'செம்புலம்' வாசித்து முடித்தேன். நான்கு பாகங்களாக வகுக்கப்பட்டிருக்கும் கதைப்பரப்பு கோவை திருப்பூர் நகரங்களின் நூற்பு-பின்னலாடை தொழிலகங்களின் இயக்கம், அதன் வழியாக சாதிய சமூகங்கள் கைக்கொண்டிருக்கும் நவீன பண்ணை அடிமை முறை, தொழிலாளர்-விவசாய சங்கங்களுக்குப் பேர்போன மண்டலத்தில் வளர்த்தெடுக்கப்படும் சாதிச் சங்கங்கள், அதன்வழியாக ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நிகழ்த்தப்படும் ஆதிக்கசாதி மனோபாவத்தின் வன்முறை, கொலைகள், என கொங்கு நிலத்தின் சமூக கண்காணிப்பை பருந்துப் பார்வையில் வெளிப்படுத்துகிறது.
பொள்ளாச்சி சாலையில் அதிகாலை நேரம் ஒரு ஆண் சடலம் சாலையோரம் கிடப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. பால்காரர் ஒருவர் அருகிலுள்ள காமாட்சிபுரம் காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்க, அங்கிருந்து எஸ்.ஐ அபு மற்றும் பாலு இருவரின் கள விசாரணையிலிருந்து கதை துவங்குகிறது.
இறந்தவன் யார்? மரணத்துக்குக் காரணம் கொலையா, விபத்தா? போஸ்ட்மார்டம் அறிக்கை, மகஜர், மேன் மிஸ்ஸிங் தகவல், கொலைக்கான பின்னணி, சந்தேகிக்கும் நபர்கள், அவர்களுடனான முன்விரோதம் என விசாரணைகளின் கோணத்திற்கு ஊடாக காவலர்கள் அபு, பாலு இருவரது துறைசார்ந்த அனுபவங்கள், போலீஸ் வாழ்க்கை, குற்றங்களை அணுகும் விதம் என க்ரைம் நாவல் தன்மையோடு விரைவாக பக்கங்கள் தீர்கின்றன. இந்த இடங்களில் கதைசொல்லலின் நேர்கோட்டு காக்கித் தன்மையிலான பார்வை அப்படியே மாற்றமடைந்து இரண்டாம் பாகம் வேறு தளத்திற்குள் புகுகிறது.
கொங்கு மண்டல ரேஸ்கார ஜமீனின் வாரிசாக, சாதி சங்கத் தலைவராக, உள்ளூர் அதிகார வர்க்கமாக தலையெடுக்கும் மனோகரின் வாழ்வும், அவர் வளர்ந்த சாதி, வர்க்க பேதமுள்ள சூழலும், விவசாயப் பாசனப் பிரச்சனைகளால் தென்னையும், மில்களும், கோழிப் பண்ணைகளும் உருவாகத் தொடங்க ஊரின் மாற்றத்துக்கு இடையே சாதி சங்கம் எப்படி அமைப்பாக உருவாகிறது என்பது நாவலின் இரண்டாம் பாகத்தில் விவரிக்கப் படுகிறது.
கூடவே, இந்த பாகத்தில் வரும் கதாப்பாத்திரங்களான கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய சடங்குகளைச் செய்துவைக்கும் அருமைக்காரர்கள் குடும்பத்தைச் சேர்ந்த பூரணி, அவள் அண்ணன் ஜெகதீஷ், பூரணியின் பால்யகால நண்பனாக வரும் கொலைசெய்யப்பட்ட பாஸ்கர் மூவரும் அதே பிரதேசத்தின் வேறுவேறு தரப்புகளின் பிரதிநிதிகளாக கதைசொல்லியின் வழி அடையாளப் படுத்தப்படுகிறார்கள்.
தங்கள் சாதிச் சமூகத்தின் கட்டுப்பாடு மீறல்களும் ஒழுங்கு குலைவுகளும் சீர்செய்யப்படவேண்டும். தாங்கள் சாதியால் உயர்ந்தவர்கள், தங்கள் வீட்டுப் பெண்கள் அந்நிய, குறிப்பாக தலித் சமூக ஆண்களோடு பேசிப் பழகுவதைக் கண்காணித்து, கண்டிக்கும் பொறுப்பும் கடமையும் தங்களுக்கு உண்டு என்று நம்புகிற இளைஞர்களும் அவர்களை கல்விநிலையங்கள் தொடங்கி கார்ப்பரேட் சொசைட்டி வரைக்கும் ஒருங்கிணைக்கும் சாதிச் சங்கங்களும்..
உள்ளூரில் தொழில்செய்யவும், நிலம், உழைப்புக் கூலிகள், பிற தொழிற்சங்கப் பிரச்சனைகள் ஆகியவைகளில் இருந்து தங்கள் வணிக உற்பத்தியைக் காத்துக் கொள்ள இந்தச் சங்கங்களை ஆதரிக்கும் ஆலை நிர்வாகங்களும் கதைக்களத்தின் மற்ற முக்கிய அம்சங்கள்.
பெண்ணுக்கு நிலத்தைச் சொத்தாகக் கொடுத்தால் அதனை வேறு குடும்பத்தினருக்கு தாரைவார்க்க வேண்டிவரும். நிலத்தின் உரிமையை இழக்கும்போது அந்நிய ஊடுருவல் ஏற்படும். அதன்மூலம் பொருளாதார பலத்தை மட்டுமல்ல தங்கள் சமூக கட்டுமானமும் சீர்குலையும் என்று விடாப்பிடியாக ஒருதரப்பும்,
பெண் பிள்ளைகளை மில் வேலைகளுக்கு அனுப்பி, ஏஜண்ட்களிடம் அடமானமாகப் பெறும் முன்பணத்தைக் கொண்டு வாழ்க்கையை ஓட்டுவதும், மில்களின் அடக்குமுறைக்கும் வேலைப்பளுவுக்கும் அஞ்சி தப்பியோடும் பிள்ளைகளைத் திரும்பவும் வேறு ஆலைகளுக்கு வேலைக்கு அனுப்பி, முந்தைய கடனை அடைக்கும் வாழ்க்கைச் சூழல் கொண்ட மக்கள் இன்னொரு தரப்புமாக மாறி மாறி தங்களைத் தகவமைத்துக் கொள்ள அதிகாரமும் சாதியும் அவர்களை அவர்களறியாமலே கரையான் புற்றாக அரிக்கின்றன.
இங்கே பாஸ்கர் போன்ற இளைஞன் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளுக்கு எதிராகவும், அவர்களுக்கான வன்கொடுமைச் சட்டங்களையும், அதன் ஓட்டைகளையும் கேள்விகேட்பவர்களாகவும், அதிகார பலத்தின் நவீன அடிமைத்தன கட்டமைப்பைத் தகர்க்க மாற்றுவழிகளையும் நாடுபவனாக உருமாறவைக்கிறது சூழல். பாஸ்கர் கட்டப்பஞ்சாயத்துக்காரன் என்றே காவலர் விசாரணையில் அறியப்படுத்தப் படுகிறான். ஆனால் அவனுடைய இயக்கம் சமூகக் காரணிகளால் உருமாறியது என்கிற உண்மையை புரியவைப்பதற்கு முன்பாக பாஸ்கர் கொல்லப்படுகிறான்.
இந்த கொலை வழக்கு முன்விரோதமா? காதல் தகராறா? தலித் வன்கொடுமையா என்ற கோணத்தோடு உண்மை அறியும் குழு ஒன்று மூன்றாம் பாகத்தில் களமிறங்குகிறது.
ஜெர்மன் நாட்டின் நிதி உதவியோடு இயங்கும் உண்மை அறியும் குழுவின் ஆதார அமைப்பான 'விழிப்பு' பாஸ்கர் கொலை தொடர்பாக களவிசாரணையில் ஈடுபடுகிறது. இருதரப்பு 'ஆணையுறுதி'யின் பலனாக உண்மையை முழுமுற்றாக நெருங்க முடியல்கிறது அமைப்பு. அதன் இளநிலை உறுப்பினரான ஷீலா ரெஜி பிரியா இறுதியாக ஒரு மின்னஞ்சலில் எழுதுகிறாள்.
"இது ஒரு ஆணவக்கொலை... தலித் மக்கள் சட்டவிரோதமாகச் சமூகப் புறக்கணிப்பு செய்யப்படுகின்றனர்... மக்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள்... குடும்பங்கள் ஊரைவிட்டு வெளியேறுகின்றன. இவை அனைத்தும் அரசின் மேற்பார்வை அந்த ஊரின் மேலிருக்கும்போதே நடந்து வருகின்றன.. இது அரசு தன் கடமையைச் செய்யத் தவறுவதாகும்" என்று கொலைக்கான முன்னும் பின்னுமான காரணங்களையும் சமூக உளவியலையும், பீடித்திருக்கும் சாதிய மனோபாவம் மற்றும் பெண் உழைப்புச் சுரண்டல் குறித்தும் தன் பரிந்துரைக்கடிதத்தை நீட்டிக்கிறாள்.
NGO அமைப்பின் தலைமைப் பிரதிநிதி, தமது அமைப்பின் எல்லைகளையும், மேற்கொண்டிருக்கும் வேறு பணிகளையும் விளக்கி 'நம்மால் ஆன காரியம் இதுமட்டும் தான்' என்று பதில் எழுதுகிறார்.
இப்படி காவலர்கள், சமூகக்காரணி, எம்.ஜி.ஓ அமைப்பு என மூவரின் பார்வையில், "நிகழ்ந்த ஒரு கொலைக்கான முப்பரிமாண கோணங்களுக்கு" ஊடாக இறந்து போன பாஸ்கரின் நண்பன் இளங்கோ மற்றும் நூற்பாலையில் இருந்து தப்ப முயற்சிக்கும் அமுதாவின் விவரிப்புகள் ஒரு மரத்தின் அடிவேர் வரைக்கும் புகுந்து குற்ற காரணத்தின் மீது வைக்கப்படும் சமூக விமர்சனமாகிறது.
இரைச்சல் மிகுந்த ஆலைகளின் கோட்டைச் சுவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வதுபோல முதலாளிகள் தங்களை காப்பாற்றிக் கொள்ள கொடுக்கும் சமூக பலிதான் செம்புலம். ஆனால் அப்படி மட்டும் வரையறுத்துச் சொல்லிவிட முடியாதபடிக்கு புலத்தின் பொட்டல் வெளியில் வாள் வீசிக் கொண்டிருப்பவர்கள் அத்தனை பேர் கையிலும் ரத்தக்கறை படிந்திருக்கிறது.
இரா.முருகவேள் தனது இந்நாவலை சமூகப் பிரக்ஞையோடு எழுதியிருக்கிறார். அவர் கதாப்பாத்திரங்களின் வழியாக முன்வைக்கும் அடிப்படையான விமர்சனங்கள் ஒருதலைபட்சம் பாராது அவரவரது குரலாக ஒலிக்கின்றன.
விவசாயிகள் செத்தால் செய்தியாவது வருகிறது. தறி ஓட்டியவன் நிலையை யார் கண்டுகொள்கிறீர்கள் என்று அத்தொழிலின் பிரச்சனைகளை விவரிக்கிற இடங்களும், அரசதிகாரம் எல்லாவற்றையும் எப்படித் தனக்குச் சாதகமாக்கிக் கொள்கிறது என்கிற உள்ளீடுகளும் பிரசாரமின்றி கதைப் போக்கில் வெளிப்படுத்துகிறார். இங்கே இவை இப்படித்தானிருக்கின்றன என்ற நிதர்சனத்தை அனுபவங்களின் வழியாகத் தொட்டிருக்கிறார்.
கொங்கின் பிராந்தியங்களை அதன் வாழ்வியலை சமூக பொருளாதார அதிகார மையப் பிரச்சனைகளை சமகாலத்தில் தன் எழுத்தால் அளக்கிறவராக இரா.முருகவேள் முக்கியமான படைப்பாளியாகிறார். அவர் செயல்பாடுகளுக்கு வாழ்த்துகள்.