ஸ்டாலின்! விடாது கருப்பு என சர்வதேச பொதுவுடமை இயக்கத்தின் மீது எளிதில் நீங்காத நிழலாய் படிந்துள்ள பெயர். உலகின் பெரும்பகுதி இடது சாரிகளால் ஸ்டாலினியம் மறுதலித்து ஒதுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் எதார்த்தம். ஆனாலும் பொதுவுடமை, சோசலிசம், மார்க்சியம் ஆகியவற்றின் கருத்துநிலை எதிர் முகாமும் செயல்பாட்டு எதிர் முகாம்களும் சதா சர்வகாலமும் மார்க்சியத்தை ஸ்டாலினியத்தோடு அடையாளப்படுத்தி அவதூறு செய்வது தொடர்கின்றது. அதில் பெரும்பகுதியானவருக்கு இது தவறு என்று நன்கு தெரியும். ஆனாலும் நெஞ்சறிய பொய்யும் வஞ்சகமுமாய் இதனைத் தொடர்கின்றனர். ஒரு சிறு பகுதி உண்மையிலேயே விவரம் புரியாதவர்கள் அல்லது ஸ்டாலினியம் புறமொதுக்கப்பட்ட மார்க்சியம் சாத்தியம் என்பதை ஏற்க மறுப்பவர்கள். ‘காலமும் மண்ணும் மூட முடியாத மார்க்ஸை, அவர் குறித்த தவறான விளக்கங்கள் மூடி மறைத்துள்ளன. இந்தத் தவறான விளக்கங்களைத் தந்தவர்களில் மார்க்சின் எதிரிகள் மட்டுமல்ல, மார்க்சின் நண்பர்களும் அடங்குவர் என்பதை விளக்குவார் எனர்ஸ்ட் ஃபிஷர் (காண்க. மார்க்ஸ் உண்மையில் கூறியது என்ன? தமிழில்: மிலிட்டரி பொன்னுசாமி – _ எர்னஸ்ட் ஃபிஷர் _ பாரதி புத்தகாலயம்.) அது போல மார்க்சியத்தை ஸ்டாலினியத்தோடு முடிச்சுப் போடும் இந்தப் போக்கிற்கு பொதுவுடமை, சோசலிசம் ஆகியவற்றுக்குப் போராடக்கூடிய, தம்மை மார்க்சிஸ்ட் என அடையாளப்படுத்திக் கொள்பவர்களும் காரணமாய் இருக்கின்றனர் என்பது உண்மையே.
உலகின் பெரும்பாலான கம்யூனிஸ்ட் கட்சிகளும் இடது சாரிகளும் ஸ்டாலினையும், ஸ்டாலினியத்தையும் புறமொதுக்கிவிட்டனர். அல்லது அவ்வாறு கூறுகின்றனர். ஏனென்றால், ஸ்டாலினியம் ஜாதியம் போன்றது. உணர்ந்தவர்கள் எல்லாம் கடந்தவர்கள் அல்ல. ஆனாலும் ஸ்டாலினுக்குச் செவ்வணக்கம் சொல்வதற்கு உலகெங்கும் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர். மேற்கு உலகில் கேட்கவே வேண்டாம். அங்கு நினைத்தும் பார்க்க முடியாத எண்ணிக்கைகளில் வகை வகையாய் இடது சாரிக் குழுக்கள் இருந்து வருகின்றன. மூன்று பேர் இருந்தால் 4 கட்சிகள், 5 சஞ்சிகைகள், அதில் ஒருவரையொருவர் குதறியெடுத்துக் கொண்டிருப்பர். மார்க்ஸை ‘இடதுசாரி’ என ஏற்றுக் கொள்ளாத பாகூன், புரூதோன் வழி சந்ததிகள், லெனின், ‘’இடதுசாரி அதிதீவிரவாதி’’ எனக் கூறும் தூய மார்க்சிஸ்டுகள், இல்லை இல்லை லெனின் ‘ஒரு ‘வலதுசாரி’’ எனக் கூறும் ‘’இடது கம்யூனிஸ்டுகள்’’ என வானவில் வெட்கித் தலைகுனியும் அளவிற்கு வண்ணங்களின் பரப்பு.
இதில் டிராஸ்கியர்கள்! இவர்கள் மற்றவர்கள் அனைவரையும் பள்ளிச் சிறுபாலகர்கள் என ஆக்கிவிடுவார்கள். ஒவ்வொரு கவுண்டியிலும் (பஞ்சாயத்து வார்டு?) இருக்கும் டிராஸ்கிய குழு ஒரு உலகம் தழுவிய டிராட்கிய அகிலத்தின் தலைமைக் குழுதான். அவர்கள் செயல்பாட்டின் பெரும்பகுதி ஏனைய டிராட்சிய குழுக்களின் புட்டத்தை புரட்சிகரமாய் கடித்துக் குதறுவதுதான். இவர்கள் எல்லோரையும் ஒரு கால்பந்து மைதானத்தில் அடைத்துச் சாத்தினால் இரண்டு டீம் அமைப்பதற்கு இன்னும் 1 1/2 ஆள் வேண்டும் என்பதுதான் நிலையாக இருக்கும். ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை என எம் தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழ் டிராட்ஸ்கிய தோழர்கள் கதைப்பது கேட்கிறது. உண்மைதான், பழம் பெருமை வாய்ந்த பிரிட்டீஷ் கம்யூனிஸ்ட் கட்சி கொண்டுள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 1500க்கும் குறைவு எனக் கூறப்படுகின்றது.
இத்தகைய குறுங்குழுக்களில் ஓரிரண்டு ஸ்டாலினியக் குழுக்களும் உள்ளன. நூறு ஸ்டாலின் எதிர்ப்பு டிராட்ஸ்கிய குழுக்கள் இருந்தால் ஒரு ஸ்டாலினிய குழு இருக்கும். ஸ்டாலினின் பெயரும் இது போன்ற குழுக்களும் இடது புறம் திரும்பும் அறிவு ஜீவிகளையும் ஜனநாயக ஆர்வலர்களையும் அச்சுறுத்தும் உபத்திரவம் இல்லாத சோளக் கொல்லைப் பொம்மைகளாகப் பயன்படுகின்றன என்பதால், இவர்கள் மீது சிறிது முதலாளித்துவ ஊடக வெளிச்சம் அவ்வப்போது விழுவதும் நடக்கும்.
இது தவிர சோவியத் சாதனைகள் அனைத்தையும் ஸ்டாலின் பூதத்தால் மறைக்கும் முயற்சியை எதிர்த்து பேசும்போது ஓரளவு செல்வாக்குடன் இருக்கும் ரசிய கம்யூனிஸ்ட் கட்சியும் கூட ஸ்டாலின் மீது சற்றே பாசத்தோடு இருப்பது போல தோற்றம் வந்துவிடுவதும் நடக்கின்றது. இன்று வரை ரசியக் கம்யூனிஸ்ட் கட்சி, நிகிதா குருஷேவ், 20 ஆவது கட்சிக் காங்கிரஸில் ஸ்டாலின் குறித்து ஆற்றிய உரையையோ இல்லை அதனைச் சுற்றி வளைத்து அங்கீகரித்த கோர்ப்பசேவின் முடிவையோ, மறுதலிக்கவில்லை. அட அதெல்லாம் எப்போதோ முடிந்த கதை என்கின்றீர்களா? அப்படி ஆட்களா? 1935 ஆம் ஆண்டு தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு ஒரு போலி வழக்கு நடத்தப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டு, இருட்டறையில் முழங்காலில் பணிக்கப்பட்டு, பின் மண்டையில் சுடப்பட்டு மூளையின் வெண்சாந்து சிதறி ஈரம் கசியும் கரும்பச்சைச் சுவர்களில் அப்பி வழிய படுகொலையானவர் நிக்கோலாய் புக்காரின். அவர் ‘குற்றமற்றவர்’ என இறந்து 50 ஆண்டுகளுக்குப் பின்னர் அன்றைய சோவியத் யூனியனின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்பின் இறந்து 50 வயது ஆன அவர் கட்சி உறுப்பினர் எனப் புதுப்பிக்கப்பட்டார். இத்தகைய பாரம்பரியம் உள்ள கட்சி, குருஷேவ், கோர்ப்பசேவ் கருத்துகளை மறுதலிக்கவில்லை என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி தான்.
‘யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்’ என ஒரு சினிமாப் பாடல் உண்டு. சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பிய, சீன நிலைமைகள் குறித்து யார் கூறுவதை நம்புவது? யார் கூறுவதை நம்பாது இருப்பது? என்பது ஒரு பிரச்சனைதான். சோவியத் சீர்குலைவிற்குப் பின் சென்னையில் அதுகுறித்துப் பேசிய தோழர் ஈ.எம்.எஸ். அவர்களே ‘நாம் நம்பவைக்கப்பட்டோம், (we are made to believe) என வருந்திச் சொல்லும் நிலையில் இருந்தபோது, மற்றவர்கள் நிலை குறித்துக் கூற வேண்டியதில்லை.
‘போல்ஷ்விக் கம்யூனிஸ்ட் கட்சியின் சுருக்கமான வரலாறு’ என்ற புகழ் பெற்ற நூலை பலரும் அறிந்திருப்பர். அதனையும் சேர்த்து சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு குறித்து மூன்று அதிகாரபூர்வ நூல்கள் உள்ளன. முதலாவது ஸ்டாலின் காலத்தில் வந்தது. இரண்டாவது குருஷ்சேவின் காலத்திலும், மூன்றாவது பிரஸ்னேவ் காலத்திலும் வந்தன. ஒவ்வொன்றும் அந்தந்த காலகட்டத்தில் இருந்த கட்சித் தலைமையின் கருத்தை பிரதிபலிப்பதாகவே உள்ளது. மூன்று கட்டத்திலும் இந்த தலைமைகளுக்கு வேண்டப்படாதவர்களாக இருந்த டிராட்ஸ்கி, ஜினோவிவ், கமனேவ், புகாரின் ஆகியோரின் பங்களிப்புகள் மூன்று பதிப்பிலும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன. ஒரு சமநிலையில், அகவியல் சார்பின்றி, புறவய எதார்த்தமான அணுகுமுறையில் எழுதப்பட்ட வரலாற்று நூல் வேண்டுவோர் மேற்குலகின் பல்கலைக் கழக பதிப்புகளையே நாட வேண்டியுள்ளது. அங்கும் முழுமையான ஒத்த கருத்தில்லை. என்றாலும் மேற்குலக பல்கலைக் கழகங்களின் ஜனநாயகம் கருத்துகளின் மோதலுக்கும், விவாதத்திற்கும் வெளி கொண்டுள்ளது.
பனிப்போர் காலத்திலிருந்த சோவியத் ‘முற்றதிகாரம்‘ (Soviet Totalitarianism) எனும் கருத்தே இன்றைக்கு ஒருசாரர் எழுத்துகளில் பின்னே போயுள்ளது. ஸ்டாலின் காலத்திய வரலாற்றை ஏதோ ஒரு சர்வாதிகாரியின் காலத்திய வரலாறு என்று பார்க்கும் நிலை மாறி அந்த கால கட்டத்தின் சமூக பொருளாதார நிலைகள், சர்வதேச அரசியல் ராணுவ நிலை ஆகியவற்றின் பின்னணியோடு வைத்து ஆய்வு செய்வது வழக்கிற்கு வந்துள்ளது. இவர்கள் ‘திரிபுவாதிகள்’ என மற்றவர்களால் அழைக்கப்படுகின்றனர்.
1991ஆம் ஆண்டு சோவியத் யூனியனின் சீர்குலைவிற்குப் பின் சோவியத் அரசு மற்றும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவணக் காப்பகங்கள் திறந்து விடப்படுவதும் பின் மூடப்படுவதும் மாறி மாறி நடந்துள்ளன. இந்த ஆவணங்களின் அடிப்படையில் பல பல்கலைக் கழக அரசியல், பொருளாதார, சமூக, வரலாற்றுப் பேராசிரியர்கள் பல ஆய்வு விளக்க நூல்களை எழுதியுள்ளனர்.
ஜான் ஆர்க். கெட்டி (J. Arch Getty), ஷீலா ஃபிட்ஜ்பாட்ரிக் (Shiela Fritzpatrich) ராபர்ட்டா மானிங் (Roberta Maning) போன்றோர் இந்த வகையைச் சேர்ந்தவர்கள் எனலாம். ஆவணங்கள் அடிப்படையிலான அவர்களது விவரணைகள், விளக்கங்கள், ஆய்வு முடிவுகள் விவாதத்திற்கு உரிய தகுதிபடைத்தவை, முழுமையாக நிராகரிப்பது அறிவுடமை ஆகாது என்றே படுகின்றது. இவர்களைத் தாண்டி ஏதோ ஒரு வகையில் சோசலிசம் எனும் கருத்துரு மீது மதிப்புடன் எழுதிய இ.ஹெச். கார், ஸ்டீஃபன் கோஹன், ராய் மெத்வதேவ், மோஷே லெவின், அலக் நோவே ஆகியோரும் உள்ளனர். இவர்கள், ஸ்டாலினிசத்திற்கும் ஸ்டாலின் கடைப் பிடித்த வழிமுறைகளுக்கும் அன்றைக்கே மாற்று இருந்ததாகக் கூறுபவர்கள். டாய்ட்சர் டிராட்ஸ்கி சார்பானவர்; கோஹன் புக்காரின் சார்பானவர்; மற்றவர்களை அப்படி கூறிவிட முடியாது.
இவர்களிலும் யாரை நம்புவது என்பது சற்று சிந்திக்க வேண்டிய வினாதான். ஸ்பிக்னு பிரெஜெஜின்ஸ்க்கி (Zbigniew Brzezinski) வியட்நாம் போரின்போது அமெரிக்க அதிபர் லிண்டன் ஜான்சனுக்கு ஆலோசகர். நிக்ஸன், கிஸ்ஸின்ஜர் ஜோடியின் ‘சமாதானப் போக்கை’ கடுமையாய் விமர்சிக்கும் அளவிற்குக் கடைந்தெடுத்த கம்யூனிசத் துவேஷி. இவரும் ஹார்வர்ட் பல்கலைக் கழகம், கொலம்பியா பல்கலைக் கழகம் ஆகியவற்றின் பேராசிரியர் என்ற ஹோதாவில் ஓர் ஆய்வறிஞராக சோவியத் யூனியன் குறித்து எழுதுவார். இவர் எழுதுவதை ‘விருப்பு வெறுப்பற்ற’ புறநிலை ஆய்வு முடிவு என கருதினால் அதைக் காட்டிலும் அறிவின்மை இருக்க முடியாது. அவர்தான் கொலம்பியாப் பல்கலைக் கழகத்தின் கம்யூனிஸ்ட் ஆய்வுக் கழகத்தில் (Institute on
Communist Affiars) 30 ஆண்டுகாலம் (1960 _ 1989) தலைவர். அவர் தலைமையிலான ஆய்வின் சார்பின்மை குறித்து நாம் சந்தேகப்படவே வேண்டியதில்லை. அதைப் போலவே ரிச்சர்ட் பைப்ஸ் -_ ஹார்வர்டு பேராசிரியர், சி.ஐ.ஏ.யின் ஆய்வாளர், ஆலோசகர்; ராபர்ட் கன்குவெஸ்ட் பிரிட்டீஷ் உளவு அமைப்பின் எதிர்பிரச்சாரத் துறைத் தலைவர், ஸ்டான்போர்டு பல்கலைக் கழகப் பேராசிரியர். இவர்கள்தாம், 20 மில்லியன் படுகொலை, பெரும் பயங்கரம் (The Great Terror) முற்றதிகாரம் (Totallitarian Regime) கிரிமினல் சர்வாதிகாரி, மனோவியாதி கொலைகாரன் போன்ற கருத்துகள் காலூன்றக் காரணமானவர்கள்.
இவர்கள் எழுதியவற்றை நம்புவதும், தன்னைத் தானே புகழ்ந்து ஸ்டாலினது தலைமையில் அவரது துதிபாடிகள் எழுதிக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு, ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு நூல்களை விருப்பு வெறுப்பு இன்றி வரலாற்றைப் புறநிலை எதார்த்தமாய்ப் பார்த்து எழுதியது என நம்புவதும் மௌடீக நாணயத்தின் இரு பக்கங்கள்தாம்.
நிலைமை இப்படி சிக்கலாக இருக்க, அமெரிக்காவின் மாண்ட்கிளேய்ர் அரசுப் பல்கலைக் கழகத்தின் (Montclair State University)ஆங்கிலப் பேராசிரியர் குரோவர் ஃபர் (Khurushev Lied)ஒரு நூல் எழுதியுள்ளார். ‘குருஷேவ் பொய் கூறினார்’ (Khurushev Lied) எனும் தலைப்பில் அந்த நூல் வந்துள்ளது. இந்தியாவில் ஸ்டாலின் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அது தமிழில் ‘ஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள்’ என்ற பெயரில் தோழர். நடசேன் மொழி பெயர்ப்பில் பொன்னுலகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு வெளியில் தீவிர ரசிய வலதுசாரி ஏடான ‘ரஷ்கிய வெஸ்ட்நிக்’ அதனைப் புகழ்ந்து வரவேற்றுள்ளது. ரசியாவிலோ ஐரோப்பியாவிலோ உள்ள ஸ்டாலினிய குறுங்குழுக்கள் எதுவும்கூட அந்த நூலைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. அதற்கு காரணம் உள்ளது. அது கடைசியில்; நூல் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்.
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது கட்சிக் காங்கிரஸ் 1956ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம் 14 _ 25 தேதிகளில் நடந்தது. காங்கிரஸின் கடைசி நாளன்று கட்சியின் பொதுச் செயலாளரான நிகிதா குருஷ்சேவ், ஸ்டாலின் குறித்த ஒரு ரகசிய உரையை நிகழ்த்தினார். சுமார் 4 மணி நேரத்திற்கு நடந்த அந்த உரை.
காங்கிரஸ் ஆவணங்களில் இடம்பெறவில்லை. ‘’தனிநபர் வழிபாடும் அதன் விளைவுகளும்’’
(On the cutt of personality and its consequences’) என்ற பெயரிலான அந்த அறிக்கை பின்னர் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைகளுக்கெல்லாம் அளிக்கப்பட்டு அதன் மீது விவாதங்கள் நடந்துள்ளன.
அறிக்கை 1956ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலேயே அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ். ஃபிரான்சின் ‘லெ மாண்டே’, பிரிட்டனின் ‘அப்சர்வேர்’ ஆகிய பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டன. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியும், சோவியத் அரசும் அந்த அறிக்கையை உண்மை என்று சொல்லி அங்கீகரிக்கவும் இல்லை. பொய் என்று சொல்லி நிராகரிக்கவும் இல்லை. பின்னர் கோர்பசேவ் பதவிக்கு வந்தபிறகு 1989ஆம் ஆண்டு மார்ச் மாதம்தான் அதாவது 33 ஆண்டுகள் கழித்து ‘’இஸ்வெஸ்தியா சிகே கேபிஎஸ்எஸ்’ ‘சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு அறிக்கைகள்’ எனும் அதிகம் கவனிக்கப்படாத, ஆனால் அதிகாரபூர்வமான பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது. ஸ்டாலின்மீது சரமாரியான குற்றச்சாட்டுகளைச் சுமத்திய அறிக்கை சோவியத் யூனியனிலும் உலக சோசலிச முகாமிலும் ஒரு பெரும் திருப்பு முனையாக இருந்தது என்று சொன்னால் மிகையாகாது.
இந்த அறிக்கையைத் தான் குரோவர் ஃபர் தனது அடிப்படையாகக் கொண்டுள்ளார். குருஷேவின் அறிக்கையில் ஸ்டாலின் மீது 61 குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன என்று கணக்கு கூறும் குரேவர் ஃபர் அதில் ஒன்றுகூட உண்மை இல்லை. இதில் எந்த ஒரு குற்றத்தையும் ஸ்டாலின் செய்யவில்லை. எல்லாக் குற்றச் சாட்டுகளிலும் குருஷேவ் பொய் கூறியுள்ளார். ஸ்டாலின் எந்தவித குற்றமும் இழைக்காத பத்தரை மாற்றுத் தங்கம் என்று வாதிடுகின்றார்.
சரி அப்படியென்றால் ஸ்டாலின் சகாப்தத்தில் அங்கு எந்தவிதத் குற்றம் நடைபெறவில்லையா என்றால் அவற்றை குரோவர் மறுக்கவில்லை. ‘’வெற்றியாளர்களின் காங்கிரஸ்’’ என்று அழைக்கப்பட்ட சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 17வது கட்சிக் காங்கிரஸின் 1966 பிரதிநிதிகளில் 1108 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்தக் கட்சிக் காங்கிரஸில் தேர்ந்தெடுக்கப்பட்ட 139 மத்திய குழு உறுப்பினர்களில் 98 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். வாவிலோவ் போன்ற எண்ணற்ற அறிவியல் வல்லுனர்கள் ஓசிப் மெண்டில்ஸ்தாம் போன்ற கவிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், துக்காச் சாவ்ஸ்க்கி போன்ற செம்படையின் முன்னணித் தளபதிகள் என சோவியத் நாட்டின் உன்னதமான புதல்வர்கள், புரட்சியை நடத்திய வீரர்கள், தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு போலி வழக்குகள் நடத்தப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டு இருட்டறையில் முழங்காலில் பணிக்கப்பட்டு, பின் மண்டையில் சுடப்பட்டு மூளையின் வெண்சாந்து சிதறி ஈரம் கசியும் கரும்பச்சைச் சுவர்களில் அப்பி வழிய படுகொலை செய்யப்பட்டனர். இதனையெல்லாம் குரோவர் ஃபர் மறுக்கவில்லை.
இது போன்று அன்றைய சோவியத் சமூகத்தின் மிகச் சிறந்த பகுதியினர், நம்ப முடியாத எண்ணிக்கையில் கொல்லப்பட்டதை மறுக்காதது மட்டுமல்ல, அவர்கள் குற்றவாளிகள்தாம் என்று வாதிடவும் குரோவர் ஃபர்ரால் இயலவில்லை. அவர் கூற முடிந்ததெல்லாம் அவர்கள் தங்கள் குற்றத்தை விசாரணையின் போது ஒத்துக் கொண்டனர் என்பதே. விசாரணையின்போது சித்திரவதை தாங்காமல் ஒத்துக் கொள்வதை போதுமான நிரூபணம் என்பதை எந்தவொரு நாகரிக சமூகமும் ஏற்றுக் கொள்ளாது என்பது அமெரிக்காவில், பல்கலைக் கழக பேராசிரியராக இருக்கும் அவருக்குத் தெரியாதா? சரி, சித்தரவதை நடைபெற்றது என்பதையாவது மறுத்துள்ளாரா என்றால் அதுவும் இல்லை. சித்திரவதை செய்யப்பட்டதாலேயே அவர்கள் நிரபராதி ஆகிவிட மாட்டார்கள் என்ற விநோதமான தர்க்கத்தைதான் தந்துள்ளார்.
ஆனால் இதனைக் காட்டிலும் மோசமான தர்க்கமும், நியாயப்படுத்துதலும் அன்றைய சோவியத் யூனியனின் தேசிய இனக் குழுக்களைக் கையாண்டது குறித்து எழுதும்போது வருகின்றது. போர் மேகங்கள் சூழ்ந்து வந்தபோது கரச்சாய், கல்மைக்ஸ், செச்சன் _ இங்குஷ், பால்கர் போன்ற இனக்குழுக்களை அவர்களது வாழ்விடங்களிலிருந்து முழுமையாக அப்புறப்படுத்தியதை குருஷேவ் வருத்தத்துடன் எடுத்துரைக்கின்றார். தேசிய இனங்களின் ஒற்றுமைக்கும், சம உரிமைக்கும் ஒரு எடுத்துக்காட்டான சோவியத் யூனியனில் இப்படி நடக்கலாமா என அங்கலாய்க்கின்றார். 1991ஆம் ஆண்டு சோவியத் யூனியன் உடைந்தபின் ரசியனல்லாத ஒவ்வொரு தேசிய இனமும் பின்னங்கால் பிடறியில் இடிபட ஓடியதற்கான அகக் காரணங்கள் (ஏகாதிபத்தியங்கள் உள்ளிட்ட புறக் காரணங்களை மறுப்பதற்கில்லை) குறித்த ஆய்வுகளை இங்கிருந்து நாம் துவக்க வேண்டியுள்ளது, நமக்கு புரிகின்றது.
ஆனால் குரோவர் ஃபர், கிரீமியன் தார்தார், வோல்கா ஜெர்மன் இனக்குழுக்களை விட்டுவிட்டாரே என கேலியான தொனியில் குறிப்பிடுகின்றார். 2,18,000 கிரீமியன் தார்தார்கள் 4,93,000 செச்சன் _ இங்குஷ் இனத்தவர்கள் இடம் பெயரச் செய்யப்பட்டார்கள். அவர்கள் 180 ரயில் வண்டிகளில் இடம் பெயர்க்கப்பட்டனர் என்றெல்லாம் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதனையெல்லாம் குரோவர் ஃபர் மறுக்கவில்லை. உளவாளிகளாகவும், சீர் குலைவாளர்களாகவும் இருக்கும் தனிநபர்களை மட்டும்தானே தண்டிக்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்பி, அதன் நியாயத்தை ஏற்றுக் கொள்கின்றார். ஆனால் அப்படிச் செய்தால் அந்த இனத்தின் இளம் பெண்களுக்கு மாப்பிள்ளை கிடைப்பது சிரமம் (எச்சரிக்கை: நகைச்சுவை அல்ல, அவரே எழுதியிருப்பதுதான்) என்றெல்லாம் காரணம் சொல்லி இந்த இனச் சுத்திகரிப்பை நியாயப்படுத்துகின்றார்.
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். அவரது மிக முக்கியமான வாதம் குருஷேவ் ஒன்றும் ஒழுங்கில்லை, அவரும் சேர்ந்துதான் இதனையெல்லாம் செய்தார், ஸ்டாலின் இது தெரிய வந்தபோது இதனைத் தடுக்க முயற்சித்தார் என்பதாகும். கட்சியின் 17ஆவது காங்கிரஸின் பிரதிநிதிகளில் 56 சதவிகிதத்தினரும் காங்கிரஸில் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய குழு உறுப்பினர்களில் 70 சதவீதத்தினரும் ‘தேசத்துரோகிகள்’ எனக் குற்றஞ்சாட்டப்பட்டு சுட்டுக் கொல்லப்படுவது, ஸ்டாலினுக்கு தெரியாமலே, அவரை மீறியே நடந்தது எனச் சொல்வதைக் காட்டிலும் ஸ்டாலினை அவமரியாதை செய்யும் செயல் வேறு இல்லை என்பதை குரோவர் ஃபர் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
குருஷேவ் பொய்களும் சொல்கின்றார் என்பதிலோ, அவரும் ஏனைய தலைவர்களும் முழுப் பொறுப்பையும் ஸ்டாலின் மீது மட்டும் சுமத்த முடியாது என்பதிலோ சந்தேகம் ஏதுமில்லை. எடுத்துக்காட்டாக 2 ஆம் உலகப் போரில் ஸ்டாலினின் தலைமையையும் அவரது தனித்துவமான பாத்திரத்தையும் யாரும் மறுத்துவிட இயலாது. 2 ஆம் உலகப் போரில் முன்னணி பாத்திரம் வகித்தவரும், பின்னாளில் ஸ்டாலினால் அற்ப காரணங்களுக்காக பதவி இறக்கம் செய்யப்பட்டவருமான மார்ஷல் ஜூக்கோ, ஸ்டாலின் மறைந்தபிறகு அவருக்குச் சூட்டியுள்ள புகழாரங்கள் இருக்கின்றன. ஆனால் குருஷேவ் ஸ்டாலின் மீது அபத்தமானதும் அவதூறானதுமான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். குருஷேவ் குற்றச்சாட்டுகளில் உண்மையும் பொய்யும் கலந்துள்ளன என்பதே தெரிகின்றது. ஆனால் குருஷேவ் தலைமைப் பொறுப்பில் இருந்த சுமார் 10 ஆண்டு காலத்திய வரலாறும் உள்ளது. அவர் மீது வேறு ஆயிரம் குற்றச்சாட்டுகள் கூறலாம். ஆனால் ‘ஒடுக்குமுறையாளர்’ ‘அடக்குமுறையாளர்’ என்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது ஒட்டாது. அவரது காலமே ‘சகிப்புத் தன்மைக் காலம்’ (Perid of Thaw) என்றுதான் அறியப்படுகின்றது.
சரி, இவ்வளவு எழுதும் குரோவர் ஃபர், ஸ்டாலின் சோசலிசத்திற்கு உன்னதமான சேவையைச் செய்தவர், மார்க்ஸ் ஏங்கல்ஸ், லெனின் எனும் உன்னதமான பாரம்பரியத்தில் அடுத்து வைக்கப்பட வேண்டியவர் என்று சொல்கின்றாரா என்றால், இல்லை அங்குதான் நூலின் உயிர் முடிச்சு உள்ளது.
அவருக்கு சோசலிசத்தின் மீதோ, மார்க்சியத்தின் மீதோ எந்தவிதமான மதிப்பும் பிடிப்பும் இருப்பதற்கு புறச்சான்று ஏதும் கிடைக்கவில்லை. அவ்வளவு ஏன்? ஸ்டாலின் மீதே எந்தவித மதிப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. குருஷேவ் மீதான வெறுப்பு மட்டுமே தெளிவாய்த் தெரிகின்றது. ஏனென்றால் ஸ்டாலினுக்குப் பின் வந்தவர்கள் செய்த ஒரே உருப்படியான காரியம் ஸ்டாலினைச் சுற்றி அவர்களே கட்டி அமைத்த ‘தனிநபர் வழிபாட்டை’ அரைகுறையாகவாவது தகர்த்தார்கள்’ என்பதே என்று கூறுகின்றார். இதிலும் குருஷேவ் மற்றவர்கள் அளவிற்கு பெருமை கோர முடியாது என்பதே அவரது குற்றச்சாட்டாய் உள்ளது.
எல்லாம் சொல்லி, இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் காரணத்தை ஸ்டாலினிடம், குருஷேவிடம் மட்டும் தேட முடியாது என்றும் சொல்லி, ‘லெனின் எழுத்துகளிலும், அவரது மகத்தான ஆசிரியர்களான மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோரின் எழுத்துகளிலும்தான் அவர்களது நேர்மையான மாணவரான ஸ்டாலின் தவறுகளுக்கு _ தன்னுடைய துரோகத்தை மறைக்க குருஷேவ் பயன்படுத்திக் கொண்ட ஸ்டாலின் தவறுகளுக்கு வழிகோலியவை எவை என்பதை தேட வேண்டும். ஆனால் அது வேறு ஒரு ஆய்வுக்கும், நூலுக்குமான பரப்பு,’ என்று முத்தாய்ப்பு வைக்கின்றார். சஞ்சய் காந்தியின் தவறுகளுக்கு மஹாத்மா காந்தியைப் பொறுப்பாக்குவதுபோல உள்ளது. செ. நடேசனின் மொழி பெயர்ப்பும் சற்று தடுமாறுகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட மத்தியக் குழுவின் 70 சதவீதத்தினரை கட்சிக் காங்கிரசின் பிரதிநிதிகளில் 60 சதவீதத்தினரை கொன்றதற்கான காரணத்தையும் பல லட்சம் பேர் கொண்ட தேசிய இனங்களை ‘இனச் சுத்திகரிப்பு’ செய்ததற்கான காரணத்தையும் மார்சின் எந்த நூலில் தேடுவது என்பதை அவர்தாம் சொல்லவேண்டும்.
குரோவர் ஃபர், இந்த நூலை எழுதிய நோக்கம் என்னவென்று தெரியவில்லை. பல்கலைக் கழக கல்விப் புல வளாகத்தில் அவர் ஆங்கில இலக்கியப் பேராசிரியர்தான். வரலாறோ, அரசியலோ அவரது கல்விப் புலம் அல்ல. தமிழ்ப் பதிப்பிற்கு அவர் எழுதியுள்ள முன்னுரை, தமிழ்ப் பதிப்புரையில் பொன்னுலகம் பதிப்பகத்தார் அவருக்கு அளித்துள்ள ‘நற்சான்றிதழ்’ ஆகியவை தவிர்த்து, அரசியல் ரீதியாக அவரது நிலைப்பாடு என்னவென்று தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. தெரியவில்லை. தமிழில் பதிப்பித்த பொன்னுலகம் பதிப்பகமும், மொழிபெயர்த்த தோழர். சே. நடேசன் அவர்களும், ஸ்டாலின்மீது பற்றுள்ளவர்கள். ஸ்டாலின் மீதான ‘அவப்பெயரை’ நீக்க வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கமாக இருந்திருக்கும். திறந்த மனதுடன், முன் முடிவின்றி நூலை அணுகுபவர்களிடம் அந்த நோக்கம் நிறைவேறுமா எனத் தெரியவில்லை. ஆனால், இதுவரை தமிழில் வராத குருஷேவின் ‘ரகசிய உரை’யும் புதிதாய் வெளி உலகிற்கு வந்துள்ள சோவியத் ஆவணங்கள் குறித்த குறிப்புகளும் நூல் மூலம் கிடைத்துள்ளது. ஏற்பு ஏற்பின்மைக்கு அப்பாற்பட்டு சோவியத் வரலாறு குறித்து அக்கறை கொண்ட அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்தான்.
இந்த இடத்தில் ஒன்று சொல்ல வேண்டும். சில வருடங்களுக்கு முன்பு ஒரு கருத்தரங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய பொதுச் செயலாளரும், இன்றைக்கு அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான தோழர். பிரகாஷ் கராத் கூறியது போல.
‘நாம் இன்று சோசலிசம் குறித்து பேசும்போது ஒரு அம்சம் குறித்து நாம் தெளிவாக இருக்க வேண்டும். அது நாம் போராடும் 21ஆம் நூற்றாண்டிற்கான சோசலிசம். 20ஆம் நூற்றாண்டின் சோசலிசம் அல்ல. 20ஆம் நூற்றாண்டின் சோசலிசத்திற்கு மீண்டும் செல்வது எனும் பேச்சிற்கே இடமில்லை… உங்களில் பலர் இளைய வயதினர். உங்களது தலைகளில் எங்களது தலைகளில் உள்ளது போல பழமையின் சுமை இல்லை. (நீங்கள் சுதந்திரமாக சிந்திக்கலாம்)…
நம்முடைய பாரம்பரியம், அனுபவங்கள் ஆகியவற்றில் நாம் எவற்றைத் தொடர வேண்டும், எவற்றைக் களைய வேண்டும் என்பதை நாம் முடிவு செய்ய வேண்டும்…,’’
ஸ்டாலின் குறித்தும், அந்த காலகட்டம் குறித்தும் அந்த அணுகுமுறையில் புதிதாய் வந்துள்ள ஏனைய நூல்களோடு இந்த நூலையும் இணைத்து வாசிக்க வேண்டும்.
(நன்றி: புத்தகம் பேசுது)