அமெரிக்க அறிஞர் ப்ரைஸ், ‘நாகரிகம் ஒருபோதும் பிறக்கவில்லை, அது மனிதத்தின் பாரம்பரியம்தான்’ என்றார். மனித இனத்தின் மரபாகவே உருவாகும் நாகரிகம், அரசியல் சீர்குலைவுகளால் அவ்வப்போது மண்மூடிப் போகிறது. ஆனால், அறிவுலகம் விழிப்படைந்து அந்தக் காலகட்டத்தில் மேற்கொள்ளும் பணிகள், அடுத்த பல நூற்றாண்டுகளுக்குப் பயன் தருவதாக அமைந்துவிடும். நபிகளார் முஹம்மது (ஸல்) உலகில் பிறந்த கி.பி. ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நாகரிகம் மண்மூடிப் போய்தான் இருந்தது. இறைத் தூதுத்துவம், இறைச் செய்தியின் அறிவொளியில் நாகரிகம் உயிர்பெற்றது. இறைச் செய்தியின் அருந்தொகுப்பான குர்ஆனின் விரிவுரைகளும் இத்தகைய பின்னணியைக் கொண்டிருந்தன என்பது வியப்பூட்டும் விஷயம்.
கி.பி. பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (1300-1372) கீழைத்தேய நாடுகளில் ஒன்றான சிரியாவின் டமாஸ்கஸில் பிறந்த இப்னு கஸீரின் இயற்பெயர் இஸ்மாயில் பின் உமர் பின் கஸீர். தனித்துவம் மிக்க குர்ஆன் விரிவுரையான ‘தஃப்சீர் இப்னு கஸீர்’ மட்டுமின்றி நபிகளாரின் பொன்மொழிகள், மார்க்கச் சட்டவியல், வரலாறு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரிய பல தொகுப்புகளை வழங்கியவர்.
அரசியலும் சமூகமும் வீழ்ந்துபட்ட இடைவெளியில் எகிப்து, சிரியாவில் பெரும் அறிவெழுச்சி ஏற்பட்டது. கல்வி மையங்கள் தோன்றின. பல்துறை ஆய்வுகள் வெளிவந்தன. இப்னு தைமிய்யா, மஸ்ஸீ, தஹபி, இப்னுல் கய்யிம், இப்னு கஸீர் போன்ற ஆய்வாளர்கள் உருவாகினர். அவர்கள் உருவாக்கிய தொகுப்புகள் அரசியல், சமூக எழுச்சிக்கான வழிகாட்டல்களாகக் காலம் கடந்தும் நிற்கின்றன.
இப்னு கஸீரின் ஆய்வானது அனைத்துத் தரப்பினராலும் ஏற்கத்தக்க தனிப்பாட்டையில் அமைந்தது. அவர் குர்ஆனின் ஒரு வசனத்துக்கு மற்றொரு வசனத்தின் மூலம் விளக்குவதை முதன்மையாகக் கடைப்பிடித்தார். பிறகு, நபிகளாரின் பொன்மொழிகள் மூலமும், அதன் பின் நபித் தோழர்கள், நபித் தோழர்களின் தோழர்கள் கூறிய விளக்கங்களை எடுத்துரைத்தார். மொழியியல், அதன் துறை சார்ந்த பிற விளக்கங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கினார். குறிப்பாக, இஸ்ராயீலி அறிவிப்புகள் எனப்படும் யூத-கிறிஸ்தவக் கதையாடல்களையும் விளக்கமாக இணைத்தார். இது, மற்ற விரிவுரையாளர்களிடமிருந்து அவரைத் தனித்துவமானவர் ஆக்கியது. இறைத் தூதர்களின் வரலாறுகள் குர்ஆனில் இருப்பதற்கு சற்றொப்ப பைபிளிலும் இருப்பதே அதற்குக் காரணம். ‘அவனுடைய தூதர்களில் எவருக்கிடையிலும் நாங்கள் வேற்றுமைப்படுத்திவிட மாட்டோம்.’ (அல்குர்ஆன் - 2:285) என்றே இறை வசனமும் குறிப்பிடுகிறது.
இப்னு கஸீரின் விரிந்த பார்வையை உணர குர்ஆனின் 2:30 வசனத்துக்கான அவரின் விளக்கவுரையைப் பார்க்கலாம். ‘அந்த நேரத்தை நினைவுகூரும். உம் இறைவன், மலக்கு(வானவர்)களை நோக்கி, “நான் ஒரு பிரதிநிதியை (கலீஃபாவை) பூமியில் ஏற்படுத்தப்போகின்றேன்” என்று கூறினான். (அப்போது) அவர்கள், “பூமியில், அதன் ஒழுங்கமைப்பைச் சீர்குலைத்து, மேலும் ரத்தஞ் சிந்தக் கூடியவரையா அதில் (பிரதிநிதியாக) நீ ஏற்படுத்தப் போகின்றாய்? நாங்கள்தான் உன்னைப் புகழ்ந்து துதிபாடி, உன் தூய்மையைப் போற்றிக்கொண்டு இருக்கின்றோமே!” என வினவினார்கள். அதற்கு இறைவன் கூறினான்: நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்.’ (அல்குர்ஆன் - 2:30)
இந்த வசனத்தில் ‘கலீஃபா’ என்ற வார்த்தைக்கு இப்னு கஸீர் விரிவும் ஆழமும் கூடிய விளக்கத்தை வழங்கியுள்ளார். ‘வாழையடி வாழையாக வரும் ஓர் இனம்’ என்று பொருளுரைப்பவர் அதற்கு குர்ஆனின் பல்வேறு பகுதிகளிலிருந்து எடுத்துக்காட்டுகிறார். ‘எங்கு கலீஃபா தேவையோ அங்கு பிரச்சினைகளும் இருக்கும்’ என்று சொல்லும் விரிவுரையாளர் குர்துபியின் விளக்கத்தையும் இணைத்துள்ளார். நபித் தோழர்கள் கலீஃபாக்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாற்றையும், ஆட்சித் தலைமைக்குக் கட்டுப்பட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்துள்ளார். இவ்விதமாக, சமூக வீழ்ச்சிக் காலத்தில் அறிவாற்றலின் எழுச்சிக்கும் மனித குல மறுமலர்ச்சிக்கும் முன்னுதாரணமான இப்னு கஸீர், அதேபோன்ற சூழலில் இந்திய அறிஞர்களின் முன்னோடியாகத் திகழ்ந்தமை ஒப்புநோக்கத் தகுந்த ஒன்று.
ஆங்கிலேயரின் காலனியாதிக்கச் சூழலின் தொடக்கக் காலத்தில் டெல்லியில் அறிவுச்சூழலைப் புனர் நிர்மாணம் செய்து, அன்றைய சூழலுக்கேற்ற குர்ஆனிய வழிகாட்டலை ஷாஹ் வலிய்யுல்லாஹ் உருவாக்கினார். அவரின் ‘ஹுஜ்ஜத்துல்லாஹில் பாலிஃகா’ நூல் உலகப் புகழ்பெற்றது. தமிழ்ச் சூழலில் உலகளாவிய பல்வேறு விரிவுரைகளை முன்மாதிரியாகக் கொண்டு, பலரும் குர்ஆன் விரிவுரைகளை வெளியிட்டுள்ளனர். எனினும், குர்ஆனியச் சிந்தனைக் களஞ்சியமான ‘தஃப்சீர் இப்னு கஸீர்’-ஐத் தமிழில் வெளியிட்டிருப்பதன் மூலம் ‘ரஹ்மத் பதிப்பகம்’ பெரும் சேவையாற்றியுள்ளது.
பத்து தொகுதிகளாக வெளிக்கொணர்ந்திருக்கும் இந்நூலின் வழி பாராட்டத் தகுந்த பணியில் பதிப்பாளர் முஸ்தபா தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ளார். பல தமிழறிஞர்களின் மேற்பார்வையைப் பெற்று, அரபு வார்த்தைகளுக்கான அழகு தமிழ்ச் சொற்களோடு உருவாக்கப்பட்டுள்ள ‘தஃப்சீர் இப்னு கஸீர்’ நூல் மொழிபெயர்ப்புக்காக அண்மையில் தமிழக அரசின் விருதை வென்ற கே.ஜெ.மஸ்தான் அலீ பாகவி உமரி தலைமையிலான குழுவினரின் மொழிபெயர்ப்பு, மேலாய்வு, உழைப்பு நெடுங்காலப் பயனை வழங்குவதாகும்.
- முஸ்தஃபா காசிமி, அரபுக் கவிதை மொழிபெயர்ப்பாளர், சதக்கத்துல்லாஹ் அப்பா இலக்கியப் பரிசு வென்றவர். தொடர்புக்கு: musthafakamal26.mk@gmail.com