ஒரு 35 பக்கங்களே கொண்ட புத்தகம் நம்மை உலுக்க முடியுமா? முடியும்.. இரா.நடராசனின் ஆயிஷா எத்தனை பக்கங்கள் கொண்ட புத்தகம்? நம்மை உலுக்கிப் போடவில்லையா?
தஞ்சை ரயிலில் வேளாங்கண்ணி திருவிழா கூட்ட நெரிசலில் ஒற்றைக் காலில் நிற்க மட்டுமே இடம் கிடைத்தது. காலின் வலி மறக்க பையிலிருந்து நண்பர் தந்த சுகந்தி டீச்சர் என்னும் ஒரு சிறு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.
ஒரு மணி நேர ரயில் பயணம் எப்படிப் போனதென்று தெரியவில்லை. கால் வலியை மறக்க கையில் எடுத்த புத்தகம் இதயத்தை இறுக்கிப் பிசைவது போல் வலியை உருவாக்கியது.
நம்மைச் சுற்றி நடந்த சம்பவம், நாம் மறந்த சம்பவம். ஒரு இறப்புச் சம்பவத்திற்கு உயிரூட்டிய எழுத்துக்கள்.
அன்று 03.12.2009 காலை. நாகப்பட்டிணம் மாவட்டம் , வேதாரண்யம் வட்டம் கத்தரிப்புலம் அருகே 20 பள்ளி மாணவர்கள்,ஒரு ஆசிரியையுடன் செல்கிறது ஒரு தனியார் பள்ளி வாகனம். வேன் ஓட்டுனருக்கு வந்த போன் அழைப்பினால் அவரின் கவனம் சிதறி கட்டுப்பாட்டை இழந்த வேன் 20அடி ஆழ குளத்தில் விழுந்து விடுகிறது. இந்த விபத்தில் 9 குழந்தைகள் இறந்துவிட, சில குழந்தைகளை காப்பாற்றி விட்டு மேலும் சில குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியில் தன் உயிரை விடுகிறார் குழந்தைகளுடன் பயணித்த சுகந்தி என்னும் ஆசிரியை.
“பள்ளி வாகனம் குளத்தில் பாய்ந்து 9 பள்ளி குழந்தைகளுடன் ஆசிரியையும் பலி” என்ற தலைப்புச் செய்தியைக் கண்டு “உச்” கொட்டி மறந்திருப்போம்.
ஆனால் இந்த நூலாசியரால் அவ்வளவு எளிதாக கடந்து செல்ல முடியவில்லை. இந்த சம்பவம் அவரை நெடு நாள் தூங்கவிடாமல் செய்துள்ளது. இந்த சம்பவம் பற்றிய துயர நிகழ்வுகள் அவரை விட்டு அகலாமல் அலைக்கழித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான இடங்கள், பெற்றோர்களின்.கண்ணீர்க் கதறல்கள், நிகழ்வு தொடர்பான ஊடக செய்திகள் திரும்பத் திரும்ப அவரது நினைவில் நிழலாடிக்கொண்டே இருந்திருக்கிறது. கால ஓட்டத்தில் இச்சம்பவம் பற்றிய அவரது நினைவுகள் அழியாமல் நெஞ்சில் பதிகிறது. இந்நினைவுகளை ஒழுங்குபடுத்தி ஒரு வடிவம் தர, அந்நினைவுகள் இப்புத்தகமாய் வடிவம் பெற்றுள்ளது. இப்புத்தகம் வலிந்து எழுதப்பட்ட புத்தகமல்ல, வலியால் எழுதப்பட்ட புத்தகம்.
இப்புத்தகம் பல தளத்தில் விரிந்துள்ளது,
1. வாகன ஓட்டுனரின் கவனக்குறைவே விபத்துக்குக் காரணம்?
2. வணிக மயமாய் மாறிப் போன தனியார் கல்வி நிறுவனங்கள்.
3. தனியார் கல்வி நிறுவனங்களை முறையாக நிர்வகிக்காத அரசு, அரசு அதிகாரிகள்.
4. நீரில் மூழ்கி பலியான 9 இளம் பிஞ்சுகள் மீதான சோகம்.
5. 1000 ரூபாய் சம்பளத்திற்கு ஆசிரியை வேலைக்குத் தன்னை அர்ப்பணித்து மாணவர்களுக்காக வாழ்ந்து, மாணவர்களுடனேயே இறந்து போன சுகந்தி டீச்சர்
இந்நூல் ஒரு உண்மைச் சம்பவத்தை பதிவு செய்த வலிமிகு ஆவணமாக இருந்தாலும், இந்த சுகந்தி டீச்சர் புத்தகம் காவியத் தன்மை அடைந்ததற்கு காரணம் நான் பாதம் தொட்டு வணங்க நினைக்கும் ஆசிரியை சுகந்தி தான்.
ஏனெனில், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்து, கல்விதான் நம் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வரும் என்பதை உணர்ந்து நன்கு படித்து ஒன்பதாம் வகுப்பில் திறனறித் தேர்வில் வென்று கல்வி உதவித் தொகை பெற்று மெல்ல மெல்ல முன்னேறுகிறார் சுகந்தி. பத்தாம் வகுப்பில் அறிவியலில் நூற்றுக்கு நூறு பெற்று பன்னிரண்டாம் வகுப்பிலும் சிறப்பிடம் பெறுகிறார். ஆசிரியைப் பணி ஒன்றே தன் வாழ்வின் குறிக்கோள் எனச் சொல்லி படித்து முடித்து தன்னையும் தன் குடும்பத்தையும் கல்வி கரை சேர்க்கும் என்ற நம்பிக்கையில் தனியார் பள்ளியில் வெறும் ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு சேர்கிறார். சம்பளம் குறைவென்றாலும் தன் உழைப்பை பள்ளிக்கு கொட்டித்தருகிறார்.
இவ்வாறு மெல்ல மெல்ல வேர்விட நினைக்கும் நிலையில்தான் இந்த பரிதாப விபத்து நடக்கிறது. தண்ணீருக்குள் பள்ளி வாகனம் விழுந்த நிலையில் கண்ணாடியை உடைத்து வெளியேறும் ஆசிரியை சுகந்தி நிலைமையை உணர்ந்து துரிதமாய் செயல்பட்டு நான்கைந்து குழந்தைகளை நீருக்கு வெளியே கொண்டு வந்து விட்டுவிட்டு மேலும் இரண்டு குழந்தைகளை நீரிலிருந்து வெளியேற்ற நினைத்தவர் குழந்தைகளை பிடித்தபடி நீருக்குள் புதைந்து போகிறாள்.
தான் தப்பித்திருக்க வாய்ப்பிருந்தும் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகளின் உயிரை மீட்டெடுக்கும் முயற்சியில் தன்னுயிரை ஈந்த திருமணமாகாத 22 வயது ஆசிரியை சுகந்தியின் தியாகத்தை பதிவு செய்திருக்கும் இந்தப் புத்தகத்தை கண்ணீரின்றி வாசிக்க முடியாது.
நூலாசிரியர் பாபு எழில் தாசனின் களப்பணி போற்றுதலுக்குரியது. இறந்து போன மற்றும் மீட்கப்பட்ட குழந்தைகள் பற்றிய தகவல் பதிவு ஒரு வரலாற்று ஆவணம். இச்சம்பவத்தில் தன்னுயிரை இழந்த குழந்தைகளின் பெற்றோரை இவர் கண்ணீரின்றி சந்தித்திருக்க முடியாது.
இச்சம்பவம் இனி ஒருமுறை நடைபெறாமல் இருக்க பொது வெளியில் ஒரு புத்தகமாய் வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய நூலாசிரியருக்கு பல கோடி் நன்றிகள்!