காந்தியும் காங்கிரசும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் செய்தது என்ன என்ற அம்பேத்கரின் புத்தகம் அது எழுதப்பட்டு வெளிவந்த காலத்தைவிட இன்று மிகப் பிரபலம். அம்பேத்கர் காந்தியைவிட இன்றைய இந்தியாவில் அதிக முக்கியத்துவம் பெறுவதை இது குறிக்கலாம். அந்த நூலுக்கு காந்தி எதிர்வினை ஆற்றவில்லை. க. சந்தானமும் ராஜாஜியும் எதிர்வினை ஆற்றினார்கள். அவர்கள் ஆங்கிலத்தில் இரு சிறு நூல்கள் எழுதி வெளியிட்டார்கள். அவை இப்போது தமிழில் வெளிவந்திருக்கின்றன.
ஆனால், அம்பேத்கருக்கு நேரடியான எதிர்வினை என்றில்லாமல் காந்தியின் அரிஜனத் தொண்டு குறித்து 1944ல் தமிழில் ஒரு நூல் வெளிவந்தது. அது தி. சே. சௌ. ராஜன் அவர்கள் எழுதிய “தமிழ்நாட்டில் காந்தி“. புகழ்பெற்ற புனே ஒப்பந்தத்துக்குப் பின் காந்தி தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரத்தையே முக்கியமான இலக்காகக் கொண்டு இந்தியா முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவருடைய பயணத்திட்டத்தில் தொடக்கத்திலேயே இடம்பெற்ற இடம் தமிழ்நாடு. 23.02.1934 முதல் 22.03.1934 வரை தமிழ்நாட்டில், மாட்டு வண்டி, கார், ரயில், என்று பலவிதங்களில் பயணம் செயது 112 ஊர்களில் பொதுமக்களைச் சந்திக்கிறார். ஏறத்தாழ இரண்டு கோடி மக்கள் அவரை நேரில் பார்க்கவும், அவருடைய உரைகளைக் கேட்கவும் செய்திருக்கிறார்கள். சென்ற இடங்களிலெல்லாம் தீண்டாமை ஒழிய பாடுபடுமாறு மக்களிடம் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறார் காந்தி. அப்போது திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த கன்னியாகுமரியில் காந்தியோடு இந்த பயணத்தில் இணைந்து கொள்கிறார் ராஜன். அங்கு தொடங்கி, காந்தியுடனேயே பயணம் செய்து, அவரது உரைகளை தமிழில் மொழிபெயர்க்கவும் செய்கிறார். காந்தியின் நிழல் போல அவரைத் தொடர்ந்து சென்ற அந்தப் பயணத்தின் கதையை மிக சுவாரசியமாய் பதிவு செய்திருக்கிறார் ராஜன்.
1931 டிசம்பரில், இரண்டாவது வட்டமேஜை மாநாடு முடிந்தவுடன் அம்பேத்கர் அவர்களின் கோரிக்கையை ஏற்ற ஆங்கிலேய அரசு, (அதிகாரபூர்வமாக Depressed Classes என்றும், காந்தியால் அரிஜனங்கள் என்றும் அழைக்கப்பட்ட) தாழ்த்தப்பட்ட மக்களுக்காக இந்தியாவெங்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை அறிமுகப்படுத்தியது. இது இந்துக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் என்று அஞ்சிய காந்தி, அதனை எதிர்த்து எர்ரவாடா சிறையில் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். அம்பேத்கருடனான பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பின் 24 செப்டெம்பரில் புனே ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. காந்தி தன் உண்ணாநோன்பை முடிக்கிறார். அதன் பின்னர் உடனடியாக செப்டம்பர் 30ம் தேதியே அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு அணியை உருவாக்கிய காந்தி, அதன் பெயரை பின்னர் ‘அரிஜன சேவா சங்கம்,’ என்று மாற்றி, தீண்டாமை ஒழிப்பையும் அரிஜன முன்னேற்றத்தையும் தனது முதல் இலக்காகக் கொண்டு இந்தியாவெங்கும் பயணம் செய்து அரிஜன சேவா சங்கத்தின் நோக்கத்தை பரப்புரை செயகிறார். அதன் பகுதியாக அமைந்ததே இந்த நூலில் நாம் காணும் தமிழ்நாட்டுப் பயணம்.
இந்த முழு பயணத் திட்டத்தையும் காந்திக்கு வகுத்துக் கொடுத்தவர், அப்போது கோவை சிறையிலே இருந்த சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார். தீண்டாமை ஒழிப்பு எனும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த அகில இந்திய சுற்றுப்பயணத்தின் துவக்கத்திலேயே தமிழகம் இடம்பெற்றுவிட வேண்டும் என்பது அவரது நோக்கம்.
“தீண்டாமைப் பேய் தலைவிரித்தாடியது தென்னாட்டிலேதான், ஆதலின் அடிகளின் தீண்டாமை ஒழிப்புப் பயணம், தமிழ்நாட்டிலே ஆரம்பமாவதே பொருத்தம், தமிழ்நாட்டில் தீண்டாமை ஒழிந்ததென்றால், அகில இந்தியாவிலும் அது ஒழிக்கப்பட்டுவிடும் என்பதில் சந்தேகமில்லை. சுற்றுப்பயணத்தின் இறுதியில் தமிழ்நாடு இடம் பெற்றிருக்கும் என்றால், அது கடைசியில், பஞ்சாப், வங்காளம் போன்ற மாநிலங்களில் நடந்ததைப் போல சுருக்கப்பட்டிருக்கும், அதனாலேயே தமிழ்நாடு, துவக்கத்திலேயே இடம்பெற வேண்டும்,”என்று கருதிய ராஜாஜி, சிறையிலிருந்தபடியே தந்திகளின் மூலம் தொடர்ந்து போராடி, 1934, ஜனவரி மாதத்திலேயே காந்தியடிகளை தமிழ்நாடு வரச் செய்வதில் வெற்றி பெற்றார் என்கிறார் ராஜன்.
இந்த நூல் முக்கியமாக காந்தியின் பயண அனுபவங்களை பேசுகிறது என்றாலும், அந்தக் காலகட்டத்து மனிதர்களை, மக்கள் மனநிலையை வெளிப்படுத்துவதிலேயே முழு வெற்றி பெறுகிறது எனலாம். இந்தப் பயணத்தில்தான் எத்தனை, எத்தனை மனிதர்கள்- ராஜாஜி, ராஜன், காமராஜர், வைத்தியநாத அய்யர், தக்கர் பாபா, குமாரசாமி ராஜா போன்ற வரலாற்றில் நிலைபெற்றவர்கள் ஒரு புறம்; ஆனால், இவர்களுக்கு இணையான ஈடுபாடு கொண்டு தொண்டுகள் செய்திருந்தும்கூட, வரலாற்றிலிருந்து மறைந்து போன பல எளிய மனிதர்கள் பற்றிய குறிப்புகளே இந்த புத்தகத்தை மிக முக்கியமான ஒன்றாகச் செய்கிறது.
தூத்துக்குடிக்கும் ஸ்ரீவைகுண்டத்துக்கும் இடையே ஒரு குக்கிராமத்தில் காந்தியின் தீண்டாமை ஒழிப்பு திட்டத்துக்காக, தன்னால் இயன்றதை, தன்னிடம் அன்று எவ்வளவு இருந்ததோ, அவ்வளவையும் அப்படியே கொடுத்துவிடும் ஒரு மளிகை கடைக்காரர்; சேலத்தில், காந்தி ஐயர் என்று அழைக்கப்பட்டு, காந்தி ஐயர் ஓட்டல் கடை என்ற கடை வைத்து நடத்தி, அரிஜன முன்னேற்றத்துக்காக பல தொண்டுகளை புரிந்த ஒருவர்; சென்னையில், தன்னலமற்ற அரிஜன சேவை புரிந்து வந்த.கோடம்பாக்கம் கணேசன் என்று அழைக்கப்படும் ஒரு தொண்டர் (இவருக்காகவே, அந்தத் திட்டத்தில் முதலில் இடம்பெறாத சென்னைக்கு காந்தி வருகிறார்); காந்தியுடனேயே பயணம் செய்தவர்களில், பூட்டோ (ஆங்கிலத்தில் இவர் பெயரைக் குறிப்பிடவில்லை ராஜன்) எனும் ஜெர்மானியர் முக்கியமானவராக இருக்கிறார். நாஜி இயக்கத்திலும், ஹிட்லரிடத்திலும் பெரும் பற்று கொண்ட இவர், காந்தியின் அஹிம்ஸை வழியை அருகிருந்து பார்க்க ஆர்வம் கொண்டு அவரது குழுவில் இடம் பெற்றிருக்கிறார் என்பதுதான் எவ்வளவு அழகிய முரண். போதாததற்கு ஒரு இடத்தில், கூட்ட நெருக்கடியில் அகப்பட்டு கீழே விழுந்து, கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்புக்கே சென்று மீள்கிறார். தமிழ்நாட்டு வரலாற்றில் மிக முக்கியமான பெயர்களில் ஒன்றாக இருந்திருக்க வேண்டிய சுவாமி சகஜானந்தரையும் காந்தி சந்தித்து அவருடனே தங்கியிருக்கிறார்.
அந்த மளிகைக்கடைக்காரர், சேலம் காந்தி அய்யர், அவரது ஓட்டல், கோடம்பாக்கம் கணேசன், இவர்கள் எல்லாம் பின் என்ன ஆனார்கள், இவர்களின் குடும்பங்கள் இன்று எங்கே, அவர்களது தொண்டுக்காக அவர்கள் எங்காவது யாராலாவது நினைவு கூரப்படுகிறார்களா என்பதெல்லாம் இந்தப் புத்தகத்தைப் படித்தவுடன் நம் மனதில் எழும் கேள்விகள். வரலாறு என்பது முகந்தெரியாத பல லட்சக்கணக்கான மனிதர்கள் சேர்ந்து உருவாக்குவதுதான்.
பல்வேறு சம்பவங்கள் இடம் பெற்றிருக்கும் இந்த நூலினைப் பற்றி எழுதப்போனால், எதை விடுவது எதை எழுதுவது என்ற திகைப்பே ஏற்படும். மிக முக்கியமான சம்பவம் என்றால், காந்தி குற்றாலத்தில் தங்கியது. அருவி கமிட்டியினர் காந்தியை அருவியில் குளிக்க அழைக்கின்றனர். காந்தியின் முதல் கேள்வி, இங்கு அரிஜனங்களுக்கு அனுமதி உண்டா, என்பதுதான். அருவியில் குளிக்க அவர்களுக்குத் தடை இல்லை என்றாலும், அங்கிருக்கும் சிவன் கோவில் முன் மண்டபம் வழியாகவே அருவிக்கு செல்ல வேண்டுமென்பதாலும், அந்த வழி அவர்களுக்கு கோவில் கமிட்டியினரால் மறுக்கப்பட்டிருப்பதாலும் அவர்கள் அங்கு குளிக்க வழியில்லை என்று பதில் சொல்லப்படுகிறது. காந்தி அந்தக் கமிட்டியாருடன் வாதம் புரிகிறார். சின்னத் தம்பி என்ற ஒரு அரிஜன், மதம் மாறி ஜான் என்று ஆகிவிட்டாலோ, ராவுத்தர் என்று பெயர் சூட்டிக் கொண்டாலோ, அந்த வழியே போகலாம், ஆனால் சின்னத் தம்பி என்ற பெயருடன் போகக் கூடாது என்பது என்ன நியாயம் என்று கேட்கிறார். நீண்ட விவாதத்துக்குப் பின்னும் கோவில் கமிட்டியார் ஒத்து கொள்வதில்லை. அதனால், தானும் அங்கு குளிக்கப் போவதில்லை என்று புறக்கணித்து திரும்புகிறார் காந்தி.
அதே போல கோவை போத்தனுர் அருகே திரு. அவினாசிலிங்கம் செட்டியாரின் ராமகிருஷ்ண கல்வி நிறுவனத்தைப் பார்வையிடப் போகிறார் காந்தி. அப்போது அங்கிருந்த ரயில்வே கேட் அவர் சென்ற காரின் மீது விழ மயிரிழையில் தப்பி உயிர் பிழைக்கிறார் (இதில் ஒரு சந்தேகம். இப்போது ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் கோவை மேட்டுப்பாளையம் சாலையில், பெரிய நாய்க்கன்பாளையம் தாண்டி அமைந்துள்ளன. போத்தனூர் அதற்கு நேரெதிர் திசையில் உள்ளது. முதலில் அங்கிருந்து பின் இங்கு வந்திருக்குமோ? கோவை வரலாற்று ஆய்வாளர்கள்தான் சொல்ல வேண்டும்).
பல்வேறு இடங்களில் நேரமின்மை காரணமாக காரை நிறுத்தி மக்களுடன் உரையாட முடியாத சூழ்நிலையில் மக்கள் மற்றும் சில வன்தொண்டர்களின் எதிர்ப்பையும் சந்திக்கிறார் காந்தி, அவற்றையும் அவருக்கே உரித்தான புதுமையான பாணியில். ஓரிடத்தில் ஒரு தொண்டர் காருக்கு குறுக்காகப் படுத்துவிடுகிறார். எழுவதாகக் காணோம். நேரம் கடந்து கொண்டே போகிறது. பார்க்கிறார் காந்தி. காரை விட்டு இறங்கி இருளில் விடுவிடென்று நடக்கத் தொடங்கி விடுகிறார். அப்புறம் என்ன செய்ய? வழி விட்டுவிடுகிறார் அந்தத் தொண்டர். பின்னர் அவரையும் சமாதானப்படுத்துகிறார் மகாத்மா. படிக்கும்போதே மெய் சிலிர்க்க வைக்கும் இது போன்ற அனுபவங்கள் மேலும் சிலவும் உண்டு இதில். பெண்களுக்காக தனிக் கூட்டங்களும் போட்டிருக்கிறார் காந்தி. அந்தக் கூட்டங்களிலெல்லாம், போட்டிருந்த அத்தனை நகைகளையும் காந்தியின் ஒரு வார்த்தைக்காக கழட்டிக் கொடுத்த பெண்களை பற்றி படிக்கையில் கண்ணீர் மல்குகிறது..
அவ்வளவு வரவேற்புகளுக்கிடையிலும், சில இடங்களிலிருந்து இரு சாராரரிடமிருந்து எதிர்ப்பையும் சந்திக்கிறார் காந்திஅவர்கள்,- வைதீகர்கள்,மற்றும், சுயமரியாதைக்காரர்கள். இந்த இரண்டு தரப்பினருடனும் காந்தி உரையாடிக் கொண்டே இருக்கிறார். ஆனால் அவர்களைத் திருப்திப்படுத்த முடிவதில்லை. அதனால்தானோ என்னவோ, இது நடந்த 5 ஆண்டுகளுக்குப் பின்னரே, 1939ல்தான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நுழைய சட்டமியற்றப்பட்டு நுழைய முடிகிறது. 1937ல் காங்கிரஸ் அரசு தமிழகத்தில் வந்ததும் இதற்கு ஒரு முக்கிய காரணம் என்பதையும் சொல்ல வேண்டும். ஆனால் காந்தியை எதிர்த்த இந்த இரு தரப்பாருமே, மிகுந்த நாகரிகத்துடனும், குறைவற்ற மரியாதையுடனும் காந்தியுடன் உரையாடினார்கள் என்பதனையும் ராஜன் பதிவு செய்கிறார்.
காந்தி மீது ஆதாரமில்லாத பல வசைகளும் குற்றச்சாட்டுகளும் தினந்தோறும் பெருகி வரும் இந்த காலகட்டத்தில் அவரது நோக்கத்தின் தூய்மையையும், அதில் அவர் கொண்டிருந்த, காட்டிய, தீவிரத்தையும், தமிழ் நாட்டு மக்கள் அவருக்கும் அவரது இயக்கத்துக்கும் அளித்த மாபெரும் வரவேற்பையும் விளக்கும் இது போன்ற நூல்களை படிப்பது மிக மிக அவசியம். அன்று தீண்டாமை ஒழிப்பில் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்த தமிழகத்தின் இன்றைய நிலையை எண்ணிப் பார்த்து வருந்தாமல், இருக்க முடியவில்லை.
இன்னொரு விஷயம், இந்த நூலில் வெளிப்படும், ராஜனின் காந்தி மீதான அப்பழுக்கற்ற பக்தியும் நம்பிக்கையும். இதைச் சொல்லும் அதே நேரத்தில், ராஜன், தன் வாழ்க்கை வரலாற்று நூலான நினைவு அலைகள் நூலில் காந்தியைப் பற்றிக் குறிப்பிடுவதையும் நினைக்காமல் இருக்க முடிவதில்லை. 1937ல் அமைந்த காங்கிரஸ் அமைச்சரவையில் டாகடர் ராஜன் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்கிறார். சென்னை ராஜதானியின் ஒரிஸ்ஸா பகுதிகளில் ஏற்பட்ட காலரா நோய் பாதிப்புகளை நேரில் காண விமானத்தில் பயணிக்கிறார். காங்கிரஸ் அமைச்சர்கள், கார், விமானப் பயணங்கள் மேற்கொள்ளுவதை ஆடம்பரம் என்று கண்டிக்கிறார் காந்தி. அப்போது ராஜன்., காந்தியை ஒரு சின்ன மாகாணத்திலாவது ஆள வைக்க வேண்டும். அப்போதுதான் அவருக்கு ஆட்சியாளர்களின் கஷ்டம் புரியும். இப்படி வெளியிலிருந்துபேசிக்கொண்டேயிருப்பது சுலபம் என்று அங்கலாய்த்துக் கொள்கிறார் ராஜன்.
காந்தி தமிழ்நாட்டில் பயணம் செய்த மாதங்கள் பற்றிய ஒரு சிறு குழப்பமும் ஒன்று உள்ளது. இந்தப் புத்தகத்தின்படி, காந்தி 1934ம் ஆண்டு, பிப்ரவரி 22ம் தேதியிலிருந்து மார்ச்சு 22ம் தேதி வரை தமிழ்நாட்டில் பயணம் மேற்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. .ஆனால் இணையத்தில், Gandhiji’s Harijan Tour of Tamilnadu-என்ற ஒரு வலைப்பக்கத்தில், இதே பயணம் ஜனவரி- பிப்ரவரி மாதங்களில் மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நூலுக்கு பாவண்ணன் எழுதியிருக்கும் சிறிய, அழகான, அதேசமயம் ஆழமான ஒரு முன்னுரையும் ராஜன் அவர்களின் முன்னுரையும் குறிப்பிடத்தக்கது. இந்தப் புத்தகத்தின் தொடர்ச்சியாகவே சின்ன அண்ணாமலையின், சொன்னால் நம்பமாட்டீர்கள் நூலில் வரும், தமிழ்நாடு காங்கிரசின் தீண்டாமை ஒழிப்புப் போரை பற்றிப் படித்தால், காந்தியும் காங்கிரஸும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு செய்தது என்ன என்ற கேள்விக்கு உண்மையான விடையினைக் காணலாம்.
(நன்றி: சொல்வனம்)