சுகுமாரனின் ‘வெல்லிங்டன்’ நாவல் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகள் இணையத்திலும் முகநூலிலும் வாசிக்கக் கிடைக்கின்றன. நாவலின் முக்கிய சாரம்சம், நாவலில் கையாண்டிருக்கும் குறியீடுகள், கதாப்பாத்திரங்களின் சித்தரிப்பு என விரிவாக அலசியிருக்கிறார்கள். ‘வெல்லிங்டன்’ நாவலின் மீதான எனது விமர்சனங்களை மட்டும் இங்கே முன்வைக்கிறேன்.
O
1) ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் ஜான் சல்லிவனின் முயற்சியால் மலைப்பகுதிகள் களஆய்விற்குட்படுத்தப்பட்டு சிறிது சிறிதாக வெல்லிங்டன் எனும் ஊர் எவ்வாறு உருவானது என்பது நாவலின் ஆரம்பப்பகுதி. ஒரு அத்தியாயத்திற்கும் இன்னொன்றிற்கும், ஒரே அத்தியாயத்தின் ஒரு பகுதி முடிவடைந்து அடுத்த பகுதி ஆரம்பிப்பதற்குள்ளாகவும் வருடங்கள் பாய்ந்தோடுகின்றன. சிறு சிறு குறிப்புகளில் விவரிப்புகளில் கடந்து செல்கிறார். ஒட்டுமொத்தமாக நாவலை வாசித்து முடிக்கையில் முதல் பகுதிக்கும் நாவலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையென்பது புலனாகிறது. அதாவது வெல்லிங்டன் எனும் ஊர் எப்படி உருவானது எனும் தேவை நாவலுக்கு இல்லை. நாவலோ முழுக்க முழுக்க மாந்தர்களின் கதைகளைப் பேசுகிறது, எதார்த்தமான தளத்தில். தாவித்தாவி பல நூறு ஆண்டுகளைக் கடந்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. எழுபது எண்பது பக்கங்களுக்கு நீண்டிருக்கும் இப்பகுதியினை ஒரே அத்தியாயத்தில் ரத்தினச் சுருக்கமாக சாத்தியப்படுத்தியிருக்காலம்.
2) வெல்லிங்டன் நாவலுக்காக எழுதப்பட்ட கட்டுரைகளில் தொன்மங்களைத் தொட்டிருக்கும் இந்நாவலின் சில பகுதிகளை சிலர் சிலாகித்திருந்தார்கள். அது சிறப்பாக நாவலில் எழுதப்பட்டிருக்கிறதென்றபோதிலும் அவை ஏற்கனவே பல நாவல்களிலும் வாய்வழிக் கதைகளாகவும் அறிந்து சலித்துப்போன ஒன்று. ஆறேழு அண்ணன்களுக்குப் பிறந்த ஒரே அழகிய தேவதை போன்ற தங்கை (நீண்ட கூந்தலையுடைவள்) – எதேச்சையாக அவளைக் காணும் ராஜா அவளின் மீது காதல் வயப்பட்டு தனது உரிமையாக்கிக்கொள்ள உத்தரவிடுதல் – பின்பு தங்கையைக் காப்பாற்ற பரிதவிப்புடன் முயற்சிக்கும் அண்ணன்கள்; இக்கதையின் வேறுவேறு விதமான முடிவுகளை நீங்கள் வாசித்திருக்கக்கூடும். அதில் இந்நாலுக்கு தகுந்தபடி வேறு விதமான ஒரு முடிவு. அவ்வளவு தான்.
3) ஓர் உணர்வினை அல்லது எண்ணத்தைக் குறிப்பிட ஒரே மாதிரியான வார்த்தைகள் மீண்டும் மீண்டும் இந்நாவலில் கையாளப்படுகிறது. ‘அவன் அதை சட்டை பண்ணவில்லை’ எனும் வாக்கியமும் ‘சந்தோஷமாகவும் அதே நேரத்தில் வருத்தமாகவும்’, ‘ஆத்திரமாகவும் அதே நேரத்தில் மகிழ்ச்சியாகவும்’, ‘அழுகையாகவும் அதே நேரத்தில் சிரிப்பாகவும்’, ‘கோபமாகவும் அதே நேரத்தில் அமைதியாகவும்’ என்பது போன்ற வாக்கியங்களும் நாவலில் அடிக்கடி இடம்பெறுகின்றன. ஒரே மாதிரி உணர்வினைத் தரும் இது போன்ற வாக்கியங்களை மறுபடியும் மறுபடியும் வாசிக்க நேர்வது பெரும் சலிப்பினைத் தருகின்றது.
4) ஒரு அத்தியாயத்தை நிறைவு செய்யும் வரியும் அல்லது அத்யாயத்திற்குள்ளான சிறு சிறு பகுதிகளை நிறைவு செய்யும் வரியும் பல இடங்களில் அயர்ச்சியைத் தருகின்றது. இதைத் தகுந்த உதாரணங்களோடு விளக்க இயலவில்லை. நீங்கள் வாசிக்கையில் இதை நினைவுகூர்வீர்களென நம்புகிறேன்.
5) சிறுவனான பாபுவின் நட்பும் உறவும் அவனது எண்ணமும் செயலும் என நாவலின் பெரும்பகுதியை பாபு ஆக்கிரமிக்கிறான். பால்ய பருவத்தை வாசிக்கையில் நம்மை ஒரு குதூகலமான மனநிலைக்கு இட்டுச் செல்லும். நமது பால்யத்தின் நினைவுகளையோ அல்லது நாம் வாழ நினைத்ததையோ நிகழ்த்திக்காட்டும். அதுவே அவ்வெழுத்தின் வெற்றி. அவ்வுணர்விற்கு இட்டுச்செல்லாமல் வெறும் கதைகளாக வெறும் வார்த்தைகளாக நாவலை வாசித்துச்செல்கிறோம். இது ‘வெல்லிங்டன்’ நாவலின் மிகப்பெரும் பலவீனம். தவிரவும் அடுத்த அடுத்த அத்தியாயங்கள் வேறு வேறு மாந்தர்களின் கதைகளைப் பேசும் போது பாபு எனும் சிறுவனின் வாழ்வியல் விஸ்தாரமாக எழுதப்பட்டிருப்பது வலிந்து திணிக்கப்பட்டது போன்ற பிம்பத்தைத் தருகிறது.
6) நாவலானது படர்க்கையில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் பாபு வரும் சமயங்களில் பாபுவின் உறவு முறையைக் கொண்டே கதைசொல்லியும் பிற பாத்திரங்களைக் குறிப்பிடுகிறார். பாபுவின் பார்வையில் இந்நாவலைச் சொல்லவேண்டுமென்ற நோக்கமாக இருந்திருக்கலாம். ஆனால் பாபுவிற்கு மட்டுமல்லாமல் வேறு சில பாத்திரங்களுக்கும் இது நிகழ்கிறது. ஒட்டுமொத்தமாக நாவல் முழுவதும் இதைப் போன்றே கையாண்டிருக்க வேண்டும், அப்படியில்லாமல் திடீர் திடீரென கதைசொல்லி கதாப்பாத்திரங்களின் உறவுமுறையில் அழைப்பது போல எழுதப்பட்டிருக்கிறது. இப்படி எழுதுவது எழுத்தாளரின் விருப்பம் தான் என்ற போதிலும் இது கட்சிதத்தில் பிசிறு தட்டும் செயல் என்பது என் எண்ணம்.
7) நாவலின் தலைப்பு ‘வெல்லிங்டன்’. வெல்லிங்டன் எனும் ஊர் எப்படி உருவானது என நாவல் தொடங்குவதற்கு முன்பான நீண்ட முஸ்தீபு. நாவலில் எண்ணற்ற மாந்தர்களின் கதைகள் பேசப்படுகின்றன. ஆனால் அவ்வூரின் தனித்தன்மையான இயல்புடைய கதாப்பாத்திரங்களோ அல்லது சம்பவங்களோ நாவலில் இல்லை. இக்கதைகளெல்லாம் வெல்லிங்டனில் நடைபெற வேண்டுமென்பதற்கான எந்தக் கட்டாயமும் இல்லை. இது எந்த ஊரில் வேண்டுமானாலும் நடைபெறும்படியானது தான். இந்நாவல் வெல்லிங்டன் எனும் ஊரில் நடைபெறுவதற்கான தேவை என்ன இருக்கிறது எனும் கேள்வி எழுகிறது. வெல்லிங்டனின் நில அமைப்பும் கூட நாவலில் விரிவாக இல்லை. நாவலுடன் ஒன்றிப்போகாத முதல் பகுதியில் இதற்கான சித்திரம் அற்புதமாக புலப்படுகிறது. மலைப்பிரதேசத்தின் எழிலும் சீதோஷணநிலையும் விவரணைகளில் மிளிர்கின்றன். ஆனால் வெல்லிங்டன் எனும் ஊர் உருவான பின்பு நடைபெறும் சம்பவங்களில் நில அமைப்பு குறித்த சித்திரம் எழவில்லை. இது கட்டாயம் தேவை என எண்ணியதற்கு காரணம் நாவலின் தலைப்பு. தனது நினைவுகளிலிருந்து மீட்டெடுத்த ஊரும் மாந்தர்களுமே நாவலில் இடம்பெற்றிருக்கிறார்கள். அவை முழுமையடையாமல் சிதறுண்டு கிடக்கின்றன.
நாவலை வாசிக்கையில் இத்தகைய எதிர்மறையான எண்ணங்கள் தொடர்ந்து தொந்தரவு செய்தபடியே இருந்ததாலும் அதிலிருந்து மீளமுடியாதபடிக்கு நாவல் பயணித்ததாலும் பிறர் சிலாகித்திருந்த, முக்கியமென குறிப்பிட்டிருந்த பகுதிகளோடும் கூட ஒன்றமுடியவில்லை.
O
நாவலில் ஓரிடம் புன்னகையைத் தவளச்செய்தது. கௌரி அக்காவுடன் பாபு துணி வாங்கச் செல்கிறான். அழகிய கைக்கடிகாரம் ஒன்றை வாங்கி பாபுவிற்கு பரிசளிக்கிறாள். பாபுவின் வலதுகையில் கட்டிவிடுவதைக் கண்டு ஏன் என வினவுகிறான். ‘தெரிஞ்சேதான்டா கட்டுறேன். யாராச்சும் ஏன் வலதுகைல வாட்ச் கட்டிருக்குற கேட்டாங்கன்னா என்னை நெனச்சுக்குவல்ல’ என்று புன்னகைக்கிறாள் கௌரி அக்கா.
கவிஞர் சுகுமாரனும் வலது கையில் வாட்ச் அணிவதாக ஞாபகம்!
(நன்றி: சாபக்காடு)