'தாவோ தே ஜிங்' என்ற இப்புத்தகம், 2500 ஆண்டுகளுக்கு முன்னால் லாவோ ட்சு என்பவரால் சீனாவில் எழுதப்பட்டது. இந்நூலே தாவோயிசத்துக்கு அடிப்படை நூலாகும். வயதில் கன்பூசியஸைவிட 50 ஆண்டுகள் மூத்தவரான லாவோ ட்சு சீனத் தலைநகரில் ஆவணக் காப்பாளாராகப் பணிபுரிந்து பின் அரசியல் நிலைமை மோசமானதால் பதவியிலிருந்து விலகினார். இவரைப் பற்றிப் பல கதைகள் நிலவுகின்றன. அவற்றில் ஒன்றின்படி, இவர் தலைமறைவாகப் போக எண்ணி எல்லையைக் கடக்கும் முன் எல்லைப்புற அதிகாரி இவரை வற்புறுத்தி ஏதாவது எழுதித் தரச் சொன்னதாகவும் அதன் பேரில் இவர் 5,000 சித்திர எழுத்துகளில் 'தாவோ தே ஜிங்' எழுதித் தந்ததாகவும் தெரியவருகிறது.
'தாவோ' என்பதற்குப் பல பொருள்கள் இருக்கின்றன, அவற்றுள் இந்த நூலின் தலைப்புக்குப் பொருத்தமானது 'வழி' என்னும் பொருள் ஆகும். 'தே'வுக்கு 'நேர்மைக்கு உந்துதல் அல்லது ஊக்கம் தேவை' என்று இப்புத்தகத்தில் பொருள் கூறப்பட்டிருக்கிறது. 'ஜிங்' என்றால் நூல் என்று பொருள். ஆக, 'தாவோ தே ஜிங்' என்றால் 'தாவோ'வையும் 'தே'யையும் பற்றிய நூல் என்று பொருள்படும்.
'தாவோ தே ஜிங்' புத்தகத்துக்குப் பல பரிமாணங்கள் இருக்கின்றன. இயற்பியல் கண்ணோட்டத்திலிருந்தும் அதனைப் பார்க்கலாம்; உதாரணத்துக்குப் பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்த 'தாவோ தே ஜிங்'கின் பாடல்கள் இன்றைய அறிவியலுக்கு ஒரு புதிராகவே காட்சியளிக்கின்றன:
‘இருத்தலின்மை என்பது
வானக, வையகத்தின்
தோற்றுவாய் எனப்படுகிறது
..................................................
இருத்தலின்மையும் இருத்தலும்
ஆதியில் ஒரே மாதிரி;
ஆனால், வெளிப்படும்போது
வேறு வேறு.
இந்த ஒற்றுமை நுண்மையின் நுண்மை எனப்படுகிறது.’
என்ற பாடலிலும்,
‘பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும்
இருத்தலிலிருந்து வருகின்றன;
இருத்தல்
இருத்தலின்மையிலிருந்து வருகிறது’
என்ற பாடலிலும் நவீன இயற்பியல் பேசும் ஒருமைக்கணத்துக்கு (singularity), அதாவது பிரபஞ்சத்தின் தோற்றம் நிகழ்வதற்குக் காரணமாகக் கருதப்படும் பெருவெடிப்பு (big bang) நிகழ்வதற்கு முந்தைய கணத்துக்கு நெருக்கமான கருத்துகளைக் காணலாம்.
இந்தப் பாடல்களுக்கு இணையான ஒரு பாடலாக ரிக் வேதத்தின் நாஸதிய சூக்தத்தின் பாடலை (nAsadiya sUkta - Rig Veda 10:129) கருதலாம். நவீன இயற்பியலுக்கும் கீழைத்தேசங்களின் மெய்யியலுக்கும் உள்ள இதுபோன்ற ஒப்புமைகளை ‘இயற்பியலின் தாவோ’ (The Tao Of Physics) என்னும் நூலில் ஃப்ரிட்ஜாஃப் காப்ரா எழுதியிருக்கிறார். அறிவியலுக்கும் மெய்யியலுக்கும் முடிச்சுப் போடுவது பெரும் சிக்கல். வேத காலத்திலேயே விமானங்கள் கிரகம் தாண்டி கிரகம் பறந்தது என்பது போன்ற வாதங்களில் போய் முடியும் ஆபத்து இருக்கிறது. இரண்டு வேறுவேறு சிந்தனை முறைகள் இந்த பிரபஞ்சத்தை எப்படி அணுகியிருக்கின்றன என்பதைப் பார்ப்பதோடு நிறுத்திக்கொள்வது தற்காலத்துக்கு நல்லது.
இன்றைய வாழ்க்கை முறைக்கு 'தாவோ தே ஜிங்' எவ்வளவு அவசியமானது என்ற கண்ணோட்டம் எல்லாவற்றையும்விட முக்கியமானது. இன்றைய வாழ்க்கை முறை அதன் எல்லா பரிமாணங்களிலும் மிகமிக வேகமாகச் சென்றுகொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது. மனிதர்களால் கட்டுப்படுத்த முடியாத வேகம்; வேகம்தான் அவர்களை அழைத்துச்செல்வதைப் போன்று தோன்றுகிறது. வேகம் குறைந்தாலோ அல்லது நின்றாலோ மனிதர்கள் பதற்றாமாக ஆகிவிடுவார்கள் போன்று தோன்றுகிறது. வேகம்தான் மனிதர்கள், மனிதர்கள்தான் வேகம்.
தாவோ மிதத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறது; மெலிவைப் பற்றி மட்டுமே பேசுகிறது; குறைவைப் பற்றி மட்டுமே பேசுகிறது; தேய்வைப் பற்றி மட்டுமே பேசுகிறது. வலியது, கடினமானது, அதீதம், மூர்க்கம் எல்லாம் மரணத்தின் அறிகுறிகள் என்கிறது:
‘உயிரோடு இருக்கும்போது மனிதன்
மென்மையாக, மிருதுவாக இருக்கிறான்;
உயிர் போன பிறகு அவன்
கடினமாக, விறைப்பாக இருக்கிறான்
......................
கடினமும் விறைப்பும் சாவின் கூறுகள்;
மென்மையும் மிருதுவும் வாழ்வின் கூறுகள்;
எனவே மிகக் கடுமையாக இருக்கும்போது போர் வீரன்
வெற்றி பெற முடியாது;
மிகக் கடினமாக இருக்கும்போது மரம்
முறியாமல் இருக்க முடியாது’
என்கிறது ஒரு பாடல்.
இதன் தொடர்ச்சியாக ‘வீரம்’, ‘மேலாதிக்கம்’ ஆகிய கருதுகோள்களையும் அப்படியே புரட்டிப்போடுகிறது தாவோ:
‘மிகச் சிறந்த போர்வீரன்
வீரத்தனமாக இருப்பதில்லை;
மிகச் சிறந்த போராளி
மூர்க்கத்துடன் இருப்பதில்லை.
மிகச் சிறந்த வெற்றிகளைக் குவிப்பவன்
போரில் பங்குபெறுவதில்லை;
மிகச் சிறந்த முதலாளி
வேலைக்காரர்களுக்குக் கீழே தன்னைத்
தாழ்த்திக்கொள்கிறான்’
என்கிறது ஒரு பாடல்.
வலிவு, மூர்க்கம், உக்கிரம் எல்லாம்தான் உண்மையில் பலவீனமானவை என்கிறது ‘தாவோ’:
‘வலிவின் உச்சத்தை
உயிர்கள் எட்டியதும்
மூப்படையத் தொடங்கிவிடுகின்றன;
இப்படி மூப்படைவது
தாவோவுக்கு எதிராக இருக்கிறது.
இப்படி தாவோவுக்கு எதிராக இருப்பது
சீக்கிரமே முடிவுக்கு வந்துவிடும்.’
இன்றைய வாழ்க்கை முறையின் அதீதங்களாகிய போர், ஆயுதங்கள், தீவிர அதிகாரம் போன்றவற்றுக்கு எதிரான கருத்துகளை இப்படி 'தாவோ தே ஜிங்' நெடுகக் காண முடிகிறது. ஆக்கிரமிப்புக்கான போரையும் மரண தண்டனையையும் தவிர்ப்பது, முற்றிலும் எளிமையாக வாழ்வது, தீவிர அதிகாரத்தை வற்புறுத்த மறுப்பது ஆகிய மூன்று வழிகளைப் பரிந்துரைப்பதன்மூலம் நடைமுறை வாழ்க்கைக்கும் நடைமுறைக்கும் அரசியலுக்கும் வழிகாட்டுகிறது 'தாவோ'.
'தாவோ'வின் கருத்துகளிலேயே மகத்தானதாகவும் மிகவும் பயனுள்ளதாக இருப்பதுவும் 'செயல்படாமை' என்ற கருத்தாக்கம்தான். ‘செயல்படாமை’ என்பதற்கு எதையும் செய்யாமல் சும்மா இருப்பது என்பது பொருளல்ல. மிகக் குறைந்த முயற்சியுடன் சரியான சமயத்தில் ஒன்றின் அல்லது ஒருவரின் இயல்பைச் செயல்பட விடுவது என்பது இதன் பொருளாகும்.
இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமானால் சில உதாரணங்களைக் காட்டலாம். கிரிக்கெட் விளையாட்டில் பந்து வீசப்படும்போது மட்டையாளர் மிகுந்த முயற்சி செய்து ஏறிச்சென்று பந்தை அடிப்பார்; நாமெல்லாம் அது எல்லைக்கோட்டைத் தாண்டிச்சென்று அவருக்கு ஆறு ஓட்டங்களைப் பெற்றுத்தரும் என்று நினைப்போம். ஆனால் அது மைதானத்தின் பாதி தூரத்தைக் கூடத் தாண்டாமல் எதிரணி வீரரால் பிடிக்கப்பட்டுவிடும். ஆனால், சில சமயங்களில் வீசப்படும் பந்தைச் சற்றுத் தொடுவதுபோன்றுதான் வீரர் அடித்திருப்பார் அது மிகவும் அதிக தூரம் சென்று அந்த வீரருக்கு ஆறு ஓட்டங்களைப் பெற்றுத் தரும். இது எப்படி? வேறொன்றுமில்லை, வீசப்பட்ட பந்தைச் சரியான சமயத்தில் சரியான திசையில் மிகக் குறைந்த முயற்சியுடன் ஆனால் எந்த முன்திட்டமுமில்லாமல் சட்டென்று செயல்பட்டு அடித்திருப்பார்; இதில் அவருடைய விசையுடன் பந்துவீச்சாளரின் விசையையும் அவர் பயன்படுத்தியிருப்பார். அதுதான் காரணம். இந்த இடத்தில் ஜூடோவை உதாரணமாகக் காட்டலாம். ஜூடோவில் எதிராளியின் தாக்குதலின் விசையைப் பயன்படுத்தித் தன்னுடைய குறைந்தபட்ச முயற்சியின் மூலமாகவே எதிராளியை வீழ்த்துவார்கள்.
நாமெல்லாம் எப்போதும் எல்லாக் காரியங்களிலும் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறோம் (தாவோவின் அர்த்தத்தில்). நமது இயல்பைச் செயல்பட விடுவதில்லை. மலையளவு முயற்சியைக் கொண்டு தினையளவு பலனை அறுவடை செய்கிறோம். ஆனால், செயல்படாமை அப்படி அல்ல; தினையளவு முயற்சியைக் கொண்டு மலையளவு பலனை அறுவடை செய்வது.
இந்தச் செயல்படாமையை அடைவதற்குத் தேய்வுதான் சரியான வழி; தேய்ந்த முற்றான வெறுமையை அடைவதுதான் வழி என்கிறது 'தாவோ'. ஏனென்றால் 'இருத்தலில்லாததுதான் ஊடுருவ முடியாததில் நுழைய முடியும்' என்கிறது அது:
‘புலமையை நாடிச் செல்கிற மனிதன்
நாள்தோறும் வளர்வான்;
தாவோவை நாடிச் செல்கிற மனிதன்
நாள்தோறும் தேய்வான்
தேய்வான், தொடர்ந்து தேய்வான்,
செயல்படாமையை அடைகிறவரையும்
மேலும்
எல்லாவற்றையும் செய்ய முடியும்,
செயல்படாமையினால்.’
இந்தத் கருத்துகள் எல்லாம் மிகவும் சிக்கலானவைதான்; மேலோட்டமான பார்வையில் குழப்பக் கூடியவைதான். ஆனால், சொற்களை அவற்றின் இயல்பான பொருளிலிருந்து நாம் பார்க்கக் கூடாது. மேலோட்டமான பார்வையில் இப்படி முரண்படுகிற, வெறும் வார்த்தை விளையாட்டு என்று தோன்றுகிற பல பாடல்கள், வரிகள் தாவோவில் உண்டு; அவை எல்லாமே நல்லது x கெட்டது, அழகு x விகாரம், நன்மை x தீமை போன்றவற்றைப் பற்றி நாம் கொண்டிருக்கும் பொதுவான கருதுகோள்களைத் தூக்கி எறியக் கூடியவை:
‘அழகாயிருப்பது அழகு என்று
எல்லோரும் புரிந்துகொண்டால்
விகாரம் தோன்றுகிறது.
நன்மையை நன்மை என்று
எல்லோரும் புரிந்துகொண்டால்
தீமை தோன்றுகிறது.’
ஒருவர் குழம்பிப்போகலாம்; என்ன இது. நன்மையை நன்மை என்று புரிந்துகொள்வதுதானே நல்லது. இங்கே அது தீமை என்றல்லவா சொல்லப்படுகிறது?
நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், நன்மை, அழகு போன்ற விஷயங்களெல்லாம் பிரக்ஞைபூர்வமானவை அல்ல. அவை இயல்பானவை. அழகாக இருப்பது அழகு என்பதால் அழகாக இருக்க முயல்வதும், நன்மை செய்வது நன்மை என்பதால் நன்மை செய்ய முயல்வதும் இயல்புக்கு அதாவது தாவோவுக்கு எதிரானது.
நன்மை என்று ஒன்றைக் கருதும்போது தீமையும் அழகு என்று ஒன்றைக் கருதும்போது அந்த இடத்தில் விகாரமும் தோன்றிவிடுகிறது. கடவுள் என்று நினைத்தால் சாத்தான் தோன்றிவிடுகிறது அல்லவா? அதுபோலத்தான் இதுவும்.
தாவோ, ஜென் எல்லாமே அறிவை மிகவும் எதிர்க்கின்றன. அறிவு இயல்புக்கு எதிரானது என்று கருதப்படுகிறது. முரண்படுவதுபோல் நமக்குத் தென்படுகிற வேறுசில கருத்துகளையும் தாவோ முழுவதும் காணலாம். சான்றோரைப் பெருமைப்படுத்தக் கூடாது என்கிறது தாவோ; அபூர்வமான பொருள்களை மதிக்கக் கூடாது என்கிறது; சாகசத்தில் ஈடுபடுபவன் அழிவான் என்கிறது.
‘தாழ்மையாக இரு;
அப்போது நீ முழுமையாக இருப்பாய்
வளைந்திரு;
அப்போது நீ நோராக இருப்பாய்
காலியாக இரு;
அப்போது நீ நிரம்பி இருப்பாய்
தேய்ந்துபோய் இரு;
அப்போது நீ புதிதாக இருப்பாய்’
என்றும்,
‘புலமையைக் கைவிடு;
அப்போது,
துக்கம் தெரியவராது.
புனிதத்தைக் கைவிடு;
புத்திசாலித்தனத்தைத் தூக்கியெறி;
அப்போது,
மக்கள் பல மடங்கு பலன் பெறுவார்கள்.
கருணையைக் கைவிடு;
நியாயத்தைத் தூக்கியெறி’
என்றும்
‘வாசலைத் தாண்டிப் போகாமலே
உலகம் அனைத்தையும்
ஒரு மனிதன் தெரிந்துகொள்ள முடியும்.
................
அதிகம் பயணிக்கும் ஒருவன்
மிகவும் குறைவாகவே தெரிந்துகொள்கிறான்’
என்றும், நாம் காலங்காலமாக அறிந்துவைத்திருப்பவற்றின் மீதெல்லாம் தாக்குதல் நடத்துகிறது 'தாவோ'.
'தாவோ'வின் மகத்தான பெருமை என்னவென்றால் அது வெறும் தத்துவம் அல்ல; நூறு சதவீதம் நடைமுறைக்கானது. தாவோவின் கருத்துகளை, முக்கியமாக செயல்படாமையை, அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தலாம்; பயன்படுத்தியுமிருக்கிறார்கள். இன்றைய வாழ்வுக்கு மிகச் சரியான வழிமுறையை 'தாவோ தே ஜிங்' நமக்குப் பரிசளிக்கிறது. அதைப் பின்பற்றுவதும் பின்பற்றாததும் நம் கையில்தான் இருக்கிறது.
உலகில் அதிக அளவில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில் ‘தாவோ தே ஜிங்’கும் ஒன்று. தமிழிலும் இதற்குப் பல மொழிபெயர்ப்புகள் வந்திருக்கின்றன. அதில், சி.மணி மொழிபெயர்த்த ‘தாவோ தே ஜிங்’ தனித்துவமானது. மேலே மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் வரிகள் அவருடைய மொழிபெயர்ப்புதான். 2002-ல் ‘க்ரியா’ வெளியீடாக வந்த அந்தப் புத்தகத்தில் உள்ளடக்கத்துக்கு ஏற்றவிதத்தில் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் இயான் லாக்வுட் எடுத்த அழகான கறுப்பு-வெள்ளைப் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. ‘தாவோ தே ஜிங்’ நூலில் அடிக்கடி கூறப்படும் இயற்கையின் அம்சங்களாகிய பள்ளத்தாக்கு, மலைகள் போன்றவற்றின் புகைப்படங்கள் அவை. தற்போது புகைப்படங்கள் இல்லாத மலிவுப் பதிப்பு மட்டுமே கிடைக்கிறது.
(நன்றி: ஆசை)