தமிழினி – ஒரு கூர்வாளின் நிழலில்

தமிழினி – ஒரு கூர்வாளின் நிழலில்

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பரந்தனில் தாய் சின்னம்மா தந்தை சுப்பிரமணியம் தம்பதிகளுக்கு மூத்த மகளாகப் பிறந்தவர் தமிழினி (சிவகாமி ஜெயக்குமரன்). 1991 இல் இந்துமகா வித்தியாலயத்தில் படித்துக் கொண்டிருந்த பொழுது தமீழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து போராளியானார். இளம் வயதிலேயே பல போர்க்களங்களில் சமராடிய அனுபவங்களோடு, பின்னாளில் விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுப் பொறுப்பாளராகச் செயல்பட்டவர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், அன்ரன் பாலசிங்கம், அடேல் பாலசிங்கம் உட்படப் புலிகள் இயக்கத்தின் உயர்மட்டத் தலைவர்களிடத்திலும், மக்களிடத்திலும் அபிமானம்பெற்ற தலைவராக விளங்கியவர். அந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற பல்வேறு உயர்மட்;டச் சந்திப்புகளிலும் இயக்க அரசியல் நிகழ்வுகளிலும் பங்கேற்றவர். சர்வதேச மற்றும் உள்நாட்டுத் தலைவர்களிடமும் பிரதிநிதிகளிடமும் நன்கு பரிச்சயமானவர். புலிகளின் வீழ்ச்சியை அடுத்துப் பல்லாயிரக்கணக்கான போராளிகளுடன் இலங்கை அரசின் சிறைச்சாலைகளிலும் புனர்வாழ்வு முகாமிலும் நான்காண்டுகள் சிறையிலடைக்கப்பட்டு 2013 இல் விடுவிக்கப்பட்டதும் திருமணம் செய்து பொதுவாழ்வில் ஈடுபட்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த தமிழினி 2015 இல் மரணமடைவதற்கு சிலமாதங்களுக்கு முன்பு ‘ஆயிரக்கணக்கான போராளிகளின் தீரம் மிகுந்த உயிர் அர்ப்பணிப்புகளின் மூலமும், இலட்சோபலட்சம் மக்களது பேராதரவுடன் கட்டியெழுப்பப்பட்ட ஒரு போராட்ட இயக்கம் ஏன் தோற்கடிக்கப்பட்டது என்பதற்கான உண்மையான காரணங்கள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதற்காகவும், புலிகளின் வீழ்ச்சியிலிருந்து தான் கற்றுக்கொண்ட போராட்ட அனுபவங்களையும் புதிய சிந்தனைகளையும் தன் சாட்சியாக ;ஒரு கூர்வாளின் நிழலில்’ என்னும் தலைப்பில் ஒரு நூலாக படைத்தளித்துள்ளார் தமிழினி. இவற்றினூடே தன் இயக்க அனுபவங்களையும் விமர்சனத்துக்குள்ளாக்குகின்றார். விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியமான தலைவர்கள் வேறு எவரும் தம் இயக்கத்தைப் பற்றி இவ்வளவு நேர்த்தியாக சுயவிமர்சனம் செய்யாதிருக்கும் நிலையில், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த பெண் போராளியொருவரின் முதல் சுயசரிதை என்பதாலும் தமிழினியின் இந்நூல் வாசிப்பின் வழி முக்கியத்துவம் பெறுகின்றது. சிலர் எழுதியிருப்பினும், அவையெல்லாம் இயக்கத்தின் வீரவரலாற்றையும், வெற்றியையும் முன்னிலைப்படுத்தும் பிரச்சாரப் படைப்புகளாகவே அமைந்துள்ளது.

தமிழினியின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ என்னும் சுயசரிதை நூல் பலத்த வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பினாலும், தமிழிலக்கிய உலகில் முக்கியமானதொரு நூலாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது. மேலோட்டமாகப் பார்த்தால் தமிழினியின் இயக்கம் பற்றிய விமர்சனங்கள் காரசாரமாக இல்லாதிருப்பதுபோல் தோன்றினாலும், சற்று ஆழ்ந்து நோக்கினால் மிகவும் கடுமையான விமர்சனங்கள் பொதிந்திருப்பதும் தெரியவரும். விடுதலைப்புலிகளின் தலைவரைத் தனிப்பட்டரீதியில் விமர்சிக்கவில்லையெனினும், தமிழினி அவர்கள் கோட்பாட்டு ரீதியில் விடுதலைப்புலிகளின் அமைப்பையும், அவை பின்பற்றிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டும் விமர்சித்திருக்கின்றார். அந்த அமைப்பில் போராடி, இறுதியில் நிராதரவாகக் கைவிடப்பட்டு, இராணுவத்திடம் சரணடைந்து, சிறைவாழ்க்கை, தடுப்புமுகாம் வாழ்க்கை, புனர்வாழ்வு எனப் பல்வேறு பரிமாணங்களில் சென்று மீண்டும் சமூகத்திற்குள் நுழைந்த இவரைச் சமூகம் எதிர்கொண்ட விதம் அதிர்ச்சியூட்டுகின்றது. இந்நிலையில் அவரது வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் தமிழினி என்னும் பெண் போராளியொருவர் மனம் திறந்த நிலையில் தன் வாழ்வில் நடந்தவற்றை ஆராய்ந்து முடிவுக்கு வருவதற்கும் தன் சிந்தையில் நினைத்தவாறு கூறுவதற்கும் முழு உரிமையுள்ளது. அவரது கருத்துகளை வாசிப்பு வெளியில் வீற்றிருப்பவர்கள் ஏற்கலாம் அல்லது ஏற்காமலும் இருக்கலாம்.

தமிழினி தன் சுயசரிதையில் தான் ஏன் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமையின் கீழ் ஆயுதம் தாங்கிப்போராடப்புறப்பட்டேன் என்பதிலிருந்து, 2009இல் முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு வந்ததையும், அதன் பின்னரான தடுப்புமுகாம் மற்றும் புனர்வாழ்வு முகாம் போன்ற அனுபவங்களையும், சிறை வாழ்வின் பின்னர் தன் கடந்த கால வாழ்க்கையினை மீளாய்வு செய்தது வரை தன்னி;லைகளை பல பரிமாணங்களில் தமிழினி விவரித்திருக்கின்றார். இந்நூலில் தமிழினி தன் குடும்பம், பள்ளி வாழ்க்கை, தான் பிறந்த நகரம் எவ்வாறு போர்க்களமாக மாறுகின்றது, தான் இணைந்த இயக்க வாழ்க்கையின் புரிதல், இயக்கத்திலிருந்த அரசியல் மற்றும் ஆயுதப்போராளிகளின் நிலைகள், விடுதலைப்புலிகளின் வெற்றிகரமான போர்களில் ஈடுபட்ட தனது வாழ்வனுபங்கள், யுத்தத்தின் இறுதிக்கால இயக்கத்தின் நிலை, மக்களின் நிலை எனப் பல்வேறு விதமான அனுபவங்களினூடே யுத்தத்தின் பின்னரான தன் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் பெருமளவு இந்நூலில் விவரித்திருக்கின்றார். மிகுதியான பக்கங்களை உடைய பெரிய அளவிலான நூல் என்றில்லாவிட்டாலும், அத்தியாயம் ஒவ்வொன்றுமே விரிவான தகவல்களை உள்ளடக்கிதாக அமைந்துள்ளது. அந்த வகையில் கட்டுக்கோப்பானதொரு சுயசரிதையாக இயற்றப்பட்டிருக்கும் இந்நூல், உலகளாவிய பெண் சுயசரிதைப் படைப்புகளினூடே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதோடு, தமிழினியின் எழுத்தாற்றல் இலக்கியச்சிறப்புமிக்கதொரு இடத்தில் அவரை இந்நூலின் வழியாக நிலைநிறுத்தியுள்ளது.

தமிழினி தன் அறிவுக்கும், ஆளுமைக்கும் உட்பட்டு தான் அறிந்த தகவல்கள் மற்றும் தரவுகளை அடிப்படையாக வைத்து சிறந்ததொரு அத்தியாயங்களில் தான் இயற்றிய நூலினை ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ என்னும் தலைப்பில் ஒரு போராளியாக நேர்மையாகப் பதிவு செய்திருக்கின்றார். தான் சார்ந்த செயற்பாடுகளில் ஏற்பட்ட தவறுகளைக்கூட தலைமையின் தலையில் ஏற்றித்தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஒருபோதும் அவர் நினைத்ததில்லை. ஏனெனில், “போராட்டத்தை முழுவதுமாக தன்னகப்படுத்திக்கொண்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தில் நானும் ஒரு உறுப்பினராக இருந்தேன். போராட்டத்தின் இறுதி இருபது வருடங்கள் நானும் ஒரு சாட்சியாகப் போருக்குள்ளே வாழ்ந்திருக்கிறேன். போராளிகளான நாங்கள் எமது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காப்பாற்றத்தவறி விட்டோம். கையிலெடுத்த ஆயுதங்களைக் பாதுகாத்துக்கொள்வதற்காக எமது அரசியல் இலட்சியத்தைத் தோற்கடித்து விட்டோம்." (பக்கம் 7) எனக்கூறுவதிலிருந்து நடந்தவற்றுக்கான அனைத்திலும் தனக்கும் பங்கிருப்பதை ஒரு பொறுப்புணர்வவோடு ஆரம்பத்திலேயே ஏற்றுக்கொண்டுதான் தன் சுயசரிதையைத் தொடர்கின்றார். அதற்காக வருத்தமும் அடைகின்றார். எனவே, தமிழினி ஒரு போராளியாக தனது நூலில் எதையும் நேர்மையாகப் பதிவு செய்திருக்கின்றார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

அதே நேரத்தில் இயக்கத்தின் எழுச்சிக் காலங்களில் எவரும் இயக்க நடவடிக்கைகளை எதிர்த்துக்கேட்கும் பூரண சுதந்திரம் பெற்றிருந்ததாக தான் அறியவில்லை என தமிழினி தன்நூலில் ஆங்காங்கே குறிப்பிட்டிருக்கின்றார். சில சமயங்களில் தன்னால் இயக்கத்தலைமையின் முடிவுகளை ஏற்க முடியாவிட்டாலும், இயக்கக் கொள்கையை தான் ஏற்றுக்கொண்டதால் எந்நிலைமையிலும் இயக்கத்திற்காக அவர் அமைதியாகச் செயற்பட்டதையும் சுட்டிக்காட்டுகிறார். மேலும், தமிழினி தனது நூலில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் மக்களுக்குமிடையே அதிக முரண்பாடுகளை ஏற்படுத்திய கட்டாய ஆட்சேர்ப்பு நிலை பற்றிக் குறிப்பிடும் பொழுது தனது எதிரான கருத்துகள் காரணமாகத் தன்னை வேறு துறைக்கு மாற்றியதாகக் குறிப்பிடுகின்றார். “சமாதானக் காலகட்டத்தில் விடுதலைப்புலிகளின் ஆட்பற்றாக்குறையைத் தீர்ப்பதற்காகச் செயற்படுத்தப்பட்ட ‘கட்டாய ஆட்சேர்ப்பு’ போராளிகளுக்கிடையில் விமர்சனங்களையும் முரண்பாடுகளையும் ஏற்படுத்தியதாகக் கூறுகின்றார்” (பக்கம் 180). அத்துடன் 'தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத்தவறான முடிவுகளில் முக்கியமானது கட்டாய ஆட்சேர்ப்பு என்பது என் நிலைப்பாடு, இந்தக் காரியத்தில் சூழ்நிலைக் கைதிகளாகப் பல போராளிகளும், பொறுப்பாளர்களும் மன விருப்பின்றியே செயற்பட்டுக் கொண்டிருந்தனர் (பக்கம் 181) என்றும் தமிழினி கூறுகிறார்.” இந்தச் செயல்பாடுகளில் மட்டும் இவரது முரண்பட்ட கருத்து நிலை காரணமாக அரசியல் துறை மகளிர் பொறுப்பாளராக மற்றொரு பெண் போராளி தன் இயக்கத்தில் நியமிக்கப்பட்டதாகவும் தனது நூலில் தமிழினி குறிப்பிடுகின்றார்.

தமிழினி தன் படைப்பின் வழி கூறப்பட்டுள்ளவற்றில் எவையெவை உண்மை என்பதனை நாம் பெரிதாக ஆராயத்தேவையில்லை. அதேநேரத்தில், அவர் கூறாத விசயங்களைச் சுட்டிக்காட்டி அவற்றுக்கு எதிராக உண்மையான ஆதாரங்கள் இருப்பின் தமிழினி ஏன் எழுதவில்லை என்று கேட்பதில் எந்த அர்த்தமுமில்லை. ஏனெனில் தன் வாழ்க்கையையே மக்களுக்காகத் தாரை வார்த்த ஒரு பெண் போராளியின் நேர்மையான உணர்வுகளை அது கொச்சைப்படுத்துவதாக அமைந்துவிடும். தன் வாழ்வின் பல்வேறு அவமானங்களை, துயரங்களை, தோல்விகளை அடைந்திருந்த நிலையிலும் தான் யாருக்காகப் போராடினாரோ அம்மக்கள்மீது கொண்டிருந்த பற்றினால் உடல்நிலை ஒத்துழைக்காத குறுகிய காலச் சூழ்நிலையிலும் தனது வாழ்வில் தன்னை அதிகம் பாதித்த உணர்வுகளை அடுத்த தலைமுறையினருக்கு எழுத்தின் வழி அறியத்தந்திருக்கிறார் என்றால் அவரது நோக்கத்திற்கு முதலில் தலைவணங்க வேண்டும்.

தமிழினி தன் எழுத்தினூடே ஒரு தலைமையின் அடிப்படையில் கட்டியெழுப்பட்ட அமைப்பினையும், அவ்வமைப்பின் அரசியலினையும் நியாயமாக கேள்விக்குட்படுத்தியிருக்கின்றார். முற்போக்குத் தேசியத்தத்துவம் (Pசழபசநளளiஎந யேவழையெடளைஅ) என்னும் அடிப்படையிலும் அவற்றை விவரித்து அதன் பண்புகளையும் அவர் குறிப்பிடுகின்றார். அதாவது,

  1. முற்போக்குத் தேசியமானது ஏகாதிபத்திய எதிர்ப்பினைக் கொண்டதாக இருக்க வேண்டும்.
  2. அந்நிய ஆதிக்க சக்திகளின் (சீனா இந்தியா போன்ற) நலன்களுக்குச் சேவை செய்வதாக ஒருபோதும் இருக்கக் கூடாது.
  3. சமூக முரண்பாடுகள் விசயத்தில் போதிய தெளிவு இருக்கும் அதே சமயத்தில் ஒடுக்கப்படும் மக்களுக்குச் சார்பாகவும் அது விளங்க வேண்டும்.
  4. ஏனைய தேசியங்களுக்கு ஈடான சம உரிமையை வேண்டும் அதே நேரம் ஏனைய தேசியங்களை அடக்குவதை, வெறுப்பதை மையமாகக்கொண்டு செயற்படக்கூடாது.
  5. சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வு விசயத்தில் பல்வேறு வகையான தவறெண்ணங்கள் இருக்கும். இவற்றைக்கடந்து செயற்படும் வகையில் தெளிவு கொண்டிருக்க வேண்டும்.
  6. முற்போக்குத் தேசியத்துக்குரிய உயர்ந்த மானுட விழுமியங்களைப் போராட்டத்தினூடு உருவாக்க வேண்டும். அதாவது விரிவான கருத்துப்பரிமாறல்களை அனுமதிக்க வேண்டும். ஜனநாயகம் நிலவ வேண்டும். வன்முறை மற்றும் சித்திரவதைகளை நியாயப்படுத்தவோ அல்லது அனுமதிக்கவோ கூடாது என்பார்.

இவ்விதமான முற்போக்குத் தேசியவாதத்தின் பண்புகளின் அடிப்படையில் நூலில் கூறப்பட்டுள்ள தலைமை மற்றும் அரசியல் சார்ந்த முக்கியமான குற்றச்சாட்டுகளை நூலைப் பற்றிக் குறிப்பிடாமல் நூலில் இடம்பெற்ற செய்திகளைக் கொண்டு அணுகுவதே அறிவார்ந்த செயலாகும்.

ஒரு நாட்டின் சமூக, அரசியல் மற்றும் பொருளியல் சூழல் காரணமாக ஒரு போராளி ஏன் உருவாகின்றார் என்பதற்கான உளவியல் காரணங்களை விவரிப்பதால் இந்நூல் உலக இலக்கியத்தினூடே முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. ஆரம்பத்தில் கல்வி கற்று கல்வியால் எதையும் சாதிக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் இருந்த தமிழினியை இராணுவத்தினரின் எறிகணைத்தாக்குதல்கள், இந்தியப்படையினரின் தாக்குதல்கள், போரில் மரணத்தைத் தழுவிக்கொண்ட ஆண், பெண் போராளிகளின் நிலை, இவையெல்லாம் அவரது மனதைப்படிப்படியாக மாற்றுவதை இந்நூல் விவரிக்கின்றது. பாடசாலையில் படிக்கும்போது புலிகளின் மாணவர் அமைப்பில் இணைந்து செயற்பட்ட தமிழினி, ஒரு கட்டத்தில் “ஆண், பெண் வேறுபாடில்லாமல் தினசரி நூற்றுக்கணக்கான இளைஞர்களும், யுவதிகளும் தமதுயிரைக் கொடுத்துக்கொண்டிருந்த சூழ்நிலையில் வெறும் பார்வையாளராக இருப்பது எனது மனதில் பெரும் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்திகிறது. அதனால் தொடர்ந்து படிக்கக் கூடிய சூழ்நிலையும் உருவாகுமென தான் நினைக்கவில்லை. ஒரு குடும்பத்தில் ஒருவராவது போராடச்சென்றால்தான் அடுத்த சகோதரர்களாவது நிம்மதியாக வாழ முடியுமென தான் நம்பியதாகக் குறிப்பிடுகிறார்” (பக்கம் 31) இவ்வாறு பள்ளிக்குச்சென்ற மாணவியொருத்தி எவ்விதம் ஆயுதம் தாங்கிய போராளியாகப் பரிணாமம் அடைகின்றார் என்பதை ஒரு வாக்குமூலமாகவே தனது நூலில் குறிப்பிடுகின்றார்.

இயக்கம் முழுவதும் தலைமையை மையமாக வைத்துக் கட்டமைக்கப்பட்டுள்ளதை அவர் கேள்விக்குட்படுத்துகின்றார். ஆரம்பத்தில் ஏனைய இயக்கப் போராளிகளைப்போல் அவரும் ஒரு தலைமை என்னும் அடிப்படையில்தான் இயங்குகின்றார். ஆனால் அதுவே பின்னர் பேரழிவுகளுக்குக் காரணமாக விளங்கும்போது அவரால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. “எத்தனையோ நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து ஒரு போராட்டத்தை முப்பது வருடத்திற்கும் மேலாக பெரும் படைபலத்துடன் கட்டி வளர்த்தவர் என்ற பிரமிப்போடுதான் என்னைப்போன்ற பல்லாயிரக்கணக்கான போராளிகளும், மக்களும் தலைவரைப் பார்த்தோம். தலைவர் எடுத்த முடிவுகள் பல சந்தர்ப்பங்களில் விமர்சனத்துக்குள்ளாகும் போதும், அவர் மக்களின் நலனுக்காகவும், நாட்டின் விடுதலைக்காகவும்தான் இப்படியான முடிவுகளை எடுக்கின்றார் எனவும், தலைவர் ஒரு முடிவு எடுத்தால் அதில் நிச்சயமாக ஒரு நியாயம் இருக்கும் எனவும் ஒவ்வொரு போராளியும் எவ்வித ஐயப்பாடுமின்றி நம்பினோம். தலைவர் எடுக்கும் முடிவுகளை விமர்சிப்பதோ, கேள்வி கேட்பதோ தெய்வக்குற்றம் இழைப்பதற்குச் சமமானதாக இயக்கத்தினுள்ளே கருதப்பட்டது. இந்தப்போக்கின் வளர்ச்சியே இயக்கத்தின் உள்ளேயான விவாதத்தையும் விமர்சனத்தையும் இல்லாதொழித்து அதன் மிக அவலகரமான முடிவுக்கும் வழி வகுத்தது. எல்லாம் அவர்தான் எனக்கொண்டாடியது மட்டுமில்லாமல் இறுதித்தோல்விக்கும் அவரே காரணம் என்ற குற்றத்தையும் வரலாறு அவர் மீது சுமத்தி நிற்க வேண்டியதாயிற்று என்பார் தமிழினி.” (பக்கம் 164) இதைப்பற்றி மேலும் கூறும் பொழுது “எத்தனையோ இலட்சம் பேருடைய இரத்தமும் கண்ணீரும் இயக்கத்தினுடைய வளர்ச்சிக்கு நீர் பாய்ச்சியிருக்கிறது. அப்படியிருக்கையில் விடுதலைப்புலிகள் இயக்கமும், தமிழ் மக்களுக்கான ஆயுதப்போராட்டமும் தனியொரு மனிதனுடைய விருப்பு வெறுப்புகளுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நின்றதும், அவருடைய விருப்பு வெறுப்புகளுக்கேற்ற தீர்மானங்களின்படியே வழிநடத்தப்பட்டதும் எத்தகைய மோசமான இன அழிவை ஏற்படுத்தியிருந்தது” (பக்கம் 206) எனத் தன் சுயசரிதையின் வழி கடுமையாகச் சாடியிருக்கிறார் தமிழினி. இவ்வாறான அவரது மன எண்ணங்கள் தனிப்பட்ட மனிதர் மீதான வெறுப்பல்ல. தான் சார்ந்திருந்த இயக்கத்தினூடான அதன் கட்டமைப்பு மீதான சாடல்களே ஆகும். ஏனெனில், “கள முனையில் நின்று எந்தக் கேள்விகளும் கேட்காது எமது சக போராளிகள் தமதுயிரை அர்ப்பணித்துக்கொண்டிருந்தார்கள். அத்தியாகங்களுக்கு முன்னால் வேறு எதுவுமே எழுந்து நிற்க முடியாதிருந்தது. வீரமரணம் அடையும் வரை விடுதலைப்புலிகள் இயக்கத்தின் விசுவாசமிக்க போராளியாகக் கடமையாற்ற வேண்டும் என்பதைத் தவிர எனது சிந்தனைகளில் வேறு எதுவுமே தென்படவில்லை” (பக்கம் 53-54) எனத் தமிழினி கூறுவது போரின் உச்சகாலகட்ட எதார்த்தினை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

இயக்கம் பற்றிய சுயவிமர்சனங்களில் முக்கியமானது சில பயிற்சி முகாம்களில் நடைபெற்ற அத்துமீறல்கள் என்பார் தமிழினி. ஏனெனில், தனது நெருங்கிய தோழியான சாம்பவி தனது பயிற்சி முகாம் அனுபவங்களைத் தன்னிடம் கூறும்பொழுது, “குறுகிய மனப்பாங்கும், வக்கிர குணம் கொண்டவர்களின் கரங்களில் ஆயுதங்களும், அதிகாரமும் போய்ச்சேரும் போது எத்தகைய அத்துமீறல்கள் நடைபெறும் என்பதற்கு அந்தப்பயிற்சி முகாமின் ஒரு சில ஆசிரியர்கள் உதாரணமாக இருந்தனர். அரசியல் போராளிகளாகப் பணியாற்றிய பின்னர் ஆயுதப் பயிற்சி பெறுவதற்காக வந்தார்கள் என்ற காரணத்துக்காக வயது வித்தியாசமின்றி அங்கே கொடூரமான முறையில் பயிற்சி பெறுவோர் நடத்தப்பட்டனர். இரத்தக் காயங்கள் ஏற்படுமளவுக்கு அடியுதைகளும், மனதை நோகடிக்கும் குரூரமான வார்த்தைகளும், தனிப்பட்ட பழிவாங்கல்களும் என அந்த மகளிர் பயிற்சி முகாமில் அரங்கேறிய சம்பவங்கள் ஒட்டுமொத்தமான பெண் போராளிகளுக்கும் மிகத்தவறான முன்னுதாரணங்களாக இருந்தன என்பார்.” (பக்கம்.58-59) ஆனால், இவை எவ்வகையான சித்திரவதைகள் என்பதை மட்டும் தமிழினி தன் நூலில் விரிவாக எடுத்துரைக்கவில்லை. மேலும், முஸ்லீம் மக்களைக் கட்டாயமாக வெளியேற்றியது பற்றித் தமிழினி கூறும்பொழுது, “மிகவும் சராசரியான வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருந்த அந்த மக்களைச் சந்தித்த பொழுது என் மனதில் மிகுந்த குற்றவுணர்ச்சி ஏற்பட்டது. அடக்குமுறைக்கு எதிராகப் போராடுவதாகக் கூறிக்கொண்ட எமது இயக்கம் இந்த அப்பாவி மக்களின் வாழ்வுரிமையை அடக்குமுறைக்கு உள்ளாக்கியதன் நியாயத்தை எனது இதயத்தால் ஏற்றுக்கொள்ள முடியாமலிருந்தது என்பார். (பக்கம்.66)

1996 - இல் இராணுவத்தினர் வடமராட்சியைக் கைப்பற்றி வலிகாமத்தை முழுமையாகக் கைப்பற்றும் நடவடிக்கையை மேற்கொண்டபோது இயக்கத்தின் கட்டளைக்கேற்ப அனைத்து மக்களும் வன்னி நோக்கி இடம்பெயர்ந்தனர். “சில மணி நேரத்திற்குள் ஏறக்குறைய ஐந்து இலட்சம் மக்கள் நாவற்குழி பாலத்தைக் கடந்த நிகழ்வை எப்படிப் பதிவு செய்தாலும் புரிய வைக்க முடியாத மனித அவலம் என்றே கூறவேண்டும் என்பார்.” கிழக்கு மாகாணத்தளபதியான கருணா அம்மானின் பிரிவினைத் தொடர்ந்து இயக்கத்திற்குள் நடந்த சகோதர யுத்தத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் தமிழினி “கிழக்கு மாகாணப்போராளிகளை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் என்ற பெயரில் இயக்கத்திற்குள் அனைவரும் வெறுக்கத்தக்க ஒரு கொடூரமான சகோதர யுத்தம் முன்னெடுக்கப்பட்டது. பல வருட காலமாக என்னுடன் பழகிய பல போராளிகள் இரு தரப்பிலும் உயிரிழந்து போயிருந்தனர்.” (பக்கம் 162) என்று கூறுவார்.

விடுதலைப்புலிகள் அமைப்பு பெற்ற வெற்றிகளின் காரணமாக “ஓர் அரச இயந்திரம் போல் தன்னை விசாலித்துக்கொண்டதனால் இயக்கத்தின் கூடுதலான மூளைப்பலம் நிர்வாகச்சிக்கலில் வீணே சிதறடிக்கப்பட்டது. பல திறமையான போராளிகள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு நிர்வாகச் சிக்கல்களில் தமது நேரத்தையும் திறமையையும் வீணடித்துக் கொண்டிருந்தனர் என்பார்.” (பக்கம் 182) இது இயக்கத்தின் வளர்ச்சியைத் தடைசெய்ததாக தமிழினி தன் நூலின் வாயிலாக கூறுகிறார். மேலும், இராணுவரீதியில் சாதனைகளைப் படைத்த இயக்கத்தால் சமாதான காலகட்டத்தில் அரசியல் ரீதியான வெற்றிகளைக் குவிக்க முடியவில்லை என்பதும் தமிழினியின் நிலைப்பாடு. இதனை, “யுத்தகளத்தில் பல வெற்றிகளைக் குவித்த தலைவர் சமாதானச் சூழ்நிலையில் அரசியல் ராஜதந்திர நுணுக்கங்களைத் துணிச்சலுடன் பயன்படுத்தித் தமிழர்களுக்கு உறுதியான ஒரு அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ளும் நிலையை நோக்கி முன்னேற முடியாமல் திணறினார் எனக்கூறுவார்.” (பக்கம் 168). அதேநேரத்தில், “புலிகளின் போரியல் வெற்றிகளில் மக்களுக்கிருந்த பிரமிப்பான நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் தூர நோக்குடனான புலிகளின் அரசியல் செயற்பாடுகளில் எப்போதுமே இருந்ததில்லை என்பது தமிழினியின் கூற்று. (பக்கம் 15) ஏனெனில், “ஆயிரமாயிரம் உயிர்களின் அர்ப்பணிப்பு வீண்போகாதபடி கனிந்து வந்த அரசியல் சூழ்நிலைகளைத் தலைவர் பயன்படுத்தி மக்களுக்கு ஒரு நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்துவார் என அனைத்துப் போராளிகளையும் போல் நானும் உறுதியாக நம்பினேன். இறுதிப் போருக்கான முடிவைத் தலைமை எடுத்தபோது, எனது சிறிதான அறிவுக்கெட்டிய வகையில் அது ஒரு சரியான முடிவாகப்படவேயில்லை என்பார்.” (பக்கம் 218)

தனது நூலில் தமிழினி பெண் விடுதலை பற்றி குறிப்பிடும் பொழுது, “எனது பாடசாலைக் காலத்தில் விடுதலைப்புலிகள் இயக்கம் தனிப்பெரும் விடுதலை இயக்கமாகப் பெரும் வளர்ச்சியை அடைந்திருந்தது. மகளிர் படையணிகள் கள முனைகளில் வீர, தீரச் சாதனைகளையும், உயிர் அர்ப்பணிப்புகளையும் நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள். நான் இயக்கத்தில் இணைந்து கொண்டமைக்குப் பொதுவான போராட்டச் சூழ்நிலைகளே காரணமாக இருந்த போதிலும், ஒரு பெண் என்ற நிலையில் எனது குடும்பத்தினதும், என்னைச்சூழ்ந்திருந்த சமூகத்தினதும், பெண் சார்ந்த கருத்து நிலையை உடைத்து ஒரு புரட்சி செய்யக்கூடிய சந்தர்ப்பமாகவும் அதைக் கருதினேன். நான் இயக்கத்தில் இணைந்த பள்ளிப்பருவத்தில் ஒரு வேகமும், துடிப்பும் என்னிடம் இருந்ததே தவிர, அக்காலகட்டத்தில் இருந்த அரசியல் நிலைமைகள் மற்றும் சமூகம் பற்றிய எவ்விதமான புரிதலும் எனக்கிருக்கவில்லை என்பார்.” (பக்கம்.73) மேலும், “பெண்கள் ஆயுதப்பயிற்சி பெற்றபோது, அவர்களால் தமது உடல் வலிமையை நிரூபிக்கக்கூடியதாக இருந்த போதிலும், அவர்களுடைய அடிப்படைச் சிந்தனைகளில் எந்தளவுக்கு மாற்றம் ஏற்பட்டிருந்தது என்பது கேள்விக்குரியதாயிருந்தது. குடும்பம் என்ற அமைப்புக்குள்ளிருந்து வெளியே வந்து, இயக்கம் என்ற அமைப்பிற்குள் புகுந்து கொண்ட புலிப்பெண்கள் அனைவருமே புரட்சிகரமான புதிய சிந்தனை மாற்றத்திற்கு உட்பட்டவர்கள் என்று கூறிவிட முடியாது. எவ்வாறு ஒரு கட்டுக்கோப்பான குடும்பப்பெண்ணாக வீட்டில் வளர்க்கப்பட்டோமோ, அதேபோலக் கடினமான இராணுவப்பயிற்சிகளைப்பெற்ற, கட்டுக்கோப்பான மகளிர் படையணிப் போராளிகளாகவே இயக்கத்திலும் வளர்க்கப்பட்டோம் எனக்கூறுவார்.” (பக்கம்.75-76)
“பெண்களிடையே சுதந்திரமான ஒரு மனோபாவத்தை வளர்ப்பதற்குரிய தீர்க்கமான கொள்கைத்திட்டங்கள் எவையும் எங்களிடமிருக்கவில்லை. பெண்கள் வீட்டுக்கு வெளியே வந்து ஆயுதமேந்துவதன் மூலம், சமூகத்தையே நாம் மாற்றி விடலாம் எனக்கனவு கண்டோம். ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்றால், பெண் போராளிகள் ஆயுதமேந்திப் போராடியதால், போர்க்களத்தின் பல வெற்றிகளுக்குக் காரணகர்த்தாக்களாக இருக்க முடிந்ததே தவிர, சமூகத்தில் பெண்கள் சார்ந்த கருத்தமைவில் எவ்விதமான மாற்றங்களையும் எங்களால் ஏற்படுத்திவிட முடியவில்லை. தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் விடுதலைக்கான பாய்ச்சல் வளர்ச்சியானது ஆயுதப் பெண்களின் பிம்பமாகவே தொடங்கி ஆயுதப் போராட்டத்தின் தோல்வியுடனே அது முடிந்தும் போனது." (பக்கம்.76) “பெண்கள் ஆயுதப் போராட்டத்தில் பங்கெடுப்பதன் மூலமே சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியுமென்று கருத்துகளை நான் கூறியிருக்கிறேன். ஆனாலும், ஆயுதப்போராட்டத்தோடு சமாந்தரமான நிலையில் சமூக மாற்றத்திற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன என்று கூறுவதற்கில்லை என்பார்.” (பக்கம்.77)

“அரசியல்துறை மகளிர் பிரிவினுடைய பணிகளாக சமூகத்தில் பெண்ணுரிமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், பெண்களின் வாழ்கைத்தரத்தை மேம்படுத்துவதும், சமூகத்தில் பாதிக்கப்பட்ட பெண்களை இனங்கண்டு அவர்களுக்கான புனர்வாழ்வளிப்பதும், இன்னும் பரந்துபட்ட ரீதியில் சமூக மாற்றத்துக்காக உழைப்பதும் என்பனவாகவே இருந்தன. இதன் அடிப்படையில்தான் அரசியல் மகளிர் பிரிவின் வேலைத்திட்ட அலகுகளும் பிரிக்கப்பட்டிருந்தன. ஆனாலும் நடைமுறையில் சாத்தியமானது என்னவோ இயக்கத்திற்கு புதிய போராளிகளை இணைப்பதும், பெண்களுக்கென குறிப்பிட்ட சில வேலைகளை மாத்திரம் செய்ய முடிந்ததுமேயாகும். ஏனெனில் இயக்கத்தின் முழுக்கவனமும், மொத்த வளங்களும் யுத்தத்தில் ஈட்டப்பட வேண்டிய வெற்றியை நோக்கியே திருப்பபட்டிருந்தன.” (பக்கம்.77) அந்த அர்ப்பணிப்பின் அனுகூலங்களை அனுபவிக்கச் சித்தமாயிருக்கும் சமூகம் அவளின் போராட்டத்திற்குப் பின்னரான வாழ்வை கொச்சைப்படுத்தியே பார்க்கிறது. பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களின் உடல்களை விளம்பரப்படுத்தி, அரசியல் பிழைப்பு நடத்துகிறது. போராட்டத்தில் பங்குபெற்று உயிர் மீண்ட பெண்கள் அனைவருமே மானமிழந்து போய்த்தான் வந்திருக்கிறார்கள் என்ற கருத்துகளைப் பரப்புவது எத்தனை மோசமான இழிசெயல் எனவும் கடிந்துரைக்கிறார். எனவே, தனது நூலில் பெண்கள் பற்றிய சமூகம் மீதான விமர்சனத்தையும்கூட மிகவும் நேரிடையாக வெளிப்படுத்தியிருக்கிறார் தமிழினி;.
விடுதலைப்புலிகளின் அரசியல், போர்ச்செயற்பாடுகளையும், புலிகளின் வன்னிப்போர், பூநகரிச்சமரான தவளைப்பாய்ச்சல், முள்ளிவாய்க்காலில் போரின் இறுதிக்காலத்து அனுபவங்கள், போரின் பின்னரான தடுப்பு முகாம், வெலிக்கடைச்சிறை வாழ்வு மற்றும் பூந்தோட்டத்துப் புனர்வாழ்வு போன்ற பல்வேறு நிகழ்வுகளை தமிழினி இந்நூலில் விரிவாகவே ஆவணப்படுத்தியிருக்கின்றார். மேலும், தமிழினி இயக்கத்தில் சேர்ந்தபொழுது, ஆயுதப்பயிற்சி எடுப்பதற்கு முன்னர் தான் ஆற்றிய அரசியற் செயற்பாடுகளையும், அவரது அச்செயற்பாடுகள் பற்றிய சிந்தனைகளையும், புலிகளின் மக்களுடனான அரசியல் நடவடிக்கைகளையும் தனது நூலில் சுயவிமர்சனம் செய்துள்ளார்.

புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானின் மேற்பார்வையில் பயிற்சி கொடுக்கப்பட்டு புலிகளின் தாக்குதல் வரலாற்றிலேயே முதல் தடவையாக ஒரு இராணுவ - கடற்படைக்கூட்டுப் படைத்தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ‘ஒப்பரேசன் தவளை’ எனப்படும் தவளைப்பாய்ச்சலாகும். தவளையானது நீரிலும், நிலத்திலும் வாழும் வல்லமை மிக்கது. மேற்படி தாக்குதலும் நீரிலும், நிலத்திலுமுள்ள படைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல். விடுதலைப்புலிகள் நீரிலும், நிலத்திலும் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தும் வல்லமை மிக்கவர்கள் என்பதை உணர்த்துவதற்காக இடப்பட்ட பெயர்தான் ‘தவளைப்பாய்ச்சல்.’ இப்போரில் ஈடுபட்ட போராளிகளின் உண்மையான உணர்வுகளை தமிழினி தனது நூலில் பதிவு செய்திருக்கிறார். “பல போராளிகள் தமது குடும்பத்தவர்களுக்கு தமது இறுதி மடல்களை எழுதிக்கொண்டிருந்தனர். எனது நெருங்கிய பல நண்பிகளும் இத்தாக்குதலில் பங்கெடுத்தனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கனவுகள், நம்பிக்கைகள், அவநம்பிக்கைகள், உயிர் மீதான உத்தரவாதமின்மை, வெளிப்படுத்தமுடியாத விரக்தி என நிச்சயிக்கப்பட்ட யுத்தமொன்றில் பங்குபெறும் போராளிகளின் இறுதிக்கணங்களில் அவர்களுடைய கண்களில் தேங்கியிருக்கும் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள முடிந்த எவராலும் மீண்டுமொருமுறை யுத்தத்தைப்பற்றி பேசவோ அல்லது நினைத்துப்பார்க்கவோ முடியாது என்பார்.” (பக்கம் 57)

இந்த யுத்தத்தில் பெரிய வெற்றிகளை அடைந்த விடுதலைப் புலிகள் இயக்க வரலாற்றில் முதல் தடவையாக இராணுவத்தினரின் ‘யுத்த டாங்கி’ ஒன்று கைப்பற்றப்படுகின்றது என்பதனை எடுத்துரைக்கும் தமிழினி, இச்சமரில் இழந்த தனது தோழிகள் பற்றியும் விவரித்திருக்கின்றார். அதில், அவர்களது காதல் அந்தரங்க உணர்வுகளைச் சொல்லி நெஞ்சினைத்தொடும் வகையில் அவர்களது உயிரிழப்பையும் எடுத்துரைக்கின்றார். குறிப்பாக சாம்பவி பற்றிய அவரது கூற்று முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில், “வயல் வெளிகளுக்கூடாக நானும் சாம்பவியும் தவழ்ந்தபடி முன்னேறிக்கொண்டிருந்தோம். மழை தொடர்ந்து பெய்து கொண்டேயிருந்ததால் வெள்ளம் தேங்கிக் கிடந்தது. தூரத்தே உயரமான நிலை ஒன்றிலிருந்து தொடர்ந்து தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த இராணுவத்தின் குறிபார்த்துச் சுடுபவனின் இலக்குத் தவறாதவைகள் அந்த வயல்வெளியில் பல போராளிகளின் உயிர்களைக் குடித்துக்கொண்டிருந்தன. சிறிதாகக் கூடத்தலையை நிமிர்த்திப்பார்க்க முடியாத நிலையில் சேற்று வயல்களுக்கூடாக நாங்கள் தவழ்ந்து கொண்டிருந்தோம். எனது பக்கவாட்டில் ஊர்ந்துகொண்டிருந்த சாம்பவியிடமிருந்து திடீரென ‘ஹக்’ என வினோதமான சத்தம் கேட்டது. திரும்பிப்பார்த்தேன். அவளது முகம் சேற்றுக்குள் புதைந்துபோய்க்கிடந்தது. நான் அவளது தலையை நிமிர்த்திப் பார்த்தபோது கடைவாயில் இரத்தம் கசிந்துகொண்டிருந்தது என்பார்.” (பக்கம் 59).

இதுபோலவே, இச்சமரில் பலியான தன் நெருங்கிய தோழி தாமரை பற்றியும் தமிழினி குறிப்பிடுகிறார். “நீ யாரை நினைப்பாய் தாமரை, அவளின் வளமையான சோக விழிகள் ஒரு தடவை மின்னியது. காய்ந்து போயிருந்த உதடுகளில் மெல்லிய புன்னகை நெளிந்தது. நான் விரும்பியிருந்தவரைத்தான் நினைப்பேன் என்றால், அவளுக்குள் ஆழப்புதைந்து கிடந்த காதலின் இரகசியக் காயத்தை அப்போதுதான் எனக்குத் திறந்து காட்டியிருந்தாள். ஆனால், முன்னொரு யுத்தத்தில் அவளுடைய போராளிக் காதலன் ஏற்கனவே உயிரிழந்திருந்தான் எனவும் குறிப்பிடுவார்.” மேலும், “போர்க்களத்தில் கண்ட இன்னொரு மறக்க முடியாத காட்சியும் எனது ஆழ்மனதில் பதிந்துபோன சித்திரமாகி விட்டிருந்தது. இராணுவத்தினரினதும், விடுதலைப்புலிகளினதும் உயிரற்ற உடல்கள் மழைத்தண்ணீரில் ஊறிப்போய், ஆங்காங்கே விறைத்துக்கிடந்தன. அவர்கள் உடல்களிலிருந்து வடிந்திருந்த சிவப்புக் குருதி மழை நீரில் கரைந்து தண்ணீரோடு கலந்து ஓடிக்கொண்டிருந்தது. சற்று நேரத்திற்கு முன்புவரை தீராப் பகையுணர்ச்சியோடு எதிரும் புதிருமாக நின்று போரிட்டவர்கள் நிலத்தில் சடலங்களாக சிதறிக்கிடந்த காட்சி ஒரு தாயின் மடியில் உறக்கத்தில் புரண்டு கிடக்கும் குழந்தைகளையே நினைவுபடுத்தியது. எல்லா வேறுபாடுகளும், முரண்பாடுகளும், பகைமைகளும் அர்த்தமிழந்து போகும் இடம் போர்க்களம்தான் என்பதை முழுமையாக உணரக்கூடிய அறிவு உண்மையாகவே அப்போது எனக்கிருக்கவில்லை என்பார்.” (பக்கம் 60).

இவ்விதமான தமிழினியின் விவரிப்பு, போரில் நேரடியாகப் பங்குபெற்ற அவரது அனுபவத்தைச் சிறப்பாக ஆவணப்படுத்தியிருப்பதாகச் சொல்லலாம். மேலும், தமிழினியின் தன்னுணர்வுகளையும், தன் வாழ்வின் சம்பவங்களையும் கவித்துவமான மொழிச்சிறப்பால் வெளிப்படுத்தியிருக்கும் விதம் உண்மையில் பாராட்டத்தகும். ஏனெனில், பிரச்சாரமற்ற, அனுபவத்தின் வெளிப்பாடாக, மானுட நேயம் மிக்க அவரது எழுத்து போர்க்களக்காட்சிகளை விவரித்திருந்த விதம் நெஞ்சைத்தொடுவதாகவும், யுத்தம் பற்றிய புரிதல்கள் இலக்கியச்சிறப்பு மிக்கதாகவும் அமைந்து சிறக்கின்றது.

மேலும், “எந்த ஓர் உயிரினமும் போராடினால்தான் வாழ்க்கை. இது இயற்கையின் நியதி. அந்தவகையில் எமது மக்கள் தமது அரசியல் உரிமைகளுக்காகப் போராட வேண்டியவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் இனியும் ஆயுதப் போராட்டம் என்ற வழிமுறையில் எமது அடுத்த சந்ததி சிந்திக்கக் கூடாது என்பதை எனது ஆத்மாவிலிருந்து கூறுகிறேன். இந்த நாட்டில் இனியும் இரத்த ஆறு பாயக்கூடாது. ஏந்த அன்னையர்களும் தனது பிள்ளையைச் சுமக்கும் பிரேதப் பெட்டிகளில் அடித்துக்கொண்டு அழக்கூடாது. எமது எதிர்காலச் சந்ததி தமது அறிவாற்றலால் உலகத்தை வென்றெடுக்க வேண்டும். மனங்கள் ஒன்றுபட்ட நவீன உலகத்தின் தரிசனங்களை அவர்கள் நேரடியாக அனுபவிக்க வேண்டும். போர்க்களங்களில் உயிரைக் கொடுத்த வீரர்கள் ஒவ்வொருவரும் இந்த யுத்தம் எங்களோடு முடிந்துபோக வேண்டும் என்றுதான் எண்ணினார்களே தவிர அடுத்த சந்ததிக்கும் அது தொடரவேண்டும் என அவர்கள் நினைத்ததில்லை எனக்கூறுவார்.” (பக்கம்.16)

முதல் முறையாக விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவர் தன்னை, தான் சார்ந்திருந்த இயக்கத்தை சுய விமர்சனத்துக்குள்ளாக்கியது வரவேற்கத்தகுந்த செயலாகும். ஏனெனில், சுயவிமர்சனங்கள் எப்பொழுதுமே ஆரோக்கியமானவை. இதனை நினைத்தவரெல்லாம் எழுதிவிட முடியாது. அவை எதிர்காலத்தில் அனைவரையும் சரியான பாதையில் நடப்பதற்கு வழிகோலுபவையாக அமையவேண்டும். அப்போதுதான் சுயசரிதை என்பதும் முக்கியத்துவம் பெறும். அந்தவகையில், ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ என்னும் தனது சுயசரிதை நூலில் தமிழினி பெண் விடுதலை பற்றித்தெரிவித்திருந்த கருத்துகள்; ஆயுதமெடுத்துப்போராடிய அமைப்பின் பெண் போராளி என்ற வகையில் அவையனைத்தும் முக்கியமானவையே. மேலும், தான் இணைந்து இயங்கிய மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய இயக்கமொன்றினை விமர்சித்ததால் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ என்னும் பெயரினை தன் சுயசரிதைக்கு தரித்து அர்த்தம்தர முயன்றிருப்பதாகவும் தோன்றுகிறது.

இந்தச் சுய விமர்சனத்தால் தமிழினி என்னும் பெண் போராளியொருவர் வந்தடையும் முடிவு ‘தொடர்ந்து போராடுவேன்’ போருக்கான பாதையைவிடக் கடினமானது உண்மையான சமாதானத்தின் வழி என்பதையும் நானறிவேன் எனக் கூறுவதோடு, “எனது மாணவப்பருவத்தில் நான் சார்ந்த சமூகத்திற்கு ஏதாவது நன்மையான செயலை ஆற்ற வேண்டுமென்ற பெரு விருப்போடுதான் ஒரு போராளியாக மாறினேன். எனது வாழ்வின் இறுதி மூச்சு வரை ஒரு போராளியாகவே இருந்து மக்களுக்கு உதவ விரும்புகின்றேன். ஆயுதம் ஏந்துவதன் மூலமோ அல்லது பழிக்குப் பழி வாங்குதலின் மூலமாகவோ எனது சமூகத்திற்கும் நாட்டிற்கும் உலகத்திற்கும் எந்த நன்மைகளையும் நாம் செய்து விட முடியாது என்பதை அனுபவத்தின் பாடங்கள் கற்றுத்தந்து விட்டன. அமைதியும் சமாதானமுமே எந்தவொரு சமூகத்தினதும் வளர்ச்சிக்கான இயல்பான சாத்தியப்பாட்டை உருவாக்கும். அந்த வகையில் எனது இறுதிக்காலம் வரை எனது சமூகத்திலும் நாட்டிலும் மட்டுமல்ல உலகத்தின் அமைதிக்காகவும் சமாதானத்திற்காகவும் எனது போராட்டம் தொடரும்.” எனக்கூறிய தமிழினி இறுதிவரை போராடியே மறைந்திருக்கின்றார்.

(நன்றி: இண்டங்காற்று)

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp