ஒரு மதத்தின் பெயரால் அத்துமீறல்கள் நிகழ்த்தப்படும்போது, அந்த மதத்தைப் பின்பற்றும் அனைவருமே நெருக்கடிக்குத் தள்ளப்படுவது பரிதாபகரமானது என்றாலும் அது இன்று மிகவும் இயல்பானதாக மாறிவிட்டது. அதனால்தான் ‘என் மதம் வன்முறையை உயர்த்திப் பிடிக்கவில்லை. என் மதம் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை. எங்கள் பெயரால் அல்லது எங்கள் மதத்தின் பெயரால் சிலர் நிகழ்த்தும் அத்துமீறல்களுக்கு நாங்கள் பொறுப்பேற்கமுடியாது. உண்மையில் நாங்களும் அவர்களை எதிர்க்கவே செய்கிறோம்’ என்று குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தோர் பதற்றத்துடன் தெளிவுபடுத்துவதையும் நாம் பார்க்கிறோம். பொதுவாக, இந்த அழுத்தம் அல்லது கட்டாயம் இஸ்லாமியர்களுக்கே ஒப்பீட்டளவில் மிகுதி. 2014 தேர்தல் வெற்றிக்குப் பிறகு இந்துக்களுக்கும் இந்த நெருக்கடி தோன்றியிருக்கிறது.
சஷி தரூரின் Why I am a Hindu நூலை இரண்டாகப் பிரிக்கலாம். முதல் பகுதி, இந்து மதத்தின் மேன்மை குறித்த மிக எளிமையான ஒரு சித்திரத்தை அளிக்கிறது. இரண்டாவது பகுதி, இந்து மதத்துக்கும் அதன் பெயரால் தற்போது நிகழ்த்தப்பட்டுவரும் அநீதிகளுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று வாதிடுகிறது.
இந்து மதமும் இந்துத்துவாவும் ஒன்றல்ல; இந்து மதத்தின் பெயரால் பாஜக, ஆர்எஸ்எஸ், சங் பரிவார் நிகழ்த்தும் ஒடுக்குமுறைகளுக்கும் இந்துக்களுக்கும் தொடர்பில்லை. இந்து மதம் சகிப்புத்தன்மை மிக்கது. அது பிற மத நம்பிக்கைகளை எதிர்ப்பதில்லை, அழிக்க நினைப்பதுமில்லை.கணக்கிலடங்கா கடவுளர்களையும் எல்லையற்ற சாத்தியங்களையும் உள்ளடக்கிய பெருங்கடல் அது. ஆம், பசு எங்களுக்குப் புனிதமானதுதான் ஆனால் அதன் பெயரால் மனிதர்கள் கொல்லப்படுவதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். இந்தியா என்னும் நிலப்பரப்பில் வாழும் அனைவரையும் நாங்கள் இந்தியர்கள் என்றே கருதுகிறோம். இந்து மதத்தின் பெயரால் வெறுப்பு அரசியலையும் வன்முறையையும் தூண்டிவிடும் இந்து மத அடிப்படைவாதிகள் எங்கள் மத உணர்வுகளையும் சேர்த்தேதான் புண்படுத்துகிறார்கள்.
பிளவுபடுத்தலே இந்துத்துவத்தின் சிந்தாந்தமாகவும் செயல்பாடாகவும் இருக்கிறது. கலாசார தேசியம் எனும் பெயரால் இந்துக்களை மட்டும் அது குடிமக்களாகத் தொகுத்துக்கொள்கிறது. இந்து கிறிஸ்தவர், இந்து இஸ்லாமியர் போன்ற அடையாளங்களையே அது மற்றவர்களுக்கு வழங்க விரும்புகிறது. இந்து மதமல்ல, அதன் பெயரால் முன்னெடுக்கப்படும் அரசியலே சாவர்க்கருக்குப் பிரதானம். இந்து மேலாதிக்கத்தை ஏற்று வாழ்பவர்களுக்கு மட்டுமே பாரதத்தில் இடமுண்டு என்றார் கோல்வால்கர். இந்துக்கள் எதிர் மற்றவர்கள் என்று இந்தியர்களை அவர் பிரித்து நிறுத்தினார். ஜெர்மானியர்களையும் யூதர்களையும் இதேபோல் பிரித்து நிறுத்திய நாஜிகளிடமிருந்து கற்பதற்கு நமக்கு நிறைய இருக்கிறது என்றார். தீன்தயாள் உபாத்யாயா இந்த அளவுக்குச் செல்லவில்லையென்றாலும் இந்துக்களே இந்தியாவின் ஆன்மா என்று அவர் கருதினார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அவரால் இறுதிவரை ஏற்கமுடியவில்லை.
இந்துத்துவத்தின் தாக்கம் சித்தாந்தத் தளத்தோடு முடிந்துவிடவில்லை. வெறுப்பரசியல் பிரசாரங்கள், கலவரங்கள் (பாபர் மசூதி தொடங்கி குஜராத் வரை), படுகொலைகள் (காந்தி தொடங்கி கௌரி லங்கேஷ் வரை) ஆகியவையும் நிகழ்த்தப்படுகின்றன. நானறிந்த இந்து மதத்தில் இவை எதற்கும் இடமில்லை என்கிறார் சஷி தரூர். இது ஓர் ஆய்வு நூல் அல்ல என்பதை அவரை அறிந்தவர்களுக்குத் தனியே சொல்லத் தேவையில்லை. பொது வாசகர்களுக்காக மிகவும் எளிமையாகவும் பெரும்பாலும் எளிமைப்படுத்தியும் எழுதுவது அவர் இயல்பு.
ஒரு காங்கிரஸ்காரர் இப்படிதான் எழுதுவார் என்று இந்துத்துவர்கள் இதனைக் கடந்துசென்றுவிடலாம். ஆயிரம்தான் இந்துத்துவ பாசிசத்தை விமரிசித்தாலும் இந்து மதத்தைப் புனிதப்படுத்துவதல்லவா இவர் நோக்கம் என்று சில முற்போக்காளர்கள் கருதலாம். என்னைப் பொருத்தவரை, மதம் வேறு, மத அடிப்படைவாதம் வேறு என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்வது அவசியம் என்று நினைக்கிறேன். மத நம்பிக்கையாளர்களை அடிப்படைவாதிகளோடு சேர்த்துப் பொட்டலம் கட்டுவது ஆபத்தானது. அவ்வாறு செய்வது அடிப்படைவாதிகளின் கரங்களை மேலும் வலுப்படுத்துவதில்தான் சென்று முடியும்.