தமிழ் சமூகம் குறித்த அறிவியல் ஆய்வுகள் தொடர்ந்து செய்யப்பட வேண்டிய ஒன்று. ஏனெனில், தமிழ் சமூகம் சந்திக்கிற பல்வேறு பிரச்சனைகள், சிக்கல்களின் ஆணிவேர்களை அடையாளம் காணவும்:12 தமிழ் சமூகத்தின் வளமான மேம்பட்ட கூறுகளை முன்னெடுத்துச் செல்லவும் இத்தகைய ஆய்வுகள் அவசியம். ஆயினும், இத்துறையில் நாம் இன்னும் போதுமான அளவிற்கு கவனம் செலுத்தவில்லை என்பதே உண்மை. கைலாசபதி, சிவதம்பி, நா. வானமா மலை ஆகியோர் சமூக அறிவியல் கண்ணோட்டத்தில் தமிழ் இலக்கியங்களையும், தமிழ் சமூகத்தையும் ஆய்வு செய்கிற முயற்சியை தொடங்கி வைத்தனர். ஊக்குவித்தனர். அதேசமயம் எல்லா கூறுகளோடும் அந்த ஆய்வு அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதில் போதுமான அக்கறை காட்டப்படாமல் இருக்கிறது.
இத்தகைய சூழலில் ஆங்காங்கு நடைபெறுகிற சின்ன சின்ன முயற்சிகள் நம் ஆழ்ந்த கவனிப்புக்கும் பரிசீலனைக்கும் உரியது. அந்த வகையில், தமிழ் சமூகவியல் ஆய்வுகள் என்ற தலைப்பில் முனைவர் சி. இளங்கோ எழுதியுள்ள புத்தகம் முக்கியத்துவம் பெறுகிறது. இதில் மூன்று கட்டுரைகள் தொல்லியல் தொடர்பானவை. மூன்று கட்டுரைகள் சமூகவியல் தொடர்பானவை, ஒரு கட்டுரை கலைச் சொற்கள் சம்பந்தமானவை, இரண்டு கட்டுரைகள் வரலாறு தொடர்புடையவை.
முதல் கட்டுரையான, “நடுகற்வழி தமிழ்ச் சமூக வரலாறு” இக்கட்டுரை தீக்கதிர் உலகத் தமிழ் மாநாட்டு மலரில் இடம் பெற்றக் கட்டுரை. “செம்மொழி மாநாட்டையொட்டி வெளிவந்த சிறப்பிதழ்கள் – மலர்கள் – எதிர்பார்ப்புகள்’ என்ற கட்டுரையும் ‘தமிழில் சாதி நூல்கள்’ என்ற கட்டுரையும் மனம் திறந்த உரையாடலுக்கான மேடையாக வளர்ந்து வரும் ‘தேடல் வெளி சந்திப்புகளில் வாசிக்கப்பட்டக் கட்டுரை. ‘பழமொழிகள் விடுதலைகள் தொகுப்பு வரலாறு’ இக்கட்டுரை புத்தகம் பேசுது சிறப்பு மலரில் இடம் பெற்றது. இது தவிர சென்னைப் பல்கலைக் கழகத்தில் வாசிக்கப்பட்ட மூன்று கட்டுரைகளும் தமிழ்நாடு வரலாற்றுப் பேரவையில் வாசிக்கப்பட்ட ஒரு கட்டுரையும் கல் லூரியில் வாசிக்கப்பட்ட ஒரு கட்டுரையும் ஆக 9 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
தொல்லியலில் உள்ள மூன்று கட்டுரைகளும் நடுகற்கள் பற்றி அதிகம் பேசுகின்றன. “வரலாற்றை அரசர்களின் வரலாறாக கட்டமைத் துக்கொண்டு கற்பிக்கப்படும் சூழலில் சாதாரண மக்கள் குறித்த வரலாற்றை எழுதும் ஆதாரங்களாக பொதுமக்களால் வைக்கப்பட்ட நடுகற்களே விளங்குகின்றன’ என்று நூலாசிரியர் உறுதிபடக் கூறுவதும்; அதைப்பற்றி நின்று ஆய்வு செய்வதும் மக்கள் வரலாற்றை சேகரிக்கும் அவரது ஈடுபாட்டைக் காட்டுகிறது. இது குறித்து முன்னுரை வழங்கியிருக்கிற பேராசிரியர் வீ. அரசு, “இவர்கள் (இளங்கோவும் செந்தில்குமாரும்) கண்டறிந்த பல்லவர் சோழர் கால நடுகற்கள் புதிய வரலாற்றுத் தரவுகளாக அமைகின்றன. இத்தொகுதியில் மிகக் குறிப்பிடத்தக்க பதிவாக பல்லவர் சோழர்கால புதிய நடுகற்கள் என்ற கட்டுரையை குறிப்பிட வேண் டும் என்கிறார்.
இந்நூலில் அச்சு ஊடகப் பதிவு குறித்து எழுதப்பட்டக் கட்டுரைகளும் குறிப்பிடத்தக்கன. “தமிழ்ச் சூழலில் வெகுசன ஆக்கங்கள் எவ்விதம் அச்சு ஊடகத்தில் பதிவு செய்யப்படுகின்றன என்ற உரையாடல் சுவையானது’ என வீ.அரசு குறிப்பிட்டிருப்பது மிகச் சரியானது. மார்க்சியம் உருவாக்கிய கலைச்சொற்கள் என்ற கட்டுரை தமிழுக்கு பொதுவுடைமையின் பங்களிப்பை உரக்க எடுத்துக்காட்டுகின்றன. “மார்க்சியம் போன்றே மார்க்சிய சொற்களும் தமிழுக்குப் புதியவை’ என்றும் “காலவோட்டத்தில் மார்க்சியம் போலவே மார்க்சிய சொற் களும் செழுமையடையும்’ என்றும் இளங்கோ நம்பிக்கையோடு இக்கட்டுரையை நிறைவு செய்திருப்பது அடிக்கோடிட்டு காட்டத்தக்கது.
சாதி நூல்கள் என்ற கட்டுரை சாதியத்தை எதிர்த்துப் போராட்டத்தை நடத்துகிறவர்கள் கூர்ந்து கவனிக்கத்தக்க பல கூறுகளை சுட்டிக்காட்டுகிறது. சுயசாதி அடையாளத்தை தேடும் மனோநிலை ஏன் உருவாகிறது? இன்றும் சாதியப் பெருமை பேசும் நூல்கள், விவாதங்கள் உருவாவது ஏன்? என்பதை அலச இக்கட்டுரை ஒரு ஆதாரமாக இருக்கும்.
இந்நூலில் இறுதியாக இடம் பெற்றுள்ள செம்மொழி மாநாட்டு மலர்கள் – இதழ்கள் பற்றியது. இம்மா நாட்டையொட்டி பல்வேறு தின, வார ஏடுகள் பல்வேறு கட்டுரைகளை வெளியிட்டனர். அவற்றையெல்லாம் யாரும் இதுவரைத் தொகுக்கவில்லை. தொகுத்தால் மாநாடு குறித்த பல்வேறு மாறுபட்ட சிந்தனையோட்டங்களை புரிந்துகொள்ள இயலும். இந்த கட்டுரை மாநாட்டையொட்டி வெளிவந்த ஏறத்தாழ அனைத்து மலர்களையும், இதழ்களையும் ஒரு பருந்துப்பார்வையில் ஒப்புநோக்கியிருக்கிறது. இந்தக் கட்டுரையைப் படிக்கும்போதுதான் மாநாட்டையொட்டி இவ்வளவு வெளி வந்திருக்கிறதா என்கிற அயர்ச்சி ஏற்படுகிறது. அதேநேரம் ஒரு தரமான விவாதம் தமிழ்ச் சமூகச் சூழலில் நடைபெறவில்லையோ என்கிற கேள்விக்குறியும் எழுகிறது. ஒன்றுமே நடக்கவில்லை என்று முரட்டு அடியாக ஒதுக்கிவிடக் கூடாது.
“செம்மொழிச் சிறப்பிதழ்களாக எட்டு இதழ்களும், மலர்களாக ஏழு இதழ்களும், செம்மொழி மாநாட்டின் எதிர்பார்ப்பையும் – எதிர்ப்பையும் பதிவு செய்யும் இதழ்களாக பதினொன்று வெளியீடுகளும் இங்கு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. மேலும் பல இதழ்கள் வெளி வந்துள்ள நிலையில் குறிப்பிட்ட இவ்விதழ்களைக் கொண்டு செம் மொழி மாநாட்டுச் செயல்பாடுகளை இக்கட்டுரை மதிப்பீடு செய்கிறது. என சி. இளங்கோவன் ஆரம்பத்திலேயே கட்டுரையின் வரையறையை நன்கு தெளிவுபடுத்தியிருக்கிறார். “தீக்கதிர் நாளேடு வெளியிட்டுள்ள இம்மலர் தமிழின் பெருமையை மட்டும் பேசாமல் சமகாலச் சூழலில் தமிழின் நிலை பற்றியும் தமிழ் மொழியை எதிர்காலத்தில் எப்படி வளர்த்திருக்க வேண்டும்? தமிழை அறிவியல் மொழியாக எவ்வாறு மாற்ற வேண்டும்? போன்ற கருத்துகள் அடங்கியவையாக இருக்கிறது’ என சுட்டும் இளங்கோவன், “விரிவான தளத்தில் மொழி குறித்த ஆய்வுக்கு இம்மலர் துணை செய்கிறது என்கிறார். மாநாட்டின் எதிர்ப்புகளையும் சரியாகப் பதிவு செய்திருக்கிறார்.
தமிழ் சமூகம் குறித்த அறிவியல் பூர்வமான ஆய்வுகளில் இளையத் தலைமுறை தொடர்ந்து ஈடுபட வேண்டும். இளங்கோவின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. அவர் பணி தொடர வாழ்த்துக்கள்.
(நன்றி: தீக்கதிர்)