கே: நாவலை வாசித்து முடித்தவுடன் உங்களுக்கு ஏற்பட்ட மனப்பதிவு?
ப: புறக்கணித்துவிட முடியாத நாவல். புது வடிவத்தில் எழுதிப்பார்க்கப்பட்ட தமிழ் நாவல்கள் என்று ஒரு பட்டியலைத் தயாரித்தால் அதில் சேர்க்கப்பட வேண்டிய ஒன்று. நல்ல நாவலாக வரவேண்டியது எழுத்தாளனின் கிறுக்குத்தனம் சற்றே மேலோங்கியதால் சறுக்கல் நிகழ்ந்திருக்கிறது.
கே: அது என்ன கிறுக்குத்தனம்?
ப: மரபு வழிப்பட்ட மனம் எப்போதும் செவ்வியல் தன்மையிலிருந்தும் மரபார்ந்தக் கட்டுக்கோப்பிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொள்வதில்லை. யதார்த்த வகை எழுத்தானாலும், நவீன வகை எழுத்தானாலும் தன் எல்லைகளைக் கண்டு அதற்குள்ளாக மட்டுமே இயங்கும். நிகழ்த்துதலும் அதன் உள்ளார்ந்த விளையாட்டும் வரம்புக்கு உட்பட்டவையாக இருக்கும். ஆனால் மேற்சொன்ன எல்லாவற்றையும் நிராகரிக்கிற ஒரு மனம் இருக்கிறது. அது எதிலும் தன்னை அடங்கவிடாமல் கிறுக்குப் பிடித்து அலையும். அதையே தன் அடையாளமாக மாற்றிக்கொள்ளும். இருந்தும் அவை கலைத்துப்போடும் பிய்த்துப்போடும் படைப்புகளுக்குள் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஓர் ஒருமை (Unity) கூடி வந்திருக்கும். ஏதோ ஓரு இழை அதன் சிதறல்களை இணைக்கும். காம்யு சொல்வது போல எல்லா சிறந்த படைப்புகளுக்கும் உள்ள குணம் இந்த ஒருமைதான். இந்த ஒருமை கூடி வராமல் போனால் அந்த எழுத்தாளனுக்கு கிறுக்கு அதிகமாகிவிட்டது என்றே உணரப்படும். இந்த நாவலை வாசித்த போது அதை உணர்ந்தேன்.
கே: விளையாட்டு என்று சொன்னீர்களே அது?
ப: படைப்பின் பேசு பொருள் தீவிரமானது என்றாலும் அதை சொல்லும் விதம், நிகழ்த்தும் முறை (Narration) என்ற ஒன்று இருக்கிறதில்லையா? அதுதான் படைப்புக்குள் இயங்கும் விளையாட்டு. கதையை எங்கிருந்து வேண்டுமானாலும் தொடங்கலாம். சம்பவங்களை, அத்தியாயங்களை கலைத்துப் போட்டு அடுக்கலாம், பாத்திரங்களுக்கு சம்பிர்தாயத் தன்மையிலிருந்து விலகிப் பெயரிடலாம். ஆனால் அந்த விளையாட்டு ரசிக்கும்படி இருக்க வேண்டுமே அல்லாது படைப்பாளியின் மேதாவித்தனத்தை பறைசாற்றி எரிச்சலூட்டக் கூடாது. இந்நாவலில் இந்த விளையாட்டு முற்பகுதியில் சற்றே கவனிக்க வைத்தாலும் பிற்பகுதி அதற்கு எந்த நியாயமும் செய்யாமல் வெற்று அரட்டையாக மாறிப் போய்விடுகிறது.
கே: இந்த நாவலின் கவனிக்கத் தக்க அம்சம் என்றால் எதைக் குறிப்பிடுவீர்கள்?
ப: இலக்கமிடப்பட்ட அத்தியாயங்கள்தான். ஆடுதன் ராணி – மைனர், ஆண் தன்மை மிகந்த அதீதப் பலம் கொண்ட அந்தப் பெண், காத்தான், தமிழ்வாணன் – மணிமொழி இவர்களின் பாத்திரப்படைப்புகள் மற்றும் புரட்சிக் குழுக்களின் செயல்பாடு இதெல்லாம் முக்கியமானவை. அதே போல அரசாங்கத்தின் போக்கை, கறுப்பு, சிவப்புச் சட்டைக்காரர்களை பகடி செய்யும் – வலதுசாரித்தன்மை கூடுதாலாகவே எழுத்தாளரிடம் வெளிப்படும் இடங்கள் இவை – குறிப்பாக போக்குவரத்து ஊழியர்களை குறித்த பகடி போன்றவை – சில பகுதிகள் எரிச்சலூட்டினாலும் – ரசிக்கும்படி இருக்கின்றன.
ரொமாண்டிஸம் சற்றே தூக்கலாக இருந்தாலும் நாவலின் பலமே இந்த அத்தியாயங்களில்தான் நிலை நிறுத்தப்படுகிறது. நாம் எங்கு பிய்த்துக்கொண்டு ஓட நினைத்தாலும் மனிதர்களும் வாழ்க்கையும், அனுபவங்களும், வரலாறும்தான் பிரதானமானவை என்பதை இப்பகுதிகள் நிரூபிக்கின்றன.
கே: அம்மாஞ்சிப் பகுதி?
ப: அது தனித்த பாத்திரமா, எழுத்தாளனா, ஆடுதன் ராணிக்கு எடுபிடி நிலையில் உள்ளவனா, அறிவுஜீவியா, புரட்சியாளனா என்று எதையும் யூகிக்கமுடியாத தன்மை அதில் இருக்கிறது. மேலும் அவனுடைய உணர்ச்சிவசப்பட்ட அறிவார்த்த நடை பல இடங்களில் அர்த்தப்படுத்த முடியாத, தொடர முடியாத நிலைக்குச் சென்றுவிடுகிறது. ஒருவெளை இப்பகுதியை கவனத்துடன் கோர்த்திருந்தால், நாவலின் பலம் இன்னும் கூடியிருக்கும் என்றே தோன்றுகிறது. இதன் படைப்பாளி தனிப்பட்ட தன் ஈடுபாடுகளை, தன் அனுபவத்தை, அபிப்பிராயங்களை, கருத்துகளை, விமர்சனங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் களமாகவே இப்பகுதியை பயன்படுத்திக்கொண்டதாகவேத் தோன்றுகிறது. அதனால் இவை நாவலுக்கு சாதகமாக இல்லாமல் போய்விட்டதே நடந்திருக்கிறது.
கே: இந்நாவலில் வெளிப்படும் ஒரு வகை மீறளை நீங்கள் ரசிக்கவில்லையா?
ப: சம்பிர்தாயத்திலிருந்து, போலி மதிப்பீடுகளிலிருந்து, நிறுவனப்படுத்துதலிருந்து மீறுதலைத்தான் கலையின் பிரதான குணமாக பார்க்கிறேன். ஆனால் கலை எப்படி நிகழ்த்தப்பட வேண்டுமோ அப்படி நிகழ்த்தப்பட வேண்டும். ஒரு சாஸ்திரிய சங்கீத நிகழ்த்துதலில் ஆலாபனைகளும், தனியாவர்த்தனங்களும் அதன் மையத்திலிருந்து பிரிந்து எவ்வளவு தூரம் சென்றாலும் தனித்தன்மையை நிரூப்பித்தாலும் தாளம், ராகம், சுருதியிலிருந்து விலாகினால் எப்படி இருக்கும்? அது போல ஒரு படைப்பு ஒரு மேலார்ந்த நிகழ்த்துதலை செய்தாக வேண்டும். அதன் முழுப் பொறுப்பும் ஒரு கலைஞனக்கு இருக்க வேண்டும்.
கே: அது என்ன பொறுப்பு? அப்படியெல்லாம் ஒரு எழுத்தாளன் இருந்தாக வேண்டுமா என்ன? திரும்பவும் அதே சீரியஸான மூஞ்சோடு?
ப: தன் படைப்புக்கான முழுப் பொறுப்பையும் ஒரு படைப்பாளி ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். எந்த காரணத்தையும் சொல்லியும், சமாதானங்களைச் சொல்லியும் அவன் தப்பித்துவிட முடியாது. அப்படி தப்பிக்கிறான் என்றால் அவனிடம் ஏதோ பாசாங்கு இருக்கிறது என்றே பொருள். ஒரு படைப்பு தன்னளவிலேயே தன் இருத்தலுக்கான அத்தனை நியாயங்களையும் கொண்டிருக்க வேண்டும். வாசகனின் கேள்விக்கு உரிய பதிலை உள் வைத்திருக்க வேண்டும். எழுதாளன் எழுந்து வந்து வழக்குரைஞரைப் போல தன் படைப்புக்காக வாதாடக் கூடாது.
ஆரம்ப கட்ட எழுத்தாளர்கள் பெரும்பாலானவர்களிடம் இந்த பதற்றத்தை பார்க்க முடியும். தான் எதை நினைத்து எழுதினோமோ அப்படி பார்க்கப்படாமல் போனால், தன்னை ஒரு ஆர்வக்கோளாறாக நினைத்துவிட்டால் என்ற பதற்றம்தான். இந்த பதற்றம்தான் ‘மருதம் வாசகர் வட்டம்’ என்ற தனி ட்ரேக்கை உருவாக்குகிறது. பிற்பகுதியில் வரும் அத்தியாயங்களையும் எழுத வைக்கிறது.
எழுத்தாளனின் கூற்றாக வரும் பகுதி இது: “…சாதாரணமா சந்தோஷமா இருக்கிறதுக்கு ஒரு வெளிப்பாடுத் தேவைப்படுதில்லையா… அது இங்க மொழியா இருக்கு. இன்னொரு இடத்துல நடனமா இருக்கு, இன்னொரு இடத்தில இசையா இருக்கு. இன்னொரு இடத்தில சிற்பமா இருக்கலாம். வெளிப்பாடுகள் அதனதன் படைப்பாளிகள சந்தோஷப்படுத்துதா அப்படிங்கிறது அவங்கவங்களுக்குத்தான் தெரியும். அதைத்தாண்டி ரசிகனுக்கு ஒரு அனுபவத்தைக் கடத்துமா அப்படின்னு எல்லாம் யோசிக்கிறது இல்ல. அந்த வகையில் இந்த மொழி எனக்கு சந்தோஷத்தைக் கொடுத்திருக்கு. அதைத்தாண்டி உங்களுக்கு படிக்கக்கிடைக்கணுங்கிறது எல்லாம் நோக்கம் இல்ல. இனிமே இதுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல. நீங்க படிச்சாலும் படிக்காமத் தூக்கிப் போட்டாலும், யாருக்கிட்டையாவது கொடுத்தாலும் சரி. இந்த ஊருல ரசவடை ரொம்ப ஃபேமஸ். ஒருதடவ வெங்கட் சாமிநாதனும் நானும் சாப்பிட்டிருக்கோம். வாங்க சாப்பிடப் போகலாம்.”
சீனிவாசன் இப்படி சொல்லிவிட்டு ரசவடை சாப்பிடப் போகலாம். ஆனால் வாசகனாகிய நான் அப்படி அவரை விட்டுவிட முடியாது. புத்தகத்தை நல்ல ஓவியங்களுடன் அழகாக அச்சிட்டுக் கொடுத்துவிட்டு இப்படியெல்லாம் அவர் தன் பொறுப்பை அவ்வளவு எளிதில் தட்டிக்கழித்துவிட முடியாது.
கே: பிறகு அவர் என்னதான் செய்ய வேண்டும் என்கிறீர்கள்?
ப: முதல் படைப்பை வெளியிடும் படைப்பாளிகள் பலர் அப்படியேத் தேங்கிப் போய்விடுவதற்கு காரணம் முகஸ்துதிகளும் பாராட்டுகளும்தான். எடுத்த எடுப்பிலேயே தான் அற்புதமான ஒன்றைப் படைத்துவிட்டோம், அதற்கு சகல நியாயங்களும் இருக்கிறது என்பது போல ஒரு படைப்பாளி உணர்ந்துவிட்டால் அந்நிலையிலிருந்து காலத்துக்கும் அவரால் மீள முடியாது. இந்த ஆபத்து சீனிவாசனுக்கும் நேரக்கூடாது என்பதே என் விருப்பம்.
(நன்றி: ஜீ. முருகன்)