சமர் யாஸ்பெக்கைப் பார்க்கப் பார்க்க சிரியர்களுக்கு வருத்தமும் அச்சமும் கோபமும் ஒருசேர சூழ்ந்துகொண்டன. `இந்தப் பெண் சிரியாவுக்கு வரவில்லை என்று யார் அழுதார்கள்? தினம் தினம் குண்டு வந்து விழுந்துகொண்டிருக்கும் இந்தத் தேசத்திலிருந்து தப்பியோடத் தான் எல்லோரும் விரும்புவார்கள். இவள் எதற்காகத் தன்னுடைய பாதுகாப்பான இருப்பிடத்தைவிட்டு வெளியேறி இங்கே மீண்டும் மீண்டும் வந்து நிற்க வேண்டும்?' இதுதான் வருத்தத்துக்குக் காரணம். அச்சத்துக்குக் காரணம், சமர் யாஸ்பெக் சிரியாவுக்குள் நுழைந்திருக்கிறார் என்பது தெரியவந்தால் ஆளும் ஆசாத் அரசு சும்மா விடாது. தேடிப்பிடித்து வேட்டையாடி சிறையில் தள்ளிவிடும். அல்லது காணாமல் ஆக்கிவிடக்கூடும். அல்லது கொன்றுவிடவே செய்யலாம்.
அதேநேரம், அவர்களுக்கு சமரைப் பார்க்க கோபமாகவும் பாவமாகவும்தான் இருக்கிறது. `ஏன் ஓர் ஆண் போல சமர் ஆடையணிந்துகொள்கிறாள்? மத நெறிகளை மீறி எப்படி எல்லா ஆண்களுடனும் இயல்பாக இவளால் பழக முடிகிறது? தவிரவும், இவள் அவ்வப்போது புகைத்துக்கொண்டும் இருக்கிறாள். மொத்தத்தில் எல்லா வகையிலும் இவள் ஒரு தவறான முன்னுதாரணமாகவே இருக்கிறாள். இவளுக்காக நிஜமாகவே பரிதாபப்படவும் வேதனைப்படவும்தான் வேண்டுமா?'
சமர் யாஸ்பெக் தற்சமயம் வசிப்பது பிரான்ஸின் தலைநகரம் பாரிஸில். வசதிக்கும் வாய்ப்புக்கும் குறைவில்லாத அமைதியான, அழகான நகரம். உத்வேகமூட்டும் கஃபேக்கள், மயக்கமூட்டும் இரவுநேர வாழ்க்கை, பளபளப்பான மால்கள் என்று பலருடைய கனவுப் பிரதேசமாக பாரிஸ் இன்றளவும் நீடிக்கிறது. ஆனால், சமருக்கு பாரிஸ் அல்ல, சிரியாவே கனவுப் பிரதேசம். விழித்திருக்கும் நேரங்களில் மட்டுமல்ல; உறங்கும் பொழுதுகளிலும் அவர் கனவுகளை சிரியாவே ஆக்கிரமித்துக்கொள்கிறது. `ஆம், என் சிரியா இன்று சிதைந்துவிட்டது உண்மைதான். நான் நடந்துசென்ற வீதிகளில் இடிபாடுகளே இன்று எஞ்சியிருக்கின்றன. என் மக்களின் வீடுகளும் நம்பிக்கைகளும் அழிந்துவிட்டதை நான் அறிவேன். சிரியா உலகின் ஆபத்தான ஓரிடமாக மாறியிருப்பது எனக்கும் தெரியும். ஆனால், என்ன செய்வது? அது என் சிரியா அல்லவா?
‘ஜப்லே நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் நேற்று நடைபெற்ற தற்கொலை தாக்குதலில் 43 பேர் பலியானார்கள்’ என்னும் செய்தியை பாரிஸில் இருந்தபடி வாசிக்கும்போது அன்றைய தினம் அமைதியாகக் கழியும் என்றா நினைக்கிறீர்கள்? பில்லுக்குப் பணம் செலுத்திவிட்டு, அடுத்த காரியத்தைச் சலனமின்றி பார்க்கமுடியும் என்றா நம்புகிறீர்கள்? பாரிஸ் அமைதியான நகரம்தான். ஆனால், இந்த அமைதி என்னை நித்தம் நித்தம் கொன்றுகொண்டிருக்கிறது. இந்த அமைதி எனக்குப் போரையே மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக்கொண்டிருக்கிறது. அந்த 43 பேர் யாராக இருக்கும்? அவர்களில் குழந்தைகளும் இருப்பார்களா? கையும் காலும் உடைந்து சிதறிய மக்களை அள்ளியெடுத்துவந்து இந்த மருத்துவமனைகளில் அனுமதித்தாகச் சற்று முன்புதான் ஒரு செய்தியைப் படித்தேன். இப்போது மருத்துவமனையின்மீதே தாக்குதல் நடைபெற்றிருக்கும் நிலையில் காயமடைந்தவர்களை என்ன செய்வார்கள்? வீதியில் கொண்டுவந்து போட்டுவிட்டு வானத்தைப் பார்த்து அழுதுகொண்டிருப்பார்களா?'
அரபு இலக்கியம் பயின்றுவிட்டு எழுத வந்தவர். ஒரு பத்திரிகையாளராக மாறுவதே அவருடைய கனவாக இருந்தது. இடையில் திரைப்படம், தொலைக்காட்சி ஆகியவற்றுக்கும் எழுதியிருக்கிறார். புனைவு, அபுனைவு இரண்டிலும் ஆர்வம் அதிகம். ஒருபக்கம் அரசு, இன்னொருபக்கம் மதம். வெவ்வேறு அமைப்புகள் என்றாலும் இந்த இரண்டும் ஒன்றுபடும் புள்ளிகளை சமர் தொடக்கத்திலேயே அடையாளம் கண்டுகொண்டுவிட்டார். இரண்டுமே மக்களை அடக்கியாள விரும்புகின்றன. இரண்டுமே கறாரான சட்ட திட்டங்களை வகுத்துவைத்திருக்கின்றன. அவற்றை மீறுபவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப் படுகிறார்கள். மற்றவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை. ஒரு பெண்ணுக்கு இந்த இரண்டிலுமே எண்ணற்ற பிரச்னைகள் இருக்கின்றன என்பதுதான் உண்மை.
சமர் மட்டுமல்ல, சிரியா சந்தித்துவரும் சிக்கல்களுக்கும் இந்த இரண்டுதான் காரணங்களாக இருக்கின்றன.
`ஆளும் பஷார் அல் ஆசாத் மீது சிரியர்கள் நம்பிக்கையிழந்து கிடக்கிறார்கள். அவருடைய மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று விரும்புபவர்களின் எண்ணிக்கை மிகுதியாக இருக்கிறது. தன்னிச்சையான பல எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் அவர்கள் நடத்திப் பார்த்துவிட்டார்கள். பிறகு யோசித்தார்கள்.
சரி, ஒரு வாதத்துக்கு ஆசாத்தை அகற்றிவிட முடியும் என்றே வைத்துக்கொள்வோம். அதோடு சிரியாவின் பிரச்னை தீர்ந்துவிடுமா? தற்கொலை தாக்குதல்கள் முற்றுபெற்றுவிடுமா? உடல்களும் கட்டடங்களும் சரிந்து மண்ணாவது நின்றுவிடுமா? நிச்சயமாக இல்லை. ஆசாத் அகற்றப்பட்டுவிட்டால் அதிகாரம் முழுமுற்றாக ஐஎஸ்ஐஎஸ் கரங்களுக்குச் சென்றுவிடும். அது நடந்துவிட்டால் இப்போதுள்ளதைக் காட்டிலும் நிலைமை மேலும் மோசமடையும். ஜனநாயகம் அல்ல; மதமே ஒரு நாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டும் என்பது ஐஎஸ்ஐஎஸ்ஸின் நம்பிக்கை. என்னைப் பொறுத்தவரை இந்த இரண்டுமே ஆபத்தானவை. இரண்டுமே எதிர்க்கப்படவேண்டியவை. ஆசாத் உள்நாட்டு அபாயம் என்றால் ஐஎஸ்ஐஎஸ் ஓர் அந்நிய அபாயம். இந்த இரு அபாயங்களின் பிடியிலிருந்து தப்பினால்தான் சிரியாவில் அமைதி திரும்பும்' என்கிறார் சமர் யாஸ்பெக்.
சமர் யாஸ்பெக்கை இன்று தீவிரமாக எதிர்த்துக்கொண்டிருப்பவர்கள் இந்த இரு அமைப்பைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். சிரிய சமூகம் பெண்களை எப்படி வைத்திருக்கிறது என்பதை விவரித்து அவர் எழுதிய நாவல் பரவலான அங்கீகாரத்தையும் எதிர்ப்புகளையும் ஒருசேர கொண்டுவந்து சேர்த்தது. சமரின் கூர்மையான விமர்சனங்களால் பாதிக்கப்பட்ட ஆசாத் அரசு அவரை ஒருபோதும் மன்னிக்கப்போவதில்லை. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பும் அவரை ஓர் அரசியல் எதிரியாகவே இந்த நிமிடம் வரை கருதிக்கொண்டிருக்கிறது. அரசு ஆட்களிடம் மாட்டினாலும் சரி, பயங்கரவாதிகளிடம் மாட்டினாலும் சரி, கறாரான மதவாதிகளிடம் மாட்டினாலும் சரி... சமரின் கதை முடிவுக்கு வந்துவிடும். அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டு இருக்க முடியுமா என்று புன்னகையுடன் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக்கொள்கிறார் சமர்.
`நான் என் எழுத்துக்கு நேர்மையாக இருக்கிறேன். என் நாட்டுக்கு நேர்மையாக இருக்கிறேன். அதுபோதும் எனக்கு.'
பாதுகாப்பாக பாரிஸில் இருந்தபடி அவர் இதையெல்லாம் செய்யவில்லை என்பதுதான் முக்கியமானது. துருக்கி வழியாக சிரியாவின் எல்லைகளை இரவோடு இரவாக ரகசியமாகக் கடந்து அவர் உள்ளே நுழைந்தார். மக்களிடமும் மதவாதிகளிடமும் ஆசாத் அரசையும் ஐஎஸ்ஐஎஸ்ஸையும் எதிர்த்துக்கொண்டிருக்கும் சிறிய குழு போராளிகளிடமும் உரையாடினார். அக்கறையுடன் சில நண்பர்கள் உதவினர். `அங்கு மட்டும் போகாதே... உன்னைப் பார்த்தால் கொன்று போட்டுவிடுவார்கள்' என்று சொல்லப்பட்டபோது, `நிச்சயம் போக மாட்டேன் பாட்டி' என்று சமாதானம் செய்துவிட்டு மறுநாளே அந்த இடத்தைத் தேடிக் கண்டடைந்து சென்றார். சாம்பலும் சிதிலங்களும் எங்கும் சிதறிக்கிடந்ததைக் கண்டு மனம் வாடினார். சடலங்களுக்கு அருகில் அழுதுகொண்டு நின்ற குழந்தைகளைக் கண்டு மனம் உடைந்துபோனார். `எங்களுக்குத்தான் வேறு வழியில்லை, நீயேன் இங்கு வந்து துயரப்பட வேண்டும்? பேசாமல் பாரிஸிலேயே இருந்துவிடு சமர்' என்று அவரைக் கட்டிப்பிடித்து அழுதபடி விடை கொடுத்து அனுப்பினார்கள் நண்பர்கள். ஒழிந்துபோ, வரவே வராதே என்று உரிமையுடன் கோபித்துக்கொண்டவர்களும் இருக்கத்தான் செய்தனர்.
சிறிது காலம் பாரிஸில் அமைதியாக இருப்பார். எழுதுவார். பிறகு கடைக்குப் போய் பொம்மைகள், உடைகள் என்று வாங்கிக்கொள்வார். முதுகுப்பையைத் தூக்கிக் கொண்டு சிரியாவுக்குக் கிளம்பிவிடுவார். `உங்களுக்கு உயிர் பயம் இல்லையா?' என்று ஒருமுறை பத்திரிகையாளர் ஒருவர் கேட்டபோது சமர் தலையசைத்தார். `நிச்சயமாக இல்லை. சிரியா நான் வளர்ந்த நாடு. கொடுந்துயரத்தில் இருக்கும் என் நாட்டு மக்களின் குரலைப் பதிவுசெய்யவேண்டியது என் கடமை என்று நம்புகிறேன். அதற்காக எந்த ஆபத்தையும் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்.'
சமர் யாஸ்பெக்கின் சிரியப் பயணங்கள் ‘தி கிராஸிங்’ என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளிவந்திருக்கிறது. வலியும் ரணமும் மிக்க சிரியர்களின் சமகால வாழ்வையும் போராட்டத்தையும் பதிவுசெய்யும் ஒரு முக்கியமான நேரடி ஆவணமாக இதைக் கொள்ளமுடியும். இந்தப் புத்தகத்தை வாசிக்கும்போது விசித்திரமான உணர்வுகள் மேலெழுந்துவருவதை ஒருவர் உணரலாம். தன் தாய்நாட்டையும் மக்களையும் உயிருக்கு உயிராக நேசிக்கும் சமர் ஒவ்வொரு முறையும் திருட்டுத்தனமாகத்தான் சிரியாவுக்குள் நுழைந்திருக்கிறார். சட்ட விதிமுறைகளை உடைத்துத்தான் மக்களிடம் உரையாடியிருக்கிறார். அவர்கள் குரலைப் பதிவு செய்திருக்கிறார். இவையனைத்துமே தண்டனைக்குரிய குற்றங்கள். சந்தேமில்லாமல் அரசின் பார்வையில் சமர் ஒரு முதன்மையான தேச விரோதி. `பரவாயில்லை, அப்படியே இருந்துவிட்டுப் போகிறேன்' என்கிறார் சமர். தன் நாட்டை நேசித்ததற்காக அவர் கொடுக்க நேர்ந்த அதிகபட்ச விலை இது. சமரின் தீரமிக்க பணிகளைப் பாராட்டி அவருடைய அரசு அளித்திருக்கும் மிக உயர்ந்த அங்கீகாரம் என்றும் இதை எடுத்துக்கொள்ளலாம்.
(நன்றி: விகடன்)