“ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இருக்கும் எங்கள் பிதாவே (முதலாளியே)!
உங்கள் திவ்விய நாமம் போற்றப்படுவதாக!
உங்கள் ராஜ்ஜியம் வருவதாக,
எங்கள் செல்வமிக்க ஆப்பிரிக்காவில்
விரும்பி அழைக்கும் ஆப்பிரிக்காவில்
காலனீய ஆட்சிக்காலத்தில் நடந்ததைப் போலவே
இப்போதும் உங்கள் விருப்பங்கள் நிறைவேற்றப்படுவதாக,
இன்றைய நாளில் எங்கள் தினக்கூலிக்குறிய டாலரைத் தாருங்கள்.
எங்களது தவறுகளை மன்னித்தருளுங்கள்.
உங்களுக்கும், எங்களுக்கும் சவாலாக உள்ள சூழலை வெற்றிகொள்ள உதவி தாருங்கள்.
கருணையை வழங்கி உறுதுணையாக இருந்து நாங்கள் உமக்கு
என்றும் பணிவுடனும் நன்றியுடனும் இருக்க ஆத்மபலத்தை அளியுங்கள்.
என்றென்றும், எப்போதும், ஆமென்!”
மேற்கூறிய வரிகளின் மூலம் சுதந்திரம் பெற்ற ஆப்பிரிக்க நாடுகள் முன்னாள் காலனீய முதலாளிகளுக்காகவே விடுதலை பெற்ற பின்னரும் செயல்படுகின்றன என்பதை தெளிவாக கூறுகின்றார். (இதில் ஆப்பிரிக்கா என்பதை எடுத்து விட்டு இந்தியா என்று போட்டு படித்தால் அப்படியே பொருந்தி போகின்றது. முதல் வரியில் மட்டும் ஒரு சின்ன மாற்றம் .. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், இந்தியாவிலும் இருக்கும் எங்கள் பிதாவே …. என வந்தால் இந்திய சூழ்நிலைக்கு சரியாக இருக்கும்).
சிலுவை என்றாலே எல்லோருடைய மனதிலும் இயேசு தான் காட்சியளிப்பார் ஆனால் இந்நூல் முழுதும் சாத்தான் தான் காட்சியளிக்கின்றார். வரியங்காவின் சிறு வயது முதலே அவளுக்கு சாத்தானை சிலுவையில் அறைவது போலும் பின்னர் சிலர் வந்து அந்த சாத்தானை மீட்பதும் போலும் கனவுகள் தொடர்ந்து வருகின்றன. வரியங்காவை மையப்படுத்தியே நாவல் நகர்கின்றது. நைரோபியில் தான் பார்த்துவந்த வேலையில் முதலாளியின் ஆசைநாயகியாக இருக்க மறுத்ததால், வேலையிலிருந்து நீக்கப்பட்டு, வசிக்கும் வீட்டிலிருந்தும் துரத்தப்படுவதால், மனம் நொந்து அலையும் வரியங்காவின் கைகளுக்கு வருகின்றது அந்த சாத்தானின் விருந்திற்கான அழைப்பு. அந்த விருந்து அவள் பிறந்த சொந்த ஊரில் நடப்பதாலும், வசித்த வீட்டிலிருந்து துரத்தப்பட்டதாலும் சொந்த ஊரான இல்மொராக் நோக்கி பயணிக்கிறார் வரியங்கா.
இந்தப் பயணத்தில் அவளுடன், கட்டிட தொழிலாளியான முதூரியும், விவசாயியான வங்காரியும், கல்லூரியில் நாட்டுப்புற இசை பற்றி படிக்கும் மாணவனான கத்தூய்ரியாவும், சாத்தானின் விருந்தில் கலந்து கொள்ள செல்லும் உள்நாட்டு முதலாளியான முகிராய், அவர்கள் செல்லும் வாகனத்தை ஓட்டும் முவாரா இவ்வறுவரின் கலந்துரையாடலூடாக கென்ய விடுதலை போராட்ட வரலாற்றையும், விடுதலைக்கு பின்னான நிலையையும், அதை மாற்றி மக்களுக்கான சோசலிசத்தை நோக்கி எப்படி பயணிப்பது என்பதையும், மண்ணின் இசையை, மக்களுக்கான கலையை(பூர்வகுடிகளின் இசையை) மீட்டெடுப்பதன் அவசியத்தையும், முதலாளித்துவத்தின் உண்மை முகத்தையும், மதமும், அரசும் எவ்வாறு முதலாளித்துவத்திற்கு வேலை செய்கின்றன என்பதையும் விளக்குகின்றார் நூலாசிரியர், இறுதியில் வரியங்கா(தன்னை) சிறுவயதில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி ஏமாற்றிய வயதான பணக்காரனை கொல்வதுடன் நாவல் முடிகின்றது……
மக்களை அடிமைத்தனத்திலேயே வைத்திருக்க ஐரோப்பிய காலனீய ஆட்சியாளர்கள் தங்களது மதத்தை பூர்வகுடிகள் மத்தியில் திட்டமிட்டு பரவச்செய்தனர். இதுதான் கென்யாவிலும் நடந்தது. பண்பாட்டு, கலாச்சார தளத்தில் மக்களிடையே தங்களது ஆதிக்கத்தை செலுத்த காலனீய ஆட்சியாளர்கள் கிருத்துவ மதத்தை பூர்வகுடிகளிடம் திணித்தார்கள். ஆட்சியதிகாரம் பூர்வகுடிகள் கைகளுக்கு வந்த பின்னரும், அது மக்களுக்கான சுதந்திரமாக இல்லை. அதனால் எத்தகைய விடுதலை மக்களுக்கு வேண்டும் என விரிவாகவும், விளக்கமாகவும் கூறுகின்றார் நூலாசிரியர்.
கென்ய மக்களின் விடுதலை என்பது ஆட்சியதிகார தளத்தில் மட்டுமல்ல, பண்பாட்டு, கலாச்சார தளத்திலும் நிகழ வேண்டும், அதுமட்டுமில்லாமல் ஆட்சியாளர்கள் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கானவர்களாக இருக்க வேண்டுமேயன்றி ஒரு சில முதலாளிகளுக்காக இருக்கக்கூடாது என்பதில் நூலாசிரியர் கூகி வா தியாங்கோ மிகவும் உறுதியாக இருந்துள்ளார் என்பது இந்த நூலில் தெளிவாக தெரிகின்றது.
ஆட்டின் தோலை உரிப்பதற்கு தோதான வழி தலைகீழாக கட்டி உரிப்பது, அந்த வழிமுறையையே இங்கு கூகி பயன்படுத்தியுள்ளார். சிலுவையில் தொங்கும் சாத்தானும், சாத்தானை காப்பாற்ற விளையும் சில பணக்காரர்களின் மூலம் முதலாளித்துவத்தையும், மதத்தையும் ஒன்று சேர்த்து தோலுரித்து காட்டுகின்றார்.
“தொழிலாளிகளின் மதச்சார்பைப் பொறுத்து பண்ணையில் சர்ச்சுகளையோ, பள்ளிவாசல்களையோ முதலாளி கட்டுவான். சாமியார்களை வேலைக்கமர்த்துவான் . ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தொழிலாளிகளுக்கு பிரசங்கங்கள் நடத்தப்படும். அங்கே மனித வியர்வை, ரத்தத்தை, மூளையை கறக்கும் அமைப்பு கடவுளாலேயே விதிக்கப்பட்டது, என்றும் அதற்கும், இறுதியில் அவர்களுடைய ஆத்மா மோட்சமடைவதற்கும் தொடர்பு உண்டு என்றும் அவர்களுக்கு போதிக்கப்படும். திருவிவிலிய நூலில் போதிக்கப்பட்டிருப்பது போன்று “வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்கள் பாக்கியவான்கள்; ஏனெனில் அவர்கள் தேறுதல் பெறுவார்கள்”. “நீதிமான்களாய் இருப்பதற்கே பசியிலும், துன்பத்திலும் துன்புறுபவர்கள் பாக்கியவான்கள்; ஏனெனில் அவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்”.
பண்ணையின் முதன்மையான பாடலான சாம்பாகீதம் இப்படி இருக்கும்:
"உன் பாவங்களுக்காக
நீ அழுது புலம்பினாலும்
உன் சிலுவையை நீ சுமந்தாலொழிய
இளைப்பாறுதல் பெற மாட்டாய். “
“கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்லா? அந்த அளவுக்கு சகிக்க முடியாத வன்முறை நிலவினால் உலகம் என்னவாகும்?
ஆம், ஒரு ஏழை தன் கண்ணுக்கும், பல்லுக்கும் பிரதி கேட்கும் போது தான் அது வன்முறையாகிவிடுகிறது. முதலாளிகள் தொழிலாளியின் பல்லை துப்பாக்கி கட்டையால் உடைக்கிறார்களே, அது வன்முறையில்லையா? அதனால் தானே இந்த முதலாளிகள் காலம் முழுதும் லட்சக்கணக்கான தொழிலாளிகளின் முதுகிலேயே ஏறி உட்கார்ந்து காலம் கழிக்கிறார்கள்? தொழிலாளிகளும் வாரம் தவறாமல் கோயிலுக்குப் போய் அடிமைத்தனத்தின் போதனையைக் கேட்டுவருகிறீர்கள்.
நான் உனக்குச் சொல்லுகிறேன்
தீமைகளை எதிர்க்காதே.
எவனாவது உன்னை வலது கன்னத்தில் அறைந்தால்
அவனுக்கு உன் மறுகன்னத்தையும் காட்டு.
எவனாவது உன்மீது வழக்கு போட்டு
உன் மேலாடையை எடுத்துக் கொள்வானானால்
உன் உள் ஆடையையும் அவனிடம் கொடுத்துவிடு”
முதலாளித்துவம் என்கிற சாத்தான் எப்படியெல்லாம் திட்டமிட்டு ஏழை, எளிய மக்களின் வியர்வையையும், இரத்தத்தையும் உறிஞ்சுகின்றது என்பதை பின்வரும் வரிகள் தெளிவாக காட்டுகின்றது.
“மாபெரும் விருந்து”
வாருங்கள், வந்து பாருங்கள்
நவீன திருட்டிலும், கொள்ளையிலும் பேர்போன
ஏழு நிபுணர்களைத் தேர்ந்தெடுக்கும் போட்டி,
வங்கிக் கடன்கள், பலப்பல நிதி நிறுவனங்களின்
இயக்குனர் பதவிகள் உள்ளிட்ட பலபலப்பரிசுகள்
உங்கள் திறமையைச் சோதியுங்கள்!
உங்கள் அதிர்ஷ்டத்தைச் சோதியுங்கள்!
நவீன திருட்டில், கொள்ளையில் போட்டியிட்டு
வெற்றி கிரீடத்தை சூட்டிச்செல்லலாம்!
நவீன திருடர்களிலும், கொள்ளைக்காரர்களிலும்
தலைசிறந்த ஏழுபேரைத் தேர்ந்தெடுக்கும் போட்டி!
‘நரகத்தின் தூதுவர்கள்’குழுவினரின் இன்னிசை விருந்து!
கையொப்பம்: விழாத்தலைவர்
மே/பா. திருடர்கள் மற்றும் கொள்ளையர்களின் குகை
இல்மொராக் கோல்டன் ஹைட்ஸ்
அடிப்படை தகுதி – வெறும் நூறும், ஆயிரமும் திருடுபவர்கள் சிரமப்பட்டு மேடைக்கு வந்து எங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம் , ஒரு முறையாவது கோடிக்கணக்கில் திருடி இருக்க வேண்டும்.”
மேற்சொன்ன போட்டியில் கலந்து கொண்ட முதல் போட்டியாளன் மண்ணையும், காற்றையும் விற்க வேண்டும் என்ற தனது எதிர்கால திட்டத்தை பற்றி சொல்வான், இருபது ஆண்டுகளுக்கு முன்பு நம்மிடம் யாராவது வந்து குடிநீருக்கு விலை வைத்து விற்பார்கள் என்று சொன்னால் நாம் சிரித்திருப்போம், ஆனால் இன்றைய நிலைமை என்ன? அரசே குடிநீரை விற்கின்றது. அதை போல தான் மேலே சொன்ன காற்றை விற்கும் திட்டமும், அதற்கான களப்பணிகள் நடக்க தொடங்கிவிட்டன. நகரத்தில் போதுமானளவு காற்றை மாசுபடுத்தியாயிற்று. பூங்கா நகரம் என்றழைக்கப்படும் பெங்களூரில் தான் சுவாசம் தொடர்பான நோய்கள் அதிகமாக உள்ளன. மேலும் அந்த போட்டியாளனின் சில திட்டங்களை இங்கு பார்ப்போம்…
“விவசாயிகளும், தொழிலாளிகளும் பொறுமையிழந்து, நமது ராணுவப் படைகளின் பலத்துக்கு அடங்காமல் திமிறுவார்களானால், அவர்களுக்கு காற்றை விற்க மறுப்பதன் மூலம் சுலபமாக நம் முன் மண்டியிடச் செய்து விடலாம்! மக்கள் ஏதாவது முறையிட்டால், அவர்களுக்கு காற்றை வழங்க மறுக்கலாம்! மக்கள் தாம் கொள்ளையடிக்கப்படுவதையோ, தம் சொத்தை நம்மிடம் பறிகொடுப்பதற்கு மறுத்தால் பேசாமல் காற்றுக்குழாயைத் திருகி மூடிவிடவேண்டியது தான். அவர்கள் பதறி அடித்துக்கொண்டு நம்மிடம் ஓடிவந்து “தயவு செய்து எங்களிடமிருந்து திருடுங்கள், இரக்கமின்றி எங்களிடமிருந்து கொள்ளையடியுங்கள்……” என்று மன்றாடி சரணாகதி அடையும் வரை மறுபடியும் திறந்து விடவே கூடாது.”
இதை தான் சில நாட்களுக்கு முன்னால் நாம் சென்னையில் பார்த்தோம். குடிநீர் கொடுக்கும் நிறுவனங்கள் சில விதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லி சோதனை நடத்திய போது எல்லா நிறுவனமும் வேலையை நிறுத்திவிட்டு மக்களை தண்ணீரில்லாமல் தவிக்க விட்டனர். மக்களும் எங்களுக்கு தண்ணீர் கொடுங்கள் என கோரினார்களே ஒழிய அதை அரசு தான் கொடுக்க வேண்டும் என்றோ, இந்த நிறுவனங்களை முறைப்படுத்த வேண்டும் என்றோ கோரவில்லை.
இந்தியாவின் இன்றைய நிலைக்கு சிலுவையில் தொங்கும் சாத்தான்கள் நாவல் எல்லோரும் படிக்க வேண்டிய ஒரு அருமையான நூல்.
உலக இலக்கியங்கள் எழுத ஒரு இரம்மியமான சூழலும், அமைதியும் வேண்டும் என்று சிலர் இப்பொழுது கூறிவருகின்றார்கள், கழிவறை காகிதத்திலும் கூட உலக இலக்கியங்கள் படைக்கலாம், தேவை மக்கள் மீதான அன்பும், புரட்சியின் மீதான நேசமுமே என்பதை நிரூபித்துள்ளார் கூகி வா தியாங்கோ. ஆம் இந்நாவல் முழுவதும் அவர் சிறையில் இருந்த காலத்தில் கழிவறை காகிதத்தில் எழுதப்பட்டதே. அதே போல இந்நாவலை எளிமையான தமிழில் மொழிபெயர்த்து கொடுத்துள்ளார்கள் தோழர் அமரந்தாவும், தோழர் சிங்கராயரும். இந்நூல் முதலில் கென்ய பழங்குடிகளின் ஒரு மொழியான கிக்கூயூ மொழியில் வந்து மூன்று பதிப்பு கண்டது. பின்னர் நூலாசிரியர் கூகியாலேயே ஆங்கிலத்தில் “Devil on the Cross” என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டது. ஆப்பிரிக்க இலக்கிய உலகின் முக்கியமான ஆளுமை கூகி வா தியாங்கோ.
(நன்றி: சேவ் தமிழ்சு இயக்கம்)