“சோஃபியின் உலகம்” யொஸ்டைன் கார்டேர் நார்வேஜிய மொழியில் எழுதியது, அதை Paulettter Moller ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க, ஆர். சிவக்குமார் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். அனைவரும் புரிந்து கொள்ளும் மிக எளிமையான அதே சமயம் அழகிய தெளிவான நடையில் மொழிபெயர்த்திருக்கும் விதம் ஒரு தெள்ளிய நீரோட்டத்தில் பயணித்த அனுபவத்தை தருகிறது.
தத்துவமும் உளவியலும் உண்மைக்கு பக்கத்தில் கொண்டு போய் நம்மை சேர்ப்பதால் அதன் மீது மிகப்பெரும் ஈர்ப்பு உண்டு. கடவுள் தேடல் குறித்து குழப்பமான மனநிலை உள்ளவர்களும் அதில் பயணிக்க நினைப்பவர்களையும், நான் என்ற தேடலில் உள்ள தன்முனைப்பு மெல்ல மெல்ல நம்மை ஆக்கிரமித்து அதைத் தேடி நம் பயணத்தை நகர்த்துகிறது. குறிக்கோளற்ற பயணமாக செல்லும் வாழ்க்கையில் இந்த தேடல் தான் உயிர்ப்புடன் வைக்கிறது.
பதினைந்து வயது பெண்ணான சோஃபிக்கு தத்துவ பாடம் கடிதத்தில் வருகிறது. புனைவாக ஆரம்பிக்கும் கதை தத்துவ பாடம் வாசிக்க ஆரம்பிக்க நேராக யதார்த்தத்துக்குள் நுழைகிறது. அப்பா வெளிநாட்டில் இருக்க, அம்மாவுடன் வசித்து வரும் சோஃபி கடிதங்கள் முலம் மெல்ல மெல்ல தத்துவ பாடம் கற்கிறாள். பாடம் ஆதி மனிதனுக்கு இருந்த நம்பிக்கைகள் அது மெல்ல மெல்ல கடவுள் என்ற உருவத்துக்குள் போனது, அதன் பின் தத்துவவியலார்கள் தோன்ற அவர்களின் சிந்தனைகள் என்று மெல்ல நகர்கிறது. ஆனால் அதிகம் மேற்கித்திய தத்துவத்தையே பேசுகிறது. கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் கீழை நாடுகளில் நாகரீக உச்சத்தில் இருந்ததாக சொல்லும் ஆசிரியர், கீழை நாட்டு தத்துவியலாளர்களை பற்றி அவ்வளவாக சொல்லவில்லை. அப்படி அவர்களையும் சேர்த்திருந்தால் இன்னும் முழுமையடைந்திருக்கும்.
புராணக்கதைகள், இயற்கை தத்துவவாதிகள், கிரேக்கர்களில் – மிலீட்டஸ், இத்தாலியின் – பர்மெனிட்டீஸ், ஹெரக்லீய்ட்டஸ் என்ற தத்துவவாதிகளிக்கிடையே அடிப்படை கருத்தில் இருந்த மிகப்பெரிய முரணில் ஆரம்பிக்கும் தத்துவ முரண் புத்தகம் நெடுகிலும் கருத்து முரண்களையும் ஒருவரின் கருத்திலிருந்து மற்றவர் எப்படி முரண்படுகிறார் என்பதை பேசிகிறது. முரண்பட காரணம் எல்லாம் வாசிக்க தொடங்க நமது சிந்தனையோட்டத்தில் மிகப்பெரும் மாற்றமும் தத்துவியலார்களின் கருத்தில் ஏதோ ஒன்றோடு இயைந்தோ அல்லது முரண்பட்டோ, மறுத்தோ புத்தகம் முழுதும் பயணிக்க்கிறோம். எம்பெடொக்ளீஸ் மூலம் முதன் முதலாக தத்துவத்துக்குள் விஞ்ஞானத்தின் முதல் புள்ளி நுழைந்திருப்பதும் அதன் பின் தத்துவம் விஞ்ஞானத்தோடு சேர்ந்து பின்னி பிணைந்தும், விஞ்ஞானத்திலிருந்து விலகி மெய்மையிலும், உளவியலிலும் என்று தத்துவவியலார்களுடன் இன்று வரை தொடர்கிறது.
கி,முவில் ஆரம்பித்து, சாக்ரடீஸ், பிளேட்டோ , அரிஸ்டாட்டில் என்று வரிசையாக தத்துவவியலார்களின் கருத்துகள் தத்துவத்துக்குள் மதம் எப்படி மெல்ல மெல்ல நுழைகிறது அதன் பின் இறையுணர்வு கோட்பாடுகள், இந்தோ ஐரோப்பிய (இந்து புத்த மதமும் இந்த இந்தோ ஐரோப்பியத்துக்குள் அடக்கம்) தத்துவவியலார்கள் (இவர்களை பற்றி விரிவான தகவல்கள் இல்லை) என்று விரிகிறது. பிரபஞ்ச ஆன்மாவோடு ஒன்றிணையும் அனுபவமே இறையுணர்வு அனுபவம் ஆனால் கடவுளுக்கும் படைப்புக்கும் பெரும் இடைவெளி இருப்பதாகப் பல மதங்கள் சொல்கின்றது. கீழ்திசை (இந்து, புத்த) மறுபிறப்பின் சுழற்சியிலிருந்து விடுவிக்கப்படுவது தான் நோக்கம் என்கிறது. ஆனால் மேற்குலக மதங்கள் ( யூதம், இஸ்லாம், கிருஸ்து). பாவத்திலிருந்தும், பழியிலிருந்தும், மீட்கப்படுவது தான் என்கிறது.
காலங்களாக பிரித்து ஆசிரியர் தொகுத்திருப்பது இன்னும் எளிதாக இருக்கிறது வகைபபடுத்த. கிமுவில் ஆரம்பித்த கிரேக்க காலம் என்று சொல்லும் ஆசிரியர் அதன் பின் இடைக்காலம் அதில் கிருஸ்து பிறப்புக்கு முன் பின் ரோமானியக்காலங்கள், அப்போது தோன்றிய தத்துவவியாலார்கள் பதினான்காம் நூற்றாண்டில் ஆரம்பித்த மறுமலர்ச்சிக்காலம் அப்போது இருந்த தத்தவவியலார்கள் பரோக்கலை (ஒழுங்கு முறை இன்மை இதன் தன்மை) அப்போது ஆரம்பித்த பொருள் முதல் வாதம் கருத்து முதல் வாதம் வரலாறு முழுதும் தொடர்கிறது.
17ஆம் நூற்றாண்டின் – தெய்கார்த் & ஸ்பினோஸா என்ற இரு தத்துவவாதிகளின் கருத்துகளும் தவிர்க்கவே முடியாதது.
தெய்கார்த்:
தத்துவம் எளிதானதிலிருந்து சிக்கலானதற்கு போக வேண்டும். அப்போது தான் புதிய நுண்ணறிவை உருவாக்குவது சாத்தியம்.
நம்முடைய புலன்களால் புரிந்து கொள்வதை விட பகுத்தறிவால் புரிந்து கொள்வது அதிக நிஜத்தன்மை கொண்டது.
கடவுளை குறித்த எண்ணம் உள்ளார்ந்த ஒன்று.
இருத்தல் என்பது இல்லாமல் ஒரு முழு நிறைவு பெற்ற பொருள் இருக்கவே முடியாது.
ஸ்பினோஸா:
இயற்கையின் முழு வாழ்க்கையில் நீ ஒரு நுண்ணிய பகுதியை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறாய். ஒரு பிரம்மாண்ட முழுமையின் ஒரு பகுதிதான் நீ.
நான் நம்முடைய உணர்வுகளிலிருந்தும், மிகு உணர்ச்சிகளிலுருந்தும் நம்மை விடுவித்து கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் மன நிறைவடைந்து மகிழ்ச்சியாக இருப்போம்.
உன்னுடைய கைப்பெருவிரலை எப்படி வேண்டுமானாலும் அசைப்பதற்கு உனக்கு உரிமையுண்டு. ஆனால் உன்னுடைய கை விரல் அதனுடைய இயல்புப்படிதான் அசையும். அதுபோல இருப்பின் அமைப்பாக்கத்தில் உன்னுடைய இடம் உனக்கு இருக்கிறது. ஆனால் கடவுளின் உடலில் நீ ஒரு விரல் தான்.
அரசியல் சூழல்கள் நம்முடைய சொந்த வளர்ச்சியை பாதிக்கலாம். புறச் சூழல்கள் நம்மைக் கட்டுபடுத்தலாம். நம்முடைய உள்ளார்ந்த திறன்களை வளர்த்துக்கொள்வதற்குரிய சுதந்திரம் இருந்தால் தான் நம்மால் சுதந்திரமான உயிருருக்களாக வாழ முடியும்.
இவர்கள் இருவரின் தத்துவங்களும் முற்றிலும் புதிய கோணத்தையும் புதிய தேடலையும் விதைக்கிறது.
அதன் பின் வந்த ஜான் லாக் ஆண் பெண் என்ற இரண்டு பால்களுக்குமிடையே சமத்துவம் வேண்டும், பெண்களின் மீதான ஆண்களின் மேலாதிக்கம் மனிதன் உண்டாக்கியது அது மாற்றப்பட கூடியது என்றும் லாக் நம்பினார்.
ஜான் ஸ்டூவர்ட் மில் அவரால் மிகப்பெரிய அளவில் தாக்கம் பெற்றவர். ஆண் பெண் சமத்துவத்துக்கான போராட்டத்தில் அடுத்த முக்கிய பங்கை வகித்தவர் மில். பதினெட்டாம் நூற்றாண்டு ஃப்ரெஞ்ச் அறிவொளிக் காலத்தில் முழு வடிவம் பெற்ற பல முற்போக்கான கருத்துகளுக்கு லாக் ஒரு முன்னோடி.
ஹ்யூம், பார்க்கிலி மற்றும் காண்ட் என்று ஐரோப்பிய தத்துவவியலார்கள் அதன் பின் அறிவொளிக்காலத்தில் தத்துவத்தில் அதாவது பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டுகளில் அதிக தாக்கம் ஏற்படுத்தி இருக்கிறார்கள். இவர்களின் காலம் படிக்கும் போது மிக ஆழ்ந்து தான் உள்வாங்க வேண்டி இருக்கிறது.
பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி வாக்கில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை பயணித்த கற்பனை நவிற்சி வாதம் மனிதர்களின் உணர்ச்சி, கற்பனை, அனுபவம் மற்றும் ஏக்கம் ஆகியவற்றை பற்றி அதிகம் பேசுகிறது. இலக்கியமும் இசையும் போட்டி போட்டு செழித்து வளர்ந்த காலமாக அப்போது தோன்றிய இலக்கியவாதிகள், இசை மேதைகளில் ஆரம்பித்து மெல்ல மெல்ல மார்க்சியத்துக்குள் தத்துவம் நுழைந்து டார்வின், சிக்மன்ட் ப்ராய்ட், நீட்ஷே அதற்கு பின் வந்த சர்தார் வரை நீளுகிறது. இவர்களின் கருத்துகள், அதற்கான சிந்தனைகள், கருத்துகளுக்கிடையே இருந்த முரண் என்று புத்தகம் முழுதும் அழகாக தொக்குக்கப்பட்டிருக்கும் விதம் மிக எளிமை.
புனைவுக்கும் யதார்த்ததுக்குமிடையே நகரும் கதையில் சோஃபி தான் நாயகி அவளின் தத்துவ பேராசிரியர் ஆல்பெர்ட்டோ தான் கதையின் முக்கிய பாத்திரம் என்று நாம் நினைக்க, அவர்கள் இருவருமே ஒரு மேஜர் எழுதும் கதையின் கதாப்பாத்திரங்கள் என்று தெரிய வருவது வியப்பின் உச்சம். யதார்த்த கதைக்குள் புனைவை நுழைத்து, அந்த புனைவையும் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை போல நகர்த்தி அதிலும் உச்சத்தை தொட்டிருக்கும் நடை முற்றிலும் புதிய யுக்தி. வாசிப்பவர்களுக்கு அலுப்பு தட்டாமலும், அதே சமயம் குழப்பாமலும் புரியும் படியும் மாற்றி புனைவிலும், அதிபுனைவிலும், யதார்த்தத்திலும், என்று மாறி மாறி பயணிக்க வைக்கிறார். இது மெட்டா பிக்ஷன் வகை கதையை சார்ந்தது.
வெறும் எழுத்துகளை போல்ட் செய்திருப்பதன் மூலமே புனைவையும், உண்மையையும் பிரித்திருக்கிறார். தத்துவங்களை மட்டும் தொகுக்க நினைப்பவர்களுக்கு இது இன்னும் எளிது. ஹில்டே கதைக்குள் நுழையும்போது புனைவு தலைகீழாக மாறுகிறது. ஹில்டேவின் பிறந்தநாளுக்கு பரிசளிக்க அவளது தந்தையான மேஜர் எழுதிய புத்தகத்தில் வரும் கதை மாந்தர்களே சோஃபியும், ஆல்பெர்ட்டோ- வான தத்துவ பேராசிரியரும் என்று தெரிய வருமிடம வாசகருக்கு பயங்கர திருப்பம். அதன் பிறகு கதை பிரிகிறது. ஒரு திகில் கதை போல விறுவிறுப்புடனும் புனைவின் உச்சமும், அதிபுனைவும், யதார்த்தமும் போட்டி போட்டு கதை நகருகிறது. அறிவொளிக் காலத்தில் இந்த மூன்றும் சந்திக்கும் உச்சம் நிகழ்கிறது என்று சொல்லலாம். வாசகரை கொஞ்சம் குழப்பியது போல மாய தோற்றம் தருகிறது .
தத்துவம் மதத்துக்குள் எப்படி நுழைந்தது, கடவுளை எப்படி சுவீகரித்து கொண்டது, கடவுள் யார்? கடவுள் பற்றி சொல்லப்படுவது என்ன? புராணக் கதைகள் என்பது எப்படி வந்தது? உண்மையில் பூமி எப்படி தான் தோன்றியது,? கிருஸ்து பிறப்பதற்கு முன் இருந்த மதம்? அதற்கு பின் வந்த கிருஸ்துவ மதம் எப்படி பரவியது? மேலை நாட்டு மதங்களின் வேர்கள் எங்கே ? ஒரு சில தத்துவவியலார்களை தவிர மற்றவர்கள் சம பாலினமான பெண்கள் பற்றி அவ்வளவாக சொல்லாதது என்று நிறைய கேள்விகளை வாசகர்களுக்கு சொல்வதோடு கேள்விக்ககான பதில்கள் எல்லாவற்றையும் சொல்லாமல் சில பதில்களை நமது சிந்தனைக்கே விட்டிருப்பது வாசகனுக்கு அதிக அறிவு கிளர்ச்சியை தருகிறது.
தத்துவத்தின் ஊடாக ஆசிரியர் மனிதன் சிந்தனையின் உச்சம் நோக்கி நகர்வதையும், அதனால் ஏற்படும் சாதக பாதகங்களையும் விளக்கி இருப்பதோடு, மார்க்சியம் என்று மறுமலர்ச்சி ஏற்படுத்திய காலங்களையும் விட்டு வைக்கவில்லை. இத்தகைய சாதக பாதகங்களை சமன்படுத்த அந்ததந்த காலகட்டத்திலும் தத்துவவியலார்கள் கூறி வரும் கருத்துகளை, சுற்று சூழலை பாதுக்காக வேண்டிய அவசியத்தை, என்று ஆசிரியர் இயற்கை, கடவுள், விஞ்ஞானம், தொழில்நுட்பம், தொழில்துறை என்று மனிதர்கள் வாழும் வாழ்க்கை தொடர்பான அனைத்து துறைகள் சார்ந்தும் தத்துவ சிந்தனைகளை தொகுத்தும், சில நம் சிந்தனையின் போக்குக்கு உட்பட்டும், அதற்கு மாற்றாகவும் என்று அனைத்தையும் சோஃபியின் உலகம் பேசுகிறது.
இது நாவல் என்று சொல்வதை விட, ஒரு தத்துவ ஆய்வு கட்டுரையின் அத்தனை குணாம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு வரலாற்று தொகுப்பு என்று கூட சொல்லலாம்.
வாசிப்பவர்களுக்கு அறிவு கிளர்ச்சியையும், மனதுக்குள் ஒரு மிகப்பெரிய மாற்றத்தையும், வாசிப்பவர்களை தேடல்களுக்குள் ஆழமாகவும் நகர்த்தும் நாவல்.
(நன்றி: கமலி)