நாவலை வாசிக்கத் துவங்கும் போது அடர் கருப்பு நிறத்தில் பதிக்கப் பட்டிருந்த குறிப்புகளின் ஆவண வடிவம் அச்சுறுத்தியது. தொல்லியல் ஆய்வாளர் ஒருவரின் பிரசங்க உரையும், அதன் அடர்த்தியும் அமர்க்களமான துவக்கத்தை படம் பிடித்தது. குறிப்பாக “இன்னோவா இளைஞர்கள்”.
வடக்கிலிருந்து வந்த பத்திரிக்கையாளரான முல்லை, அவளது கல்லூரிக்கால நண்பனும், களச் செயல்பாட்டாளனும் அமைப்புரீதியாக இயங்குபவனுமாகிய நவீனை, துணை சேர்த்துக்கொண்டு, பிள்ளைப் பருவத்திலிருந்து வசீகரித்து வந்த காவிய நாயகி, பத்தினி தெய்வம் என்று அறியப்பட்டிருந்த கண்ணகி-சிலப்பதிகாரம் குறித்து ஒரு ஆவணப்படம் எடுக்க சென்னையிலிருந்து புறப்பட்டு புகார் நோக்கிப் பயணம் செய்கிறாள்.
பூம்புகாரில் அவர்கள் சந்திக்கும் ஸ்ரீகுமார் தொல்லியல் ஆய்வாளர் மற்றும் சிந்தனையாளரோடு சேர்ந்து, கண்ணகி, கோவலன், கவுந்தியடிகள் பயணம் சென்ற பாதையில் செல்கிறார்கள். சீரிய நோக்கத்தோடு பயணம் துவங்கியிருந்தாலும் ஒவ்வொன்றுக்குமான ஆவணப்பூர்வமான ஆதாரங்களைத் தேடும்போது வரலாற்றியல், தொல்லியல் ஆய்வாளரின் பதில்கள் முல்லையை மட்டும் அல்ல, நமக்கும் அதிர்ச்சியூட்டுகிறது. நாவலுக்குள் புகுந்து கதை சொல்வது விமர்சனரீதியான மதிப்பீடாக இருக்காது என்பதால் வாசித்தபோது ஏற்பட்ட உள்ளுணர்வை மட்டுமே எழுதுகிறேன்.
முதலில் சிலப்பதிகாரம் உண்மையா? கற்பனையா? என்ற கேள்வியை முன் வைக்கிறது. சிலப்பதிகாரம் தவிர்த்து வேறெங்கும் அதற்கு ஆதாரம் இல்லை என்று ஸ்ரீகுமார் மூலமாக நூல் முன் வைக்கிறது. அந்த நாவலின் அற்புதமே ஆசிரியர் தேர்வு செய்து கொண்ட பாத்திரங்கள் தான்.
காட்சி ஊடகங்கள், பத்திரிக்கைகள், அதன் பணியாளர்கள் மீது விமர்சனரீதியாக அணுகும் காட்சிகளை உண்மையாகவும், நுட்பமாகவும் காட்டத் தலைப்படும் ஆவணப்பட இயக்குநரும், பத்திரிக்கையாளருமான முல்லை; மனித குலம் இரு பெரும் வர்க்கங்களாகப் பிரிந்து கிடக்கிறது, ஆளும் வர்க்கம் தொடர்ந்து சமுதாயத்தில் மேலாதிக்கம் செலுத்தும் சக்திகளை ஆதரிக்கிறது, அதனால் தான் ஒடுக்கப்பட்டோர் மற்றும் சுரண்டப் படுவோர் பக்கமாகச் சிந்திக்கின்றவனாகவும் அதே சமயம் அமைப்புகளின் மேல் நம்பிக்கை இழந்து கொண்டிருக்கும் ஆனால், மக்களின் மேல் பற்றுக் கொண்டு இருக்கும் நவீன், மார்க்ஸிய பெரியாரிய கண்ணோட்டங்களில் உலகைக் காண்பவன்.
ஸ்ரீகுமார் சமூகவியல், தொல்லியல் வரலாறு தனிமவியல் அல்லது மூல வளங்களைக் கண்டுபிடிப்பது, அவற்றின் பொருளாதார மதிப்பீட்டை கண்டறிந்து அரசுக்கும், ஆர்வப்படுகிற யாரொருவருக்கும் கொடுத்து கொஞ்சம் காசு பண்ணிக் கொண்டு வாழ்வைக் கழித்துவிட நினைக்கும் ஞானமடைந்த அல்லது விட்டேத்தியான மனோபாவம் கொண்டவராக இருப்பதினால் ஆசிரியர் உளப் பூர்வமாக விரும்பும் மிகச்சீரிய தத்துவார்த்த அரசியலை நாவல் காட்சிப்படுத்தியபடி பயணிக்கிறது. நாவலின் மொழி தங்கு தடையற்ற எளிதில் கற்பனை செய்து கொள்ளும் சாத்தியமற்ற நுட்பமான அதிதீவிரமான உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு அதி தீவிர அரசியல் உரையாடலாக நீள்கிறது.
எப்பொழுதோ பனிரெண்டு வயதில் சிலப்பதிகாரம் பெரிய எழுத்து நூலை வாசித்தது. அப்புறம் பாடப்புத்தகத்திலும், பத்திரிக்கைகள், வார, மாத இதழ்களின் வெளிவந்த சிறப்புக் கட்டுரைகள் மூலமாக துண்டு துக்கானியாக சிலப்பதிகாரம் தெரிந்து கொண்டது தான் என்னுடைய அறிவு. ஆனால், முல்லைக்கு இருந்ததைக் காட்டிலும் சற்றே தெளிவாக நான் கண்ணகி குறித்த நிலைப்பாட்டில் இருந்தேன். வாசிக்கும் யாருக்கும் சிலப்பதிகாரம் குறித்து முன்பே தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாத வகையில் அத்தியாயங்களின் முகப்பு கருப்பு எழுத்து படிவம் காவிய உரையாக கதைக்களத்தை அல்லது அவர்கள் பயணப்படும் நிலப்பாதை குறித்து நமக்கு தெரிவித்து விடுவதால் இயல்பாக நாமும் வரலாற்றின் பயணப் பாதியில் உணர்வுப் பூர்வமாக பயணம் செய்கிறோம்.
கோவலன் என்ற பெயர் தனிநபர் பெயரல்ல, பரத்தையர் குலம் ஒன்று அன்றே இருந்திருக்க வேண்டும் என்றால் வர்த்தக பொருளாதாரம், தனி நபர் சொத்துரிமை, சூறையாடலில் பலி கொடுக்கப்பட்ட அல்லது பெண்ணடிமைச் சமூகம் உருக்கொண்டது என்றும் சிலப்பதிகாரத்தின் காலத்திற்குப் பின்னல் சுமார் ‘200’ ஆண்டுகளுக்குள் சீத்தலைச் சாத்தனாரால் மணிமேகலை எழுதப்பட்டிருக்கலாம் என்றும், அந்த நூல் சதி வழக்கத்தை மீறிய கலகக்காரியாக கண்ணகி மீது விமர்சனத்தையும் முன் வைக்கிறது. அந்த வகையில் ஆணாதிக்க நலனைப் பேணுகிற வகையில் அக்காலச் சமூக வரையறைக்குள் நின்று செயல்பட்டவர்களே காவிய நாயகிகளான மூவரும் என்று நிறுவுகிறது மிளிர்கல்.
கண்ணகி வரலாற்றைத் தேடிப் போய் கண்ணகியின் மீது பூசப்பட்டிருந்த வரலாற்றுப் புனித பிம்பத்தைக் கட்டுடைக்கிறது மிளிர்கல். இதைச் செய்வதற்காக ஆசிரியர் எடுத்துக் கொண்ட முயற்சியில் மார்க்சியப் பார்வையே முதன்மை கொள்கிறது.
இதிகாசங்களையும் காப்பியங்களையும் அதன் மூட நம்பிக்கைகளுக்காக பெரியார் சாதித்த முறியடிப்புகள் நாத்திக அல்லது வறட்டு நாத்திகமாக அறிவிக்கப் படாமலே அவர் வாழ்ந்த காலத்திலேயே பெரியாரைத் துதிபாடியபடியே தமிழ் பண்பாட்டு அடையாளமாக கண்ணகி சிலை ஆக்கப்பட்டு சென்னை கடற்கரையை அலங்கரித்ததின் அரசியலை அம்பலப் படுத்துவதோடு பெரியார் செய்ய நினைத்ததை மார்க்ஸியத்தின் துணை கொண்டு சாதிக்கிறது நூல்.
இதற்கு மத்தியில் பாமர சனங்களின் மத்தியில் கண்ணகி மீதான மதிப்புக்கும் பக்தி வழிபாட்டுக்கும் காரணம் என்ன என்று தேடுகிறாள் முல்லை. புகார் கடற்கரையில் இரவில் காணும் ஒளிர்விடும் கண்களும், அவிழ்த்துவிடப்பட்ட கூந்தலுமாக உலாவந்து அழைக்கும் கண்ணகி காவியச் சிறப்பையும் கட்டிடங்களையுமா தேடுகிறாய்? என்று வினவுவதின் மூலம் பயணம் தடையற்று அற்புதமாகப் பயணிக்கிறது “இன்னோவாவில்”. ஆம், அற்புதவாதத்தை உளவியல் நுட்பத்தோடு கையாள்கிறார் முருகவேள்.
எதிர் பாராதவிதமாக பேராசிரியர் ஸ்ரீகுமார் கடத்தப்படுவதின் மூலம் நாவல் சமகால பொருளாதார அரசியலுக்குள் ஆவேசமாக நுழைகிறது. கண்ணகியின் காற்சிலம்பில் இருந்த மாணிக்கப் பரல்களின் பிறப்பிடமான வறண்ட நீர் வளமற்ற கொங்குச் சமவெளி கதையில் இடம் பிடித்து நாவலின் போக்கையே மாற்றுகிறது. ரோமானிய, யவனர்களை வசிகரித்த இரத்தினக்கற்கள், கண்ணகி கோவலன் பயணப் பாதையெங்கும் விரிந்து கிடப்பதை ஆதாரப்பூர்வமாக நிறுவுகிறது. அதற்காக மிக எளிதாக போகிற போக்கில் டாலமி,யுவான் சுவங், பித்தகோரஸ்(கணிதவியலாளர் அல்ல) இளங்கோவடிகளின் பூம்புகார் இரத்தினச் சந்தை வர்ணனையும் கொண்டு ஆதாரப் படுத்துகிறார். அன்றும் இன்றும் சாலையோரப் பிச்சைக்காரர்கள் இருந்து கொண்டே இருப்பதை நினைவுபடுத்தியபடியே கடந்து செல்கிறது நூல்.
புத்தகத்தின் கையாளப்படும் உரையாடல் மிகவும் நுட்பமானது. இரண்டு மூன்று பேர் கூடுகின்ற இடத்தில் நிகழும் இயல்பான பொழுதுபோக்கின்போது கையாளப்படும் அவரவர் இயல்பிலான உரையாடலே அது. ஆனால், உரையாடும் நபர்களின் சிறப்புத் தன்மையின் மூலமாக வரலாறு புவியியல் வணிகம் அரசியல் தலைவர்கள் அறிவுஜீவி ஆய்வாளர்களுக்கு உதவி செய்யும் அடாவடி அடியாட்கள் என மறைந்து கிடக்கும் அல்லது உயர்வாக மதிப்பிடப்பட்டிருக்கக் கூடியவற்றின் உண்மை முகத்தை அம்பலமாக்குகிறது. பட்டி விக்கிரமாதித்தன் கதையில் உள்ள பூடகத் தன்மையும் மித்தாலஜியும் அன்றைய சமூகத்தை தோலுரிப்பதைப் போல சாமர்த்தியமாக கையாளப்பட்டிருக்கிறது.
இது ஒரு வகையில் பிரம்மாண்டமான கட்டுடைப்பு. இதற்காக எடுத்துக் கொள்ளும் உரையாடல் தளங்களில் வெகு இயல்பாக வந்து போகிறவர்கள் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மயிலை சீனி வேங்கடசாமி, சீனிவாசன் ஐயங்கார், பெரியார், ராகுல சாங்கிருத்தியாயன், நீலகண்ட சாஸ்த்திரி, கோசாம்பி, நம் கண் முன்னே வாழ்ந்து கொண்டிருக்கும் பிஜாய் உட்பட.. அசத்திவிட்டார்.
ஒரு கதை அல்லது இலக்கியம் முற்று முழுக்க அமானுஷ்யத்தில் இருந்து பிறப்பதல்ல. படைப்பாளியின் பார்வை அல்லது வாழ்வில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு, விளைவு போன்றவற்றிலிருந்து கற்பனையில் ஒரு தளத்தை உருவாக்கிக் கொண்டு படைக்கப்படுகிறது. இடதுசாரி சமூக உணர்வுகளைக் கொண்டு களப்பணிபுரிந்து வாழ்ந்தவர் முருகவேள். நூலுக்குள் அவர் இல்லை என்றபோதும் ஆசிரியரின் விளக்கவுரையாக நீளும் பக்கங்களில் பொதிந்து கிடக்கிறது அவரது வாழ்வு.
கோவையில் இரத்தினக்கல் வியாபாரத்தின் இருள் உலகம் குறித்து மேம்பாலத்தின் அடியிலும், பூங்காக்களின், புதர்களின் இடையிலும் திவ்யோதையா ஹாலின் முன் புற கீதா ஹோட்டல் வராந்தாவிலும் அமர்ந்தபடி விட்டேத்தியாக உரையாடிக் கொண்டிருக்கும் கூட்டம் ஊரெங்கும் சுற்றித் திரிந்து நாகமாணிக்கக் கல் தேடும் கும்பல்களைப் பற்றி பக்கம் பக்கமாக விரியும் தகவல்கள் எந்த நூலிலும் பதியப் படாதவை. ஒரு எழுத்தாளன் என்ற வகையில் அவர்களைப் பற்றியெல்லாம் பதியவெண்டும் என்று நான் நினைத்திருந்தேன்.
NM மற்றும் மூன்ஸ்டோன்,ரெட் ரூபி, எம்ரால்டு கிரீன். கேட் ஐ, யானை முத்து முத்திரை மோதிரம், ரயில்வே பாண்டு என்று கோடிகளில் பணம் புரட்டுவதைப் பற்றி பேசிக் கொண்டு இருக்கும்போதே வெள்ளைக்காரன் குருவாயூர் கோயிலுக்குக் கொடுத்த பெட்ரோமாக்ஸ் லைட்டைப் பற்றி குறிப்பு தரும் பொழுது வரலாற்று ஆசிரியர்களும் அசந்து விடுவார்கள். இவர்களைப் போன்றவர்களிடம் உலவும் கருத்துகளையும் உள்வாங்கி அவர்கள் வரலாறு குறித்த பிரமைகளிலும் இயற்கையின் அற்புதங்களில் மனதை முழ்கடித்துக் கொண்ட பணம் படைத்தவர்களை மோசடி செய்து வாழும் பாமரனிலிருந்து பட்டதாரிகள் வரையிலுமான பெரும் கும்பலை சுவாரசியமாக அம்பலப்படுத்துகிறார். காங்கேயம் கிருஷ்ணசாமி கவுண்டர், அமைச்சர் ஐயாவின் அதிரடி ரத்தினக்கல் வியாபாரம் என்று அரசு நிறுவனங்கள், அரசியல் தலைவர்களின் கூட்டை அம்பலபடுத்துகிறார்.
நிலத்திலும் ஆறுகளிலும், மலைக்குன்றுகளிலும், கல் குவாரிகளிலும் கிடைக்கும் கற்களைப் பட்டை தீட்டும் தொழிலாளர்களின் வாழ்க்கையில் உள்ள துயரத்தை இணைத்ததன் மூலம் படைப்பின் நோக்கத்தில் உயருகிறார்.
சுரங்கத் தொழில் அரசையும் மக்களையும் கபளிகரம் செய்ய, சிலிகோஸிஸ் நோயில் மாண்டு போகும் மக்களுக்காக கண்ணீர் சிந்தும் முல்லை, கண்ணன் என்ற மதுரைத் தோழரின் வியப்பூட்டும் வரலாற்று அறிவின் மூலம் மக்களைக் காக்க வெகு இயல்பாக அர்ப்பணம் செய்யப்படுவதைக் கண்டு மனம் மாறும் ஸ்ரீகுமார்;
இறுதியாக சமணர் குகையிலும் மதுரை, கொடுங்கலூர் காளி கோயிலினுள் பரவசப்பட்டு வெளிச்சப் பாட்டு பாடும் பாமரசனங்களோடு சேர்ந்து தானும் ரத்தம் சிந்தி பரவசநிலையில் முல்லை முடிவு செய்கிறாள்.
சிலப்பதிகாரம் வணிக சமூகத்துக்கும், நிலவுடைமைச் சமூகத்துக்குமான போராட்டம் மட்டும் அல்ல. சமண சமய பிரச்சார இலக்கியம் மட்டும் அல்ல. கணவனைக் கொன்றவர்களை எதிர்த்து நீதி கேட்டது மட்டுமல்ல. சாமான்யர்களை கேள்வி ஏதும் இன்றி கொலை புரிந்த அரசையும், சமூகத்தையும் அழித்து தனக்கான நீதியைத் தேர்வு செய்து கொண்டவள். ஆவேசமான உக்கிரக் காளியின் அவதாரமே கண்ணகி. அவள் வழிபடத் தக்கவள் மட்டும் அல்ல. இன்றைக்கும் வாழ்வதற்கு அவசியமான ஒன்றாக இருக்கிறது. கண்ணகி குறித்தான ஆவணப்படம் குஜராத்தில் செத்துக் கொண்டு இருக்கும் தொழிலாளர் விடுதலைப் போருக்கான ஆயுதமாக மாற்றப் படுவதின் மூலம் காவிய காப்பிய இதிகாச மூல அடையாளங்களின் வழி சமகாலத்தில் நம்மை அடையாளங் கண்டு கொள்வதோடு நாமும் போராளி ஆவதின் மூலம் புதிய வரலாற்றை சித்தரிக்கும் நாயகியாக மாறமுடியும் என்கிறது நாவல்.
ஆழ்நிலத்தினுள் புதைந்து கிடந்தாலும் ரத்தினக்கற்கள் ஒளி உமிழ்வதை இழந்து விடுவதில்லை என்கிறது மிளிர்கல். உயிரைப் பணயம் கேட்கும் உழைப்பைக் கொட்டி பட்டை தீட்டப்படும் கல் உலகை விலைபேசுவதைப் போல, நமது சிந்தனை செயலை செழுமைப் படுத்துவதன் மூலம் நம் வாழ்க்கை அணையாது ஒளிவிடும் என நம்பிக்கையைத் த்க்கவைக்கிறது மிளிர்கல்.
வாசிப்பு சுவாரஸ்யத்தில் சிட்னி செல்டன், ஹாட்லி சேஸ், சுஜாதா நாவல்களின் நடையைக் கொண்டு இருக்கிறது நூல். எனது வேலைப் பளுவின் இடையிடையே வண்டியின் முன் பக்கத்தில் கிடக்கும் புத்தகத்தை இரயில்வே கேட் பூட்டிக் கிடக்கும் தருணத்தில் கூட எடுத்துப் படித்தேன்.
உதாரணமாக புதிதாகத் திருமணமான தம்பதியர் உறவினர் வீட்டு விருந்துக்கு சென்றிருக்கும் நேரத்தில் அவர்களுக்குத் தெரிந்து விடாமல் இடையிடையே தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதும், காமச்சீண்டல்கள் செய்து கொள்வதையும் போல வாய்ப்பற்ற சூழலிலும் இடையிடையே வாசித்தேன்.
சமகாலத் திரைப்படங்களில் யதார்த்தக் காட்சி போலத் தெரியும் நேர்கோட்டு தர்க்கரீதியான உரையாடல் அல்லாது மேல்,கீழ், முன், பின் வேறுபட்டு வெளிப்படும் முறை அலாதியானது. “தி ரெய்டர்ஸ் அப் தி லாஸ்ட் ஆர்க்” இண்டியானா ஜோன்ஸ் ஆப் தி லாஸ்ட் குருசேட், ஜாக்கி சானின் ப்ராஜக்ட் சீரியல் படங்களின் திரைக் கதையை நினைவுபடுத்துகிறது. அயர்ன் பிளாமிங்கின் ஜேம்ஸ்பாண்டு பாணி திரைக் கதையை ஒத்திருக்கிறது. தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் நம்பிக்கையுடன் முருகவேளை நாடலாம். மனநிறைவுடன் அரவணைத்துக் கொள்கிறேன் முருகவேளை.
இப்படித்தான் எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. என் அரசியல் பிடிவாதம் அதற்கு இடம் கொடுக்கவில்லை. நீங்கள் சாதித்து விட்டீர்கள். புனிதப் படுத்தபட்டுவிட்ட எல்லாவற்றையும் தகர்த்து உண்மை, அவலங்களை அம்பலப் படுத்துவது, அவலச் சூழலுக்குள் ஆட்படுத்தப்பட்டுவிட்ட எல்லாவற்றையும் தகர்த்துச் சிதைத்து உள்ளுக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்தவற்றை உலகறியச் செய்வதே நவீன இலக்கியத்தின் தேவை. தொகுப்பாக முடிவை அறிவிக்க வேண்டும் எனில் சமகாலத்தின் மிகச்சிறந்த நாவல் மிளிர்கல்.
கள் உண்டு உரையாடுவதற்கு வாய்ப்புள்ள மாலைப் பொழுதில் நதி, வனம், திராவிட அரசியல், சாதி அரசியல், தாதுவளம் மதங்களின் தேவை என பேசுவதற்கான ஏராளமான விஷயங்களை உள்ளடக்கியுள்ளது மிளிர்கல்.
(நன்றி: கீற்று)