சொல்வனம் இதழ் மூலமாக ராமன் ராஜாவின் எழுத்துகள் எனக்கு அறிமுகமாயின. முதலில் ஒரு மன விலக்கத்துடனேயே இவரது கட்டுரைகளைப் படிக்கத் தொடங்கினேன். ஆரம்பகாலத்திலிருந்தே தமிழில் அறிவியல் கட்டுரைகள் மேலோட்டமாக மட்டுமே எழுதப்பட்டு வந்தது ஒரு காரணமாக இருக்கலாம். அறிவியல் கட்டுரைகளை பிரபல இதழ்களில் அறிமுகப்படுத்திய சுஜாதாவைத் தவிர பெரும்பான்மையானவர் அறிமுக வாசலைத் தாண்டவில்லை. ’தலைமைச் செயலகம்’, ‘கற்பனைக்கும் அப்பால்’, ‘கடவுள் இருக்கிறாரா?’ போன்ற கட்டுரைத் தொகுப்புகள் அறிவியல் எழுத்துக்கு மிகக் கச்சிதமான மாதிரியாக இருக்கின்றன. ஆனால், அவர் ஆழமாகப் பயணிக்க அச்சு இதழ்கள் நேரம்/இடம் வழங்கவில்லை. இதனாலேயே, சுஜாதாவைப் பின் தொடர்ந்தவர்கள் எழுதிய கட்டுரைகள் தேவையான ஆழத்துக்குச் செல்லாமல் மிக மேலோட்டமான அறிமுகத்துடன் நின்றுவிட்டன.
‘அறிமுகம்’ எனச் சொல்லும்போது – ஓரளவு ஆங்கில வாசிப்புப் பழக்கம் உள்ளவர்கள் அதே அறிவியல் கருத்துகளைச் சுலபமாகவும், மேலும் ஆழத்துடனும் ஆங்கிலக் கட்டுரைகள் வழியே சென்றடைய முடியும் – என அர்த்தப்படுத்திக் கொள்கிறேன். மேலும் ‘மேலோட்டமானது’ எனச் சொல்லும் போது – பல கட்டுரைகளில் அறிவியல் முடிவுகளை முன்னிறுத்துவதில் இருக்கும் முனைப்பு, அறிவியல் எனும் முறைமை (Methodology) விளக்குவதில் தெரிவதில்லை – எனப் புரிந்துகொள்ளலாம்.
திண்ணை இதழில் எழுதிக்கொண்டிருக்கும் சி.ஜெயபாரதன் அறிவியல் முறைமையைப் பிரதானமாக தன் கட்டுரைகளில் முன்னிறுத்துபவர். உதாரணத்துக்கு, அணுசக்தி பற்றி எழுதும் போது, அவரது கட்டுரையின் மையம் அணுசக்தி தொழில்நுட்பத்துக்கு பின்னால் இருக்கும் அறிவியலை முன்வைக்கிறது. இதனால் இத்துறை சார்ந்த ஆர்வம் மற்றும் அடிப்படை அறிவியல் ஞானம் கொண்ட வாசகனை இவ்வகை எழுத்து அதிகமாக ஈர்க்கும். அறிவியல் முறைமையைத் தெரிந்து கொள்ள விழையும் வாசகன் இவ்வகை எழுத்துக்குள் ஓர் நுழைவைக் கண்டடைவான். அறிவியலில் ஆரம்ப நிலையில் இருக்கும் வாசகன் இவ்வகை எழுத்தைப் புரிந்து கொள்ள இயலாது.
தமிழில் அறிவியல் கட்டுரைகள் என இதுவரை வெளிவந்தவற்றை தொகுத்துப் பார்த்தால் ஒன்று புரியும். அவை பொதுவாக, எளிமையான அறிவியல் முடிவுகளைக் கொண்ட விளக்கக் கட்டுரைகள் அல்லது ஆராய்ச்சியாளனின் ஆய்வுக்கட்டுரை போன்று ஆழமான அலசல்களுடன் படிப்பவர்களின் கடின உழைப்பை கோரும் கட்டுரைகளாக இருக்கும். ராமன் ராஜாவின் கட்டுரைகளைப் படிக்க ஆரம்பிக்கும் வரை, நான் படித்த தமிழ் அறிவியல் கட்டுரைகள் இந்த இரு எல்லைகளுக்குள்ளே ஊசலாடிக்கொண்டிருந்தன.
இவ்விரண்டு எல்லைகளை இணைப்பது இன்றைய துறைசார் எழுத்தின் மிகப் பெரிய சவாலாகும். எழுதும் கருத்துகள் இலகுவான மொழியில் , துறை சார்ந்த சொல் களஞ்சியத்தைப் பயன்படுத்தி தெளிவாக இருக்க வேண்டும். அதே சமயம் குறிப்பிட்ட அறிவுசார் துறையின் முறைமையையும் ஓரளவு விவரிக்க வேண்டும். மிக ஆழமான விளக்கங்களுக்குள் செல்லும் அறிவியல் முறைமை, நம் பள்ளி /கல்லூரி அறிவியல் பாடபுத்தகங்கள் போல் தட்டையாக மாறிவிடும் அபாயம் உள்ளது. அதே சமயம், மிக சுவாரஸ்யமாக எழுதும்போது கட்டுரையின் மையக் கருத்து நூலறுந்த காற்றாடி போல் பறந்துவிடுகிறது.
சொல்வனம் வெளியீடாக வந்திருக்கும் ராமன் ராஜாவின் அறிவியல் கட்டுரைகளை ‘சிலிக்கான் கடவுள்‘ எனச் சரியாகப் பெயரிட்டுள்ளார்கள். இப்புத்தகத்தின் கட்டுரைகளைப் பல தலைப்புகளாகப் பிரித்திருந்தாலும், அனைத்தையும் இவ்வுலகில் மனித உயிர் நீட்டிப்புக்கான/உருவாக்கத்துக்கான முயற்சிகள் என்ற பகுப்புக்குள் அடக்கிவிடலாம். கொஞ்சம் சில்லறைக்காக குட்டிக்கரணம் போடும் குரங்கு போல் தன இனப் பாதுகாப்புக்காக மனிதன் செய்யும் ஆராய்ச்சிகளை, அபாயங்களை பல கட்டுரைகள் வழியாக ராமன் ராஜா விவரிக்கிறார்.
ராமன் ராஜாவின் கட்டுரையைப் படிக்கத் தொடங்கும் எவரும் அவரது சிக்கலில்லாத மொழிக்கு ரசிகராக மாறிவிடுவர். எளிமையான மொழி என்பதைத் தாண்டி அவர் உபயோகப்படுத்தும் பிரயோகங்கள், சொல்ல வரும் அறிவியல் கருத்துக்குத் தேவையான கச்சித மொழியாக எனக்குத் தோன்றுகிறது. தூய தமிழில் சொல்லவேண்டிய அவசியத்தைப் பலரும் வற்புறுத்தினாலும், தேவையான இடங்களில் எல்லாருக்கும் புரியக்கூடிய சரியான வார்த்தையை, அவை ஆங்கிலத்தில் இருந்தாலும், பயன்படுத்த இவர் தயங்குவதில்லை.
குறிப்பாக ஆங்கில மூலக் கட்டுரையிலிருந்து எழுதும்போது தமிழ் வாசகர்களுக்கேற்ற வகையில் உதாரணங்களையும், தொடர்புறுத்துல்களையும் உறுத்தல் இல்லாமல் சொல்வது இவரது பலம். கட்டுரைகளிலிருந்து பல உதாரணங்களைத் தரலாம். அவை இவ்விதழ் முழுவதையும் அடைத்துக் கொள்ளும் என்ற பயத்தால், சிலவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன்.
‘ஆட்டையும் மாட்டையும் கொல்லாமல் ஆம்பூர் ஃபாக்டரியில் தயாரித்த சுத்த சைவ மட்டன் பிரியாணி என்றால், அருட் பிரகாச வள்ளலார் கூட ஆட்சேபிக்க நியாயமில்லை.’ – டிஷ்யூ எஞ்சினியரிங் பற்றி ‘எந்த கடையில் வாங்கிய மூக்கு?’ கட்டுரையிலிருந்து.
’இது எபிஜெனடிக்ஸின் நூற்றாண்டு. காட்டாங்குளத்தூர் கல்லூரி ஒன்றில் உங்கள் மகன் அல்லது மகளை எபிஜெனடிக்ஸ் பிரிவில் படிக்க வைக்க சீட்டுக்கு முந்துங்கள்.’ -எபிஜெனடிக்ஸ் பற்றி ‘நார்ப்பாட்டனும், நம்ம பாட்டனும்’ கட்டுரையிலிருந்து.
ஆழ்கடல் முதல் சிறு தேனீக்கள் வரை சுயலாபத்துக்காக ஆராய்ச்சி என்ற பெயரில் மனிதன் இயற்கையின் மேல் நடத்தும் வன்முறையை வருத்தத்துடன் விவரிக்கிறார் ராமன் ராஜா. இதை சாக்காகக் கொண்டு ஆராய்ச்சிகள் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோஷங்களை இவர் கட்டுரைகள் முன் வைப்பதில்லை. தவறான வழியில் செல்லும் சிறுவனுக்கு ‘ஏண்டாப்பா இப்படி செய்யறே?’ என கண்டிக்கும் அறிவுரைகளை வழங்கும் ‘பெரிசு’ பட்டத்துக்கும் இவர் போட்டி போடவில்லை. இயல்பாக ஒலிக்கும் நகைச்சுவையைக் கலந்து மனிதன் செய்யும் முயற்சிகளை கரிசனத்தோடு எழுதுகிறார். இக்கட்டுரைகளின் முக்கியமான அம்சமாக இதைப் பார்க்கிறேன்.
நவீன மருத்துவம் பற்றிய கட்டுரைகள் இக்காலகட்டத்துக்கு மிக முக்கியமானவை. மருந்து நிறுவனங்கள், உலகளாவிய மருந்துச் சந்தை, புதிய மருந்து ஆராய்ச்சிக்காக மனித எலிகளாக மாறும் மூன்றாம் உலகு மனிதர்கள், உலக நல நிறுவனங்கள் போன்றவர்கள் பின்னிய வலைக்குள் நம் அன்றாட மருத்துவ உலகம் சுழன்றுகொண்டிருக்கிறது. நடமாடும் மருத்துவர் போல் ஒவ்வொருவரும் குறைந்தது பத்து வித மாத்திரைகளின் உபயோகங்களைத் தெரிந்து வைத்திருக்கிறோம். இதை அறிவு விருத்தியாகக் கருத முடியுமா? தினம் வெளியாகும் மருத்துவச் செய்திகள் நம் உளவியலை பாதிக்கின்றன என்பது இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய சோகம். உடல் மற்றும் மனம் இணைந்து சமாளிக்க வேண்டிய வியாதிகளை மருந்து உட்கொள்வதால் மட்டும் தீர்க்க முடியாது என ‘மருந்து இருந்தால் சொல்லுங்கள்‘ கட்டுரையில் மிக நயமாக விளக்குகிறார்.
பரிணாமம் பற்றி இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ள கட்டுரைகளை மேலும் விரிவாகத் தனிப் புத்தகமாக ராமன் ராஜா உருவாக்க வேண்டும். அத்தனையும் மிகச் சிறப்பாக எழுதப்பட்டிருக்கின்றன. மரபீனி தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, மனிதனின் அடுத்த பரிணாமச் சூழல் போன்றவற்றை ஒரு தனித்த அறிவியல் கருத்தாக்கமாக மட்டும் பாராமல், ஒரு விரிவான சமூக மாற்றமாக இவர் முன்வைக்கிறார். அறிவியல் உலகில் நாளை நடக்கும் மாற்றங்கள் ஆராய்ச்சிக் கூடத்தில் மட்டும் நடக்கப்போகும் விஷயமில்லை. அவை கூடத்துக்கு வெளியே இருக்கும் ஒவ்வொரு மனிதனின் சிந்தனையையும் மாற்றப் போகின்றன. மூன்று கைகள், நான்கு காதுகள் போல் கண்கூடாகத் தெரியாவிட்டாலும், நம் சிந்தனை மற்றும் செயல்பாடுகள் ஏற்கனவே இவ்வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. நவீன தொழில்நுட்பம் மூலம் சுருங்கப் பேசுவது (ட்விட்டர்), சுருக்கமாக விஷயத்தை உள்வாங்குவது (ஒரு பக்க/அரை பக்க கேப்சூல் கதைகள்), சிதறுண்ட கவனத்தை பல திசைகளிலும் மேலோட்டமாக மேய விடுவது போன்றவை மனிதன் 2.0- வின் அடுத்த கட்ட வளர்ச்சி என விவரிக்கிறார். குறைந்த சதவிகித மக்கள் மட்டுமே இணைய அடிமைகளாக மாறியிருந்தாலும், சமூகத்தின் இந்த முக்கியமான மாற்றத்தை முன்னகர்த்தும் காரணியாக இச்சிறு கூட்டம் இருக்கப் போகிறது எனும் பயம் நமக்கு எழாமல் இல்லை. இப்படிப்பட்ட மனிதனை Pancake மனிதர்களாக ரிச்சர்ட் போர்மேன் விவரிக்கிறார்.
ராமன் ராஜாவின் அக்கறை அறிவியலைத் தாண்டி அறிவுசார் துறைகளிலும் பரவியிருக்கிறது. சமூகவியல், பொருளாதாரம், தொழில்நுட்பம், உளவியல் என அன்றாட அறிவியல் அவியலாக மாறிவருவதால் அதை ஒரு தனிக்கூறாக இனி பார்க்க முடியாது என விளக்குகிறார். முக்கியமாக நாட்டின் பொருளாதாரத்தை ஏற்றுமதி, இறக்குமதி, கொள்முதல், சம்பாத்தியம் போன்ற திட்டவட்டத் தரவுகளைக் கொண்டு அளப்பதொடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மூலமும் அது அளக்கப்படலாம் என்பதை ‘பளிச்சென்று எரிந்த பொருளாதாரம் ‘ கட்டுரையில் அழகாக விவரிக்கிறார். செயற்கைக் கோள்கள் மூலமாக ஒரு நாட்டின் மேல் படர்ந்திருக்கும் இரவு வெளிச்சத்தின் பரவலைக் கொண்டு பொருளாதாரத்தின் வளர்ச்சி/வீழ்ச்சியை கணக்கிடலாம். இதை ஒரு கறாரான அறிவியலாகக் கருத முடியாது எனினும், ஒரு சமூகம் பணத்தில் திளைப்பதை இவ்வெளிச்சத்தைக் கொண்டு அளக்கலாம் என்பது மிக முக்கியமான சமூகவியல் தரவாக மாறுகிறது.
இப்புத்தகத்தில் இருக்கும் கட்டுரைகள் அனைத்தும் சமூக அறிவியல் எனும் அறிவுத்துறைக்குள் பலமாக ஊடுருவியுள்ளன. எந்த திசையில் பாய்ச்சலை நிகழ்த்தும் என்ற ஆர்வத்தைத் தாண்டி, எதிர்கால அறிவியலால் மனிதனுக்கு உண்டாகும் சாதகம்/பாதகம் பற்றிய கரிசனம் ராமன் ராஜாவின் கட்டுரைகளில் துருத்திக்கொண்டிருக்கிறது. எதிர்கால மனிதன் எப்படிப்பட்டவன், தொழில்நுட்பத்தால் உந்தப்படும் மனிதனின் மனம் நிகழ்த்தும் பாய்ச்சல் எப்படிப்பட்டது, ஊடகம் முன் வைக்கும் அன்றாட அறிவியல் எப்படிப்பட்ட விளைவை உண்டுசெய்யும் என்பதே அவர் எடுத்தாளும் மையக் கருவாக இருக்கிறது. இதனாலேயே இக்கட்டுரைகளை சமூக அறிவியல் எனப் பகுத்துவிடலாம்.
இணைப்புகளாக இக்கட்டுரைகளின் மூல ஆராய்ச்சிக் கட்டுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. The Scientist, Seed Magazine போன்ற இதழ்களின் மூலக் கட்டுரையிலிருந்து அறிவியல் செய்திகளை நமக்கு புரியும் விதத்தில் ராமன் ராஜா அழகாக எழுதியுள்ளார். முக்கியமாக அவரது நகைச்சுவை உணர்வு மூலம் சிக்கலான கருத்துகளை எளிமையாக விளக்கிவிடுகிறார். இக்கட்டுரைகளின் ஆகப்பெரிய பலமாக அவரது மொழி இயங்கியுள்ளது. எளிமை என்பதை மேலோட்டம் என தப்பர்த்தம் செய்துகொள்ளாமல், அறிவியல் கட்டுரைக்கு தேவையான வார்த்தை பிரயோகங்களும், பல அர்த்தங்களுக்கு சாத்தியப்படாத கச்சிதமான சொற்தொடர்களாலும் இவை சிறப்பாக அமைந்துள்ளது.
அறிவியல் கட்டுரைகளுக்கு மிக முக்கியமான திருப்புமுனையாக ‘சிலிக்கான் கடவுள்’ அமைந்திருக்கிறது. ஒவ்வொரு கட்டுரையும் ஒரு தீவிரமான அறிவியல் சவாலை முன்வைத்திருப்பது, இலகுவான மொழியில் ஹாஸ்யமாக வழுக்கும் நடை , தேவையான அளவு அறிவியல் முறைமையை எளிமைப்படுத்தாமல் முன்வைத்திருப்பது போன்றவை இப்புத்தகத்தின் வெற்றிக்கான காரணங்களாக எனக்குத் தோன்றுகிறது. இதில் மூன்றாவது காரணம் மிக முக்கியமானதும், இதுவரை எழுதப்பட்ட தமிழ் அறிவியல் கட்டுரைகளில் அரிதாகக் காணப்பெற்றதுமாகும். இக்கலவையினால் இதுவரை அறிவியல் கட்டுரைகளாக அறியப்பட்டு வந்த கட்டுமானத்தை மேலும் செறிவாக ராமன் ராஜா மாற்றியிருக்கிறார். தமிழின் நவீன அறிவியல் எழுத்தாக அறியப்பட்ட சுஜாதாவின் கட்டுரைகளையும் இக்காரணங்களால் பல இடங்களில் இவை விஞ்சி நிற்கின்றன.
அறிவியல் முறைமையும் எளிமையான விவரணைகளும் இரு தண்டவாளங்கள் போன்றவை; ஒன்றாகப் பயணம் செய்ய முடியாதவை எனும் கோட்பாட்டை சர்வ சாதாரணமாக ராமன் ராஜா தாண்டியுள்ளார். அறிவுசார் முறைமைகளை விளக்கும்போது அத்துறை சார்த்த மொழிக் களஞ்சியம் கைகூட வேண்டும். மேலும் மிகவும் தட்டையான பாட புஸ்தக நடையில் இல்லாமல், நம் சிந்தனைக்கு சவால் விடும் விதத்தில் சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருக்க வேண்டும். இவை இரண்டும் இக்கட்டுரைகளில் மிக சிறப்பாக கையாளப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, ’பூச்சி உலகில் மர்ம மரணங்கள்’ மற்றும் ’எண்ணெய்ச் சிதறல்கள் பற்றி: சில எண்ணச் சிதறல்கள்’. இதுவரை தமிழில் அறிவியல் கட்டுரைகள் கண்டிராத பாய்ச்சல் இது; ஒரு விதத்தில் தமிழ் அறிவியல் கட்டுரைகளுக்கான சரியான ஆரம்பத் திறவுகோலே இக்கட்டுரைகள்.
மேலும், இப்புத்தகத்தில் முக்கியமானதாக நான் கருதுவது ரா.ரா என்ற பெயரில் ராமன் ராஜா உருவாக்கிய அமெச்சூர் கார்டூன்கள். பத்து வரிகளில் சொல்வதை பப்லுவின் அதிகப்பிரசங்கித்தனக் குறும்புகள் மூலம் ஒரே படத்தில் சொல்லிவிடுகிறார். தன் வீட்டிலுள்ள பப்லுவே இதன் வெற்றிக்குக் காரணம் எனச் சொன்னாலும், இன்றும் ராமன் ராஜா பப்லு போன்ற inquisitive குறும்பராகவே இருப்பார் என கட்டுரை படிக்கும்போது தோன்றியது.
logo3சொல்வனம் புத்தக பிரசுரத்தில் நுழைந்ததை மிக அவசியமான ஒன்றாகக் கருதுகிறேன். இணைய வசதி இல்லாத வாசகர்களுக்கு இக்கட்டுரைகளை முனைப்போடு கொண்டு செல்ல வேண்டும் என்பதில் சொல்வனம் தீவிரமாக இருப்பதாகத் தோன்றுகிறது. சொல்வனம் போன்ற இணைய இதழ், ஊடகத் தொழில்நுட்பத்தின் மூலம் வாசகர்களுக்கு மேலும் பல தகவல்களைக் காணொளி மற்றும் ஒலித்துண்டுகள் வழியாகக் கொண்டு செல்கிறது. அச்சு ஊடகத்தில் அவற்றை இணைக்க முடியாது என்ற குறை இருந்தாலும், சுட்டிகள் தருவதன் மூலம் வாய்ப்பு கிடைப்பவர்கள் மேல் தகவல்களுக்காக அவற்றை சென்றடைய வசதி செய்திருக்கிறது. அல்லது முன்னுரையில் ராமன் ராஜா கூறியிருப்பது போல் Tabletஇல் படித்துக்கொள்ளலாம்.
சொல்வனம் இதழின் ஆரம்ப காலத்திலிருந்து தீவிர வாசகனாகத் தொடர்ந்து படித்து வருவதால், அதன் வளர்ச்சிப் போக்கை ஆவல் கலந்த பிரமிப்புடன் பார்த்து நெகிழ்ந்து வருகிறேன். ஒவ்வொரு நிமிடமும் வாசிப்பு, புத்தகங்கள் என விழித்திருந்து அறிவுத்தேடலில் இருக்கும் இக்குழு, அறிவுப் பரவலுக்காகத் தரமான அறிவியல் கட்டுரைகளைத் தருவதில் குழந்தைத்தனமான குதூகலத்தோடு ஈடுபட்டு வருவதை ஒவ்வொரு இதழிலும் கண்டு வருகிறேன். அருண் நரசிம்மன், அரவிந்தன் நீலகண்டன் போன்ற ஜாம்பவான்களின் அறிவியல் கட்டுரைகளும் இதற்கு மிகப் பெரியச் சான்றாகும். இவர்கள் அறிவியல் பற்றி மட்டும் எழுதுவதில்லை. பல் துறை ஈடுபாட்டோடு, அன்றாட வாழ்வின் ஈடுபாடுகளையும் தரையில் கால் ஊன்றித் தருவதால் இவர்களது கட்டுரைகள் பேராசிரியர் சொற்பொழிவாக இல்லாமல் நண்பர்களுடனான உரையாடல் போல் அமைகின்றன. வான் குடைக்குக் கீழே இருக்கும் சகலத்திலும் ஆர்வம் கொண்டுள்ள சொல்வனம் குழு உருவாக்கியிருக்கும் பிரசுர பிஞ்சுக் கால்கள் இதழியல், இலக்கியம், கலை மேம்பாடு என சரியான திசையில் பயணித்துவருகிறது. களைப்படையாமல் மேலும் பயணிக்க வேண்டும் என நண்பர்களை வாழ்த்துகிறேன். சொல்வனம் இதழ் உருவாக்குவதிலேயே அவர்கள் ஊக்கம் பெறுவதால், தனியாக ஊக்க மருந்து தேவையில்லாததாகிறது.
இப்புத்தகத்தில் அமைந்திருக்கும் கட்டுரைகளை ராமன் ராஜா மேலும் விரித்தெடுக்க வேண்டும் என அவரது வாசகனாக விண்ணப்பம் வைக்கிறேன். தமிழில் அறிவியல் கட்டுரைகளுக்கான சிறந்த வகை மாதிரியாக இவை அனைத்தும் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
(நன்றி: சொல்வனம்)