பல்லாயிரம் ஆண்டுகளாக ஈழநிலம் அடைகாத்து வைத்திருக்கும் அறத்தவிப்பை அதன் ஓட்டை உடைத்து வெளிக்கொணரும் முயற்சியில் முதல் வெற்றியை அடைந்திருக்கிறார் குணா கவியழகன். கர்ப்பநிலம் என்னும் அவருடைய நாவலின் முதல் காதையாக வெளிவந்துள்ளது வனமேகு காதை. ஈழத்தில் நடைபெற்ற அனர்த்தங்களை பதிவு செய்வதோடு, ஈழத் தொல்குடிகளின் வேர்களையும், அதன் பண்பாடுகளையும் தேடித் தொகுக்கும் முயற்சியில் அவர் இறங்கியிருக்கிறார். இந்நாவல் கர்ப்பநிலத்தின் முதல் காதையான வனமேகு காதை இன்று நம் கைகளில் தவழ்கிறது. 1995 ஆம் ஆண்டில் போரினால் நிகழ்ந்த யாழ் மக்களின் வன்னி நிலம் நோக்கிய இடப்பெயர்வும், அப்போர்ச்சூழலும் வனமேகு காதையின் கரு. ஆதித் தமிழனைத் தேடி ஒரு அகதித் தமிழன் செய்யும் வரலாற்றுப் பயணம் இது.
2009 மே முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான ஈழமக்களின் வாழ்நிலை கொடும் அடிமை நிலைக்கு ஈடாக தள்ளிவிடப்பட்டுள்ள சூழலில், ஈழமக்களின் எதிர்கால வாழ்வியலை நிர்ணயிக்கவல்ல இலக்கியங்கள் மட்டுமே அவர்களுக்குத் தேவை. ஆளும் வர்க்கத்திற்கு ஏற்ப வரலாறுகளை ஒடித்து இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்கள் மிகுந்து வரும் போருக்குப் பின்னரான சூழலில் ஈழப்போர், அதன் பொருத்தப்பாடுகள், போர் மென்று துப்பிய எளிய மக்கள், நாட்டை விட்டு வெளியேறித் தவிக்கும் ஈழத்தமிழர்களின் வாழ்வியல் அக்கறை குறித்தெல்லாம் தன்னுடைய எழுத்துகளைத் தொடர்ந்து கூர்மைப்படுத்தி வருகிறார் குணா கவியழகன். நஞ்சுண்டகாடு, விடமேறிய கனவு, அப்பால் ஒரு நிலம் என்னும் தொடர் முயற்சியின் ஒரு முன்நகர்த்தல்தான் கர்ப்பநிலமும், வனமேகு காதையும். ஈழ மக்களின் உரிமைப் போராட்டத்தை, அதன் பொருத்தப்பாட்டை, அப்போர் எழுப்பிய அறச்சீற்றத்தை குணா நாவலில் பதிவு செய்கிறார்.
தேசியம், தேசிய இனத் தன்னுரிமை, கம்யூனிசம் ஆகிய கோட்பாடுகளின் துணைகொண்டும் ஈழப்போராட்டத்தை விசாரணை செய்கிறார். தமிழ் நிலத்தின் மீது, தமிழ்ச்சமுதாயத்தின் மீது ஈழப்போர் ஏற்படுத்திய தாக்கத்தை மீண்டும் வாசிப்புக்கும், விசாரணைக்கும் உட்படுத்துகிறார். அவரவர் கோட்பாட்டு வழி ஈழ எழுச்சியை நாம் உள்வாங்கிக்கொள்ளமுடியும். ஈழத்தமிழனின் உண்மையான வரலாற்றை, அவனின் பண்பாட்டுத் தொடர்ச்சியை மட்டுமல்லாது, அரசியல், மதக்குறுக்கீடுகள் அற்ற, எல்லாவகை அதிகாரத்திற்கும் அப்பாற்பட்ட வெகுஜன சிங்கள மக்களுக்கும், ஈழத்தமிழனுக்கும் இடையேயான அன்பான , இணக்கமான வாழ்வியலையும் நமக்கு அறிமுகம் செய்கிறது நாவல். இதைத்தான் நாவலின் ஆகப்பெரும் வெற்றியாக நான் பார்க்கிறேன்.
ஈழப்போராட்டத்தில் ஒடுக்கப்படும் மக்கள் தமிழர்கள். ஒடுக்கியவர்கள் சிங்கள அரசும், அதன் அதிகார வர்க்கமும். ஒடுக்கப்பட்டவனின் அறச்சீற்றமும், ஒடுக்கிய சிங்கள அதிகார வர்க்கத்தை நோக்கிய எளிய சிங்கள மக்களின் அறச்சீற்றமும் இணையும் புள்ளியின் மீது ஒளிபாய்ச்சியிருக்கிறார் குணா.
வனமேகு காதையின் போர்க்களக் காட்சிகள் குணாவின் அனுபவத்தை பறை சாற்றும். களத்தில் செய்யப்படும் போர் வியூகங்கள்தான் ஒரு படையை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும். போராளிகளின் அணிவகுக்கும் வியூகங்களை அப்பால் ஒரு நிலத்தில் மிகச்சிறப்பாகக் கொணர்ந்திருப்பார் குணா. யாழ்ப்பாணக் குடா நாட்டின் மீதான இலங்கை அரசின் முற்றுகையும், புலிகளின் ஆணைக்கிணங்க குடா நாட்டு மக்களின் இடப்பெயர்வும், இடப்பெயர்வின் போதே நிகழும் போர்ச்சூழலும் நம்மை 1995 களுக்கே அழைத்துச் சென்றுவிடுகிறது. குடா நாட்டு மக்களின் துன்பங்களை மெய்யாகவே நமக்குள் இறக்கிவிட்டுச் சென்றுவிடுகிறார் குணா. அதனால்தான் நாவலின் வரிகளை கண்ணீர் திரையிட்ட கண்களோடுதான் கடந்து செல்லமுடிகிறது.
"ஆபரேஷன் வெற்றி, நோயாளி மரணம்" என்னும் சொற்றொடரை உண்மையாக்கியது இலங்கை அரசின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை. மக்கள் யாரும் இல்லாத யாழ்ப்பாணத்தை இலங்கை அரசுப் படைகள் கைப்பற்றியது கூட மயானத்தைக் கைப்பற்றியது போலவே அமைந்துவிட்டது. மக்களை தங்களின் கூடவே அழைத்துச் செல்லும் போர்த் தந்திரத்தை குடா நாட்டு மக்களின் இடப்பெயர்வு முதல் முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் வரை புலிகள் செய்தது சரியா என்று இன்றும் புலிகளின் ஆதரவாளர்கள் கூட விவாதிக்கும் செய்தியாக மாறிப்போயுள்ளது. நாவலின் சில பாத்திரங்கள் கூட புலிகளின் முடிவை விமர்சிக்கிறார்கள். மக்களுக்கு கடுமையான துன்பத்தைத் தரவல்ல இப்போர் தந்திரத்தை ஏன் புலிகளால் மாற்றிக்கொள்ளமுடியவில்லை? மில்லியன் டாலர் கேள்வி இது. தங்களின் பலத்தை இழக்கும் போராளிகள் எவரும் கொரில்லா யுத்தமுறையையே தேர்ந்தெடுப்பார்கள் என்ற வாதத்தையும் நம்மால் எளிதாகக் கடந்து வந்துவிட முடியவில்லை. மக்களோடு மக்களாக தாங்களும் நுழைந்து அரசுப் படைகள் மீது தாக்குதல் நடத்தும் போது அரசப் படைகள் சர்வதேச நிர்பந்தத்திற்கு அஞ்சி பணிந்து போகும் என்ற புலிகளின் தந்திரம் முள்ளிவாய்க்காலில் தோற்றுப் போனதே?!. நாவலைக் கடக்கும்போது இந்த சிந்தனைகள் வந்துபோகின்றன.
சமச்சீரற்ற, சகிக்கமுடியாத அளவுக்கு பண்பாட்டுத் தீமைகளான சாதியும், தீண்டாமையும் ஈழ மண்ணை, ஈழ மக்களை ஆக்கிரமித்திருந்தாலும் ஈழ மண் பறித்தெடுக்கப்பட்டபோது ஒட்டுமொத்த ஈழமக்களும் சாதி, மத வேறுபாடின்றி வேட்டையாடப்படார்கள். தோழர் சண்முகதாசனால் கம்யூனிச இயக்கம் இலங்கையில் வீறு கொண்டு எழுந்த போதிலும், அதிலிருந்து பிரிந்த சிங்கள கம்யூனிஸ்ட்கள் தங்கள் கட்சியின் பெயரை தங்களின் இனத்தின் பெயராலேயே அடையாளப்படுத்திக் கொண்டனர் என்பதை நாம் புரிந்துகொள்ளவும் வேண்டியுள்ளது. நாவல் இச்செய்தியை நுணுக்கமாகத் தொட்டுச் செல்கிறது. தமிழ்ப் பாட்டாளியும் சிங்களப் பாட்டாளியும் இணைந்து சிங்கள ஆளும் அதிகாரவர்க்கத்தை எதிர்க்கவேண்டும் என்ற தீவிர கம்யூனிச சிந்தனையை வைக்கவும் நாவல் தவறவில்லை.
கம்யூனிஸ்ட் சாமிப்பிள்ளை பாத்திரம் மூலமாக பல உண்மைகளைப் பேசுகிறார் குணா. "வீரத்தமிழன், மானத்தமிழன் எண்டு போராடி நாங்கள் வெல்ல முடியாது. வெண்டாலும் வெற்றி எங்களுக்கில்லை பாக்கிறிங்களா. சிங்களப் பாட்டாளிகளையும் சேர்த்து உலகப் பாட்டாளிகளையும் கூட்டுச் சேர்த்துப் போராடவேணும். சிங்கள அரசாங்கம் முதலாளித்துவ அரசுகளின்ர ' புறோக்கர் ' தான். புறோக்கரோட போராடி உரிமையை எப்படிப் பெறுகிறது. சும்மா அரசியல் வெத்து வேலை இது" என்னும் சாமிப்பிள்ளையின் வாதத்தை நாம் முற்றாக நிராகரிக்க முடியுமா? இருப்பினும் தமிழ்-சிங்கள மக்களின் ஐக்கியத்தை நாவல் வேறொரு தளத்தில் கட்டமைக்கிறது. கம்யூனிஸ்ட்கள் கட்டமுடியாத தமிழ்-சிங்கள பாட்டாளி வர்க்க ஒற்றுமையை அதிகாரம் குறுக்கிடாத பொழுதில் சாதாரண தமிழ்-சிங்கள வெகுஜனங்கள் அதை சாதித்துக் காட்டுவார்கள் என்பதை குணா அற்புதமாக நாவலின் வழி கட்டமைக்கிறார்.
அவரின் இந்த கதைக் கட்டமைப்பையும், ஒன்றுக்குள் ஒன்றான அதன் தொடர்பாடல்களையும் வாசகன் நிச்சயம் ரசிக்கவே செய்வான். ஒடுக்கப்படுபவனின் வலியை ஒடுக்கியவன் அறிந்துணர அங்கு அறம் செழிக்கும். புது உலகம் பிறக்கும். இக்கருத்தை தமிழ் மக்களின் மீதான சிங்கள மக்களின் இரங்கற்பா என்று எடுத்துக் கொள்ளவேண்டியதில்லை. மண்ணை மீட்பதற்கான தங்களது போராட்டம் படுதோல்வியில் உள்ளாக்கப்பட்டதை நினைத்து குமுறும் ஒரு இனத்திற்கு அந்த ஒடுக்கப்பட்டவனுக்கு அதை ஒடுக்கியவன் அறம் வழி என்ன செய்துவிடமுடியும் என்ற சிந்தனைப் போக்கின் தொடக்கமே இந்நாவலின் நல்விளைவாக இருக்கமுடியும்.
சிங்கள மக்களும், தமிழ் மக்களும், சிங்களப்பாட்டாளியும், தமிழ்ப்பாட்டாளியும், சிங்கள வெகுஜனமும், தமிழ் வெகுஜனமும் என்றுமே போரை விரும்பியதில்லை. அவர்களுக்குத் தெரியும் போர் தங்களுக்கு எதிரானது என்று. தங்களை மென்று சக்கையாகத் துப்புமென்று. நட்பையும், இயல்பான தொடர்பாடல்களையுமே இவர்கள் விரும்புகின்றனர். போருக்கும் முன்னரும் கூட அப்படித்தான் இருந்தனர். அத்தகைய உறவாடல்கள் இருந்திருக்கின்றன என்பதை நாவலும் உறுதி செய்கிறது. உயர்த்திப் பிடிக்கிறது. ஒரு காலனிய தேசத்தில் இன ரீதியான, மொழி ரீதியான வெறுப்புகளைத் தூண்டிவிட்டு அதில் லாபம் தேட எப்போதும் காலனிய அரசுகள் முயன்றே வந்திருக்கின்றன. இலங்கையும் விதிவிலக்கல்ல. அவ்வெறுப்பின் தொடர்ச்சியை ஆரியரத்னா, விஜயதாச பாத்திரங்களின் மூலம் நாம் அடையாளம் கண்டுகொள்ள முடியும். அதுமட்டுமல்ல தமிழ் மக்களின் மீதான வெறுப்பு சிங்கள வெகுஜன மக்களிடமும், சிங்கள அதிகார வர்க்கத்திலும் எப்படி நிலைநிறுத்தப்படுகிறது என்பதையும் நாவல் உள்ளடக்கியுள்ளது.
தமிழ் மக்களின் நியாயம் பக்கம் நிற்கும் ரத்னநாயக்க போன்ற சிங்கள மக்கள் அருகி வருவதையும் நாவலின் வழி நாம் அவதானிக்கமுடியும். தமிழ் மக்களின் மீதான சிங்கள இன வெறியைத் தூண்டிவிட, தங்களின் அறமற்ற செயல்களை மேலும் மேலும் கொண்டு செலுத்த சிங்கள அரசியல்வாதிகளும்(யு.என்.பி மற்றும் சுதந்திரா கட்சி), அதிகார வர்க்கமும் செய்யும் விருந்துபசாரங்களும், அதில் நடைபெறும் வெட்கங்கெட்ட கூத்துகளும்கூட நாவலில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. யாழ்ப்பாணத்தை கைப்பற்றிவிட்ட மகிழ்ச்சி வெறிக் கொண்டாட்டத்தில் நடக்கும் விருந்துபச்சாரங்களில், காமக் களியாட்டங்களில் யாழ்ப்பாணப் பெண்களை மட்டுமே பரிமாறவேண்டும் என்ற சிங்கள இனவெறி வேட்கை அவர்களின் புத்தி பேதலித்த நிலையல்லாமல் வேறென்ன?
1960களின் இறுதியில் ஈழ மண்ணில் நடத்தப்பட்ட கோவில் நுழைவுப் போராட்டங்களும், தேனீர்க்கடைப் போராட்டங்களும் கூட நாவலில் குறிப்பிடப்பட்டிருப்பதை வாசிக்கும்போது மாவிட்டபுரம் கந்தசாமி கோவில், மட்டுவில் பண்டித்தலைச்சியம்மன், திருநெல்வேலி சிவன் கோவில் போன்ற கோவில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதிக்க சாதி மக்களுக்கு சமமாக நின்று சாமி கும்பிடும் உரிமை கோரி நடத்திய போராட்டங்களும், சங்கானைத் தேனீர்க்கடைப் போராட்டமும், நெல்லியடி, சாவகச்சேரி, அச்சுவேலி ஆகிய இடங்களில் நடைபெற்ற தேனீர்க்கடைப் போராட்டங்களும் நினைவுக்கு வந்து செல்கின்றன. ஈழத்தின் பண்பாட்டு விழுமியங்களைப் பேசப்புகும் ஒரு நூல் கண்டிப்பாக அங்கு நிலவிய சாதி, தீண்டாமை குறித்தும் பேசவேண்டும். அதை குணா செய்திருக்கிறார்.
நாவலின் சில அத்தியாயங்கள் காதல் ரசத்தில் தோய்த்து எழுதப்பட்டிருக்கின்றன. யுத்த மழைக்கிடையில் காதல் குடையில் சிக்கிக் கொள்ளும் டாக்டர் மதிக்குமார், டாக்டர் கனிமொழி இவர்களின் காதலும், தவிப்பும் அற்புதம். போர்க்களத்தில் மட்டுமல்ல, காதல் களத்திலும் பல புதுப்புது உத்திகளை குணாவால் கையாளமுடிகிறது என்பதை எண்ணும்போது ஆச்சர்யமே.
ஈழத்தின் தொன்மத்தை பாட்டன் நாகமணி மூலம் அவிழ்க்கிறார் குணா. அவரிடம் சொல்ல ஏராளமான தொன்மக்கதைகள் இருக்கின்றன. ஏராளமான கனவுகளும் இருக்கின்றன. தனது பேரன் கதிருக்கு கதை சொல்வதன் மூலம் அத்தொன்மத்தை அடுத்த தலைமுறைக்கும் நகர்த்திச் செல்கிறார். போரின் கடும் வலியையும் மீறி அவர் இதைச் செய்வதை நாம் வாசிக்கும்போது நம் நெஞ்சம் கனக்கத்தான் செய்கிறது. பாட்டன் நாகமணிக்கும், பேரன் கதிருக்கும் இடையே பொங்கும் அன்பும், நட்பும் தலைமுறைகள் இடைவெளியை இல்லாமலாக்குகின்றன. நாகமணி பேரனிடம் நம்பிக்கையை விதைக்கும் சொற்கள்தான் வரும் தலைமுறையை போரின் இடிபாடுகளிலிருந்து அவர்களை மீள வைக்கும் அருமருந்தாக இருக்கும். "பேரா! குலைஞ்சதை அடுக்கிறவன்தான் குடும்பத்துக்குக் கொடிமரம் போல இருப்பான். குலைக்கிறவன் எப்பவும் குலைச்சுக் கொண்டுதான் இருப்பான். அடுக்கிற தைரியம் இருக்கும் வரைதான் வாழ்க்கை".
நாகமணியின் மகள் தேவி அன்ரனுடன் செய்துகொள்ளும் கட்டாய காதல் திருமணமும், நாகமணியிடம் அது ஏற்படுத்தும் பாதிப்பும், அப்பாதிப்பிலிருந்து மீளமுடியாமல் தவிக்கும் நாகமணியின் மனநிலையும் அற்புதமாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. போரின் இடப்பெயர்வும், இடப்பெயர்வுக்கு இடையில் நடக்கும் தேவியின் பிரசவக் காட்சிகளும் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. போரின் கொடும் வலியை நம்மாலும் உணரமுடிகிறது.
காளிக் கோவில் ஆலமரத்துப் பிள்ளையார் பால் குடித்த கதையும், பின்னர் ராணுவத்தின் ஆர்டில்லெரி தாக்குதலில் ஆலமரம் துண்டாகி பிள்ளையார் கோவில் இடிந்து போனதும், பால் குடித்த பிள்ளையாரின் கதி என்ன என்றே தெரியவில்லை என்ற பகடியும் அற்புதம். மக்களின் அறியாமையையும், வாழ்க்கையின் நிலையாமையையும் பால் குடித்த பிள்ளையாரின் மூலம் அருமையாகக் கடந்து சென்றிருக்கிறார் குணா.
போரில் தர்மம் எது? அறம் எது? என்னும் செண்பகாவின் சிந்தனை அபாரம். கை விடப்பட்ட யாழ் நகர் குறித்த வர்ணனைகள் நம் நெஞ்சைப் பிழியும். "யாழ் நகரோ இருளில் மூழ்கியது. அதன் மௌனமோ போரின் குண்டு மழையால் பிளக்கப்படுகிறது. தன்னைப் பிரியும் மக்களை நினைத்து மௌனத்தில் அழக்கூட மண்ணிற்கு வாய்க்கவில்லை. போரின் அதிர்வு மண்ணின் நெஞ்சைப் பிளக்கிறது. அதன் காதுகளைச் செவிடாக்குகிறது. நடப்பதெதையும் காணமுடியாமல் கண் மூடிக் கிடக்கிறது அந்த மண் ".
யாழ் மண்ணிலிருந்து போரினால் இடம்பெயரும் மக்கள் வன்னிக்குச் செல்கின்றனர். வன்னி மண்தான் யாழ் மக்களின் தொல்குடிகள் வசித்தமண். முன்பொருமுறை வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து யாழ்ப்பாணம் சென்றவர்கள் இப்போது மீளவும் தங்கள் சொந்தமண்ணுக்கு திரும்புகிறார்கள் என்று மக்கள் இடம்பெயரும் சோகத்திலும் நம்பிக்கையையும், ஆறுதலையும் விதைக்கிறார் நாகமணி. தொன்மையான வன்னி நிலம், அதன் பண்பாடு குறித்த நாகமணியின் கனவும், தொல்பழந்தமிழர்கள் குறித்து நாவலில் வரும் சித்திரமும் அற்புதம்.
தமிழர்களுக்கெதிராகக் கட்டமைக்கப்படும் வெறுப்பு, தமிழர்கள் மீது திணிக்கப்படும் போர் இவற்றை நியாயப்படுத்தும் சிங்கள இன அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கம் இவர்களுக்கு மத்தியில் ரத்னாயக்க, மலிங்க போன்ற பழுத்த சிங்கள மனிதாபிமானிகள் இன்னமும் தமிழர்கள் மீது பற்றும், அன்பும் வைத்திருக்கிறார்கள். பாழாய்ப்போன பிளவு அரசியலைத் தடுக்க அவர்களால் ஒன்றுமே செய்யமுடிவதில்லை. அவர்களின் வீடுகளிலேயே தமிழர் எதிர்ப்பு உணர்வை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். தனது பேரன் சுனிலை தமிழர்களுக்கெதிரான போரில் சிங்கள ராணுவத்தில் சேர்ப்பது என்னும் மகன் விஜயதாசவின் முடிவை அவர் வன்மையாகக் கண்டனம் செய்வதோடு, ராணுவமும், சிங்கள அரசியல்வாதிகளும் தமிழர்கள் மீது பரப்பும் பொய்ப்பிரச்சாரத்தை அம்பலப்படுத்துகிறார்.
படையில் சேரப்போகும் தன் மருமகன் சுனிலுக்கு மலிங்க எழுப்பும் கேள்விகளை ஒவ்வொரு சிங்களப் படைவீரனும் தனக்குத் தானே கேட்டுக் கொள்ளும்போது ஈழத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் பொங்கும். சுனிலை நோக்கி மலிங்க கேட்கிறார்: "நீ எதுக்குப் படைக்குப் போகோணும்?நிலத்தை மீட்கவா? அது உன்ர நிலமா? சீயா (ரத்னநாயக்க) சொன்னார்தானே, எங்களுக்கு இங்க நிலம் இருந்ததில்லை. இவர்கள் உன்னை நிலம் மீட்க வா என்று சொல்றாங்கள். திருப்பிக் கேள். இந்த அரசியல்வாதிகளிட்டயும் 'பிட்சு'களிட்டயும் முதலில் இங்க நில்லாமல் இருக்கிற குடும்பங்களுக்குத் தேவைக்கு அதிகமாக நிலம் வைச்சிருக்கிரவனிட்ட இருந்து அதை மீட்டுக் குடுக்கச் சொல்லு. இங்க உன்ர ஊரில அரசாங்கத்தின்ர அதிகாரத்தில இருக்கிற நிலத்தைக் குடுக்கச் சொல்லு. செய்வாங்களா? பிறகு எந்த நிலத்தை யாருக்காக மீட்கப் போகிறாய்?"
"நீ சிங்களவன்தானே! உன்ர சொந்த ஊரிலயே உன்ர தலைமுறை வேர்விட்ட மன்ணிலேயே இவங்கள் உனக்கு நிலம் தரேல்ல. உன்னை சிங்களவன்ர மண்ணை மீட்க வேணும் போருக்கு வா என்றாங்கள். நீ தமிழரோட - அவங்கள் வேர்விட்ட மண்ணைப் பறிக்கப்போறாய். உன்ர தலைமுறை இருந்த மண்ணைத்தானே நீ மீட்கவேணும்? அதுதானே நியாயம்? நீ யாரோட போர் செய்யவேணும்? இந்த அரசாங்கத்தோடதான் நீ போர் செய்யவேணும். அதுதான் உன்ர எதிரி. உன்னை எங்க கூட்டிப் போறாங்கள்?"
"யதார்த்தம் புரியாமல் யுத்தத்தைச் செய்து என்ன? அவள் சந்திரிக்கா ஏதோ தாரன் என்றாள். உலகம் அவளின்ட பக்கம். அதை ஒம் எண்டு போகவேண்டியதுதானே புலிகள்? " என்ற மோகனின் கேள்விக்கு நாகமணி சொல்வார்: "யதார்த்தத்தை நோக்கி இலட்சியத்தைத் திருப்பினால் அவன் வியாபாரி. இலட்சியத்தை நோக்கி யதார்த்தத்தைத் திருப்பினால் அவன் போராளி".
இலட்சியத்தை யதார்த்தமாக்கிடும் முயற்சியில் குணா கவியழகனின் இந்நாவலை ஒரு முன்னோக்கியப் பாய்ச்சலாக நாம் சுட்டலாம்.