வரலாறு என்பது நேற்றைய மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்வது என்பது மாத்திரம் அல்ல. இன்றைய மனித குலத்துக்கு அவர்கள் விட்டுச் சென்ற தத்துவச் சிந்தனைப் போக்குகளை உள்வாங்கி, எதிர் காலத்தைச் சமைத்துக் கொள்வதற்கான அறிவுத்துறையே, வரலாறு. ஓர் இனம், தன் அகத்திலும் புறத்திலும் நிரம்பி முன் நடக்க உதவும் அடிப்படைகளை அமைப்பது, வரலாறு. உணர்வு மற்றும் உணர்ச்சி நிலைகளைக் கடந்து, தமிழர் தம் வரலாற்றைச் சரியாக அகப்படுத்திக்கொள்ள இன்னும் தயாராக இல்லை.
அவ்வப்போது சில அறிஞர்கள், நம் முடக்கத்தைக் களைய, முன்வந்து பேருழைப்பைத் தந்து, தம் இனத்தை முன் நகர்த்துகிறார்கள். அவர்களில் நம் காலத்தின் முக்கியமான அறிஞர், ஆராய்ச்சியாளர் சு.தியடோர் பாஸ்கரன். கலை வரலாற்றாளர் அவர். சினிமா என்னும் நம் காலத்துப் பெரும் கலையை, அதன் ‘குதூகல’ப் பகுதியைக் கழித்து, அதன் அறிவார்ந்த உள்ளடக்கத்தை, அதன் தொழில்நுட்பக் கலையியல் கோட்பாடுகளோடு பல அருமையான புத்தகங்கள் தந்தவர் அவர்.
காட்டுயிர்கள், சுற்றுச்சூழல் பற்றிய அவரது படைப்புகள் அவசியம் வாசிக்கத் தக்கவை. இப்போது நாம் எடுத்துக்கொண்டிருக்கும் கலை வரலாறு சார்ந்த கட்டுரைத் தொகுதியான ‘கல்மேல் நடந்த காலம்’ (2016), தொல் பழங்காலத்து பாறைக் குடிகளில் இருந்து முதல் உலகப் போரில் ‘எம்டன்’ சென்னைக் கடலுக்கு வந்த வரை, 21 கட்டுரைகளாக ‘நியு செஞ்சுரி புக் ஹவுஸ்’ சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
இயற்கை உருவாக்கித் தரும் குகைகளைத் தம் வாழிடங்களாக ஆக்கிக் கொண்டார்கள் துறவிகள். சமணர்களும் ஆசீவகர்களாகிய அவர்களும் தங்கள் வாழிடங்களை அடைக்கல இல்லமாகக் கொண்டிருக்கிறார்கள். துன்புறுத்தப்படுபவர்களுக்கு அடைக்கல இடமாக ‘அஞ்சினான் புகலிடமாக’ அறப்பிரதேசமாக மாற்றிக்கொண்டார்கள். குகைகள் சித்தாந்தக் கல்வி நிலையமும் கூட. அவை ‘பள்ளிகள்’என்று வழங்கப்பட்டன. கல்வி நிலையங்களைப் ‘பள்ளி’ எனச் சொல்லும் வழக்கம், துறவிகளின் கொடை. குகையை அடுத்து தம் தத்துவப் பிரசங்கமும் நடத்தப்பட்டது துறவிகளால். மதுரைச் சமண மலையில் ‘பேச்சுப் பள்ளம்’என்றோர் தலம் உள்ளது. மலையைவிட்டு இறங்கிச் சம்சாரிகள் வீட்டு முன் அமைதியாக நின்று உணவு பெறுவார்கள். சகத் துறவிகளோடும் பகுந்து உண்பார்கள். வள்ளுவர், ‘விருந்து’ என்ற சொல்லை, தானம் வாங்க வரும் துறவிகளைக் குறித்துச் சொல்கிறார். ஜீவபந்து ஸ்ரீபால் என்ற குறிப்பையும் தியடோர் பாஸ்கரன் சொல்கிறார். உடன், ஒரு முக்கிய குறிப்பையும் எழுதியிருக்கிறார்.
“குகையை ஆராய்ந்தவர்கள் கல்வெட்டுகளை மட்டுமே ஆய்ந்தார்கள். மற்ற தொல் எச்சங்கள் கவனிக்கப்படவே இல்லை. துறவிகள் இருந்த குகைகள் பற்றிய முழுமையான பட்டியல்கூட நம்மிடம் இல்லை. இந்தியத் தொல்லியல் ஆராய்ச்சியில் கல்வெட்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் பாரம்பரியம் ஆங்கில ஆய்வாளர்களால் தொடங்கப்பட்டது.
தொன்மைச் சுவரோவியங்கள் பற்றிய அவதானிப்பு, பாஸ்கரனிடம் கூடியிருக்கிறது. நம் தொன்மை ஓவியங்கள் பெரும்பான்மையும் அழிந்துவிட்டன. இயற்கை மற்றும் குடவரைக் கோயில்கள், கோயில் சுவர்களில் இடம்பெற்றிருந்த ஓவியங்கள் பலவற்றையும் இழந்திருக்கிறோம். திருப்பணி செய்யப்படும் கோயில்களில் பெரும்பணி கல்வெட்டுகளை மாற்றி அமைப்பதும், சுவர் ஓவியங்களை அழிப்பதுமாகப் பல காலங்களில் இருந்து வந்துள்ளன.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகில் இருக்கும் ஆர்மா மலைக் குகையில் இருக்கும் ஓவியங்கள், கல்வெட்டுகள், செங்கல் கோயில் ஒன்றையும் ஆய்வாளர் பாஸ்கரன் ஆராய்ந்து இருக்கிறார் 1970-ல். கிராமவாசிகள் இந்த மலையை ‘அரவான் மலை’ என்கிறார்கள். அரவன் அல்லது அருகன் என்ற சொல் தீர்த்தங்கரரைக் குறிக்கும். ஒரு ஓவியத்தின் பரப்பு 7 மீட்டர் நீளம், அகலம் 3.5 மீட்டர். அது ஒரு தாமரைக் குளத்தின் சித்திரம். அதில் வாத்துகள், பறவைகள், தாமரை இலைகள், மொட்டுகள் இடம்பெற்றுள்ளன. ஓர் ஓவியத்தில் ஆடு ஒன்றின் மேல் சவாரி செய்யும் அக்னி. இன்னொரு ஓவியம் எமன். சித்தன்னவாசல் ஓவிய முறை. இதன் காலம் 10 அல்லது 11-ம் நூற்றாண்டு என்று கணிக்கிறார் ஆய்வாளர். பல்லவர்கள், ராஷ்ட்ர கூடர்கள், சோழர்கள் தமக்குள் அதிகாரப் போட்டி நடத்திக் கொண்டிருந்த காலத்தில் எல்லோரா, ஆர்மா மலை, சித்தன்னவாசல் ஓவியங்கள், ஓவியங்களில் இருக்கும் கலாச்சாரப் பிணைப்பைக் காட்டுகின்றன. அதோடு, ‘கிடக்கட்டும் பதவிச் சண்டை, நாம் ஸ்தாபிப்போம் கலை ஒற்றுமையை!’ என்கின்றன ஓவியங்கள்.
தியடோர் பாஸ்கரனுடைய எழுத்து பாணியின் முக்கியமான அம்சம், எழுதத் தலைப்படும் விஷயத்தை தனக்கு முன் எழுதிய ஆய்வாளர்களை மறக்காமல் நினைவுபடுத்துவது. வாசகருக்கு இதுபெரும் பயன் தருவது. அசோகன் பற்றி எழுதிய கட்டுரையில், ‘சார்லஸ் அலன்’ எழுதிய (2014) ‘அசோகா’ என்ற நூலைக் குறிப்பிட்டுச் சிலாகிக்கிறார். உண்மைதான். அந்த நூல் இப்போது தருமி என்பவரால் மொழியாக்கம் செய்யப்பட்டு ‘எதிர் வெளியீடு’ ஆக வெளிவந்துள்ளது. நிறைய அவசியமான படங்கள். இந்த நூலை வாசிக்க பாஸ்கரன் குறிப்பே எனக்கு உதவியது.
புத்தம் பற்றிப் பேசும் பாஸ்கரன், ஒரு முக்கிய கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். “தமிழ்நாடு வரலாற்றில் புத்த சமயப் பரிமாணம் பற்றிய ஆய்வில், இன்னும் சரியான கவனம் செலுத்தப்படுவதில்லை. காஞ்சிபுரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்த விகாரங்கள் இருந்தன என்று யுவான் சுவாங் பதிவு செய்துள்ளார். அவை என்ன ஆயின? இதுகுறித்து இந்திய தொல்லியல்துறை அகழ்வாய்வு ஏன் நடத்தவில்லை? பாலி மொழி ஆய்வும் குறைவு. கொங்கு நாட்டில் ஓடிக் காவிரியுடன் கலக்கும் நதியின் பெயர் அமராவதி.
‘மரணமற்றோர் இருக்குமிடம்’என்று பொருள்படும் இந்தப் பாலி மொழிச் சொல், புத்த சொர்க்கத்தைக் குறிக்கிறது. இப்படிப் பல துறைகளில் பல தடயங்கள் குறித்தும், இந்தத் தளத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதில்லை.
சிவன் கோவில் வளாகத்தில் தன் அருமை நாய்க்கு இடம் அளித்து, நடுகல் அமைத்த ஒரு தளபதி பற்றிய குறிப்பு, நெஞ்சை நனைக்கும் செய்திக் கட்டுரை. ராஷ்டிர கூட மன்னன் கன்னரதேவன் கி.பி.949-ல் சோழனை வென்றான். படை நடத்திய தளபதிக்கு மன்னன், தன் அருமை நாயைப் பரிசளித்தான். தளபதி அதை அன்பு மீதூற வளர்த்தான். ஒரு வேட்டையி ன்போது, நாய் கொல்லப்பட்டது. அதன் பெயர் காளி. அதன் கல்லுக்கு வழிபாடு இயற்ற ஒரு பூசாரியை நியமித்து, பூஜை செலவுக்கு ஒரு வயலையும் தானமாக அளித்தான். நாய் என்ற சொல், இழிவுபடுத்தப்பட்டச் சூழல் நமது. காக்கை குருவியைத் தன் சாதி எனப் பேசிய பாரதியையும் நாம் கொண்டாடி மகிழ்வோம்.
ராஜராஜனின் பெரிய கோவிலைப் பற்றிய கட்டுரை அறியத் தக்கது. அந்தச் சிவன் கோயிலில் புத்தர் சிற்பம் இடம்பெற்றுள்ளது பற்றிய கட்டுரை இது. பெரிய கோயிலின் இரண்டு இடங்களில் பவுத்தச் சிற்பங்கள். கேரளாந்தகன் வாசலில் நுழைந்ததும் இடப்புறம் நான்கு புடைப்புச் சிற்பங்கள்.
ஒரு மரத்தடியில் புத்தர் தியான நிலையில் அமர்ந்துள்ளார். மரத்தைப் பற்றியபடி ஒரு மனிதன். ஆண்களும் பெண்களும் சாக்கிய முனியிடம் எதையோ இரஞ்சுகிறார்கள். ஒருவன் தன் தலையில் லிங்கம் ஒன்றைச் சுமந்து கொண்டிருக்கிறான். கீழே மக்கள் ஓடுகிறார்கள்.
விமானத்தின் தெற்கில் மூன்று சிற்பங்கள். முதல் சிற்பம், புத்தர் மரத்தடியில் அமர்ந்துள்ளார். இருபுறமும் இரு மன்னர்கள். மேலே கந்தர்வர்கள். அவரை மண்டியிட்டுத் தொழுகிறார்கள். மூன்றாவது சிற்பத்தில், மேல் இருந்து ஒரு ஆலயம் வருகிறது. ஒரு கந்தர்வர் தன் தலையில் லிங்கத்தைச் சுமந்து வருகிறார். இந்தச் சிற்பங்களால் சொல்லப்படும் செய்தி என்னவென்றால், ஒரு புத்த விகாரம் இருந்த இடத்தில்தான் இன்று பெரிய கோயில் இருக்கிறது என்பதுதான். ஆய்வாளர் சுரேஷ் பிள்ளையின் குறிப்பு இது. இது பற்றி மேலும்ஆராய வேண்டும் என்பது சுரேஷ்பிள்ளை, பாஸ்கரன் ஆகியோரின் கருத்தாக இருக்கிறது.
சு.தியடோர் பாஸ்கரன் எழுதிய மதிப்புமிகு வரலாற்று நூல் நமக்கு சொல்லும் சேதி முக்கியமானது.
தமிழக வரலாறு கல்வெட்டுகள் துணைகொண்டு மட்டும் முழுமை ஆகாது. தொல் சான்றுகள், சுவர் ஓவியங்கள், சிற்பங்கள், ஊர்ப் பெயர்கள், கள ஆய்வு, சமஸ்கிருதம், சிங்களம், பாலி மொழிகளில் இடம்பெறும் தமிழகம் பற்றிய குறிப்புகள், சமய நடுநிலை, ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன் போன்ற மொழிகளில் எழுதப் பெற்ற தமிழக ஆய்வுகளைக் கற்றல், பழைய குடும்ப வரலாறுகள், வாய்மொழி வரலாறுகள், பாதிரிமார்களின் கடிதக் குறிப்புகள், துவிபாஷிகள் எழுதிய குறிப்புகள், இன்னும் பலப் பல சான்றுகள் கொண்டே புதிய வரலாறு எழுதப்பட வேண்டும்.
எத்தனைப் பல்கலைக்கழகங்கள்? எத்தனைக் கல்லூரிகள்? எத்தனை வரலாற்றுத் துறைகள்? எத்தனைப் பேராசிரியர்கள்? இவர்கள் அத்தனை பேரும் முயற்சித்தால் முடியாததா, என்ன? முன் தோன்றி மூத்த குடி அல்லவோ நாம்?
(நன்றி: தி இந்து)