பாலின்பத்தின் உச்சநிலையை பிரெஞ்சில் petit mort என்கிறார்கள். அதன் பொருள் mini-deaths அதாவது நிமிச நேர மரணம். சாவு குறித்த பயத்திலிருந்தே பாலின்ப வேட்கை உருவாகிறது என்கிறார்கள் உளவியலாளர்கள்.
பாலுறவும் சாவும் ஒன்றோடு ஒன்று நேரடியாகத் தொடர்பு கொண்டது. தன்னை விருத்தி செய்து கொள்வதற்காகவே பாலின்பத்தை நாடுகிறான் மனிதன். அது சாவிலிருந்து தாண்டிச் செல்ல முனையும் எத்தனிப்பே. பாலுறவின் ஈடுபாடும் சலிப்பும் சாவு குறித்த அடிமனதின் எண்ணங்களின் வழியே தான் தூண்டப்படுகிறது என்கிறார் சிக்மண்ட் பிராய்ட்.
இந்திய புராணீகத்தில் யமன் யமி உரையாடல் என்று ஒரு பகுதியிருக்கிறது. சாவின் கடவுளான எமன் பாலின்பம் குறித்து தனது தங்கை யமியோடு கொள்ளும் விவாதம் அது. அதில் உடல்களுக்கு தனித்த அடையாளம் எதுவுமில்லை. அவை வெறும் கருவிகள். ஆகவே உடலின்பம் என்பது உடலை கடந்து செல்வதற்கான எத்தனிப்பு என்றே குறிப்பிடப்படுகிறது.
சாவு பற்றிய பயமே வாழ்வை இறுகப்பற்றிக் கொள்ள செய்கிறது. அந்த பற்றுதலை சாத்தியமாக்குவதில் முதல்காரணி பாலுறவே. இந்த இரண்டு புள்ளிகளில் தான் சம்பத்தின் இடைவெளி நாவல் எழுதப்பட்டிருக்கிறது.
சம்பத்தின் இடைவெளி நாவல் உமாபதி நடத்திய தெறிகள் என்ற காலண்டிதழில் வெளியானது. மிக சிறிய நாவல் 110 பக்கங்கள் கொண்டது. 1984ம் ஆண்டு இதை க்ரியா பதிப்பகம் வெளியிட்டது. அதன் பிறகு இன்று வரை மறுபதிப்பு வரவேயில்லை.
சம்பத் நாலைந்து சிறுகதைகளும் ஒரேயொரு நாவல் மட்டுமே எழுதியிருக்கிறார். அநேகமாக எல்லாக் கதைகளிலும் சம்பத் தான் கதாநாயகன். அல்லது சம்பத்தின் சுய அனுபவத்திலிருந்து உருவான ஒருவனை பற்றியது. அந்தக் கதைகள் வெவ்வேறு காலங்களில் வெளியாகியிருந்த போதும் அதன் உள்ளே தொடர்ச்சி காணப்படுகிறது. நிலை கொள்ள முடியாத மனதின் தத்தளிப்பு காரணமற்ற வேதனையுமே அவரது அகவுலகம்.
சாமியார் சூவிற்கு போகிறார் என்ற சம்பத்தின் நீண்ட சிறுகதை ஒன்றிற்கும் இடைவெளி நாவலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அது தான் வளர்ந்து நாவலாகி இருக்கிறதோ என்று கூட தோன்றுகிறது. சம்பத்தை வாட்டிய இரண்டு முக்கிய பிரச்சனைகள் ஒன்று பாலுறவு இரண்டாவது சாவு.
இரண்டை பற்றியும் ஆழ்ந்து யோசித்திருக்கிறார். சுவரில் செல்லும் எறும்பை உற்று கவனிப்பதை போல தன் உடலின் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்திருக்கிறார்.
அந்த அவதானிப்பில் இருந்து உருவான சந்தேகங்கள் கண்டுபிடிப்புகளை பகிர்ந்து கொள்ள யாருமின்றி தனக்கு தானே சொல்லிக் கொண்டிருந்திருக்கிறார். அவை பல நேரங்களில் அவரை பிரமிக்க வைக்கின்றன. பல நேரம் நீங்காத துக்கம் கொள்ள செய்கின்றன.
சாவு குறித்த சித்தாந்தங்கள், தத்துவ கேள்விகள் மீது அவருக்கு நாட்டமில்லை. அவர் ஒரு கலைஞராக தனது தேடலின் வழியே அதைக் குறித்து சுயமாக அறிந்து கொள்ள வேண்டும் என்று எத்தனிக்கிறார். அதையும் வாழ்வனுபவத்திலிருந்தே அறிய வேண்டும் என முயற்சிக்கிறார். ஒரு வகையில் சாவை புரிந்து கொள்வதன் வழியே தனது வாழ்வின் நிஜமான அர்த்தத்தை தெரிந்து கொள்ளப் போராடியிருக்கிறார் என்றே படுகிறது.
சாவு குறித்த மகத்தான உண்மை ஒன்றை தான் அறிந்து கொண்டுவிட்டதாகவே சம்பத் கருதுகிறார். அதை வெளிப்படுத்துவதிலும் பகிர்ந்து கொள்வதிலும் அவருக்கு ஏற்பட்ட தடுமாற்றங்களே நாவலாகியிருக்கிறது.
சாவு குறித்த பயம் பெரும்பான்மை எழுத்தாளர்களுக்கு தீவிரமாக இருந்திருக்கிறது. அந்த ஒற்றை மையத்தில் உழன்றபடியே தான் வாழ்க்கையை ஆராய்ந்திருக்கிறார்கள். குறிப்பாக தஸ்தாயெவ்ஸ்கி போல சாவின் அருகாமையை உணர்ந்த எழுத்தாளர் வேறு எவருமேயில்லை. அவர் சாவின் பிடியிலிருந்து தப்பி வந்த பிறகு வாழ்வை கொண்டாடத் துவங்குகிறார். உலகம் மிக புதிதாக தெரிகிறது. எல்லா கசப்பு வெறுப்புகளை தாண்டி மனிதர்கள் மீதான அவரது அன்பும் அக்கறையும் எழுத்தில் ஆழமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
சம்பத்தை உலுக்கிய கேள்வி சாவை எப்படி புரிந்து கொள்வது என்ற கேள்வியே. அது குறித்து மருத்துவர்கள் ஆய்வாளர்கள் என்று பலரையும் சந்தித்து விளக்கம் கேட்கிறார். அவர்கள் பாடப்புத்தங்களில் உள்ள விபரங்களை தாண்டி எதையும் தருவதில்லை என்று சலித்து கொள்கிறார்.
சாவு வீட்டிற்கு சென்று அருகில் அமர்ந்து பார்க்கிறார். அப்போது துயரத்தையும் அழுகையையும் அறிந்து கொள்ள முடிகின்றதேயன்றி மரணத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. அவரை அது அலைக்கழிக்கிறது.உறக்கமற்று செய்கிறது. சாவு குறித்த நிஜம் என்று எதையும் அறுதியிட்டு வரையறை செய்ய முடியாத போது அதை பற்றிய கற்பனைகள் அதிகமாக தேவைப்படுகிறது. அந்த கற்பனைகளை கூட நம்மவர்கள் செய்ய மறுக்கிறார்களே என்று அலுத்து கொள்கிறார்.
சாவின் மீதான மனஉளைச்சலில் ஆழ்ந்து போயிருந்தவர் பிரெஞ்ச் எழுத்தாளரான மார்சல் புரூஸ். அவரால் தனது தாயின் மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியவேயில்லை. அந்த மரணம் அவரை ஆழ்ந்து யோசிக்க வைக்கிறது. அதிலிருந்து கடந்த காலத்தின் நினைவடுக்குகளை மீட்க துவங்குகிறார். அவருக்கும் காமமும் சாவும் நெருக்கமானவை என்றே படுகிறது.
இதே தளத்தில் இதே உண்மைகளை சொன்ன இன்னொருவர் ஆல்பெர் காம்யூ.
அவரது அந்நியன் நாவல் சாவு வெறும் சடங்காகிவிட்டது. அதன் வெறுமை நம்மை எப்படி பாதிக்கிறது. அதிலிருந்து எப்படி விடுபடுவது என்று தெரியவில்லை. சாவு எப்போதுமே உள்ளுற ஒரு நெருக்கடியை உருவாக்குகிறது அது மனிதனின் இயல்பை மாற்றிவிடக்கூடியது என்கிறார் காம்யூ. அதனால் தான் அந்நியன் நாவலில் வரும் மெர்சோ தன் தாய் இறந்து போன இரண்டு நாட்களில் உல்லாசமாக பெண்களுடன் கழிக்க விரும்புகிறான். மனது காமத்தை அன்றி வேறு எதிலும் சாந்தம் கொள்வதில்லை என்பது பொதுவான விதி போலும்.
இடைவெளி நாவலின் நாயகன் தினகரன். அவன் சம்பத்தின் சாயலில் உருவானவன். தினசரி வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் குறித்து அவன் ஆழ்ந்து யோசிக்க கூடியவன். அதில் தனது மனநெருக்கடியின் தீர்வு ஒளிந்திருக்கிறதா என்று பரிசீலனை செய்து பார்க்கிறான். நாவலின் முதல் பக்கத்திலே அவரது மனத்தீவிரம் தெளிவாக சொல்லப்பட்டுவிடுகிறது. சாவு கடைசி பட்ச உண்மை என்பது எவ்வளவு நிஜமோ அவ்வளவு உண்மை உயிர்வாழ்தலின் ருசி என்றும் சம்பத் விவரிக்கிறார்.
தினகரன் நாற்பது வயதானவன். தோல் ஏற்றுமதி செய்யும் கம்பெனியில் வேலை. சாவு வாழ்வு பிரபஞ்சம் காதல் என்று தீவிரமாக எதைஎதையோ யோசித்து கொண்டிருப்பவன். லௌகீக வாழ்வில் அவன் திறமைசாலியில்லை. தலை முடி கொட்டி போய்விட்டது. அடிக்கடி தலை சுற்றல் வருகிறது. தினகரனுக்கு தஸ்தாயெவ்ஸ்கியை பிடித்திருக்கிறது.
அதுவும் குறிப்பாக அவர் இயேசு கிறிஸ்து குறித்து எழுதிய விமர்சனம் அவனை ரொம்பவும் யோசிக்க வைத்திருக்கிறது. காரணம் தினகரனுக்கு இயேசுவை ரொம்பவும் பிடிக்கும். தஸ்தாயெவ்ஸ்கி சாவை சமூகபிரச்சனையாக்கிவிட்டார் என்று அவனுக்கு உள்ளுற வருத்தமிருக்கிறது. ஆனால் தஸ்தாயெவ்ஸ்கியால் சாவு குறித்து அறுதியாக ஏதாவது சொல்லியிருக்க முடியும். ஏனோ அவர் அதை வெளிப்படுத்திக் கொள்ளவேயில்லை என்று அவன் நினைக்கிறான்.
தஸ்தாயெவ்ஸ்கியை படித்த காரணத்தால் அவனுக்கு தினசரி பேப்பர்களில் வரும் கொலை வழக்குகள் மீது மனது தானே ஈர்ப்பு கொண்டுவிடுகிறது . எது அந்த மரணத்தின் ஆதார காரணம் என்று அவனாகவே கற்பனை செய்து கொள்கிறான். அது அவனுக்கு வாழ்வின் புதிராட்டத்தின் மீது வசீகரம் கொள்ள வைக்கிறது. சூதாட்டப்பலகையில் சுழன்று நிற்கும் முள்ளை போல அவன் வாழ்வு சாவை காண்கிறான்
தினகரன் மனைவி பத்மா அவனை புரிந்து கொள்ளவில்லை. அவளுக்கு தினகரன் பைத்தியம் என்ற எண்ணமிருக்கிறது. தினகரனுக்கு பத்மாவை தவிர கல்பனா என்ற பெண்ணோடு ஸ்நேகமிருக்கிறது. அது பத்மாவிற்கு பிடிப்பதில்லை. புத்தகங்கள் ரொம்ப ஆபத்தான விசயம் அதை ஜாக்கிரரையாக கையாள வேண்டும் என்று நினைக்கிறாள் பத்மா . அதனால் தான் அவளது மகன் டி.ஹெச் .லாரன்ஸ படிப்பதை அவளால் தாங்கி கொள்ள முடியவில்லை. வெடித்து கத்துகிறாள். அவளது ஒரே ஆறுதல் பாலுறவு மட்டுமே. அதில் கூட தினகரன் நிறைய கற்பிதங்களையும் மாயகற்பனையும் கொண்டிருக்கிறார் என்பதே அவளது எண்ணம். அந்தச் சிந்தனை குழப்பம் படிப்பதால் தான் உருவாகிறது என்றே நம்புகிறாள்.
தினகரனுக்கு ஆறுதல் தருகின்ற ஒரே அம்சம் கடல். அவன் கடலின் முன்னால் தன் இருப்பு கரைந்து போவதை உணர்கிறான்
தினகரனின் பிரச்சனை சாவு குறித்து அவன் தர்க்க ரீதியாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதே. அதை வெறும் நிகழ்வாக கருவதில்லை. அதே நேரம் அது குறித்த அதீத பயம் எதுவும் அவனிடம் இல்லை. அவன் மனது கருத்தியல் ரீதியாக புரிந்து கொள்ள எத்தனிக்கிறது. அதற்கு தடையாக உள்ளது எது என்பதை ஆராய்கிறது.
இந்த தடுமாற்றங்களுடன் அவனது தினசரி வாழ்க்கையை கொண்டு செலுத்த முடியவில்லை. உராய்வும் பிரச்சனைகளும் அதிகமாகின்றன. அவன் தான் ஒரு பிரபஞ்ச உண்மையை தேடிக் கொண்டிருப்பதாக நம்புகிறான். அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறான். அவனால் முழுமையாக இயற்கையில் தன்னை கரைத்து கொள்ள முடிவதில்லை. அவன் விலகி நின்று பார்க்கும் மனநிலையே கொண்டிருக்கிறான் . அவனது கனவில் ஒரு சிறுமி கயிறு தாண்டி விளையாடுகிறாள் . அவன் பிடியிலிருந்து நழுவி ஏதேதோ சம்பவங்கள் நடக்கின்றன. அந்த கனவு அவனை நிம்மதியற்று போக செய்கிறது. வாழ்க்கை நிகழ்வுகள் அபத்தமானவை என்று சில வேளைகளில் நினைக்கிறான். அதனாலே அதன் மீது அதிக ஈடுபாடு காட்ட மறுக்கிறான்.
விஞ்ஞானம் சாவு குறித்த அறிவார்ந்த விளக்கங்களை முன்வைக்கும் போது கலைகள் சாவு குறித்த கற்பனைகளையே முன்வைக்கின்றன. இந்த கற்பனையின் எழுச்சியும் வேகமும் அறிவார்ந்த தன்மைகளை ஒன்றுமில்லாமல் செய்துவிடுகின்றன. தினகரன் விசயத்தில் நடப்பதும் அப்படியே.
அவன் சாவு குறித்த தனது குழப்பங்களுக்கு தீர்வாக மதத்தையோ, ஞான குருக்களையோ நம்ப மறுக்கிறான். அதற்கு மாற்றாக எளிய வாழ்க்கை அனுபவங்களில் இருந்து அவன் உணர்ந்து கொள்வதை ஒரு கருத்துருவமாக மாற்றுகிறான். புதுமைபித்தனின் மகாமசானம் கதையில் ஒரு மனிதன் சாலையோரம் செத்து கொண்டிருப்பான். அதை ஒரு குழந்தை வேடிக்கை பார்த்தபடியே இருக்கிறது. சாவில் முன்னால் குழந்தையின் இயல்பு மாறுவதில்லை என்பது போன்ற காட்சியது.
கிட்டதட்ட அந்த குழந்தையின் மனநிலையில் தான் தினகரன் இருக்கிறான். அவனை சாவு தொடர்ந்து யோசிக்க வைக்கிறது. குழப்பம் கொள்ள செய்கிறது. ஆனால் அதை விட்டுவிட முயலவில்லை. ஆசையாக பின்தொடர்கிறான்
மௌனியின் கதைகளில் சாவு ஒரு தீராத பிரச்சனை. ஆனால் அவர் அதை தத்துவார்த்த தளத்திற்கு கொண்டு போய்விடுகிறார். அதனால் அவரது கதைகளில் இல்லாமல் போவது இருப்பதை போன்று நினைவுகளின் வழியே மீள்உருக் கொண்டுவிடுகிறது. சாயைகளாக நடமாடுகின்றன. மௌனி சாவை ஒரு கடந்து போவதாக மட்டுமே கருதுகிறார். சம்பத்திற்கு அது போதுமானதாகயில்லை. சம்பத் இன்னும் ஆழமாக அதற்கான பிரத்யேக விடை ஒன்று இருக்ககூடும் என்று நம்புகிறார். அதை நோக்கி தீவிரமாக செல்கிறார்
ஜே.கிருஷ்ணமூர்த்தி சாவை பற்றி குறிப்பிடும் போது அது ஒரு சொல். அந்த சொல்லை ஒரு பயமுறுத்தும் உருவமாக மாற்றி வைத்திருக்கிறோம். ஆகவே தான் மனது அந்த சொல்லை நினைத்தவுடன் பயம் கொள்ள செய்கிறது. வாழ்வது சாவது என இரண்டை பற்றியும் அதிகமான கற்பிதங்களே நம்மிடம் இருக்கின்றன. எப்படி அதை பிரித்து பார்க்கிறோம். எப்படி புரிந்துகொள்கிறோம் என்பதற்கு இடையில் பயம் புகுந்து கொண்டிருக்கிறது. பயமில்லாமல் இதை பற்றி நாம் யோசிப்பதேயில்லை என்கிறார். வாழ்வு பற்றிய புரியாமையே சாவு பற்றிய புரியாமையாக உருமாறியிருக்கிறது என்றே சுட்டிக்காட்டுகிறார். தினகரன் அதையே வேறு வகையில் கண்டு உணர்கிறான்.
தினகரனை வசீகரிப்பது எதிர்பாராமை. அது எங்கே முழுமையாக கிடைக்கிறதோ அதை நோக்கி செல்கிறான். அது சூதாட்டமாகவோ, குதிரைபந்தயமாகவோ எதுவாயினும் அதில் அவனை ஈர்ப்பது எதிர்பாராத அதன் முடிவுகள். அதற்கான காத்திருத்தல்கள். மற்றும் விடாப்பிடியான அதன் மீதான ஆசை. இந்த சுழல் தினகரனை ஆழத்திற்கு இழுத்து போகிறது.
பாதி விழிப்பு பாதி கனவு இரண்டுக்கும் இடைப்பட்ட மனநிலையில் தான் தினகரன் சஞ்சரிக்கிறான். அதனால் தான் அவனால் நட்சத்திரங்களை அவ்வளவு நெருக்கமாக நேசிக்க முடிகிறது. அது போலவே அல்பமான விசயங்களில் கூட தீவிரமாக அக்கறை கொள்ள சாத்தியமாகிறது. சம்பத் கண்டுபிடித்த இடைவெளி என்ற கருத்துருவம் வெறும் சொல் அளவில் நின்று போகிறது. அதை தாண்டிய ஆழமான அனுபவ தாக்கத்தை உருவாக்குவதில்லை. ஆனால். தினகரன் அதற்கு தரும் விளக்கமும், தர்க்கமும் அதை நோக்கி நம்மை ஈர்ப்பது மட்டுமே நிஜம்.
மனதை உன்னிப்பாக கவனிப்பது ஒரு கலை. அதில் மிக தேர்ச்சி பெற்றவன் தினகரன் என்பது நாவல் முழுவதும் தெளிவாக காட்டப்படுகிறது. எழுதி முடிக்கபட்ட பிரதியை மறுபடி வாசிப்பவனை போல அவன் தனது மனதின் ஒவ்வொரு சிறு அசைவையும் துல்லியமாக படிக்கிறான். விளக்கி சொல்கிறான். அவன் மனதின் இருண்ட பக்கங்கள் என்று தனியே எதுவுமில்லை. அவன் தனது ரகசியங்களை முன்னிலை படுத்தியே தனது நிகழ்கால வாழ்வை பரிசீலனை செய்து பார்க்கிறான்.
ஒரு வகையில் சம்பத்தின் இடைவெளி தினசரி வாழ்க்கையை நாம் எவ்வளவு மொண்ணையாக புரிந்து வைத்திருக்கிறோம். எவ்வளவு அலுப்பூட்டும் அர்த்தமற்ற செயல்களால் நிரப்பிக் கொண்டிருக்கிறோம் என்பதை சுட்டிக்காட்டுகிறது. உடல் பற்றிய நமது புரிதல் அற்பமானது. ஒரு போதும் உடலின் புதிர்தன்மைகளை நோக்கி நாம் நகரவேயில்லை.
உடலை உணரும் தருணங்களான பாலின்பத்தில் கூட நாம் கற்பிதங்களின் வழியே உடலை சுற்றி புனைவுகளையே ஏற்படுத்திக் கொள்கிறோம். ஆகவே உடலின் சூட்சுமங்கள். அதன் ஊடாடும் வெளிகள் பற்றி நமக்கு அறிமுகம் ஏற்படுவதேயில்லை. காலம் பற்றிய நமது பிரக்ஞையற்ற நிலையே இதற்கு முக்கிய காரணம். காலத்தை தீவிரமாக புரிந்து கொள்ள முயற்சிப்பவன் இந்த குழப்பங்களுக்கு உள்ளாவதில் இருந்து தப்ப முடியாது என்பதை இடைவெளி நாவல் நுட்பமாக விளக்கிகாட்டுகிறது.
நவீனநாவல்கள் அன்றாட வாழ்க்கை பிரச்சனைகளை அதிகம் முன்வைத்தபோது இது போன்ற கருத்தியல் சார்ந்து வாழ்வை தீவிரமாகி அணுகி ஆராயும் முயற்சி கொண்ட நாவல் தமிழில் வெகு குறைவே. நகுலனின் புனைகதைகளை மட்டுமே சம்பத்தின் எழுத்திற்கு அருகாமையில் சொல்ல முடிகிறது. சம்பத்தின் எழுத்து நிறைய இடங்களில் இதாலோ செவோவின் எழுத்துமுறையையும் புனைவுலகையும் நினைவுபடுத்துகிறது. இருவரும் ஒருவகையான ப்ளாக் ஹ்யூமர் வகையை எழுத்தில் உருவாக்குகிறார்கள்.
தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களை யதார்த்தமான நாவல் என்பதோடு தத்துவார்த்தமான எழுத்தும் என்றும் இணைத்தே வகைப்படுத்துகிறார்கள். சம்பத்தின் இடைவெளி ஒன்றை மட்டுமே தமிழில் அப்படி வகைப்படுத்த முடியும்.
(நன்றி: எஸ். ரா.)