அத்தகவலை எவரிடமும் சொல்லக்குட்டாது என்று சொல்லும் கேசவபிள்ளை உடன்பட மறுக்கும் அவரிடம் ; ”அண்ணனுக்கு மோட்டுக்குடிக்கு டிரான்ஸ்பருக்கு நேரமாயிட்டுது போல் இருக்கே ” என்று மிரட்டும் கேசவபிள்ளையில் மாரிய விஷமுகத்தை கோவிந்தன் நாயர் காண்கிறார். முதல் மிரட்டல்!
அதன் பின் அதிகாரத்தின் படிகளில் வேகமாக ஏறுகிறார்கேசவபிள்ளை. திவான் தலைமைச்செயலர் மேல் கோபமாக இருக்கிறார். அவர் காங்கிரஸ் மீது அனுதாபம் கொண்டவரோ என திவானுக்கு சந்தேகம். காங்கிரஸை கடுமையாக ஒடுக்கும்படியும் காங்கிரஸின் முக்கிய தலைகளை லஞ்சம் மூலமும் ஆசைகாட்டியும் அடக்கும்படியும் கேசவபிள்ளை தலைமைச் செயலருக்கு ஆலோசனை சொல்லி வழிமுறைகளும் வகுத்துக் கொடுக்கிறார். அதை திவானிடம் தலைமைச்செயலர் சொல்லியதனால் திவானுக்கு கேசவபிள்ளை மேல் நல்லெண்ணம் வருகிறது. முதல் சதி!
தலைமைச்செயலரின் கைத்தடியாக மாறி காங்கிரஸை உடைத்து தோட்டமுதலாளிகளின் உதவியுடன் திருவிதாங்கூர் காங்கிரஸ் என்ற போட்டி அமைப்பை உருவாக்கி காங்கிரஸை பலமிழக்கச் செய்கிறார். ஈழவ,நாயர் சாதிக்கட்சிகளை திவானுக்கு ஆதரவாகத் திரட்டுகிறார். மெல்லமெல்ல அதிகாரம் மிக்கவராகிறார். கூடவே ஊழலால் சம்பாதிக்கிறார். ராமச்சந்திர பிள்ளையால் கைவிடப்பட்டு தன்னிடம் மீளும் தங்கம்மாவை வைப்பாட்டியாக வைத்து பங்களா கட்டிக்கொடுக்கிறார்.
காங்கிரசை உடைத்து காங்கிரஸ் ஆதரவுக் கூட்டங்களை குழப்பி மக்களை அடித்து சிறையில் இட்டு வதைத்துஅரசு வன்முறையின் சூத்ர தாரியாக விளங்கும் கேசவபிள்ளை மக்கள் விரோதியாக அடையாளம் கானப்படுகிறார். அவரது சொந்த ஊரிலேயே ‘கேசவபிள்ளையை தூக்கில் போடு! ஊழல் சொத்துக்களை ஜப்தி செய் !’ என்ற கோஷம் எழுகிறது. ”ஊரார் சாபம் ஏற்கவா உன்னை படிக்கவைத்தேன்” என்று மனம் புழுங்கும் தந்தையையும் தாயையும் தன் முன்னேற்றத்துக்குத் தடையானவர்கள் என்று வசைபாடுகிறார் கேசவபிள்ளை.
தலைமைச்செயலரின் சூபரிண்டெண்ட் ஆகிறார் கேசவபிள்லை. பின்னர் செயலர் ஆகிறார். ஏணிப்படிகளில் வேகமாக ஏற ஆரம்பித்துவிட்டார். கோபாலன் நாயர் கேசவபிள்ளையின் வீட்டு முன்னாலேயே தூக்கில் தொங்கி இறக்கிறார். நிலத்தை அரசு எடுத்துக் கொண்ட பணத்தைப் பெறும் முயற்சியில் அவரது வீடும் இல்லாமலாகிறது. வெறும் காகிதக்கற்றைகளை தன் மகன் முகுந்தனுக்கு அளித்துவிட்டு வாழ்க்கையைமுடித்துக் கொள்கிறார். அந்த நிகழ்ச்சி கேசவபள்ளையின் ஆழத்தில் இனம்புரியா அச்சமொன்றை நிறைக்கிறது.
ஆனால் அந்த அச்சம் அவரை மேலும் மூர்க்கமாக ஆக்குகிறது. அன்று தன் பங்களா முன் காவல் நின்ற காவலர் குடும்பங்களை வேலைநீக்கம் செய்கிறார். எங்கள் குடும்பங்கள் நிர்க்கதியாகும் என்று அவர்கள் புலம்புகையில் அவர் உதாசீனம் செய்கிறார். அநீதியை அநீதியாலேயே மூடி மறைக்கும் அதிகார மமதை.
ஒரு தருணத்தில் திவானின் கருணையால் கேசவபிள்ளை சட்டென்று தலைமைச்செயலர் ஆகிவிடுகிறார். ஏணிப்படிகளின் உச்சம். கிளப்புகளுக்குச் செல்கிறார். பெரியமனிதர்களுடன் அமர்ந்து குடிக்கிறார். ஆனால் மனைவியை ஊரிலேயே விட்டிருக்கிறார் கேசவபிள்ளை. திருவனந்தபுரத்தில் அதிகாரத்தின் படிகளில் கீழே இருப்பவனின் மனைவியை மேலே இருப்பவன் சுகிப்பதென்பது ஒரு கேளிக்கை மட்டுமல்ல, ஒரு அதிகார உத்தியாகவே உள்ளதென அவர் அறிவார்.
ஊரில் அன்னியப்பட்டு மனம் வருந்தி வாழ்கிறார்கள் கேசவபிள்ளையின் பெற்றோர். கோபாலன் நாயரின் மகன் முகுந்தனால் கேசவபிள்ளையின் தந்தை கொல்லப்படுகிறார். அந்த நிகழ்ச்சியையும் தன் முன்னேற்றத்துக்காக பயன்படுத்த கேசவ பிள்ளையால் முடிகிறது.
சுதந்திரம் நெருங்கி வருகிறது. திவானுடன் சேந்துகொண்டு தனி திருவிதாங்கூருக்காக முயல்கிறார் கேசவபிள்ளை. ஆனால் உள்ளூர அச்சம் வாட்டி வதைக்கிறது. காங்கிரஸ் பதவிக்கு வருவது உறுதி. வந்தால் என்ன ஆகும்? தூக்கில் போடுவார்களா? சொத்துக்களை பறிப்பார்களா? மனைவியடம் சொல்ல முடியாமல் உள்ளுரப் புழுங்குகிறார்.
ஆனால் சுதந்திரம் கிடைத்து திருவிதாங்கூர் இந்திய யூனியனுடன் சேரும்போது சுதந்திரநாளைக் கொண்டாடும் பொறுப்பே அவருக்குத்தான் வருகிறது. அவரால் நம்பவே முடியவில்லை. காங்கிரஸ் தலைவர்கள் அவரை நேரில் கண்டபோது கைகூப்பி பணிந்து நின்றார்கள். அவர் அவ்வழியாகசெல்லும்போது சாதாரண கிளார்க்குகளைப்போல பாய்ந்து எழுந்து நின்றார்கள். அவர்கள் வெறும்மேடைப் பேச்சு வீரர்கள் என அவர் அறிகிறார். மனைவியிடம் சொல்லிச் சொல்லிச் சிரிக்கிறார்.
அவருக்கு வியப்பு. நீண்டகாலமாகவே தெய்வமாக வணங்கிவந்த மன்னரை வெறுத்து இந்த வாய்வீரர்களை எப்படி மக்கள் நம்பி நாட்டையே ஒப்படைக்கிறார்கள்? காரணம் பிரிட்டிஷ் ஆட்சிமேலான வெறுப்புதான். ஆனால் ஆட்சியைப்பிடித்த காங்கிரஸ்காரர்களுக்கு ஆளத்தெரியவில்லை. அல்லது ஆட்சி செய்வது எபப்டி என்ற மலைப்பு. அவர்கள் எவருமே அதிகாரத்தை கையாண்டவர்கள் அல்ல. மேலும் பிரிட்டிஷ்-மன்னர் கால நிர்வாக அமைப்பு மேல் அவர்களுக்கு உள்ளூர மரியாதை. அது அப்படியே நிலைநிற்கவேண்டுமென அவர்கள் நினைக்கிறார்கள்.
ஒவ்வொருவருக்கும் சொந்த நலன்கள் உள்ளன. மலைக்குத்தகை, நிலக்குத்தகை என. அதற்கு உதவக்கூடிய அமைப்பு தேவை அவர்களுக்கு. ஏற்கனவே இருந்த அமைப்பு அவ்வாறு ஊழல்களை பாதுகாக்க, ஊழலுக்கு உதவ நாநூறுவருடம் பயிற்சி எடுத்த அமைப்பு. அவர் மன்னராட்சியில் திவானுக்குச் செய்த அதே செயல்களை அப்படியே இப்போது மந்திரிகளுக்குச் செய்ய வேண்டும் என கேசவபிள்ளை கண்டுகொள்கிறார்.
கேசவபிள்ளை கதர் உடுத்து தேசவிடுதலைக் கொண்டாட்டங்களை கொண்டாடுகிறார். அதிகார அமைப்பு என்பது ஓர் இயந்திரம். அது பாரபட்சமற்றது. நேற்று அவர்களுக்காக உழைத்தோம் இனி உங்களுக்காக. இதை பலமாக வைக்காவிட்டால் நாடு சிதறிப்போகும் என்கிறார் காங்கிரச்காரர்களிடம். அதை ஆமோதிக்கிறது காங்கிரஸ். வலிமையான அரசு இல்லாவிட்டால் ஜனநாயகமே இல்லை என்ற முரணியக்கத்தை அவர்களை நம்பவைக்கிறார்.
கேசவபிள்ளைக்கு உதவியாக வந்துசேர்கிறது கைதாகி சிறையில் இருக்கும் சுதந்திரப்போராட்ட வீரர்களை விடுதலைசெய்யும் பிரச்சினை. ஒட்டுமொத்தமாக விடுதலை செய்தால் நாட்டுமக்களுக்கு சட்டத்தின் ஆட்சி மீதான நம்பிக்கை சிதறிப்போகும் எகிறார் கேசவபிள்ளை. மேலும் உண்மையான குற்றவாளிகளும் ஊடே தப்பித்துவிடக்கூடும். ஆகவே தனித்தனியாக அவர்களின் சொந்தக்காரர்கள் தலைமைச்செயலருக்கு விண்ணப்பிக்கட்டும், அவற்றை பரிசீலனைசெய்வோம் என்கிறார். அப்படியாக காங்கிரஸ் தியாகிகள் சுதந்திர அரசில் தலைமைச்செயலரின் கருணைக்காக காத்து நிற்கும் நிலை ஏற்படுகிறது.
சுதந்திரத்துக்குப் பின் வந்த முதல் தேர்தலில் தீவிரகாங்கிரஸ்காரர்களின் அமைப்பு அதிகாரமேற்கலாகாது என மிதவாத கோஷ்டி விரும்புகிறது. கம்யூனிஸ்டுகள் பற்றிய அச்சமும் அவர்களுக்கு இருக்கிறது. கேசவபிள்ளை ‘குடுமப பாரம்பரியமும் கௌரவமும்’ உள்ளவர்களுக்கு இடம் கொடுங்கள். போராடுவதற்கு பஞ்சைப்பராரிகள் வேண்டும்தான், அவர்கள் நாடாள முடியாது. ஆண்டால் எல்லாம் கெட்டுப்போகும் என்கிறார். ‘புலையனும் பறையனும் வந்து என்ன செய்யப்போகிறார்கள்?’ என்கிறார். அது காங்கிரசுக்கும் ஏற்புடையதாகிறது.
திருவிதாங்கூர் காங்கிரஸையும் சாதிக்கட்சிகளையும் சேர்த்துக்கொண்டு தீவிரவாத கும்பலை வெல்லுங்கள் என்று அறிவுரை சொல்கிறார் கேசவபிள்ளை. ஒவ்வொரு ஊரிலும் தேர்தலை நடத்த பணபலமும் ஆள்பலமும் உள்ள ஆட்களை கட்சியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்கிறார். விளைவாக நேற்றுவரை பிரிட்டிஷ்- மன்னராட்சியின் தரககர்களாக இருந்த அதே கும்பல் காங்கிரஸில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டு அதிகாரத்தைபிடிக்கிறது. ஆட்சி மாறியது. ஆனால் கேசவபிள்ளை மாறவில்லை!
கார்த்தியாயினி அவருக்காக கண்ணிர் வடிக்கிறாள் அவரது சதிகளும் வெற்றிகளும் அவளுக்குச் சரியாகத்தெரியவில்லை. அவரது அப்பா ஊரார் திரும்பிப்பார்க்காமல் அனாதைப்பிணமாக செத்ததை அவள் கண்டாள். அவளுடைய தோழிகளே அரசால் அடித்து வதைக்கப்பட்டதைக் கண்டாள். அரசு என்பது ஒரு பெரும்பாவச்செயல் என அவள் உணர்ந்தாள். கேசவபிள்ளை தன் மகளுக்கு ஓர் அரசு ஊழியனைதேடியபோது அவள் அதை மூர்க்கமாக எதிர்த்து ஒரு விவசாயியே போதும் அரசூழியர்களுக்கு நீதியும் நேர்மையும் இல்லை என்கிறாள்.வாழ்நாள்முழுக்க நான் பட்ட கஷ்டங்கள் அவளுக்கு வேண்டாம் என்கிறாள்.
தீவிர காங்கிரஸ் கோஷ்டி கம்யூனிஸ்டுகளாகிறார்கள். கம்யூனிஸ்டு கிளர்ச்சி வலுக்கிறது. காங்கிரசாக வேடம்பூண்ட நிலப்பிரபுத்துவ- புது முதலாளித்துவ கும்பல் அஞ்சுகிரது. திவானுக்குசெய்த அதே சேவையை கேசவபிள்ளை காங்கிரஸ்காரர்களுக்காகவும் செய்ய நேர்கிறது. வெளிஎதிரிகளான கம்யூனிஸ்டுகளை வேட்டையாடுகிறார். உள் எதிரிகளை அழிக்க சதிவகுத்து அளிக்கிறார், வியூகங்கள் அமைக்கிறார். அரசே அவர் கையில்தான் இருக்கிறது. தனிப்பட்ட சிக்கல்களுக்குக் கூட அவரே ஆலோசனை சொல்கிறார்.
கம்யூனிஸ்டுகள் அடக்குமுறையை மீறி பலம்பெறுகிறார்கள். தேர்தலில் வென்று ஆட்சியைப்பிடிக்கிறார்கள். தலைமைச்செயலராக ஒரு மேனன் வருகிறார். கேசவபிள்ளை அவமானகரமாக தூக்கிவீசப்படுகிறார். ஒரு மேனன் முதல் கேசவபிள்ளையின் அரசுப்பணி தொடங்குகிறது, இன்னொரு மேனனில் முடிகிறது. அந்த மேனனும் குணாதிசயத்தில் இன்னொரு கேசவபிள்¨ளையேதான் என நாவல் காட்டுகிறது.
புதிய ஆட்சி, புதிய தியாகிகள், புதிய தலைவர்கள். ஆனால் அதிகார அமைப்பு அதுவேதான். கம்யூனிஸ்டுகள் நடத்திய புன்னப்புரா வயலார் போராடத்தில் திவானின் பட்டாளத்தை கூட்டிக்கொண்டு வீடுவீடாகப்போய் மனிதவேட்டை ஆடிய அதே முதலாளிகள் கட்சிக்குள் கூட்டணிக்காரர்களாக வந்து அதிகாரத்தை அடைகிறார்கள். அடிபட்டு ரத்தம் கக்கிய தியாகிகள் மறக்கப்படுகிறார்கள்.
அரை எக்கர் நிலம் கிடைக்கும் என்று அரசாங்கத்திடம் மனுபோட்டு தேசப்போராட்டத் தியாகி சங்கரப்பிள்ளையும் சரி, கைதான மகனை விடுவிக்கக் கோரி தலைமைச்செயலகத்திற்கு அலையும் புன்னப்ர வயலார் தியாகி கிருஷ்ணனும் சரி ஒரே இடத்தில்தான் இருக்கிறார்கள். கிளார்க் ஒருவன் தெளிவாகவே சொல்லிவிடுகிறான். ”எது மாறினாலும் அதிகாரம் மாறாது. இன்று நாங்கள் கம்யூனிஸ்டுகளுக்கு கப்பம் கொடுக்கவேண்டியுள்ளது. மக்கள் எங்களுக்கு லஞ்சம் கொடுத்தேயாகவேண்டும்”.
இரு தியாகிகளும் சேர்ந்தே தலைமைச்செயலகம் முன் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். அலட்சியம்செய்யப்பட்டு தற்கொலை செய்துகொண்டு இறக்கிறார்கள். மன்னராட்சியில் ஒருவர் இறந்த அன்றுதான் தலைமைச் செயலகத்தில் கேசவபிள்ளை பதவி ஏற்றார். இவர்கள் இறந்த அன்று அவர் வெளியேறினார். மூன்று அதிகார வற்கம் மாறி வந்துவிட்டது, அதிகார அமைப்பில் எதுவுமே மாறவில்லை.
கேசவபிள்ளையின் மகள் ஒரு கம்யூனிஸ்டைக் காதலிக்கிறாள். அதை கார்த்தியாயினி ஆதரிக்கிறாள். இறந்த தங்கம்மாவில் கேசவபிள்ளைக்குப் பிறந்த குழந்தையுடன் அவர்கள் திருவனந்தபுரம் விட்டு வெளியேறும்போது நாவல் முடிகிறது.
*
இந்தக் கதை வழியாக தகழி சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் கேரள [இந்திய] அதிகார அமைப்பில் ஏற்பட்ட மேலோட்டமான மாற்றங்களையும் மாறாத அடிப்படைக் கட்டுமானத்தையும் விரிவாகச் சித்திரிக்கிறார். எல்லா இலட்சியவாதங்களும் ஏதோ ஒரு இடத்தில் அதிகாரத்திடம் சமரசம் செய்துகொண்டு அதன் பகுதியாக ஆகி, மேலும் அதிகாரம் செலுத்த ஆரம்பித்துவிடுகின்றன. சமரசம் செய்யவே முடியாத தியாகி சங்கரப்பிள்ளையைப் போன்றவர்கள் முழுமையான தோல்விக்கு ஆளாகிறார்கள்.
சுதந்திரம் கிடைக்கிறது, காங்கிரஸ் பதவி ஏற்கிறது, அதிகாரப்போட்டியில் மந்திரிசபைகள் கவிழ்கின்றன. கம்யூனிஸ்ட் ஆட்சி வருகிறது. எதுவும் அடிப்படையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. அரசியல் என்பது துயரப்படும் மக்களுக்கு விடிவுகாலம் வருகிறது என்று சொல்லி போதையூட்டும் ஒரு மாயமாக, ஒரு வகைக் கேளிக்கையாக மட்டுமே உள்ளது என்கிறது இந்நாவல்.
அப்படியானால் அதிகாரத்தை, அடிப்படையான அறக்கோட்பாடுகளை மாற்றியமைப்பது எது? அது நாவலில் ஒருவகையில் சுட்டப்படுகிறது. இந்த நீண்ட காலஓட்டத்தில் அதிகார சுமையும், அற அடிப்படைகளும் வேறு ஒரு விதத்தில் கண்ணுக்குத் தெரியாமல் மாறியபடிதான் உள்ளன. தொடர்ச்சியான மக்கள் போராட்டம் நிகழ்ந்தபடியேதான் உள்ளது. அது பலவற்றை இழந்தாலும் பலவற்றை அடையவும் செய்கிறது. ஒரு பொதுப்பார்வையில் அரசரின் ஆட்சியும் கம்யூனிஸ்டு ஆட்சியும் ஒன்றுதான் என்றுபடலாம். ஆனால் அது உண்மையல்ல. மக்களின் குரல் ஓங்கியிருக்கிறது. சுததிர உணர்வும் உரிமையுணர்வும் உருவாகியுள்ளன. மாற்றங்கள் இப்படித்தான் வர முடியும். நுட்பமாக, கண்னுக்குத்தெரியாமல். மற்றபடி மனித இயல்பில் புரட்சிகர மாறுதல்கள் ஏதும் நிகழ்வதற்கு வாய்ப்பில்லை என்று தகழியின் முதிர்ந்த லௌகீக விவெகம் நாவலில் பேசுகிறது.
வரலாறெங்கும் மனிதனின் திருப்தியற்ற தேடல்தான் புதியவற்றை கண்டடைகிறது, கைப்பற்றுகிறது. ஒன்றை அடைந்ததுமே இன்னொன்றுக்கான தேடல் தொடங்குகிறது.தியாகி சங்கரப்பிள்ளை தோற்றாரென்றால் கேசவபிள்ளைகூடத்தான் வேறு ஒரு விதத்தில் பூரணமான தோல்வியை அடைந்தார் என்று நாவலின் இறுதியில் ஒரு மனபிம்பம் ஏற்படுவது உண்மை.
தகவல்களைக் கறாராக்க கடைப்பிடித்து, பத்திரிகை அறிக்கைகளின் தெளிவுடன், நேரடியாக கதை சொல்கிறார் தகழி. ஆர்வப்படுத்துவதோ, விறுவிறுப்பூட்டுவதோ அவரது இயல்பல்ல. நம்பகத்தன்மையே அவருடைய குறி. நிதானமாக வலைபோல விரிந்து பரந்து செல்கிறது நாவல். தொடர்கதை வாசித்துப் பழகியவர்களுக்கு இந்த சாதாரணத்தன்மையும் நிதானமும் சலிப்பூட்டக்கூடும். சலிப்பும் அலுப்பும் சிறிதளவேனும் ஊட்டாத பெரும் நாவல் ஏதும் உலக இலக்கிய வரலாற்றில் இல்லை என்பதே இதற்குப் பதிலாக அமையமுடியும்.
அதேசமயம் நுட்பங்களை ரசிப்பவர்களுக்கு, வேகத்தை உதாசினம் செய்பவர்களாக அவர்கள் இருந்தால், இப்படைப்பு தொடர்ந்து தீனி போட்டபடியே செல்லும். மன உணர்வுகளை தகழி எப்போதும் ஊசிமுனையால் தொட்டு எடுக்கிறார். காம உறவின் பல்வேறு சூட்சுமமான சுருதிபேதங்களை மிக மிக யதார்த்தமான குரலில் தொட்டுக் காட்டுகிறார்.
உதாரணமாக கேசவபிள்ளை கார்த்தியாயினியைக் கல்யாணம்செய்துகொள்ளும் இடம். அவர்களுக்குள் உறவு மெல்லமெல்ல உருவாகும் விதம். கார்த்தியாயினியின் உடலெங்கும் வியர்வை அழுக்கு. சரியாக்க குளிக்கவே அவளுக்குத்தெரியவைல்லை. ஆனால் அவர் அதில் ஒரு விருப்பத்தை மெல்ல கண்டடைகிறார். அவருள் உறையும் விவசாயியால் விரும்பப்படுபவள் அவள். அவருள் எஞ்சும் ஒரே மனசாட்சியின் அம்சம். ஆனால் அவருள் உறையும் தலைமைச்செயலரின் காதலிதான் தங்கம்மா.
‘தங்கம்மா’ மிதமிஞ்சிய சுதந்திர இச்சை உடையவள், மீறலில் தன்னை அடையாளம் காண்பவள். ஆனால், ஒரு இடத்தில் தன் துடிப்புகளுக்குப் பின்னணியாக வலுவான ஓர் ஆளுமையால் தான் கட்டுப்படுத்தப்படவேண்டும் என்ற விழைவும் இருந்ததை அவளே கூறுகிறாள். இந்த விசித்திரமும் நுட்பமும் கூடிய மனஇயக்கத்தை நாவல் முழுக்க தகழி மிகுந்த நம்பகத் தன்மையுடன் கூறிச் செல்வது கவனத்தைக் கவர்வதாகும்.
நாவலில் ஒருவகை மனசாட்சியின் குரலாக கருதப்படும் கார்தியயினிக்கேகூட அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதும் சொத்துசேர்ப்பதும் தவறென படவில்லை. அது இயல்பான ஒன்றாக அதிகாரச்செயல்பாட்டின் ஒருபகுதியாகமட்டுமே தெரிகிறது. மக்கள் மீதான வன்முறையை மட்டுமே அவள் எதிர்க்கிறாள். இது நம் நாட்டுப்புறமக்களின் இயல்பு. காரணம் பலநூற்றாண்டாக அதிகார அமைப்பு இப்படித்தான் செயல்பட்டுவருகிறதென அவர்கள் அறிவார்கள்.
வரலாற்றை எடுத்துப் பார்த்தால் லஞ்ச ஊழல் என்பவை குற்றம் என்பதெல்லாம் மேலைநாட்டு ஜனநாயகக் கோட்பாடுகளால் இங்கு கொண்டுவரப்பட்ட லட்சியங்கள் மட்டுமே. மன்னராட்சியிலும் சரி அதைத்தொடர்ந்த பிரிட்டிஷ் ஆட்சியிலும் சரி ஊழல் பாரபட்சம் இரண்டும் ஆட்சிமுறையாகவே இருந்தது. சுதந்திரத்துக்குப் பின்வந்த நம் அரசியல்வாதிகளால்தான் எல்லாம் கெட்டுப்போயிற்று என்பவர்கள் இந்நாவல் காட்டும் சித்திரத்தைக் கண்டு அதிரக்கூடும்.
உலக இலக்கியத்தில் ‘தல்ஸ்தோய்த்தன்மை’ என்ற ஒன்று உண்டு. ‘விரிவு, நுட்பம், முழுமை, சமநிலைத்தன்மை’ ஆகியவை கைகூடியவை அத்தன்மை கொண்ட படைப்புகள். அத்தகைய படைப்புகளுக்குத் தமிழ் உதாரணம் சமீபகாலம்வரை இல்லை. ‘ஏணிப்படிகள்’ அத்தகையது. ஒரு சமகால வரலாற்று நாவலின் சிறப்பான முன்னுதாரணமாக ஏணிப்படிகளைக் கூறலாம்.
இந்நாவலின் பலவீனம் என்று உடனடியான பார்வைக்குப் படுவது பெரிய ஆன்மிக, அறநெருக்கடிகள் ஏதும் நாவலுக்குள் நிகழவேயில்லை என்பதே. ஆனால், ஏதும் நிகழாது என்பதுதான் முன்கூட்டியே ஆசிரியருக்கு, தெரிந்த, அவர் கூற விரும்புகிற ஒன்றாக உள்ளது. ஒரு ஒட்டுமொத்த சித்திரம்தவிர இது வேறு எதுவுமே அல்ல என்பதே இதன் பலம், பலவீனம்.
ஏணிப்படிகளின் அதே உலகை விவரிக்கும் நாவல் ஒன்று மலையாளத்தில் உள்ளது, தமிழரான மலையாற்றூர் ராமகிருஷ்ணன் எழுதிய ‘யந்திரம்’. இந்திய ஆட்சிப்பணியில் நுழையும் ஒர் இளைஞனின் அகநெருக்கடியையும் வீழ்ச்சியையும் சொல்வது அந்நாவல். அதை ஏணிப்படிகளின் அடுத்த பகுதி என்று சொல்லலாம். சுதந்திர இந்தியாவில் ஐம்பதுவருடங்களில் ஆட்சியில் எதுவுமே மாறவில்லை, கேசவபிள்ளைகளுக்கு அழிவேயில்லை என்பதற்கான சான்று அந்நாவல்.
(நன்றி: ஜெயமோகன்)