தாழிடப்பட்ட கதவுகள் - வரலாற்றின் திறப்பு

தாழிடப்பட்ட கதவுகள் - வரலாற்றின் திறப்பு

வெள்ளை ஆடை சுற்றப்பட்டு, முகங்கள் மூடப்பட்டு மொஹல்லாவின் வீதியில் வரிசையாய் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன சிதைந்த உடல்கள். மனபாரத்தில் மறுகி வெளிறிக் கிடந்த முகங்களில் இரத்த ஓட்டம் நின்று போயிருந்தது.கழுத்தில் கிடந்த கருகமணியை இறுகப் பற்றிய பெண்களின் கதறல் திசைகளற்று காற்றில் அலைந்து கொண்டிருந்தது. இசுலாமிய சகோதரனின் உயிர் எரிந்து ஒடுங்கிய சாம்பல் மேட்டில் இருந்து மதவெறியூட்டும் ஓநாய்கள் குதூகலித்து ஊளையிட்டன. கொலை செய்வதையும் குறிவைத்து கொள்ளையடிப்பதையும் கொண்டாட்ட மனநிலையோடும் குதூகலத்தோடும் செய்து முடித்திருந்தனர் சனாதன வெறியர்கள்.

காவி நஞ்சேறிய கோவைக் காவல்துறையும் அரசு நிர்வாகமும் அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகளை பூட்ஸ் கால்களால் மிதித்து வதம் செய்தன. பூண் சுற்றிய லத்திக்கம்புகளால் ஜனநாயகத்தின் முகத்தை குத்திச் சிதைத்தன. கையறு நிலையில் வெம்பிக் கிடந்தது சமூகத்தின் மனசாட்சி.கோவையில் இந்துத்துவ கும்பல்கள் நிகழ்த்திய பெரும் வன்முறையின் நித்தியசாட்சியாய் அனைத்தையும் அடைகாத்து வைத்திருக்கிறது வரலாற்றுப் பெட்டகம். வரலாறு அடைகாக்கும் ஆறாத ரணத்தின்வலியை மீண்டுமொரு முறை பிரசவித்திருக்கிறது அ.கரீமின் ‘தாழிடப்பட்ட கதவுகள்’சிறுகதைத் தொகுப்பு. சிறுகதைகளுக்கான தமுஎகச விருது பெற்ற இந்நூலின்உள்ளடக்கம் படிப்போரின் மனங்களை உலுக்குகிறது.அந்தோணி செல்வராஜ் என்கிற போக்குவரத்துக் காவலர் சில இசுலாமியர்களால் கொலை செய்யப்பட்ட போது,பெயரிலிருந்த அந்தோணியைக் கத்தரித்துசெல்வராஜ் எனும் இந்துக் காவலர் இசுலாமியர்களால் கொலை செய்யப்பட்டுவிட்டார் என மதவெறியூட்டி நகர் முழுவதும்கலவரத்தை உருவாக்கினர். வன்முறையில் பத்தொன்பது இசுலாமியர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

எதிர்வினையாக நடந்த குண்டு வெடிப்பும் அதையொட்டி அரங்கேற்றப்பட்ட வன்முறையும் நகரை மேலும் நிலை குலையச் செய்தது. இசுலாமியர் சொத்துக்கள் திட்டமிட்டு சூறையாடப்பட்ட பின் தீக்கிரையாக்கப்பட்டன. சொந்த வீடுகளிலிருந்தும் காலனிகளிலிருந்தும் அவர்கள் துரத்தியடிக்கப்பட்டனர். மனித நேயத்தோடு அரவணைத்த அக்கம் பக்கத்தவர் மிரட்டப்பட்டனர்.பாபர் மசூதியைத் தகர்க்க 1990களில் இந்தியா முழுவதும் காவிப்பயங்கரவாதிகள் மேற்கொண்ட தயாரிப்புகளின் பகுதியாகவே கோவையும் குறிவைக்கப்பட்டது. தொழில் நகரமென்றும் தொழிலாளி வர்க்க அமைப்புகள் செல்வாக்குடன் செயல்படுகின்றன என்றும் அறியப்பட்ட கோவையை, காவி நஞ்சேற்றி இசுலாமியர்களுக்கு எதிரான வெறுப்பை விதைத்து, கலவரச் சூழலுக்கு ஏதுவாகஉருவாக்கி வைத்திருந்தனர். இடைநிலைமற்றும் அடிநிலைச் சாதிகளைச் சார்ந்தவர்களை குறிவைத்து அணிதிரட்டி கைகளில் ஆயுதங்களையும் சிந்தனையில்வெறுப்பையும் வழங்கி வன்முறையாளர்களாக மாற்றி வைத்திருந்தனர்.1998ல் கலவரம் நடந்தது. கரீமின் முதல் சிறுகதை 2012ல் புதுவிசையில் வெளிவந்தது. இடைப்பட்ட பதினைந்து ஆண்டுகள் உண்மைகளை அறிந்து கொள்வதற்கும் சரிபார்ப்பதற்குமான காலமாக மனசுக்குள் ஊறிக் கிடந்திருக்கிறது. இந்தக் கால இடைவெளி, தகவல்களில் கூடுதல் துல்லியத்தையும் கதைகளில் செய் நேர்த்தியையும் கொண்டு வந்திருக்கிறது.மனசுக்குப் பிடித்த வருங்கால கணவன் அஸ்ரப்பை கலவரத்திற்கு காவு கொடுத்த பைரோஜாவின் கதறல் அஸ்ரப்பு... அஸ்ரப்பு..!

நம் செவிகளில் மாறி மாறிஅறைகிறது. நூறு குண்டூசிகளை கணநேரத்தில் கருவிழியில் குத்திக் தோண்டி எடுத்த அவளின் வலி நம் குருத்தெலும்பை கூச வைக்கிறது. அரசு மருத்துவமனை எதிரில் ஆணுறுப்பு அறுக்கப்பட்டு உடலெங்கும் பெட்ரோல் நீராட்டி பற்ற வைக்கப்பட்டத் தீ நம்மையும் எரிக்கிறது. (மொகல்லாவின் மையத்துகள்)சாதிக்கின் நானிம்மா (பாட்டி) இறந்து நாற்பதாம் நாள் பாத்தியா சடங்கிற்காக ஜங்கிள் பீர் அவுலியா தர்காவில் கூடி இருந்தனர் பேரன், பேத்தி, எள்ளு, கொள்ளுபிள்ளைகள். நெற்றியில் செந்தூரப் பொட்டிட்டு ஆரஞ்சு நிறரிப்பன் கட்டிக் கொண்டு கைகளில் உருட்டுக் கட்டையுடன் உயிர் பறிக்கும் வெறியோடு தர்காவின் கதவுமுன், உயிர் பிச்சைக் கேட்டு யாசிக்கும் கலங்கிய கண்களை எதிர் கொள்ள முடியாமல் நம் முகம் கவிழ்கிறது. (மௌத்துகளின் காலமது)கலவரத்தின் போது புகழ்பெற்ற ஷோபா துணிக்கடை தீ வைத்துப் பொசுக்கப்பட்டது. வன்முறையாளர்கள் கடைக்குள் நுழைய காவல்துறை அதிகாரியே கடையைத் திறந்து கொடுத்து பாதுகாப்பும் வழங்கியதாக ஓர் குறிப்பிருக்கிறது. கலவரக் காலத்தில் நடந்தேறிய சூதும் வஞ்சமும் அழித்தொழிப்பும் நம்மைப் பதறவைக்கிறது. கரீமின் எழுத்துக்களில், கலவரத்தின் துயர் மிகுந்த நாட்கள் மீண்டும் உயிர் பெறும் போது இசுலாமிய மக்கள் மீது ஏவப்பட்ட வன்கொடுமைகள் அதே கூர்மையுடன் நம்மையும் தாக்குகிறது. நம் சகோதர சகோதரிகள் தனித்தனியாக அனுபவித்த வலியும் சமூகமாக அனுபவித்த துன்பமும் மனதின் சமநிலையைக் குலைக்கின்றன.

செய்திகளாக வாசித்தறிந்திருந்த தகவல்கள் படைப்பிலக்கியமாக வாசிக்கப்படும் போது நம்மை உணர வைக்கின்றன; உறைய வைக்கின்றன. கதை மாந்தர்களின் கண்களில் உருண்டு திரளும் கண்ணீர்த் துளிகள் வாசகனின் முகங்களில் வடிய அடக்கமுடியாமல் வெடித்துக் கதற வைக்கின்றன.“கொஞ்சம் ஸ்டேசன் வரைக்கும் வந்துட்டுப் போயிருப்பா, ஒரு சின்ன விசாரணை” என்று அழைத்துச் செல்லப்பட்ட அப்பாவி அகமதுவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதுசெய்யப்பட்டதாக அறிவித்து சிறையிலடைத்தார்கள். பதினேழு ஆண்டுகள் கழித்து குற்றமற்றவன் என விடுதலை செய்யப்பட்டான். அந்தபதினேழு ஆண்டுகள்....! “என்ன வாழ்க்கடா மயிரு, பேசாம புள்ளைக்கு ஏதாவதுகொடுத்துத் தானும் குடிச்சிட்டுப் போய்த் தொலைவோம்” எனத் தோன்றிய வேதனையை மீறி அகமதுவின் மனைவிரோஹையா வாழ்ந்த வாழ்க்கையும் ‘தீவிரவாதியின் மகள்’ என சக மாணவர்களால் ஒதுக்கப்பட்டு காயப்படுத்தப்பட்ட அகமதுவின் மகள் ஜாஸ்மினின்கசப்பேறிய இளமையும் சகிக்க முடியாதவை. (வெடிப்புக்கு பின் காலம்)இசுலாமியர் நெருக்கமாக வாழும் பகுதி மத்திய ரிசர்வ் படையால் சுற்றி வளைக்கப்பட்டு திறந்த வெளி சிறைச் சாலையாய் மாற்றப்பட்டது. சாதாரண பொதுமக்கள் மனதில் ஒவ்வொரு இசுலாமியரும் தீவிரவாதியாய் சித்தரிக்கப்பட்டு குற்றவாளியாய் நிறுவப்பட்டனர்.

“நாம் இந்துக்கள் இசுலாமியர்கள் ஒரு கொடியில் இரு மலர்கள்” என நம் தேசத்தின் ஆன்மாவைப் பாடிய கவி நஸ்ருல் இஸ்லாமின் வரிகளுக்கு வலிமை சேர்க்கும் விதமாக சிறுகதைகளின் ஊடாக பாதிக்கப்பட்ட இசுலாமியர்களுக்கு ஆதரவாகவும் இந்து மத வெறியர்களின் வன்முறைகளுக்கு எதிராகவும் எழுந்த மனிதநேய இந்துக்களின் குரல் பின்னணி இசையைப் போல அழுத்தமாகப் பதிவாகி உள்ளது.இச்சிறுகதைகளில் பல ‘புதுவிசை’ காலாண்டிதழில் பிரசுரமானவை. அதன் ஆசிரியர் ஆதவன் தீட்சண்யா இயலாமை உணர்வின் உளைச்சலோடு எழுதியுள்ள அணிந்துரையில் இச்சமூகத்திடம் முகத்திலறைவதைப் போல சில கேள்விகளை முன் வைத்துள்ளார். மன நெகிழ்வை ஏற்படுத்தும் விதமாக கண்ணீரால் கழுவிவிட முடியாத குற்ற உணர்வோடு எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் முன்னுரை வழங்கி உள்ளார். இவர்களின் எழுத்துக்கள் தொகுப்பை மேலும் கூர்மைப் படுத்துகின்றன.‘வன்முறை என்பது கொலை என்று நினைக்கிறோம் கொலை கடைசியில் நிகழ்வது.

அதற்கு முன் சொல்லால் செயல்களால் நிறைய வன்முறைகளை நிகழ்த்தி விட்டு கடைசியில் தான் கொலைக்கு வருகிறது. கடவுளின் பெயரால். மதத்தின் பெயரால் நிகழும் அப்படியான எந்தவொரு வன்முறையையும் நான் அடியோடு வெறுக்கிறேன் எதிர்க்கிறேன்’ என்கிறார் இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா.இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவின் சொற்களை மெய்ப்பிக்கும் நிகழ்வாக கோவைக் கலவரம் நடந்தேறி உள்ளது. தாழிடப்பட்ட கதவுகள் கோவையில் நடந்த வன்முறையின் பல்வகைப்பட்ட பரிமாணங்களையும் அது விளைவித்த துன்ப துயரங்களின் நேரடி சாட்சியமாகவும் படைக்கப்பட்டுள்ளது. தாழிடப்பட்ட கதவுகள் வலிமிகுந்த வரலாற்றின் திறப்பு காவி வன்முறைக்கு எதிரான ஜனநாயகத் தன்மை வாய்ந்த செயல்பாடுகளுக்கு அ.கரீம் படைத்துள்ள இச்சிறுகதைகள் கூடுதல் வலு சேர்க்கும்.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp