சுனில் கிருஷ்ணனின் அம்புப் படுக்கை வாசிப்பனுபவம்

சுனில் கிருஷ்ணனின் அம்புப் படுக்கை வாசிப்பனுபவம்

முதல் வாசிப்பில், மரணத்தை நோக்கி செல்லும் பயணத்தின் உச்ச தருணங்களும், மரணத்தின் பின்னரான உள்ளக விசாரணைகளும் நிறைந்து , மரணமே முதன்மை சரடாக சுனில் கிருஷ்ணனின் அம்புப் படுக்கை சிறுகதை தொகுதியின் கதைகளை கோர்த்தது போல தோன்றியது. மரணக் குறிகளை முன்னறிவித்தபடி, குத்தீட்டிகளையும் பச்சை நிறக் கொடியையும் ஏந்தியபடி அரூபமாக நெருங்கும் மரணம், இடைநில்லா துயரப் புனலில் விழுந்த சருகிலை போல அலைகழிக்கப்படும் மனிதர்களின் ஒரு தொகுதியை வாரி எடுத்துக் கொண்டு சுழித்த படி மறைவதும், உதிரிகளை பழிப்பு மட்டும் காட்டிவிட்டு உதறிச் செல்வதும் சுனில் கிருஷ்ணனின் கதைகளில் வேறு வேறு களங்களில் நிகழ்கின்றன. வாசக கவனத்தை அழுத்தமாக கோரிய, வாசித்த அந்த கணம் வரை நான் அறிந்திடாத தகவல்களான ஆயுர்வேதத்தின் வஸ்தி, பிழிச்சல், மூக்கு வழி தங்க பஸ்பம், சுதர்சன குளிகை, இறப்பிற்கு முன்னதான காட்டுப்பீ, குண்டலினி குறியீடான பாம்பு தன் வாலைக் கடித்து சுழித்தல், மரணக் குறிகளான, சக்கர வட்டம், கடலாமை, தாமரை சிற்றலைகள், தண்டுவட டி.பி, ஏரழிஞ்சில் மரம், முனிவர் பதஞ்சலி சிலைக்கு எதிராக செதுக்கப்பட்ட தலைக்கோலி சிலை என ஆங்காங்கே கொட்டப்பட்டு குவிந்திருக்கின்றன.இந்த நுண் தகவல்கள், வலுவான சித்தரிப்பு, குறியீட்டு படிமங்களுடன் இணைந்து வாசிப்பனுவத்தை மேலும் தீவிரமாக்கி கதைகளை உளத்திற்கு அணுக்கமாக்கின.

‘எலும்புகளுக்கு மேல் தோலை யாரோ உருக்கி ஊற்றியது போல படுக்கையில் கிடந்தான்’, ‘மூங்கில் கழிகளுக்கு தடவிவிடுவது போல’ என முதன்மை பாத்திரமான வாசுதேவனின் உடல் சித்தரிப்பாகட்டும். கால் வைக்கும் ஒவ்வொரு அடியிலும் சிதறும் எறும்பு கூட்டம் போல மனம் சிதறியது, என வாசுதேவன் நிலை கண்டு மனம் பாதிக்கப்படும் கதைசொல்லியின் மனவோட்டமாகட்டும், திறமையாக இந்த கதையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. கதையின் முடிவில், வாசுதேவனின் அப்பா, அம்மா, அக்கா, அவள் குழந்தை என இவர்களில் எவரோ ஒருவர் ‘சக்சன் போடுவதை’ தாமதப்படுத்தி வாசுதேவன் மரணத்திற்கு காரணமாக இருந்திருக்கலாம் என வாசக ஊகம் விடப்படுகிறது. இவர்களில் எவர் என்று அறிவது எனக்கு முக்கியமாக படவில்லை. ஏன்? எப்படி? என்ற கேள்விகளே முதன்மையாகப் பட்டது. வாசுதேவனின் படுக்கைப் புண்ணை கதைசொல்லி காணும் தருணம், முன்பு தீவிரமான பாசத்தால் சிரத்தையுடன் பராமரிக்கப்பட்ட வாசுதேவன், அந்த தீவிரம் குறைந்து அந்த குடும்பத்தால் சுமையாக கருதப்படும் நிலையின் துவக்கத்தைக் காட்டியது. குற்ற உணர்வு இல்லாமல் மரணத்தை நிகழ்த்த இவர்கள் யாவரும் வேறு ஒருவரின் தூண்டலுக்காக காத்திருக்கிறார்கள். அந்த தூண்டல், இவர்களின் குடும்பத்திற்கு வெளியே இருந்து வரும் மருத்துவனான கதைசொல்லியிடமிருந்து வருகிறது. ஆயுர்வேத அபியங்க சிகிச்சையின் போது, வாசுதேவன் கதைசொல்லியின் கைகளை தொடும் கணம்தான், மரணத்தை வேண்டி அரற்றிய அவன் உள்மனக் குரலை கதைசொல்லி சரியாக உள்ளுணர்ந்து இவர்களுக்கு கடத்தி வாசுதேவன் மரணம் நிகழ காரணமாகிறது. இந்த கதையில், துருத்தியபடி குறையாக தெரிந்தது, தமிழ் திரைப்படங்களில் நாயகனின் அணுக்க சிரிப்பு நடிகர்களை நினைவுபடுத்திய இளங்கோ பாத்திரமும் உரையாடலும்தான்.

காளிங்க நர்த்தனம் கதையில், அரியக்குடி கோவிலுக்கு தினமும் வருகை தந்து, சிற்பங்களை பார்வையிடும் மாணிக்கத்திற்கு, முன்பு குடும்பஸ்தராக இருந்து இப்போது சாமியாராக பிச்சையெடுக்கும் முறுக்கு சாமியுடனான நட்பும் உரையாடலும் கதையை நகர்த்துகிறது. உருண்ட முலையும், புடைத்த காம்பும் கொண்ட தலைகோலி சிலை மாணிக்கத்தை ஈர்க்கவில்லை. தொந்தியும், குறுவாளும் கொண்டு முன்பு உயிரோடு இருந்து இப்போது சிலையாக மாறிய சாதாரணர்களின் சிலைகளில் ஒருவனாகவே நிற்க விரும்புகிறான் மாணிக்கம். முன்பொருமுறை குண்டலினி யோகத்தை தவறாக சோதனை செய்து, குணமான மாணிக்கத்தின் பின்புலம் நாக தோஷம் கொண்ட அவரின் சித்தப்பாவின் கதை மூலம் விளக்கப்படுகிறது. முன்பு விஷத்திற்காக பாம்பு பிடித்த முறுக்குசாமியின் பின்புலமோ விடுபட்ட கோட்டு சித்திரமாக கொடுக்கப்பட்டு வாசக ஊகத்திற்கு விடப்படுகிறது. மழையில் ஒடும் ஓடை கூட நீர் சர்ப்பம் என சித்தரிக்கப்பட்டு கதை முழுக்க நாகம் குறியீடு வேறு வேறு இடங்களில் மீண்டும் மீண்டும் வருகிறது.காலையிலும் மாலையிலும் ஈரமாக இருக்கும் சிலையை இருவரும் சேர்ந்து தரிசிக்கும் போது இந்த கதை ஆணின் காம ஒறுப்பை அல்லது புலனை ஆள்தல் பற்றி குறியீட்டு ரீதியாக அமைக்கப்பட்டிருக்கிறதோ என சிந்திக்க தூண்டியது. ஆனால் கதையின் முடிவில் காளிங்க நர்த்தனமாடும் சிற்பத்தினை விளங்கிக் கொண்ட பின் நேராக கழிவறைக்கு செல்லும் மாணிக்கத்தின், கனவு மனம் பிரம்மாண்டமான பாம்பின் மேல் தோல் மீது சறுக்கு மரம் போல வழுக்கி விளையாடும் போது, ஒரு வாசிப்பிற்காக அங்கு விளையாடும் தடி வைத்த கிழவராக காந்தியையும், முள் முடி கொண்ட கோட்டு்போட்ட கனவானாக இத்தாலிய பாலியல் திரை இயக்குனர் டின்டோ பிராஸ் அல்லது விளாடிமிர் நோகோபாவ் எனக் கொண்டால், இந்தக் கதை , ஐந்து தலை நாகத்தை குழந்தை கண்ணன் அடக்கி, அதன் தலையின் மீதேறி, வாலை பிடித்துக் கொண்டு, புலனடக்கி பெறும் இன்பத்தை அல்ல, புலனை சுமத்தல் பற்றி பேசுகிறது எனத் தெளிவாகிறது. வழக்கில் இருக்கும் தொன்மத்தின்படி, நெடுநாள் பயன்படுத்தாமல் திரண்டிருக்கும் விஷத்தை நாகம் வெளியிடும் போது உருவாகும் கல்லின் பெயரை கொண்ட மாணிக்கம், தன் குன்றிமணி தலையின் மீது அந்த பிரம்மாண்டமான நாகத்தின் கனத்தை கணந்தோறும் சுமக்குமாறு வாழ்நாள் முழுவதும் சபிக்கப்பட்டிருக்கிறான் எனத் தோன்றுகிறது.

என் வாசிப்பில், இந்த சிறுகதை தொகுப்பின் மாமேன்மையான கதை ‘குருதிச் சோறு’. பால்வற்றி வெடித்த மார்பு கொண்டு, ஊழித் தாண்டவத்தில் தன் பிள்ளைகளை இழக்க நேர்ந்தாலும், தன் ஆற்றலின் கடைக்கோடி அணுக்கள் ஒவ்வொன்றையும் திரட்டி சோறு படைத்து பசியென்று வருபவர்களுக்கு ஐயமின்றி சோறிடும் பாலாயியின் பாத்திர படைப்பு, அவளின் பிழைத்த மகனாக இருக்க வாய்ப்பிருக்கும் சன்னதம் கொண்டு ஆடும் மருலாளியின் சபரி பார்வை வழியாக விரிவான அழுத்தமான பாத்திர சித்தரிப்பு, சிறு பாத்திரமாக வரும் ஒற்றை பசு பாக்கியத்தின் இறப்பின் இறுதிக் கணத்தை கூட சிரத்தையுடன் சித்தரித்தது, தாது வருட பஞ்ச கால உக்கிர பட்டினி சூழலை கண்பார்க்காமல் கடந்து செல்லும் நெல் மூட்டை வண்டிகளின் இரக்கமில்லாமையின் சித்தரிப்பு, மெய் நிகழ்வுகள் காலங்கடந்து உருமாறி தொன்மாக நிலைப்பது, மூன்றடுக்கு கதைகளையும் ஒரே நூலிழையில் இணைத்த இரத்த அன்னம் என்ற படிமம், என இந்த கதை என் மனதின் ஒரு பாகத்தை தாக்கி இழக்க வைத்து என்னுள் வெறுமையை உண்டாக்கியது. அந்த வாசிக்கும் தருணம் வரை உணர்ந்திடாத மேலான உணர்வுகளால் அந்த வெறுமையை ஈடிட்டு நிரப்பியது. கதையின் முடிவில் அந்த மீதமுள்ள குங்குமமிட்ட பச்சை நிற பத்து கற்கள் எவர் எவரென இருக்கலாம் என விதிர் விதிர்த்தபடி பக்கங்களை திருப்பிய போது, புதிய தமிழ் படைப்பாளிகளின் கதைகளில், இந்த அளவிற்கான கொதிநிலை உணர்வை நான் வேறெந்த கதையிலும் பெறவில்லை என உணர்ந்தேன்.

‘பேசும் பூனை’ கணையாழி குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற கதை. தொகுப்பிற்கு வெளியே அதிகமாக பேசப்பட்ட கதையும் இதுவாகத்தான் இருக்கும். கத்தாரில் கணவன் பணியிலிருக்க, தனிமையில் தன் மகள் ஹர்சிதாவுடன் வாழும் தேன்மொழியின் வாழ்க்கை சூழல் விரிகையில் ‘வீட்டின் மேல்மாடியில் அமைந்திருந்த டி வி ஆண்டனாவை ஒயிலான கொண்டை’ என்றபோது, அந்த வர்ணனைகள் பெண்மனதையோ, உடலையோ வர்ணிக்கிறது என்ற எண்ணம் சட்டென்று தோன்றி கதைக்குள் இழுத்தது.அந்த பேசும் பூனையை தேன்மொழிக்கு அறிமுகப்படுத்தும் குழந்தை ஹர்ஷிதாவோ, சிரமமில்லாமல் அதனுடனான உறவினை முறித்துக்கொண்டு கோபக்கார புள், ஒடும் இளைஞன் என அடுத்தடுத்த ஆட்டங்களுக்குள் தாவி விடுகிறாள். வாழ்வின் போக்கினை அழுத்தமாக தீர்மானிக்கும் எந்த ஒரு விலக்க விருப்ப உறவின் அறிமுகத்தைப் போல, கண் சிமிட்டியபடி தேன்மோழியின் கவனத்தை கவருகிறது பேசும் பூனை. அதுவரை அலைபேசியில் பாம்பு விளையாட்டு விளையாடிய தேன்மொழியிடம், பூனை அவளின் முதலாம் குழந்தையின் இறப்பினை நினைவு கூறி, சலிப்பான தனிமையிலிருக்கும் அவள் எப்போதும் ஏங்கும் மாற்றத்திற்கு பதிலியாக தன் உடை மாற்றம், பேச்சு மாற்றம், மறைந்து தோன்றுவது, விருப்ப பாடலை பாடுவது என தேன்மொழியின் வாழ்க்கையை சுவாரஸ்யபடுத்திக் கொண்டே மனதிற்குள் ஆழமாக ஊடுறுவுகிறது.

கணவனுடனான உறவில் விரிசல் வருகிறது. அணுக்க தோழியான அனீஸ் அக்காவிடமிருந்தும் தொடர்பு அறுகிறது. தன் மகள் ஹர்ஷிதாவிடமிருந்தும் விலகுகிறாள். முழு முற்றான உறவாக மாறும் பேசும் பூனை அவளை ஆக்கிரமித்து, படிப் படியாக சுரண்டி, வீடு முழுக்க தேவைக்கு மேலதிக பொருட்களை நிரப்புகிறது. அவள் மனதிலோ எவராலும் நிரப்ப முடியாத வெற்றிடத்தை உருவாக்குகிறது. சுரண்டுவதற்கு ஏதுமில்லை என்ற நிலையில், ஆம், அதே காலனின் உடையான பச்சை நிற ராணுவ உடையை அணிந்து வந்து, இறப்பே தீர்வு என அவளைத் தள்ளுகிறது. இந்த கதை வாசித்தபோது ‘தட்ஸதமிழ்’ இணையதளம்தான் உடனடியாக நினைவிற்கு வந்தது. சினிமா, அரசியல், பிக் பாஸ் என அந்தந்த காலத்தின் பரபரப்பான செய்திகள், நடிகைகளின் கவர்ச்சிப் படங்கள், லேட்டஸ்ட் கார் , பைக் , என மெல்லுணர்வுகளைத் தூண்டும் செய்திகளை மட்டும் கிசு கிசுப்பாக உரையாடும் தொனியில் தரும் இந்த தளம், முதற் பார்வைக்கு தெரியாமல் ஆனால் அதற்கு இணையாக விளம்பரங்களால் வியாபித்து வாசிக்கும் ஒவ்வொரு கணமும் இவற்றை வாங்கத் தூண்டுகிறது. இன்பாக்ஸில் வந்த ஏதோ ஒரு நடிகை தொடர்பான செய்தியை தொட்டபோது, இந்த தளத்திற்கு வந்து சேர்ந்ததாக நினைவு. பணிக்களைப்பால் ஓய்வெடுக்கிறேன் என்கிற சாக்கில், அன்று முதல் குறைந்தது 3 வருடங்களுக்கு என் பணி நேரத்தில் பாதியை விழுங்கியது இந்த தளம். அந்த பொருள் தன் இருப்பில் இல்லாவிட்டால் , நான் ஒரு முட்டாள் என்றும், என் வாழ்வு நிறைவு பெறாது என எண்ணி, நான் வாங்கி குவித்த பொருட்கள் அலைபேசி,வெற்று உடற்பயிற்சி சாதனங்கள், மின்ஆற்றல் வங்கி பெட்டி, தலைகவர் ஒலி கேட்பான் என ஏராளம். ஏதோ ஒரு நாளில், ஹர்ஷிதா வேறு விளையாட்டிற்கு மாறியதைப்போல சலிப்புற்று விலகி விட்டேன். பேசும் பூனை என்கிற இந்த புனைக்கதை மேல்தளத்தில் அலைபேசி செயலிகளுடன், விளையாட்டுகளுடன் விலக்க முடியாத போதை தரும் உறவினைப் பற்றி பேசுவது போல தோன்றினாலும், இந்த டிஜிட்டல் யுகத்தில் நாம் பகிரும் ஒவ்வொரு தகவல்களிலிருந்தும் நம் அந்தரங்கம் நொடிதோறும் கண்காணிக்கப்பட்டு தகவல்களாவதும், அந்த மொத்த தகவல் திரட்டும் ஒரு மாபெரும் பூதத்திடம் கொடுக்கப்பட்டு, அதனால் நாள்தோறும் சுரண்டப்பட்டு, அடையாளமிழக்கிறோம் என அடித்தளத்தில் சுட்டிக்காட்டியதாகத் தோன்றியது.

‘பொன் முகத்தை பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும்’ கதை எனக்கு மதுரை மங்கையர்கரசி பள்ளியின் தெய்வ வாழ்த்துப் பாடலாக நான் மீள மீள கேட்ட ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்’ பாடலை நினைவூட்டியது. நானா லேனாவிற்கும், அவரின் மறைந்த மனைவி வள்ளியாட்சியின் பெயரைக் கொண்ட குழந்தை ஷ்ரத்தா என்கிற வள்ளியுடனான உறவே கதையின் மையம். முதல் வாசிப்பில் சுராவின் ‘விகாசம்’ சிறுகதையின் பாதிப்பு இருப்பதாகத் தோன்றினாலும், விகாசம் கதை முடியும் இடத்தில் இந்த கதை துவங்கி தொடர்ச்சியான வேறொரு உணர்வின் தளத்திற்கு சென்றதாகத் தோன்றியது. விகாசத்தில் அய்யர் வாங்கிய ‘கணித்து விடை அளிப்பான்’ உடனான போட்டியில் இராவுத்தர் தோற்றாலும், தன் நினைவாற்றலை வெளிக்கொணர்ந்து அய்யரின் அந்த வாணிபத் தளத்தில் தன் இருப்பை தக்க வைக்கிறார். இவரிருவரின் உறவின் அடியில் ஒரு சீண்டலும், சமத்காரமும் இருக்கும். இந்த கதையிலோ லேனா வானா வள்ளி உறவில் ஒற்றை உணர்வு கொண்ட நெகிழ்ச்சியான உறவு மட்டும்தான் உண்டு. அவர் முன்பு பணிபுரிந்த இடத்தில் கணிணியுடனான போட்டியில் வீழ்த்தப்பட்டு வீட்டிற்குள் முடக்கப்படுகிறார் லேனா வானா. அவரின் முன்னாள் முதலாளி பக்கவாதம் வந்து அனுமதிக்கப்பட்ட மருத்தவமனையின் பெயர் மீனாட்சி ( இவளின் நிறமும் பச்சைதான்). அவரை சந்திக்க லெட்சுமண செட்டியார் சென்ற இரண்டே நாளில் உள்நுழையும் இயந்திரமான அலைபேசியால் அவரின் இருப்பு கேள்விக்குட்படுத்தப்படுகிறது. கதையின் முடிவிலோ உறங்கிய குட்டி வள்ளி ஆச்சியின் உள்மனதில் தன் குரலின் நினைவை அழிக்க இயலாததை அறிந்து உளம் குளிர்ந்த லேனா வானா வேறு வேறு குரலில் பாடி நெகிழ்ந்து களிக்கிறார். கு. அழகிரி சாமி கதைகளில் காணக்கிடைக்கும் குழந்தைமையிலிருந்து பீறிரும் ஒளி இந்த கதையில் ஒரு கீற்றாக நான் பெற்ற தருணம் அது. வைத்தியர் தாத்தாவிற்கும் , ஆனா ரூனா செட்டிக்கும் இடையேயான உறவினை பேசும் கதை ‘அம்பு படுக்கை’.

சுதர்சனத்திற்கு ஆனா ரூனா செட்டியாரின் இறுதிப் படுக்கை நிலையை கூற வரும் தம்பு ஓட்டி வந்த துறுவேறிய சைக்கிளும், ஆம் ஆதே பச்சை நிறம்தான். வாழ்நாளெல்லாம் ஆயிரம் அம்புகள் அவரை நோக்கி எய்யப்பட்டாலும் இறுதி அம்பை மட்டும் எதிர் கொண்டு வாங்கி வலியில்லாமல் இறக்கிறார் செட்டியார். தண்டுவடத்தில் டி பி நோய் தாக்கிய வைத்தியர் தாத்தாவோ, இறுதியாக ஒரே நேரத்தில் எய்யப்பட்ட ஆயிரம் அம்புகளில் ஒன்றைக்கூட இழக்காமல் அனைத்தையும் தண்டுவடத்தில் வாங்கி, உலகின் வலியனைத்தையும் பெற்று இறக்கிறார். இந்த இறப்புகளின் வேற்றுமை காலனின் குரூரமான பகடி போலத் தோன்றியது. ‘கூண்டு’ கதை சமகால அரசியல் சூழலை நோக்கிய விமர்சன கதை. கொல்லன் கோரும் யானைகளின் முதுகெலும்பு 336 என்பது என்ன என்பது அறிந்தபோது பொருத்தமாக அமைந்திருப்பதாக தோன்றியது. அதோடு சேர்த்து, இந்திய தண்டனைச் சட்டத்தின் படி 336 எண் என்பது, ‘கவனமற்ற அவசரத்தாலும், அலட்சியத்தாலும், தனிமனித உடமைகளுக்கோ உயிருக்கோ சேதம் விளைவித்தால் மூன்று மாதம் வரை சிறைதண்டனையும்,250 ரூபாய் அபராதமும், அல்லது இரண்டுமே தண்டனையாக கிடைக்கும்’ என்பதும் ஒரு பகடியாக கதைக்கு பொருத்தமாகத் தோன்றியது. பெட்டி பெட்டியாக கொடுக்கப்பட்ட திமிங்கல நெய்யினைக் கொண்டு தன் மெழுகு பொம்மையை தானே செய்து தன்னை தானே கொல்லன் ரசிக்கிறான் எனவும், கொடுத்த கடலாமை ஒடுகளைக் கொண்டு கேடயம் அமைத்து வெற்று சவடாலில் கோமாளி வாய் சண்டை இடுகிறான் எனவும் தோன்றியது. ’ அறிவியல் புனைவான ‘திமிங்கலம்’ கதையில் பெருநிகழ்வுகள் அடுத்தடுத்து நிகழ்ந்து அழிந்து பின் தழைக்கு முயலும் சூழல் விவரிப்பினை விட, கதை முதன்மை பாத்திரம் திமிங்கலத்திற்கும், அவன் முதல் மனைவி ஜெமீமாவிற்கும் இடையேயான மானுடம் தழைத்தல் , மானுடம் வாழ்தல் என்கிற கருத்து மோதல் உரையாடல்கள் ஆர்வமூட்டும் வாசிப்பினைத் தூண்டின. இயந்திரங்களை பல்கி பெருக்கும், நிரூபணத்தை கோரும் அறிவியல், அந்த நிரூபண சோதனைக்காக, இயந்திர பெருக்கத்திற்காக இழக்கப்படும் எண்ணிடலங்கா உயிர்களை மானுடம் தழைக்க பலிகொடுக்கப்பட வேண்டியவர்கள் எனவும், அதன் மறுப்பாக, மனித நினைவாற்றலை பெருக்கி இயந்திரத்தின் பங்கினை குறைக்கும் ஆய்வுகளில் ஆர்வம் கொண்ட ஜெமீமாவின் எதி்ர்வாதமும் கொண்ட உரையாடல்களை சிறப்பாக அமைந்தது. நாய் தன் வாலை கடித்தபடி சூழல்வது போல, திமிங்கலம் இரு முனைக்கும் அலைந்து மணல் காலடிகளை அழிக்க எத்தனித்து முடியாமல் போவது, அறிவியலை ஒற்றைக் கோணத்தில் குற்றம் சாட்டுவது போலத் தோன்றியது.

‘ஆரோகணம்’ இந்த சிறுகதை தொகுப்பின் நிறைவுக் கதை. ஒரு கிழவனின் பனிசிகரத்தை நோக்கிய பயணத்தின் மனவோட்ட விவரிப்புதானே என வாசித்தபோது, அந்த கிழவன் ‘காந்தி’ என்று அறிந்த கணம், இந்த கதையே இந்த ஒட்டுமொத்த தொகுப்பிற்குமான தெளிவுரை எனத் துலங்கியது. நோயுற்று மரணத்தை வேண்டிய பசுவின் அகத்தை அறிந்து அதை உயிருடனிருந்து வதைபடுவதை விட கொல்வதே மேல் என்ற காந்தியும், காமத்தை அடக்குகிறேன் என கனமிக்க பிரம்மாண்டமான நாகத்தை தன் தலை மீது வாழ்வின் இறுதி கணம் வரை சுமந்த காந்தியும், இயந்திரங்களின் மீது ஐயம் கொண்டு மனிதனின் உழைப்பும் சிந்தனையையும் மட்டும் கரையேற்றும் என நம்பி அதன் உச்சபட்ட சான்றாதாரமாக தன்னையே முன்வைத்த காந்தியும், ஆட்கொல்லி பல்லியை கப்பலேற்றி அனுப்பிய கொல்லனின் மூதாதையனான காந்தியும் என் கண்முன் நின்றனர். மரணம் அல்ல‍, காந்தியே இந்த சிறுகதை தொகுப்பின் கதைகளை குவித்து சேர்த்து அள்ளி இணைத்த கண்ணி எனத் தோன்றியது. தமிழ் படைப்புலக சொற்களனில் அழுத்தமாக தன் தடத்தை பதிக்க அத்தனை தகுதியும் கொண்ட, எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணன் தடங்கலின்றி தீவிரமாக இயங்க என் வாழ்த்துக்கள்.

(நன்றி: சிவமணியன்)

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp