ஓர் இலக்கியப் படைப்பை முழுமையாக உள்வாங்கவேண்டுமானால் அது எழுதப்பட்ட காலத்தை ஆராய்ந்து கண்டறியவேண்டும் என்பது எஸ். வையாபுரிப் பிள்ளையின் (1891-1956) ஆழ்ந்த நம்பிக்கை. வாழ்ந்த காலம் தொட்டு இன்றுவரை பலராலும் தாக்குதலுக்கு ஆளாகிவரும் ஒரு தமிழறிஞராக வையாபுரிப் பிள்ளை திகழ்வதற்கு அவர் மேற்கொண்ட கால ஆராய்ச்சி ஒரு முக்கியக் காரணமாகும். இதை அவர் நன்கு உணர்ந்திருந்தார் என்றாலும் தன் போக்கை அவர் மாற்றிக்கொள்ளவில்லை. ஒரு படைப்பு எழுதப்பட்ட காலத்தை முடிந்தவரை பின்னோக்கித் தள்ளிவிடுவதன்மூலம் அந்தப் படைப்பின் மேன்மையையோ அதன் மொழியின் மேன்மையையோ உயர்த்திவிடமுடியாது என்பது அவருடைய திடமான நம்பிக்கை.
‘தமிழ்ச் சுடர் மணிகள்’ என்னும் நூலின் முன்னுரையில் வையாபுரிப் பிள்ளை எழுதுகிறார். ‘கால ஆராய்ச்சி பயனற்றது என்று கருதுபவர்கள் இன்றும் சிலர் உள்ளார்கள். நூல் தோன்றிய காலத்தை அறிந்தாலன்றி அந்நூலிலுள்ள கருத்துகளை நாம் முற்றிலும் அறிந்துகொள்ளமுடியாது. இலக்கிய சரிதமும் அமைக்க முடியாது. இலக்கியச் சான்றுகளால் உணரப்படும் தேச சரித்திரமும் வரையறை எய்தமாட்டாது. தமிழ் மொழியின் சரித்திரமும் அறிதற்கு இயலாததாகும். தமிழ் நாட்டில் உலவிய கருத்துக்களின் வரலாறும் (History of Tamilian Thought) நாகரிக வரலாறும் மயக்கத்திற் கிடமாகவே இருக்கும். ஆதலால், கால ஆராய்ச்சி மிகவும் இன்றியமையாததாகும்.’
தமிழின் தொன்மையான நூலாகக் கருதப்படும் தொல்காப்பியத்தின் காலம் என்ன? இதை ஆராயும்முன்பு, தொல்காப்பியரின் மாணவராகிய பனம்பாரனார் எழுதியுள்ள பாயிரத்தை அடிப்படையாக வைத்து தொல்காப்பியர் திருவிதாங்கோட்டுப் பகுதியைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும் என்று முதலில் கணிக்கிறார் வையாபுரிப் பிள்ளை. பிறகு அவருடைய சமயம் என்னவாக இருக்கலாம் என்னும் கேள்வியை எழுப்புகிறார். தொல்காப்பியரின் சூத்திரங்கள் சிலவற்றில் தென்படும் கொள்கைகளைப் பார்க்கும்போது ‘அவர் ஜைனராதல் வேண்டும் என்னுந் துணிபு உறுதியடைகின்றது’ என்கிறார்.
அடுத்து காலத்தைக் கண்டறியவேண்டும்.
வடமொழிப் பேரிலக்கணத்தை வகுத்த பாணினிக்கு தொல்காப்பியர் மூத்தவர் என்று சொல்லப்படுவது சரியா? பனம்பாரனார் தொல்காப்பியரை, ‘ஐந்திரத்தில் வல்லவராவர்’ என்று அழைக்கிறார். பாணினிக்கு முந்தைய வடமொழி இலக்கண நூல், ஐந்திரம். பாணினி தோன்றியபிறகு ஐந்திரம் வழக்கொழிந்துவிட்டது. எனவே பாணினியம் கற்ற வல்லவர் என்று குறிப்பிடாமல் ஐந்திரம் கற்ற வல்லவர் என்று அழைக்கப்படுவதில் இருந்தே தொல்காப்பியர் பாணினிக்கு முன்பு வாழ்ந்தவர் என்பது தெரிந்துவிடுகிறது என்பது சில அறிஞர்களின் வாதம். இதை ஏற்க மறுக்கும் வையாபுரிப் பிள்ளை தனது வழக்கமான ஆய்வுமுறையைப் பயன்படுத்தி, தொல்காப்பியர் ‘கி.பி 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தனர் எனக் கொள்ளுதலே பொருத்தமெனத் தோன்றுகிறது’ என்கிறார்.
தேவநேயப் பாவாணர் தொடங்கி பலரும் வையாபுரிப் பிள்ளையின் இந்தக் கணிப்பைக் கடுமையாகச் சாடி நிராகரித்தனர். கம்பர், ‘கிபி 12ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தனர்’ என்னும் அவருடைய முடிவும்கூட பலரைக் கவர்ந்ததாகத் தெரியவில்லை. தமிழின் பழம்பெரும் நூல்களையெல்லாம் மிக மிக சமீபத்தியவையாக வையாபுரிப் பிள்ளை நிறுவ முற்படுவது தமிழ் மொழிக்கு மட்டுமல்ல மூத்தகுடியான தமிழர்களுக்கும் அவமானத்தையல்லவா தேடித்தரும்? நம் பெருமிதத்தை நிலைநாட்டும் பணிகளையல்லவா ஆய்வாளர்கள் முன்னெடுக்கவேண்டும்?
திருக்குறளை அறிமுகப்படுத்தும் ஒரு கட்டுரையில், தன்னுடைய கால ஆராய்ச்சி ஏற்படுத்திவரும் மனக்கசப்புகளைப் பற்றி மனம் திறந்து பேசுகிறார் வையாபுரிப் பிள்ளை. ‘திருவள்ளுவர் என்னும் தெயவப் பேரொளி தோன்றிய காலம் இன்றைக்குச் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பென்று கூறுவர். தமிழ் இலக்கிய சரித்திர ஆராய்ச்சியாளரில் ஒரு சிலர் இதனை ஒப்புக்கொள்ளாமலிருத்தல் கூடும். ஆனால், சில நூறு வருஷங்கள் முன்பின்னாகக் கூறிக்கொள்வதில் எனது நோக்கம் பழுதுபடுவதில்லை.’
வையாபுரிப் பிள்ளையின் பங்களிப்பு கால ஆராய்ச்சியோடு முற்றுப் பெற்றுவிடவில்லை. உ.வே. சாமிநாத ஐயர், பாரதியார், வ.உ. சிதம்பரம் பிள்ளை, கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, டி.கே. சிதரம்பரநாத முதலியார், மு. இராகவையங்கார், ரா. ராகவையங்கார், இராமலிங்க சுவாமிகள் என்று தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பங்காற்றிய ஆளுமைகளையும் அவர்தம் படைப்புகளையும் சீரிய முறையில் ஆராய்ந்து புது ஒளி பாய்ச்சுகிறார் வையாபுரிப் பிள்ளை. இலக்கியப் பார்வையோடு அவருடைய சமூகப் பார்வையும் இந்நூலில் திட்டவட்டமாக வெளிப்படுகிறது.
ஓர் உதாரணம். வட இந்தியாவிலுள்ள கோவில்களைப் போலன்றி தென்னகத்தில் ‘அர்ச்சகர் விபூதி முதலிய பிரசாதங்களைக்கூட வழிபடுவோரது கையிடாது தூரத்தே எறிந்து, அவர்கள் எடுத்துக்கொள்ளும்படியாகச் சில இடங்களிற் செய்கிறார்கள். இது தென்னாட்டவர்களுடைய மனப்போக்கை நன்கு தெரிவிக்கிறது’ என்று ஓரிடத்தில் வருந்துகிறார் வையாபுரிப் பிள்ளை. பழமைவாத இருளிலும் பிற்போக்குத்தனத்திலும் மூழ்கிக்கிடக்கும் தென்னிந்தியாவில், ‘எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே’ என்று பாடிய பாரதியாரை அவர் ஒரு புத்தொளியாகக் கண்டதில் வியப்பேதுமில்லை.
பாரதியை முதன்முதலில் நேரில் கண்ட சம்பவத்தை ஒரு கட்டுரையில் விவரித்திருக்கிறார். இது நடந்தது நவம்பர் 1918ல். அப்போது திருவனந்தபுரத்தில் வழக்கறிஞராகச் சில காலம் வையாபுரிப் பிள்ளை பணியாற்றிவந்தார். ஒரு நாள் எதிர்பாரா விதமாக வீதியில் பாரதியைக் கண்டு திகைத்து, குழம்பி, அவர் பாரதிதான் என்பதை உறுதி செய்துகொண்டபிறகு மகிழ்ச்சியோடு உள்ளே அழைத்துச் செல்கிறார். ‘பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே’ என்று பாரதி பாடியிருந்தது அவருக்குத் தெரியும் என்றாலும் பாரதிக்கு அருந்த நீர் கொடுக்க நேரும்போது வையாபுரிப் பிள்ளைக்குத் திடீரென்று ஒரு சந்தேகம் தோன்றிவிடுகிறது. ‘அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் பிராமணர்கள் அல்லரென்று (பாரதியிடம்) சொன்னேன். பாரதி கண்ணில் தோன்றிய ஒரு அபூர்வமான ஜோதி என்னை வாட்டிற்று. தாம் அவ்வாறான சாதி வேறுபாடுகளைப் பாராட்டுவதில்லை என்று சிறிது கடுமையாக எனக்குத் தெரிவித்தார்’ என்று எழுதுகிறார்.
பாரதியின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ள அவருக்கு முந்தைய கவிஞர்களின் படைப்புகளைக் காணவேண்டும் என்கிறார் வையாபுரிப் பிள்ளை. ‘உதாரணமாக, சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தோன்றிய செய்யுட்களையும், பிரபந்த வகைகளையும் எடுத்து நோக்குவோம். அந்தாதிகள், கலம்பங்கள், கோவைகள் முதலிய சிறு பிரபந்தங்கள் தமிழ் நாட்டில் அக்காலத்தில் மிகுதியாக இயற்றப்பட்டன. இவைகளில் எல்லாம் உயிர் ஆற்றல் என்பது மருந்துக்கும் கிடையாது. பழைய மரபுகளைத் தவறாதபடி கையாண்டு, புத்துணர்ச்சி சிறிதும் கலவாதபடி இயற்றிய பிரபந்தங்களே இவைகள்.’
குறிப்பாக, பாரதி பிறந்து வளர்ந்த எட்டயபுரம் ஜமீனில் ஜமீன்தார்களையும் பிரபுக்களையும் பற்றி இயற்றப்பட்டுவந்த பாடல்கள் ‘தமிழ்ப் பயிரைக் கெடுத்து வந்த விஷப்பூண்டுகள்’ என்கிறார் வையாபுரிப் பிள்ளை. புராணங்களும் தோத்திரங்களும் கூடத் தோன்றின ஆனால் ‘இவைகளும் பெரும்பாலும் கவித்துவத்தின் உண்மையியல்பினை உணராதபடி இயற்றப்பட்ட நூல்களே’. பாரதி இவற்றையெல்லாம் பயன்படுத்திக்கொண்டார் என்றாலும் அவற்றையெல்லாம் கடந்து வேறெங்கோ சென்றுவிட்டார் என்று மகிழ்கிறார் வையாபுரிப் பிள்ளை.
உவேசாவும் இதை வேறு வழியில் செய்திருப்பது நமக்கெல்லாம் நன்மையில் சென்று முடிந்தது என்று இன்னொரு கட்டுரையில் நிம்மதியடைகிறார் வையாபுரிப் பிள்ளை. மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணவராகவும் பின்னர் திருவாடுதுறை ஆதினத்துக்குள்ளுள்ளும் அடங்கியிருந்த உவேசா எதிர்பாராதவிதமாக சீவக சிந்தாமணி என்னும் ஜைன காவியத்தைப் பரிசோதித்து அச்சிடும் ஆர்வத்தில் இறங்கியது அவரை முற்றிலுமாக வேறுலகுக்குக் கொண்டுசென்றது என்கிறார் வையாபுரிப் பிள்ளை. ‘மதச்சார்பு பற்றி நூல்கள் மீது விருப்பு வெறுப்பு இல்லாதபடி, இலக்கியச் சிறப்பு ஒன்றையே கருதி, தமிழிலக்கியத் தொண்டு புரியவேண்டும் என்ற மனப்பான்மையானது ஐயருக்கு உண்டாயிற்று. சமயத்தொண்டு வேறு, இலக்கியத் தொண்டு வேறு என்ற பாகுபாட்டை இவர் மிக நன்றாக உணரும்படி நேர்ந்தது.’
கம்பரைக் கடவுள் நிலைக்கு உயர்த்தியும் மாணிக்கவாசகரையும் குமரகுருபரையும் இராமலிங்க சுவாமிகளையும் வியந்தோதியும் பரவசப்பட்ட அதே வையாபுரிப் பிள்ளை இப்படியும் எழுதுகிறார். ‘ஆறுமுக நாவலர் சமயத் தொண்டில் ஈடுபட்டுச் சமய நூல்களையே அச்சில் வெளியிட்டு வந்தனர். நாவலர் பதிப்புக்கள் சிறந்தனவாயிருந்தாலும் அவை சமயக் கல்விக்கு மாத்திரம் பயன்பட்டு அமைந்து நின்றன. இங்ஙனமே வேறு சில பதிப்பாளர்கள் வைஷ்ணவ சமயத்தொண்டும் இன்னும் சிலர் ஜைன சமயத் தொண்டும் புரிந்து வந்தனர். இம்மமனப்பான்மை இலக்கியவுணர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் முரணாக நிற்பது. பஞ்ச காவியங்களுள் ஒன்றாகிய குண்டலகேசி இன்று நமக்கு அகப்படாமல் அழிந்துபோனது மேற்சொல்லிய குறுகிய மனப்பான்மையினால்தான். இலக்கிய நெறியில் உழைத்து வருபவர்களுக்கு இலக்கிய நயம் அறியும் மனப்பான்மை ஒன்றுதான் இருத்தல் வேண்டும்.’
மரபுகளை உடைத்துக்கொண்டு நவீன வழியில் நடைபோட்ட உவேசா, பாரதி இருவரையும் அருகருகில் நிறுத்தி ஒப்பிட்டு அலசும்போது வையாபுரிப் பிள்ளையின் மதிப்பீட்டு முறையின்மீது மரியாதை தோன்றுகிறது. ‘ஐயரவர்கள் பண்டைத் தமிழிலக்கியத்தின் பிரதிநிதி. தற்காலத் தமிழிலக்கியத்தின் பிரதிநிதி பாரதியார். இவ் இருவரும் திருவல்லிக்கேணியோடு தொடர்புடையவர்கள்... பாரதியார் நம் தமிழன்னையின் உக்ரமூர்த்தமாகவுள்ளவர்; ஐயரவர்கள் நம் அன்னையின் சாந்தமூர்த்தமாக வுள்ளவர். பாரதியாரின் சொற்கள், தேசபக்தியும் தமிழ்ப்பற்றும் கொழுந்து விட்டெரியுமாறு, கேட்போரின் மனத்திலே அளவற்ற பக்திக் கனலை அள்ளியெறிந்து, அம் மனத்தைப் பற்றியெரியச் செய்கின்றன. ஐயரவர்களின் சொற்கள் ஆழ்ந்த தமிழறிவினால் பரிபக்குவமெய்திக் குளிர்ந்த நிலவொளியை வீசுகின்றன. பாரதியார் வாழ்க்கைப் போராட்டத்தில் துன்புற்று நைந்து வருந்தியவர்; ஐயரவர்கள் இவ்வகைப் போராட்டத்தால் துன்புறாது வாழ்ந்தமை தமது பாக்கியமே. பாரதியார் பெருங்கவிஞர்; ஐயரவர்கள் பெரும் புலவர்; இவ் விரு பெருந்தகைமையாளரின் திருவுருவங்களும் நமது இளைஞர்கள் எப்பொழுதும் தியானித்துவரத் தக்கன. இவ் இருவரது வாழ்க்கைகளும் நம் நாட்டு இளைஞர்களுக்குப் பயன்படக்கூடிய பல உபதேசங்களைத் தரவல்லன.’
திருவல்லிக்கேணியில் அடுத்தடுத்து வாழ்ந்த உவேசாவுக்கும் பாரதிக்கும் இடையிலான உறவு எப்படி அமைந்தது? அல்லது உறவு என்று ஏதேனும் இருந்ததா? ‘மிக நெருங்கிப் பழகாமற் போனாலும் சாமிநாதையர்மீது பாரதியார் மிகுந்த பக்தி கொண்டிருந்தார் என்று தெரிகிறது.’ உவேசா ஆங்கில அரசாங்கத்தினரிடமிருந்து மகாமகோபாத்தியாய பட்டம் பெற்றபோது பாரதி அவரைப் புகழ்ந்து ஒரு பாடல் இயற்றினார். அவருக்கான பாராட்டுக் கூட்டத்தில் பாரதியாரும் கலந்துகொண்டார் என்றாலும் மேடையேறி தன் பாடலை பாடுவதற்கான அனுமதி அவருக்கு வழங்கப்படவில்லை. ‘இவர் (பாரதி) அரசாங்க விரோதி; வர்ணாச்சிரம ஒழுக்கத்தைத் தூவென்று தள்ளியவர். எனவே சாமிநாத ஐயர் பாரதியாரைச் சந்தித்துப் பழகுவதற்குத் துணிவு கொள்ளவில்லையெனத் தோன்றுகிறது. இவரையும், இவருடைய கொள்கைகளையும், இவரது தமிழையும்கூட, ஐயர் மதித்திருந்தனர் என்பதற்குச் சான்று யாதும் இல்லை.’
இந்த வேறுபாடுகளை அடையாளம் காண்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் அவற்றை விரிவான தளத்தில் பொருத்திப் புரிந்துகொள்ளவும் முயல்கிறார் வையாபுரிப் பிள்ளை. உவேசாவுக்கும் பாரதிக்கும் இடையிலான வேறுபாடு ‘...பழமைக்கும் புதுமைக்கும் இருந்த பெரியதோர் பிரிவை நமக்கு உணர்த்துகிறது. புதுமை ஒருவாறு பழமையைப் போன்றிவந்தது. ஆனால், பழமை புதுமையைப் பெரும்பாலும் அஞ்சி வெறுத்து வந்தது. சிறுபான்மை, ஓரளவு உதாசீனபுத்தியுடன் ஒதுக்கிவந்தது என்றுகூடச் சொல்லலாம். பழமை தற்கால அநுபவத்தில் இல்லாத பொருள்களைப் போற்றி வந்தது; தற்கால வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்பற்ற புராதன வாழ்க்கையை நினைத்து மகிழ்ந்து வந்தது; பண்டைப் பழங்காலத்துப் பழம்பொருள் பற்றி ஆராய்ச்சி செய்வதிலேயே தேய்ந்து நின்று, நிகழ்காலத்தையும் பின்வரும் எதிர்காலத்தையும் சிறிதும் கருதாது, புது ஞாயிற்றின் அறியாது, சிலசில ஒதுக்கிடல்களில் பதுங்கியிருந்தது. இதற்கும் உயிர்த் தத்துவம் நிரம்பி, ஒளிச் சிறப்பில் மலர்ந்து, புதுப் பொருள்களைக் காணும் மகிழ்ச்சியில் திளைத்த புதுமைக்கும் வெகு தூரமாம். இவ் இரண்டிற்கும் சான்றாக உள்ளவர்கள் சாமிநாத ஐயரும் பாரதியாரும்.’
உவேசா, பாரதியைப் போல் வையாபுரிப் பிள்ளையும் அவர் இயங்கிய தளத்தில் ஒரு முக்கியமான பாய்ச்சலை நிகழ்த்தியவர்தான் என்பது தமிழ்ச் சுடர் மணிகள்மூலம் தெரிகிறது. அவருடைய கால ஆராய்ச்சியை ஏற்கமுடியாதவர்கள்கூட அவருடைய இலக்கியத் திறனாய்வுகளிலிருந்தும் ஆழமான அலசல்களிலிருந்தும் பலனடையமுடியும். கால ஆராய்ச்சியிலும்கூட வையாபுரிப் பிள்ளையின் ஆய்வுப் பார்வையை ஒருவராலும் புறந்தள்ளிவிடமுடியாது. அவர் வந்தடைந்த முடிவுகளை மறுப்பதற்கும்கூட அவர் கையாண்ட வழிமுறைகளையே ஒருவர் கைக்கொள்ள வேண்டியிருக்கும்.
எதற்காக இத்தனை விரிவாக பல்வேறு இலக்கியப் பிரதிகளை கற்றுக்கொண்டும் ஆராய்ந்துகொண்டும் மதிப்பிட்டுக்கொண்டும் இருக்கவேண்டும்? அதனால் நமக்கு என்ன பயன்? தமிழ்ச் சுடர் மணியின் முன்னுரையில் இடம்பெற்றிருக்கும் ஒரு பத்தியை வைத்து இந்தக் குறிப்பை நிறைவு செய்வது பொருத்தமாக இருக்கும். ‘மேல்நாட்டு ஆசிரியர்களின் முறையைப் பின்பற்றி நல்ல நெறியில் அமைக்கப்பட்ட தமிழிலக்கிய சரிதம் இனித்தான் எழுதப்பெற வேண்டும். இன்றுவரை வெளிவந்துள்ளனவற்றில் ஒரு சிலவே ஒருவாறு நம்மால் கொள்ளத்தக்கன. அவைகளிலும் பற்பல குறைகள் உள்ளன. செவ்வையான தமிழிலக்கிய சரிதத்திற்குப் பயன்படலாம் என்ற நோக்கத்தோடு இக்கட்டுரைகள் எழுதப்பட்டன. அந்நோக்கம் சிறிதளவேனும் கைகூடுமாயின், அதுவே எனது முயற்சிக்குப் பெரிதொரு கைம்மாறு ஆகும்.’