பொதுவாகக் காங்கேயம் என்று கூறும்போதே ஊர்ப் பெயருடன் காளையும் அதனுடன் சேர்ந்து “காங்கேயம் காளை” என்று நினைவுக்கு வருவதே வழக்கம். அங்குக் காளை மட்டுமே பிரபலம் என்று நாம் நினைக்கும் அளவிற்கே கொங்குப் பகுதியின் வரலாறு நமக்குச் சொல்லப்பட்டு வந்துள்ளது. இது அப்பகுதி வரலாற்றின் ஒரு பகுதியே. வைர கற்களுக்கு எந்த விகிதத்திலும் விலை மதிப்பு குறைவில்லாத செமி பிரசியஸ் ஸ்டோன் (பகுதி மதிப்புமிக்க கற்கள்) என்றழைக்கக்கூடிய மாணிக்கம் (Ruby), மரகதம் (Emerald), வைடூரியம், நீலக்கல் (Sapphire), கோமேதகம் (Topaz) மற்றும் பச்சைக் கல் (Beryl) முதலிய விலையுயர்ந்த கற்கள் பண்டைய தமிழத்தில் காங்கேயம், ஈரோடு, கரூர், நாமக்கல் முதலிய கொங்குப் பகுதியிலிருந்து கிரேக்கம், ரோம், எகிப்து முதலான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதற்கான குறிப்புகள் சங்க இலக்கியங்கள் பலவற்றில் இடம் பெற்றுள்ளது. இத்தகைய விலையுயர்ந்த கற்களின் வணிகம் இக்கால கட்டத்தில் குறிப்பாக உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல், இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டு சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் வணிகம் எவ்வாறு உள்ளது. இவ்வணிகத்தின் பயனைப் பெற்று வருபவர்கள் யார்? விவசாயிகளா அல்லது பெரும் வணிக நிறுவனங்களா அல்லது இடைத்தரகர்களா? என நம்முன் பல கேள்விகளை அடுக்கி வைத்து அடுத்தடுத்து வரும் பகுதிகளில் அதற்க்கான விடைகளையும் விவரித்துச் செல்கிறார் ஆசிரியர் இரா.முருகவேள்.
இப்படியொரு வணிகம் பண்டைய காலந்தொட்டே இருந்து வந்துள்ளது என்று அறியும்போது அப்போதைய பழங்குடிகள் மற்றும் தென்னிந்தியாவை ஆண்ட சேர, சோழ மற்றும் பாண்டியர்கள் தங்கள் அரசின் நன்மைக்காக இத்தகைய கற்களின் வணிகத்தை எவ்வாறு உபயோகித்துக் கொண்டார்கள், அதற்காக அன்று நடைபெற்ற போர்கள் எனப் பல குறிப்புகளை நம் முன் வைத்து, வரலாற்றை ஒரு தனிப்பட்ட மன்னனின் வரலாறாகப் பயிற்றுவிப்பது எவ்வளவு பெரிய தவறு என்றும், வரலாற்றை ஒரு மக்கள் திரளின் வரலாறாக, மக்களின் சமூக பொருளாதார இயக்கங்களுடன் சேர்த்து பயில வேண்டும், பயிற்றுவிக்க வேண்டும், அவ்வாறு பயிலாதது எத்தகைய தவறு என்று நம்மை அழச் சிந்திக்கும் நிலைக்கு எளிதாகத் தள்ளிவிட்டுச் சென்றுவிடுகிறார் ஆசிரியர்.
தனது சிறுவயதிலிருந்தே தன் தந்தையின் மூலமாகப் பல தமிழ் இலக்கியங்கள் குறிப்பாகச் சிலப்பதிகாரக் கதைகளைக் கேட்டு வளர்ந்த டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஜர்னலிஷம் (பத்திரிகைத் துறை) பயின்று முடித்த இளம்பெண் முல்லை, மற்றும் இடதுசாரி இயக்கங்களில் தன்னை இணைத்துக் கொண்ட தன்னுடைய சக கல்லூரி நண்பன் நவீனுடன் சேர்ந்து பூம்புகாரிலிருந்து கண்ணகியும், கோவலனும், கவுந்தியடிகளும் சுமார் மூன்று மாத காலமாக நடைபயணமாகவே மதுரையை அடைந்த அந்த வழியில் பயணித்துக் கண்ணகியைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுக்கும் நோக்கத்தோடு சென்னையிலிருந்து பூம்புகார் நோக்கி இருவரும் பயணிக்கிறார்கள்.
இப்பயணத்தின்போது பண்டைய தமிழர்களின் வணிகத்தையும், அவர்களின் வாழ்க்கை முறையையும், கொங்குப் பகுதியின் வணிகத்தையும் ஆய்வு செய்து வரும் பேராசிரியர் ஸ்ரீகுமார் அவர்களைப் பூம்புகாரில் முல்லையும் நவீனும் சந்திக்கிறார்கள். இவர்கள் மூவருக்கும் இடையிலான உரையாடல் சிலப்பதிகாரத்திலிருந்து பண்டைய தமிழர்களின் வாழ்வு, சோழர்கள் காலத்தில் காவிரிக்கு கடிவாளம் அமைத்தது, தனியொரு மன்னனின் செயலல்ல, அது ஒரு பெரும் மக்கள் திரளால் மட்டுமே அது சாத்தியமானது என்றும், கொங்கு பகுதியின் கல் வணிகம், கலிங்கப் போருக்குப் பிறகு அசோகர் ஏன் எந்தவொரு போரிலும் ஈடுபடாமல் புத்த மதத்திற்கு திரும்பினார், புத்தமும் சமணமும் வணிகர்களுக்கான மதம், அம்மதங்களின் மூலம் அன்றைய ஆட்சியாளர்கள் எவ்வாறு தங்களது ராஜ்ஜியங்களை பழங்குடி மக்களிடையே போரின்றி கொண்டு செல்ல முடிந்தது எனச் சமூக-பொருளாதார நிலையில் அன்றைய வரலாறை இம்மூவரது உரையாடலின் மூலம் நமக்கு அறிமுகம் செய்கிறார் ஆசிரியர். அத்தோடு நில்லாமல் இடதுசாரி இயக்கங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள் வரலாற்றைக் குறிப்பாக டி.டி.கோசாம்பி மற்றும் ராக்ஹுல்ஜி போன்றோர்களைத் தவறாமல் வாசிக்க வேண்டும் என்பதை இம்மூவர்களுக்கும் இடையிலான உரையாடலின் மூலம் நமக்குக் கூறுகிறார்.
திராவிடக் கழகம் இங்கே வேரூன்றத் துவங்கும்போது குறிப்பாகத் திராவிட முன்னேற்றக் கழகம் பிரபலமாகும்போது, பல ஆண்டுகளாக மகாபாரதம், இராமாயணம் போன்ற பார்ப்பன இதிகாசங்களுக்கு மாற்றாகத் தமிழர்களின் சங்க இலக்கியம் மற்றும் சிலப்பதிகாரம், மணிமேகலை முதலான காப்பியங்களைத் திமுக முன்வைத்தது. குறிப்பாகச் சிலப்பதிகாரம், மணிமேகலை, திருக்குறள் போன்ற காப்பியங்கள் இருண்ட காலம் என்று சொல்லக்கூடிய காலகட்டத்தில் இயற்றப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் சமண மதம் ஆதிக்கம் செலுத்தி வந்தது. அப்போது வணிகர்கள் சமூகத்தில் அதீத செல்வாக்கு பெற்றவர்களாக விளங்கினார்கள். வணிகர்களின் செல்வாக்கு குறைந்து நிலக்கிழார்கள் என்றழைக்கக்கூடிய நிலப்பிரபுக்களின் செல்வாக்கு துவங்கிய காலகட்டத்தில், அவர்கள் பார்ப்பனியத்தை தங்களின் மதமாக ஏற்றுக் கொண்ட பிறகு சமூகத்தில் பார்ப்பனியத்தின் ஆதிக்கம் அதிகரிக்கத் துவங்கியது எனப் பல வாதங்களை நம்முன் வைத்துச் செல்கிறார் ஆசிரியர்.
மிளிர் கல்லின் இதயமாக இந்தப் பகுதியைக் கூறலாம். சிலப்பதிகாரம் பண்டைய தமிழ் இலக்கியம், கொங்குப் பகுதியெனப் பல தளங்களைத் தொட்டுச் சென்றாலும், இந்தப் படைப்பின் முழு நோக்கம் என்ன? வாசகர்களாகிய நம்மை எங்கு இட்டுச் செல்கிறார் என்பதை தகுந்த தரவுகளோடு கூறியுள்ளார். கொங்குப் பகுதியில் செமி பிரெசீயஷ் ஸ்டோன் என்றழைக்கக்கூடிய மாணிக்கம், மரகதம், கோமேதகம், வைடூரியம், நீலக்கல் மற்றும் பச்சைக்கல் முதலிய கற்கள் கிடைத்து வருகின்ற போதிலும் அதனைப் பட்டை தீட்டும் தொழில் குஜராத், ராஜஸ்தான் முதலிய வட இந்திய மாநிலங்களிலேயே மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. எட்டு லட்சம் முதல் பத்து லட்சம் தொழிலாளர்கள் வரை இத்தொழிலில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள போதிலும், இன்னும் இது குடிசைத் தொழில் என்றே கூறிவருகிறார்கள். குஜராத் உயர்நீதிமன்றம் கல் பட்டை தீட்டும் தொழில் தொழிற்சாலை சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று தீர்ப்பு அளித்தும் கூட சுமார் 10,000 தொழிற்கூடங்களில் வெறும் 600 தொழிற்கூடங்கள் மட்டுமே இதுநாள் வரை தொழிற்சாலை சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளது.
எட்டு லட்சம் முதல் பத்து லட்சம் தொழிலாளர்கள் வரை இத்தொழிலில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள போதிலும், இன்னும் இது குடிசைத் தொழில் என்றே கூறிவருகிறார்கள். குஜராத் உயர்நீதிமன்றம் கல் பட்டை தீட்டும் தொழில் தொழிற்சாலை சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று தீர்ப்பு அளித்தும் கூட சுமார் 10,000 தொழிற்கூடங்களில் வெறும் 600 தொழிற்கூடங்கள் மட்டுமே இதுநாள் வரை தொழிற்சாலை சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளது.
பட்டை தீட்டும் தொழிலாளர்கள் உருளும் சர்க்கர வடிவிலான ஒரு கல்லைக் கொண்டே செமி பிரெசீயஷ் ஸ்டோன்களை பட்டை தீட்டுகின்றனர். நாளொன்றுக்கு சுமார் 12 முதல் 14 மணி நேரம் உட்கார்ந்து கொண்டு குனிந்தவாறே வேலையில் ஈடுபடுகின்றார்கள். பட்டை தீட்டும்போது அக்கல்லிலிருந்து வரும் சிலிகா கலந்த புகையை சுவாசிப்பதால், அவர்கள் சிளிகோஷிஷ் எனும் நோயால் பாதிக்கப்பட்டு இளம் வயதிலேயே மரணமடைய நேரிடுகிறது. மேலும் இத்தொழிலில் ஈடுபடுபவர்கள் கல் சப்ளை செய்பவர்களிடம் வாங்குகின்ற கடனை அடைக்கத் தங்கள் குடுப்பத்துடன் இத்தொழிலில் ஈடுபடுகிறார்கள். கணவன் இந்நோயால் பாதிக்கப்பட்டு இறந்தால், அவரது மனைவி இத்தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார், மனைவியும் அதே நோயால் இறந்தால் அவரது குழந்தைகள் என ஒரு கொத்தடிமை முறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. மிகக் குறைவான ஊதியம் மற்றும் சிறு கற்களைப் பட்டைதீட்ட குழைந்தைகளை ஈடுபடுத்துகிறார்கள். சிறு வயதிலிருந்தே இத்தொழிலில் ஈடுபடுவதால் கண்பார்வை கோளாறு, முதுகுவலி, நுரையீரல் பாதிப்பு மற்றும் சிறுநீர் பிரச்சனைகள் முதலான நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். இதுவொரு மிகப்பெரிய அமைப்புசாரா துறை (unorganized sector) என்பதாலும், போதிய வேலைப் பாதுகாப்பு இல்லை என்பதாலும், சிளிகோஷிஷ் குணப்படுத்தக்கூடிய நோய் என்ற போதிலும், பெரு வணிக நிறுவனம், அரசு மற்றும் ஆட்சியாளர்களின் அக்கறையின்மையால் நிகழ்ந்து வரும் இத்தகைய இறப்புகளை நாம் படுகொலைகள் என்றே அழைக்க வேண்டும். இதுநாள் வரை குஜராத்தில் மட்டும் சுமார் 2000 க்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்கள் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கணவன் இந்நோயால் பாதிக்கப்பட்டு இறந்தால், அவரது மனைவி இத்தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார், மனைவியும் அதே நோயால் இறந்தால் அவரது குழந்தைகள் என ஒரு கொத்தடிமை முறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
தமிழக வரலாறு, சிலப்பதிகாரம், புத்த மதம், சமண மதம், கொங்குப் பகுதியின் கல் வணிகம், உலகமயமாக்கல் சூழ்நிலையில் கல் வணிகம், பட்டை தீட்டும் தொழிலாளர்களின் நிலையெனப் பல தகவல்களைக் கூறும் ஆசிரியர் இறுதியில் கல் வணிகத்தில் உத்தியை, அதற்காகக் கொங்குப் பகுதியில் எடுக்கப்படும் கைது நடவடிக்கைகள், அதை எதிர்கொள்ள முற்படும் இடதுசாரிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட முழுநேர உழியர்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என எல்லாவற்றையும் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். இறுதியாக முல்லையும் நவீனும் கண்ணகி மதுரையை எரித்த பிறகு கேரள மாநிலத்தில் உள்ள கொடுங்கலூரிலுள்ள கண்ணகி கோவிலில் நடைபெறும் பிரபலமான திருவிழாவையும், அத்திருவிழாவில் பங்குபெறும் தலித்துகள், அதன் வழிபாட்டு முறையையும், அத்திருவிழாவை நிறுத்த ஆதிக்க சாதிகள் செய்யும் முயற்சிகளையும் விவரிக்கிறார். பூம்புகாரில் மீனவர்களும், தமிழகத்தில் பழங்குடியினரும், கேரளாவில் கண்ணகியை காளியாகவும், பகவதி அம்மனாகவும், தலித்துகள் வணங்குகிறார்கள். இதன் மூலம் சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ளவர்கள் கண்ணகியை தெய்வமாக வணங்குகிறார்கள் என்பதையும் விவரிக்கிறார். இவ்வாறு பல தகவல்களை விவரித்து, கண்ணகியை மட்டும் மையப் பொருளாக வைத்து ஆவணப்படம் எடுக்க வந்து, கல் வணிகத்தைப் பற்றிப் பல தகவல்களை அறிந்து கொண்ட இருவரும் கண்ணகியையும் அவளோடு ஒட்டிய வரலாறோடு முடித்துக் கொண்டார்களா அல்லது பட்டை தீட்டும் தொழிலாளர்களின் நலனுக்காக மேற்கொண்டு என்ன செய்தார்கள்? என்பதையும் கூறி முடித்துள்ளார். அவர்களின் வாயிலாக நம்முடைய எதிர்கால நடவடிக்கைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் விட்டுச் சென்றுள்ளார் ஆசிரியர்.
(நன்றி: மாற்று)