சிதைவுகள் (Things Fall Apart)

சிதைவுகள் (Things Fall Apart)

நைஜீரியாவில் உள்ள இபோ என்ற கிராமத்தில் தொன்று தொட்டு வாழ்ந்த பழங்குடியினரும், கிருத்துவ மதத்தைப் பரப்ப வந்த மதப் பிரச்சாரர்களும் சந்தித்த தருணத்தை,ஒரு பழங்குடியினரின் பார்வையில் இருந்து சொல்லும் நாவல் - சிதைவுகள். பெரும்பாலும் இத்தகைய சந்திப்புகள் ஆண்டவர்களின் (அதாவது காலனி ஆதிக்க வாதிகளின் பார்வையிலோ அல்லது மதப் பிரசாரர்களின் பார்வையிலோ) தான் பெரும்பாலும் எழுதப்பட்டிருக்கும். காலனிய கால இந்திய வரலாற்றை வெள்ளையர்கள் எழுதியதை வைத்துக் கொண்டு தானே இன்னும் பள்ளிக்கூடங்களில் சொல்லித் தந்து கொண்டு இருக்கிறோம்?

ஐரோப்பிய காலனி ஆதிக்கம் பரவிய எல்லா இடங்களிலும், அந்தந்த இடங்களில் இருந்த பூர்வ குடி மக்களின் வாழ்வில் காலனி ஆதிக்கம் பெரும் பாதிப்பை உண்டு பண்ணியது. அந்தப் பாதிப்பின் விளைவுகளைப் பற்றி பூர்வ குடிகள் பார்வையில் எழுதப்பட்டவை மிக அரிது. அவ்வாறு ஏதாவது எழுதப் பட்டிருந்தாலும், அவை வெகு ஜனங்களுக்குச் சென்று பிரபலமானது அதை விட அபூர்வம். அந்த வகையில் ஆப்பிரிக்க வாழ்க்கையை முதல் முதலாக வெளி உலகத்திற்கு அறிமுகப் படுத்தியவர் சினுவா அச்செபே என்று சொல்வது மிகையாகாது.

நாவலின் வினையாளன் (protogonist) ஒக்வோங்கோ. ஒக்வோங்கோவின் தந்தை உனோக்கா தன வாழ்வில் எந்த பட்டமும் வாங்காமல் கடனாளியாக, சமூகத்தில் எந்த மதிப்பும் இல்லாமல் இறந்து போகிறான். தன்னையும் பிறர் ( தன் தந்தையைப் போல) இயலாதவன் கருதி விடக் கூடாது என்ற பயம் ஒக்வோங்கோவைப் பிடித்து ஆட்டுகிறது . அந்த பயமே அவனை கடின உழைப்பாளி ஆக உந்துகிறது. தன்னைப் பிறர் கோழை என்று நினைத்து விடக் கூடாது என்ற பயம் அவனை போரில் பெரும் ஆவேசத்துடன் சண்டையிட வைக்கிறது. படிப்படியாக இபோ கிராமத்திலும், அதைச் சுற்றி உள்ள கிராமங்களிலும் அனைவருக்கும் தெரிந்த முக்கியமானவனாக ஆகிறான், ஒக்வோங்கோ. அவனது வளர்ச்சியை படிப் படியாக விவரிப்பதிலேயே சினுவா அச்செபே நமக்கு, அந்த பழங்குடி வாழ்க்கையின் பல அம்சங்களை - வழிபாட்டு முறைகள், திருமணங்கள், சாவுகள், அவர்களது பேச்சு முறைகள், மூட நம்பிக்கைகள், சடங்குகள் - மிக இயல்பாக கதையை ஒட்டியே சித்தரித்து விடுகிறார். அந்த மக்களின் விழுமியங்களை, சின்னச் சின்ன பழமொழிகள் மூலம், சிறு கதைகள் மூலம் விவரிப்பது அற்புதமான உத்தி. வாசகனுக்கு ஒரு வயதான தாத்தா தன் காலத்துக் கதையை சொல்வது போல இருக்கிறது. நாவலின் அதீதமான நம்பகத் தன்மை வாசிக்கும் நம்மை அந்த கிராமத்து வாழ்க்கையை மறைந்திருந்து வேடிக்கை பார்க்கும் ஒருவனாக மாற்றி விடுகிறது. ஒக்வோங்கோ தன் வாழ்க்கையின் உச்சாணிக் கொம்பில் இருக்கும் பொது, அவன் செய்த ஒரு பிழைக்காக அவன் இபோ கிராமத்தை விட்டு தன் அம்மாவின் ஊருக்கு சென்று ஏழு வருடங்கள் தங்குவதில் ஆரம்பிக்கறது அவனின் வீழ்ச்சி. அதே சமயத்தில் கிருத்துவ மதப் பரப்பாளர்களும் அவன் கிராமத்திற்கு வர ஆரம்பிக்கிறார்கள்.

மதப் பிரசாரர்களின் வரவு, ஆண்டாண்டு காலமாக பழங்குடி மக்கள் நம்பி வந்த சடங்குகள், அதிகார அமைப்புகள் ஆகிய அனைத்திற்கும் சவால் விடுகிறது. இத்தகைய சவாலை பழங்குடியினர் அதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் தடுமாறுகிறார்கள். இந்தத் தடுமாற்றத்தை சினுவா அச்செபேயின் எழுத்து கூர்மையாக விவரிக்கிறது. மதப் பிரச்சாரர்கள் முதலில் இபோ கிரமாத்தில் ஒரு தேவாலயம் கட்ட பழங்குடித் தலைவர்களிடம் அனுமதி கேட்கிறார்கள். பழங்குடியினரும் அனுமதி கொடுக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக தேவாலயத்தில் மக்கள் போய்ச் சேருகிறார்கள். முதலில் போய்ச் சேருபவர்கள், பழங்குடி சமூகத்தில் எந்த அந்தஸ்த்தும் இல்லாதவர்கள். நம் ஊரிலும் மதப் பிரசாரத்தில் முதலில் மாறியவர்கள் கீழ் சாதியினர் தானே? பிரச்சாரம் செய்யும் மதம், பௌத்தமாக இருந்தாலும் சரி, கிருத்துவமாக இருந்தாலும் சரி. பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் எந்த மதமும், பொருளாதார வாய்ப்பு இல்லாதவர்களுக்கு ஏற்றது தானே? அடுத்து, மதப் பிரச்சாரர்கள், பள்ளிகளை ஆரம்பிக்கிறார்கள். காலனி அரசாங்கம், புது கட்டு திட்டங்களை உருவாக்குகிறது. மொத்தமாக பழங்குடி மக்களின் பாரம்பரிய வாழ்க்கை முறை படிப்படியாக சிதைகிறது.

இந்த நாவலை பல தளங்களில் படிக்கலாம். பழங்குடி மக்களின் பார்வையில் எழுதப்பட்டிருந்தாலும், சினுவா அச்செபே, பழங்குடி மக்களின் மூட நம்பிக்கைகள் (தற்கால பார்வையில்) என நம்மால் கருதக்கூடிய பலவற்றை (சில கொடும் நம்பிக்கைகளைக் கூட) எந்த மேல்பூச்சும் இல்லாமல் ஆவணப்படுத்தி உள்ளார். அதனால், பழங்குடி வாழ்க்கையின் முழு பரிணாமத்தையும் நம்மால் உணர முடிகிறது. இந்த நாவலில் சினுவா அச்செபே இபோ மக்களின் பல சடங்குகளை, கணவன்-மனைவி உறவுகளை, தகப்பன்-குழந்தை உறவை, நண்பர்களிடையே இருக்கும் உறவை, பழங்குடி மக்களின் நம்பிக்கைகளை, உணவு முறைகளை பண்டிகைகளை, என பலவற்றையும் கதையை ஒட்டியே ஆவணப் படுத்தி உள்ளார். இது சினுவா அச்செபெயின் பெரும் பங்களிப்பு. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட இந்த நாவலில் உள்ள பல தகவல்கள், தற்கால இபோ பழங்குடியினரின் சந்ததிகளுக்கே புதியனவாய் இருக்கக் கூடும். இந்த வகையில் இந்த நாவல் முழுதும் கொட்டிக் கிடக்கும் தகவல்கள், ஒரு மனிதவியல் நிபுணருக்கு, அருகிப் போன (அல்லது அருகிப் போய்க் கொண்டு இருக்கிற) ஒரு வாழ்க்கை முறையை புரிந்து கொள்ள உதவும் பண்பாட்டுத் தகவல் களஞ்சியம் என்று சொல்லலாம்.

இத்தகைய உபரியான தகவல்கள் நாவலின் ஓட்டத்தை மட்டுப் படுத்துவதாக சிலர் கருதலாம். ஆனால், இத்தகைய ஆவணப்படுத்துதல் ஒரு முக்கியமான விஷயம் என்பதை சினுவா அச்செபே இந்த நாவலை எழுதும் போதே உணர்ந்து இருந்தார் என்பது நாவலின் முடிவில் இருந்து தெரிகிறது. ஒக்வோங்கோவின் கடைசி வீழ்ச்சி அந்த பழங்குடி மக்களின் வாழ்க்கையின் உச்சக்கட்ட சிதைவு. அந்த பெரும் சிதைவு, அதைப் பார்க்கும் காலனி அதிகாரிகளுக்கு, சற்றும் புலப்படுவதில்லை. ஒரு சாதாரண நிகழ்வாகத் தெரிகிறது. காலனி அதிகாரி, "இந்த சுவாரஸ்யமான சம்பவத்தை எப்படியும் ஒரு அத்தியாயமாக எழுதி விடலாம். ஒரு அத்தியாயமாக இல்லா விட்டாலும், ஒரு கணிசமான பத்தியாக எழுதி விடலாம்", என தன் மனதளவில் நினைக்கிறார். காலனி அதிகாரி தன் புத்தகத்திற்கு தேர்ந்து எடுத்த தலைப்பு: The Pacification of the Primitive Tribes of the Lower Niger', என்று சினுவா அச்செபே சொல்வது காலனி ஆதிக்கத்தின் அறியாமையை உலகறியச் சொல்வதற்கு சமம் . பழங்குடி மக்களின் பாரம்பரியத்தை, அவர்கள் வாழ்க்கையை, அவர்கள் சிதைவை ஆவணப் படுத்தாமல் விட்டு விட்டால், இந்த மாதிரி காலனி அதிகாரிகளின் புத்தகங்கள் தாம் இவர்களது வரலாறாக ஆகி விடும் என்ற நுண்ணுணர்வு அச்செபெக்கு இருந்திருக்கிறது.

சினுவா அச்செபே இந்த நாவலை ஆங்கிலத்தில் எழுதியது ஒரு காலத்தில் பெரும் சர்ச்சைக்குரிய விஷயமாகக் கருதப் பட்டது. அச்செபே ஒரு எழுத்தாளர் மட்டும் அல்ல. தொடர்ந்து நைஜீரிய அரசியலில் பங்கேற்ற ஒரு செயலாளர். அச்செபே ஆங்கிலத்தில் எழுதியதால் தான் இந்த நாவல் மேற்கத்திய மக்களிடம் பிரசித்து பெற்றது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அந்த விளம்பர வாய்ப்பையும் மீறி, இந்த நாவல் சொல்லும் விஷயம், இந்த நாவலைப் படித்த எல்லா மக்களின் மனதையும் தொட்டது என்றால் மிகையாகாது. முதலில் அச்செபேயை கடுமையாக விமரிசித்தவர்கள் கூட, படிப்படியாக இந்த நாவலின் ஆழத்தை புரிந்து கொண்டனர். பாராட்ட ஆரம்பித்தனர். காலனி ஆதிக்கம், வெறும் பள்ளிகளை ஆரம்பித்து, மூட நம்பிக்கைகளைப் போக்க உதவிய மாற்றம் மட்டும் இல்லை. இந்த சமுதாய மாற்றத்திற்கு, ஆப்பிரிக்க பழங்குடி மக்கள் கொடுத்த விலை மிக அதிகமானது என்ற புரிதலை மேலை நாடுகளில் உருவாக்கியது சினுவாவின் நாவல். அது மட்டுமின்றி, இந்த நாவலில் பல நுட்பமான விஷயங்கள் ஓரிரு வரிகளில் சொல்லப்பட்டு விடுகின்றன - குறிப்பாக பழமொழிகளைக் கொண்டு. உதாரணமாக இம்மக்கள் வயதுக்கு மரியாதை கொடுப்பவர்களாக இருக்கிறார்கள். ஆனால் உழைப்பின் உழைப்பின் மூலமும் சமூக அந்தஸ்தை அடையாளம் என்பதை: "சிறுவனாக இருந்தாலும், கைகளை நன்றாகக் கழுவிச் சுத்தமாக வைத்துக் கொண்டால், அரசர்களுடன் அமர்ந்து கூட உணவருந்தலாம்", என்ற பழமொழி உணர்த்துகிறது. இப்படி ,நாவல் நெடுக பல பழமொழிகள். இது தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கு பரிச்சயமான ஒரு விஷயம் தானே?

தமிழில் இதே போல், கள்ளர்கள் வாழ்க்கையில் காலனி ஆதிக்கத்தின் விளைவாக நிகழ்ந்த சிதைவை அன்மையில் காவல் கோட்டம் நாவலில் சு. வெங்கடேசன் சித்தரித்து உள்ளார். சினுவா அச்செபேயின் நடை நம் ஊர் கி. ராஜ நாராயணனை நினைவு படுத்தியது. இந்த நாவலுக்கு உலகெங்கும் கிடைத்த மதிப்பும், மரியாதையும் உகந்ததே. இதே போல் தமிழில் தனித்துவத்துடன் எழுதி வந்த/வரும் கி. ராஜ நாராயணனுக்கும் மதிப்பும், மரியாதையும் கிடைக்க வேண்டும் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.

சினுவா அச்செபே 2013 ஆம் ஆண்டு காலமடைந்தார் . இந்த நாவல் தமிழில் பதினைந்து வருடங்களுக்கு முன்னரே தமிழில் மொழி பெயர்க்கப் பட்டு விட்டது. சுந்தர ராமசாமி நாவலின் முன்னுரையில், "சிதைவுகள் தமிழுக்கு வரும் போது, அதன் கதாபாத்திரங்கள் தம் வாழ்க்கையில் தழுவி நின்ற பண்டைய வாழ்க்கை முறை போல், மற்றொரு பண்டைய வாழ்க்கை முறை சார்ந்த வாசகர்களிடம் வந்து சேர்கிறார்கள்", என்று சொன்னது மிகப் பொருத்தம். இதை தமிழாக்கம் செய்த என். கே மகாலிங்கம் பாராட்டுக்குரியவர்.

(நன்றி: பாஸ்கி கண்ணன்)

* இந்த நூல் மதிப்புரை காலச்சுவடு பதிப்புக்காக எழுதப்பட்டது.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp