//கார்த்திக்கேயன் (என்கிற) சுந்தரலிங்கம் என்று ஜாதகத்தில் இருக்க, ஸ்கூல் சேர்றப்ப எஸ்.எம்.ரவிச்சந்தர்னு ஆகி அதுவும் பத்தாம ஆதவன் தீட்சண்யாவாக மாறாட்டம்//*
பன்முகம் கொண்டவருக்கு பல பெயர்கள் இருப்பதில் ஆச்சரியமில்லை. இவருடைய எழுத்துக்கள் எனக்கு 2014 ஆம் ஆண்டு பரிட்சயம் ஆனது. சமகால அரசியல் பிரச்சனைகளையும் அதனால் மக்கள் எதிர் கொள்கிற சிரமங்களையும் யதார்த்தமாக கேலி கிண்டலுடன் சொல்லி செல்லக்கூடிய காத்திரமான எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர் `ஆதீ’ என்றால் மிகையில்லை.
ஆங்கில எழுத்தாளரான ஆர் கே நாராயணனுக்கு எப்படி மால்குடியோ, கி.ரா.வுக்கு எப்படி ஒரு கோபல்ல கிராமமோ அது போல `ஆதீ’க்கு லிபரல்பாளையம்.
யதார்த்தமான சூழலைக் கொண்ட இவரது கதைகளில் கேலியும், கிண்டலும் ஆரம்பம் முதல் முடிவு வரை இழையோடிச் செல்லும். பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்றி வரும் கதாசிரியரான `ஆதீ’ ஒரு கவிஞரும், நாடகாசிரியரும் ஆவார்.
இவரது சமீபத்திய சிறுகதைத் தொகுப்பான `நீங்கள் சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருக்கிறீர்கள்’ படிக்க நேர்ந்தது. இது தலித்முரசு, பறை (மலேசியா), மலைகள்.காம், புதுவிசை போன்ற பத்திரிகைகளிலும், இணையத்தளத்திலும் வந்த சிறுகதைகளின் தொகுப்பு ஆகும்.
ஒவ்வொரு கதையின் களமும், கருவும் முற்றிலும் வேறுபட்டு இருந்தாலும் அவையனைத்தின் மையப்புள்ளி சமகால சமூக, அரசியல் நிகழ்வுகள் ஆகும்.
`காக்கை குருவி உங்கள் ஜாதி’ என்கிற கதையோடு இத்தொகுப்பு ஆரம்பமாகிறது. சொந்தவீடு இல்லாதவர்கள் ஒரே ஊருக்குள்ளோ அல்லது பணி மாற்றம் காரணமாக ஊர் விட்டு ஊர் சென்று அங்கு வாடகை வீட்டில் குடியேறுவது என்பது இயல்பான, வாழ்வு சார்ந்த ஒரு நிகழ்வாகும். ஆனால் இந்தக் காலத்தில் வாடகைக்கு வீடு கிடைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. காரணம், வீட்டுச் சொந்தக்காரர்களின் எழுதப்படாத நிபந்தனைகள் – தனிமனிதரா அல்லது திருமணமானவரா, திருமணமானவரெனில் எத்தனை குழந்தைகள், அவர்களின் வயது, கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவர்களா, வயதானவர்கள் யாரும் கூட இருப்பார்களா, சைவமா அல்லது அசைவமா இப்படி ஒரு அனுமார் வால் போல நீண்டு செல்லக்கூடிய நிபந்தனைகளுக்கு உட்படும்பட்சத்தில் `வீடு’ என்கிற பெரும்பேறு நமக்குக் கிடைக்கும். ஆனால் `காக்கை குருவி…..’ கதையில் வரும் தம்பதிகளுக்கு அப்போதுதான் குடியேறிய வீட்டிலிருந்து மாற வேண்டிய சூழ்நிலை வருகிறது. அதற்கானக் காரணம் என்ன?
கதை நாயகனின் மகள் வாழ்வரசியின் பிறந்தநாளுக்கு அக்கம் பக்கத்து வீடுகளில் இருப்பவர்களை அழைக்க, கேக் வெட்டி பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்று முடிகிறது. மறுநாள் மாலை, இவன் அலுவலகத்திலிருந்து வெளியே வரும்போது இவன் இப்போது குடியிருக்கக்கூடிய வீட்டைப் பார்த்து தந்த தரகர் தெருவோரத்து டீக்கடையில் இவனுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார். அவர், `நேத்து வூட்டுல ரொம்ப தடபுடல் போல’ எனக் கேட்க, இவன், `….. புதுசா குடிவந்திருக்கிற நாங்க அக்கம்பக்கத்து ஆட்களை அழைச்சி உபசரிக்கிறக்கிறதுக்கு இதை ஒரு வாய்ப்பா பயன்படுத்திக் கொண்டோம், அவ்வளவுதான்” என்றான். `அவ்வளவுதான்னு நீங்க சொல்லிட்டா அவ்வளவுதானா? அதுக்கு அப்புறம் என்ன நடந்திருக்குன்னு தெரியுமா உங்களுக்கு?. பங்ஷனுல்ல கலந்துக்கிட்டதல யாரு என்ன சொன்னாங்கன்னு தெரியலை ஆனா, நீங்க வீட்ட உடனே காலி பண்ணனும்னு வீட்டு சொந்தக்காரன் ஒத்தக் காலில நிக்கிறான்’ என்றார்.
“இன்ன சாதின்னு சூசகமா சொல்லுகிற மாதிரிகூட வீட்டுக்குள்ள நாங்க எந்த அடையாளத்தையும் வச்சிக்கிறதில்லை……..என இவன் குரல் மிகவும் தளர்ந்து விட்டிருந்தது. `என்ன சார் நீங்க விவரம் புரியாத ஆளா இருக்கீங்க…. அலமாரியிலே அடுக்கி வச்சிருக்கிறீங்களாமே அம்பேத்கார் புஸ்தகங்கள், அது போதாதா உங்களைக் காட்டிக் கொடுக்க?” என்று புரோக்கர் சொல்லும் போது அவரும் அவர்களோடு சேர்ந்து கொண்டது போல அவனுக்குத் தோன்றியது.
அம்பேத்கார் குறித்த புத்தகங்கள் படிப்பவர்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்கணுமா? அவரால் எழுதப்பட்ட அரசியல் சட்டத்தை ஆதாரமாகக் கொண்டியங்கும் இந்த நாட்டில் அவருடைய சாதியல்லாத ஒருவர் வீட்டில் அவர் புத்தக உருவில் நுழைய முடியாதா? என சமூகத்திடம் கேட்கவேண்டிய கேள்விகளை ஒரு தனியாளிடம் கேட்டு என்னவாகப் போகிறது என நினைத்துக் கொண்டே அம்பேத்கார் நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு குடிபோகிறார்கள். அம்பேத்கார் அல்லாத மற்றவர்களின் நூல்கள் அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது பற்றி இங்கு யாரொருவருக்கும் யாதொரு புகாருமில்லை’ என கதை முடிகிறது.
`திவ்யா – இளவரசன்’ கலப்புத் திருமண நிகழ்வும் அதைத் தொடர்ந்த பரிதாபகரமான சம்பவங்களின் பின்னணியையும் கொண்ட கதை ` இந்தக் கதைக்கு மூன்று தலைப்புகள்’. ”திவ்யாவின் கதை, இது வேறு திவ்யாவின் கதை, இன்னும் சில திவ்யாக்களின் கதை” மூலம் கலப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் கொடுக்கும் இடைஞ்சல்களும் அவர்களின் ஆணவத்துக்காக திவ்யாக்கள் தனி ஆளாக ஆக்கப்படுகிற அக்கிரமங்கள் பொறுக்காமல் சம்பந்தப்பட்டவர்களை திவ்யாக்கள் கோபத்துடன் வாழ்த்துவதாகவும் கதை முடிகிறது.
2004 ஆம் ஆண்டு சுனாமிக்குப் பிறகு 2014 ஆம் ஆண்டு பெரிதாகப் பேசப்பட்ட அலை `மோடி’ அலை. இந்தப் பின்னணியின் சாயல் கொண்ட கதை `அலை என்பது சொல்லல்ல…..’ வாக்கு எண்ணிக்கைக்கு முந்தின தினம் பிரதம வேட்பாளர் காணாமல் போய்விடுகிறார். அவரைத் தேடுவது ஒருபக்கம் இருக்க, `ஒருமாதமாக பூட்டப்பட்ட அறைக்குள் திமிறிக் கொண்டிருந்த ஆதரவு அலை இனியும் பொறுக்கமுடியாதென்கிற ஆவேசத்துடன் மூர்க்கமாகவும் கட்டுக்கடங்காத வேகத்தோடும் பொங்கி அதிகாலை மூன்று மணியளவில் எண்ணிக்கை மையங்களை மூழ்கடித்துவிட்டு பிரதம வேட்பாளாராகிய அவரது வீட்டுக்குள்ளும் நுழைந்து அவரையும் வாரியிழுத்துக் கொண்டு பாய்ந்தது….. அண்டெமாக்ரட்டிக்கான்பேட்டை என்னும் லிபரல்பாளையத்தின் பிரதம வேட்பாளர் மயங்கிக் கிடந்தார்….’ இந்தக் கதையில் வரும் மற்ற கதாபாத்திரங்கள் வாக்குடையான், மைவிரலாள். யதார்த்தமான ஒரு நிகழ்வை தனக்கே உரிய எள்ளலுடன் கூறிச் செல்கிறார் `ஆதீ’.
இது விருதுகளின் காலம். நாம் கற்பனை செய்யக்கூடிய, செய்ய இயலாத அனைத்துப் பெயர்களிலும் இலக்கிய விருதுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆசிரியரின் கற்பனையில் உதித்த விருது `செருப்பு விருது’. இந்த விருது அறிவிக்கப்பட்டது குறித்து எழுத்தாளர் `தொன்மபுதைகுழியாரு’க்கு மகிழ்ச்சியை விட வியப்பே அதிகமிருந்தது. இதை ஏற்பதென்றாகிவிட்ட பிறகு அவருக்கு ஏற்பட்ட குழப்பம், இந்த விருது பொற்குவையா, பணமுடிப்பா, சான்றிதழா, பாராட்டுப்பத்திரமா என்பதுதான். கடைசியாக, அவருக்குக் கிடைத்ததென்ன…? படித்துப்பாருங்கள்.
நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் விவசாய நிலங்களை கபளீகரம் செய்து சாலைகளை விரிவாக்கி, சுங்கச் சாவடிகளை நிறுவி ஆண்டாண்டு காலமாக வரி வசூலித்து கொழுத்து வருகின்றன தனியார் நிறுவனங்கள். சுங்கச்சாவடியில் வரி வசூலிப்பதை எதிர்த்து தமிழகத்தில் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால், எந்த விளைவும் ஏற்படவில்லை. இந்தப் பிரச்சனையை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிற கதை தான் இந்தப் புத்தகத்தின் தலைப்பும். ’சுங்கச்சாவடியினரையும் அவர்களைத் தாங்கிப் பிடித்திருந்த அரசாங்கத்தினரையும் நாட்டைவிட்டே மக்கள் விரட்டியடித்த இந்த வீரவரலாறு எதிர்காலச் சந்ததியினரை சுதந்தர உணர்ச்சியோடு வாழ்வதற்கான ஒளியை வழங்குவதாக’ என இப்பிரச்சனைக்குத் தீர்வு ஏற்படுவதோடு கதை முடிகிறது. இது நிஜத்தில் சாத்தியமா? சாத்தியமாகலாம்.
இதில் இடம் பெற்றுள்ள மற்ற கதைகள் – கோயில் இருக்கும் ஊரில் குடியிருக்கவே முடியாது, நாட்டிலொரு நாடகம் நடக்குது (விகடன் தடம் ஜூன் இதழில் கூட மீள்பிரசுரம் ஆனது), கடவுள் எனும் கைதி.
மக்களைப் பாதிக்கக்கூடிய பிரச்சனைகளை இவ்வளவு கேலியுடனும், நையாண்டியுடன் கூறினாலும் பிரச்சனைகளைக் கவனப்படுத்த `ஆதீ’ தவறவில்லை. “என் வார்த்தையின் மேல் என் எச்சில் படிந்திருக்கும். என் மூதாதைகளின் உருவம் பச்சை குத்தப்பட்டிருக்கும். உடைந்த சீசாத்துண்டைப் போல மூர்க்கர்களின் பாதையில் காத்திருப்பவற்றை என் வார்த்தைகளென அறியுங்கள்” எனக்கூறும் ஆதவன் தீட்சண்யாவும் அவரது படைப்புகளும் மிகவும் கவனத்துக்குரியதாகும்.