சரவணன் சந்திரனின் மொழி மீது அவரது முதல் நாவலிலிருந்தே அதிருப்தி இருந்தது. ‘ஐந்து முதலைகளின் கதை’ நாவலுக்காக வாசகசாலை நடத்திய கூட்டத்தில் அவரது மொழி பற்றிய விவாதமும் எழுந்தது. ‘அஜ்வா’ நாவல் குறித்து பேசுவதற்காக அகரமுதல்வன் அழைத்த போது இதைக் குறிப்பிட்டு தயங்கினேன். இதையே கூட்டத்தில் வந்து பேசும்படியும் அதுவும் விமர்சனம் தான் என்றார் அகரமுதல்வன். ‘அஜ்வா’ நாவலை வாசித்தபின்பும் ஏற்கனவே அவரது மொழி மீதிருந்த அதிருப்தியில் எந்த மாற்றமும் இல்லை. மற்றவர்கள் நாவல் பற்றி பேசும்போது நாம் மொழியினை விரிவாக விவாதிக்க வேண்டும் என்பது எனது எண்ணமாக இருந்தது.
இலக்கியத்தில் மொழியின் பங்கு பிரதானமானது. அது செறிவாக இருக்க வேண்டுமென்பது எனது நிலைப்பாடு. இசைக்கு ஸ்ருதி தாளத்தைப் போல இலக்கியத்திற்கு மொழி! ஸ்ருதி தாளம் பிசகி பாடும் பாடலில் வேறு எதை நாம் விமர்சித்துவிட முடியும்? இதையெல்லாம் சரி செய்தால் மட்டுமே நாவலின் பாடுபொருளை உள்வாங்கிக்கொள்ள முடியும்.
பிப்ரவரி 26, 2017 அன்று டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெற்ற சரவணன் சந்திரனின் ‘அஜ்வா’ நாவலுக்கான விமர்சனக்கூட்டத்தில் பேசியதன் கட்டுரை வடிவம் இது.
O
நடராஜர் சிலையை முதன் முதலில் வடிவமைத்த முன்னோர்களே கலைஞர்கள் என்றும் அதைப் பிரதி எடுத்து தன்னை ‘கலைஞன்’ என புளகாங்கிதம் அடைபவர்களைப் போலிகள் என்றும் தஞ்சை ப்ரகாஷ் தனது ‘கள்ளம்’ நாவலில் சாடுவார். இதே விஷயம் அந்நாவல் முழுவதும் விவாதத்திற்குள்ளாகும். இதைக் குறித்து நண்பருடன் உரையாடுகையில் ‘வரையப்படுபவைகளெல்லாம் ஓவியம் அல்ல. அவை வெறும் கிராஃப்ட். ஓவியமாக மாற அவை கலையாகவேண்டும்’ என ஓவியரொருவர் குறிப்பிட்டதாகச் சொன்னார். இதை எல்லா கலைகளுக்கும் பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம். இலக்கியத்திற்கும்! அதற்கு முன்பாக ஒரு பிரதி இலக்கியமாகின்றதா என்றொரு கேள்வி எழுகிறது. அதற்கான விடை கிடைத்த பின்பே கலையாவது குறித்து யோசிக்க வேண்டும்.
சரவணன் சந்திரனின் ‘அஜ்வா’ நாவல் குறித்த கட்டுரைகளில் ‘அஜ்வா இடைநிலை நாவல்களில் ஒரு மைல்கல்’, ‘வெகுஜன எழுத்தில் நிகழ்ந்த அற்புதம்’ போன்ற வாக்கியங்கள் இடம்பெறுகின்றன. சரவணன் சந்திரனின் முதல் நாவலிலிருந்தே இந்த வெகுஜன எழுத்து எனும் லேபிள் ஒட்டப்படுகிறது. நம் தமிழ் இலக்கியச் சூழலில் எந்த படைப்புகளும் எவ்வித லேபிளோடும் வருவதில்லை. அவை வாசகர்களால், விமர்சகர்களால், சக படைப்பாளிகளால் வகைப்படுத்தப்படுன்றன. இந்த நாவலுக்காக எழுதப்பட்டிருக்கும் அணிந்துரையிலும் கூட சரவணன் சந்திரனை ‘தமிழகத்தின் சேத்தன் பகத் – சேத்தன் பகத்தின் தமிழ்ப் பதிப்பு’ என்றே குறிப்பிடுகிறார் அப்பணசாமி. சரவணன் சந்திரனின் படைப்புகளைப் பாராட்டி எழுதும் கட்டுரைகளிலும் கூட ‘வெகுஜன எழுத்து, இடைநிலை நாவல், சேத்தன் பகத்’ போன்ற வார்த்தைகளை அந்நாவலுக்கான மறைமுகமான விமர்சனமாகவே பார்க்கிறேன். அதற்குள்ளாக அப்படியொரு உட்பொருள் ஒளிந்திருக்கிறது.
பின் குறிப்பிடப்பட்டிருக்கும் இக்காரணிகளெல்லாம் வெகுஜன எழுத்துகளில் காணப்படும் பொதுவான அம்சம்:
தட்டையான மொழி.
நாவல்களில் அல்லது கதைகளில் இடம்பெறும் சம்பவங்களும் கதாப்பாத்திரத்தின் குணாதிசயங்களும் அனுபவமாக மாறாமல் வெறும் சம்பவங்களாக மட்டுமே எஞ்சியிருத்தல்.
லாஜிக் இல்லாமலிருத்தல். லாஜிக் தவறும் போதே அப்பிரதிக்கான நம்பகத்தன்மையினை வெகுவாக குறைத்துவிடும். அதுமட்டுமல்லாமல் சம்பவங்களை அதற்கான எவ்வித நியாயமும் இன்றி திடீரென முடித்து வைப்பதும், கதையின் போக்கினை திசை திருப்பும் படி சில விஷயங்களை வலிந்து திணிப்பதும், கதாப்பத்திரங்கள் தமது இயல்புக்கு மாறாக நடந்துகொள்வதும் என நம்பகத்தன்மைக்கான காரணிகள் வலுவற்று இருத்தல்.
மென்னுணர்வைத் தூண்டும் படியான சம்பவங்களும் வாக்கியங்களும்.
சுயமுன்னேற்ற புத்தகம் போல ஆங்காங்கே தத்துவம் பேசுதல். நாவலில் கதாமாந்தர்கள் உரையாடிக்கொண்டிருக்கும் போதே ‘மரத்தின் கிளையிலிருந்து ஒரு இலை பழுத்து விழுகிறது. நாளாக ஆக அதே இடத்தில் வேறொரு இலை துளிர்விடுகிறது. இலைகள் பழுத்து விழுவதும் மீண்டும் அதே இடத்தில் வேறொரு இலை துளிர்விடுவதும் இயற்கை தானே? ஒன்றை இழந்து தானே இன்னொன்றைப் பெற வேண்டி இருக்கிறது. அது தானே வாழ்க்கை!’ என திடீரென எழுத்தாளர் உள்ளே புகுந்து சொற்பொழிவாற்றத் தொடங்கிவிடுவார். அப்படியான தத்துவங்களும் கூட சிந்தனைத் தளத்தில் எவ்வித மாற்றங்களையும் நிகழ்த்துவதாக அல்லாமல் வெறுமென அறிவுஜீவித்தனத்தை வெளிப்படுத்தும் அபத்த உளறல்களாகவே இருக்கும்.
வெகுஜன எழுத்து என வகைப்படுத்தப்படும் படைப்புகளிலும் இலக்கியத்திலும் பாடுபொருளோ, கதைக்களமோ பொதுவான அம்சமே. மர்ம நாவல்களெல்லாம் வெகுஜன எழுத்து எனும் போக்கு இருக்கிறது. மர்ம நாவல்களுக்கான களத்தினைக் கையாண்டும் மர்மத் தன்மையுடனும்கூட தீவிர இலக்கியப்பிரதிகள் படைக்கப்படுகின்றன. உம்பர்ட்டோ ஈக்கோவின் (Umberto Eco) ‘Name of the Rose’, ஓரான் பாமுக்கின் (Orhan Pamuk) ‘My Name is Red’ ஆகியவை மர்ம நாவல்களுக்கான தன்மையுடன் எழுதப்பட்ட அதி அற்புத இலக்கியப்பிரதிகள். நூரி பில்கே ஜெலான் (Nuri Bilge Ceylan) எனும் துருக்கிய இயக்குனரின் ‘Once upon a time in Anatolia’ எனும் திரைப்படம் குற்றவாளியுடன் அதிகாரிகள் பிணத்தை தேடிப் போகும் கதை. நூரி அதைக் காவியமாக்குகிறார். பாடுபொருளோ, கதைக்களமோ இதைத் தீர்மானிப்பதில்லை. அவை எவ்வாறு கையாளப்படுகிறது என்பதைப் பொறுத்து தான் முடிவிற்கு வர வேண்டும்.
இலக்கியத்தைப் பொறுத்தவரை இதில் மொழிக்கு பிரதான பங்குண்டு. திருகலான மொழியோ அல்லது கவித்துவமானதாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை; சொற்களின் தேர்வும், அதைக் பயன்படுத்தியிருக்கும் விதமும், வாக்கிய அமைப்பும் செறிவானதாகவும் குறைந்தபட்சமாக பேசுபொருளிலிருந்து விலகிச்செல்லாமலும் இருத்தல் வேண்டும். சரவணன் சந்திரனின் மொழியை விமர்சிக்கும் பொருட்டு இந்நாவலில் இடம்பெற்றிருக்கும் சில வரிகளை (சொற்களின் தவறான பிரயோகங்களால் நேரும் தவறுகளை சுட்டிக்காட்டுதற்காகவே) மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.
‘திசைகள் குறித்த அறிவு எனக்கு சுத்தமாக கிடையாது’ – நமது பேச்சு வழக்கில் சில சொற்களை சம்பந்தமில்லாமல் பயன்படுத்துவது வழக்கம். அது பொருள் தரவில்லையென்றாலும் நம்மால் அதனை விளங்கிக்கொள்ள முடியும். இது போன்ற வார்த்தைகளை உரையாடலில் பயன்படுத்துவதில் தவறில்லை. கதைசொல்லி இது போன்ற வார்த்தைகளைத் தவிர்ப்பதே சரியாக இருக்கும். இது போன்ற பொருளற்ற வார்த்தைகள் அடிக்கடி அவசியமின்றி உபயோகப்படுத்தப்படுகின்றன.
‘அவளது தொப்புளுடன் கூடிய சின்னத் தொப்பை பளிச்சென்று தெரிந்தது’ – வயிறென்றால் தொப்புள் இருக்கத் தானே செய்யும்? தொப்புள் இல்லாத வயிறு என்று வர்ணித்திருந்தால் கூட நியாயம் இருக்கிறது.
‘என்னுடைய அம்மா கொடூரமான வார்த்தைகளால் எல்லாம் அப்பாவை வறுத்தெடுத்திருக்கிறது’ – ‘துக்கம் தொண்டையை அடைத்தது’ என சாருவும் என் வயிற்றில் பாலை வார்த்தாய்’ என ஜெமோவும் இது குறித்து நிறையவே அலசிவிட்டார்கள்.
‘தன்னுடைய முதல் கொலையைச் செய்தார் அண்ணன்’ – தன்னுடைய எனும் சொல்லிலேயே முந்தையை வரியின் துணையோடு அதை யார் செய்தார் என விளங்கிக்கொள்ள முடிகிறது. அண்ணன் எனும் வார்த்தை இவ்வாக்கியத்தின் விகுதியில் அனாவசியமானது. இப்படி இருந்தது ‘அவனுக்கு’, அப்படிச் சொன்னாள் ‘அவள்’ என நிறைய வார்த்தைகள் வீணடிக்கப்பட்டிருக்கின்றன.
‘இதுவரை ஒருவரை கூட கைநீட்டி அடித்ததில்லை’ : ‘மற்ற செடியில் வேர் ஊன்றியதை நான் கண்ணால் பார்த்தேன்’ : ‘என் காதுக்குப் பக்கத்தில் யார் சத்தம் போட்டாலும் பிடிக்காது’ : ‘கலர் செய்யப்பட்ட முடியைத் தூக்கி கொண்டை போட்டிருந்தாள்’ – இது மாதிரியான வாக்கியங்களை வாசிக்க நேர்கையில் மனக்குரல் ஒன்று எதிர்வினை ஆற்றிக்கொண்டிருக்கிறது. கைநீட்டி அடித்ததில்லை என்றால் வேறு எதனாலோ அடித்திருக்கிறீர்கள், கண்ணால் பார்த்தேன் என்றால் எல்லோரும் கண்ணால் தான் பார்ப்போம், காதுக்கு பக்கத்தில் சத்தம் போட்டால் பிடிக்காது என்றால் வேறு எங்காவது சத்தம் போட்டால் பிடிக்குமா, முடியைத் தூக்கி தான் கொண்டை போட முடியுமென மனக்குரல் தொந்தரவு செய்கிறது.
‘ஒரு நாள் இரவில் கோயில் மேட்டு முக்கில் இருட்டில் வைத்துப் பார்த்தார்’ – இரவு இருட்டு மேடு முக்கு, இதெல்லாம் வாக்கியமாகுமா என்றே சந்தேகமிருக்கிறது.
‘ஒரு இலையை கட் செய்து ஒரு கம்பத்தில் கட்டி வைத்துவிட்டால் போதுமானது’ – தமிழ்ப்படுத்த சிரமான ஆங்கில வார்த்தைகளை அப்படியே பயன்படுத்துவது சரி. ஒரு இலையை கட் செய்து என்பதை ஒரு இலையை வெட்டி என எழுத முடியாதா? இந்நாவலில் மிக எளிதான தமிழ் வார்த்தைகள் கூட புறக்கணிப்பட்டிருக்கின்றன.
‘நான் அவள் சாவிற்குப் போக விரும்பவில்லை. எல்லோரும் அழைத்தும் போக விரும்பவில்லை. என் மடியில் தலை சாய்த்துப் படுத்துக்கொண்டு எனக்கு விளையாட்டாய் அவள் ஸ்வீட் ஊட்டி விட்ட காட்சியை மனதில் இருத்திக்கொண்டேன். அவள் செத்துப்போய்ப் படுத்துக்கொண்டிருந்த காட்சியைப் பதிவு செய்துகொள்ள விரும்பவில்லை’ – நாயகனின் நண்பர்களும் கூட அவனை அவளது இறப்பிற்கு அழைத்துச் செல்ல விரும்பவில்லை என்பதையும் பிணமாகக் கிடக்கும் காட்சியைத் தவிர்த்து ஸ்வீட் ஊட்டி விட்ட காட்சியை நினைத்துக்கொண்டிருக்கிறான் என்பதைத் தான் இப்படி எழுதுகிறார்.
‘ஹாஸ்டலில் சேர்த்துவிட்டு விட்டது’
‘அந்தப் பொருட்களைப் பயன்படுத்தவெல்லாம் மாட்டேன்’
‘அந்த விடுதியில் தான் அண்ணனைத் தூக்கிக்கொண்டு வந்து போட்டார்கள்’
‘எங்காவது செடிமறைவில் கொண்டுபோய்ப் போட்டுவிட்டு வந்துவிடுவேன்’
‘அந்தப் பையன்களை வெளியே வரவழைத்து அடித்துத் துவைத்தேன். அதிலிருந்து அவர்கள் என்னை விட்டுவிட்டனர்.’
‘மட்டன் சுக்கா பஞ்சு போல இருந்தது’
‘சந்தேகமே பட்டதில்லை’
‘டாகுமெண்டரி போட்டார்கள்’
‘பூட்ஸ் காலால் நாற்காலிக்கு கீழே இருந்த என்னுடைய காலில் இருந்த பெருவிரலை நசுக்கினான்’
‘விடுதியில் உள்ள சுவர்களையெல்லாம் பிடித்து கீழே தள்ளினான்’…
சரவணன் சந்திரனின் எழுத்துகளை பாராட்டி எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகளில் ‘சரளமான நடை’ என்று குறிப்பிடுகிறார்கள். நமக்கு அனுபவமாக மாறாததால் இலகுவாகக் கடந்து வேகமாக வாசிக்க முடிகிறது. அவ்வளவே! இது மாதிரியான வாக்கியங்கள் வாசிப்பைத் தொந்தரவு செய்தபடி இருக்கிறதே தவிர சரளமாக அல்ல.
நாவலில் ஒரு சில வார்த்தைகள் திரும்பத் திரும்ப பயன்படுத்தப்படுகின்றன. அவை அயர்ச்சியைத் தருகின்றன. போய், போட, போட்டு, போட்டேன், போட்டான் என பக்கத்திற்கு நான்கு வார்த்தைகள் வருகின்றன. போ எனும் வார்த்தையை மட்டும் எண்ணினால் குறைத்தது ஆயிரம் கிட்டும். ஒருமுறை, ஒருதடவை போன்ற வார்த்தைகளையும் இதோடு சேர்த்துக்கொள்ளவும். இதே போல, ‘அந்தக் கண்களில் பார்த்த அதே ஒளி’, ‘ஆட்டின் கண்களை இந்தக் கண்கள் நினைவூட்டியது’, ‘இந்தக் கண்களில் அந்தக் கண்களைக் கண்டேன்’ ஒரே மாதிரியான வர்ணனைகள்.
‘பண்ணுதல்’ எனும் வார்த்தை தமிழில் உண்டா எனும் கேள்வியின் முடிவில் அது பைபிள் மொழி என அறிந்து கொண்டேன். ‘உனக்கு சகாயம் பண்ணுவேன்’, ‘உன்னை அதிசயங்களைக் காணப் பண்ணுவேன்’ என பைபிளில் பயன்படுத்தப்படுகிறது. ‘செய்தல்’ என பொருள் தரும் வார்த்தைகளுக்கு நிகராக ‘பண்ணுதல்’ எனும் வார்த்தையையும் பேச்சு வழக்கில் புழங்குகிறோம். ஆங்கில வினைச்சொற்களை நாம் நேரடியாக தமிழில் உபயோகிக்க முடியாது. கட் செய்தான், டர்ன் பண்ணினான் என்றே பயன்படுத்த முடியும். ஆனால் தமிழ் சொற்கள் அப்படி இல்லை. வெட்டினான், திரும்பினான் என நேரடியாகவே உபயோகிக்கலாம். உரைநடை அல்லாமல் கதைசொல்லியின் குரலில், வர்ணனைகளில் இது போன்ற வார்த்தைகளைத் தவிர்க்க வேண்டுகிறேன்.
நாயகனின் பயமும் அதனால் போதைக்கு ஆளாவதும் அதிலிருந்து மீள நினைப்பதும் தான் ‘அஜ்வா’. ஒவ்வொரு அத்தியாயத்திலும் பயம் எனும் வார்த்தையும் போதை என்பதும் அடிக்கடி உபயோகப்படுத்தப்படுகின்றன. அவன் பயப்படுவதற்கான காரணங்கள் சொல்லப்படுகின்றன, பயமாக இருக்கிறது என அவனே சொல்லிக்கொள்கிறான். நாவலின் அடிநாதம் தனது நம்பகத்தன்மையை இழக்கையில் ஒவ்வொன்றும் அபத்தமாகின்றது.
ஒரு சம்பவத்தை உதாரணமாகக் காண்போம்: பயத்தைப் போக்கிக்கொள்வதற்காக ‘ரௌடித்தனம் பண்ணும்’ விஜி அண்ணனுடன் திரிகிறான். தனது இளம் வயதில். விஜி அண்ணன், சுந்தர்சிங் அண்ணன் இருவரும் இணைந்து மெடிக்கல் ஷாப் அண்ணனைக் கொலை செய்வதாகத் திட்டம். நாயகனும் உடனிருக்கிறான். ஆனால் கொலை செய்யப்போகிறார்கள் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. மது அருந்துகிறார்கள், பரோட்டா சாப்பிடுகிறார்கள். திடீரென எதிர்பாராதவிதமாக மெடிக்கல் ஷாப் அண்ணனின் கழுத்தை அறுத்து கொலை செய்கிறார்கள். இக்காட்சியை நாம் வெறுமனே கற்பனை செய்தாலே ஒருவிதமான பீதிக்குள் நம்மை புதைத்துக்கொள்ள முடியும். ஆனால் நாவலிலோ நாம் நினைப்பதை விட கீழான வர்ணனையிலேயே இச்சம்பவம் எழுதப்பட்டிருக்கிறது.
[பக். 22] திடீரென ‘அந்தப் பக்கம் எந்திரிச்சுப் போடா’ என்றார் சுந்தர் சிங் அண்ணன். மெடிக்கல் ஷாப் அண்ணன் முழு போதையில் தலையைத் தொங்கப் போட்டு எதையோ புலம்பிக்கொண்டிருந்தார். விஜி அண்ணன் கையில் நீளமான அரிவாள் இருந்தது. அது வெள்ளைத் துணியால் சுற்றப்பட்டிருந்தது. அதை அண்ணன் அருகில் இருந்த மரத்தில் கொத்தினார். அந்தத் துணி அறுபட்டு அரிவாளின் கூர்மையான பக்கம் வெள்ளியை உருக்கியது போலத் தெரிந்தது. நான் புரியாமல் அங்கு நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தபோதுதான் விஜி அண்ணன் தள்ளாடி நடந்து போய்த் தலையைக் கீழே தொங்கப் போட்டுக்கொண்டிருந்த அவரது பின்பக்கமாய் போய் நின்றுகொண்டு அந்த அண்ணனின் கழுத்தை அறுத்தார். சுந்தர்சிங் அண்ணன் அவரது கால்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். ஐந்து நிமிடத்தில் தலையை அறுத்துக் கீழே போட்டார். கோழி கழுத்தை அறுக்கும்போதே எனக்குப் பயம் வந்துவிடும். அம்மா நிலத்தின் ஒரு ஓரத்தில் என் பார்வை படாதபடிதான் போய் அறுத்துக்கொண்டு வரும். எனக்குத் தீபாவளி பண்டிகை என்றால் குஷி. ஏனெனில் அன்றைக்கு மட்டும்தான் என்னுடைய அப்பா இரவு இரண்டரை மணி இருக்கும்போதே என்னை எழுப்பி கறிக்கடைக்கு அழைத்துப் போவார். ஒவ்வொரு வருடமும் இது தவறாமல் நடக்கும் சடங்கு. அந்த நேரத்திலேயே கறிக்கடையில் கூட்டம் இருக்கும். “என்ன சின்ன மொதலாளி பட்டாசெல்லாம் வாங்கிட்டீங்களா. தைக்கக் குடுத்தத வாங்கிட்டீங்களா. உங்க அப்பாரு கடைசி நேரத்துலதான எதையும் செய்வார்” என்பார் கறிக்கடையில் இருக்கும் மாமா. அவர் என்னுடைய பக்கத்து வீட்டுக்கார்தான். அவர் ஆட்டை அறுக்கும்போது சிரித்துக்கொண்டே “இப்படி இந்தப் பக்கமா தைரியமா வந்து நில்லுங்க முதலாளி” என்பார் என்னைப் பார்த்து. நான் அப்பாவின் இடுப்பைப் பிடித்துக்கொண்டு ஒடுங்கி நிற்பேன். அந்தத் தலையை அறுத்து ரத்தத்தை வடிய வைப்பார்கள். அதன் காரணமாகவே நான் என் வாழ்நாளில் இரத்தப் பொரியல் மட்டும் சாப்பிட்டதே இல்லை. அந்த ஆட்டின் செத்த தலையில் கண்கள் மட்டும் பரிதாபமாக கெஞ்சுவது மாதிரி இருக்கும். அப்படித் தான் இந்த அண்ணனின் தலையும் கிடந்தது. அண்ணனின் தலையில் இருந்த வாயில் பாதி தின்ற பரோட்டா தொங்கிக்கொண்டிருந்தது. உள்ளங்காலில் இருந்து உச்சி வரை ஒரு நடுக்கம் வந்து எனக்குள் ஒட்டிக்கொண்டது. பிணம் பற்றிய பயம் அப்போதிருந்துதான் கூடுதலாக என்னை வந்து ஒட்டிக்கொண்டது.
இதற்கு பின்பாக சுந்தர்சிங் அண்ணன் வெட்டிக்கொல்லப்படும் கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தை செய்தித்தாளில் காண்கிறான். வாயில் ஏதோ வெள்ளையாக இருக்கிறது. பரோட்டோவாக இருக்குமென நினைத்துக்கொள்கிறான். கூடவே ‘பாவம் அவர்களுக்குத் தெரியாது, சுந்தர்சிங் அண்ணனுக்கு பரோட்டோ பிடிக்காது’ எனவும் நினைத்துக்கொள்கிறான்.
நாவலில் இடம்பெறும் பகடிகள், சிந்தனைத் தெறிப்புகள், அறிவுரைகள், வர்ணனைகள், உரையாடல்கள் எல்லாம் தட்டையாகவே இருக்கின்றன. உதாரணமாக சில பகுதிகளைக் காண்போம்:
[பக். 38] சங்கீதா என ஒரு பெண் இருந்தாள். ரேடியோ ஒன்றில் ஜாக்கியாக இருந்தாள். அவளுக்கு அயர்லாந்தில் போய் செட்டிலாகிவிட வேண்டுமென்பது கனவு. அதற்கான தயாரிப்புகளிலும் இருந்தாள். இரவை முழுக்கக் கொண்டாடுவாள். என்னைக் கட்டிப் பிடித்தெல்லாம் ஆடுவாள். இருவருமே கோட்டைத் தாண்டியதில்லை. அப்படி ஆடும் சமயத்தில் கோடு என்றால் என்னவென்றே தெரியாது என்று கூடச் சொல்லலாம். எனக்கு விதம் விதமான சுவீட்களை வாங்கிக்கொண்டு வருவாள். நான் தின்று முடிக்க முடிக்க அவள் எடுத்துக் கொடுத்துக்கொண்டே இருப்பாள். அவளது குடும்பத்தைப் பற்றிப் பலதடவை கேட்டிருக்கிறேன். சொல்ல முடியாது என முகத்திற்கு நேராகவே சொல்லிவிட்டாள். அவளது நிகழ்ச்சிக்குப் பல ரசிகர்கள் இருக்கிறார்கள். அவளது குரலில் ஒரு துள்ளல் இருக்கும். நெஞ்சின் அடியாழத்திலிருந்து கசிந்துருகிப் பேசுவாள். அவளது குரலைக் கேட்டதாலேயே அவளைத் திருமணம் செய்துகொள்ளும் அளவிற்கு ரசிகர்கள் இருந்தார்கள். ஆனால் அந்தப் போதை அவளுக்குப் பிடிக்கவில்லை. அதுகுறித்த கதைகளை அசிரத்தையுடனேயே சொல்வாள். ஏன் உனக்குப் புகழ் பிடிக்கவில்லையா என்று ஒரு தடவை கேட்டேன். “முதல் தடவை கேட்கும்போது வானத்தில் பறக்கிற மாதிரி இருக்கும். அடுத்தடுத்து கேட்கும்போது என்ன பல் துலக்கினாயா என்கிற கேள்வியைப் போல சாதாரணமாக மாறிவிடும்” என மிக எளிமையாக என்னுடைய கேள்வியைக் கடந்து போனாள். இவளெல்லாம் புத்தருக்கு வாக்கப் பட்டுப் போயிருக்க வேண்டியவள் என்று நினைத்துக் கொண்டேன்.
நாயகன் தனது நண்பன் ஜார்ஜின் தங்கையைக் காதலிக்கிறான். அது ஜார்ஜுக்கும் தெரிந்துவிடுகிறது. ஒரு நாள் இருநூறு ரூபாயைத் திருடிவிட்டதாக நாயகன் வீட்டில் இருக்கும் போதே ஜார்ஜை ‘அடித்துத் துவைக்கிறார்’ நண்பனின் அப்பா. இது பெரும் பிரச்சனையாகி நண்பனின் அம்மா தற்கொலை செய்துகொள்கிறாள். அதன் பின்பு வெகு நாட்கள் கழித்து நண்பனின் வீட்டிற்குச் செல்கிறான். அப்போது இருவருக்குமிடையேயான சம்பாஷணை:
[பக்: 73] “ஜார்ஜ் உன்னிடம் பாவ மன்னிப்பு கேட்க எனக்கு அனுமதி உண்டா?” என்றேன்.
“இல்லை. ஆனால் கடவுளுக்கு முன் கேட்பதற்கு யாருடைய அனுமதியும் கேட்க வேண்டியதில்லை” என்றான் இறுக்கமான குரலில்.
“எந்தக் கடவுளுக்கு முன்” என்றேன். அவன் வீட்டினுள் எழுந்து போய் அவனுடைய அம்மாவின் புகைப்படத்தை எடுத்து வந்தான். நான் அந்தப் போதையிலும் அவன் குறிப்பால் உணர்த்தியத்தைப் புரிந்துகொண்டேன். நான் மண்டியிட்டு வணங்கினேன். தரையில் முகம் பொதித்து அழுதேன். என் முதுகிற்கு மேலிருந்து சொன்னான்.
“நீதான் அந்தப் பணத்தை எடுத்தது என்று எனக்கும் தெரியும். என் அம்மாவிற்கும் தெரியும். அந்தப் பையனே செய்திருந்தாலும் கூட விருந்தினர்கள் மீது பழியைப் போட்டால் பாவம் என்று என் அம்மா சொன்னார். இந்தக் கட்டத்திலும் உன்னை இதன் காரணமாக ஒதுக்கி வைத்துவிடக் கூடாது என்று சொன்னார். அன்பைத் தேடி அலையும் அவனுக்குப் புகலிடம் கொடுக்க வேண்டும் என்று சொன்னார் என்னுடைய அம்மா. என்னுடைய அம்மா கடைசியாக என்னிடம் உன்னைப் பற்றித்தான் பேசினார்கள். அந்த வார்த்தைகளை மட்டுமே கடைசியாய் என்னிடம் கொடுத்துவிட்டுப் போனார்கள். என் அம்மாவினுடைய வார்த்தைகளை நான் நிறைவேற்ற விரும்புகிறேன். நீ இப்போது மண்டியிட்ட இந்தக் கணத்திலிருந்து நீ விருந்தினன் கிடையாது. வீட்டின் உறுப்பினர். உனக்கு ஒரு தங்கையும் இருக்கிறாள்” என்றான்.
நம்ப முடியாத விஷயங்கள் நாவலில் நிகழும் போது அதை சரி செய்வதற்காக சில யுக்திகளைப் படைப்பாளி கையாள வேண்டிவரும். அதுவும் சரியாக வராத போது அப்பட்டமாக தெரிந்துவிடும். சணல் வாவச்சன் டெல்லியில் ஏஜெண்டாக வேலை பார்க்கிறான். பெண்களின் மார்பக வகைகளை எண்ணிக்கொண்டிருப்பது தான் அவனது வேலை. பெண்களை வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக வண்டி ஏற்றி விடுகிறவன். அவன் நாயகனிடம் சொல்கிறான்:
[பக்: 75] “நான் பார்க்காத முலை வகைகளே இல்லை. தடமுலை, பனைமுலை என உங்களோட சங்க இலக்கியங்களில் எல்லாம் சொல்வார்களே” என்றான் சணல் வாவச்சன். தமிழ்நாட்டில் இருக்கிற எனக்கே இந்த வகை தொகையெல்லாம் தெரியாது. அவனுக்கெப்படி சங்க இலக்கியம் தெரிந்தது? ஒரு விஷயத்தில் ஆர்வம் கொண்டு தேடினால் கிடைக்காதது என்று எதுவும் இல்லை. அதனால் கிடைத்திருக்கும். விட்டு விடுங்கள்.
சங்க இலக்கியம் படித்ததாக ஒரு ஏஜென்ட் சொல்லும் போது வாசகனுக்கு இப்படியொரு கேள்வி தோன்றும் என யூகித்தது சரி தான். அதற்கான விளக்கம் போதாமையுடன் இருக்கின்றது.
[பக்: 94] தனுஷ் ரசிகரா நீ? என்றேன். “ஆமாம் சார். ஒரு தடவை பேட்டியில் எனக்கு உயரம் என்றால் பயம் என்று வெளிப்படையாகச் சொன்னார். அது எனக்குப் பிடித்திருந்தது. இவ்வளவு பெரிய ஆளுக்கே உயரம் பற்றிய பயம் இருக்கிறது. எனக்கும் உயரம் என்றால் பயம். அதனால ஒண்ணுக்குள் ஒண்ணாயிட்டோம் சார்” என்றான். எந்தெந்த மாதிரியான புள்ளிகள் எல்லாம் ஒரு மனிதனை நோக்கி இன்னொரு மனிதனை ஈர்க்கிறது பாருங்கள். அந்தப் பையனால் நிச்சயம் பெரிய இடத்திற்கு வரவே முடியாது. இந்த உலகத்தின் பொதுக் குணமான பயம் வந்து அவனை ஒட்டிக்கொண்டுவிட்டது. அவனுக்கு மூக்கணாங்கயிறு போடப்பட்டுவிட்டது. இனி அவன் இதிலேயே உழுது இதிலேயே புதைய வேண்டும். இன்னொரு இளைஞனைப் பார்த்தேன். அவன் கண்களில் ஒளியிருந்தது. கோயில் வாசலில் பார்த்த அந்தப் பாட்டியின் கண்களில் இருந்த அதே ஒளி. எனக்கு அந்தப் பாட்டியிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டும் போல் இருந்தது. அந்தப் பையன்களை அனுப்பிவிட்டு, அந்தப் பாட்டியிடம் போனேன். காலில் விழுந்து வணங்கினேன். என்ன எதுவென்று புரியாமல் திகைத்துப் போய்ப் பார்த்தது. கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு நல்லா இருப்பா என்று வாழ்த்தியது. இடுப்பிற்குள் முடிந்து வைத்திருந்த பையிலிருந்து ஒரு பத்து ரூபாயை எடுத்து என் கையில் திணித்தது. நான் வேண்டாம் என்று மறுக்காமல் அதை வாங்கிக் கொண்டேன். பார்த்தசாரதி கோவிலுக்குள் போக வேண்டிய தேவை எனக்கு ஏற்படவில்லை.
விஜி அண்ணன் ரௌடியாகத் திரிந்து கொண்டும் அனாசியமாக சில பல கொலைகளைப் புரிந்து கொண்டும் வாழும் ஜீவன். திடீரென சில காரணங்களால் பயப்பட ஆரம்பிக்கிறான். அதற்கான எந்த நியாயமும் நாவலில் இல்லை. இதே போல நம்பவே முடியாத பல சம்பவங்கள் நாவலில் இடம்பெறுகின்றன. மென்னுணர்வைத் தூண்டும்படியான சம்பவங்களும். கோவிலருகே பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் பாட்டியிடம் ஆசிர்வாதம் வாங்க நினைப்பதும், பாட்டி தனது முந்தானையிலிருந்து பத்து ருபாய் தருவதும், பின்பு கோவிலுக்கே செல்ல வேண்டிய தேவை ஏற்படவில்லை என வசனம் பேசுவதும் தேய்வழக்கான ஒன்று. டெய்சியை இணங்க வைக்கும் முயற்சியில் நீ எனது அம்மா போல இருக்கிறாய் அத்தை போல இருக்கிறாய் என்பதெல்லாம் பழைய சினிமா வசனங்கள். ‘வாழ்க்கை புனைவை விடவும் விசித்தரமானது’ தான். அதற்கான நம்பகத்தன்மை இல்லையெனில் போலியாகவே தோன்றும்.
சரவணன் சந்திரனின் இந்த நாவலில் மட்டுமல்லாமல் சமகாலத்தில் எழுதிக்கொண்டிருக்கும் பலரிடமும் இந்த அம்சம் காணப்படுகிறது. நிச்சயமாக இது ஆரோக்கியமான போக்கல்ல. குறைகளைச் சுட்டிக் காட்டி ஏன் என வினவினால் ‘நீ அவரோடு ஒப்பிட்டுப் பார்க்கிறாய். உலக சினிமாவைக் கணக்கில் எடுத்துக்கொண்டு வணிக சினிமாவை விமர்சிக்கிறாய்’ என்பார்கள். பொதுவாக எந்தப் படைப்பையும் எந்த அளவுகோலாடும் அணுகுவதும் வேறொன்றோடு ஒப்பிட்டுப் பார்ப்பதும் (ஒரு படைப்பாளியின் இரண்டு படைப்புகளை ஒப்பிடுவதே அபத்தம்) அபத்தமாகும். அதை ஒருபோதும் கடைபிடிப்பதில்லை. அதைக் கூட பொறுத்துக்கொள்ளலாம், ‘நான் மொழியைக் கடினமாக்கி வாசகர்களைக் கஷ்டப்படுத்த விரும்பவில்லை, வெகுஜனங்களையும் என் எழுத்து சேர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் எளிமையான மொழியைக் கையாள்கிறேன்’ என்று சொல்வதைத் தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தனது இயலாமையை மறைக்க வேறொருவரின் மீது பழிபோடும் செயல் இது. புரியாத மொழியில் எழுதவேண்டுமென்றில்லை, எழுதுவதை சரியாகவும் செறிவாகவும் எழுதுங்கள் என்பதே எளிமையான அடிப்படையான வேண்டுகோள். வாசகனை மட்டம் தட்டி தன்னை உயர்வாகக் காட்டிக்கொள்ளும் இத்தகையவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி தான் என்னிடம் இருக்கின்றது: முடிந்தால் ஒரே ஒரு அத்தியாயம் அல்லது ஒரே ஒரு சிறுகதை இலக்கியத்தரத்தில் எழுதிவிட்டு மக்களுக்காக சேவை புரியுங்கள். குறைந்தபட்சமாக ‘எனக்குத் தெரியும், ஆனால் மக்களுக்காகத் தான்’ என்றாவது சொல்லாமலிருங்கள்.
(நன்றி: சாபக்காடு)