2016 மார்ச் 14-ம் தேதி விழுப்புரத்தை சார்ந்த T.S.அருண்குமார் என்ற வழக்கறிஞர் தனது முகநூல் பக்கத்தில் இப்படியொரு பதிவு போடுகிறார், “நீங்கள் கௌரவக் கொலை செய்தால் கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்னிடம் வாருங்கள்; நான் உங்களை காப்பாற்றுகிறேன். கௌரவக் கொலை என்பது தண்டனைக்குரிய குற்றம் அல்ல. பெற்றோர்களாகிய உங்களுக்கு அவ்வாறு கொலை செய்வதற்கு உரிமை உண்டு.”
பின்னர் அந்த பதிவு சமூக ஊடகங்களில் சர்ச்சையாகி, அந்த வழக்கறிஞருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு அவர் பயந்து போய் தனது முகநூல் கணக்கை டீ ஆக்டிவேட் செய்து ஓடியது தனிக்கதை. இங்கு அதை எதற்கு சொல்கிறேனென்றால் அந்த வழக்கறிஞர் ஆயிரத்தில் ஒருவர்தான். இதைப்போல் பலர் இங்கு வெளியிலும், சமூக ஊடகங்களிலும் சாதிவெறியை சகட்டுமேனிக்கு அள்ளித் தெளித்து வருகின்றனர்.
வட, தென் என தமிழக்கத்தில் 2013-ல் இருந்து கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட சாதிவெறி ஆணவக் கொலை வழக்குகள் காவல்துறை, நீதித்துறை, நிர்வாகத்துறை என அனைத்து மட்ட ஊழல்களினாலும் எந்தவொரு தண்டனையும் வழங்கப்படாமல் வெறும் காதல் வழக்குகள், செக்ஸ் வழக்குகள் என்ற பெயரில் இதுவரை நிலுவையில் இருந்து வருகின்றன. இதில் தமிழகத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்திற்கு மேல்முறையீடாக எந்தவொரு ஆணவக் கொலை வழக்குகளும் செலவில்லை என்ற பெருமை வேறு தமிழகத்திற்கு உண்டு. யுவராஜ் வழக்கின் சரண்டரில் நடந்த நாடகம் நாம் அறிந்ததுதான். பற்றாக்குறைக்கு சாதி பெருமை பேசும் பேசும் படங்கள் வேறு வருடத்திற்கு குறையாமல் 10 இறங்கும்.
இந்த விவகாரத்தில் தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்த ஆண்களை விரும்புவதால் தற்கொலைக்கு தூண்டப்படுவதன் மூலமும் மற்றும் இன்னபிற வழிகளிலும் கொல்லபடுவது பெரும்பாலும் பெண்களாகத்தான் இருக்கின்றனர். இது கமுக்கமாக நடைபெறுவதால் நமக்கு அவ்வளவாக தெரிவதில்லை. ஒருவேளை தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்த இளைஞர் கொல்லப்பட்டால் அது நீதிமன்ற வழக்காக காலம் காலமாக நிலுவையில் இருக்கும்.
இதுபோன்ற நேரங்களில் அதிமுக, திமுக என எந்த கட்சிகளானாலும் ஓட்டிற்காக வாயே திறப்பதில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகளும், தேர்தலில் பங்கேற்க்காத கம்யூனிச மற்றும் பெரியாரிய இயக்கங்களும் ஆணவப் படுகொலைகள் நிகழ்ந்தபின்தான் அந்த பிரச்சனைகளை கையில் எடுக்கின்றனவே தவிர, இதுபோன்ற ஆணவப் படுகொலைகளை முன்பே தடுக்கும் அளவில் பலம் பொருந்தியதாக அவைகள் இருப்பதில்லை.
இப்போது ஒட்டுமொத்த குடும்பமே கூலிப்படை வைத்து ஒரு படுகொலையை நிகழ்த்தி, அதில் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தப் பின்னரும், அந்த நீதிமன்ற தண்டனையை எதிர்த்தும், படுகொலையை ஆதரித்தும் சாதிவெறியாளர்கள் அதே நீதிமன்றம் முன்பும், வெளியிலும், சமூக ஊடகங்களிலும் முழங்கி வருகின்றனர் என்றால் இந்த ஆணவப் படுகொலைகளுக்குப் பின்னால் இருக்கும் நிதி, சதி, சாதி மற்றும் அரசியல் செல்வாக்கினை நாம் புரிந்து கொள்ளலாம்.
இப்போது ஏதோ ஒரு தேவர் பேரவை கௌசல்யா பெற்றோருக்கு மேல்முறையீட்டிற்க்கு நிதியுதவி செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது. இது போன்ற உதாரணங்களின் மூலமாக இந்த விசயத்தில் தேவர், வன்னியர், கவுண்டர் என அனைத்து சாதியினரும் ஒற்றுமையாக பாகுபாடில்லாமல் செயல்படுகின்றனர் என்பது நமக்கு தெளிவாகவும் தெரிகிறது.
இந்தியாவில் எடுத்துக் கொண்டால் எப்போதையும்விட ஆணவப் படுகொலைகளின் அதிகரிப்பு விகிதம் இந்த வருடம் மட்டும் 800 சதவீதம் கூடியிருக்கிறது. மாநிலங்களில் உத்திரபிரதேசம்தான் முதலிடம். சென்ற வருடம் மட்டும் 131. இந்த வருடக் கணக்கு தெரியவில்லை.
அதேநேரத்தில் பிற்போக்காளர்கள் அனைவரும் ஏதோ ஒருவிதத்தில் தங்கள் நிகழ்ச்சிநிரலை கணக்கட்சிதமாக நிறைவேற்றிக் கொண்டிருப்பதும், அதற்கு சரியான பதிலடி கொடுக்க முடியாமல் அரசியல் தளத்தில் நாம் பின்தங்கி இருப்பதும் அவ்வளவு ஆரோக்கியமானதாகவா இருக்கிறது. நிச்சயமாக இல்லைதான். நமது பதிலடி என்பது எப்போதும் எல்லாம் முடிந்தபின் இறுதியில் வரும் தமிழ் சினிமா போலிஸ் போல அல்லவா இருக்கிறது. பண்பாட்டுத் தளத்தில் அது இன்னமும் மோசமாக இருக்கிறது.
ஈழத்தில் கொத்துகொத்தாக கொன்று குவித்தாலும் சரி, அதற்காக இங்கே பலர் தீக்குளித்தாலும் சரி, முற்போக்கு எழுத்தாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டாலும் சரி அல்லது நமது வாழ்வாதாரங்கள் தினம் தினம் அரசாங்கத்தினால் பறிக்கப்பட்டாலும் சரி; இலக்கியத்தின் ஒட்டுமொத்த குத்தகைதாரர்களோ மனதின் ஆழத்தை ஆராய்ந்து கொண்டிருப்பார்களே தவிர கூடங்குளத்தையோ, நெடுவாசலையோ, அல்லது இது போன்ற ஆணவப் படுகொலைகளை திரும்பிக்கூடப் பார்க்கமாட்டார்கள்.
அரசியலிலும், கலை, இலக்கியத் துறையிலும் நமது தோழர்களில் ஒரு சிலர் மட்டுமே இதை எப்படியாவது மக்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டும் என அயராது பாடுபட்டுக் கொண்டிருப்பார்கள்.
அதில் முக்கியமானவர் தோழர் இரா.முருகவேள் அவர்கள். அவரது எரியும் பனிக்காடு, மிளிர்கல், ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம், முகிலினி, கர்ப்பரேட் என்.ஜீ.வோக்கள் என ஒவ்வொரு நூலும் அதற்கு சான்று.
இப்போது செம்புலம். இந்த நாவலின் கதை வேறொன்றுமல்ல. இதே ஆணவப் படுகொலைகளின் கதைதான்.
இந்த நாவல் எழுதப்பட தொடங்கியதிலிருந்து ஏதோ ஒரு வகையில் நாவலுடன் பயணித்தவன் என்ற முறையில், இதுபோன்ற ஆணவப் படுகொலைகளை அரசும், காவல்துறையும், சமூக இயக்கங்களும், என்.ஜீ.வோக்களும் எப்படி பார்கின்றன; எவ்வாறு அணுகுகின்றன மற்றும் இப்போதும் நிலவும் சூழல் எப்படிப்பட்டது என்று இந்த நாவலை படித்தால் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் என்று முழுமையாக நான் நம்புகிறேன்.
அந்த வகையில் ஆணவப் படுகொலைகளை குறித்து அரசியல் மற்றும் ஒரு குற்றவியல் துப்பறியும் தன்மையோடு தமிழகத்தில் வெளிவரும் முதல் நாவல் இதுதான் என நினைக்கிறேன். ஆசிரியர் சொல்வது போல நாம் வாழும் வாழ்வு என்பது எந்தவொரு துப்பறியும் கதையையும்விட சுவாரசியமானதுதான். அந்த அளவிற்கு அரசியலும், சாதியும், வர்க்கமும் நம் வாழ்வில் ஒவ்வொரு பக்கங்களையும் நமக்கு தெரியாமலே எழுதிச் செல்கிறது. அதை நமக்கு புரியும்படி சொல்லும் இதுபோன்ற இலக்கிய முயற்சிகளை எப்போதையும்விட இப்போது நாம் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம்.
எப்போதும்போல சமூகத்திற்கு எது தேவையோ அது சார்ந்த நூலை மட்டுமே வெளியிடும் பொன்னுலகம் பதிப்பகம்தான் இந்த நூலையும் வெளியிடுகிறது. 2018 ஜனவரி #சென்னை புத்தகத் திருவிழாவை ஒட்டி நாவல் வெளிவருகிறது.
சரியான கால கட்டத்தில் வெளிவரும் இந்நாவலை வாய்பிருக்கும் தோழர்கள் அவசியம் வாங்கி படித்து தங்கள் கருத்துக்களை முன்வைக்கவும்.
வாழ்த்துக்கள் தோழர் இரா. முருகவேள்! வாழ்த்துக்கள் பொன்னுலகம் பதிப்பகம்!