தமிழகத்தில் முஸ்லிம்கள் வாழத் தொடங்கிய வரலாறு மிக தொன்மையானது. இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அரேபியாவில் இஸ்லாமிய மார்க்கத்தை பரிபூரணமாக்கிய காலக்கட்டத்திற்கு முன்பே அரபுகள் தமிழகத்திற்கு வர்த்தகம் புரிய வருகைப் புரிந்தார்கள். அந்த தொடர்பு அரபுகள் இஸ்லாத்தைத் தமது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட பிறகும் தொடர்ந்தது, இதன் காரணமாக தமிழர்களில் குறிப்பிடத்தக்க அளவு மக்கள் இஸ்லாத்தைத் தமது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்ளும் நிலையை ஏற்படுத்தினார்கள். தமிழ் மக்களுடன் இணைந்து வாழ்ந்து தமிழ் சமுதாயத்தின் செம்மைக்கும் செழுமைக்கும் பெறும் பங்களிப்பை முஸ்லிம்கள் செலுத்தியுள்ளார்கள்.
தமிழகத்திற்கு இஸ்லாம் வந்த வரலாற்றையும், வளர்ந்த வரலாற்றையும் பண்டையக் கால தமிழக முஸ்லிம்களின் வரலாற்றையும் எடுத்துரைக்கும் வரலாற்று நூல்கள் மிக குறைவாகவே வெளிவந்துள்ளன. இந்த வரிசையில் குறிப்பிடத்தக்கது எஸ்.எம். கமால் எழுதியுள்ள 'தமிழகத்தில் முஸ்லிம்கள்" என்னும் நூல். இராமநாதபுரத்தில் பிறந்த எஸ் எம். கமால் (1928-2007) தமிழக வருவாய்துறையில் 40 ஆண்டுகள் பணியாற்றி இறுதியில் வட்டாட்சியராக ஓய்வு பெற்றவர். தமது அரசு பணிகளுக்கிடையே வரலாற்று ஆய்வுகளுக்காக கனிசமான நேரத்தை ஒதுக்கி சிறப்புமிக்க 18 வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய விடுதலைப் போரில் சேதுபதி மன்னர் என்ற நூல் 1987ம் ஆம் ஆண்டு தமிழக அரசின் பரிசைப் பெற்றது. இதே போல் தமிழக முஸ்லிம்களின் வரலாற்றை தொகுக்கும் முதற்கட்ட முயற்சியாக இவர் எழுதிய தமிழகமும் முஸ்லிம்களும் என்ற வரலாற்று ஆய்வு நூல் சீதக்காடி அறக்கட்டளையின் சார்பாக நடத்தப்பட்ட போட்டியில் 1988ம் ஆம் முதல் பரிசைப் பெற்றது. இவரது நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டன.
கீழக்கரையில் நடைபெற்ற ஐந்தாம் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் தமிழகமும் முஸ்லிம்களும் வெளியிடப்பட்டது. இந்த சிறப்பான நூலை 'அடையாளம்' சார்பாக தற்போது 'தமிழகத்தில் முஸ்லிம்கள்' என்ற தலைப்பில் புதிய பதிப்பாக வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் முதல் பள்ளிவாசல்
தமிழகத்தில் சோழர்களின் முக்கிய நகரமாக விளங்கிய உறையூரில் (இன்று திருச்சி மாநகரில் உள்ளது) ஹிஜ்ரி 116ல் (கி.பி.734) ஹாஜி அப்துல்லாஹ் பின் முஹம்மது அன்வர் என்பரால் அமைக்கப்பட்ட தொழுகைப் பள்ளியே தென்னகத்தில் முஸ்லிம்களால் நிர்மானிக்ப்பட்ட முதல் தொழுகைப் பள்ளி என்று குறிப்பிடும் நூலாசிரியர் இந்த நூலில் இது போன்ற பல அரிய தகவல்களை ஆதாரத்துடன் தந்துள்ளார்.
பாண்டிய மன்னர்களின் தலைநகரான மதுரையில் முஸ்லிம்களின் செல்வாக்கு அரசியலில் மிகுந்து வந்ததை 'அரசியலில் முதன்மை' என்ற அத்தியாத்தில் ஆதரங்களுடன் எடுத்துரைக்கிறார். பாண்டிய மன்னர்களின் தலைநகரான மதுரைக்கு கி.பி.1182ல் மதீனாவிலிருந்து இஸ்லாமிய போதகர் ஸையது இப்ராஹீம் (ஷஹீத்) அவர்கள் வருகைப் புரிந்தார். ஷஹித் அவர்களுக்கு கொற்கையில் ஆட்சி புரிந்த குலசேகர பாண்டியன் எல்லா வசதிகளையும் வழங்கியதுடன் தனது ஆட்சிக்கு குந்தகம் விளைவித்துக் கொண்டிருந்தவர்களை அடக்குவதற்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார். இதை அறிந்த மன்னன் திருப்பாண்டியன், அஞ்சியவனாக மதுரையை விட்டே ஒடி விட்டான். ஷஹீத் சைய்யது இப்ராஹீம் தலைமையிலான குழுவினர் மதுரையைக் கைப்பற்றினர். மதுரைக் கோட்டையும் அதன் சுற்று வட்டாரத்து சீமையும் தளபதி அமீர் இஸ்கந்தர் என்பரின் நிர்வாகத்தில் பல ஆண்டுகள் இருந்து வந்தன. இது போன்று முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ் இருந்த தமிழக பகுதிகளை குறித்த வரலாற்று குறிப்புகளை இந்த நூலில் காண முடிகின்றது.
பாண்டியனின் தூதராக சீனாவிற்கு சென்ற முஸ்லிம் அமைச்சர்
தமிழ் சமுதாயத்துடன் சிறந்த நல்லிணக்கத்துடன் முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள். பல தமிழ் மன்னர்களின் அரசவையில் முக்கிய அமைச்சர்களாகவும் முஸ்லிம்கள் பணியாற்றினார்கள். சீனாவை சிறப்புற ஆட்சி புரிந்த பேரரசர் குப்ளாய்கானின் அரசவைக்கு பாண்டியன் மாறவர்மன் குலசேகரன் தனது தூதராக சுல்தான் ஜமாலுத்தீனை கி.பி.1279ல் அனுப்பி வைத்தார் போன்ற மறைக்கப்படும் உண்மைகளை இந்த நூல் வெளிப்படுத்துகின்றது.
மாலிக் கபூருக்கு எதிராக வீரபாண்டியன் படையில் போரிட்ட தமிழக முஸ்லிம்கள்
மதுரை அரசு கட்டிலைப் பெற சுந்தரபாண்டியன் தில்லியில் அலாவுதீன் அவைக்கு சென்று உதவி கோரினார். சுந்தரபாண்டியனுக்கு உதவ தில்லிப் படைகள் மதுரை நோக்கி புறப்பட்டன. வழியில் வீரபாண்டியன் படைகளை தில்லியிலிருந்து வந்திருந்த மாலிக் கபூர் தலைமையிலான படைகள் சந்தித்தன. இந்த போரில் வீரபாண்டியனின் படைகள் தோல்வி அடைந்தன. வீரபாண்டியனின் படைகளிலிருந்து கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களில் ஏராளமான தமிழ் முஸ்லிம் வீரர்கள் இருந்தனர். (பக் 116). இதே போல் செஞ்சி கோட்டையை கி.பி. 1714ல் முற்றுகையிட்ட முகலாய படைகளுக்கு எதிராக தேசிங்கு மன்னருக்கு ஆதரவாகவும் மணக்கோலத்திலிருந்த மஹமத்கான் வீரதீரமாக போரிட்டு வீரமரணமடைந்த நிகழ்வும் இப்போர்கள் மதரீதியானது அல்ல நிலபரப்பின் ஆதிக்கத்திற்காக நடைபெற்றவை என்பதை எடுத்துக் காட்டுகின்றன.
பிராமணப் பெண்ணை காப்பாற்ற உயிர் துறந்த பக்கீர்
தஞ்சாவூர் மன்னர் செப்பேடு 1983 தொல்லியல் கருத்தரங்கு (பக் 3) என்ற ஆவணத்திலிருந்து கிபி 1614ம் ஆண்டு பட்டயம் ஒன்றிலிருந்து ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வை நூலாசிரியர் மேற்கோள் காட்டுகிறார். பிராமணப் பெண் ஒருவர் வல்லத்திலிருந்து தஞ்சாவூருக்குச் செல்லும் காட்டுபாதையில் கள்ளர்கள் வழிமறிக்கப்படுகிறார். அப்பெண் அந்த வழியே வந்த ஒரு பக்கீரிடம் அடைக்கலம் கேட்கிறாள். அந்த பிரமாணப் பெண்ணுக்காக கள்ளர்களிடம் பரிந்து பேசி அவளுக்கு ஊறு இழைக்க வேண்டாமென்று பக்கீர் கெஞ்சுகிறார். ஆனால் கள்ளர்கள் பக்கீரை கொன்று விடுகிறார்கள். அந்த பெண் நாக்கை பிடுங்கிக் கொண்டு செத்துப் போனார் என்று அந்த பட்டயம் குறிப்பிடுகின்றது. முஸ்லிம்கள் என்றும் நீதிக்காக போராடுபவர்கள் என்பதை உறுதி செய்கிறது.
தமிழர்களுடன் கலந்து தமிழ் மண்ணின் மைந்தர்களாக மொழி, அரசியல், பண்பாடு, வாணிபம் உட்பட அனைத்து துறைகளிலும் தமிழக முஸ்லிம்கள் சிறந்து விளங்கிய வரலாற்றை இந்த நூல் ஆதரங்களுடன் விவரிக்கின்றது. இருப்பினும் இது முழுமையான வரலாறு அல்ல. கடினமாக உழைத்து நூலாசிரியர் பல தகவல்களை திரட்டி மறைக்கப்பட்ட அல்லது மறக்கப்பட்ட வரலாற்று உண்மைகளை நம் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். இதனை நூலாசிரியரே குறிப்பிடுவது போல் ஒரு தொடக்க முயற்சியாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் முஸ்லிம்களின் தடத்தை விவரிக்கும் பல கல்வெட்டுகளும் இன்ன பிற சான்றுகளும் உள்ளன. வளரும் தலைமுறையை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் தம்மை இந்த பணிக்கு அற்பணித்துக் கொண்டு இன்னும் விரிவாக வரலாற்றை எழுத முன் வரவேண்டும்.
இன்று தமிழகத்தில் வாழும் முஸ்லிம்களையும் அந்நியராக சித்தரிக்க முயலும் பாசிச போக்கை சில வன்முறை சக்திகள் பரப்பி வரும் சூழலில் முஸ்லிம்கள் மட்டுமல்ல தமிழர்கள் அனைவரும் அவசியம் படித்து பயனடைய வேண்டிய வரலாற்றுப் கருவூலம் இந்த நூல்.
(நன்றி: மக்கள் உரிமை)