“தமிழிலக்கியத்தில் குற்றப்பரம்பரையினர்” என்ற கட்டுரைத் தொகுப்பு நூலில் ஏழாவதாக இடம் பெற்றிருக்கின்ற “பாவெல் பாரதி” யின் “கீழைத்தேயப் பார்வையில் சங்க இலக்கிய ஆறலை கள்வர் குறித்த சொல்லாடல்கள்” என்ற ஆய்வுக் கட்டுரையை, நூலில் நான்காவதாக இடம் பெற்றிருக்கின்ற முனைவர் வி.சாலமன் செல்வனின் “காவல் கோட்டம், ஒரு மார்க்சியப் பார்வை” என்ற கட்டுரையில் வருகின்ற “பொருளாதாரக் கலாச்சாரப் புயல்களை எவ்வித தயக்கமுமின்றி எதிர்த்து நின்ற ஒரு குழுவினர்தான் தென் தமிழகத்தின் மத்தியில் வாழும் கள்ளர்கள்” என்ற கருத்தோடும் “எப்படி கள்ளர் பட்டம் வந்தது? எப்படி கள்ளர் படை மக்கள், கள்ளர்களாக ஆக்கப் பட்டார்கள் என்பதை விளக்க சு.வெங்கடேசன் முயற்சிகூட செய்யவில்லை” என்ற கருத்தோடும் ஒப்பிட்டுப் பார்த்து அந்தப் புரிதலோடு அலசிப் பார்க்கின்றேன்.
பாவெல் பாரதி, மென்மை தாங்கியதொரு நிதானத்தோடு தான் ஒரு முடிவுக்கு வந்ததை மிகுந்ததொரு நேர்த்தி மிக்க ஆய்வின் உதவியோடும், சிறப்பம்சம் மிக்கதானதும், நம்பிக்கையும் ஏற்புடைமையையும் உருவாக்கும் குணாம்சம் கொண்ட யூகத்தோடும் தன்னுடைய ஆய்வுக் கட்டுரை வாயிலாக படிப்பவர்களுக்கு நிரூபிக்க முயற்சி செய்ததில் வெற்றி கண்டுள்ளார் என்றே சொல்ல வேண்டும். அவரது ஆய்வின் முக்கிய சாரமாக இருப்பது சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள குறிப்பிட்ட இனக்குழுவினர் மீது வைக்கப்பட்ட “கள்வர்” என்ற சொல்லாடல் என்பது அரசியல் நோக்கம் கொண்ட, திணிக்கப்பட்ட, அவர்களின் புகழையும் நற்செயல்பாட்டையும் எதிர் காலத்தில் திரிக்கப்படவும் அல்லது முற்றிலுமாக மறைக்ககப்படவுமே திட்டமிட்டுப் பயன்படுத்தப்பட்டது என்பதாகும். அதற்கு பூக்கோ, எட்வர்ட் சையத், கிராம்சி உள்ளிட்ட தத்துவ மேதைகளின் நிதர்சன அனுபவக் கோட்பாடுகளை துணைக்கிழுத்து அதனை உள்வாங்கி நமக்கும் உணர்த்தி, சங்க இலக்கியங்களை மீள்வாசிப்பு செய்யக் கோருகின்றார்.
கட்டுரையை நான்கு பாகங்களாப் பிரித்து எழுதியதில் தன்னுடைய ஆய்வின் நம்பகத் தன்மையை படிப்படியாகவும் சீராகவும் முன்னகர்த்திச் சென்று நிறைவாக தன் ஆய்வின் விளைவால் வெளியான உண்மைகளை உரக்க அறிவித்து முடிக்கின்றார். “அதிகாரத்திற்கு புறத்தேயான உண்மை என ஒன்று இல்லை” “எங்கெல்லாம் அதிகாரம் மையம் கொண்டிருக்கின்றதோ அதனை இனம் கண்டு அதன் நுண் அரசியலைக் கட்டுடைக்க வேண்டும்” என்ற இரண்டு கருத்துகளை நமக்குச் சுட்டிக் காட்டுவதன் மூலம் “கீழைத்தேய மக்களை அநாககரிகர்களாகவும் மேலைத்தேயத்தவரை நாகரீகமானவராகவும், கட்டமைத்ததைப் போல பாலைத்திணையையும் அம்மக்களையும் மற்ற திணை மாந்தர்களின் நன்மைக்கு எதிரான தீயவர்களாகக் கட்டமைத்ததும் திட்டமிட்ட செயலே” என்ற தன் கருத்தினை கூர்ந்து நோக்கச் செய்கிறார் பாவெல் பாரதி. மேலும், “ஏகாதிபத்தியத்திற்கு தெய்வீக உரிமையை வழங்குவதற்கு கலையும், பண்பாடுமே காரணமாக இருக்கின்றன. பண்பாட்டு அதிகாரமின்றி ஏகாதிபத்தியம் தனது கல்வி, அரசியல், பொருளாதார அதிகாரங்களை நிலைநாட்ட முடியாது” என்றும் “சங்க இலக்கிய ஆக்கத்திற்கும், பேரரசு உருவாவதற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு” என்றும் சுட்டி விளக்குவதன் நோக்கம், இவ்விரண்டிற்குமான காரணகர்த்தாக்களை எதிர்க்கத் துணிகின்ற இனக்குழுக்களை அழித்தொழிப்பது அல்லது தீயவர்கள் என்று பட்டம் கட்டி தலைமுறைக்கும் பரவச் செய்வது என்பதில் இருக்கும் உண்மையை நாம் உணர வேண்டும் என்பதற்காகவே என்று கருதுகின்றேன். அதன்பொருட்டே அத்தகைய உள்ளடக்கத்தைக் கொண்ட தன்னுடைய “உரையாசிரியர்களும், இலக்கண ஆசிரியர்களும், இனக்குழுக்களைக் கொலைகாரர்களாகவும், கூடவே அவர்களை கொள்ளைக்காரர்களாகவும் சித்தரித்து ஆறலை கள்வர்கள் என்ற சொல்லாடலைப் பெருங்கதையாடல்களாக்கினார்கள்” என்ற நிலைப்பாட்டை அறிவிக்கின்றார்.
தன்னுடைய ஆய்வு நெடுகிலும், தொல்காப்பியம், புறநானூறு, பதிற்றுப்பத்து, பத்துப்பாட்டு என சங்க இலக்கியங்கள் பலவற்றைக் கையாண்டிருந்தாலும், நான்காவது மற்றும் கடைசி பாகத்தில் வருகின்ற “அகப்பாடல்களில் பேசப் படாததற்குக் காரணம்” என்ற கட்டுரை முக்கியத்துவம் பெறுகின்றது. அதில், “கிராம்சியின் பார்வையில் புரிந்து கொள்வதானால் இனக்குழுக்களை இராணுவ பலத்தாலும் அரசியல் பொருளியல் பலத்தாலும் ஒடுக்கிய வேந்தர் ஆட்சி, ஒடுக்கப்பட்ட இனக்குழுக்களைத் தீமையின் சின்னங்களாகக் கொலை காரர்களாகச் சித்தரிப்பதன் மூலம் அவர்களின் மீதான தப்பெண்ணத்தை உருவாக்கி தமது பேரரசு விரிவாக்க இனக்குழு அழிப்பு ஆதிக்க அரசியலை நியாயப்படுத்தவும், ஒடுக்கப்பட்ட மக்களின்மீது தமது மேலாண்மையை நிறுவவும் செய்த பண்பாட்டு ரீதியான தந்திரம்” எனச்சொல்லது இந்த உழைப்பு மிகுந்த ஆய்விற்கு வலு சேர்க்கிறது.
முந்தைய முடிவுகள் மறைக்கப்பட்டு அதன் வடு முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டால் அந்த முடிவு ஏற்படக் காரணமான விளைவினையும் அதன்மீதான வினையையும் எதிர்காலத் தலைமுறைகள் புதிய பொருள்கொண்டுதானே பார்க்க முடியும்? “தொகுத்தோன், தொகுப்பித்தோன் விருப்பு வெறுப்பு என்பது, ஒரு வெகுஜன நடைமுறைக் கருத்தின்மீதான ஆய்வினை, அதனை மறுக்கும் பொருட்டு மேற்கொள்ளும் ஆய்வாளராக அறிவித்து இக்கட்டுரையின் வாயிலாக வருகின்ற பாவெல் பாரதியிடமும் பொருந்தும் என்றாலும், அவர் ஒரு இடதுசாரி பின்புலத்திலிருந்து வரும் மார்க்சிய நோக்காளர் என்ற அடிப்படையில், “ஆய்வு செய்பவன் தான் தொடர்பு கொண்டுள்ள கலாச்சாரத்தோடு பலவந்தமற்ற உறவைப் பேண வேண்டும்” என்பதை ஒப்புக் கொண்ட ஆய்வாளராகவே நமக்குத் தெரிகின்றார்.
அந்த வகையில், குற்றப்பரம்பரையினர் என்று குற்றம் சுமத்தப்பட்ட இனக்குழுக்கள் மீதான ஆதிக்க சக்திகளின் சொல்லொண்ணா அடக்குமுறைகள், தாக்குதல்கள் என்பதைத் தாண்டி, தலைமுறை தொடர்ச்சியாக அவர்களின் மீதான “கள்வர்” பட்டம் என்பதில் உள்ள அரசியல் மறுப்பை தெளிவாகத் தெரிவிக்கின்ற பாவெல் பாரதியின் இக்கட்டுரையில் அவர் நிறைவாக தெரிவித்திருக்கின்ற அனைத்து பத்து கருத்துக்களையும் அப்படியே அச்சு பிசகாமல் வழி மொழிகின்றேன். இருப்பினும், “புராணங்களை கட்டுடைத்துப் பார்க்க வேண்டும் என்ற புரிதலோடு, காவிரி டெல்டா – மீத்தேன் வாயு, தண்டகாரண்யா – கனிம வளம், வளைகுடா – பெட்ரோலியம் ஆகிய ஆக்கிரமிப்பு அரசியலின் வழி எதிர்காலத்தில் உருப்பெறப் போகும் சொல்லாடலையும் விளங்கிக்கொள்ள முடியும்” என்ற பாவெல் பாரதியின் கருத்தோடு, மண்ணின் மைந்தரான அவர் “தேனி – நியூட்ரினோ” என்பதையும் இணைத்திருந்தால் நிறைவாக இருந்திருக்கும் என்ற ஆதங்கத்தோடு, அவருக்கு வாஞ்சையுடன் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டும் இந்த நூலில் உள்ள இவரது இந்த கட்டுரை குறித்த என்னுடைய கருத்தை முடிக்கின்றேன்.
நூலின் மற்ற கட்டுரைகள் மற்றும் நூல் குறித்த ஒட்டுமொத்தப் பார்வை
ஆடிவெள்ளி பூத்திருக்கு உச்சி பூச காத்திருக்கு
ஏத்துக்குற வெளிய வா வெளிய வா………!
தமிழ் இலக்கிய திறனாய்வுகளில் கவனிக்கப்படாத ஒரு பகுதியாக குற்றப் பரம்பரையினராக அறிவிக்கப்பட்ட மக்களைப் பற்றிய பதிவுகள் ஆய்வுக்குட் படுத்தப்பட வேண்டுமென்பதற்காக மதுரையில் “மீட்சி” என்ற அமைப்பின் சார்பாக 12.07.2014 அன்று நடந்த கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆய்வாளர்களின் சுருக்கமான மற்றும் விரிவுபடுத்தப்பபட்ட உரைகள் இந்த நூலில் தொகுப்பட்டு மேலதிக விவரங்கள் சேர்த்து, பதினைந்து கட்டுரைகளாக பதிவு செய்யப்பட்டு “தமிழிலக்கியத்தில் குற்றப்பரம்பரையினர்” என்ற பெயரில் நூலாக மதுரையில் இருக்கின்ற “பாலை” பதிப்பகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூலின் தொகுப்பாசிரியர், நூலில் இடம் பெற்றிருக்கின்ற “குற்ற அடையாள உருவாக்கமும், பிரமலை சீர்திருத்தன் இதழ்களும்” என்ற கட்டுரையை எழுதியிருக்கின்ற “முகில் நிலவன்”.
நூலின் முதல் கட்டுரையில் அ.கா.அழகர்சாமி அவர்கள் பி.ஆர்.ராஜமய்யர், சி.சு.செல்லப்பா, பெருமாள் முருகன் போன்றவர்களின் படைப்புகளில் குற்றப்பபரம்பரையினரின் பாத்திரச் சேர்க்கை குறித்த விவரங்களைக் கையாள்கின்றார். குறிப்பாக 1896ல் “விவேக சிந்தாமணி” யில் வெளிவந்த “கமலாம்பாள் சரித்திரம்” என்ற தமிழின் இரண்டாவது நாவலில் இடம்பெறும் கதை மாந்தரான “பேயாண்டித் தேவரைப்” பற்றி சிலாகிக்கின்றார். இரண்டாம் கட்டுரையான “தமிழ்ப் புனை கதைகளில் குற்றப்பரம்பரையினர்” ல், ஜ.சிவக்குமார், எஸ்.ராமகிருஸ்ணன் எழுதிய “நெடுங்குருதி”, வேல.ராமமூர்த்தி எழுதிய “குற்றப்பரம்பரை”, சு.வெங்கடேசன் எழுதிய “காவல் கோட்டம்” ஆகிய படைப்புகளை முன்வைத்து, “தங்கள் வலிகளிலிருந்தும், இழப்புகளிலிருந்தும் இவர்கள் களவின் நுட்பங்களை வளர்த்தெடுக்கின்றனர்” என்ற கருத்தைச் பல தகவல்களுக்கூடாக சொல்லிச் செல்கின்றார். மொத்தமுள்ள பதினைந்து கட்டுரைகளில் மணிக்கோ பன்னீர்செல்வம் எழுதிய “குற்றப்பரம்பரையினுள்ளும் விளிம்பில் நிறுத்தப்பட்ட குறவர், இருளர், ஒட்டர்” என்னும் கட்டுரை மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. ஏனெனில், இந்நூலைப் பொருத்த வரையில் இக் கட்டுரை மட்டுமே பிரமலைக் கள்ளருடன், அக்குழு அல்லாத மற்ற இனக்குழுக்களின், அதாவது குறவர், இருளர், ஒட்டர் உள்ளிட்ட சாதியின் செய்திகளை அதிகம் பகர்கின்றது. அந்த வகையில் ஒரு ஆய்வு நூலில் கூட “விளிம்பு நிலை” என்பது காணக்கிடைக்கும் என்பதற்கு சாட்சியாக இந்தக் கட்டுரை தனிச் சிறப்பு பெறுகின்றது. “இயற்கை வளத்தின் மீது உரிமை கொண்ட மரபான சமூகத்தவர்களை குற்றவாளியாக அடையாளப்படுத்தியதன் அரசியல் இன்றும் தொடர்கின்றது” என்ற வலி மிக்க உண்மையை போட்டு உடைத்திருக்கின்றார் மணிக்கோ பன்னீர் செல்வம்.
நான்காவது கட்டுரையில் “காவல் கோட்டம்” குறித்த முனைவர் வி.சாலமன் செல்வம் அவர்களின் மார்க்சியப் பார்வையில் தெரிவித்த கருத்துகளை ஏற்றுக்கொண்டாலும் “மன்னராட்சியில்” ஆண்ட வம்சம், “மக்களாட்சியில்” ஆட்சிக்கு வரமுடியாத அரசியல் விரக்தியின் வெளிப்பாடாகவும், பழைய பெருமைகளைக் காட்டித் திருப்தி அடையவே கள்ளர்களின் காவல் கோட்டம் மூலம் சு.வெ முயன்றிருக்கின்றார்” என்ற அவரின் வாதத்தில் முழுமையான உடன்பாடு எனக்குக் கிடையாது. ஏனெனில் அந்த அளவிற்கான ஆராய்ச்சிபூர்வமாக அவர் செயல்படுவார் என்பதை நான் அறியவில்லை. ஐந்தாவது கட்டுரை சு.வெக்கு பாராட்டுப் பத்திரம். ஆறாவது கட்டுரை வைரமுத்துவை முன்வைத்து. வைரமுத்துவின் படைப்புகளில் தோன்றும் அரசியல் துண்டிப்பு, வெகுசனத்திற்கான தேர்ந்தெடுப்பு என்ற ந.இரத்தினக்குமார் அவர்களின் கருத்துக்கு குதூகல ஆமோதிப்பைத் தெரிவிக்கின்றேன். வைரமுத்து படைப்புகள், அவருடைய படைப்புலக மூளை நரம்புகளுக்கு பெருமையாக இருக்கலாம், பொதுவெளி, வெகுசனம் என்று பார்த்தால் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
எட்டாவது ஒன்பதாவது கட்டுரைகள் “பிரமலை சீர்திருத்தன்” இதழ் குறித்த உண்மைகளை கட்டுடைக்க முயல்கின்றன. “விதைக்கப்பட்ட தவறான கருத்தின் ஆவணமாக பிரமலை சீர்திருத்தன்” இதழ் உள்ளது என்பதற்கு “காருண்யமிக்க கவர்மெண்டார்” காரணமாக இருக்கலாம். “மேற்குலகில் குற்றத்தன்மை என்பது தனிநபர் சம்மந்தப்பட்டது என்ற புரிதல் கொண்டவர்களே, இந்தியாவில் மட்டும் அது குழுத்தன்மை உடையது என்ற கண்ணோட்டத்தை வெளிப்படுத்தினர்” என்ற மிக முக்கியமான, இந்த நூலின் மைய நீரோட்டத்திற்கு முதுகெலும்பான கருத்தை பத்தாவது கட்டுரையான “குற்றப்பரப்பரைச் சமூகங்களும் தொடக் கால மானிடவியலில்” முனைவர் ஆ.செல்லபெருமாள் அவர்கள் சொன்னதோடு, பிரமலைக் கள்ளர்களின் எதிர்பானது பிரிட்டிசார் மீதோ அல்லது அரசின் மீதோ அல்ல, மாறாக அது “சுயமரியாதைக் கலகம்” என்று அறிவிக்கின்றார்.
பதினோறாவது கட்டுரையானது, ஸ்டூவர்ட் எச்.பிளாக்பர்ன் எழுதிய ஆங்கிலப் பதிவை “கள்ளர்கள்: தமிழ்க் “குற்றப்பரம்பரையினர்” மறுபரிசீலனை செய்யப்படுதல்” என்ற பெயரில் சா.தேவதாஸ் தமிழாக்கம் செய்ததாகும். சோக வரலாற்றை “நூற்றாண்டு விழாவாக” கொண்டாடிய அஜீஸ் நகர் குறித்த விவரணைகளை பன்னிரெண்டாவது கட்டுரையான “யார் குற்றப்பரம்பரை” யில் மு.ராஜேந்திரன் விவரித்துள்ளார். “சாதி அடையாளத்தை நான் மறுப்பது ஒரு நிலையில் உச்சபட்சமான போலித்தனம்” என்ற ஒப்புதல் வாக்குமூலத்தை தனது “சாதிய அடையாள உருவாக்கமும் அதன் மறுவாசிப்பும்” என்ற நூலின் பதிமூன்றாவது கட்டுரையில் பதிவு செய்கின்றார் வீ.எம்.எஸ்.சுபகுணராஜன். “1947ம் ஆண்டு குற்றப் பழங்குடியினர், நீக்குதல் சட்டமுன் வரைவு” என்பதன் பெயரில் சட்டமன்றத்தில் நடந்த விவாதத்தை பதினான்காவது கட்டுரையாக தமிழில் தந்திருக்கின்றார் பொன். சின்னத்தம்பி முருகேசன். பதினைந்தாவது மற்றும் கடைசி கட்டுரையானது, குற்றப்பழங்குடிகள் சட்டம் குறித்து விளக்குகின்ற வகையில் வழக்கறிஞர் ப.பாலதண்டாயுதம் எழுதியிருக்கின்றார். இச்சட்ட விளக்கக் கட்டுரையின் முழுமையான புரிதலின் அடிப்படையே நூற்றாண்டுக்கு முன்பாக நடத்தி முடிக்கப்பட்ட அநீதியின் உச்சமும், உள்நோக்கமும் விளங்கிக் கொள்ள உதவும்.
ஆக ஒட்டுமொத்தத்தில், குற்றப் பழங்குடிகள் சட்டம் என்ற மாயப் போர்வையில் பாதிக்கப்பட்ட இனக் குழுக்கள், குறிப்பாக பிரமலைக் கள்ளர்கள் ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியால் அன்றைய காலக்கட்டங்களில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டதையும், அழித்தொழிக்கப் பட்டதையும், மாவட்டம் விட்டு மாவட்டம் கடத்தப்பட்டு சொந்த இடங்களிலேயே அகதிகளாக்கப் பட்டதையும், கொடுஞ் சட்டங்களின் வாயிலாக ஆண் பெண் பாராமல் கொடுமைக்காளான கதையையும், வரலாற்று ஆய்வின் மூலமாக அவர்களின் பிரதிநிகளாக இருந்து இக்கட்டுரைகளை உரிமையுடனும், ஆதங்கத்துடனும் செழுமைப்படுத்தியுள்ளதன் பின்னணியில், நடந்து முடிந்துவிட்ட நாச வேலைகளுக்கு நியாயம் கேட்கிறார்கள். இக்கட்டுரைகள் “எழுத்தின் அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்துகிறது, வல்லாதிக்கத்தின் லாப வெறியின் சதியில் குற்ற இனங்கள் உருவாக்கப்படுவதை சட்டரீதியாக ஆவணப்பூர்வமாக வெளிப்படுத்துகிறது” என்ற பதிப்பாசிரியரின் கூற்று ஏற்றமடைகின்றது. இத்தகைய ஆய்வின் பயணம் இந்திரா காந்தி காலத்தில் நடந்த பொற்கோவில் அத்துமீறலுக்கு தற்போது சோனியா காந்தி மன்னிப்பு கோரியது போல, குற்றப் பழங்குடிகள் சட்டத்தைக் கொண்டு வந்த, பிரிட்டிசார் சார்பாக அந்நாட்டுப் பிரதமர் தமிழகம் வந்து மன்னிப்புக் கோரும் நிர்பந்தத்தை ஏற்படுத்துகின்ற முழு ஆய்வு ஆவணம் வெளிவரும் வரையில் தேடலுடன் தொடர வேண்டும்.
நிறைவாக,
கட்டற்ற சுதந்திரப் போக்காக வாழ்ந்த இனம், ஆங்கிலேயர்களால் அடிமைப்படுத்தப்பட்ட சோக வரலாற்றை இந்நூல் வாயிலாக நிரூபிக்க முயலும் படைப்பாளர்கள், ஆய்வாளர்கள், சுதந்திரத்திற்குப் பின், குறிப்பாக 1967க்குப் பின் அதே இனம், இன்னும் நீட்சியாக ஒட்டிக்கொண்டிருக்கின்ற பழைய பட்டத்தோடே, திராவிட இனவெறிக்குள் சிக்கிச் சிதையுண்டு நவீன வகை அடிமைப்பட்டுக் கொண்டிருக்கின்ற விந்தையான வரலாறு இன்னும் தொடர்வது முரண் நகை. ஆக, சங்க இலக்கியத்தை மீள வாசிக்கக் கோருகின்ற இவர்கள், தற்போதைய பிரமலைக்கள்ளர் உள்ளிட்ட முக்குலத்தோரின் நிலைக்கான தவறு எங்கே நடந்தது என்பதையும் ஆராய முற்பட வேண்டும்.
ஒடுக்கப்பட்ட இனத்திற்கான மேம்பாட்டினை முன்னெடுத்துச் செல்ல இந்த நூல் முக்கிய ஆவணமாகப் பயன்படும் என்பதில் ஐயமில்லை. இதனூடாக, அடிமைப்பட்டுக்கிடக்கின்ற சமகால நிலையிலிருந்து இந்த இனம் மீண்டெழ, புரட்சிகர எழுத்தாக்கத்தை அதற்கான அரசியல் தெளிவுடன் படைக்க இவர்கள் முன்வர வேண்டும். அப்போதுதான், நூற்றாண்டாய் காலமும், சமூகமும் சுமந்து கிடக்கின்ற ரணம் ஆறவும், மணம் சேரவும் வாய்ப்பு ஏற்படும். அப்போது “போற்றிப் பாடடி பொண்ணே….” என்ற பாடல் இசையாய், இன்பமாய் எட்டுத்திக்கும் எதிரொலிக்கும்.