சொல்லிச் சொல்லி எஞ்சியவை: யுவன் சந்திரசேகர் கதைகள்

சொல்லிச் சொல்லி எஞ்சியவை: யுவன் சந்திரசேகர் கதைகள்

‘நவீனத்துவ இலக்கியம் அடைந்தது கூர்மையை தவறவிட்டது சுவாரசியத்தை’ என்று ஒருமுறை பேராசிரியர் ஜேசுதாசன் நேர்ப்பேச்சில் சொன்னார். பெரிதும் செவ்விலக்கியங்களில் மனம் தோய்ந்த அவருக்கு நவீன இலக்கியங்கள் மீது விலகல் இல்லாவிட்டாலும் பெரிய மதிப்பு இருந்ததில்லை. அவர் விரும்பிய தமிழ் எழுத்தாளர்கள் ஆரம்பகால சுந்தர ராமசாமி, தி.ஜானகிராமன், கி.ராஜநாராயணன். அவர்களின் பொதுவான அம்சம் சுவாரசியமே.

அவர் சுவாரசியம் என்று சொன்னது செயற்கையான வேடிக்கைகளை அல்ல. அத்தகைய வேடிக்கைகளை எழுதிய எவரையுமே அவர் விரும்பவில்லை. அவரது நோக்கில் சுவாரசியம் என்பது வாழ்க்கையில் மனித மனத்தை களிப்பிலும், வியப்பிலும், துயரிலும், ஆழ்த்தும் அம்சங்களை முடிந்தவரை அப்படியே இலக்கியத்தில் கொண்டுவர முயல்வதேயாகும். ‘ஜீவிதம் ரசங்களுக்க ஒரு களம்ணு நெனைச்சுப்போட்டா பின்ன நல்ல கதைகளுக்கு ஒரு பஞ்சமும் இல்ல’ என்று சொன்னார்.

அடுத்தகட்டத்தில் பின்நவீனத்துவ விமரிசகர்கள் சுட்டிக்காட்டியது இந்த அம்சத்தையே.’வாசிப்பின்பம்’ என்ற சொல்லாட்சி மூலம் குறிப்பிடப்படுவது இதையே. வழக்கம்போல குத்துமதிப்பாக இந்தச் சொல்லை புரிந்துகொண்டு மிக அபத்தமாக நமது விமரிசகர்கள் ‘போட்டுபார்த்துக்’ கொண்டிருக்கிறார்கள் இப்போது. உடன்பாடான கருத்து உள்ள படைப்பு இவர்களுக்கு ‘வாசிப்பின்பம்’ அளிக்கிறது. ஆம், அதே ஸ்டாலினிஸ வாய்ப்பாடுதான். அதற்கு அப்பால் சென்ற தமிழ் கோட்பாட்டுவிமரிசகர்கள் எவருமில்லை. அல்லது அவர்களுக்குப் புரியக்கூடிய கற்றுக்குட்டித்தனமான விளையாட்டுத்தனங்கள்.

ஒரு படைப்பு அளிக்கும் வாசிப்பின்பம் என்பது பெரிதும் தனிநபர் சார்ந்தது. ஆகவே அதன் தளங்களும் இயல்புகளும் பல்வேறுவகையானவை. வாசகனை ஈடுபடுத்திக் கொண்டு செல்லும் தன்மையையே வாசிப்பின்பம் என பொதுவாக சொல்கிறோம். உற்சாகமான படைப்புகள் வாசிப்பின்பம் அளிக்கின்றன. கசந்து வழியும் படைப்புகளும் வாசிப்பின்பத்தையே அளிக்கின்றன. புதிர்களாக அவிழும் படைப்புகளும் சரி, நேரடியான வேகத்தையே கொண்டுள்ள படைப்புகளும் சரி, சரியாக எழுதப்பட்டால் அளிப்பது வாசிப்பின்பத்தையே. பொதுவாக நம்மைச் சூழ்ந்துள்ள வாழ்க்கையின் அலகிலாத விளையாட்டைக் கண்டு சொல்லும் எல்லா படைப்புகளும் வாசிப்பின்பம் அளிப்பவையே.

நவீனத்துவ படைப்புகள் கோட்பாடுகளில் இருந்து புனைவை உருவாக்கின. அல்லது அந்தரங்க மன அலைவுகளில் இருந்து. ஆகவே அவை வாசகனுக்கு இறுக்கமான மௌனத்தை அளித்தன. வாழ்க்கையிலிருந்து எழும் படைப்புகளில் வாழ்க்கையில் உள்ள ‘லீலை’ இருந்தே தீரும். இந்த வேறுபாட்டையே பேராசிரியர் குறிப்பிடுகிறார்.

தமிழில் நவீனத்துவத்தின் அலை ஓய்ந்த பின் வெளியான எழுத்துக்களில் வாசிப்பின்பம் என்பது இயல்பாகவே ஓர் அடிப்படைத்தன்மையாக உருவாகி வந்தது. அந்தரங்க இறுக்கம் நிறைந்த படைப்புகள் பின்னால் நகர்ந்தன. அகச்சொல்லாடலையே ஒருவகை எள்ளலும் குதூகலமுமாகச் சொல்லும் படைப்புகள்தான் இப்போக்கின் முதல்கட்ட முயற்சிகள். மிகச்சிறந்த உதாரணம் கோபிகிருஷ்ணன் மற்றும் திலீப்குமார். நவீனத்துவ எழுத்தின் உச்சியிலிருந்து அடுத்தகட்ட எழுத்துக்கான நகர்வை உருவாக்கிய முன்னோடி எழுத்துக்கள் அவை.

இன்றைய எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், அ.முத்துலிங்கம்,ஷோபா சக்தி, இரா.முருகன் என பெரும்பாலும் அனைவருமே வாசிப்பின்பம் அளிக்கும் படைப்பாளிகளே. சென்ற காலகட்டத்தில் இலக்கியப்படைப்பு என்பது இலக்கிய இதழில் மட்டுமே வர முடியும் என்ற நிலை இருந்தமைக்குக் காரணம் அந்தக்கால ஆக்கங்களின் இறுக்கம்தான். இன்றைய எழுத்தாளர்கள் எல்லா ஊடகங்களிலும் இயல்பாகவே எழுத முடிகிறது. இவ்வரிசை எழுத்தாளர்களில் என் தேர்வில் அ.முத்துலிங்கத்துக்கு அடுத்தபடியாக உற்சாகமான வாசிப்பின்பம் அளிக்கும் முக்கியமான படைப்பாளி என நான் யுவன் சந்திரசேகரையே குறிப்பிடுவேன். சரியாக வராது போன கதைகள் அவரில் இருக்கலாம். ஒருபோதும் சலிப்பூட்டும் கதைகள் காணப்படுவதில்லை.

யுவன் சந்திரசேகரின் இதுவரையிலான எல்லா கதைகளையும் ஒரே தொகுதியாக கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. சமீபத்தில் வெளிவந்த மிக அழகிய புத்தகங்களில் ஒன்று இது. பொதுவாக தமிழில் மிகுந்த வாசக ஆர்வமூட்டும் எழுத்தாளர்கள் பலரும் கதை ‘எழுத்தாளர்கள்’ அல்ல, கதை ‘சொல்லி’களே. கி.ராஜநாராயணன்,அ.முத்துலிங்கம்,நாஞ்சில்நாடன் போல. யுவன் சந்திரசேகர்ரையும் கதைசொல்லி என்றே சொல்ல வேண்டும். கதைசொல்லிகள் எப்போதுமே சொல்லும் உற்சாகத்தில் ஆழ்ந்து போகிறவர்கள். நுண்ணிய அகத்தைவிட அழகிய புறங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். செறிவை விட சரளத்தை சாதிப்பவர்கள். எத்தனை தூரம் இயல்பாக அவர்களின் எழுத்து நிகழ்கிறதோ அத்னை தூரம் அவை சிறந்த கலைப்படைப்பாக ஆகின்றன. யுவன் சந்திரசேகரையும் அவ்வகையில் தயக்கமில்லாமல் சேர்க்கலாம்.
ஆனால் முந்தைய கதைசொல்லிகளில் இருந்து யுவன் சந்திரசேகரை பிரித்துக்காட்டும் பல கூறுகள் உள்ளன. யுவன் சந்திரசேகர் ஒரு கதைசொல்லி. ஆனால் அவரது கதையுலகுக்குள் கதைசொல்லிகள் வந்தபடியே இருக்கிறார்கள். கி.ராஜநாராயணனின் உலகில் நம்மால் சில கிராமத்துக் கதைசொல்லிகளை அவ்வப்போது காணமுடியும்.[நாஞ்சில்நாடன், அ.முத்துலிங்கம் ஆகியோரின் புனைவுலகில் இந்த அம்சம் இல்லை] ஆனால் யுவன் சந்திரசேகர் கதைகளில் பலவகையான கதைசொல்லிகள் வந்தபடியே இருக்கிறார்கள். ஆசிரியரின் பிரதிவடிவமாக கதைக்குள் வரும் கிருஷ்ணன் ஒரு கதை சொல்லி. அவனுடைய கதைசொல்லலின் இடைவெளிகளை ஏதோ வகையில் நிரப்பக்கூடியவரான இஸ்மாயில் இன்னொரு கதைசொல்லி. கிருஷ்ணனின் அப்பா அவரது புனைவுலகின் ஒரு முக்கியமான கதைசொல்லி. பெரும்பாலான கதைகளில் அக்கதைகளைச் சொல்லும் தனித்துவம் மிக்க கதைசொல்லிகள் வருகிறார்கள். உதாரணம் தாயம்மா பாட்டி.

பலகதைகளை ‘தாயம்மா பாட்டியின் நாற்பத்தொரு கதைகள்’ ‘அப்பா சொன்ன கதை’ ‘கடல்வாழ் கதைத் தொகுப்பு’ ‘சாதுவன் கதை-ஒரு முன் விவாதம்’ என்று தலைப்பிலேயே கதைகளாகக் குறிப்பிட்டிருக்கிறார் *. தாயம்மா பாட்டி தன் துயரம் நிறைந்த நெடிய வாழ்க்கையை பல்வேறு கதைத்துணுக்குகளாக மார்றி விட்டுச் செல்கிறாள். துயரங்களை கதைகளாக மாற்றியதுமே அவளுக்கு ஒரு நிறைவு கிடைத்துவிடுகிறது. உதாரணம் வேட்டி சட்டையெல்லாம் போட்டுக்கொண்டு ஜமீன்தார் வீட்டிலே பெண்ணெடுத்த புலியின் கதை. மறுநாள் ஒரு எலும்புக்கூடு வெளியே விழுகிறது. ‘நான்தான் உங்க பொண்ணு, மாப்பிள்ளை ரொம்ப நல்லவர்’என்று சொல்லியது அது. தாயம்மா பாட்டி சொல்லும் கதைக்குள் தாயம்மா பாட்டி எங்கே இருக்கிறாள் என்று தேடுவதே வாசகனை அக்கதைகளுக்கு அப்பால் கூட்டிச்செல்வதாக அமைகிறது. இத்தொகுதியின் மிகச்சிறந்த கதை இதுதான்.

கதைசொல்லிகளின் அரங்காக கதையை மாற்றுவதன் வழியாக கதைப்பரப்பை பற்பல குரல்கள் கலந்து ஒலிக்கும் ஓரு பரப்பாக யுவன் சந்திரசேகர் உருவாக்குகிறார். ஒன்றோடொன்று ஊடுருவும் கதைக்குரல்களின் ஒரு வலை என்ற வடிவத்தையே அவரது எல்லா கதைகளும் கொண்டிருக்கின்றன. உணர்ச்சிகரமாகவும் தத்துவார்த்தமாகவும் நினைவில் தோய்ந்தும் அவர்கள் கதைகளைச் சொல்கிறார்கள். அவர்கள் கதைகளைச் சொல்லும்போது வாழ்க்கையைப்பற்றி பேசுகிறார்கள். வாழ்க்கையைப்பற்றிப் பேசும்போது அதை மெல்ல கதையாக ஆக்குகிறார்கள். கதையும் வாழ்க்கையும் பிரிக்குகோடு மயங்கி ஒன்றுடன் ஒன்று முயங்கும் தருணங்களே யுவன் சந்திரசேகரின் கதைகளின் முக்கியமான சிறப்புக்கூறு என்று சொல்லலாம். ஏன் ஒருவன் தன் சொந்த துயரத்தை புனைவாக ஆக்குகிறான், ஏன் ஒரு புனைவுக்குள் ஒருவன் தன்னைக் கண்டு கொள்கிறான் என்ற மர்மத்திலேயே அவரது கதைகளின் ஆழ்பிரதிகள் மறைந்துகிடக்கின்றன.

தமிழின் முந்தைய கதைசொல்லிகளில் இல்லாத இன்னொரு முக்கிய அம்சம், யுவனின் கதைசொல்லிகளில் இருக்கும் ஊடுபிரதித்தன்மை. கி.ராஜநாராயணன், நாஞ்சில்நாடன் போன்றவர்கள் கதைசொல்லலின் பல்வேறு வழிகளை புனைவூக்கத்துடன் முயன்றவர்கள் அல்ல. வாழ்க்கையிலிருந்து பெற்ற இயல்பான கதைசொல்லல் முறையே அவர்களிடம் இருக்கிறது. அதிகமான இலக்கிய வாசிப்புள்ள அ.முத்துலிங்கம் கூட கதைசொல்லலின் சாத்தியங்களுக்குள் சென்றவரல்ல. அவரது கதைசொல்லி தன்னிச்சையாக உருவாகி வந்த ஒருவன். நேர் மாறாக யுவன் கதைசொல்லலில் அச்சுவடிவ பாணிகளைக்கூட பயின்று பார்க்கிறார். நாட்டுப்புறக் கதை சொல்லலின் வடிவை பின்பற்றிய கதைகளை நாம் காணலாம். அதிலும் நுட்பமாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வரும் ஆப்ரிக்க ஐரோப்பிய நாடோடிக்கதைகளின் நடையில் அமைந்த கதையைக்கூட அவர் எழுதியிருக்கிறார். புராணங்களின் கதை கூறலை பின் தொடரும் கதைகள் உள்ளன. பத்தொன்பதாம் நூற்றாண்டு புத்தகங்களில் உள்ள கதைகூறல்நடையில் அமைந்த கதைகள் உள்ளன.

இத்தொகுதியில் உள்ள கதைகளின் வண்ண வேறுபாடு நம்மை வியக்க வைக்கும். ஹஸன் குத்தூஸ் மரைக்காயர் எழுதிய மேஷ புராணம் என்ற தொன்மையான விசித்திர நூலின் பகுதிகளாக அமைந்த கதையில் அக்கால நடையில் கதை விரிகிறது. [மேஷ புராணம் ] அப்பா கிருஷ்ணனுக்குச் சொல்லும் கதை சிறுவர்களுக்கான விசித்திரமான நாடோடிக்கதைகளின் வடிவில் இருக்கிறது [அப்பா சொன்ன கதை] நண்பன் சுகவனம் மொழிபெயர்த்து அனுப்பிய உலகச்சிறுகதைகளின் சுருக்கம் என்ற அவ்வடிவத்தில் அமைந்த கதையில் மொழிபெயர்ப்புநடை புழங்குகிறது [கடல்வாழ் கதைத்தொகுப்பு] ஐரோப்பிய தேவதைக் கதைகளின் பாணியில் அமைந்த கதைகளில் சற்றே மாறுபட்ட மொழிபெயர்ப்பு நெடி [ மீகாமரே மீகாமரே] தமிழ் இதழ்களில் வரும் கதைகளைப் பற்றிய விமரிசனமாக அமைந்துள்ள கதையில் பலவகையான தமிழ் கதைகளின் நடைகள் பகடி கலந்து பதிவாகியிருக்கின்றன [1999ன் சிறந்த கதை] வழிப்போக்கனின் கதைகூறல்முறையை பின்பற்றும் கதைகள் சம்பிரதாயமாக வெற்றிலைபோட்டு துப்பிவிட்டு திண்ணையில் அமர்ந்து சவடாலாக கதை சொல்லும் குரலை பின்பற்றும் கதைகள், பாட்டி சொல்லும் கதைகள் நாடோடி சொல்லும் கதைகள் என கதைசொல்லலில் யுவன் அடைந்திருக்கும் சாத்தியங்கள் தமிழ் புனைகதையுலகின் முக்கியமான சாதனை என்றே குறிப்பிடுவேன்.

இத்தகைய பலவகையான கதைகளை உருவாக்க அவருடைய தேர்ந்த மொழிப்பயிற்சி சாதாரணமாக கைகொடுக்கிறது. அவரது மொழி அவரை கைவிடுவதேயில்லை. புனைகதைகளில் அனுபவம் கொண்ட ஒருவருக்கு யுவன் தன் கதைகளில் அடையும் சகஜமான சொகுசான ஒழுக்குநடை என்பது எத்தகைய முதிர்ச்சியின் வெளிப்பாடு என்று புரியும். தமிழில் தி.ஜானகிராமன், நாஞ்சில்நாடன் போன்ற சிலர் அடைந்த இடம் அது. அவரால் தன் நடையை பரப்பி நீட்டி ஒரு கிராமத்தானின் எளிய கூறலாக ஆக்கவும் முடியும் சட்டென்று சிற்றிதழின் கட்டுரை நடையை [பகடியாக] அடைந்து விடவும் முடியும். எப்போதும அவரை பின்தொடரும் மெல்லிய புன்னகை அவரது எழுத்துக்களை சலிப்பில்லாத வாசிப்பனுபவமாக ஆக்குகிறது.

கதைசொல்லிகளில் இருந்து யுவன் சந்திரசேகர் வேறுபடும் இன்னொரு கூறு உண்டு. அதுவே அவரது தனித்துவத்தின் அடையாளம். பொதுவாக கதைசொல்லிகள் , அதிலும் தமிழின் கதைசொல்லிகள், தத்துவ-ஆன்மீக ஈடுபாடு கொண்டவர்கள் அல்லர். அவர்கள் நேரடியாக வாழ்க்கையை நோக்கி திரும்பியவர்கள். அதனாலேயே அவர்கள் முதிர்ந்த லௌகீகவாதிகள். வாழ்க்கைக்கு அப்பால், வாழ்க்கையின் ஒட்டுமொத்தம் என்று செல்லும் நோக்கு அவர்களில் இருப்பதில்லை. இக்காரணத்தாலேயே அவர்கள் வாழ்க்கையின் நுண்மைகளுக்கு அதிகம்செல்கிறார்கள். வாழ்க்கையின் சின்னஞ்சிறு விஷயங்களில் மனம் தோய்கிறார்கள். அவர்களின் கலையின் மகத்துவமாக இருப்பது அதுவே. ஆனால் யுவன் அவரது கதைகளிலும் நாவல்களிலும் வெளிப்படுத்தும் அவருக்கே உரித்தான தத்துவ-ஆன்மீக நோக்கு ஒன்று உண்டு.
யுவனுடைய தத்துவ-ஆன்மீக நோக்கு அவரது கதைகளை முன்வைத்து விரிவாக விவாதிக்க வேண்டிய ஒன்றாகும். சில வரிகளாகக் குறுக்கிச் சொன்னால் இவ்வாறு சொல்லலாம். தன்னைச் சுற்றி விரிந்து அலையடிக்கும் வாழ்க்கையிலிருந்து சில துளிகளை மட்டுமே அள்ள முடியக்கூடியவன் மனிதன். ஆகவே முடிவில்லாத மர்மங்களின் நடுவே அவன் வாழ்கிறான். அவனுக்கு கிடைக்கும் பிரபஞ்ச அனுபவம் என்பது அந்த மர்மங்களில் இடறி விழுவதேயாகும். அப்போது அவன் ஒரு அதிர்ச்சியையும் கணநேர மனவிரிவையும் அடைகிறான்.அந்தத் தரிசனத்தைக் கொண்டு அவன் ஒரு வாழ்க்கை நோக்கை உருவாக்கிக் கொள்கிறான். அது அவன் வரைக்கும் சரியானது. அந்த எல்லைக்கு அப்பால் அதற்குப் பொருள் ஏதும் இல்லை. மீண்டும் மீண்டும் மனிதன் இயற்கையின் பெருவிதிகளினால் சதுரங்கக் காயாக ஆடப்பட்டு அதைப் புரிந்துகொள்ள தன் தரிசனத்தால் ஓயாது முயன்றபடி வாழ்ந்து மெல்ல மெல்ல மறைகிறான்.

யுவன் கதைகளில் அந்த பிரபஞ்ச மர்மங்கள் வெளிப்படும் இடங்களையே அதிகம் கவனித்திருக்கிறார். அவரது புனைவுலகின் வசீகரமான இடங்களும் அவையே. நாம் நம் அறிதல்கள் மூலம் உருவாக்கிக் கொண்டுள்ள பிரபஞ்ச கற்பனையை மெய்மை என்றால் நம் அறிதல்களுக்கு அடியில் தன் விதிகளுடன் இயங்கிக் கொண்டிருக்கும் பிரபஞ்ச இயல்பை அவர் மாற்று மெய்மை என்கிறார். தன் கதைகளின் கருக்கள் மாற்று மெய்மைகள் என்று சொல்லும் யுவன் சந்திரசேகர் அவற்றை ஒருபோதும் புனைவின் உலகுக்கு வெளியே கொண்டுவந்து கோட்பாடுகளாகவோ தர்க்கங்களாகவோ முன்வைக்க முயல்வதில்லை. நமது பிரபஞ்ச உருவகம் ஒரு புனைவு என்றால் இவை மாற்றுப்புனைவுகள் மட்டுமே என்ற அளவிலேயே நின்றுவிடுகிறார். அவரது தத்துவார்த்தமான தெளிவின் ஆதாரம் இது.

அன்றாட வாழ்வனுபவத்தின் ஒரு கணத்தில் எளிய மனிதர்களை மாற்று மெய்மை வந்து தொடும் அனுபவங்களை மீண்டும் மீண்டும் எழுதியிருக்கிறார் யுவன் சந்திரசேகர். ஒரு நிலைகுலைவாக அவர்கள் அதை உணரும்போது கதை முடிந்துவிடுகிறது. அந்த தருணத்தின் மாயத்தை நேரடியாகச் சொல்லும் போது அதன் புனைவுத்தன்மை மேலோங்கி வலிமை குறைகிறது என்பதனால்தான் அவர் கதைசொல்லி ஆக ஆனாரோ என்று தோன்றுகிறது. கதைசொல்லுதல் என்ற உத்தி அவரது பிரபஞ்ச தரிசனத்துக்கு பெரிதும் உதவுகிறது.அன்றாட மெய்மை ஒரு கதை. மாற்று மெய்மை இன்னொரு கதை. கதைசொல்லிக்குள் கதைசொல்லியாக அமைந்து இரண்டும் சாதாரணமாகச் சொல்லிச்செல்லப்படுகின்றன.

கதைசொல்லிகள் பொதுவாக நல்ல உரையாடலை நிகழ்த்துவார்கள். கி.ராஜநாராயணன் ,நாஞ்சில்நாடன் இருவரும் தமிழ் புனைகதையில் உரையால் எழுத்தில் உச்ச சாத்தியங்களை தொட்டவர்கள். யுவன் சந்திரசேகரும் சாதாரணமாகவே நுண்ணிய உரையாடல்களை எழுதிச்செல்கிறார். பிராமண கொச்சை உரையாடலை மட்டுமல்லாம செட்டியார் கோனார் நாடார் லெப்பை என மதுரைவட்டாரத்து அனைத்து வகை மனிதர்களும் பேசும் வாய்மொழியை எளிதாகவும் துல்ல்லியமாகவும் அவரால் நிகழ்த்திக் காட்ட முடிகிறது. அவரது கதைகளின் வசீகரத்துக்கான முக்கியமான காரணிகளில் ஒன்றாகவும் இது உள்ளது.

கதைசொல்லிகளின் முக்கியமான இயல்பென இன்னொன்றையும் சொல்லலாம். அவர்கள் பொருள்வயப் பிரபஞ்சம் மீது தணியாத மோகம் கொண்டவர்கள். அவர்களில் இருக்கும் உலகியல் அம்சத்தின் இயல்பான வெளிப்பாடு அது. கி.ராஜநாராயணன், நாஞ்சில் நாடன் ஆகியோர் அளிக்கும் நுண்ணிய பொருள் விவரணைகளை எண்ணிப்பார்க்க வியப்பு ஏற்படுகிறது. கலப்பையின் ஒவ்வொரு உறுப்பையும் நாம் நஞ்சில்நாடனில் தனித்தனியான பெயர் மற்றும் வருணனைகளுடன் காணலாம். மண்ணின் எத்தனை வகைகளை கி.ராஜநாராயணன் எழுதியிருக்கிறார். அ.முத்துலிங்கம் சின்னஞ்சிறு பொருட்களை வருணிப்பதனூடாகவே ஆப்ரிக்காவை நமக்கு காட்டுகிறார். கதைசொல்லியானாலும் யுவன் சந்திரசேகர் பொருள்வயப்பிரபஞ்சம் பற்றிய கவனம் இல்லாமல் இருக்கிறார்.

யுவன் காட்டும் புற உலகம் என்பது குரல்கள் மட்டுமே அடங்கியது என்பதை வாசகன் வியப்புடன் காணலாம். இடங்கள் பொருள்கள் எதுவும் துல்லியமான அவதானிப்புடன் பதிவாவதில்லை. ஏன், முகங்கள் கூட நினைவில் பதிவு கொள்வதில்லை. ஆனால் குரல்கள் அசாதாரணமான தனித்தன்மையுடன் வந்து நம் காதில் பதிகின்றன. யுவன் சந்திரசேகர் அவர் பிறந்து வளர்ந்த, அவரது புனைவுலகில் எப்போதும் வருகிற, கரட்டுபபட்டியைப் பற்றிக்கூட விரிவான காட்சி சித்தரிப்புகளை அளித்தது இல்லை. அவரது மொழியின் நுட்பங்கள் கூட ஒலிசார்ந்தவையே அல்லாமல் மொழிக்குள் செயல்படும் சித்திரத்தன்மை சார்ந்தவை அல்ல. அவரது கண் மிக பலவீனமானது. காது அந்த வேலையைச் சேர்த்துச் செய்கிறது. அவரது உலகமே செவியை மையம் கொண்டதாக இருக்கலாம். இதை ஒருவகையில அவரது புனைவுலகின் பலவீனமாகச் சொல்லலாம். அதுவே அவர் இயல்பென வாதிடுவதும் சரியே.

இலக்கியம் என்பது மொழியின் வழியாக வாழ்க்கை ஒன்றை உருவாக்கிக் கொள்வது. வாழ்க்கை போலவே அடர்ந்த, ஆழம் கொண்ட, வசீகரமான, முடிவில்லாத முழுவாழ்க்கை ஒன்றை. அத்தகைய புனைவுலகை உருவாக்கும் படைப்பாளிகள் ஒரு சமூகத்தின் கனவுகளை நெய்கிறார்கள். வெளியே தெரியும் வாழ்க்கையால் எந்தச் சமூகமும் வாழ்ந்துகொண்டிருப்பதில்லை. அகத்தே நிகழும் கனவுகளிலேயே அது மேலும் உக்கிரமாக வாழ்கிறது. அக்கனவுகளை உருவாக்குபவையே இலக்கியம் என தகுதி பெறுகின்றன. அவை மிகக் குறைவானபேரால் வாசிக்கப்பட்டால்கூட மெல்லமெல்ல அச்சமூகத்தின் கனவுலகில் படர்ந்து பரவுகின்றன. அத்தகைய நுண்ணிய இலக்கியச் சாதனைகளில் ஒன்று யுவன் சந்திரசேகரின் புனைவுலகம்.

(நன்றி: ஜெயமோகன்)

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp