இளம் வயதில் இறந்துபோன மேதைமை நிரம்பிய தமிழ்ப் படைப்பாளிகளின் பட்டியல் பெரிது. தமிழ் இலக்கிய வானில் ஒரு ஒளிநட்சத்திரம்போல தோன்றி மறைந்த சுப்ரமண்ய ராஜு வாழ்ந்ததும் எழுதியதும் கொஞ்சம்தான். ‘மேதாவிலாசத்துக்கும் அற்பாயுளுக்கும் அப்படி என்னதான் நமக்கு எட்டாதபடி ரகசிய உறவோ’ என்று சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ நாவலில் இடம்பெறும் வரியைப் போல, மிகச் சிறந்த அறிவாளியாக மதிப்பிடப்பட்ட சுப்ரமண்ய ராஜு, தனது 39-வது வயதில் நந்தனம் சிக்னல் அருகே மிக மோசமான சாலை விபத்தில் இறந்துபோனார்.
பாண்டிச்சேரியில் பிறந்திருந்தாலும், ராஜு வாழ்ந்தது சென்னையில்தான். சுந்தரம் கிளேட்னிலும், பிறகு டிடிகே நிறுவனத்திலும் ராஜு பணிபுரிந்தார். நவீனக் கவிதைகள் மீது பெரும் ஈடுபாடு கொண்டிருந்த ராஜு, 1970களின் தொடக்கத்தில் ‘கசடதபற’ பத்திரிகையில் கவிதைகள் எழுதுவதன் மூலம் இலக்கிய உலகில் பிரவேசித்தார். அவர் அதிகம் எழுதியவை சிறுகதைகளே. ‘சுப்ரமண்ய ராஜு கதைகள்’ தொகுப்பில் 30 சிறுகதைகளும் 2 குறுநாவல்களும் உள்ளன. அவற்றுள் ‘இன்று நிஜம்’ குறுநாவல் மட்டுமே அவர் வாழ்ந்த காலத்தில் பிரசுரம் கண்டிருக்கிறது. அதற்கு தமிழக அரசின் சிறந்த புத்தகத்துக்கான விருதும் கிடைத்திருக்கிறது.
ராஜு படைப்புகளின் இயங்குதளம் என்பது நகரமும் அது சார்ந்த வாழ்க்கையும். 70களில் சென்னை மாநகரின் மத்தியத்தர வர்க்கத்தின் நெருக்கடிகளும், அவற்றின் அக உலகும் ராஜுவின் கதைகளில் பேசுபெருளாயின. இளைஞர்களை நவீன வாழ்க்கை முறை எப்படி கட்டமைக்கிறது என்பதை மிகவும் நுட்பமாக தன்னுடைய கதைகளில் பதிவுசெய்திருக்கிறார். நேரடியான கதைசொல்லல் முறையில் எளிய வடிவில் எழுதப்பட்டிருக்கும் இக்கதைகளில் அநேக இடங்களில் அசாத்தியமான நகைச்சுவை உணர்வு ததும்பும். பெரும்பாலான கதைகள் உரையாடல் மூலமாகதான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. ‘இன்று நிஜம்’, ‘நாலு பேர்’, ‘இன்னொரு கனவு’ போன்ற கதைகளை வாசிக்கும்போது, “இந்த சிக்கல்களையும் இந்த நெருக்கடிகளையும் இவர்தான் எழுதியிருக்க முடியும்” என்ற ராஜுவின் கதைகள் குறித்த அசோகமித்திரனின் குறிப்பு நினைவுக்கு வருகிறது.
சிறுகதைகள், குறுநாவல்கள் மட்டுமல்லாமல் புனைபெயர்களில் சினிமா விமர்சனங்களையும் ராஜு எழுதியிருக்கிறார். ‘குடிசை’ ஜெயபாரதியின் (இவரது தங்கையைத்தான் ராஜு காதலித்து திருமணம் செய்திருந்தார்) ‘24C வேதபுரம் முதல் வீதி’ என்ற வெளிவராத படத்துக்கு ராஜு எழுதியிருந்த ஒரு பாடல், கங்கை அமரனின் இசையமைப்பில் சுசீலா பாடி ஒலிப்பதிவும் ஆகியிருக்கிறது.
ராஜுவின் எதிர்பாராத மரணம் இலக்கிய உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ராஜுவின் நெருங்கிய நண்பர்களான பாலகுமாரனும் மாலனும் இணைந்து 20 எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து அவரது நினைவைப் போற்றும் விதமாக ‘அன்புடன்’ என்ற தொகுதியைக் கொண்டுவந்தனர். ராஜுவின் 70வது பிறந்தநாளையொட்டி அவரது நூலுக்கு 51% தள்ளுபடி விலையை அறிவித்திருக்கிறது கிழக்கு பதிப்பகம். அரை நூற்றாண்டுக்கு முந்தைய காலத்துக்கு செல்ல விரும்புபவர்களுக்கு இந்நூல் உதவும்!
(நன்றி: தி இந்து)