இப்புத்தகம் ஈரானிய திரைப்பட இயக்குநர் மஜித் மஜிதி எழுதி இயக்கிய உலகப் புகழ்பெற்ற “Children of heaven” என்ற திரைப்படத்தின் திரைக்கதையின் நாவலாக்கப்பட்ட வடிவம் ஆகும். முதலில் இப்புத்தகத்தை வாங்கிப் படித்தேன், பின் ‘யூடியூபில்’ இத்திரைப்படத்தைப் பார்த்தேன், பிறகு ஒருமுறை இப்புத்தகத்தைப் படித்துவிட்டு இந்த அறிமுகத்தை எழுதுகிறேன்.
இக்கதையின் நிலப்பரப்பு ஈரானில் விரிந்திருக்கிறது. பெரிய சிக்கலான கதையெல்லாம் இல்லை. மிக மிக எளிய கதை. ஒருஎளிய ஈரானியக் குடும்பம். மூன்று குழந்தைகளுடன் தாய் தந்தை வாடகை வீட்டில் வசித்து வரும் எளிய குடும்பம். மூத்த பையன் பெயர் அலி மான்டிகர், பத்து வயதிருக்கும். அடுத்து சாரா. எட்டு அல்லது ஒன்பது வயதுள்ள அழகான சிறுமி. அடுத்து கைக்குழந்தை. அலியின் தந்தை சைக்கிளில் டீ விற்கும் தொழில் செய்கிறார், அம்மா சலவைத் தொழில் செய்கிறார். இவர்களில் சாராவையும் அலியையும் மேலும் எழுபது ரூபாய் மதிக்கத்தக்க ஒரு ஷூவையும் சுற்றியே கதையின் பெரும்பகுதி வருகிறது.
அலி ஒரு நாள் தனது தங்கையின் கிழிந்துபோன பள்ளி ஷூவைத் தைப்பதற்காக கடைக்கு எடுத்துச் செல்கிறான். தைத்து முடித்து எடுத்து வரும் வழியில் ஒரு காய்கறிக்கடையில் ஷூவை வைத்துவிட்டு காய்கறி வாங்கும்போது அது தொலைந்து போகிறது. தொலைந்து போனதை தனது பெற்றோருக்குத் தெரிவிக்காமல் மறைக்கிறார்கள், ஏனெனில் தற்போதைய பணநிலையில் அலியின் பெற்றோரால் புது ஷூ வாங்கித் தர முடியாத சூழல்; மேலும் ஷூவைத் தொலைத்ததற்காய் அலியைத் திட்டவும் செய்யலாம்; ஆனால் கண்டிப்பாக பள்ளிக்கு ஷூ அணிந்து செல்ல வேண்டிய கட்டாயம்; இதனை சமாளிக்க அலியும் சாராவும் செய்யும் தந்திரச் செயல்களே இந்நாவலாக விரிகிறது.
சாராவுக்கோ காலையில் தேர்வு, அலிக்கோ மாலையில் தேர்வு நடக்கிறது. எனவே காலையில் சாரா அலியின் ஷூவை போட்டுக்கொண்டு பள்ளிக்குச் சென்று தேர்வெழுதிவிட்டு, பிறகு வேகவேகமாக வீட்டுக்கு வரும் வழியில் தயாராக நிற்கும் அலியிடம் ஷூவைத் தரவேண்டுமென ஏற்பாடு. எப்பாடுபட்டாவது இந்த ஒருமாதம் இந்த திட்டத்தைச் செயல்படுத்திவிட்டால் அடுத்த மாதம் அவர்கள் பெற்றோரிடம் சொல்லி புது ஷூ வாங்கிவிடவேண்டும் என்பது அலியின் திட்டம். அலி இதற்கான எல்லா திட்டமிடலையும் செய்கிறான், ஏனெனில் ஷூவைத் தொலைத்தவன் அவனே. இந்த செயல்திட்டத்திற்கு அரைகுறை மனதுடன் அண்ணனுக்காக சாராவும் சம்மதிக்கிறாள்.
காலையில் சென்று தேர்வு எழுதிவிட்டு தனது அண்ணனிடம் ஷூவைத் தர மதியம் பள்ளியைவிட்டு தடதடவென ஓடி வரும் சாராவோடு சேர்ந்து நமது இதயமும் தடதடக்கிறது. அவள் வரும் வழியிலேயே நின்று அவளிடம் ஷூவை வாங்கி அவசரம் அவசரமாக போட்டுக்கொண்டு ஓடி காலதாமதமாக பள்ளி சென்று தலைமை ஆசிரியரிடம் சில நாள் மன்னிப்பு பெறுகிறான். மீண்டும் அவன் காலதாமதமாக செல்ல தலைமை ஆசிரியர் பெற்றோரை அழைத்து வரச் சொல்கிறார். அலியின் வகுப்பாசிரியர் அலியின் நன்கு படிக்கும் திறனைச் சொல்லி அவனைக் காப்பாற்றுகிறார். ஒருநாள் சாரா பள்ளிவிட்டு வேகமாக ஓடிவர ஒரு ஷூ கழன்று வழியிலிருக்கும் சாக்கடையில் விழுந்து விடுகிறது. சாக்கடை நீரோடு ஷூ அடித்துச் செல்லப்பட கூடவே ஓடும் சாராவின் பதற்றமான ஓட்டம் நம்மையும் பதற்றமடைய வைக்கிறது. பிறகு ஒரு முதியவரின் உதவியுடன் ஷூவை அவள் மீட்கும் போதுதான் நம் மனம் ஆசுவாசம் கொள்கிறது.
இவ்வாறு அண்ணனுக்கு தினமும் ஓடோடி வந்து ஷூவைத் தரும் செயலால் சலித்துப் போகிறாள் சாரா. இதற்கிடையில் அலியின் தந்தைக்கு உறவினர் தாத்தா ஒருவர் மூலம் ஒரு பூச்சிக்கொல்லி தெளிக்கும் இயந்திரம் கிடைக்கிறது. இதனைப் பயன்படுத்தி கூடுதல் வருமானம் சம்பாதிக்க நினைக்கிறார் அலியின் தந்தை. ஒருநாள் அலியும், அவன் தந்தையும் பக்கத்து நகரத்துக்கு பூச்சிக்கொல்லி இயந்திரத்துடன் செல்கின்றனர். ஒவ்வொரு வீடாக தோட்ட வேலை இருக்குமா என்று கேட்டுக் கொண்டே செல்கின்றனர். எல்லோரும் வேலை இல்லை எனச் சொல்ல சோர்ந்து போய் ஒரு வீட்டின் எதிரில்போய் நிற்கின்றனர். அலி அங்கிருக்கும் பைப்பில் தண்ணீர் குடிக்கிறான். அப்போது அருகிலுள்ள வீட்டிலிருந்து ஒரு குழந்தையின் குரல் கேட்க, அக்குழந்தையோடு பேசுகிறான் அலி. அக்குழந்தை அலியை விளையாட அழைக்கிறாள். அலி தங்களுக்கு வேலை இருப்பதாகச் சொல்லி நடக்க ஆரம்பிக்க பின்னாலிலிருந்து ஒரு குரல் அலியை அழைக்கிறது. அங்கே அந்த குழந்தை தனது தாத்தாவுடன் நின்று கொண்டிருக்கிறாள். இவர்களை அருகே அழைத்த அக்குழந்தையின் தாத்தா தோட்டவேலை செய்யச்சொல்கிறார். அலியின் அப்பாவே அனைத்து வேலையையும் செய்ய, அலி அந்த வீட்டின் குழந்தையோடு விளையாடிக் கொண்டிருக்கிறான். இந்தக் காட்சி மிகவும் உணர்வுப் பூர்வமானது. இங்கு அக்குழந்தையின் தாத்தா அலியின் அப்பாவுக்கு தோட்ட வேலை தந்ததைவிட, தனது பேத்திக்கு ஒரு தோழனை விளையாட உருவாக்கித் தருகிறார். உலகில் ஒரு குழந்தைக்கு ஆகச்சிறந்த விளையாட்டு பொருள் சம வயதொத்த மற்றொரு குழந்தையே என்பது இங்கு மிகச் சரியாக நிரூபணம் ஆகிறது. வேலை முடிந்ததும் அவ்வீட்டுத் தாத்தா அலியின் அப்பா எதிர்பாராத அளவிற்கு பணம் தந்து திக்குமுக்காட வைக்கிறார். தனக்கு குறைந்த பணமே போதும் என்று அலியின் அப்பா கூற, இல்லையில்லை உங்கள் உழைப்புக்கேற்ற கூலிதான் என மகிழ்வாக வழங்குகிறார் அவ்வீட்டுத் தாத்தா. உள்ளம் மகிழ்ந்து போகிறார்கள் அலியும் அவனது அப்பாவும். திரும்பி வரும் வழியில் சைக்கிளின் பிரேக் கழண்டு விழுந்து விடுவதால் பிரேக் பிடிக்காமல் போய் மரத்தில் மோதி கீழே விழுகிறார்கள். அவ்வளவு தடைகளையும் தாண்டி வீடு வந்து சேர்ந்தால், வீட்டு வாடகைக்கு அவர்கள் சம்பாதித்த பணம் போகிறது. இப்போதாவது தன் தங்கைக்கு ஒரு புது ஷூ வாங்கிடலாம் என்ற அலியின் கனவு மண்ணாய் போகிறது.
அந்த சமயத்தில் பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் நகரத்தில் நடக்கப் போகும் மாரத்தான் போட்டிக்கு சில மாணவர்களை மட்டும் பள்ளியின் சார்பாக கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப் போவதாகச் சொல்கிறார். தேர்வு அன்று அலியால் நேரத்திற்கு கலந்து கொள்ள முடியாமல் போகிறது. பிறகு உடற்கல்வி ஆசிரியரின் அறைக்குச் சென்று தன்னை சேர்த்துக் கொள்ளச் சொல்லி கெஞ்சுகிறான். அவன் கெஞ்சலுக்குக் காரணம் பரிசு. அவனுக்குப் பிடித்தமானது முதல், இரண்டாம் பரிசல்ல, மூன்றாம் பரிசு. ஏனெனில் முதல் இரண்டு இடம் பெற்றவர்களுக்கு கோப்பைகள் பரிசாக வழங்கப்பட இருக்க மூன்றாம் பரிசாக அறிவிக்கப்பட்டது ஷீ. அந்தப் போட்டியில் எப்படியாவது கலந்து கொண்டு தனது தங்கைக்காக அந்த ஷூ பரிசு கொண்ட மூன்றாம் இடம் பெற வேண்டும் என நினைக்கிறான். எனவே அவன் தனக்கும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டி அவன் தன் உடற்பயிற்சி ஆசிரியரிடம் கெஞ்சுகிறான். அவன் கெஞ்சலில் மனம் இறங்கிய ஆசிரியர் அலியை தனியாக ஓடச்சொல்லி நேரத்தை கணக்கிட அலிக்கு முன் அவன் பள்ளியின் சார்பாக தேர்வான மற்ற எல்லோரையும் விட குறைவான நேரத்தில் ஓடி முடிக்கிறான். அதனால் அவனது ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் அலியையும் சேர்த்து அந்தப் போட்டிக்குக் கூட்டிச் செல்கிறார்கள். போட்டி நடக்குமிடத்தில் அழகழகான ஷூக்கள் அணிந்து பளபளப்பாக போட்டியாளர்கள் நிற்கும் இடத்தில் அலி ஒரு கிழிந்த ஷூவுடன் நிற்கிறான். மரத்தான் போட்டி தொடங்கி எல்லோரும் ஓட ஆரம்பிக்கிறார்கள். அலியும் ஓடுகிறான் முதலிடத்திற்காக அல்ல மூன்றாவது இடத்திற்கு. அவன் முதலிரண்டு மாணவர்களை முன்னே விட்டு மூன்றாவதாகவே ஓடிக்கொண்டிருக்கிறான். ஒருகட்டத்தில் பின்னால் வந்த ஒரு மாணவன் அலியை கீழே தள்ளி விட்டு அவன் மூன்றாமிடத்திற்கு முன்னேறுகிறான். தன் மூன்றாம் இடம் பறிபோனதை உணர்ந்த அலி பதட்டமடைகிறான். போட்டி இறுதிக்கட்டத்தை எட்டிக் கொண்டிருக்கிறது. அலியின் கண்முன்னால் தான் தொலைத்த ஷூவுக்காய் தன் தங்கை தினம் தினம் ஓடிவருவது நிழலாடுகிறது. அலியின் ஓட்டம் வேகமெடுக்கிறது. கண்மண் தெரியாமல் ஓடுகிறான். கடைசி கட்டத்தில் அவனை உற்சாகப்படுத்தியபடியே அவனது உடற்கல்வி ஆசிரியரும், தலைமை ஆசிரியரும் கூடவே கோட்டுக்கு வெளியே ஓரமாக.ஓடுகிறார்கள். போட்டியின் தூரத்தை அடைந்ததும் அலி மயங்கி சரிகிறான். அவனது உடற்பயிற்சி ஆசிரியர் அவனை தூக்கி தலை மேலே வைத்துச் சுற்றுகிறார். மயக்கம் தெளிந்த அலி நான் மூன்றாவது வந்துவிட்டேனா? என்கிறான். அவனது ஆசிரியர் மூன்றாவதா? நீதான் முதலிடம் என்று சொல்லி மகிழ்ச்சியடைய அலியின் முகம் வாடிப்போகிறது. புகைப்படக்காரர்களும் பத்திரிகைகாரர்களும் அலியை வளைத்து வளைத்து புகைப்படம் எடுக்க, தலை கவிழ்நத அலி நிமிரவே இல்லை. இந்த இடம் ஒரு சோகச் சித்திரம். அலியோடு சேர்ந்து கண்கலங்காமல் இந்த இடத்தை உங்களால் கடக்க முடியாது. போட்டி முடிந்து அலிக்கு கோப்பை வழங்கப்படுகிறது. அவன் உடற்பயிற்சி ஆசிரியர், தலைமை ஆசிரியர் எல்லாம் அலியுடன் நின்று மகிழ்வுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் அலி தலை கவிழ்ந்தே இருக்கிறான். பிறகு அலியை மட்டும் தனியாக புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என கூற அலி அப்போதும் கோப்பையுடன் தலை கவிழ்ந்தே இருக்கிறான். புகைப்படக்காரர் அலியை தலை நிமிரச் சொல்ல லேசாக தலையை உயர்த்திப் பார்ப்பான். அந்த பார்வை… அடடா… தன் தங்கைக்கு ஷூ பரிசு பெற்றுத்தர முடியவில்லையே என்ற ஏக்கம், தங்கையின் மீது கொண்ட பாசம் எல்லாம் அந்த ஒற்றைப் பார்வையில் தெரியும்.
போட்டி முடிந்து வீட்டுக்கு வரும் அலியின் கையில் ஷூ பரிசு உள்ளதா என பார்த்து ஏமாறும் தங்கை சாராவின் மனநிலையை நம்மால் குழந்தையின் பார்வையால் புரிந்து கொள்ள முடியாது, குழந்தையாய் மாறித்தான் புரிந்து கொள்ள முடியும். தன் இயலாமையாலும், ஏற்கனவே பழையதாக இருந்த ஷூ ஓடியதால் இன்னும் கிழிந்திருப்தைக் கண்டும், காலில் ஓடியதால் ஏற்பட்ட கொப்பளங்களுடனும் அலி வருத்தத்துடன் மீன் தொட்டியில் காலை நனைத்தபடி அமர்ந்திருக்க, மீன்கள் அவனது புண்களைக் கடித்துக் கொண்டிருக்கும்!
இத்தோடு படம் நிறைவடைகிறது… அதன் திரைக்கதையின் நாவல் வடிவமான தி.குலசேகர் எழுதிய சொர்க்கத்தின் குழந்தைகள் நாவலும் நிறைவடைகிறது. படத்தை பார்த்த பின்னும் நாவலைப் படித்த பின்னும் என்ன செய்ய முடியும், வெகுநேரம் அமைதியாய் இருப்பதைத் தவிர.
இவையே சிறப்பென்றால் நாவலுக்கு பின் பகுதியில் நூலாசிரியர் தி.குலசேகரால் எழுதப்பட்டுள்ள கட்டுரை குழந்தைகளின் உலகைப் பற்றிய மிகச் சிறந்த கட்டுரை. கற்பிக்கும் தொழிலில் உள்ளவர்கள் ஏன் இந்த படத்தையும், நாவலையும் படிக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் இவை. இதன் சிறு பகுதி கீழே…
“குழந்தை மனது பிரபஞ்சத்தையே நேசிக்கச் செய்யும் வல்லமை கொண்டது. அதன் விசாலம் எல்லையற்றது. எல்லாத்திசைகளிலிலும் வியாபித்திருப்பது. அனிச்ச மலரை விட மென்மையானது. அதனைக் காப்பாற்றுவதும், உணர்வில் தக்க வைத்துக் கொள்வதுமே ஒவ்வொரு உயிரின் உன்னதத்தை உயிர்ப்போடு இயங்கச் செய்வதற்கான எளிய சூத்திரம். குழந்தை மனது பசுந்தளிருக்கு ஒப்பானது. மிருதுத்துவம் மிக்கது. அடித்தல் திருத்தலுக்கு ஆட்படுத்தப்படாதவொரு தூய்மையான வெற்றிடம் அது. நம் வாழ்வை அற்புதங்கள் நோக்கி நகர்த்திச் செல்லக் கூடிய சக்தி படைத்தவை. அவை நம்மின் ஆதாரங்கள்”
எனச்சொல்லும் நூலாசிரியர் தி.குலசேகரின் வார்த்தைகள் பொய்யில்லை என்பதை இந்நாவலில் வரும் அலி மற்றும் சாராவைத் தரிசிப்பதன் வழியே அறிய முடியும். வாசியுங்கள்… ஒரு புது அனுபவம் நிச்சயம். பூமியின் சொர்க்கம் குழந்தை மனதில் பொதிந்திருக்கிறது என்பதே இந்நாவலின் அடிநாதம் என முன்னுரை சொல்கிறது… என்னுரையும் அதுவே!