சொல்லப்படாத வம்சக் கதைகளின் முன்னோடி

சொல்லப்படாத வம்சக் கதைகளின் முன்னோடி

ஒரு வருடம் முன்பாக ஒரு நாள் திரு.இராஜேந்திரன் அவர்களை அலுவலகத்தில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது பக்கத்து மேஜையில் இருந்த அவரது குடும்ப ஆவணங்களை எடுத்துக் காண்பித்து, அவரது குடும்ப வரலாற்றை எழுதிவருவதாகக் கூறினார். நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. என்ன வழக்கமாக எல்லோரும் சொல்லும், பெருமைப்பட்டுக் கொள்ளும் குடும்ப வரலாறாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன்.

ஆனால் நூலை எடுத்து இரு தினங்கள் கீழே வைக்கமுடியவில்லை. சாமியாடி சொல்லவந்த குறியைச் சொல்லிவிட்டே இறங்குவதுபோல நூலை வாசித்து முடித்தவுடன் தான் வைக்கமுடிந்தது. நூலைப் படித்த முதல் நாள் தூக்கம் தொலைந்து போயிற்று – திரு.இராஜேந்திரன் அவர்கள் இச்சுயசரிதை மூலம் இறக்கி வைத்த பாரம் என் மனதில் வந்து தேங்கிக் கொண்டது. ஒவ்வொரு பக்கத்திலும் நான் பார்த்த, கேட்ட, யூகித்த வம்சக் கதைகள் நினைவில் வந்து போயின. இச்சரிதம் எனக்கு நினைவு படுத்திய பல மனிதர்கள், அம்மனிதர்களின் நினைவுகளின் கூடவே தொடரும் அன்பு, மகிழ்ச்சி,உறவுகளின் நேசம், உறவுகளின் துரோகம் தரும் வேதனை என்று நினைவுகளின் வலி இரவுத்தூக்கத்தை இல்லாது செய்தது.

எனக்கு மட்டுமல்ல, படிக்கும் ஒவ்வொருவருக்கும் தத்தமது குடும்பங்களிலும் சொல்லிய, சொல்லாது மறைத்த சம்பவங்களின் நினைவுகளை ஆழ்மனதில், இதுவரை பார்க்க விரும்பாமல், அதற்கான துணிவில்லாமல், புதைந்திருந்த அல்லது புதைக்கப்பட்டவைகளைத் தோண்டி எடுத்து வெளிக்கொணரும். ‘நான்காண்டுகளாய் இம்முயற்சியில் இறங்கி, நான் சித்திரவதை அனுபவித்தேன்,’ என்று சொல்கிறார் திரு.இராஜேந்திரன், அவர் இறக்கி வைக்கும் மனச்சுமைகள் இந்நூலைப் படித்து முடிக்கும்போது நம் மீது ஏறிக் கொள்கின்றன.

நூல் மிக நேர்த்தியாக அகநி பதிப்பக வெளியீடாய் சிறந்த முறையில் வந்திருக்கின்றது. ஐநூற்று மூன்று பக்கங்கள் – இடையிடையே குடும்ப புகைப்படங்கள், சரித்திர சம்பந்தமான படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கருப்பாயி கோவிலில் இருக்கும் வளரி ஆயுதத்தின் புகைப்படம், ஒரு கல்லில் கோட்டோவியமாய் செதுக்கப்பட்டிருக்கும் சந்திர சூரியர் உள்ள பிம்பம், வளரியுடன் இருக்கும் நல்லமூக்கன், அவனது இடதுபுறம் நிற்கும் சோழமூக்கன் சிற்பங்கள், அவர்கள் நிறுவிய பழமையான இரு பெண்டிருடன் கூடிய அய்யனார் சிலை, மேற்கூரையில்லா முத்தையா கோவில் என்று முக்கிய ஒளிப்படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கம்பங்குழி கருப்பாயி திருக்கோவிலின் புகைப்படம் முகப்பட்டையை அலங்கரிக்கின்றது. முகப்பில் இருக்கும் புகைப்படத்தை பார்க்கும்போதே அதன் பின்னே இருக்கும் சோகம் புரியத்துவங்கிவிடுகிறது.

இச் சரிதம் இரு பெண்களுக்கிடையே, அவர்களது சோகம் நிறைந்த மரணங்களுக் கிடையேயானது. 700 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த கம்பங்குடி கருப்பாயியின் வாழ்வும், துர்மரணமும் இப்போது இருபதாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த கலைவாணியின் வாழ்வும் துர்மரணத்தோடு முடிகின்றன. பெண்ணில் துவங்கி பெண்ணில் முடியும் இந்த வம்சக் கதை நெடுகிலும் பெண்களே ஆள்கிறார்கள் – அவர்களின் அவலங்கள் கூட அவர்களது ஆளுமையை உயர்த்தியே காட்டுகின்றன உதாரணமாக அய்யம்பெருமாள் தேவரிடம் மையல் கொண்டு வாழவந்த சின்னமனூர் சுந்தரா. வேற்று சாதிக்காரியான, ஆதரிக்கச் சொந்தக் குழந்தைகளும், கூடப் பிறந்தவர்களும், சொந்த சாதி சனத்தின் அனுசரணையும் இல்லாத அவளை, அவளிருந்த தோட்டத்துக்குச் சென்று அவதூறாகப் பேசி, அவளை தோட்டத்திலிருந்து வெளியேற்றி, நடுத்தெருவில் சோற்றுக்கு அலையவைத்த தேவரின் பேரனைப் பற்றி ஒரே ஒரு வரி மட்டும் சொல்கிறாள், ‘ அவனும் என் பேரன் தானப்பா? நான் கிழிந்து போன பாயி. எங்கக் கிடந்தா என்னான்னு நினைச்சிருக்கும். எனக்கு யார் மேலயும் கோபமில்லை. அவர் வாழ்ந்த ஊர்ல நானும் கிடக்கிறேன், எனக்கு அது போதும்.’ வரலாற்றில் வரும் ஓவ்வொரு பெண்ணிடமும் இந்த மாண்பை காண முடிகிறது. ஆனால் அதே சமயம், வம்சத்தின் காதலர்கள் அவர்களைக் கைவிடுகிறார்கள், ஜமீன் தேவாரத்தின் நாயக்கர் கிறுக்குத் துரைபோல அதிகாரத்தில் இருப்பவர்கள் அலைகிறார்கள் அல்லது பகடைக்காயாகப் பயன்படுத்துகிறார்கள் – ராஜா என்கிற முத்தையா தேவர் செய்த தவறுக்கு அவரது சின்னம்மாவைக் கைவிலங்கிட்டு ஜீப்பில் ஏற்றும் சப் இன்ஸ்பெக்டர் போல. இப்பெண்களின் வீரம், விவேகம், உள வலிமை, மாண்புகள் தொடர்ந்து நூலில் வந்து கொண்டே இருக்கின்றன.

அப் பெண்களின் காதலும் காமமும் எவ்வித கொச்சைப் படுத்தலும் இல்லாமல் சொல்லப்பட்டிருப்பதும் குறிப்பிடத் தகுந்த அம்சம். ஒழுக்கம் சார்ந்த சமூக விதிகளை மீறும் ஆண் பெண் என இருபாலோரையும் நூல் நெடுகச் சொன்னாலும் அவர்களைப் பற்றிய எவ்வித நியாயத் தீர்வைகளையும் வழங்காமல் வம்ச வரலாற்றைச் சொல்லிச் சென்றிருப்பது பாராட்டுக்குரியது.

மாலிக் கஃபூர் படையெடுப்புடன் வம்சக்கதை துவங்குகிறது. காவிரிக் கரையில் வசித்து வந்த நல்ல மூக்கன், சோழமூக்கன், கிளிமூக்கன் எனும் மூன்று சகோதரர்கள் அவர்கள் அன்பிற்குரிய சகோதரி கருப்பாயி. தமிழகத்தின் தலையெழுத்தையும் தமிழர்களின் தலையெழுத்தையும் புரட்டிப் போட்டது மாலிக் கஃபூரின் படையெடுப்பு. அதுவரை வீரத்தையும், அறத்தையும் அடிப்படையாகக் கொண்ட அரசர்களின் படையெடுப்புகளில் இருந்து வித்தியாசப்பட்டிருந்தது அந்த படையெடுப்பும் அதனைத் தொடர்ந்த அரை நூற்றாண்டு ஆட்சியும். இராஜேந்திரனின் வம்ச மூப்பன் நல்ல மூக்கனின் கதை இங்கிருந்து துவங்குகிறது.

அறங்கள் இறந்திருந்த அக்காலகட்டத்தில், உறவினர் பலர் ஆக்கிரமிப்பாளர்களின் கலாச்சாரத்தை வேறு வழியின்றி ஏற்று, எடுத்துக்கொண்ட பண்பாட்டுக்கு விசுவாசமாய், சொந்த சமுதாயத்தைக் காட்டிக் கொடுப்பவர்களாகவும், கூலிக்கு கொடும் மாரடிப்பவர்களாயும் மாறிவிட்ட நிலையில் வேறு வழியின்றி, தம் அன்பிற்குரிய ஒரே சகோதரியைக் கவர முனையும் முகமதிய ஆக்கிரமிப்பாளனிடமிருந்து அவளது மானம் காக்க, அவளைக் கம்பங்குழிக்குள் இறக்கிக் கொன்று ஆக்கிரமிப்பாளர்களைத் தாக்கி விட்டுத் தப்பித்து ஊரூராய் ஓடி, கடைசியாய் வடகரை வந்து நிலந்திருத்தி, விவசாயிகளாக மாறி வசிக்கத் துவங்குகிறார்கள்.

இவ்வரலாற்றுப் பதிவைப் பற்றி வாட்ஸ் ஆப் குழுமம் ஒன்றில் நான் தெரிவித்தபோது, அமிர்தா பல்கலைக் கழகத்தில் இருக்கும் ஆங்கிலப் பேராசிரியர் ஷோபனா அவரது குடும்ப (பெண் ) தெய்வத்தோடும், முகமதிய படையெடுப்புடன் தொடர்புடைய இது போன்ற ஒரு கதை இருப்பதையும், இறந்து போன அப் பெண் தெய்வத்தின் நினைவாய் ஒரு கூடையை அவரது முன்னோர்கள் ஆந்திர தேசத்தில் இருந்து சுமந்து கொண்டு தமிழ்நாடு வந்து சேர்ந்த கதையையும், ஸ்ரீரங்கத்தைக் காக்க முனைந்து தோலுரித்துத் தொங்கவிடப்பட்ட வல்லாள ராசா கதையையும் பகிர்ந்து கொண்டார்.

வட இந்தியாவில் ‘சதி மாதா’ என்று அழைக்கப்படும் இறந்து போன பெண்களின் கதைகளோடு இது போன்றவை ஒத்திருப்பதைச் சொன்னேன். தற்போது மத்திய அரசில் இயக்குனராக இருக்கும் என் நண்பரும், ராவுத்தர் பிரிவைச் சேர்ந்த முஸ்லீம் நண்பருமான ஷெர்ஷா இதே போன்றதொரு கதையை, உயிருடன் தம் குடும்பப் பெண்ணை சமாதிகட்டி விட்டு, தமிழகத்தை விட்டு களக்காடு வழியாக கேரளாவிற்கு குடிபெயர்ந்த கதையை சொல்வார்.

இதுவரை இல்லாத வகையில், நாம் சொல்லத் தவிர்க்கும் ஜாதியப் பின்புலம் இச்சரிதையின் முதலிலிருந்து முடிவுவரை நீண்டிருக்கிறது. இது விமர்சிக்கப்படலாம். ஆனால், முன்னுரையிலேயே இராஜேந்திரன் இது குறித்த தன்னிலை விளக்கத்தை அளித்துவிடுகிறார்,’ இந்த நூலில் சாதியின் பெயர்கள் வருகின்றன. அவற்றை நீக்கிவிட்டு எழுதினால் ஒருவிதத்தில் செயற்கையாக இருக்கும் என்பதால் அவற்றை அப்படியே கொடுத்துள்ளேன். பெருமிதத்தின் வெளிப்பாடாக இல்லாமல் அவர்கள் அறியப்பட்ட விதத்தில் சாதி இருந்தது. எனவே தவிர்க்க இயலாமல் சாதிய அடையாளங்கள் மனிதர்களோடு இணைந்தே வந்துள்ளன,” என்கிறார்.

இச்சரிதத்தின் பலம் இந்த வெளிப்படைத் தன்மைதான். ’குண்டாற்றுக்கு அந்தப் பக்கம் நீ ஜமீந்தார் என்றால், இந்த பக்கம் நான் – உனக்கெதுக்கு தாரை தப்பட்டை’ என்று மேலக்கோட்டை கவுடர் ஜமீனை கேட்கும் அங்கப்பதேவரை, அங்கப்பர் என்று எழுதியிருந்தால் அல்லது முத்தையாத்தேவர் என்கிற ராஜாவை ’தாயோளி’ என்று திட்டி செருப்பால் அடிவாங்கிய தாசில்தார் நடராஜ ஐயரை நடராஜன் என்றூ எழுதியிருந்தாலோ அல்லது சோழமூக்கன் வழிவந்து பல தலைமுறைகளாக பிள்ளைமாராக வாழ்ந்த மேகநாதம்பிள்ளையின் அக்குடும்ப ரகசியம் உடைந்து போனபின்பு அக்குடும்பத்தில் கட்டிக் கொடுத்து வாழ்த்த பெண்கள் திருப்பி அழைத்துக் கொள்ளப் படுவதை, முத்தையா தேவரை கட்டிக் கொண்ட ஜெயலட்சுமி தனது குடும்பத்துடனான உறவுகளை அறுத்துக் கொள்வதை, ஜெயலட்சுமியின் அத்தை ராஜாவை (முத்தையாதேவரை)த் திட்டும்போது, ‘தேவன்களே திருட்டுப் பசங்கதானே தேவரே… உங்க தாத்தா மூணு மாசம் ஜெயிலுக்குப் போனவன் தானே’ என்று குரல் கொடுப்பதையும் அவர்களின் ஜாதியப் பின்புலமறியாமல் இச் சரிதத்தை புரிந்து கொண்டிருக்கவே முடியாது. அதே சமயம், எளிதில் யாரும் விழுந்து விடக் கூடிய சுய ஜாதிப் பெருமை, பிற சாதியை கீழாகக் காட்டும் படு குழியில் விழாமல் கடைசிவரை மிக நேர்மையாக “பெரியோரை வியத்தலும் இலமே , சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” என்று யாரைப் பற்றியும் அதீதமாகவோ குறைவாகவோ பேசாமல் எழுதியிருப்பது குறிப்பிடத் தக்க அம்சம்.

குறை என்று சொன்னால் – ஆங்காங்கே தென்படும் ஓரிரு தட்டச்சுப் பிழைகளைக் குறிப்பிடலாம். நடையிலும் சில இடங்களில் தடுமாற்றம் தென்படுகிறது. மகாபாரதக் காலகட்டத்தை கிமு ஐந்தாம் நூற்றாண்டு என்று குறிப்பிடப் பட்டுள்ளது. வட்டார வழக்கு முழுமையாகப் பயன்படுத்தப் படவில்லை, பல இடங்களில் அது பொதுத் தமிழாக எழுதப்பட்டுள்ளது. சில இடங்களில் ஒரே வரியில் ராஜாவை அவன் என்றும் அவர் என்றும் எழுதப்பட்டிருப்பதையும் பார்க்கமுடிகிறது. இது கதையாசிரியராக இல்லாமல் சொந்த வரலாற்றை எழுத முயலும் எவர்க்கும் நேர்வதுதான் என்றாலும் பதிப்பகம் அடுத்த பதிப்பில் இக்குறைகளை களைய வேண்டும்.

அரசின் உயர்பதவியில் இருந்து கொண்டிருக்கும்போது, சமுதாயத்தில் மிக உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும்போது தான் வாழ்க்கையில் சந்தித்த அவலங்களையும், தனது குடும்பப் பெருமிதங்களோடு சிறுமைகளையும் சமூகத்தின் முன் அப்படியே வைப்பது சாதாரண விஷயமல்ல – மாலிக் காபூரின் தென்னக படையெடுப்பில் துவங்கி கடந்த எழுநூறு வருடங்களாக தலைமுறை தலைமுறைகளாக ஆட்சியையும் அதிகாரத்தையும் இழந்து, முதுகெலும்பு நொறுங்கிப் போய் இருந்த நம் தமிழ்ச் சமுதாயம் புதுப்பணக்காரன் போல போலித்தனத்தின் உறைவிடமாக இருக்கும் காலகட்டம் இது. இச்சூழலில் கிடைக்கும் கொஞ்ச நஞ்ச பெருமைகளை முன்வைத்துக் கொண்டும், தனக்கு நிகழும் அவமானங்களை பதிவு செய்ய மறுத்தும் தன் குடும்பம், ஜாதி, பணி பற்றிய பொய்யான புனைவுகள், கர்வங்கள் தரும் குடையின் கீழ் இளைப்பாறும் காலகட்டத்தில் அந்த கலாச்சார மரபுகளை உடைத்து அவலங்களையும், அவமானங்களையும் எழுதுவதென்பது சாதாரண விஷயமல்ல. இது வேறு எவரைக் காட்டிலும் அதே சமூகப் பின்னணியுடனும், ஏறத்தாழ அதே போன்ற அதிகாரப் பின்னணி என்ற குடையின் கீழ் இருக்கும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஒவ்வொரு சம்பவங்களும் எனக்கு நினைவுறுத்தும், வருத்தும் வரலாறுகளையும், மனிதர்களையும் முன்நிறுத்தி இதுபோன்ற ஒரு சரிதத்தை என்னால் எழுதுவது சாத்தியமானதா என்று யோசித்துப் பார்க்கிறேன். அந்த உள வலிமை எனக்கும் என்னைப் போன்ற பலருக்கும் இல்லை என்பதே உண்மை.

எனக்கு மட்டுமல்ல இச்சரிதத்தை படிக்கும் எவருக்கும் புரியக்கூடிய விஷயம் இது – சொல்லப்படாத வம்சக்கதைகள் நம் மனதுகளின் நிலவறைகளிலேயே இருந்து, மரித்துப் போகும். மானுடர்களுடன் தொடர்புகொள்ளும் இறையுணர்வு, தேச முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள், அசாத்திய ஆளுமைகளின் விவரணைகள், சரித்திரத் திருப்பங்களின் நிகழ்வுகளுடன் பயணித்தல் என்று ஒரு காவியத்திற்கான இலக்கணங்கள் வலிந்து சேர்க்கப்படாமல் , எவ்வித செயற்கைத் தன்மையுடனும் இல்லாமல் , இயல்பாக அமைந்திருக்கும் இந்நூலை வம்ச வரலாறு என்று சொல்வதைவிட குறுங்காவியம் என்றே சொல்லலாம். இந்நூலின் குறிப்பிடத்தக்க அம்சம், இச்சரிதத்தில் காணும் ’உள்ளது உள்ளபடி’ விவரிக்கும் ethnographical அம்சம் தான். தமிழனின் கலாச்சாரத்தையும், வாழ்க்கையும், அவனது திமிரையும், அவன் செய்த அடக்குமுறைகள் மட்டுமல்லாது அவன் அடக்கப்பட்டதையும், அவனது அவலங்களையும் உள்ளது உள்ளபடி விவரிக்கும் இச்சரிதம் தொடர்ந்து தலைமுறைகளால் படிக்கப்படும், ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் படும் என்றே கருதுகிறேன். சொல்லக்கூடிய, பெருமையாக சொல்லிக் கொள்ளக் கூடிய வம்சக் கதைகளைத்தான் நாம் இதுவரை கேட்டிருக்கிறோம் – சொல்ல விரும்பாத, சொல்ல மறுத்த, சொல்லக் கூடாத வம்சக் கதைகளை ஒரு அரசு உயர் அதிகாரியாக பதவி வகிக்கும்போதே எழுதிய திரு.இராஜேந்திரன் அவர்கள் செய்திருக்கும் இது மிக வித்தியாசமான, யாரும் செய்யாத முயற்சி. வானம் வசப்படும், கோபல்லபுரத்து மக்கள், ஆழி சூழ் உலகு வரிசையில் இந்நூலும் தமிழ்ச்சமூகத்தின் ஒரு முக்கிய பதிவாய், வரலாற்று ஆவணமாய் வந்துதிருக்கின்றது.

இவ்வரலாற்றின் மூலம் தமிழ்ச் சமுதாயத்தின் கவனிக்கப் படாதிருந்த ஒரு அத்தியாயத்தை அதன் முன் வைத்திருக்கும் திரு. இராஜேந்திரன் அவர்களுக்கும், அதைப் பதிப்பித்த அகநி பதிப்பகத்திற்கும் நன்றி.

கட்டுரையாசிரியர்: தற்போது கோவையில் அமிர்தா பல்கலைக் கழகத்தில் ஆய்வறிஞராக உள்ள திரு. விஜய் இராஜ்மோகன் மத்திய அரசின் வணிகத் துறையில் இயக்குனராக உள்ளார். தமிழ் சமுதாயம், இலக்கியம், வரலாறு ஆகியவற்றைச் சுற்றிய விவாதங்களை நிகழ்த்தும் தில்லிகை அமைப்பின் துவக்குனர்களுள் ஒருவர்.

(நன்றி: சொல்வனம்)

More Reviews [ View all ]

பாலைவன நாடோடியின் பயணம்!

சித்தார்த்தன் சுந்தரம்

வினயா

ப. விமலா ராஜ்
Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp