இந்திய-இலங்கை ஒப்பந்தம் 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி கொழும்பில் கைச்சாத்தாகிறது. 1990 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய அமைதிப்படையின் கடைசி அணி இலங்கையிலிருந்து வெளியேறுகிறது. முழுமையாக 22 மாதங்கள் இந்திய அமைதிப்படை ஈழத்தமிர்கள் வாழும் இலங்கையின் வடக்குப் பிரதேசத்தை ஆக்கிரமித்திருந்தது. தமிழ்நதியின் ‘பார்த்தீனியம்’ நாவல் இந்திய அமைதிப்படை இலங்கையில் கால்கொண்ட நாட்களின் கொஞ்சம் முன்னாகத் துவங்கி, இலங்கையிலிருந்து அதனது கடைசி அணி வெளியேறும் காலத்தோடு முடிகிறது. ஈழப் போராட்டத்தில் இந்திய அமைதிப்படையின் தலையீட்டையும்; அது விளைவித்த பேரழிவையும் முன்வைத்து ஈழத்தவரால் எழுதப்பட்ட முதல் நாவலும் ஒரேயொரு நாவலும் ஆனது சாந்தனின் ‘விர்ல் வின்ட்’ எனும் ஆங்கில மொழியில் எழுதப்பட்ட நாவல். நூறு பக்கங்கள் கொண்ட அந்தக் குறுநாவலோடு ஒப்பிட 500 பக்கங்களுக்கும் மேலாக விரியும் தமிழ்நதியின் ‘பார்த்தீனியம்’ ஒரு விரிந்த மானுடச் சட்டகத்தையும் காலச்சட்டகத்தையும் கொண்டிருக்கிறது.
இந்திய அமைதிப் படை ஈழத்தில் நிலை கொண்டிருந்த காலத்தில் விடுதலைப் புலிகளைத் தேடுவதற்காக ஒரு கிராமத்தின் மக்கள் அவர்களது வீடுகளைத் துறந்து அமைதிப்படை முகாமிட்டிருக்கிற கைவிடப்பட்ட வீடொன்றின் எதிரில் இன்னொரு கைவிடப்பட்ட அகண்ட வீட்டில் குடியேறப் பணிக்கப்படுகிறார்கள். விடுதலைப் புலிகளைத்தேடி அழிக்கும் வரை அவர்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப முடியாது. விடுதலைப் புலிகளைத்தேடி அவர்களைக் கண்டுபிடிக்க முடியாது சோர்ந்துபோகும் அமைதிப்படை அதிகாரி அகண்ட வீட்டில் முகாமிட்டிருக்கும் மக்களைப் புலிகளை அடையாளம் கண்டு சொல்லுமாறு நிர்ப்பந்திக்கிறார். அதற்கென அவர்களுக்கு அவகாசம் தருகிறார். அந்தக் கெடு காலம் முடிந்தவுடன் அந்த வீட்டிலுள்ள இருநூறுக்கும் அருகிலான ஆண்கள் பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் மீது இந்திய ராணுவம் சுடத் துவங்குகிறது. கொடும் துப்பாக்கிச் சூட்டில் அகதிகள் தங்கியிருக்கும் கட்டிடத்தின் சுவரிலிருந்த மகாத்மா காந்தியின் படம் சிதறுகிறது.
கிராமத்து வீடுகளை காலி செய்து அகண்ட அந்நிய வீட்டில் தங்கும் மக்களின் அன்றாட உணவுத் தேவைகள் கழிப்பிடத்தேவைகள் உள்ளிட்ட இருத்தலியல் அவலங்களைப் பேசும் சாந்தனின் ‘விர்ல் வின்ட்’ நாவல், சமகாலத்தில் அங்கு தங்கியிருக்கும் மக்களுக்கிடையிலான உரையாடல்களின் போக்கில் இலங்கை அரசியலையும் அலசுகிறது.
தமிழ்-சிங்கள இனங்களின் வரலாற்று நெருக்கடியில் இந்தியாவின் வரலாற்றுரிதீயான பங்கு ஆகியவை குறித்த பன்முக விவாதங்கள் பதிவு செய்யப்படுகிறது. தமது இலக்குகள் அறியாது இலங்கைத் தீவுக்குள் வந்த இந்திய ராணுவ இயந்திரம் விரக்தியுற்ற நிலையில் ஈழமக்களின் மீது தாக்குதலைத் துவங்குகிறது. இவ்வாறாக இந்திய அமைதிப்படைக் காலத்தின் ஈழமக்களின் இருத்தலியல் பதட்டங்களைப் பேசும் நாவலாக ‘விர்ல் வின்ட்’ இருக்கிறது.
ஈழத்தில் இந்திய அமைதிப்படையின் தலையீட்டை இந்தியக் கண்ணோட்டத்திலிருந்து அணுகிய புனைவகள் இரண்டு.
வாசந்தியின் நாவலான ‘நிற்க நிழல் வேண்டும்’ கால கதியில் முதலாவது எனில், இந்தி மொழிப்படமான ‘மெட்ராஸ் கபே’ திரைப்படம் இரண்டாவதாக வருகிறது. 1987 ஜூலைக்கும் 1989 நவம்பருக்கும் இடைப்பட்ட காலத்தின் 28 வாரங்களில் கல்கி வாரப்பத்திரிக்கையில் வாசந்தியின் ‘நிற்க நிழல் வேண்டும்’ தொடராக வெளிவருகிறது. இந்த நாவலுக்கென இந்தியப் படை இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தில் வாசந்தி வடகிழக்கிற்கும் கொழும்பிற்கும் சென்று வருகிறார். ராமேஸ்வரம் மண்டபம் அகதி முகாமுக்கும் சென்று வருகிறார். நாவல் எழுதுவதற்கான வரலாற்றுப் பின்னணியின் பொருட்டு இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான ஆவணங்களை வாசந்தி திரட்டுகிறார். சிங்கள தமிழ் வெகுமக்களையும் அறிவுஜீவிகளையும் போராளிகளையும் அவர் சந்திக்கிறார். பஞ்சாப் காலிஸ்தான் பிரச்சிiனை குறித்த அவரது ‘மௌனப் புயல்’ நாவலை அடுத்து ஈழப் பிரச்சினை குறித்த ‘நிற்க நிழல் வேண்டும்’ நாவலை வாசந்தி எழுதுகிறார். நாவல் எழுத நேர்ந்த ஆதிகாரணமாக தன்னை வந்து சந்தித்த ஒரு விடுதலைப் புலி அல்லாத ஒரு போராளியுடனான சந்திப்பு பற்றி, ‘போராளிக்கும்பலை’ச் சேர்ந்த லிபியாவில் ‘பயங்கவாதப் பயிற்சி’ பெற்ற ஒருவரைத் தான் சந்தித்ததாக வாசந்தி எழுதிச் செல்கிறார்.
கோவிந்தனின் ‘புதியதோர் உலகம்’ நாவல் வெளியாகி இரண்டு ஆண்டுகளின் பின் வாசந்தியின் ‘நிற்க நிழல் வேண்டும்’ நாவல் (நவம்பர் : 1999) வெளியாகிறது. இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தாகி கொழும்பில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு மரியாதை ஏற்பின் போது சிங்கள ராணுவத்தின் ஒருவன் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியின் பின்மண்டையில் துப்பாக்கிக் கட்டையால் அடிக்க யத்தனிக்கும் சம்பவத்துடனும், திலீபனின் மரணம் மற்றும் புலேந்திரன்,குமரப்பா உள்ளிட்ட 12 விடுதலைப் புலிகளின் தற்கொலையின் பின் விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் துவங்கும்; மோதல்களுடனும் ‘நிற்க நிழல் வேண்டும்’ நாவல் முடிவடைகிறது. இந்திய அமைதிப்படையின் திட்டங்களைக் குழப்புவதே விடுதலைப் புலிகளின் நோக்கமாக இருந்தது என்பதைச் சுட்டும் வாசந்தியின் நாவல் ஜெயவர்த்தன அரசு இந்திய அமைதிப்படையின் கட்டுப்பாட்டையும் சுயாதீனச் செயல்பாடுகளையும் இலங்கையில் ஒருபோதும் அனுமதிக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டத் தவறுகிறது.
‘மெட்ராஸ் கபே’ திரைப்பட இயக்குனர் சுஜித் சர்க்காரிடம் அமெரிக்காவின் ‘வால் ஸ்ட்ரீட் ஜேர்னலில்’ 2013 ஆகஸ்ட் 23 ஆம் திகதியிட்ட இதழ் நேர்முகத்தில் ‘இது தமிழருக்கு எதிரான படம் எனப் பலர் சொல்கிறரார்கள். இது குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’ எனக் கேட்கிறார்கள் நிருபர்கள். இதற்கான அவரது பதில் பின்வருமாறு : ‘நிச்சயமாக இல்லை. நான் சிந்தித்துப் படமெடுக்கிற இயக்குனர். முக்கியமாக நான் இந்தியன் என்பதில் கர்வப்படுகிறவன். எனது நாட்டை நான் ஏன் மோசமாகக் காட்ட வேண்டும்? எனது நோக்கு முரண்பாடுகளைத் தூண்டுவதோ அல்லது யுத்தம் பற்றி உணர்ச்சிகரமாகப் பேசுவதோ அல்ல. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு எவ்வாறு இப்படி மாற்றமடைந்தது என்பது குறித்த ஒரு உள்ளார்ந்த பார்வையை பர்வையாளனுக்கு வழங்க விரும்பினேன்’. உலக அரசியலை இந்திய ‘தேசபக்தப் கர்வத்துடன்’ அணுக நினைக்கிற ஒருவரின் முன்கூட்டிய சாய்வு மனத்துக்கும் அவரது இந்த நேர்முகமே சான்றாகிறது.
‘மெட்ராஸ் கபே’ திரைப்படம் திரைக்கதை, இயக்கம் தொழில்நுட்பக் கலைஞர்கள் என முழுமையாக வடஇந்தியர்களால், வட இந்திய மனோபாவத்தில் உருவாக்கப்பட்ட ஒரு பாலிவுட் ஜனரஞ்ஜக அரசியல் திரில்லர் படம். சாராம்சமாக விடுதலைப் புலிகள் அமைப்பை உடைக்கும் காரியத்திற்காக அனுப்பப்படுகிறார் இந்திய உளவு அமைப்பான ராவின் அதிகாரி விக்ரம்சிங். படத்தின் பிரதான பாத்திரங்களாக வரும் வட இந்தியர்கள், பிற இந்திய மாநிலத்தவர் என அனைவரும் ‘நம்மவர்’ எனவும், ‘வித்தியாசம்’ காட்டப்படாத தமிழக, ஈழத் தமிழர் அனைவரும் ‘மற்றவர்’ எனவும்தான் படமெங்கிலும் கட்டமைக்கப்படுகிறார்கள். தமிழகம் இந்தியாவின் ஒரு மாநிலம் என்ற உணர்வு கூட இந்தத் திரைப்படத்தில் இல்லை. ஈழத் தமிழர் பிரச்சினை தமிழகத் தமிழர்களின் உணர்வுகளுடன் இணைந்தது என்கிற அடிப்படையான பொதுப்புத்தி கூட பட இயக்குனருக்கும் இல்லை, தயாரிப்பாளரான ஜான் ஆப்ரஹாமுக்கும் இல்லை. முழுத் தமிழரையும் ‘மற்றவர்’ எனும் நோக்கில் அணுகியிருக்கும் இப்படம், இலங்கை, இந்திய ராணுவத்தினரால் ஈழத் தமிழருக்கு நேர்ந்த துயர்களை முற்றிலும் நிராகரித்திருக்கிறது.
‘மெட்ராஸ் கபே’ திரைப்பட இயக்குனருக்கு ஒரு குழப்பம் இருந்தது எனும் ராஜீவ் சர்மா, இனப் பிரச்சினையைச் சொல்வதா, ராஜீவ் காந்தி படுகொலையைச் சொல்வதா என்பதுதான் படத்தின் அந்தக் குழப்பம் எனவும் அவர் சொல்கிறார். ராஜீவ் சர்மா சொல்கிற இந்தக் குழப்பம், ராஜீவ் சர்மாவுக்கும், ரகோத்தமனுக்கும், மெட்ராஸ் கஃபே இயக்குனர் சுஜித் சர்க்காருக்கும் என ‘அனைத்து இந்திய தேசபக்தர்களின் கர்வம்’ சம்பந்தமான அடிப்படைக் குழப்பம்தான். விடுதலைப் புலிகளும் ராஜீவ் காந்தியும் படுகொலையும் தொடர்பான பிரச்சினை அடிப்படையில் வெறுமனே ஒரு நாட்டின் முன்னாள் பிரதமர் கொலை எனும் தனித்த நிகழ்வு தொடர்பான பிரச்சினை இல்லை. ராஜீவ் காந்தி படுகொலை என்பதும் அதனோடு தொடர்புடைய ஈழ மக்கள் மீதான இந்திய அமைதிப் படையின் கொடுமைகள் என்பதும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்ட அரை நூற்றாண்டு அரசியல் நிகழ்வுகளின் விளைவு.
1983 ஜீலை இனப்படுகொலை, இந்திய அமைதிப்படை ஆட்சியின் கீழ் பனிரெண்டு விடுதலைப் புலிகள் தற்கொலை செய்து கொண்டமை, புலிகளின் தலைவரைக் கொலை செய்ய இந்திய அரசு திட்டமிட்ட செயல், இந்திய ராணுவத்தின் பாலியல் வல்லுறவு, முப்பதாண்டு கால இலங்கை ராணுவ அடக்குமுறை, உலக வல்லரசுகள் அனைத்தும் இணைந்து நடத்திய முள்ளிவாய்க்கால் பேரழிவு என அனைத்தும் இணைந்த ஒரு வரலாற்றுச் செயல்போக்கின் அங்கம்தான் ராஜீவ் காந்தி படுகொலை. இதனை ‘இந்திய அமைதிப் படை யாழ்ப்பாணத்தில் நுழைந்த காலத்தில் துவங்கி, ராஜீவ் காந்தி படுகொலை நடந்த நாள் வரையிலான’ சம்பவங்களாகக் குறுக்கி, அவருக்கான இரங்கலைத் துயருடன் சொல்வதாக முடிகிறது மெட்ராஸ் கபே திரைப்படம்.
ஈழமக்களின் நண்பர்களாகப் போன இந்திய அமைதிப் படை ஈழமக்களின் எதிரிகளாகி அவர்களுக்கு எதிராகவே தாக்குதல் தொடுக்க நேர்ந்தது ஏன்? களமுனையில் இருந்த இந்திய அமைதிப் படைத்தளபதி ஹர்கிரத் சிங் தடுக்க முயன்றும் 12 போராளிகள் தற்கொலை செய்து கொள்ள நேர்ந்த சூழல் எத்தகையது? இந்திய உளவமைப்பைச் சேர்ந்த அதிகாரி சமநேரத்தில் அமெரிக்க உளவாளியாகவும் இலங்கை அரச உளவாளியாகவும் இருக்க நேர்ந்;ததன் விளைவுகள் யாது? இந்திய அமைதிப்படை எதிர்கொண்ட சிக்கல் என்பது அவர்களிடம் திட்டவட்டமான இலக்கோ குறிக்கோளோ இல்லாதுதான் என்கிறார் ஹர்கிரத் சிங். இலங்கை அரசு இந்திய அமைதிப்படையின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தது. எதற்காக இலங்கைக்குப் போனோம், எவர் எமது எதிரி, யாரோடு போரிடுகிறோம், ஏன் என்பது குறித்த எந்த அரசியல் தெளிவும் ராணுவ வழிகாட்டலும் அற்ற, மனநிலை திரிந்த, தம்மைக் காத்துக்கொள்ளப் போராடி, ஆயிரக் கணக்கில் தமது ராணுவத்தினரைப் பலியிட்டு, ஈழமக்களின் கடும் வெறுப்புக்கு உள்ளாகி, அன்றைய இலங்கை ஜனாதிபதி பிரேமதாசாவினால் அவமானகரமாக வெளியேற்றப்பட்டது இந்திய அமைதிப்படை. இலங்கையில் இந்திய அமைதிப்படை நிலைகொண்ட நாட்களின் இவ்வாறான அரசியல் முரண்கள் குறித்த ஒரு உள்ளார்ந்த சித்திரத்தைத் தரும் நூல் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங் எழுதிய தன்னனுபவ நூலான ‘இலங்கையில் இந்திய அமைதிப் படையின் தலையீடு’. ஆனந்தராஜ் மொழிபெயர்ப்பில் இந்நூல் தமிழிலும் வெளியாகியிருக்கிறது.
இந்திய அமைதிப்படை ஈழத்தில் நிலைகொண்டிருந்த காலத்தில் ஈழமக்களின் மீது ஏவிய படுகொலைகளையும் பாலியல் வல்லுவுகளையும் முதன்முதலாகப் புனைவுவெளியில் முன்வைத்த திரைப்படம் ராஜேஷ் டச்ரிவர் இயக்கிய ஆங்கிலப் படமான ‘இன் த நேம் புத்தா’. இதனையடுத்து இப்பிரச்சினையை மிகவிரிவாக தனது ‘பார்த்தீனியம்’ நாவலில் இலக்கிய வடிவில் முன்வைத்திருக்கிறார் தமிழ்நதி.
தமிழ்நதியின் ‘பார்த்தீனியம்’ 1982 துவங்கி 1990 காலகட்டம் வரையிலான 9 ஆண்டுகளில் தனது வாழ்ந்துபட்ட அனுபவங்களின் அடிப்படையிலான புனைவாக விரிகிறது. 1983 ஜூலைக் கலவரத்தைத் துவக்கமாகக் கொள்ளும் நாவல் 1990 இந்திய அமைதிப்படை இலங்கையிலிருந்து வெளியேறுவதுடன் முடிகிறது.
ஈழ விடுதலை இயக்கங்கள் இந்திய அரசின் அணுசரனையிலான ஆயுதப் பயிற்சிக்காக இந்தியா வருவது, இயக்கங்கள் பிளவடைகிற செயல்போக்கு, ஈழத்தினுள் இயக்கங்களுக்கு இடையிலான மோதல், விடுதலைப் புலிகள் தமது சக இயக்;கங்களைத் தடைசெய்தலும் தேடி அழித்தலும், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தையடுத்து இந்தியப் படை இலங்கைக்கு வருதல், திலீபனின் உண்ணாவிரதமும் மரணமும், இந்தியப் படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் வடக்கிலிருந்து புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 12 விடுதலைப் புலிப் போராளிகள் இலங்கைப் படையினரால் கையகப்படுத்தப்படுவதை அடுத்து சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொள்தல், இதனையடுத்து இந்திய அமைதிப்படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வெடிக்கும் மோதல், விடுதலைப் புலிகளால் தடைசெய்யப்பட்ட இயக்கங்கள் இந்திய அமைதிப்படையுடன் இணைந்து புலிகளை வேட்டையாடுதல், இந்திய அமைதிப்படை புலிப்போராளிகளையும் வெகுமக்களையும் வித்தியாசப்படுத்தலில் அடையும் தோல்வி, புலிகளைக் காட்டித் தரச்சொல்லி வெகுமக்களின் மீது அமைதிப்படை தொடுக்கும் முழுமையாக யுத்தம், பாரிய பாலியல் வல்லுறவுகள், உயிருக்குத் தப்பிய மக்களின் இடப்பெயர்வு, இந்த எல்லா நிகழ்வுகளிலும் யாழ் பல்கலைக் கழக மாணவர்களின் பங்கேற்பும் அரசியல் மயமாக்கலும் அலைக்கழிவும், ஜெயவர்த்தனா தோல்வியுற்று பிரேமதாசா தலைமையேற்றதையடுத்து இந்திய அமைதிப்படை வெளியேறும் நிகழ்வு, அதுவரை இந்திய அமைதிப்படையோடு செயல்பட்ட புலி அல்லாத ஈபிஆர்எல்எப் இயக்கம் பலவந்தமாகச் சிறுவர்களைப் பிடித்து உருவாக்கும் தமிழ் தேசிய ராணுவம், அதனது படுகொலைகள், அதற்கு எதிரான விடுதலைப் புலிகளின் பழிவாங்கும் படுகொலைகள் என இந்திய அமைதிப்படை வெளியேறும் நாட்களின் பேரவலத்துடனும் பெரும் குழப்பத்துடனும் நாவல் முடிகிறது. ஈழ விடுதலைப் போராட்டத்தின் முள்ளிவாய்க்கால் வரையிலான போராட்டத்தின் அடுத்தகட்டம் அப்போது துவங்குகிறது.
ஈழ விடுதலை இயக்கங்களில் உள்கட்சிப் போராட்டங்களும் இயக்கப் பிளவுகளும் தோன்றிய காலகட்டத்தின் சித்திரம் கோவிந்தனின் ‘புதியதோர் உலகம்’ எனில், பின்முள்ளிவாய்க்கால் காலத்தின் அரசியல் மறுபரிசீலனையும் கடந்தகாலச் சாகசமும் குணா கவியழகனின் ‘நஞ்சுண்டகாடு’;, ‘விடமேறிய கனவு’ மற்றும் ‘அப்பால் ஒரு நிலம்’ எனும் முப்பெரும் நாவல்கள் எனில், தமிழ் நதியின் ‘பார்த்தீனியம்’ நாவலின் தனித்தன்மை என்பதுதான் என்ன?
புதியதோர் உலகிலும் குணா கவியழகனின் நாவல்களிலும் போராளிகளின் காதலியர் துணைப்பாத்திரங்காக வருகிறார்கள். அன்னையரும் சகோதரியரும் சிற்சில தருணங்களில் வந்து போகிறார்கள். தமிழ்நதியின் ‘பார்த்தீனியம்’ முழுமையாகப் போராளியொருவனின் காதலியின் பார்வையில் சொல்லப்பட்ட நாவல். இதுவரைத்திய போர்வாழ்வு பற்;றிய ஈழநாவல்கள் ஆண்மையக் கதைசொல்லல்களாக இருக்க தமிழ்நதியின் நாவல் முழுமையாப் பெண்வழிக்; கதைசொல்லும் பெண்மைய நாவலாக இருக்கிறது. வானதியினதும் அவளது தாய் தனபாக்கியத்தினதும் இவர்கள் தமது தனிவாழ்விலும் சமூகவாழ்விலும் கொள்ளும் உறவுகளதும் வாழ்வுச் சித்திரம்தான் ‘பார்த்தீனியம்’ நாவல்.
‘பார்த்தீனியம்’ நாவலின் துவக்கம் முதல் இறுதிவரையிலும் உயரூக்கமுள்ள உரையாடலைத் தொடரந்து முன்வைத்துச் செல்லும் பாத்திரங்கள் நான்கு. பிரதான பாத்திரமான வானதி. அடுத்து அவரது தாய் தனபாக்கியம். மூன்றாவதாகப் விடுதலைப் புலிப் போராளி பரணி. நான்காவதாக தனது சகோதரனான ரெலோ போராளி விடுதலைப் புலிகளால் தன் கண்முன்பாகவே கொல்லப்படுதலைக் கண்ணுறும் தனஞ்செயன்.
வானதிக்கும் பரணிக்குமான உரையாடல்களில் இயக்க வாழ்வு இயக்கத்தின் இலட்சிய வாழ்வுக்கும் நடைமுறை வாழ்வுக்குமான முரண், போராளி வாழ்வில் காதலின் காத்திருப்பும் பொறுப்பேற்றலும் எனும் தீர்க்கவியலா முரண் அனைத்தும் மேலெழுந்து வருகிறது. தாய்க்கும் மகளுக்குமான உரையாடலில் தனது குஞ்சைப் பாதுகாக்கும் தாய்க் கோழியின் பரிதவிப்பும், குடும்பத் தலைமையேற்பும், முழு ஈழத்தாய்மாரினது துயரும் ஆன உரையாடல்கள் வருகிறது. விடுதலைப் புலிப்போராளி பரணியின் காதலியான வானதிக்கும், விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட போராளியினது சகோதரனும் அவளது கல்லூரித் தோழனான தனஞ்செயனுக்கும் ஆன உரையாடல், போராளிகளுக்கு இடையிலான படுகொலைகளின் துயரை மீள மீள நாவல் முழுதும் எழுப்பிக் கொண்டேயிருக்கிறது. உயிரழிவின் வாதைக்கு எதிரான உரையாடல் இது. அன்பு வெறுப்பு எனும் இருமை இதனால் நாவல் முழுதும் விரவியிருக்கிறது. கறாரான வெறுப்பு-அழிவு-அழிப்பு, கறாரான நேசம்-காதல்-பொறப்பு என்பதற்கு மாறாக இரண்டுக்கும் இடையில் சதா அல்லாடிக் கொண்டிருக்கிறது பெண்மனம்.
நாவலின் ஆரம்ப நூறு பக்கங்கள் பள்ளி-கல்லூரி வாழ்வின் இயுல்பான குறுகுறுப்பும் மனதை வெளிப்படுத்துவதிலுள்ள தயக்கத்திற்கு ஒப்ப மிகமெதுவாக மனோரதியமான மொழியில் நகர்கிறது. பரணி போராளி வாழ்வை மேற்கொள்ளத் தொடங்குதல், இயக்கங்களுக்கு இடையிலான மோதல், மாத்தய்யாவின் தன்னுணர்வு, செல்வந்தர்கள் பாலான அவரது சலுகையுணர்வு, இது குறித்த மோதல் வரும்போது போராளிகளைத் திட்டமிட்டு பழிவாங்கும் நோக்குடன் அவர் அவர்களை மரணமுனைக்கு அனுப்புவது, இதனால் போராளிகள் துண்டுகொடுத்துவிட்டு இயக்கத்தைவிட்டு வெளியேறுவது, வெளியேற்றத்தின் பின் எந்தப் பாதுகாப்பும் அற்று மரணபயத்துடன் நாட்டைவிட்டு வெளியேற முனைவது என உக்கிரமான சம்பங்களுடன் நானூறாவது பக்கத்துடன் வாசகனைப் பதட்டத்தினுள் கேவலுள் தள்ளிவிடுகிறது.
நாவலின் இருநூறு பக்கங்கள் அளவிலானவை இந்திய அமைதிப் படைக்காலப் படுகொலைகளும் வல்லுறவுகளும் குறித்தவை. 12 வயதுப் பெண்குழந்தை முதல் வயது வித்தியாசமற்று இளம்பெண்கள்-முதிய மனுஷிகள் என இந்திய அமைதிப்படையினர் புரிந்து வல்லுறவுகள் பூடகமான ஆயின் உக்கிரமான சம்பவ விவரிப்பு மொழியில் படைப்பாற்றலுடன் சொல்லப்பட்டிருக்கிறது. தனது கல்லூரி நண்பன் தனஞ்செயனின் வேண்டுகோளை ஏற்று நான்கு இந்திய அமைதிப்படைச் சிப்பாய்களால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பவித்ரா எனும் இளம் பெண்ணின் அனுபவத்தை இருளினூடே தகிக்கும் மொழியில் நமது செவியில் தனிந்த குரலில் சொல்கிறாள் வானதி. கைவிடப்பட்ட பாழடைந்த வீட்;டில் 13 வயதுச் சிறுமியின் கதறல் அலைந்துகொண்டேயிருக்கிறது. வெடிகுண்டை மார்புகளில் மறைத்து வைத்திருக்கிறார்களாக என உடலெங்கும் ஊர்கின்றன படையினரின் விரல்கள்.
நாவலின் கடைசி 125 பக்கங்கள் தசாப்தகால அனுபவங்கள் குறித்த ஆத்மவேதனையாக, பரிசீலனையாக. வலிமீட்சியாக உக்கிரமான படைப்பு மொழியில் உருவாகியிருக்கிறது. தமிழ் தேசிய இராணுவத்தில் பலவந்தமாகச் சேர்க்கப்பட்ட தலித் சிறுவன் ஒருவனது குழந்தமையும் ஆயுதம் அவனுக்குத் தரும் அதீதஅதிகாரமும் அவன் அறுதியில் படுகொலைக்கு ஆளாவதுமான 53 ஆம் அத்தியாயம் தனியொரு நாவலுக்கான நெஞ்சை உலுக்கும் களம்.
தனபாக்கியம் தனது மகள் வானதியை இந்திய அமைதிப்படையின் கொடுங்கரங்களில் இருந்து காப்பாற்றிவிட்டாள். தனஞ்செயன் அமைதிப்படையால் வல்;லுறவுக்கு உள்ளான பவித்ராவை மணந்து கொள்ளப் போகிறான். பரணி விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குத் துண்டுகொடுத்துவிட்டு இயக்கத்திலிருந்து வெளியேறி இந்தியா சென்று மேற்கு நாடு ஒன்றிற்குப் போக முடிவு செய்கிறான். வானதியைத் தன்னோடு வருமாறு அழைக்கிறான். வானதி மறுத்துவிடுகிறாள். முழு விடுதலைப் போராட்டமும் தொடர்பான பெண்ணிலை நோக்கு விமர்சனம் என வானதியின் இந்த நிலைபாட்டைக் கருதுகிறேன்.
இலங்கை ராணுவம், இந்திய அமைதிப்படைப் படுகொலைகள், வல்லுறவுகள் வடக்கு நிலமெங்கிலும் மண்டியிருந்த காலத்தில் தனது காதலனான பரணியைத் தேடி ஓடிச் சென்று பார்த்தவள் வானதி. தான் இயக்கத்திற்கு போவதை முடிவு செய்துவிட்டு அவளிடம் அறிவிக்கிறான் பரணி. இயக்கத்தின் இரண்டாம் நிலைத் தலைவரான மாத்தய்யாவுடன் முரண்பட்ட நிலையில் தனது வாழ்வுக்கு உத்திரவாதம் இல்லை எனும் நிலையில், அவனது எதிர்காலம் குறித்த நிச்சயமில்லாத நிலையில், இனிமேல் தன்னைப் பார்க்க வரவேண்டாம் என வானதியிடம் சொல்கிறான். இயக்கத்திலிருந்து வெளியேறும் முடிவையும் நாட்டை விட்டு வெளியேறும் முடிவையும் அவனே எடுக்கிறான்.
அவள் அவனிடமிருந்து எதிர்பார்த்ததெல்லாம் ஒரேயொரு உறுதி மொழியைத்தான். அதைப் பற்றிக் கொண்டு எந்த ஆபத்தினுள்ளும் நடக்க அவள் தயாராக இருந்தாள்.
‘நான் எனக்காக வாழ ஆசைப்படுகிறேன். என்னோடு நீ வரமாட்டாயா?’ (பக்கம் 510).
இதுதான் அவள் அவனிடம் எதிர்பார்த்த உறுதிமொழி. அவனால் அந்த உறுதிமொழியை அவளுக்குத் தரமுடியவில்லை. போர்ச்சூழலில் தனது சொந்த வாழ்வு குறித்த நிச்சயமின்மைகள் அப்படித்தான் அவனை வைத்திருந்தன. அப்படியான மரபான சூழலில்தான் அவன் இருந்தான். நாடுவிட்டுச் செல்லும் நிலையிலும் அவன் அப்படித்தான் இருக்கிறான்; அதற்கு எதிரான குரல்தான் வானதியின் மறுப்பு. இந்த எதிர்ப்பு உயிரழிவுக்கு எதிரான விடாப்பிடியான பெண்மையின்-உயிர்தரும் தாய்மையின் குரலன்றி வேறென்ன? ‘பார்த்தீனியம்’ இப்படித்தான் போர் விளைவிக்கும் மானுடப் பிரிவுக்கு, ஆண் பெண் இடையிலான நிரந்தரத் துயருக்கு எதிரான இலக்கியமாக ஆகியிருக்கிறது.
(நன்றி: யமுனா ராஜேந்திரன்)