பன்னிரெண்டு அத்தியாங்களில், விளிம்புநிலை மக்களை மையப்படுத்தி எழுதப்பட்ட ‘சப்தங்கள்’ என்னும் குறுநாவலும், ‘மூணுசீட்டு விளையாட்டுக்காரன் மகள்’ என்னும் நகைச்சுவையான குறுநாவலும் இணைந்த நூலே ‘சப்தங்கள்’ ஆகும்.
“ஒரே உலகத்தின் இருவேறு தோற்றங்கள் இந்தக் குறுநாவல்கள். இது ஒரு விளிம்புநிலை உலகம். ‘சப்தங்க’ளில் இந்த உலகம் இருண்டது; அச்சுறுத்துவது. காமத்தின் கவிச்சையில் (மணத்தில்) புரள்வது. அதன் மனிதர்கள் வேசிகள், அநாதைகள், பிச்சைக்காரர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள். ‘மூணுசீட்டு விளையாட்டுக்காரன் மக’ளில் அதே போன்ற மனிதர்கள் இடம்பெற்றாலும் இந்த உலகம் ஒளிமயமானது. நகைச்சுவை ததும்புவது” (பின் அட்டை) என்ற சுகுமாரனின் கூற்றே இந்நூல் பற்றிய விரிவான அறிமுகத்தைக் கொடுத்துச் செல்கிறது.
‘பைத்தியம்’ என்றும் ‘கொலைகாரன்’ என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும், இருபத்தொன்பது வயதுகாரனான இராணுவ வீரன் தன்னுடைய வாழ்க்கைக் கதையை, காதலை, வலியைப் பஷீரிடம் கூறுவதாக இந்நாவல் அமைந்துள்ளது. பஷீரின் கேள்விகளுக்கு இராணுவ வீரன் பதில் அளிப்பதும், இராணுவ வீரனது சந்தேகங்களுக்குப் பஷீர் பதில் அளிப்பதுமாக உரையாடல் வடிவில் அமைந்துள்ள குறுநாவல் இது.
சாலையோரத்தில், அநாதையாக வீசியெறியப்பட்ட குழந்தையை முதிய மனிதர் ஒருவர் எடுத்து வளர்க்கிறார். தாய், தந்தை முகமறியா அந்தக் குழந்தை தனது வளர்ப்புத் தந்தையின் சாதியையும், மதத்தையும் தன்னுடையதாக ஏற்று வளர்கிறது. சரியான அன்போ, வழிகாட்டுதலோ கிடைக்காத அக்குழந்தை அன்புக்காக ஏங்குகிறது. இவ்வாறு தன்னைப் பற்றிய அறிமுகத்தைக் கூறிய இராணுவ வீரன், குறிப்பிட்ட வயதில் இராணுவத்தில் சென்று வேலையில் சேர்வதும், தொடர்ந்து தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்வுகளையும் இங்கே கூறிச்செல்கிறான்.
தான் சந்தித்த மனித வாழ்க்கையின் பல்வேறு நிலைகளை ஒருசேர இங்கே வெளிப்படுத்துகிறான் இராணுவ வீரன். எந்தக் குறிக்கோளும் இல்லாமல், யாராலும் மதிக்கப்படாமல், தெருவோரங்களைத் தங்கள் சொந்தமாகக் கொண்ட பண்புள்ள பிச்சைக்கார மனிதர்கள், அவர்களுடைய அந்தரங்க வாழ்க்கையைக் கண்டு, தங்களது உடல் இச்சைகளைத் தீர்க்கும் வெளிமனிதர்கள், ஒருவேளை உணவிற்கு வழியின்றி விபச்சார வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்த மனிதர்கள், ஆடம்பர வாழ்க்கைக்காக ஆண் வேசிகளாக மாறிய மனிதர்கள், அநாதையாக்கப்பட்டவர்கள் இவர்களே இக்கதையின் மாந்தர்கள். எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வாக அமைவது மரணமே என்று நினைக்கும் மனிதனுக்கு அதுவல்ல தீர்வு என்று எடுத்துக் கூறும் ஒரு நண்பனாகவும் பஷீரை இந்நாவலில் பார்க்க முடிகிறது.
“கொலை பாதகங்களைப் பற்றி உங்களுடைய கருத்தென்ன?” என்று பஷீரைக் கேள்விகள் கேட்கத் தொடங்கும் அந்த இராணுவ வீரன், தானும் ஒரு ‘கொலைகாரன்’ என்றும் எதற்காக, யாருக்காக இந்தக் கொலைகள் என்றும் கூறுகிறான். “நானும் கொன்றேன். சில அசிங்கப் பிறவிகள் இந்த நாட்டையாள்வதற்காக – நான் சொல்லவருவது, உலகின் இரத்த வெறிபிடித்த தலைவர்களைப் பற்றித்தான். போர்க்களத்தில் இவர்கள் யாரும் இருப்பதில்லையல்லவா? இவர்களுடைய மனைவி மக்களும் இறக்கமாட்டார்கள். ஆகவே, இது மக்களின் யுத்தம்”. தன்னுடைய சொந்த நாட்டைக் காப்பாற்றுவதற்காக இரத்தத்தையும், வாழ்க்கையையும் அர்ப்பணிக்கும் ஒவ்வொரு இராணுவ வீரனின் கேள்வியும் இதுதான். இந்தக் கொலைகள் எதற்காக? பிற நாட்டினரிடமிருந்து சொந்த நாட்டைக் காப்பாற்றி, சொந்த நாட்டினரிடம் கொடுக்கும்போதும் அவர்கள் அந்நாட்டை மீண்டும் பிறநாட்டினரிடம் விற்பதிலேயே முனைப்பாக இருக்கிறார்கள். இது இன்றைய அரசியல்வாதிகளின் நிலை.
“பெண்கள் ஏன் விபச்சாரியாகிறார்கள்” என்ற கேள்விக்கு “ஆண்களிருப்பதாலும் இருக்கலாம்” என்று பதில் கூறும் பஷீர், ஒழுக்கவிதி என்பது பெண்களுக்கு மட்டும் உடைதயன்று; ஆண்களுக்கும் உடையது என்று கூறுகிறார். தவறுகளுக்குப் பெண்களை மட்டுமே குறைகூறும் இன்றைய சமூகத்திடமிருந்து வேறுபட்டு நடுநிலையாக நியாயங்களை அலசி ஆராயும் பஷீரை இங்குக் காணமுடிகிறது.
“மூணுசீட்டு விளையாட்டுக்காரன் மகள்” என்னும் நாவலில் ஒத்தைக் (ஒற்றை) கண்ணன் பாக்கர், பாக்கெட் அடிக்கும் முத்தபா, ஆனைவாரி ராமன்நாயர், பொன்குருசு தோமா, ஸைனபா ஆகியோர் முக்கிய கதைமாந்தர்கள் ஆவர். தன்னையே மிகச் சிறந்த அறிவாளியாகவும், பணக்காரனாகவும் நினைத்துக் கொள்ளும் ஒத்தைக் கண்ணன் பாக்கர், அறிவே இல்லாத மடையனாகக் கருதப்படும் முத்தபாவிடம் எவ்வாறு தோற்றுப்போகிறான் என்பதையும்; மடையன் முத்தபாவின் வெற்றிக்குக் காரணமான ஒத்தைக் கண்ணன் பாக்கரின் மகளான ஸைனபாவின் மீதான காதலையும் நகைச்சுவையாகக் கூறுவதே இந்நாவலாகும்.
தன்நாட்டு மக்கள் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்காக ஒவ்வொரு நிமிடமும் மரணத்தை கண்ணுக்கெதிரே சந்தித்துக் கொண்டும்; காலநிலை மாற்றங்களோடு போராடிக் கொண்டும்; குடும்ப உறவுகள், தூக்கம், மகிழ்ச்சி இவற்றைத் தொலைத்துக் கொண்டும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இராணுவ வீரர்களின் வாழ்க்கையைப் படிக்கும்போது வாசகன் மனமும் கனத்துத்தான் போகிறது.
சமூகத்தின் பல்வேறு பிரிவுகளில் வாழும் மனிதர்கள் பஷீரின் நாவல்களில் வருகிறார்கள். சமூகத்தில் இப்படிப்பட்ட விளிம்புநிலை மக்களும் வாழ்கிறார்கள் என்பதைத் தன்னுடைய மலையாள இலக்கிய உலகிற்கு முதன்முதலில் வெளிப்படுத்தியவர் பஷீர் என்கிறார் மொழிபெயர்ப்பு ஆசிரியர். ஒரு சமூகத்தை முன்னிலைப்படுத்தும் போது அந்தச் சமூகத்தின் ஒரு மனிதராகப் பஷீரும் மாறிப்போவதையே அவரது தனித்தன்மை என்று கூறலாம்.