சிவராம் காரந்த்தின் ‘மண்ணும் மனிதரும்’

சிவராம் காரந்த்தின் ‘மண்ணும் மனிதரும்’

செவ்விலக்கியம் என்பதை பெரும்பாலும் கவிதைகளை வைத்துத்தான் மதிப்பிட்டு வருகிறோம். காரணம் செவ்விலக்கியம் என்பதற்கு ஒரு பழைமை தேவை; இலக்கிய வகைகளில் பழைமைச் செறிவுள்ள வரலாறு கவிதைக்கு மட்டும்தான் உள்ளது. உரைநடைப் படைப்புகளைத் தனியாகப் பிரித்துக் தொகுத்துக் கொள்ள வேண்டும். காலகட்டத்தை வைத்து அதை மதிப்பிட்டுவிட முடியாது.

செவ்விலக்கியம் என்பதைப் பற்றிய வரையறையை வழக்கமாக டி.எஸ். எலியட்டிலிருந்து தொடங்குவதே மரபு. எலியட் செவ்விலக்கியம் என்பதை ‘பிற்காலத்திய இலக்கிய பரிணாமகதிகளுக்கு முழுக்க அடிப்படை அமைத்துத்தரும் முதல் தளம்’ என்று வரையறுக்கிறார். சமநிலை, முழுமை, வடிவப்பிரக்ஞை ஆகியவை செவ்விலக்கியத்தின் பண்புகள். கூறப்படும் விஷயத்துடன் விவேகம் மூலமும் தத்துவார்த்த தெளிவு மூலமும் ஒரு வகையான மனவிலக்கத்தை அடைபவனே செவ்விலக்கியங்களுக்கு அவசியமான சமநிலையை அடைய முடியும். தன்காலகட்டத்து வாழ்வு, அவ்வாழ்வு அமைந்திருக்கும் வரலாற்றுக் கலாச்சாரப் பின்புலம் ஆகியவை குறித்த விரிவான அறிதல் அவனுக்கு இருக்கும்.

அத்துடன் தன் கலாச்சாரத்தின், சமூகத்தின் எதிர்காலம் பற்றிய பெரும் கனவும் அவனிலிருக்கும். அக்கனவு காலங்களைத் தாண்டி ஒவ்வொரு தருணத்திலும் முக்கியமானதாக முன்னோக்கி உந்துவதாக இருக்கும். அக்கனவுகளை அச்சமூகம் முடிவின்றி கொண்டாடும். ‘மானுடம் வென்றதம்மா’ என்றோ, ‘அறம் கூற்றாகும்’ என்றோ, ‘அறத்தாறிதுவென வேண்டா’ என்றோ, அச்சமூகம் முடிவின்றி மந்திரித்துக் கொண்டிருக்கும். ஆகவேதான் ‘கம்பனைப் போல் இளங்கோ போல் வள்ளுவன் போல்’ என அச்சமூகம் அவர்களைக் கொண்டாடுகிறது.

நாவல் போன்ற ஒப்பு நோக்கில் புதிய இலக்கிய வடிவைப் பற்றிப் பேசுகையிலும் இப்பண்புநலன்களை பிரயோகித்துப் பார்க்கலாம். உதாரணமாக தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி இருவரும் எந்தக் கோணத்தில் பார்த்தாலும் செவ்விலக்கியவாதிகளே. அவர்களுடைய கனவுகள் அவர்கள் நின்று, முன்னிலை கொடுத்து பேசிய கலாச்சாரத்தின் எல்லைகளையும் தாண்டி இன்று மானுடக்கலாச்சாரத்திற்கு உரியனவாகி விட்டிருக்கின்றன. அவர்களுடைய ஒட்டுமொத்தப் பார்வையின் விரிவு, சமநிலையின் உச்சகட்ட விவேகம் ஆகியவை மறுக்கப்பட முடியாதவை.

தஸ்தயேவ்ஸ்கியில் சமநிலை உண்டா என்றவினா உடனடியாக சிலர் மனதில் எழக்கூடும். தஸ்தயேவ்ஸ்கியின் சித்திரிப்பில் உச்சகட்ட உணர்ச்சி வேகமே உள்ளது. அதை கம்பனிலும் பார்க்கலாம். கம்பனின் வேகம் காரணமாக அவரை ஒரு கற்பனாவாத கவிஞர் என்றும் கருதலாம். ஆனால், சமநிலையை நாம் இவர்களின் படைப்பின் பொது அமைப்பில் காணலாம். தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்களில் அத்தனை கதாபாத்திரங்களின் தரப்புகளும் அவர்களுடைய முழு நியாயங்களுடன் முன்வைக்கப்படுகின்றன. எந்தத் தரப்பையாவது ஆசிரியரின் குரல் அழுத்திக் காட்டுகிறது என்று கூறிவிட முடியாது. தஸ்தயேவ்ஸ்கியின் கதாபாத்திரங்களிலேயே ‘தீய‘ கதாபாத்திரம் ஒன்று உண்டு என்றால் அது நிந்திக்கப்பட்டவர்களும் வதைக்கப்பட்டவர்களும்’ நாவலில் வரும் நெல்லியின் தந்தைதான். ஆனால், அவருடைய தரப்பை மிக விரிவாக உரிய நியாயத்துடன் கூற பல பக்கங்களை தஸ்தயேவ்ஸ்கி ஒதுக்குகிறார்.

ஆகவேதான் தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி இருவரையும் உரைநடை இலக்கியத்தில், குறிப்பாக நாவலில், செவ்விலக்கிய கர்த்தாக்களாக உலக இலக்கிய விமர்சகர்கள் தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறார்கள். பிரெஞ்சு இலக்கியத்தில் விக்டர் யூகோ, ரோமெய்ன் ரோலந்த், மார்சல் புரூஸ்ட், ஸ்பானிஷ் இலக்கியத்தில் செர்வான்டிஸ்; பிரிட்டிஷ் இலக்கியத்தில் டிக்கண்ஸ், தாக்கரே, பிரான்டி சகோதரிகள், ஜார்ஜ் எலியட், அமெரிக்க எழுத்தில் ஹெர்மன் மெல்லில் போன்று ஒவ்வொரு மொழியிலும் நாவலுக்கு செவ்விலக்கிய படைப்பாளிகள் உண்டு.

தமிழ்நாவலில் செவ்விலக்கியத் தன்மை கொண்ட நாவல் எதுவும் இல்லை என்பதே என் விமர்சனத் துணிபாகும். வங்க மொழியில் தாராசங்கர் பானர்ஜி, விபூதிபூஷன் பந்தோபாத்யாய ஆகியோரின் நாவல்கள் செவ்விலக்கியப் பண்பு கொண்டவை. மலையாளத்தில் தகழி, குஜராத்தில் பன்னலால் பட்டேல் என செவ்விலக்கியர்களை நாம் காணமுடிகிறது.

இந்திய அளவில் உரைநடையும் யதார்த்தவாதமும் ஒருசேர இங்கு அறிமுகமாயின. நமது மரபில் உள்ள ‘காவியமிகை’ என்ற இயல்புக்கு எதிராக இயங்குவதாகவே இங்கு உரைநடையின் தொடக்கமும் பரிணாமமும் அமைந்தது. அதே சமயம் உரைநடையில் எழுதப்பட்ட படைப்புகள் கூட நமது காவியமரபுடன் பல வகையிலும் -ஆழமான உறவு கொண்டிருந்தன. செவ்விலக்கியப் பண்புகளை அவை அக்காவிய மரபிலிருந்துதான் சுவீகரித்துக் கொண்டன. ஆகவே இந்திய இலக்கியத்தில் சிறப்பான செவ்வியல் நாவல் என்பது காவிய மரபிலிருந்து பெற்ற ‘முழுமை, சமநிலை, பண்பாட்டுக்கு அடித்தளமாகும் தன்மை, பெருங்கனவு’ ஆகிய செவ்விலக்கியப் பண்புகளை அடைந்த யதார்த்தவாத நாவல்கள்தான்.

ஆனால் நாம் நம்முடைய காவிய மரபை அப்படியே பின்தொடரக்கூடிய வரலாற்று உணர்ச்சிக்கதைகளை [ரொமான்ஸ்] நம்முடைய உரைநடைச் செவ்விலக்கியங்களாகக் காணப் பயிற்றுவிக்கப்பட்டுள்ளோம். கல்கியின் ‘பொன்னியின் செல்வனோ’ பங்கிம் சந்திரரின் ‘ஆனந்த மடமோ’ சி.வி.ராமன்பிள்ளையின் ‘மார்த்தாண்டவர்மா’ [மலையாளம்] செவ்விலக்கியங்கள் அல்ல. அவை உணர்ச்சிக்கதைகள் மட்டுமே. அவை நம்முடைய காவியமரபை, குறிப்பாக வீரவழிபாட்டுமரபை, நமக்கு நினைவூட்டுகின்றன என்பதே அவற்றின் சிறப்பு. செவ்விலக்கியமென்பது அப்படி கடந்தகாலத்தின் நீட்சியாக அல்லது நிழலாக இருக்காது. அது ஒரு புதிய யுகத்தின் அடித்தளமாகும்.

கன்னட இலக்கியத்தில் கெ.வி.அய்யர் எழுதிய ‘சாந்தலை’ என்ற உணச்சிக்கதை (இது தமிழில் வெளிவந்துள்ளது) உரைநடையில் எழுதப்பட்ட ஒரு காவியம். காவியத்தின் சித்திரிப்புமுறை, கட்டுமானம் கதாபாத்திரங்களை இலட்சிய வடிவங்களாகச் சித்திரிக்கும் இயல்பு ஆகியவற்றை கெ.வி.அய்யர் அப்படியே பின்தொடர்கிறார். ஒரு இலட்சிய உணர்ச்சிக்கதைக்கும் சுருதி குறைந்து கேளிக்கையாக்கப்பட்ட உணர்ச்சிக் கதைக்கும் இடையேயான வேறுபாட்டை உணர ‘சாந்தலை’ யை, ‘சிவகாமியின் சபதத்துடன் ஒப்பிட்டாலே போதும். சாந்தலையை காவியத்திற்கும் நாவலுக்கும் இடைப்பட்ட உதாரண வடிவம் எனலாம். சிவகாமியின் சபதம் வெருமே வாசிப்பு ஆர்வத்தை தூண்டிச்செல்லுதல் அன்றி இலக்கே இல்லாமலிருக்கிறது. கன்னட நாவல் சாந்தலை போன்ற அற்புதமான உணர்ச்சிக்கதை வழியாக வளர்ந்து வந்ததனால்தான் இந்திய மொழிகளின் வெற்றிகரமான நாவல் உலகை அது அடைய முடிந்தது.

சாந்தலையில் உள்ள காவியச்சாயலைத் துறந்து அதே சமயம் செவ்வியல் பண்புகளை ஏற்று எழுதப்பட்ட இரு பெரும்படைப்புகள் டாக்டர் சிவராமக் காரந்தின் ‘மண்ணும் மனிதரும்’,[மூலம் மரளி மண்ணிகெ] ‘ஊமைப் பெண்ணின் கனவுகள்’.[ மூலம் மூகஜ்ஜிய கனஸுகளு] இவை இரண்டுமே டாக்டர் சித்தலிங்கையாவின் மொழி பெயர்ப்பில் தமிழில் வெளிவந்துள்ளன. நாவல் என்பது உரைநடை காவியமல்ல. காவியம் ஒரு மையத்தை _ தரிசனத்தை _ கலாச்சாரத்தில் பொறிக்கும் நோக்கம் உடையது. நாவல் அம்மையத்தைப் பகுத்தாராயும் நோக்கம் உடையது. காவியத்தின் கூறுகள் குவியும், நாவலின் கூறுகள் விரியும். ‘சாந்தலை’ காவியம்; `மண்ணும் மனிதரும்’ நாவல். ‘மண்ணும் மனிதரும்’ நாவலை சிவராம் காரந்த் 1945ல் எழுதினார். அப்போது அவருக்கு 40 வயது.

டாக்டர் சிவராமகாரந்த் ஒரு செவ்விலக்கியப் படைப்பாளிக்குரிய தனிப்பட்ட ஆளுமை கொண்டவர். சிறுவயதிலேயே ஒரு அவதூதரைப்போல தன் வாழ்க்கையைத் தொடங்கியவர் அவர். தன் ஊரில் அவர் தொடங்கிய பள்ளியும் அதில் அவர் மேற்கொண்ட கல்விச்சீர்திருத்தங்களும் இன்றும் ஆராயப்படுகின்றன. கன்னட வரலாறு, நுண்கலைகள், கிராமியக்கலைகள், நாட்டார் மரபுகள் ஆகியவற்றில் அவர் வாழ்ந்த காலத்தில் இறுதிவரியைச் சொல்லத் தகுதி படைத்த பேரறிஞராக அவர் விளங்கினார். கன்னட நாட்டார்கலையான யட்ச கானத்தை புனரமைத்தவர். சிறந்த நடனக் கலைஞரும்கூட.

காரந்த் சமகால விஞ்ஞானத்துறைகளில் விரிவான ஞானம் படைத்தவர். கன்னட கலைக்களஞ்சியங்களைத் தயாரித்தவர். சட்ட நூல்களை மொழிபெயர்த்தவர். சுதந்திரப் போராட்ட வீரர். சமூகச் சீர்திருத்தவாதி. வாழ்வின் இறுதி நிமிடம் வரை ஓயாது கன்னடச் சுற்றுசூழல் பாதுகாப்பியக்கங்களின் தலைமைப் போராளியாக இருந்தவர். மிகச்சிறந்த மேடைப்பேச்சாளர் . தன் சுயசரிதையை ‘பித்தனின் பத்து முகங்கள்’ என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ளார். அவரது ஆளுமையை இன்று திரும்பிப் பார்க்கையில் கம்பனும் காளிதாசனும் இப்படித்தான் இருந்திருப்பார்கள் எனும் பிரமை எழுகிறது.

‘மண்ணும் மனிதரும்’ ஒரு யதார்த்தவாதப் படைப்பு. இன்னும் கறாராகக் கூறப்போனால் இயல்புவாத (நாச்சுரலிசம்) படைப்பு அது. தெற்கு கர்நாடகம் (கனரா) பகுதியில் மணூர், கோடி என்னும் கடலோரக் கிராமங்களிலாக கதை நிகழ்கிறது. இதன் மையக் கதாபாத்திரம் இராம ஐதாளர். கிராமத்தில் புரோகிதம் செய்வது அவரது தொழில். அவரது தங்கை சரஸ்வதி, விதவையாகி அவருடனேயே இருக்கிறாள். அவர் மனைவி பார்வதிக்கு குழந்தைகள் இல்லை. ராம ஐதாளரின் அப்பா கோதண்டராம ஐதாளர் லௌகீக விவேகம் மிக்கவர். தன் மகனின் திருமணத்தை கொட்டும் மழையில் வைத்ததன் மூலம் செலவைக் குறைத்தவர். கடற்காற்று மழையுடன் சுழன்றடிக்கும் நாள் ஒன்றில் சொட்டச் சொட்ட நடந்த தன் திருமணத்தை பார்வதி நினைவு கூர்கிறாள்.

துல்லியமான தகவல்களுடன் அக்கிராமப்பின்னணியில் அவர்கள் வாழ்க்கையை மிக நுட்பமான ஓவியமாகக் காட்டியபடி தொடங்குகிறது மண்ணும் மனிதரும். அங்கே பிராமணர்கள் ஆனாலும் ஆணும் பெண்ணும் மண்ணில் இறங்கிக் கடுமையாக உழைத்தேயாகவேண்டும். விறகுக்காக ஆற்றுக் கழிமுகத்தில் கொட்டும் மழையில் காத்திருந்து நீரை உற்றுப் பார்க்கிறார்கள். மலைமரங்கள் மிதந்துவருவதைப்பார்க்கும்போது நீரில் பாய்ந்து நீந்திச்சென்று அதைப்பிடித்து வருகிறார்கள். உயிராபத்துமிக்க வேலை. பெண்களும் செய்தாகவேண்டும். ராமதாளர் ஒருமுறைக் கொண்டுவந்தது ஒரு செத்த எருமையை. மண்ணில் இரவும் பகலும் வேலைசெய்கிறார்கள். சரஸ்வதியும் பார்வதியும் ஏர் பிடிக்கவும் செய்கிறார்கள். விளைபொருட்களை தலையில் சுமந்து விற்கச்செல்கிறார்கள். எண்பதுகளில் இப்பகுதியில் நான் பயணம்செய்யும்போதுகூட பிராமணர்கள் விவசாய உழைப்பில் ஈடுபட்டிருப்பதைக் கண்டிருக்கிறேன்.

கடுமையான வறுமை. அது பஞ்சத்தால் அல்ல, சிக்கனத்தால். மாங்காய் ஊறுகாய் போடும்போது காசுகொடுத்து உப்புவாங்குவதற்குப் பதிலாக கடல்நீரை பயன்படுத்துமளவுக்கு சிக்கனம். ராம ஐதாளர் புரோகிதத்துக்கு செல்லும் குடும்பங்களில் சாப்பிட்டுவிட்டால் பெண்கள் ஏதோ ஒப்பேற்றிவிடுவதுடன் சரி. பார்வதிக்குக் குழந்தை இல்லை. ‘புத்’ என்ற நரகத்துக்குச் செல்லவேண்டியதுதான். அவள் நெஞ்சு அந்தத் துன்பத்தில் எரிந்தபடியே உள்ளது. நாத்தனார் சரஸ்வதி வாழ்க்கையின் துன்பங்களுக்கு ஒருமாதிரி பழகி நம் கையில் என்ன இருக்கிறது என்ற எண்ணத்துக்கு வந்துவிட்டவள்.

ஒரு குழந்தையை சுவீகாரம் செய்துவிடலாம் என்று சரஸ்வதி தீர்மானிக்கிறாள். அதை ராம ஐதாளரிடம் சொல்ல சந்தர்ப்பம் பார்த்திருக்கிறாள். ஆனால் அவர் ஒருநாள் வீட்டில் விசேஷத்துக்கு உண்டான ஏற்பாடுகளைச் செய்யும்படிச் சொல்லிவிட்டு வெளியூர் செல்கிறார். சுவீகாரம் செய்யத்தான் என்பது அவர்களின் ஊகம். ஆனால் அதைச் சொன்னால் என்ன? பெண்கள் வீட்டுவிசேஷத்தை பிறத்தியார் வழியாகத்தான் அறியவேண்டுமா? சரஸ்வதி கொதிக்கிறாள். ஆனால் வேறுவழியில்லாமல் வீட்டுமுன் பந்தல் கட்டி தரையை செப்பனிட்டு விருந்து சமைக்க ஏற்பாடுகள் செய்துவைத்திருக்கிறார்கள்.

ஆனால் ராம ஐதாளர் சென்றது தனக்கு இரண்டாம் மனைவியை ஏற்பாடு செய்ய. நண்பர் சீனய்யர் அவருக்கு ஒத்தாசை செய்கிறார். ராம ஐதாளருக்கு தன் மனைவியிடம் அதைச் சொல்லக்கூடாது என்றில்லை. ஏன் சொல்லவேண்டும் என்று அவருக்கு தெரியவில்லை. அவளுக்கும் சேர்த்து இறுதிச் சடங்குகள் செய்யத்தானே குழந்தை? அவ்வாறாக ராம ஐதாளருக்கு இரண்டாம் மனைவியாக சத்தியபாமா வந்துசேர்கிறாள். பார்வதி சக்களத்தியை ஏற்றுக் கொள்கிறாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன. மூத்தவன் லட்சுமிநாராயணன் என்ற லச்சன். இரண்டாவது சுப்பி.

லட்சுமிநாராயணன் பெரியம்மாவையே அம்மாவாக அம்மாவைவிட மேலாக நினைத்து வளர்கிறான். அவளுக்கும் வாழ்க்கையின் அர்த்தமாகவே குழந்தை இருக்கிறது. சத்யாவுக்கு அதில் மனக்கஷ்டம். அவ்வாறாக சக்களத்திகளுக்குள் புகைச்சலும் போராட்டமும் நடந்தாலும் பார்வதி எல்லாவற்றையும் பொறுத்துப் போகிறாள். மேலும் சரஸ்வதி ஆளுமை மிக்கவள். அவள் நாத்தனாருக்கு என்றும் தோன்றாத்துணை. லச்சம் ஆங்கிலம் படிக்கவேண்டும் என்று விரும்பும் ஐதாளர் அவனை தன் மானனார் வீட்டுக்கு அனுப்பி படிக்கவைக்கிறார்.

படிப்பு லச்சத்தை மாற்றுகிறது. அவன் அப்பா பெரியம்மா அம்மா அனைவரையும் ஆர்வமூட்டாத அன்னியர்களாக எண்ணுகிறான். ஊருக்கு வருவதேயில்லை , வந்தால் எப்போது தப்பிச்செல்லலாம் என்பதே அவன் எண்ணமாக இருக்கிறது. வளர வளர அந்த அன்னியப்படல் பெரிதாகிறது. குந்தாபுரத்திலும் உடுப்பியிலும் உள்ள போகங்களில் அவன் மனம் ஈடுபடுகிறது. அதற்காக தந்தையின் உழைப்பை உறிஞ்சுவதில் கூச்சமே இல்லை. தந்தையிடமே திருட்டுகள் செய்கிறான். தங்கும் ஓட்டலின் உரிமையாளரின் மனைவியான ஜலஜாட்சியுடன் உறவு வைத்துக் கொள்கிறான். ஒருவழியாக பெரும் பணச்செலவில் படிப்பை முடிக்கிறான்.

ராம ஐதாளர் அவனுக்கு மணம் செய்துவைக்கிறார். குந்தாபுரத்தில் பெரிய வக்கீலின் மகளான நாகவேணி அவனுக்கு மனைவியாகிறாள். ஆனால் சீக்கிரமே லச்சத்தின் நடத்தை மூலம் அவன் பெற்றிருந்த நோயால் அவள் நோயாளியாகிறாள். அத்தகவல் ராம ஐதாளருக்கு தெரியும்போது அவர் மனம் உடைகிறார். அவரது கனவுகள் சிதைகின்றன. மகன்களை பெங்களூரில் ஓட்டல் வைக்க அனுப்பி அசம்பாதித்து செல்வந்தராகி ஓட்டுவீடு கட்டிய தன் நண்பர் சீனய்யரைப்போல தானும் ஒரு வீடு கட்டவேண்டுமென்பதே அவரது வாழ்க்கையில் கடைசி ஆசை. சேர்த்ததையெல்லாம் வைத்து ஓடுபோடுகிறார். ஆனால் இந்த ஊரில் நான் தங்கப்போவதில்லை, எதற்கு இந்த வீடு என்று லச்சம் ஒரே சொல்லால் அந்த கனவை உதறுகிறான்.

பெண்ணை அனுப்ப மறுத்த வக்கீலிடம் அழுது நாகவேணியை கூட்டிவருகிறார் ஐதாளர். இறக்கும்போது தன் சொத்துகளை நாகவேணிக்கு எழுதிவைத்துவிட்டு சாகிறார். அவரது சாவுக்கு வரும் லச்சம் அதன் மூலம் தான் அவமதிக்கபட்டவனாக உணர்கிறான். ஊரைவிட்டே சென்று எங்கோ கிராம அதிகாரியாக ஆகிறான். அவனுக்கும் நாகவேணிக்கும் இடையே சீரான உறவே இல்லை. அவள் உடலையும் உழைப்பையும் சுரண்டுவதே அவன் நோக்கமாக இருக்கிறது. காமம் அவனை விடாது துரத்துகிறது, ஓயாத கடனாளியாக்குகிறது.

லச்சத்தின் வாழ்க்கை இடைவிடாது சூதாட்டம் பெண்போகம் ஆகியவற்றுக்கான அலைச்சலாகவே எஞ்சுகிறது. அந்த ஓட்டத்தில் அவனுக்கு குழந்தைகள் மனைவி தாய் எதுவுமே பொருட்டாக இல்லை. குடும்பசொத்தையும் அழித்துவிட்டு மனைவி குழந்தையை அனாதையாக்கிவிட்டு அவன் சென்றுவிடுகிறான். மூத்த குழந்தை பிட்டு இறக்க இரண்டாவது குழந்தை ராமனை வளர்த்து ஆளாக்க நாகவேணி கொடும் துன்பங்களை அனுபவிக்கிறாள். அவளுடைய தமையர்களின் உதவியுடன் அவனை மெட்ரிகுலேஷன் வரை படிக்கவைக்கிறாள்.

நாகவேணியின் வாழ்க்கையில் ஒரு சிறிய வசந்தகாலம் அவள் தன் தந்தையுடனும் தாயுடனும் இருக்கும் இந்தக் காலகட்டம். அவள் வயலின் கற்கிறாள். இசையில் தன் துயரங்களை மறக்கிறாள். ராமன் சென்னை சென்று சுய உழைப்பில் படிக்கிறான். எவருடைய உதவியையும் ஏற்காமல் படிக்கவேண்டுமென்ற வெறி அவனைத் தூண்டுகிறது.

படிக்கும்போது ராமனுக்கு சுதந்திரப்போராட்டத்தில் ஆர்வம் ஏற்படுகிறது. படிப்பை விட்டு சிறைசெல்கிறான். அதை நாகவேணியால் ஏற்கவே முடியவில்லை. பிள்ளை தனக்கு ஓர் அநீதி இழைத்திவிட்டதாகவே அவள் நினைக்கிறாள். ஒருபக்கம் கொந்தளிக்கும் கருத்துலகும் கலைமீதான பித்தும் மறுபக்கம் தாயின் ஏக்கமும் எதிர்பார்ப்பும் என அலைபாயும் ராமன் மெல்ல மெல்ல தாயின் அகவலியை புரிந்துகொள்கிறான். அவளுக்குள் கொந்தளிக்கும் ஒரு யுகத்தின் துன்பத்தை.

சுருக்கமாகச் சொன்னால் இதுதான் மண்ணுமனிதரும் முன்வைக்கும் கதை. செவ்வியல் பண்பு கொண்ட பிற யதார்த்தவாத நாவல்களைப் போலவே இதிலும் ‘கதை’ என்ற வடிவம் இல்லை. தொடர்ந்து வளர்ந்து விரிவடையும் சம்பவங்கள் தாம் உள்ளன. மனித உறவுகளின் அர்த்தமும் அர்த்தமின்மையும் தொடர்ந்து வெளிப்படும் சம்பவங்களினூடாக முதிர்ந்து ஒரு மொத்தச்சித்திரத்தைத் தந்து முழுமைபெறும் இந்நாவலை சுருக்கியோ விளக்கியோ கூறுவதில் பொருளில்லை. நதியென ஒழுகிச்செல்லும் காலகீதன் மையச்சரடு. அதில் மனிதர்கள் பிறந்து இறந்து மறைகிறார்கள். அவர்களின் கண்ணீரும் கனவுகளும் ஓயாது நீண்டுசெல்கின்றன.

எவ்விதமான பாரபட்சமும், விருப்பு வெறுப்பும் இன்றி காரந்த் கதையைச் சொல்லும் முறை. ஆசிரியர் என்று ஒருவர் இப்படைப்பின் பின் உள்ளார் என்ற பிரக்ஞையே உருவாகாதபடி அத்தனை துல்லியமாகத் தன்னை விலக்கிக் கொண்டிருக்கிறார் காரந்த். இரண்டாவது சிறப்பம்சம் உணர்ச்சிகளையும் உறவுகளின் நுட்பங்களையும் கூறுமிடத்து மிகுந்த கவனத்துடன் அவர் கொள்ளும் எளிமையுணர்ச்சி. மொத்த நாவலுமே மிக வயதான ஒரு பாட்டி அதிக ஈடுபாடு இன்றி தான் கண்ட வாழ்வை கூறுவது போன்று அமைந்துள்ளது. ஊமைப் பெண்ணின் கனவுகளிலும் இதே கூறுமுறையே உள்ளது.

காரந்தின் குணச்சித்திரச் சித்தரிப்புமுறையும்கூட எதனுடனும் கலந்து விடாமல் தனித்து நிற்பதன் மூலம் உருவாவதுதான். குறைந்தது சரி தவறுகள் குறித்துகூட அவர் அழுத்தமளிக்கவில்லை. முதிர்ந்து விலகிய ஒரு மனம் பற்றின்றிச் சொல்லும் கதையாக உள்ளது இந்நாவல். இது செவ்விலக்கியப் பண்பாகும். உணர்ச்சி நெருக்கடிகளை காரந்த் உருவாக்கவேயில்லை. ஆகவே நாடகீய சந்தர்ப்பங்கள் ஏதும் இந்நாவலில் இல்லை. இதுவும் செவ்விலக்கியத்தின் பண்பு என்றே சொல்லவேண்டும்.

காரந்தின் கவனம் நுட்பங்களிலேயே ஊன்றியுள்ளது. காட்சி சார்ந்த நுட்பம் முக்கியமானது. ராம ஐதாளரின் திருமண ஊர்வலம் படகில் செல்வதைப்பற்றிய சித்திரம் குறிப்பாக சொல்லப்படவேண்டியது. ஊர்வலம் பெரிதாகத் தெரியவேண்டும் என்பதற்காக ஒரு படகில் பல பந்தங்களை ஏற்றிக்கொண்டு அவற்றின் நிழல் நீரில் அசைய அவர்கள் செல்லும் காட்சியை அதிகம் வர்ணிக்காமல் காட்டுகிறார் காரந்த். அந்த அழிமுகக் கிராமத்தின் கொட்டும் மழை சேறுகலங்கிய நதி நாணல்கள் நிறைந்த கரைப்பகுதிகள் அனைத்துமே வாசகன் கண்முன் வருகின்றன. ஆனால் ‘நீலகண்டப் பறவையைத்தேடி’ போல கற்பனாவாதச் சாயலும் இல்லை. வெறுமே தகவல்களைச் சொல்லும் பாவனைதான் ஆசிரியருக்கு.

காரந்த் காட்டும் இந்நிலப்பரப்பும் நமக்கு புதியது. கேரளத்தை போன்ற நிலப்பகுதி இது. இங்கே ஊர் என்பது தெருக்களினால் ஆனது அல்ல. தோட்டங்கள் நடுவே வீடுகள். ஒருவீட்டில் இருந்து இன்னொன்றுக்குச் செல்ல தோட்டத்தையும் புதர்களையும் கடந்து செல்லவேண்டும். எப்போதும் ஏதேனும் ஆற்றையோ ஓடையையோ கடந்துதான் எங்கும் செல்ல வேண்டியிருக்கிறது. ராம ஐதாளர் சரஸ்வதி பார்வதி எல்லாருமே மிகச்சிறந்த நீச்சல்காரர்களாக இருக்கிறார்கள். பனையோலை வேய்ந்த வீடுகள். எங்கும் கதவு இருப்பதாகவே தெரியவில்லை. வீட்டுக்குள் பெண்கள் தனியாக கதவை திறந்துபோட்டுக்கொண்டு தூங்குகிறார்கள்.

வாழ்க்கையின் சிறுதருணங்களை தொட்டெடுப்பதில் உள்ளநுட்பம் அடுத்தது. தன் மைத்துனன் தனக்குக் குழந்தைபிறந்த செய்தியை சொல்லவருகையில் ராம ஐதாளர் குடும்பப் பெண்களுடன் ஆற்றில் சேற்றில் மூழ்கி நின்று வண்டல் அள்ளிக் கொண்டிருக்கிறார். மைத்துனன் மனம் சுளிப்பதை ராம ஐதாளர் உணர்கிறார். குளித்துவிட்டு பாயில் அமர்ந்து பேசும்போது மைத்துனன் பொடிபோடமாட்டான் என்று தெரிந்திருந்தும் வெள்ளிப்பொடிமட்டையை எடுத்து அவன் முன் போடுகிறார். அதைக் காணும் சீனய்யர் உடனே ராம ஐதாளரிடம் கடன் வாங்கவேண்டும் என்ற திட்டத்தை போட்டுக் கொள்கிறான்.

உறவுகளின் உள்ளடுக்குகளைச் சொல்வதில் காரந்த் காட்டும் நுட்பம் மூன்றாவது. ஒருபோதும் அவர் விரித்துரைப்பதில்லை. மென்மையாக பூடகமாகச் சொல்வதில்தான் அவருக்கு ஆர்வம். இதை நாம் ‘ஒரு குடும்பம் சிதைகிறது’ நாவலுடன் ஒப்பிட்டு அறியலாம். பைரப்பாவிடம் எல்லாமே வெளிப்படையாக உள்ளன. கற்பனைமூலம் எழுப்பிக் கொள்ளவேண்டியவை அதிகமில்லை. ஆனால் காரந்த் சொல்லும் கதையே அடியில்தான் மௌனமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

நாவலில் இதற்கு உதாரணமாகச் சொல்லத்தக்கவை இரண்டு. ஒன்று சீனய்யருக்கும் ராம ஐதாளருக்குமான உறவு. சீனய்யர் ராம ஐதாளரின் நண்பர். ஆகவே இருவருமே பணம் சேர்ப்பதிலும் சமூக அந்தஸ்தை அடைவதிலும் ஒரே மாதிரியான கனவுகள். அவர்கள் அடுத்தடுத்த வீடு என்பதனால் அவர்கள் இருவரும்தான் போட்டியாளர்கள். அது கடுமையான குரோதத்துக்கு இட்டு செல்ல அவர்கள் எதிரிகள் ஆகிறார்கள். ஆனால் ராம ஐதாளர் மரணப்படுக்கையில் இருக்கையில் சீனய்யர் அவர் கால்களைப்பற்றிக் கொண்டு மன்னித்துவிடும்படி சொல்லி அழுகிறார். அது மரணம் மீதுகொண்ட பீதி மட்டுமல்ல. அவர்கள் இருவரும் ஒருவரே என்பதனால்தான். வாழ்நாளெல்லாம் தேடும் செல்வமும் அதிகாரமும் மரணத்தின் முன் என்ன ஆகும் என்ற திகில்தான். உள்ளூர உறையும் அன்பும்தான்.

இன்னொன்று பார்வதியின் அகவலி. குழந்தையில்லாதவளாக மனம் உருகி வாழ்ந்தவள் அவள். கணவன் திடீரென்று இன்னொரு மணம் செய்துகொள்கிறான், அவளுக்கு தெரிவிக்காமலேயே. அவள்தான் அதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்தாகவேண்டும். அது அவளுக்கு ஐதாளர் செய்யும் ஓர் உதவியாகவே எல்லாராலும் புரிந்துகொள்ளப்படும். அவளும் சிரித்த முகத்துடன் அதிலெல்லாம் பங்கு கொள்கிறாள். அவளுக்கு மிக நெருக்கமான சரஸ்வதிக்குக் கூட பார்வதிக்கு நகைகள் போதுமான அளவுக்கு இல்லை என்ற எண்ணம் மட்டுமே உள்ளது.

பார்வதியின் நெஞ்சுக்குள் கனல் எரிந்ததா? நாவலில் காரந்த் அதை மிக நுட்பமாக சில சொற்றொடர்களில் சொல்லிச் செல்கிரார். இளைய மனைவி வந்ததும் ராம ஐதாளர் முதல் மனைவியை கிட்டத்தட்ட மறந்தே விட்டார். அவள் தனக்குள் ஒடுங்கி தனிமைப்படுகிறாள். “சத்யா கொஞ்சம் தண்ணீர் கொண்டுவா” என்று சொல்லும் ஐதாளர் ஒருமுறை சத்யா சமையலறையில் இருக்க பார்வதி கொண்டுவந்து வைக்கையில் ”சத்யா நீயா?”என்று கடுமையாகக் கேட்கிறார். பார்வதிக்கு அது ஒரு பெரிய அடி. அவள் மனைவி அல்ல என்ற சொல் அது. மௌனமாக அதை அவள் விழுங்குகிறாள்.

பற்பல வருடங்கள் கழித்து முதுமையில் மரணப்படுக்கையில் பார்வதி கணவன் மடிமீது தலை வைக்கவேண்டும் என்று விரும்புகிறாள். அதை ஒரு விண்ணப்பமாக, ஒரு கெஞ்சலாக அவள் சொல்லும் இடம் நாவலின் உருக்கமான பகுதி. சாதாரணமாக அப்பகுதியை கடந்துசெல்லும் காரந்த் அவள் ஆத்மாவின் துயரத்தை நிறுவுகிறார்.
மண்ணும் மனிதரும் நான்கு பெண்களின் கதை என்றால் அது மிகையல்ல. பொதுவாக இந்திய நாவல்களே மாபெரும் பெண்கதாபாத்திரங்களின் கதைகளாகவே உள்ளன. இம்மண்ணில் ஊறிய இதிகாசச் சுவை அதற்கு முக்கியக் காரணம். சீதை இங்கே மீண்டும் மீண்டும் புனைகதைகளில் அவதரித்துக் கொண்டே இருக்கிறாள். இன்னொன்று இன்றும் இந்தியவாழ்க்கையில் குடும்பம் என்னும் சுமையை பெரும்பாலும் பெண்களே தாங்குகிறார்கள். அவர்களால்தான் உறவுகள் உருவாகின்றன நீடிக்கின்றன. அதன் வலியும் அவர்களுக்கே.

பார்வதி, அவள் நாத்தனார் சரஸ்வதி, பார்வதியின் இளையாள் சத்யபாமா, அவள் மருமகள் நாகவேணி ஆகியோரின் குணச்சித்திரம் மிக அழுத்தமாக உருவாகியுள்ளது. இப்பெண்களுக்கு இடையே உண்மையான அன்பும் தியாகமும் குடிகொள்கின்றன. சத்யாவுக்கும் பார்வதிக்கும் இடையேகூட சிறு உரசல்கள் எழுந்ததைவிட்டால் பூசல்கள் உருவாகவில்லை. பார்வதி மிக எளிமையான கிராமத்துப் பெண். தனக்கு இழைக்கப்பட்ட துயரங்களை கண்ணீரால் நனைத்து நனைத்து ஒருநாள் எந்த புகாரும் இல்லாமல் இறக்கிறாள். சத்யபாமா ஒரு அம்மா. தன் மகனின் நடத்தைக்கேடின் எல்லா கசப்புகளையும் உண்ண விதிக்கப்பட்டவள். இருவரும் துயரத்தாலேயே ஒன்றாகிறார்கள்.

சரஸ்வதியும் நாகவேணியும்தான் இரு உச்சங்கள். சிறுவயதிலேயே விதவையான சரஸ்வதி வாழ்க்கையில் இன்பம் என ஏதும் இருக்கக் கூடுமென்பதையே மறந்தவள். உழைப்பும் அன்பும் மட்டுமே அவள் அறிந்தது. இரண்டு தலைமுறைக்காலம் அந்த வீட்டில் வந்த பெண்களுக்கெல்லாம் அவளே துணையும் நம்பிக்கையும். கையளவு நிலம் கூட இல்லாத அவளிடம் வாழ்நாளெல்லாம் பிறருக்கு கொடுப்பதற்கு இருந்தது. உடலுழைப்பும் அன்பும் தைரியமும். கேடுகெட்ட கணவனால் அவமானமும் நோயும் வறுமையும் மட்டுமே பெற்றுவாழும் நாகவேணி பதிலுக்கு தியாகத்தையும் அன்பையும் அளித்து தன் மகனை உருவாக்குகிறாள். நாகவேணியின் எல்லையற்ற பொறுமையும் விடாப்பிடியான உழைப்பும் தன்னலமின்மையும் அவளை இந்திய இலக்கியங்களில் ஓரு செவ்வியல் நாயகியாக ஆக்குகின்றன.

நாகவேணிக்கும் சரஸ்வதிக்கும் இடையேயான உறவுதான் இந்நாவலின் மிக யதார்த்தமாகவும் மிக உணர்ச்சிகரமாகவும் அமைந்த உச்சம் .எழுபத்தைந்து வயதில் கண்தெரியாது மரணம் காத்து சரஸ்வதி இருக்கிறாள். லச்சனின் ஊதாரித்தனம் வீட்டையும் நிலத்தையும் விற்றாகிவிட்டது. வாழ வழி இல்லை. நாகவேணியை அவள் அப்பா வாசுதேவய்யா வந்து அழைக்கிறார். அவள் சரஸ்வதியை விட்டு வர மறுக்கிறாள். சரஸ்வதி இன்னொருவரிடம் கையேந்தி வாழமாட்டாள். தந்தை தன்னை வற்புறுத்தும்போது செய்வதறியாமல் தற்கொலை வரைக்கும் செல்ல நாகவேணி துணிகிறாள். சரஸ்வதியின் கால்களைப்பற்றிக் கொண்டு ”நீங்கள்தான் இந்த வீட்டின் காவல் தெய்வம்!” என அவள் அழுகையில் தன் மகளை நினைத்து தந்தையும் ஒருகணம் பெருமிதம் கொள்கிறார்.

சின்னச் சின்ன தருணங்களை கவித்துவமாகச் சொல்வதின்மூலம் காரந்த் காவியகர்த்தராகிறார். இருவகை காவியத்தன்மைகள். ஒன்று நுண்ணிய தருணங்களை தொட்டெடுத்தல்.கணவனை மணக்கோலத்தில் பார்க்கிறாள் பார்வதி. ”சமாராதனைக்கு நேரமாகிவிட்டதால் மாப்பிள்ளை கால்செருப்பு முதல் காதில் கடுக்கன் வரை எல்லாவற்ரையும் அணிந்துகொண்டு தலைப்பாகை சுற்றியபிறகு கையில் ஒரு பனையோலை விசிறியைப் பிடித்துக் கொண்டு நின்றபோது சமையலறை ஜன்னலில் இருந்து பார்வதி கண்ணிமைக்காமல் அவரைப்பார்த்தாள். அந்தப்பார்வையின் மர்மத்தை சொல்லி முடியாது” அவ்வளவுதான். அந்தக்கணத்தில் வாசகனிடம் சட்டென்று ஒரு மன எழுச்சியை உருவாக்குவதனால் கார்ந்த் கவிஞனாகிறார்.

ராமனின் நெஞ்சில் சிறுவயதிலேயே கடல் ஒரு அழியாப்படிமமாக உருவாவதன் படிமத்தன்மை இரண்டாவது வகை கவித்துவம். அவனுக்கு அதன் அலைகள் அவனை நோக்கி அறைகூவுவதாகப்படுகின்றன. வாழ்நாள் முழுக்க அந்தக் கடல் அவனுள் இருந்தது. ஓயாத அலையெழுச்சியுடன். ஒளிரும் தொடுவானத்துடன். அவனை அது நிலைகொள்ளச் செய்யவில்லை.

காரந்த் வெறும் ஒரு அழகியலாளர் அல்ல. அவர் ஒரு சமூகப்போராளி. சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டு சிறைசென்றவர். விடுதலைக்குப்பின் சமூக விடுதலைக்காகப் போராடினார். இந்நாவலைக்கூட அவர் தன்னுடைய பெரும் சமர்காலகட்டத்தில்தான் எழுதியிருக்கிறார். ஆனால் இதில் அவரது ‘சிந்தனைகளை’ நாம் காண முடிவதில்லை. இந்நாவல் நேரடியாகப் பேசுவதேயில்லை. சொல்லப்போனால் பேசுவதேயில்லை. காலமே ஆசிரியனாக நாவலை கொண்டுசெல்கிறது.

மண்ணும் மனிதரும் அளிக்கும் கால அனுபவம் இரண்டுவகை. ஒன்று கதாபாத்திரங்கள் பிறந்து வளர்ந்து முதிர்வதை காட்டுதல். லச்சன் அழகான சின்னக்குழந்தையாக பிறது பெரியம்மாவுடன் இணைபிரியாமல் அலைந்து வளரும் சித்திரத்தை காரந்த் அளிக்கிறார். நகரத்துக்குப்போய் படிப்பதனூடாக அவனுக்கு போகம் அறிமுகமாகி அவன் ஊதாரியாக பொறுக்கியாக மாறி சீரழிந்து உடல்நலம் குன்றி அழிகிறான். அந்தப்பரிணாமம் காலத்தின் ஓட்டத்தை உணர்த்தி நம்மை உள்ளூர துணுக்குறச் செய்கிறது.

நாவல் முழுக்க நிகழும் மரணங்கள் ஒவ்வொருமுறையும் காலத்தை காட்டுகின்றன. பார்வதி, ராம ஐதாளர், சரஸ்வதி, சத்யா என வரிசையான மரணங்கள் மூலம் காலத்தின் இரக்கமற்ற முன்னகர்வை காட்டுகிறது நாவல். ஒவ்வொரு மரணமும் ஒவ்வொரு வகை. லௌகீகத்தில் ஈடுபட்ட எவருமே மனம் நிறைந்து சாகவில்லை. நிறைவேறா ஏக்கங்களும் ஏமாற்றங்களும் பொங்கி நெஞ்சை நிறைக்க பிரியமானவர்களை எண்ணியபடி உயிர்விடுகிறார்கள். சரஸ்வதி மட்டுமே ஓரளவு விடுதலைபெற்றவளாக இருக்கிறாள்.

காரந்த் உணர்ச்சிகரமான காட்சிகளைக்கூட துல்லியமாக தொட்டெடுக்கிறார். மிகையின்றி சொல்கிறார். நம்பகத்தன்மையை எந்நிலையிலும் இழப்பதில்லை. மானுட அவலத்தைச் சொல்லவருபவர் மானுட மேன்மையின் ஒளிக்கீற்றை எப்போதும் தன்னையறியாமல் மிக இயல்பாகக் காட்டிவிடுகிறார். இந்நான்கு பெண்களுக்குள் நிலவும் இயல்பான அன்பின் துல்லியமான சித்திரம் போல இந்திய நாவல்களில் வேறு இல்லை. இந்திய யதார்த்தவாத நாவல்களில் ஆரோக்கிய நிகேதனம், மண்ணும் மனிதரும் இரண்டும்தான் முதன்மையானவை என நான் கருதுவது இதனாலேயே.

இத்தகைய பெரும் படைப்பு செவ்வியல் முன்மாதிரியாக அமையும் போது அதிலிருந்து முளைத்து வளரும் நவீனத்துவ நாவல்கள் மேலும் வலிமையுடன் உருவாவது இயல்பே. யு.ஆர். அனந்தமூர்த்தி இதைப் பல முறை குறிப்பிட்டுள்ளார். நிலப்பகுதியின்படி பார்த்தாலும்கூட அவர் காரந்தின் வாரிசு. காரந்த் மீது விரிவான விமர்சனங்களை முன்வைத்தபடிதான் அனந்தமூர்த்தி எழுத ஆரம்பித்தார், தன் எழுத்தைக் கண்டடைந்தார். செவ்விலக்கியம் என்பதன் இலக்கணங்களில் முதன்மையானது, எலியட் கூறியதாக இக்கட்டுரையில் முதலில் குறிப்பிட்டது போல, பிற்கால வளர்ச்சிக்கான விதைகளைத் தன்னுள் கொண்டிருத்தலாகும். `மண்ணும் மனிதரும்’, `ஊமைப் பெண்ணின் கனவுகள்’ இரண்டிலும் பல்வேறு நுட்பமான ஊடு வாசிப்புகளுக்கு இடமுள்ளது.

காரந்தே தன்னைத்தானே வேகமாக முந்திச் செல்லும் இயல்புடையவர். கன்னட மொழியின் முதல் நவீனத்துவப் படைப்பையும் அவர்தான் எழுதினார். (`அழிந்த பிறகு’ _ தமிழில் வெளிவந்துள்ளது). நாவலை உச்சகட்ட கவித்துவத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய `சோமனின் துடி’, அவரது இருபெரும் நாவல்களுக்கு முற்றிலும் மாறுபட்ட புதிய அழகியல் கொண்ட படைப்பு. கன்னட தலித் படைப்புகளுக்கு வழிகாட்டியாக அமைந்த படைப்பும்கூட.

காரந்தின் நூல்களை தமிழாக்கம் செய்த கன்னடரான சித்தலிங்கய்யா தமிழுக்கு ஆற்றிய தொண்டு முக்கியமானது. இந்நாவலும் மிக கவனமாக மூல மொழியளவுக்கே நுட்பமான அனுபவம் அளிப்பதாக உள்ளது.

பத்து முகம் கொண்ட பித்தன், கோபமே ஆறாத போராளி, பேரழகன்! நான் காரந்தை சந்தித்திருக்கிறேன் என எண்ண நெஞ்சு நிறைகிறது. நீண்ட இடைவேளைக்குப்பின், வாழ்க்கையின் நடுப்பகுதியை கடந்துவிட்டேன் என்னும் உணர்வு உருவான பின், மீண்டும் இந்நாவலைப் படிக்கையில் பேரிலக்கியங்கள் மட்டுமே உருவாக்கும் தத்துவார்த்தமான வியர்த்த உணர்வின் நிறைவை உருவாகிறது. ‘ஆம், இது காலத்தை வென்ற ஒரு பேரிலக்கியம்! என்றே நெஞ்சு கூவுகிறது.

(நன்றி: ஜெயமோகன்)

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp