தலித் இலக்கியம் என்ற வகைப்பாட்டின் அடிப்படையில், தமிழ்க் கதைப் புலத்தில் 1990-க்கு முன் தலித் கதாபாத்திரங்கள் எங்கே எனக் கேள்வி எழுப்பினால் அதற்கான பதில் மிகத் துயரமானது. தமிழின் முக்கியப் படைப்பாளிகளின் முழுத் தொகுதிகளைப் புரட்டினால் தலித் பாத்திரத்தை அரிதாகவே காண முடிகிறது. தலித் குரல்கள் தமிழில் வலுவாக ஒலிக்கத் தொடங்கிய 1990-களில் அழகிய பெரியவன் எழுத வருகிறார்.
இந்தத் தொகுப்பில் அழகிய பெரியவன் 2012 வரை எழுதிய 56 கதைகள் இடம்பெற்றிருக்கின்றன. 1998-ல் வெளிவந்த முதல் கதையான ‘கூடடையும் பறவைகள்’ முதல் 2012-ல் வெளிவந்த ‘பொற்கொடியின் சிறகுகள்’வரை அழகிய பெரியவன் அரசியலோடு பிணங்காத கலையிலிருந்து வழுவாது நிற்கிறார்.
அழகிய பெரியவன் கதைகளில் தலித் குரல் மட்டுமே ஒலிக்கிறதா? அழகிய பெரியவனை அந்தச் சிமிழுக்குள் மாத்திரம் அடைத்துவிட முடியாது. வேறு பல்வேறு குரல்களும் ஒலிக்கின்றன. நிலத்தை இழந்தவன், நிலத்தை நேசிக்கும் சாலம்மாள், பெண் மனம் தேடும் மனம் பிறழ்ந்த சிம்சோன், பிணவறைக்குள் இறங்குவதுபோல் தனது பழைய நிலத்தில் தொடங்கப்பட்ட தோல் தொழிற்சாலையில் தோல் பதனிடப்படும் தொட்டிக்குள் இறங்கும் வெள்ளையன், பிச்சைக்காரியாய் மாறித் தன் மகனைப் பார்க்கும் சீனுக்கிழவி, புதிய உறவில் தெளிவுபெறும் சீதா, கிளியெனப் பறந்துபோகும் ஷர்மிளா, தங்கள் சிறுநீரால் பள்ளியை மூழ்கடிக்கும் மினுக்கட்டான் பொழுதுச் சிறுவர்கள். தன் பால்ய காலத் தோழனின் கல்யாணத்தில் ஆடும் யட்சினி, காடு வளர்க்க லஞ்சம் வாங்கும் வேல்முருகன் இப்படிப் பலவித குரல்கள் ஒலிக்கின்றன. அரிதாகப் பிரச்சாரத்துக்கு அருகிலும் போகின்றன இவரது கதைகள்.
தொண்ணூறுகளுக்குப் பின்பு எழுதவந்த தமிழ்ப் படைப்பாளிகளில் அழகிய பெரியவனின் கதைகளில் தென்படும் அளவுக்குக் காடும் ஆறும் பறவைகளும் விலங்குகளும் பல்வேறு வகைத் தாவரங்களும் காட்டுப் பழங்களும் பிறரின் படைப்புகளில் தென்படுவதில்லை. இவரது கதைகளில் மகிழ்ச்சியான பெண்கள் மிகவும் குறைவு. சந்தோஷ நரம்பு அறுக்கப்பட்டவர்களே இவருடைய மனுஷிகள். ஆண்களாவது குடித்து விழுந்து எழுந்து தற்காலிகமாகவேனும் வாதைகளிலிருந்து தப்பிக்கிறார்கள். இவரது கதைகளில் மனிதர்கள் விடாது வதைபடுகிறார்கள். மகன்களால் அம்மாவும் அப்பாவும் புறக்கணிக்கப்படுகின்றனர். கழுத்தறுபட்ட மாடுகள் ஓடுகின்றன. முதல்முறையாகப் படிக்கும் தலித் பெண்ணின் வீடு மீது விடாது கல் வீசப்படுகிறது. மிகச் சாதாரணமாகச் சாமானியர்களின் உயிர் பறிக்கப்படுகிறது. சிறுவர்கள் வீட்டை விட்டு ஓடுகின்றனர். சாதி எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது.
விலங்கு, நடுவானில் ஒரு வானவில், வீச்சம், குடை, பூவரசம் பீப்பி, யட்தொறப்பாடு, வெளுப்பு, முள் காடு, புலன் ஆகியவற்றை இந்தத் தொகுப்பின் முக்கியமான கதைகளாகக் கருதுகிறேன்.
‘தரைக்காடு’, மலையின் அடிவாரத்திலிருந்து ஒரு நள்ளிரவில் பிரசவத்துக்காக ஒரு பெண்ணை வண்டியில் கூட்டிக்கொண்டு கடக்கும் பாதைகளைப் பற்றியது. அந்தப் பாதையில் பல்வேறு இடர்ப்பாடுகள், விலங்குகள், பேய்கள் என எல்லாம் உண்டு. மருத்துவமனை போய்ச் சேர்வதற்குள் பிரசவம் நிகழ்ந்துவிடுகிறது. ரத்தப் போக்குடன் கிடக்கும் அம்மணி பிள்ளையைப் பெற்ற பின் தனிக்குடிலில் படுத்திருந்தபோது தாகம் தாங்காமல் ரத்தப் போக்குடைய சிறுநீரைப் பிடித்துக் குடித்துவிட்ட தன் பாட்டியின் நினைவெழும்பிக் கிடக்கிறாள். தமிழின் துயரப் பெருமிதங்களில் இக்கதையும் ஒன்று.
‘நீர்ப்பரப்பு’ என்னும் கதையில். இளங்கோவின் ஊருக்குக் கரகாட்டம் ஆட வரும் தன் அம்மாவின் ஆட்டத்தைப் பார்க்கக் கூடாதென அவன் காதலி சிந்து வாக்குறுதி வாங்குகிறாள். வாக்குறுதியின் பொருட்டுத் திருவிழா அன்று ஊர் அகன்ற இளங்கோ மதியத்துக்கு மேல் தாள முடியாமல் திரும்பி வருகிறான். கரகாட்டமும் பார்க்கிறான். இறுதியில் ஊர் வாலிபப் பிள்ளைகளுக்கும் கரகாட்டம் ஆடவந்தவர்களுக்கும் பிரச்சினை ஆகிறது. இளங்கோ குற்றவுணர்வுடன் மைதானத்தில் படுத்திருக்கும்போது சிந்துவின் தொலைபேசி அழைப்பு வருகிறது. “ரொம்ப நன்றி இளங்கோ” என்கிறாள் சிந்து. தமிழ்க் கதைப்பரப்பில் இதுபோன்ற இக்கட்டான தருணங்கள் மிக அரிதாகவே இடம்பெறுகின்றன. மனித மனத்தின் ஊசலாட்டம் அத்தனை துல்லியமாய் நிகழ்கிறது.
ஒரு படைப்பாளியின் மொத்தக் கதைகளையும் தொகுத்து வாசிப்பதென்பது ஒருவருடைய புகைப்பட ஆல்பத்தை அவரது குழந்தைப் பருவத்திலிருந்து புரட்டுவது போலத்தான். துல்லியமாக அவர் வளர்ந்து எப்படி மாறி வந்திருக்கிறார் என்பதற்கு அதைவிடச் சிறந்த சான்று வேறில்லை. ஆனால், அத்தனை படங்களும் துல்லியமாக இருக்க முடியாது. அவுட் ஆஃப் ஃபோகஸ்கள், மரத்தை எடுக்க கிளை மாத்திரம் பதிவாக, முன்னால் இருக்கும் மனிதர்கள் கலங்கலாகப் பின்னணியில் இருக்கும் மனிதர்கள் மாத்திரம் துல்லியமாக, அடையாளம் சொல்ல முடியாத குரூப் போட்டோக்களாகவும் அந்த ஆல்பம் இருக்கும். இந்தத் தொகுப்பை வாசிக்கும்போதும் அப்படியான அனுபவமும் நமக்கு நிகழத்தான் செய்கிறது.
இசங்கள் எப்போதும் கலையைக் காவு கேட்பது தமிழ்ச் சூழலில் வழக்கம். இதற்கு நிறைய முன்னுதாரணங்கள் உண்டு. பா. செயப்பிரகாசம், அஸ்வகோஷ், ச.தமிழ்ச்செல்வன் போன்றவர்கள் உடனடி உதாரணங்கள். இவர்கள் அரசியல் பணியில் ஈடுபடத் தொடங்கும்போது கலை ஊற்று அடைபடத் தொடங்குகிறது. இவர்கள் ஒன்று, செயப்பிரகாசம் போல சூரிய தீபனாய் உருமாறிப் பிரகடனமாக எழுதத் தொடங்குகின்றனர். அல்லது அஸ்வகோஷ், தமிழ்ச்செல்வன் போல் படைப்பு வெளியிலிருந்து விலகத் தொடங்குகின்றனர். ‘வெயிலோடு போய்’ தமிழ்ச்செல்வனை நாம் விடாது ‘வாளின் தனிமை’யில் தேடிப் பார்க்கிறோம். நமக்கு மிஞ்சுவது பெரும் ஏமாற்றமே. அஸ்வகோஷ் ஒரு கட்டத்தில் எழுதுவதையே நிறுத்திவிடுகிறார். அரசியலும் கலையும் முரண்படாத ஒரு புள்ளியை இதுவரை நம் அரசியல் இயக்கங்கள் கண்டடையவில்லை. இனிய விதிவிலக்காக அழகிய பெரியவன் இருக்கிறார். பிரச்சாரத்திலிருந்து பெரிதும் விலகி நிற்பதாலேயே அழகிய பெரியவனின் கதைகள் நம்மைக் கவர்கின்றன.
(நன்றி: தி இந்து)