தாண்டவராயன் கதை: முதல் மனப்பதிவுகள்

தாண்டவராயன் கதை: முதல் மனப்பதிவுகள்

ஆசை
Share on

பா.வெங்கடேசனின் ‘தாண்டவராயன் கதை’ நாவல் 2008-ல் வெளியானது. அப்போது, முதல் இரண்டு அத்தியாயங்களைப் படித்தேன். ஏற்கெனவே, கோணங்கி போன்றோரின் படைப்புகளைப் படிக்க முயன்று தோற்றுப்போயிருந்த என்னை ‘தாண்டவராயன் கதை’ நாவலும் பிடித்து வெளியில் தள்ளியது. அதன் அந்நியத் தன்மையும் இயல்பற்றதாக எனக்குத் தோன்றிய நீண்ட வாக்கியங்களும்தான் அதற்குக் காரணம். ஒன்பது ஆண்டுகள் இடைவெளியில் மீண்டும் அந்த நாவலைப் படித்ததற்கு ஒரே காரணம் ‘பாகீரதியின் மதியம்’ நாவல்தான். தற்போது அச்சில் இல்லாத ‘தாண்டவராயன் கதை’யை அதன் பதிப்பாளர் ஆழி செந்தில்நாதனிடம் கேட்டு எப்படியோ ஒரு பிரதியை மார்ச் மாதத்தில் வாங்கிவிட்டேன். ஏப்ரல் மாதம் அந்த நாவலைப் படிக்க ஆரம்பித்தேன். இந்த முறையும் அதே அனுபவம்தான். எனினும், பொறுமையைக் கடைப்பிடித்து 400 பக்கங்கள் வரை வந்துவிட்டேன். அப்படியும் தாக்குப்பிடிக்க முடியாமல் மேற்கொண்டு படிப்பதை விட்டுவிட்டேன். இந்த நாவல்மீது அசாத்தியமான காதலைக் கொண்ட சில இளம் வாசக நண்பர்கள் தொடர்ந்து என்னை வலியுறுத்தவே ஐந்து மாதங்களுக்குப் பிறகு கடந்த வாரம் மறுபடியும் கையிலெடுத்தேன். விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தேன். இந்த முறை நாவல் வெகு வேகமாக என்னை உள்ளிழுத்துக்கொண்டது. நேற்று இரவு 10.15-க்கு நாவலை முடித்துவிட்டு, ‘அப்பா கதை சொல்லுறேன் வா, அப்பா கதை சொல்லுறேன் வா’ என்று நாவலைப் படிக்க விடாமல் இடைவிடாமல் கூப்பிட்டுக்கொண்டிருந்த என் மகனின் அழைப்பை ஏற்று அவனிடம் கதை கேட்கப் போவதுவரை படைப்புச் சூறாவளியாக என்னுள் ‘தாண்டவராயன் கதை’ சுழன்றடித்து மாயங்களை நிகழ்த்திக்கொண்டிருந்தது.

படித்து முடித்ததும் எனக்கு ஏற்பட்ட சில மனப் பதிவுகளைச் சுருக்கமாக இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

நிறைகள்:

1. என் வாசிப்புக்குட்பட்டு தமிழில் இதற்கு நிகரான படைப்புப் பெருவெடிப்பை (Creative big bang) தமிழ் இலக்கியத்தின் பாரதிக்குப் பிந்தைய பரப்பில் நான் கண்டதில்லை. ‘தாண்டவராயன் கதை’யை பா.வெங்கடேசன் தாண்டவம் ஆடிய கதை என்றும் சொல்லலாம். இப்படிப்பட்ட படைப்பை எழுதிவிட்டு பா.வெங்கடேசன் ஆரவாரம் இல்லாமல் இருப்பது முதலில் ஆச்சரியத்தைத் தந்தாலும் இப்படிப்பட்ட படைப்பை எழுதுபவரின் இயல்பு அதுதான் என்று பிறகு எனக்குத் தோன்றியது.

2. அசாத்திய கற்பனைகளின் தொடர்ச்சியான அணிவகுப்பு நாவல் முழுவதும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.

3. அந்நியத் தன்மை, இந்தியப் புராணிக நடை, 18-ம் நூற்றாண்டின் தமிழ் நடை என்று எல்லாம் கலந்த நடையில் அலாதியான வாசிப்பனுபவத்தை நாவல் கொடுக்கிறது.

4. ‘பாகீரதியின் மதியம்’ நாவலில் உள்ளதைப் போல இந்த நாவலிலும் ‘நிகழ்ந்ததெல்லாம், நிகழ்ந்த பொழுதிலல்ல, மாறாக நிகழ்ந்ததன் மீதே நிகழ்ந்தது. மற்றும் நிகழ்த்திக்கொண்டிருந்தது.’ நாவலில் வரும் காலம், இடம், மனிதர்கள் எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். இண்டெர்ஸ்டெல்லார் படத்தில் வருவது போன்ற ‘காலவெளி ஊடுதுளை’யை (worm hole) ஒத்த தருணம் இந்த நாவலில் வருகிறது. இந்தக் கருத்தாக்கத்தைப் பற்றி பா. வெங்கடேசனுக்குத் தெரியுமோ தெரியாதோ, ஆனால் நாவலில் அதுபோன்ற புனைவு அற்புதமாக உருக்கொண்டிருக்கிறது.

5. நாவலில் வரும் ‘நீலவேணியின் பாதை’, 40 பக்கங்கள் கதைப்பாடலாக நீளும் ‘தாண்டவராயன் கதை’ போன்ற பகுதிகள் தமிழ்ப் புனைகதை மொழியின் உச்சபட்ச சாதனைகளுள் வைக்க வேண்டியவை.

6. என் தனிப்பட்ட வாசிப்பின் சிறுபரப்பைப் பொறுத்தவரை காப்ரியேல் கார்ஸியா மார்க்கேஸின் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலை விட இது மகத்தானது. சீரொழுங்கு என்றால் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலுக்குப் பக்கத்தில் ‘தாண்டவராயன் கதை’ வர முடியாது. ஆனால், இந்த நாவலில் வெளிப்பட்டிருக்கும் படைப்புப் பெருவெடிப்புதான் இதை மார்க்கேஸின் நாவலை விட மேலானதாக ஆக்குகிறது. இது என் தனிப்பட்ட ரசனையின் அளவுகோல்படி உருவான கருத்து என்பதையும் நாவலைப் படித்து முடித்த பரவசத்தில் இதை நான் சொல்கிறேன் என்பதையும் அவசியம் கருத்தில் கொள்ள வேண்டும்.

குறைகள்:

1. நாவல் எந்த வகையிலும் உணர்ச்சிபூர்வமான பிணைப்பை ஏற்படுத்தவே இல்லை. இது மார்க்கேஸின் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலுக்கும் பொருந்தும். ‘பாகீரதியின் மதியம்’ நாவலில் வலியை, காதலை, காமத்தைக் குத்திக் கிளறிவிடும் தன்மை நெடுக இருந்துகொண்டே இருக்கும். ‘தாண்டவராயன் கதை’யில் அந்தத் தன்மை அநேகமாக இல்லை. ஒரு புனைவு சாகசத்தை வேடிக்கை பார்க்கும் மனநிலைதான் இந்த நாவலைப் படிக்கும்போது ஏற்படுகிறது. படித்து முடித்தவுடன் துக்கமோ துயரமோ பேரன்போ அல்லது ஜெயமோகன் வழக்கமாகச் சொல்வதுபோல் ‘மகத்தான அறவுணர்ச்சி’யோ என் மனதில் வந்து கவிந்துகொள்ளவில்லை. விக்கிரமாதித்தன்-வேதாளம் கதைகள், தேவதைக் கதைகள் போன்றவற்றைப் படித்ததுபோன்ற உணர்வுதான் இருந்தது. பூர்வகுடிகளின் கதி, புரட்சி போன்றவற்றைப் பற்றி நாவலில் விஸ்தாரமாக எழுதப்பட்டிருந்தாலும் சாகசப் புனைவும் அசாத்தியமான மொழி வீச்சும் முன்னவை ஏற்படுத்தக்கூடிய உணர்வுகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன.

2. அசட்டுத் தித்திப்பு என்று ஒரு பிரயோகம் இருக்கிறது. திகட்ட வைக்கும் அதீத இனிப்பைக் குறிப்பது அது. அதைப் போன்று, மலைக்க வைக்கும் சாகசப் புனைவைத் தொடர்ந்து கட்டவிழ்த்துக்கொண்டே வருவதால் அதீதங்கள் ஒரு கட்டத்தில் அலுப்பையும் ஏற்படுத்துகின்றன. பத்து நாவல்களுக்கான கதைகளை, புனைவை, சாகசங்களை, மொழியை இந்த ஒரே நாவலில் இறக்கியிருக்கிறார். இதைப் பாராட்டாகவும் வைத்துக்கொள்ள முடியும். விமர்சனமாகவும் வைத்துக்கொள்ள முடியும். ‘மரத்தை மறைத்த மாமத யானை’யைப் போல் படைப்பை மறைத்து நிற்கிறது பா.வெங்கடேசனின் மலைக்க வைக்கும் அதிசய ஆளுமை.

3. நாவலில் குறைந்தது இருநூறு பக்கங்களை நீக்கிவிடலாம். இதற்குத் தெளிவான எல்லைக்கோடு இல்லை என்பதால் கதைத் தொடர்ச்சியை விட்டுவிடாமல் சில பகுதிகளைச் சுருக்கமாக எழுதியிருக்கலாம். முதல் இருநூற்றைம்பது பக்கங்களை, அவற்றில் அற்புதமான பகுதிகள் சில இருந்தாலும், கடப்பதற்கு இப்போதும் சிரமமாகவே இருக்கிறது. நானூறு பக்கங்களுக்கு மேல்தான் வெங்கடேசன் விஸ்வரூபம் எடுக்கிறார்.

4. தொடர்ச்சியான அதீத சாகசப் புனைவின் காரணமாக நாவலின் இறுதிக் கட்டத்தை நெருங்கும்போது சற்றே அலுப்பு ஏற்படுகிறது. ‘பாகீரதியின் மதியம்’ நாவலின் முடிவைப் போலில்லாமல் அழுத்தமே இல்லாத ஒரு இடத்தில் நாவல் முடிந்துவிடுவதைப் போல் தோன்றுகிறது.

5. பா.வெங்கடேசனுக்கு நீளமான வாக்கியங்கள் மீது அளவுகடந்த காதல் இருப்பது பற்றி நமக்குப் பிரச்சினை இல்லை. உத்தி என்பது ஒரு கருவி. அதுவே படைப்பல்ல. உத்தியையே பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறாரோ என்று நினைக்க வைக்கும் இடங்கள் ‘பாகீரதியின் மதியம்’ நாவலை விட இதில் அதிகம். வாக்கியங்கள் தன்னளவில் நிறைவுபெற்றிருந்தாலும் அவற்றின் இறுதியில் பல இடங்களில் முற்றுப்புள்ளி வைக்காமல் காற்புள்ளியையே வைத்திருக்கிறார். ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் இதற்கு என்னால் உதாரணங்களைக் காட்ட முடியும். இங்கும் ‘மரத்தை மறைத்த மாமத யானை’ கதைதான்.

இன்னும் சில…

1. ‘தாண்டவராயன் கதை’ நாவல் பரவலாகப் படிக்கப்படவில்லையென்றாலும் ஒரு சிறு வாசகப் பரப்பு, அதிலும் இளைஞர்கள் பலர், அதைக் கொண்டாடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியைத் தந்தாலும் சூரியனுக்கு மேலும் கீழும் இருக்கும் எல்லாவற்றையும் பற்றி எழுதிக்கொண்டிருக்கும் தமிழ் எழுத்தாளர்கள் பலரும் இப்படி ஒரு நாவல் வந்திருப்பதாகவோ அதைத் தாங்கள் படித்திருப்பதாகவோ காட்டிக்கொள்ளாததைத் தமிழ் நவீன புனைகதை வரலாற்றின் மாபெரும் இலக்கிய ஊழல்களுள் ஒன்றாகவே கருதுகிறேன். இந்த நாவலைக் கடுமையாக விமர்சித்து எழுதியிருந்தால்கூட நான் மகிழ்ச்சியடைந்திருப்பேன். முழு பூமியைச் சோற்றில் மறைப்பதுபோல் இந்த நாவலை மறைத்துவிட்டு, தங்களுக்கு உரிய கவனிப்போ அங்கீகாரமோ கிடைக்கவில்லை என்று பலரும் புலம்பிக்கொண்டிருப்பதைக் கண்டால் வேடிக்கையாகவே இருக்கிறது.

2. நான் பா.வெங்கடேசனை அளவுக்கு மீறித் தூக்கிவைத்துக்கொண்டாடுகிறேனா? கொண்டாடுகிறேன், ஆனால், அளவுக்குக் குறைவாகத்தான். என் மொழியில் காப்ரியேல் கார்ஸியா மார்க்கேஸுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத ஒரு ஆளுமை பிறந்திருக்கும்போது அவரை நான் கொண்டாடுவதில் என்ன தவறு? வாழும்போது கொண்டாடத் தவறிய பாரதியை இப்போது கொண்டாடிக்கொண்டிருக்கும் சமூகம் அல்லவா நம்முடையது. பா.வெங்கடேசனை மட்டுமல்ல, அவருக்கு நிகரான, அல்லது அவரைத் தாண்டிச்செல்லும் யாரையும் நான் கொண்டாடுவேன். கற்பனை சக்தியின் சாத்தியத்தை எந்த அளவுக்கெல்லாம், அதுவும் நம் மொழியிலேயே, விரிக்க முடியும் என்று பா.வெங்கடேசன் காட்டியிருப்பது தனிப்பட்ட முறையில் எனது நன்றிக்குரியது.

கடைசியாக ஒன்று! ‘தாண்டவராயன் கதை’ நாவலைப் படித்து முடித்த கையோடு இந்தக் குறிப்புகளை நான் எழுதுகிறேன். ஆகவே, விமர்சனப் பார்வையைவிட பரவசத்தின் ஆதிக்கமே அதிகம் இருக்கக்கூடும். இந்த நாவலை இரண்டாவது முறையாகப் படித்துவிட்டு அப்போது விரிவாக எழுதுகிறேன். எதுவும் நிரந்தரமல்ல என்பதற்கொப்ப, எனக்கு இப்போது பா.வெங்கடேசனின் படைப்புகள் மிகவும் பிடித்திருக்கின்றன. அந்த உணர்வை நான் கொண்டாடுகிறேன். பிடிக்காமல் போகும்போது (அப்படி நிகழ்வதற்கு சாத்தியம் குறைவு என்றாலும்) அதையும் வெளிப்படுத்துவேன்.

(நன்றி: ஆசை)

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp