ஐயா ச.சீ.இராசகோபாலன் தமிழகத்தின் மிக மூத்த கல்வியாளர். தொடர்ச்சியான செயல்பாடுகளாலும், பத்திரிகை போன்ற ஊடகத்தில் தமது கருத்துக்களை தொடர்ச்சியாக பதிவதின் மூலமும் தமிழக மக்களால் நன்கு அறியப்படுபவர். ஏறத்தாழ கடந்த ஒரு நூற்றாண்டு கால இந்திய, தமிழக கல்வி வரலாற்றின் சாட்சியமாக இருக்கிறார்.
1990 களில் தமிழக அரசு ஐநாவின் யுனிசெப் அமைப்பின் உதவியுடன் கி.பி 2000 ஆண்டுக்குள் அனைவருக்கும் தொடக்கக் கல்வி கிடைத்திட வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஒரு செயல் திட்டம் வகுக்கிறது. இதில் ஐயா.ச.சீ.ரா அவர்களும் உறுப்பினராக செயல்படுகிறார். மிகச் சீரியமுறையில் தயாரிக்கப்பட்ட அந்த செயல்திட்டமானது அரசாலும், கல்வித்துறையாலும் செயல் படுத்தப்படவில்லை. பின்னர் இந்த அனைவருக்கும் கல்வி என்ற இலக்கும் எட்டப்படவில்லை. அரசியலுறுதியும், மக்கள் கிளர்ச்சியும் இல்லையென்றால் அனைவருக்கும் கல்வி சாத்தியமில்லை என்று கருதிய பொழுதுகளில் தனது எண்ணங்களை கட்டுரைகளாக எழுத ஆரம்பிக்கிறார். பின் குழந்தைகள் தொடர்புடைய பல்வேறு தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளில் கலந்து கொண்டு பெற்ற அனுபவங்களும், கும்பகோணம் பள்ளி தீவிபத்திற்கு அரசு பொறுப்பேற்காதது கண்டு வெகுண்டெழுகிறார். கல்வி மற்றும் பள்ளிய முறைகளில் மனித நேயத்தன்மை இல்லாது ஒரு இயந்திரத்தனமான செயல்பாடு இருப்பதும் கண்டு அவற்றை மக்களிடம் தெரிவிக்கும் முறையில் கல்வி பற்றிய நூலாசிரியரது எண்ணங்கள் கட்டுரைகளாக விரிகின்றன. இக்கட்டுரைகள் தினமணி, ஜனசக்தி, தமிழ் ஓசை போன்ற இதழ்களில் வெளிவந்தன. அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பதினைந்து கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் இருக்கிறது.
ஐயா ச.சீ.ரா தமிழ்நாட்டின் கல்வி பற்றிய மிகக் கூரிய பார்வையினைக் கொண்டவர். தமிழ்நாட்டின் கல்வி வரலாற்றைப் பற்றிய மிக முக்கியமான புத்தகம் ஒன்றை எழுத வேண்டுமென்றால் அதை எழுதுபவர்களில் மிக முக்கியமானவராக ஐயா ச.சீ.ரா வும் இருக்க முடியும். ஆனால் இவரது கல்வி பற்றிய கட்டுரைகள் சிதறலாகக் கிடக்கின்றன. இதில் ஏற்கனவே இந்த கல்வி நூல் வரிசையில் பார்த்த ஒரு புத்தகமான “வாழ்க்கையை புரியவைப்பதுதான் கல்வி” என்பது ஐந்து முக்கியமான கட்டுரைகளைக் கொண்டது. அந்த நூலுக்கு முன்பாகவே எழுதப்பட்டதுதான் இந்த பதினைந்து கட்டுரைகளடங்கிய “ தமிழகத்தில் பள்ளிக் கல்வி” என்னும் இந்த நூல். இந்த கட்டுரைகள் அனைவருக்கும் கல்வி அளிப்பதன் அவசியம், குழந்தைகளுக்கு கல்வி அளித்தலில் பெற்றோரின் பங்கு, காசாகும் கல்வி, சமச்சீர் கல்வி, பள்ளி வளர்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களின் செயல்பாடு என பல தளங்களில் விரிகின்றன. இந்த ஒவ்வொரு தலைப்பிலும் விவாதிக்கப்பட்டுள்ள சம்பவங்களுக்கு நூலாசிரியரின் நேரடி வரலாற்று அனுபவங்கள் பலம் சேர்க்கின்றன.
முதலாவது கட்டுரை “கல்வி ஒரு அடிப்படை உரிமை” என்பதாகும். இக்கட்டுரை கட்டாய கல்வி உரிமைச்சட்டம்- 2009 இயற்றப்படுவதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னரான சுதந்திர போராட்ட வீரர் கோகலேவின் முன்னெடுப்புகளிலிருந்து தொடங்கி, சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் 45 வது சரத்தாக அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த பத்தாண்டுக்குள் “14 வயதுக்குட்பட்டோர் அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி அளிக்க வேண்டும்” என்ற பிரகடனத்தை நினைவுபடுத்துகிறது. பின் 1992 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் மோகினி ஜெயின் Vs கர்நாடக அரசுக்குமான வழக்கில் , “கல்வி பெறுவது ஒரு அடிப்படை உரிமை; அதனைத் தடுக்க யார்க்கும் உரிமை கிடையாது” என்ற தீர்ப்பு வழங்கப்படுவதையும், பின் இதே தீர்ப்பானது 1997 ஆம் ஆண்டு உன்னிகிருஷ்ணன் Vs ஆந்திர மாநில வழக்கில் “14 வயதுக்குட்பட்டோர்க்கு கட்டாய இலவசக் கல்வி அடிப்படை உரிமை; அதற்கு மேற்பட்ட படிப்பு அரசின் சக்திக்குட்பட்டது” என மாற்றப்படுகிறது. பின் 2002ல் நாடாளுமன்றத்தில் 86 வது சட்டத்திருத்தம் நிறைவேற்றப்படுகிறது. இது 6 வயது முதல் 14 வயதுவரை இலவச, கட்டாயக்கல்வியை அடிப்படை உரிமையாகவும், 6க்கு முன் மழலையர் கல்வி அளிப்பது அரசின் விருப்பச் செயலாகவும், கல்வி அளிப்பதைத் தொடர்ந்து பெற்றோர்களின் கடமையாகவும் கூறி புதியசரத்து 21A உருவாக்கப்பட்டுள்ளதைக் கூறி இக்கட்டுரை நிறைவடைகிறது. பிறகு நமது இந்திய அரசால் 2009 ல் நிறைவேற்றப்பட்ட கட்டாய இலவச கல்வி உரிமைச்சட்டமானது ஏப்ரல் 2010 முதல் நடைமுறைக்கு வந்துள்ளதை நாம் அறிவோம்.
பெற்றோர்கள் குழந்தைகளை ஒழுங்காக பள்ளிக்கு அனுப்புவதில்லை என குறையை பெற்றோர் மீது திருப்பாமல், அதன் அடிப்படைக் காரணமாக இருக்கும் பெற்றோர்களின் வறுமையை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார் நூலாசிரியர். இதற்கு ஆதாரமாக பெரும்பாலும் அரசு அதிகாரிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட தபஸ் மஜூம்தார் குழு நாட்டின் மொத்த செல்வத்தில்(GDP) 0.78% அதிகம் செலவழித்தாலே எல்லாக் குழந்தைகளுக்கும் தரமான கல்வியை இலவசமாக வழங்கலாம் என்று கூறியுள்ளதை “ பெற்றோர் பொறுப்பு” என்னும் கட்டுரையில் கூறுகிறார்.
“கல்வி தனிமனித வளர்ச்சிக்கு மட்டுமின்றி நாட்டின் வளர்ச்சிக்கும் உதவும் ஓர் அரிய சாதனமாகவே வளர்ச்சி குன்றிய மற்றும் வளரும் நாடுகள் கருதுகின்றன. அதற்குத் தேவையான அறிவு, திறன்கள், மனப்பான்மைகளை உருவாக்கிடவே கல்வி அமைப்பு இயங்குகின்றது. நாட்டின் அரசியலமைப்புக்கேற்ற வகையில் கல்வி அமையும். கல்வி என்பது ஒரு வாணிபப் பொருளென்று கருதாது, ஒரு பண்பாட்டுச் சக்தியாகவே விளங்கும் வகையில் கல்விச் செயல்பாடுகள் நடைபெறும். இந்நோக்கங்கள் நடைபெற கல்வித்திட்டம் அந்நாட்டு மக்களாலேயே உருவாக்கப் பெற்று அந்நாட்டு மக்களாலேயே வழங்கப் பெற வேண்டும். நமது நாட்டின் கலாசாரத்திற்கும் லட்சியங்களுக்கும் புறம்பான சக்திகள் கல்விக் கூடங்களை நடத்திட அனுமதித்தால், நமது பண்பாடு, மொழிகள், வாழ்க்கை முறைகள் போன்ற அனைத்தும் நசித்துப் போகும்” என கல்வியை உலகலாவிய வியாபாரமாக்கும் காட்ஸ்(GATS) ஒப்பந்தத்துக்கு எதிரான தனது “காசாக்கும் கேட்ஸ்” என்னும் கட்டுரையில் குறிப்பிடுகிறார். மேலும் சுயநிதிக் கல்விக் கூடங்கள் வந்த பின்னர் பொதுக்கல்வி முறை பாழடைந்து வருவதையே பார்க்கின்றோம். அன்னியர் புகுந்தால், கல்வி என்பது ஓர் எட்டாக்கனியாகவே இருக்கும் என எச்சரிக்கிறார்.
சமச்சீர் கல்வி வருவதற்கு முன்னர் எழுதப்பட்ட கட்டுரையான, “சமச்சீர் கல்வியை செயல்படுத்தல்” என்பது சமச்சீர் கல்விமுறையை எல்லோருக்கும் ஏற்ற முறையில் எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதற்கான வழிமுறைகளைக் கூறுகிறது.
அடுத்து “கல்வித்துறையில் நிலவும் முரண்பாடுகள்” என்னும் கட்டுரை. இது அதிகாரிகள், இயக்குநர்கள் போன்றவர்களின் பணியில் இருக்கும் முரண்களைப் பேசுகிறது. ஏறக்குறைய 150 ஆண்டுகளுக்கு முன் ஒன்றுபட்ட சென்னை மாகாணத்தில் இருந்த ஒரே ஒரு பொதுக்கல்வி இயக்குநர்(DPI) பணியிடத்தில் இன்று 12க்கும் மேற்பட்ட இயக்குநர்கள் பணியாற்றுவதையும் ஆனால் பணிப்பளு ஒரே சீராக அனைத்து இயக்குநர்களுக்கும் அமையவில்லை என்கிறார். ரூ.2500/- கோடி கையாளுபவர் ஒரு இயக்குநராகவும் வெறும் 10 கோடிக்கு மட்டுமே பொறுப்புள்ளவர் ஒரு இயக்குநராகவும் பணிச்சுமையில் அதிகம், குறைவு என வேறுபாடு மிகுந்த காணப்படுவதையும் இன்னும் பல அதிகார மட்டத்திலான முரண்களையும் இக்கட்டுரையில் விவரிக்கிறார்.
“பல்கலைக்கழகமும் பதின்நிலைப் பள்ளிகளும்” என்னும் கட்டுரை அடுத்ததாகும். பல்கலைக்கழகப் படிப்பிற்கு நுழைவு உரிமை என்னும் பொருள்படும் மெட்ரிகுலேசன் பள்ளிகள் 1976 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்ட மேல்நிலைப் பள்ளி திட்டங்களால் பல்கலைக்கழகத்திலிருந்து விலக்கப்படுகிறது. இந்த பள்ளிகளே இப்போது வளர்ந்து நிற்கும் சுயநிதி ஆங்கில மெட்ரிகுலேசன் என்றும் இப்பள்ளிகள் எவ்வாறு தனி வாரிய பள்ளிகளாக தங்களை வளர்த்துக் கொண்டார்கள் என்பது பற்றி இக்கட்டுரை பேசுகிறது. விளையாட்டு, பொழுதுபோக்கு போன்றவை சிறிதும் இல்லாத உடலாலும் மனதாலும் களைத்துப் போகும் மாணவர்களைப் பற்றிக்கூறும் மக்கள் எதிர்பார்ப்பு என்ற கட்டுரை முக்கியமானதாகும்.இதில் இப்போது கல்வித் துறையிலும், மாணவரும், ஆசிரியரும்,பெற்றோரும் தம் அனுபவங்களை உள்ளபடி எடுத்துக்கூற வாய்ப்பு அளிக்கும் ஒரு அமைப்பு தேவை என்பதையே உணர்ந்ததாக இக்கட்டுரையில் நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
தேர்வு என்ற ஒற்றை இலக்கின் செயல்பாடுகளால் கல்வியின் அடிப்படை உன்னத நோக்கங்கள் துறக்கப்பட்டுள்ளன என்றும் உலகைப் பற்றிய அறிவும், வாழும் திறன்களும், சமூகத்தில் ஒரு நல்ல உறுப்பினராக வாழும் திறன்கள், சிந்திக்கும் திறன், வினா எழுப்பும் ஆற்றல், விசாரித்தறிதல் போன்ற பண்புகளை வகுப்பறைகள் வளர்த்திட முனைவதில்லை என்றும் “பள்ளிகள் கல்விக்கூடங்களாக மாறிட…” என்னும் கட்டுரை குறிப்பிடுகிறது. பத்து வருடம் முன் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கான பதில்கள் மற்றும் தீர்வுகளும் தற்போதுதான் நீட் தேர்வு பிரச்சினைகளுக்குப் பிறகு வகுப்பறைக்குள் சிறிதளவாவது எட்டிப்பார்த்திருக்கிறது.
பெற்றோர் ஒரு சங்கமாகவும், ஆசிரியர்கள் ஒரு சங்கமாகவும் தனித்திருக்காமல் பெற்றோரும் ஆசிரியரும் சேர்ந்து பணியாற்றுவதன் மூலம் மாணவர்களின் வளர்ச்சிக்கு உதவ முடியும் என்று பேராசிரியர் டி.சி.சர்மா அவர்களின் முயற்சியால் தோற்றுவிக்கப்பட்ட பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் தற்போது பள்ளிகளில் நன்கொடை வசூலிக்கும் மையங்களாக மாறியுள்ளதை வருத்தத்துடன் பதிவு செய்கிறார். நிதி திரட்டுகின்ற பணியிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு தவறு செய்யும் மாணவரைத் திருத்தும் வழிகள், மன அழுத்தத்தில் தற்கொலை வரை செல்லும் நிகழ்ச்சிகள் நடைபெறா வண்ணம் மாணவர்களுக்கு அறிவுறுத்தல், பயிற்சி அளித்தல் ஆகியவற்றில் பெற்றோர் ஆசிரியர் அமைப்புகள் அதிகக் கவனம் செலுத்த ஆலோசனை கூறுகிறார். இந்த ஆலோசனையை வேலூர் பனப்பாக்கம் மாணவிகள் நான்கு பேர் தற்கொலையில் பொருத்திப் பார்க்கலாம்.
தற்போது பாடத்திட்ட வடிவமைப்பு செயல்பாடுகள் நடந்து வரும் நிலையில் முந்தைய ஆண்டுகளில் இது தொடர்பான சம்பவங்களை “கல்வித்துறையின்.முதற்கடன்” என்னும் கட்டுரையில் பகிர்ந்துகொள்கிறார். இதனை அனைவருக்கும் புரியும் வகையில் முதலில் கலைத்திட்டம் உருவாக்கப்படும், பிறகு கலைத்திட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள நோக்கங்கள், செயல்பாடுகளை கருத்தில் கொண்டு பாடத்திட்டங்கள் வகுப்படும், பின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் பாடநூல்கள் உருவாக்கப்பட வேண்டும் என்கிறார். இது பாடநூல் வல்லுநர் குழுவைத் தாண்டி அனைவருக்கும் புரியும் வண்ணம் உள்ளது. மேலும் பாடச்சுமை பற்றிய விவாதங்களின் போது மீண்டும் மீண்டும் விவாதிக்கப்படும் கிராம நகர்ப்புற வேற்றுமைகளை எழுப்பி கிராமப்புற மாணவர்க்குப் புரியாது, அவர்கள் ஏற்புத்திறனிற்கு மிஞ்சியது என்று கூறி கிராமப்புற மாணவர்களை தொடர்ந்து இழிவுபடுத்துவதை கண்டிக்கிறார். மேலும் அறிவாற்றல், கற்றல் திறன்கள் ஆகியவற்றில் இரணடு மாணவர்களுக்கும் வேறுபாடு இல்லாததையும், ஆனால் ஆசிரியரின்மை, அறிவியற்கூடம் தரமின்மை, பிற அடிப்படை வசதிகளின்மை போன்ற குறைகளைச் சரி செய்யும்போது நகர்ப்புற மாணவர்களோடு கிராமப்புற மாணவர்கள் சரிக்குச் சமமாக போட்டியிடுவார்கள் என்று உறுதிபடக் கூறுகிறார்.
அடுத்து “ மொழிப்பாடம்” என்னும் கட்டுரை. இதில் அன்றைய அரசின் மொழி பற்றிய இரண்டு அறிவிப்புகளுக்காக எழுதப்பட்ட கட்டுரை ஆகும். “ தொடக்கப் பள்ளிகளில் மொழி கற்பித்தலைப்பற்றி சமீபத்தில் இரண்டு அரசு அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. ஒன்றாம் வகுப்பில் ஆங்கிலம் கற்பிப்பது, முதல் மொழி தமிழல்லாதவர்களுக்கு’அறிவியல் தமிழ்’ கற்பிப்பது ஆகியவையே அவை”. இதில் முதல் அறிவிப்புக்கு பதிலாக ,”முதல் மொழியில் நல்ல தேர்ச்சி ஏற்பட்ட பின்னரே இரண்டாம் மொழியை அறிமுகப்படுத்த வேண்டும்” என்று ஆய்வு முடிகளை உதாரணம் காட்டி கூறுகிறார். இதேபோல முதல் மொழி தமிழல்லாதவர்களுக்கு அறிவியல் தமிழை ஆறாம் வகுப்பில் அறிமுகப்படுத்துவதே நியாயம் என்கிறார்.
“தேர்வுகள்” என்னும் கட்டுரை, தேர்வு சீர்திருத்தம் பற்றி பேசுகிறது. “ மாணவர் தாம் எந்த அளவு கற்றுக் கொண்டுள்ளோம் என்பதையும் தம் கற்றலில் உள்ள நிறை குறைகளையும் அறிய உதவுவன தேர்வுகள், அது போலவே ஆசிரியர்க்கும் தாம் கற்பித்ததை மாணவன் எந்த அளவு புரிந்து கொண்டுள்ளனர் என்பதை அறியவும் தமது கற்பித்தல் முறைகளில் செய்ய வேண்டிய மாற்றங்களையும் புதிய உத்திகளைப் பற்றியும் சிந்திக்கவும் உதவுகின்றன” என்று தேர்வின் நோக்கத்தை பற்றி சொல்லிவிட்டு, “ பொதுத் தேர்வில் 35% பெற்றால் தேர்ச்சி. பள்ளித்தேர்வுகளில் 25% பெற்றால் தேர்ச்சி. அறிந்தது 25% , அறியாதது 75%. இது எவ்வாறு தேர்ச்சியாகும்” என்று கேட்கிறார்.மேலும் வெளிநாடுகளில் தேர்ச்சிக்குரிய மதிப்பெண்கள் 80 முதல் 85 வரை எனினும் அங்கு தேர்ச்சி பெறாதவர் என்று பொதுவாக யாரும் இலர் அங்கு கற்றல் முழுமையாக நடைபெறுகின்றது என்கிறார். இந்த திசையில் நாம் எடுத்து வைத்துள்ள மிக முக்கியமான அடிதான் CCE எனப்படும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு ஆகும்.
வேலையின்மை அதிகரித்து வரும் இன்றைய சூழலில் மேனிலைக் கல்வியிலுள்ள தொழிற்பிரிவை காலத்திற்கேற்ப பாடத்திட்டங்களை மேம்படுத்தியும், தகுதியான ஆசிரியர்களை நியமித்தும், பயிற்சி பட்டறைகளை நிறுவியும் தரப்படுத்தும்போது ஒவ்வொரு மாணவனும் தன் சொந்தக் காலில் நிற்பதற்கு தன்னம்பிக்கை கிடைக்கும் என்கிறார்.
மாணவர்கள் தங்களுக்குத் தாங்களே நிறுவிக் கொண்ட விதிகளின் அடிப்படையில் ச.சீரா தலைமையிலான பள்ளி செயல்பட்ட விதம் சொல்லும் சுய கட்டுப்பாடு என்னும் கட்டுரை முக்கியமானது. கடைசி கட்டுரையான “ரஷ்யாவில் கல்வி” என்பதில் தான் ரஷ்ய நாட்டுக்குச் சென்று வந்ததன் அனுபவங்களைப் பதிவு செய்துள்ளார். அங்கு அரைகுறை படிப்பு இல்லை. தாய்மொழி வழிக் கல்வியே அளிக்கப்படுகிறது. தொடக்கநிலை வகுப்புகளில் மொழிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, எந்த நூலையும் படித்துப் புரிந்து கொள்ளும் திறன் வளர்க்கப்படுவதால், மேல் வகுப்புகளில் மொழிப்பாடத்திற்கான பிரிவு வேளைகள் குறைக்கப்பட்டு கணிதம், அறிவியல் பாடங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. அங்கு மொழித்திறன் தாமே அறிவைத் தேடுகிற சக்தியாக வளர்க்கப்படுகிறது என்கிறார் ஐயா.ச.சீ.ரா.
இவ்வாறு 15 கட்டுரைகளின் வாயிலாக தமிழக பள்ளிக்கல்வி பற்றிய ஒரு கழுகுப் பார்வையின் மூலம் பல அரிய தகவல்களை இந்நூலில் தந்துள்ளார் ச.சீ.ரா. இதில் சில கட்டுரைகள் அந்தந்த காலச்சூழலுக்கு ஏற்ப நாளிதழ்களில் எழுதப்பட்டவை, எனவே பழைய தகவல்கள் போல தோன்றலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது பல கூர்மையான, வேறு யாரிடமும் பெற முடியாத தகவல்களை, வரலாற்றுச் சம்பவங்களை தனது நீண்ட நெடிய அனுபவத்திலிருந்து இந்நூலில் பதிந்துள்ளார். வாசியுங்களேன்!