சுரேஷ் பிரதீப் தொண்ணூறுகளில் பிறந்தவர். எழுபதுகளிலும், எண்பதுகளின் முற்பாதியிலும் பிறந்து எழுத வந்தவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் சற்றே குறைந்து, எழுத்துலகில் சிறு சுணக்கம் இருந்ததாக தோன்றியது.
எண்பதுகளின் பிற்பாதியிலும், தொண்ணூறுகளிலும் பிறந்து எழுதுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. உலகமயமாக்கல், இணையம் எளிதாக உலகின் கலைச் செல்வங்களை கொண்டு சேர்க்கிறது. ரசனையை இளமையிலேயே மேம்படுத்திக்கொள்ள வாய்ப்பளிக்கிறது. எந்த முக்கியமான உலக இலக்கிய ஆக்கத்தையும் நமக்கு வேண்டிய வடிவில் செலவின்றி தரவிறக்கம் செய்துவிட முடியும். சுரேஷ் பிரதீப் வெண்முரசு பற்றி கூர்மையாக எழுதும் ஓர் வாசகராகத்தான் அறிமுகம். பின்னர் சு.வேணுகோபால் படைப்புலகம் பற்றி விரிவான கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார். அவருடைய சில சிறுகதைகளை வலைதளத்திலும் பதாகையிலும் வாசித்திருக்கிறேன். அவை என்னைப் பெரிதாக ஈர்க்கவில்லை. இந்நிலையில் அவருடைய நாவல் பற்றிய அறிவிப்பு வியப்பை ஏற்படுத்தியது. அதற்கு ஜெயமோகன் எழுதிய விரிவான மதிப்புரை மேலும் ஆர்வத்தைத் தூண்டியது. நாளுக்கு இரண்டு மணிநேரம் என இரண்டே நாட்களில் வாசித்து முடித்தேன். கவனம் சிதையாமல் தொடர்ச்சியாக வாசிக்க முடிந்தது. சுரேஷ் பிரதீப்பிற்கு சொல்வதற்கு ஒரு வாழ்க்கை உள்ளது. அதை சுவாரசியமாக சொல்வதற்குரிய மொழியும் அமைந்திருக்கிறது. நாவல் வடிவம் அவருடைய எழுத்து பாணிக்கு உகந்ததாகவும் திகழ்கிறது.
‘ஒளிர் நிழல்’ புனைவுக்குள் புனைவு என்ற வகைமையை தனதாக்கிக் கொள்கிறது. சுரேஷ் பிரதீப் எனும் இளம் எழுத்தாளனின் மரணத்திற்கு பின் பதிப்பிக்கப்படும் அவனுடைய நாவலும், சுரேஷ் பிரதீப்பின் மரணத்திற்கு பின்பான நிகழ்வுகளுமாக முடையப்பட்டிருக்கிறது ‘ஒளிர் நிழல்’. சுரேஷ் பிரதீப், ரகு, சக்தி, குணா என பல்வேறு பாத்திரங்கள் கதைசொல்லிகளாக திகழ்கின்றனர். உரை, கவிதை, கட்டுரை என வெவ்வேறு வடிவங்களை கையாள்கிறது. தற்கால இளைஞனின் வாழ்வில் சூழும் வெறுமை மற்றும் அகத் தத்தளிப்புகள், ஒரு குடும்பத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும், ஒரு காலகட்டத்தின் அரசியல் – சமூக மாற்றத்தின் கதை என மூன்று தளங்களில் வாசிப்பை அளிக்கிறது.
‘ஒளிர் நிழலில்’ குறிப்பிட்டு கவனப்படுத்த வேண்டிய அம்சம் என்பது நாவலில் வரும் பெண் பாத்திரங்களின் வலுவான சித்தரிப்பு. அருணா, மீனா, கோமதி, வசுமதி, அம்சவல்லி என எல்லா பாத்திரங்களும் வெவ்வேறு அடர்த்திகளில் மிளிர்கின்றன. ஆனால் நாவலின் ஆண் பாத்திரங்களில் இந்த வேறுபாடு தெளியவில்லை. ஆண்கள் அனைவருமே கூரிய தன்னுணர்வு கொண்டவர்களாக, சலிப்புற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்குள் உள்ள வர்ண அடர்வுகள் நுண்மையாக மாறுகின்றன. சுரேஷ் – குணா, ரகு – சக்தி, செல்வராஜ் குரல்கள் ஒன்று போலவே ஒலிக்கின்றன. மூத்த தலைமுறையினர் அனைவரும் ஒன்று போலவே தென்படுகின்றனர். மனதில் தங்க மறுக்கிறார்கள். சந்திரசேகர் போன்ற பாத்திரங்கள் இந்த வார்ப்பிலிருந்து விதிவிலக்காக இருக்கின்றன.
இதில் கவனிக்கத்தக்க பாத்திர வார்ப்பு என்பது சக்தியும் குணாவும் என கூறலாம். அவர்களிருவரும் ஒரே ஆளுமையின் இரண்டு துருவ இயல்புகளின் பிரதிநிதிகள். சக்தி வெளிப்பார்வையில் வெளிமுக (extrovert) ஆளுமை போல வடிவமைக்கபட்டுள்ளான். ஆனால் உள்ளே அவனுக்கு எதுவுமே ஒரு பொருட்டல்ல. எக்கணத்திலும் கனிவு கொள்ளாதவனாக இருக்கிறான். நேரெதிராக குணா உள்முக ஆளுமையாக வெளிப்படுகிறான். எவரிடமும் ஒட்டாது, எல்லாரையும் வெறுப்பது போல் தெரிந்தாலும் அன்பிற்காக ஏங்குகிறான். நாவலின் மைய விசை என்பது இவ்விரு இயல்புகள் கொள்ளும் ஊடாட்டமே. வெண்முரசு கையாளும் ஆடி பிம்பம் எனும் வடிவத்தை இப்பாத்திரங்களுக்கு பொருத்திப் பார்க்கலாம். அவர்கள் ஒருவரையொருவர் நிறைவு செய்கிறார்கள்.
நாவலுக்குள் அடையாளபடுத்தப்படுவது போலவே சுரேஷ் பிரதீப்பிடம் தாஸ்தாவெஸ்கியின் தாக்கம் உள்ளது. கவிஞர் சபரிநாதன் ‘நிலவறைக் குறிப்புகள்’ பற்றி எழுதிய கட்டுரையில் தாஸ்தாவெஸ்கியின் கதைமாந்தரின் இரு முகங்களைப் பற்றி சுட்டிக் காட்டுகிறார். சமகால விழுமியங்களின் மீது நம்பிக்கையற்ற எதிர்நாயகன் என அவனை வரையறை செய்கிறார். சமூகத்தின் பொருட்டின்மைக்கு எதிராக உருவானவன் என்கிறார். “பொருட்டின்மை என்பது முகமூடிதான். உள்ளே இருப்பதோ வெறுப்பு. செல்ல இடமில்லாதபோது அவ்வெறுப்பு தன் மீதே பாய்ந்துகொள்கிறது. எதுவும் இல்லாத இடத்தில் வெறுப்பு குடியேறும் என்பது தாஸ்தாயெவ்ஸ்கியின் கண்டுபிடிப்புகளில் ஒன்று,” என எழுதுகிறார். ஒளிர் நிழலில் அப்பட்டமாக இது வெளிப்படுகிறது. “சக மனிதன் மீதெழும் வெறுப்பே இந்த நாவலுக்கான அடிப்படை எனத் தோன்றுகிறது” என்று நாவலின் துவக்கத்தில் வரும் ஒரு வரி மேற்சொன்ன உணர்வுக்கு நெருக்கமாக திகழ்கிறது.
சபரி அதே கட்டுரையில் தாஸ்தாவெஸ்கியின் கதைமாந்தர்களைப் பற்றிய அவதானிப்பை வைக்கிறார்- “நிலவறை மனிதன் தன்னைப் பீடித்துள்ள நோயாகக் கருதுவது அதீத பிரக்ஞையை. ஓரிடத்தில் பிரக்ஞையே பிணிதான் என்கிறான். இந்த அதீத பிரக்ஞை காரணமாக அவனுக்கு எதார்த்தத்தில் உள்ள முரண்களும் விரிசல்களும் சட்டென கண்ணில் படுகின்றன. அதை விட மோசமாக, தன் உள்ளே மொய்க்கும் எதிர்வுகள் மற்றும் பிறழ்வுகளில் இருந்து பார்வையை அகற்ற முடிவதில்லை.” ஒளிர் நிழலின் துவக்க பக்கங்களில் இருந்தே இத்தகைய போக்கு நிலைபெறுகிறது. உணர்வுகளை வெளிப்படுத்த விரும்புகிறான், ஆனால் அதன் நாடகீயத்தன்மை, பொருளின்மை காரணமாக தொடுகையைக்கூட தவிர்க்கிறான். யாரேனும் தன்னைத் தீண்ட வேண்டும் என தவிக்கிறான், ஆனால் தானே அதைச் செய்யக் கூடாது எனும் தன்னுணர்வு தடுக்கிறது. தனது மேன்மையும் நல்லியல்புகளும் புரியாத மனிதர்களுடன் வாழ்வதை எண்ணி சலிக்கிறான், ஆத்திரம் கொள்கிறான். மறு எல்லைக்கு சென்று கழிவிரக்கம் கொள்கிறான். சக மனிதர்கள் மீதான வெறுப்பு என பிரகடனபடுத்திக் கொண்டாலும்கூட அது அன்பை நோக்கியே நீள்கிறது. நிழல்கள் இருளாமல் ஒளிர்கின்றன. சுரேஷ் பிரதீப் எனும் எழுத்தாளன் மாய்ந்து அவனுடைய நிழலாக அவன் வார்த்த பாத்திரம் குணா என்றென்றைக்குமாக புனைவுக்குள் வாழ்கிறான், ஆகவே ஒளிர்கிறான். தன்னை அழித்து கலையை வளர்க்கும் சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் செல்வாக்குடன் திகழ்ந்த இருத்தலியல்வாதத்தின் நீட்சியாகவே ‘ஒளிர் நிழலை” காண முடியும். இத்தனை அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பிறகு, மனிதனை ஒவ்வொரு நொடியிலும் வியப்பிலேயே அமிழ்த்தி வைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகிய பின்னரும் பொருளின்மை நம் முகத்தில் அறைகின்றது, இக்கேள்விகள் மேலும் கூர்மை கொண்டு எழுகின்றன என்பதே புதிய தலைமுறை தமிழ் எழுத்தாளர்களை வாசிக்கும்போது புலப்படும் மற்றுமொரு பொதுத்தன்மை.
தொண்ணூறுகளில் பிறந்த மற்றொரு எழுத்தாளரான விஷால் ராஜாவின் படைப்புலகுடன் சுரேஷ் பிரதீப்பின் உலகம் கொள்ளும் ஒப்புமைகள் மற்றும் வேறுபாடுகளை கவனிப்பது முக்கியம். ‘எனும் போது உனக்கு நன்றி’ எனும் விஷாலின் தொகுப்பை முன்வைத்து, “விஷாலின் கதைகளில் கதைமாந்தர்கள் ‘ஏன் இப்படி இருக்கிறது இவ்வுலகம்?’ எனும் திகைப்பை வெவ்வேறு தருணங்களில் வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் அதற்காக அவர்கள் தங்களைப் பீடத்தில் அமர்த்திக் கொண்டு பிறரை குற்றம் சுமத்துவதில்லை. புகார் என்றுகூட இல்லை, மிகச் சன்னமான முனகல் ஒன்றே எழுகிறது. அவர்கள் ‘குளிர்’ நாயகனை போல் தங்கள் அளவில் காபந்து செய்து கொள்ள முடியுமா என்று மட்டுமே நோக்குகிறார்கள்.” என்றெழுதி இருந்தேன். விஷாலிடமும் சுரேஷிடமும் வெளிப்படுவது இருத்தலியல் சிக்கலே. ஆனால் சுரேஷிடம் வெளிப்படும் கோபம் விஷால் கதைகளில் வெளிப்படுவதில்லை. இதற்கு முக்கியமான காரணம் என்பது சுரேஷ் பிரதீப்பின் பாத்திரங்கள் வெளிப்படுத்தும் ஆளுமைப் பிளவாக இருக்கக்கூடும். தற்கால இலக்கியத்தின் இரு போக்குகளாக இவ்விரண்டையும் அடையாளப்படுத்த முடியும்.
நாவலில் சில காட்சிப் படிமங்கள் வெகுவாக ஈர்த்தன. பொட்டலில் முளைத்தெழுந்த வளைந்த பனைகளை “பல நூறு பாம்பு மாத்திரைகள் ஒன்றாக வைத்து கொளுத்தியது போல தடித்து கறுத்த பனை மரங்கள்” என விவரிக்கிறார். மற்றொரு தருணத்தில் குணாவின் இயல்பை விவரிக்கும் போது “கானல் நீராலான பெருங்கடலில் நீந்துகிறான்” என்றெழுதுகிறார். ஆனால், சுந்தரத்தைப் பற்றிய அத்தியாயத்தில் “ஒத்த ஆளா பீமசேனன் மாதிரி குடும்பத்த தாங்குனான்” எனும் பயன்பாடு அவ்விடத்தில் எனக்கு அன்னியமாக துருத்திக்கொண்டு தெரிந்தது.
காத்தவராயன் ஊர்விட்டு கூட்டத்துடன் விலகி தனது சாமியைக் கண்டுகொள்ளும் இடம் சிறப்பாக சித்தரிக்கப்படுகிறது. முழுவதும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் என்றபோதும்கூட கடவுள், திருவிழாக்களுக்கு நாவலுக்குள் இடமில்லை. எப்படியாவது தான் இறந்துவிட வேண்டும் என கடவுளிடம் மன்றாடும் நாவலின் துவக்க பகுதியில் “இங்கிருக்கும் எதுவுமே என்னை ஆற்றுப்படுத்த முடியாது என்ற முதல் எண்ணத்தில்தான் நீ உதித்திருக்க வேண்டும். நீ எனக்கு ஆணவங்களின் தொகுப்பு” என கடவுளைப் பற்றி சொல்கிறார். உன்மத்த நிலையில் சாக்த தாக்கம் கொண்ட கவிதைகள் உள்ளன.
தலித் இயக்கங்கள் சார்ந்து துணிந்து சில அரசியல் விமர்சனங்களை போகிற போக்கில் வைக்கிறார். நாமறிந்த இயக்கங்கள் மற்றும் அதன் தலைவர்களை நினைவுபடுத்துகிறது. கோமதியின் மரணம் சார்ந்து பள்ளருக்கும் தேவருக்கும் இடையிலான உரசல்கள் கோடிட்டுக் காட்டப்படுகின்றன. நூற்றி சொச்ச பக்க நாவலில் இத்தனைத் தளங்களை தொட்டிருப்பது சுரேஷ் பிரதீப்பின் வருங்கால ஆக்கங்களின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
மரியோ வர்கோஸ் லோசா அவருடைய ‘இளம் நாவலாசிரியனுக்கு எழுதும் கடிதம்’ எனும் நூலில் நாவலின் வடிவத்திற்கும் நாவலின் பேசுபொருளுக்கும் இடையிலான உறவு உயிர்ப்புடன் திகழ வேண்டும் என்கிறார். கருப்பொருள் வாழ்க்கை அளிப்பது, பல எழுத்தாளர்கள் ஒரே கருப்பொருளை மையமாக கொண்டு எழுதுகிறார்கள், ஆனால் அதன் வெளிப்பாட்டு முறை எழுத்தாளனின் திறன் சார்ந்தது என்கிறார். ஒளிர் நிழல் எனும் நாவலுக்குள் வராத பகுதிகளின் இருப்பைப் பற்றி சிந்தித்து பார்க்கையில், புனைவுக்குள் புனைவு எனும் வடிவுக்கு நியாயம் இருக்கிறதா எனும் கேள்வி இயல்பாகவே எழுகிறது. வாசகருக்கு வாசிப்பு சுவாரசியம் அளிக்கிறது, அவனுக்கொரு சவாலை அளிக்கிறது, சவாலான வடிவத்தை கையாள்வதில் துவக்க நாவலிலேயே தேர்ச்சி அடைந்திருக்கிறார் போன்றவை உண்மையே. எனினும் நாவலின் மையத்திற்கு எவ்விதத்திலாவது வலு சேர்க்கிறதா என்பது கேள்விக்குரியதே. மாறாக இந்நாவலை எப்படி வாசிக்க வேண்டும் எனும் சில வழிகாட்டல்கள் அப்பகுதிகளில் வெளிப்படுகின்றன. உளவியலாளர் கூற்று, எழுத்தாளர் ஜெயகுமார் உரை ஆகியவை அதையே செய்கின்றன.
நாவலின் வடிவை கோளம் என உருவகப்படுத்த தோன்றுகிறது. அணுக அணுக அதன் மேற்பரப்பில் இருக்கும் வடிவ வேறுபாடுகள், சமமின்மைகள் புலப்படும், விலகி நோக்கும் தோறும் அவை மறைந்து ஒற்றை வடிவமென முழுமை கொள்ளும். வடிவ ரீதியாக கட்டற்ற பெருக்கு, ஒழுங்கற்ற சிதறல்கள் என தோன்றினாலும் அவையூடாக ஒரு ஒழுங்கு ஊடுருவி செல்லும். ஒளிர் நிழலின் துவக்கத்தில் குடும்ப அமைப்பை பொருளியல் பின்னணியில் வகுத்து நோக்கும் கட்டுரை நாவலுக்குள் எப்படியோ பொருந்தி போகிறது. சில கழிவிரக்கப் பகுதிகள், சுய விமர்சனங்கள் துருத்திக்கொண்டு இருந்தாலும்கூட, ஒளிர் நிழல் நிச்சயம் ஒரு கதைக் கோளம்தான். எழுத்தாளர் சுரேஷ் பிரதீப்பிற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
(நன்றி: பதாகை)