“KEEP READING BOOKS, BUT REMEMBER THAT A BOOK’S ONLY A BOOK, AND YOU SHOULD LEARN TO THINK FOR YOURSELF.” MAXIM GORKY
புத்தகங்களைத் தொடர்ந்து வாசியுங்கள், ஆனால் நூல் என்பது வெறும் நூல் மாத்திரமே என்பதையும், நீங்கள் உங்களுக்காகச் சிந்திப்பதற்கு கற்றுக் கொள்ள வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.’
தமிழ் புனைகதை இலக்கியத்தில் அதிகம் கவனயீர்ப்பைப் பெற்று வரும் எழுத்தாளர்களில் சல்மா முக்கியமான ஒருவர். அவர் எப்படி எழுத ஆரம்பித்தார் என்பதும் பழமை பேணும் ஒரு பாரம்பரிய சமூகத்துக்குள்ளிருந்து அவரது பயணமும் எப்போதுமே என்னை ஆச்சரியத்துக்குளாக்குகின்ற விடயங்கள்.
சல்மா எனக்கு அறிமுகமானது அவரது முதல் நாவல் இரண்டாம் ஜாமங்களின் கதைகளின் ஊடாக. ராபியா என்று வளரிளம் சிறுமியின் கண்களூடாக பெண்களின் சொல்லப் படாத அந்தரங்கங்களையும்,ஏக்கங்களையும்,காதலின் நுண்ணிய உணர்வுகளையும் பெண்கள் மீதான சுரண்டல், வன்முறைகள், கலாச்சாரக் காவல் போன்ற அதிகம் பேசப்படாத விடயங்கள் பற்றி விரிவாகப்பேசும் நீண்ட நாவல் அது.
மீறல்களும் கட்டுப்பாடுகளும் எல்லா சமூகங்களுக்கும் பொதுவானவை தான். ஆனால் அந்த மீறல்களையும் கட்டுப்பாடுகளையும் பொதுவெளியில் வெளிப்படுத்துவதை ஒவ்வொரு சமூகமும் ஒவ்வொரு வகையான ஒவ்வாமையுடன் நோக்குகின்றது.
பாரம்பரிய முஸ்லிம் சமூக அமைப்பில் உள்ளுக்குள் நிகழும் நிகழ்வுகளையோ பிரழ்வுகளையோ பொது வெளியில் பேச முடியாது. அதிலும் ஒரு எல்லா வகையிலும் அமைதியாக இருக்க வேண்டிய ஒரு பெண்ணின் ஊடாக அந்தக் குரல் வெளிவரும் போது அதிர்ச்சியின் கனதி அதிகமாக இருக்கத் தான் செய்யும்.
இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைகளுக்கும் அவை நடைமுறைப்படுத்தப் படும் கலாச்சாரச் சூழலுக்குமிடையே ஒரு பாரிய இடைவெளி இருக்கிறது. அது பற்றிப் பிறகு பேசுவோம். பொதுவாக முஸ்லிம் பெண்களின் உலகம் பற்றிய ஒரு குறுகுறுப்பு எல்லோருக்குமே உண்டு. அவர்கள் வாழ்க்கைமுறை,சிந்தனைகள்,ஆசாபாசங்கள் மொத்ததில் அவர்களுடைய உலகம் எப்படி இருக்கும் என்பதை அறியும் ஆவல் இயல்பானது. அதோடு முஸ்லிம் பெண்ணுலகம் பற்றித் தமிழில் எழுதப்பட்ட புனைவுகள் மிகச் சொற்பமானவை.
இந்தப் பின்னணியில் தான் சல்மாவின் மனாமியங்கள் வெளிவந்திருக்கிறது.கிட்டத்தட்ட முதல் நாவல் வெளிவந்து 11 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த நூலை எழுதியிருக்கிறார் சல்மா. அந்த நாவலின் அட்டைப்படம் பாதி இருளில் உட்கார்ந்திருக்கும் முக்காட்டுப் பெண் ஒரு சிம்பொலிக் ஆகத் தோன்றுகிறது எனக்கு. பின்னட்டையில் ‘புற உலகம் அறியாத பெண்களின் உள் உலகத்தை விரிக்கும் எழுத்து’ என்ற அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.
சல்மாவின் எழுத்துக்களை அவர் அதை எழுதியதன் பின்னாலுள்ள மன அழுத்தங்களை, ஆற்றாமையை, ஆத்திரத்தை கொஞ்சமும் கூடுதல் குறைவின்றி என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நெகிழ்தலுக்கும் புரிதலுக்குமுரிய மார்க்கத்தின் அடிப்படைகளை மறுதலித்து ஆண்வழிச் சமூகத்தில் வழி வழியாக வரும் கலாச்சாரத்துக்குள் நின்று பெண்களின் வாழ்வை நிர்ணயிக்கும் சமூக அமைப்புக் கட்டுமானங்கள் மூச்சுத் திணற வைப்பவை.
சல்மா கூறும் அளவிற்கு அடக்குமுறைகளும் சுரண்டல்களும் நான் வாழும் சமூகத்தில் இல்லை தான். எனினும்சல்மாவுடைய கதைமாந்தர்களும் பெண்களும் என்னைச் சுற்றியும் இருக்கிறார்கள். அவர்கள் என்னுடைய உறவினர்களாக அல்லது நெருங்கிய தோழியர்களாகக் கூட இருக்கிறார்கள். அவர்களுடைய முடிவற்ற துயரங்கள் என்னைத் துரத்திக் கொண்டேயிருக்கின்றன.
இந்த நாவலின் தலைப்பு மனாமியங்கள், மனாம் என்பது கனவு என்பதற்கான அறபுச் சொல். முஸ்லிம்களின் தமிழுக்குள் ஏராளமான அறபுச் சொற்கள் கலந்திருக்கின்றன. எங்களுடைய வீடுகளிலும் சாதாரணமாக கனவு காண்பதை மனாம் காண்பது என்று சொல்லுவோம்.
தூக்கத்தில் பர்வின் தலை தெறிக்க ஓடிக் கொண்டிருந்தாள்.அம்மாவும் ஹஸனும் இன்னும் சிலரும் அவளைத் துரத்திக் கொண்டு வருவதைப் பார்த்து இன்னும் கூட வேகத்தை அதிகப்படுத்தினாள்.யார் கையிலும் பிடிபட்டுவிடக்கூட்டாது என்கிற பதட்டம் வெறித்தனமாக அவளை ஓடவைத்துக் கொண்டிருந்தது.நீண்ட தாழ்வாரங்களை,தரைத்தளங்களை,சுவர்களைத் தாண்டி அவள் ஓடிக் கொண்டிருந்தாள். இப்படித்தான் இந்த நாவல் ஆரம்பிக்கின்றது.
சமுதாயத்தின் முரட்டுத்தனமான இறுக்கங்களிலிருந்து கனவிலும் நனவிலும் விரண்டோடிக் கொண்டிருக்கும் பெண்களைப் பற்றியும் அந்த பெண்கள், ஒதுக்கப் பட்ட வீட்டு மூலைகளிலிருந்து தங்களுக்கான வெளியை சிருஷ்டித்துக் கொள்வதற்கான போராட்டம் பற்றியும் தான் இந்த நாவல் சொல்கிறது.
சல்மா தன்னுடைய முன்னுரையில் சொல்கிறார். ‘இந்த நாவலுக்குள் நான் எடுத்திருக்கும் விஷயம் மதம் அனுமதிக்கும் உரிமைகளை இந்த சமூகம் பெண்ணுக்கு வழங்குகின்றதா என்பது தான்’
தன் கணவன் இன்னொருத்தியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வந்த போது தானே தன் விவாகத்தை முறித்துக் கொள்ளும் மெஹர்,சீதனமாக கார் வரவில்லையென்று வீட்டுக்கனுப்பட்டாலும் பிடிவாதமாய் தன் சொந்தக் காலில் நிற்க சமூகத்தின் புகைச்சலைப் புறக்கணிக்கும் பர்வீன், தகப்பன் தன் படிப்பை நிற்பாட்டி விடுவானென்ற அச்சத்தை மீறி நகையை வித்துக் குடு டாக்டருக்குப் படிக்கப் போகிறேன் என்று தாயிடம் சொல்லும் சிறுமி சாஜிதா,தனக்கென்றொரு தனித்துவமோ அடையாளமோ இல்லாத சுற்றியிருப்பவர்களின் வாழ்க்கைக்குள் நீர்த்துப் போன சுபைதா,கண் தெரியாததால் ஆணின் அருகாமையை சுகிக்கவோ தன் உணர்வுகளுக்கு வடிகால் தேடவோ வழியற்று 70 ஆண்டுகளைத் தாண்டிய ஆமீனா என்று பல்வேறு விதமான பெண்களின் மெலன்கொலிக்கான கதைகளூடே நாவலின் அத்தியாயங்கள் நகர்கின்றன.
இதில் வரும் ஆண்களில் அழுத்தமான பாத்திரம் மெஹரின் கணவன் ஹஸன் மாத்திரம் தான் எனலாம்.சவூதிக்குப் போன பின்னர் தான் மட்டும் தான் ஒழுங்கான முஸ்லிமென்றும் சுற்றியிருப்பவர்கள் அதிலும் குறிப்பாகப் பெண்கள் ஒழுங்கற்று அலைவதாகவும் சதாவும் குறைப்பட்டுக் கொண்டும், தான் மார்க்கம் என நம்புவதை மற்றவர்கள் மீது திணிப்பதுமாய் இந்த நாவலின் மிகுந்த எரிச்சலைக் கிளப்பும் பாத்திரம் ஹஸன்.
இயல்பாக இருக்கின்ற ஒரு முஸ்லிம் கிராமத்தின் கலாச்சாரத்தின் மீது எங்கோயிருக்கின்ற மத்திய கிழக்கின் கலாச்சாரக் கூறுகளை திணிப்பதை நிரம்ப யதார்த்தமாக சல்மா சொல்லியிருக்கிறார். சாதாரணமாக பருத்தியில் வெள்ளைத் துப்பட்டா அணியக் கூடிய பெண்களை வற்புறுத்தி முகத்தை மூடும் கருப்பு நிற அங்கி அணிவிப்பதிலிருந்து தொடங்கி எப்படியெல்லாம் பெண்களின் குறுக்கப்பட்ட உலகத்துக்குள் இருந்த கொஞ்ச நஞ்ச சந்தோஷங்களும் சுதந்திரங்களும் மத்திய கிழக்கு சென்று வந்தவர்களால் சுரண்டப்பட்டன என்பது நாவலில் சொல்லப்படுகிறது.
உலகத்திலுள்ள மொத்த முஸ்லிம் சனத்தொகையில் வெறும் 17% தான் மத்திய கிழக்குப் பிரதேசத்தில் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமூட்டும் செய்தி. அதிலும் ஆசியாக் கண்டத்தில் தான் முழு முஸ்லிம் சனத்தொகையில் 60% அதிகமான முஸ்லிம்கள் வாழ்கிறார்கள்.
மத்தியகிழக்கு இஸ்லாம் பிறந்து வளர்ந்த இடம் என்பதால் அங்கிருக்கும் கலாச்சாரத்தின் அத்தனை அம்சங்களையும் இஸ்லாம் மார்க்கத்தோடு சேர்த்து விளங்கிக் கொள்ளும் ஒரு பிரச்சினை இருக்கின்றது. மலேசியா, இந்தோனீசியா போன்ற முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் அவர்களுக்கே உரிய கலாச்சாரத் தனித்துவத்தை விட்டுக் கொடுப்பதில்லை. அவர்களது ஆடையமைப்புக்கள்,வாழ்க்கை முறைமை அவர்களது தட்ப வெப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப அமைந்துள்ளன.
ஆனால் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில், மத்தியக் கிழக்குக் கலாச்சாரத்தை , இஸ்லாமாக எண்ணிக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும்,அல்லது திணிக்கும் ஒரு முறை காணப்படுகிறது. அதை மறுதலித்தால் எதோ மத விரோதியாக நீங்கள் பார்க்கப் படும் ஒரு துரதிஷ்டம் வாய்க்கிறது. இன்னொரு பிரதேசத்தினது உடையை அணிவது அவரவர் சுதந்திரம்.எப்படி ஆங்கிலேயர்களின் ட்ரவுஸரை அல்லது இந்தியாவின் பஞ்சாபி உடையை தழுவி அணிகிறோமோ அவ்வாறே மத்தியக் கிழக்கின் ஆடைகளைத் தழுவி அணிவது தனிப்பட்ட சுதந்திரம் சார்ந்தது. ஆனால் நான் இங்கு பேசுவது திணிப்பைப் பற்றி.
இஸ்லாத்தில் திணிப்பு என்பதற்கு கொஞ்சம் கூட இடம் கிடையாது. ஆனால் நடைமுறையில் இந்த வற்புறுத்தலும் கலாச்சாரக் காவலும் தாரளமாக இடம் பெறுகின்றன. கதையில் ஓரிடத்தில் ஹஸன் அன்றாடம் தெருவிலிருக்கும் கரும்பலகையில் ஒரு ஹதீஸை எழுதுவான்.அவை எப்போதுமே முழுக்க முழுக்க பெண்களுக்கான அறிவுரையாக மட்டுமே இருக்கும்.
அறபு மொழியில் இருக்கக் கூடிய குர் ஆனிலிருதும் சரி, முஹம்மது நபியின் சொற்களான ஹதீஸ்களிலிருந்தும் சரி , தமிழ் விளக்கம் சொல்லும் போது ஆண்வழிச் சமூகம் பெண்ணுக்கான அறிவுரைகளைத் தனியாகப் பொறுக்கியெடுத்து அவற்றை அவளை நசுக்கவும் அவளது குரலை ஒடுக்கவும் பயன்படுத்தி வந்திருப்பதை யாரும் மறுக்க முடியாது, அது பற்றி இப்போது பல்வேறு தளங்களில் இஸ்லாமிய அறிஞர்களும் ,சிந்தனாவாதிகளும் பேசுகிறார்கள்.விவாதிக்கிறார்கள்.
முஹம்மது நபியின் மனைவி கதீஜா ஒரு விதவையாக இருந்தவர். அவரை மணக்க ஆண்கள் வரிசையில் நின்றிருந்தார்கள். ஒரு தேர்ந்த வியாபாரததைக் கொண்டு நடாத்திய அவர் 25 வயது முஹம்மது நபியை அவராக விரும்பிக் கேட்டு தன்னுடைய 40 ஆவது வயதில் திருமணம் முடிக்கிறார்.
ஆனால் அதற்கு விளக்கம் சொல்லும் போது முஹம்மது நபி ஒரு விதவைக்கு வாழ்வு கொடுத்தார் என்ற மேலோட்டமாகப் அந்தப் பெண் சார்ந்த அடையாளத்தை அல்லது பெறுமதியை அப்படியே தூக்கி வீசி விடுகின்ற ஒரு விளக்கம் தான் அனேகமாக முன்வைக்கப்படுகின்றது.
பெண் கல்வியை நிரம்பவும் ஊக்குவிக்கும் அதே இஸ்லாத்தின் பேரால் தான், சமூகம் பருவமடைந்தவுடன் பெண்கள் கல்வியைத் தொடர முடியாத நிலைக்கு ஆளாக்குகின்றது. அல்லது அவளது விருப்பங்களைக் கேட்காது கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இந்த மதத்திற்கும் சமூகத்தின் செயற்பாட்டிக்குமிடையிலான எப்போதுமே நிரம்பாத இடைவெளி பற்றி இந்த நாவல் முழுதும் வெளிப்பாடுகள் இருக்கின்றன.
நாவலில் வரும் மெஹர் தன்னிஷ்டப்படி குல்ஊ என்கிற விவாகரத்தைச் செய்து கொள்ள இஸ்லாத்துக்குள் பூரண அனுமதியிருந்தாலும்,அதை அந்த சமூகம் ஏற்றுக் கொள்ள முடியாமல் திண்டாடும் இரட்டை நிலைப்பாடும் இங்கு சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் அவளது கணவனோ எனக்கு இன்னொரு திருமணம் முடிக்க அனுமதியிருக்கிறது என்று இன்னொரு பெண்ணைக் கூட்டி வருகிறான். அவளின் வரவினால் தன் முதல் மனைவி,குழந்தைகளில் ஏற்படும் காயங்களையும் வலிமிகுந்த உணர்வுகளையும் ஹஸனால் அறியவோ புரிந்து கொள்ளவோ முடியாதிருக்கின்றது;
அன்பையும் அமைதியையும் விதைத்திருக்க வேண்டிய மார்க்கம் எப்படி ஒருவனை வன்முறையாளனாகவும், உணர்வுகளுக்கு மதிப்பளிக்க முடியாத ஜடமாகவும் மாற்றியிருக்க முடியும்.அந்தக் கேள்விக்குள்ளிருந்து கதை இன்னும் பிரயாணிக்கின்றது.
மனாமியத்தில், பெண்ணுலகத்தில் இருக்கக் கூடிய சின்னச் சண்டைகள்,பொறாமை கலந்த உணர்வுகள், காதல்,திட்டுக்கள்,வசவு, ஆவேசம் என்ற உணர்வுகள் நுணுக்கமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பெண் தன் வீட்டைத் தாண்டி சமூகப் பணிகளில் ஈடுபடுவதற்காக வெளிப் பிரவேசிக்கும் போது சமூகம் அவளுக்காகத் தயாரித்திருக்கும் வழமையான விம்பத்திலிருந்து வெளிச் செல்கிறாள். மிகுந்த இறுக்கமும் கட்டுக் கோப்புமான குடும்ப சூழலிருந்து தன் சொந்தக் காலில் நிற்கத் துடிக்கும் பர்வீன் எப்படி தனக்கான வெளியை தயாரித்துக் கொள்கிறாள்.
சமூகம் வாய் ஓயாது அவளை மென்று கொண்டிருந்தாலும் சுய உதவிக்குழுவொன்றை ஆரம்பித்து முன் செல்லும் பர்வீனின் பாத்திரம் ஆகட்டும், தன் வாழ்க்கையை தானே தீர்மானிப்பதென்ற உறுதி எடுக்கும் மெஹர் ஆகட்டும், தனக்கு வேண்டிய படிப்பைத் தான் படிப்பேன் என்று போராடி கல்லூரி செல்லும் சாஜிதாவாகட்டும் பெண் எவ்வாறு தன்னைச் சூழ்ந்துள்ள இயலாமைகளிலிருந்து தனக்கான இயலுமைகளையும் தைரியத்தையும் உற்பத்தி செய்து கொள்கிறாள் என்பதை தெளிவாகச் சொல்கின்றன.
எல்லாச் சமூகங்களிலிருந்தும் அதன் ஆதிக்கங்களை உடைத்துக் கொண்டு ,அதன் மெளனத்தைக் கிழித்துக்கொண்டு வித்தியாசமாகச் சிந்திக்கக் கூடியவர்கள் வெளிவரத் தான் செய்வார்கள். அந்தக் குரல்கள் இப்போது சன்னமாக இருந்த போதிலும் ,அந்தக் குரல்கள் தான் பின்னாட்களில் வரவிருக்கின்ற சமூகத்தின் போக்கினைத் தீர்மானிக்கப் போகின்றன.
அடுத்தது, இந்த நாவலில் வரும் கண் தெரியாமலேயே எழுவது வருடங்களைக் கடத்தி விட்ட ஆமினா நன்னியின் பாத்திர வார்ப்பு நான் மிக மிக நெகிழ்ந்து வாசித்ததொன்று. ஒலிகளாலும் வாசனைகளாலும் நிரம்பியிருக்கின்ற அந்த விழிகளற்ற உலகத்தை ஒரு பெண் எப்படி எதிர் கொண்டாள் என்பதை நிரம்ப நுண்மையாக சொல்லியிருக்கிறார் சல்மா.
“விபரம் தெரிந்த நாளிலிருந்து சத்தங்களை வைத்துத் தான் இந்த உலகைப் புரிந்து கொண்டு வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.அம்மாவை,அத்தாவை,சொந்தக் காரர்களை,கிழமைகளை ,மழையை உலை கொதிப்பதை,ஆட்டுரலில் மாவு அரைப்படுவதை என்று எல்லாமும் ஒலிகளும் வாசனையுமாகத் தான் இருந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது.வீட்டிலோ தெருவிலோ கறி வாசனை வந்தாலும் சாம்பிராணி வாசனை வந்தாலும் அது வெள்ளிக் கிழமை.தெருவில் தொழுகைக்குச் செல்கின்ற ஆண்களின் அத்தர் வாசனை ஜும் ஆத் தொழுகையைக் காட்டிக் கொடுக்கும்.
சிவாஜி ,எம் ஜீ ஆர் என்று அறியப்படுகின்ற மனிதர்களுக்கு அவள் தனக்குத் தானே உருவங்களை உருவாக்கி வைத்திருந்தாள்.பாடல்களின் வழியே அவர்களது தோற்றமும் வளர்ந்து கொண்டிருந்தது.ஒரு ஆண் எப்படியிருப்பான்,அவனது தோற்றம் எப்படி இருக்கும்,உடல்வாகு,மீசை ,தாடி இவையெல்லாம் மற்றவர்களின் பேச்சின் வழியே தான் அவளது மூளையில் இருந்ததே தவிர மற்றபடி, தான் இது வரை பார்த்தே இராத தொட்டுணராத ஒரு ஆணின் உடலைத் தனக்குத் தானே யோசித்து உருவம் கொடுப்பது சாத்தியமேயில்லை அவளுக்கு”
இந்த வரிகள்,இதைப்போன்ற இன்னும் பல வரிகளில் கண் தெரியாதவர்களின் உலகம் பற்றி அந்தப்பெண்ணுக்குள்ளாலே நின்று மிக நுணுக்கமாகச் சொல்லியிருப்பது அற்புதம் என்று சொல்வேன். ஆக மொத்ததில் மனாமியம் நாவல் conservatism பழமை பேணும் சமுதாயமொன்றில் பெண்கள் அனுபவிக்கும் துயர் மிகுந்த கதைகளின் தொகுப்பு.
ஹஸன் இரண்டாவதாகத் திருமணம் செய்யும் கதீஜா அவள் ஒரு வறுமைப்பட்ட குடும்பத்திலிருந்து வந்தவள் என்பதற்கப்பால் நாவலில் அதிகம் சொல்லப்படவில்லை. நாவலில் அந்தப் பாத்திரம் தன் உள்வெளிப் பற்றி பேசக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு கடைசிப் பக்கம் வாசிக்கும் வரை இருந்தது.
ஒரு இரண்டாவது மனைவி அவளது உணர்வுகள்,வெளிப்பாடுகள், அவளுக்குள்ளிருக்கும் அந்த உள்ளுலகம் எப்படியிருக்கும் என்பதையும் ,நாவலின் ஏதாவதோரிடத்தில் சல்மா சொல்லியிருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.
இதற்கு மேலதிகமாக இரண்டாம் ஜாமங்களின் கதைகளிலிருந்த ஏதோவொன்று மனாமியங்களில் Missing இல்லாமலிருக்கின்றது. அது என்னவென்று குறிப்பாகச் சொல்லத் தெரியவில்லை. இரண்டாம் ஜாமங்களின் கதைகளில் வரும் நுண்ணுணர்வுகள் சார்ந்த விபரிப்புக்கள், ஒன்றிலிருந்து இன்னொன்றாய் விரியும் உள் உலகங்கள், துயரங்களையும் வலிகளையும் மீறிய சந்தோஷங்களும் குதூகலங்களும் இவற்றில் ஏதோ ஒன்றோ அல்லது எல்லாமேயோ மனானியங்களில் மிஸ்ஸிங்.
சிலவேளை முதல் முறை சல்மாவினை வாசித்த அதே அதிர்வினையும் அனுபவத்தினையும் நான் இந்தப்பிரதியினூடகவும் எதிர்பார்த்ததன் விளைவாகக் கூட இந்த ஏமாற்றம் ஏற்பட்டிருக்கலாம்.
இதற்கு மேலாகச் சொல்வதனால், பலர் பேசவோ எழுதவோ தயங்கும் பாரம்பரிய முஸ்லிம் சமூகத்தினுள்ளிருக்கும் பெண்களின் மீதான சமூக ஆதிக்கத்தையும் அடக்குமுறையையும் தைரியமாகச் சொல்லிச் செல்கிறது இந்த எழுத்துக்கள்.
மொத்தத்தில், மார்க்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கும் சமூகத்தின் நடைமுறைகளுக்குமிடையில் அகன்று செல்லும் இடைவெளி பற்றியும் அதற்குள்ளே புழுங்கியும் நசுங்கியும் கொண்டிருக்கும் பெண்ணுலகம் பற்றியுமான ஒரு துக்கம் நிரம்பிய பதிவு தான் சல்மாவின் மனாமியங்கள்.
ஆகஸ்ட் 20,2016 விம்பம்’ அமைப்பினரால் லண்டனில் நடாத்தப்பட்ட நாவல் கருத்தரங்ககில் பகிர்ந்து கொண்டது. அதற்கும் இன்றைய நாளுக்குமிடையில் இது சார்ந்து இன்னும் பரிணாமமடைந்திருக்கிறேன்.
(நன்றி: ஷமீலா யூசுப் அலி)