சல்மாவின் மனாமியங்கள்

சல்மாவின் மனாமியங்கள்

எஸ்கிலஸ்(Aeschylus)எழுதிய புராதன கிரேக்க நாடகத்தில் ஒரு காட்சி வரும். ரோய் (Troy)மேல் படை எடுத்து வென்ற அகமனான்(Agamemnon) என்ற கிரேக்கத்தளபதி திரும்பித் தனது மாளிகைக்கு வெற்றிவீரனாக வரும்போது அவரது மனைவி(Clytemnestra) கொலை செய்து விடுகிறாள். அதற்காக மகனாகிய ஒரீஸ்ரஸ்(Orestes) தாயை(Clytemnestra) கொலை செய்கிறன். இந்த வழக்கு ஏதன்ஸ் நீதிமன்றத்திற்கு செல்கிறது. ஒரேஸ்ரஸ் தனது தாயை கொலை செய்ததை ஒப்புக்கொள்கிறான்.

கிரேக்க கடவுளான அப்போலோ போரில் வென்ற தளபதியை கொலை செய்தது தாயான பெண்ணைக் கொன்றதிலும் பார்க்க பாரதூரமான குற்றம். மேலும் தந்தையை கொல்வது தாயைக் கொல்வதிலும் பாவமானது என வாதிடுவதோடு, ஒரு தாய் தந்தையின் வம்ச உயிரை வைத்து பத்துமாதங்கள் பாதுகாக்கும் கலயமே என வாதிடுகிறார்.

இந்த வழக்கில் நடுவர்களாக இருந்த ஏதன்ஸ் நகரத்து மக்கள் இரண்டாக சமமாகப் பிரிகிறார்கள். முடிவு இல்லாதபோது ஏதன்சின் காவல் தெய்வம்(Athena) தகப்பனான சூசின்(Zeus) தலையில் இருந்து பிறந்தேன் எனக்கு தாய் தேவை இருக்கவில்லை’ என அப்போலா சார்பாகப் பேசி தனது வாக்கை ஒரேஸ்ரஸ் சார்பாக கொடுத்து அவனை விடுதலை செய்கிறாள்.

கிரேக்க நாடகத்தில் உயிரியல் உண்மையோ, தர்க்கமோ இல்லை. மதங்களைப் பின்பற்றுபவர்களிடம் அதை எதிர்பார்க்கமுடியாது என்பதை 2400 வருடங்கள் முன்பாகவே எஸ்கிலஸின் நாடகம் உணர்த்தியது.

சகல மதங்களும் ஆண்களை குடும்பத்தில் சர்வாதிகாரியாக்கியுள்ளது. யூதர்களின் மதத்தில் வயதாகிய காலத்தில் ஆபிரகாமிற்கு நடந்த திருமணத்தில் இருந்து, சகல காலத்திலும் கடவுள் பேசுவதும் ஆபிரகாம் – மோசஸ் ஆகிய ஆண்களிடம்தான். ஆபிரகாமிய வழித் தோன்றிய மதங்களான கிறீஸ்தவம் இஸ்லாத்திலும் ஆண்டவனுக்கு தொடர்பாக இருப்பது ஆண்களே.

கீழைத்தேச மதங்களில் அதிக வித்தியாசமில்லை. இந்து மதத்தில் சக்தி வழிபாடு இருந்தாலும் புராண இதிகாசங்களின் முடிவுகள் ஆண்களால் எடுக்கப்படுகிறது. மத்தியகாலத்தில் இருந்து இந்து மதத்தில் சிறுமிகளை மணம் முடித்தல், பின்பு விதவையாகினால் தலைமளித்து விலக்குதல், உடன்கட்டை ஏறுதல், ஆண்களுக்கு பலதாரமணம் என பல விடயங்கள் இருநூறு வருடங்கள் முன்பாக இருந்தது. புத்தர்கூட மிகவும் சங்கடத்துடன் பெண்களை அதாவது பிக்குணிகளை சங்கத்தில் ஏற்கிறார்.

இப்படியான மதங்களில் இளைய மதமான இஸ்லாம் பலவிடயத்தில் பெண்கள் விடயத்தில் முன்னேற்றமானது. சீதனம் அற்றதன்மை, கணவன் இறந்தால், மீளவும் திருமணம் முடித்தல். விருப்பமில்லாதபோது மணவிலக்கை இலகுவாக பெறுதல் என்பன மற்றமதங்கள் இன்னமும் அடையமுடியாத விடயங்கள்.
ஆனால், இஸ்லாம் போர்க்காலத்தில் உருவாகி போரிலேயே வளர்ந்தது. தொடக்க காலத்திலே பிரிந்ததால் அதன் உட்பிரிவுகளுக்கிடையே((Umayyad Caliphate -Damascus, Abbasid Dynasty. -Baghdad ,Fatimid Caliphate -Cairo)) உருவாகிய யுத்தம், பிற்காலத்தில் இஸ்லாம் வளரும்போது மங்கோலியர்களின் படையெடுப்பு, ஐரோப்பியர்களது சிலுவை யுத்தம், அதன்பின்பு ஒட்டமான் பேரரசின் விஸ்த்தரிப்பு யுத்தம் என தொடர்ந்து தற்காலத்திலும் யுத்த நெருக்கடியில் இருக்கும் மதம். இவைகளின் பிரதிபலிப்பு சாதாரணமானது அல்ல.

யுத்தகாலத்தில் மக்களின் உரிமைகளை அதிகாரிகள் தங்கள் வசம் எடுத்துக் கொள்வார்கள். நாட்டை, கலாச்சாரத்தை மட்டுமல்ல சாதாரண மக்களின் உயிர், உடமைகளைப் பாதுகாப்பதற்காகவும் அவர்கள் சர்வாதிகாரிகளாக மாறுவதை நாம் நமது நாடுகளில்கூட பார்த்திருக்கிறோம். வெளியே நின்று வாதிடுபவர்களில் இது சரியென்போரும் தவறென்போரும் உள்ளனர். இதைக் கருத்தில் கொண்டே பேர்டினட் ரஸ்ஸல், இஸ்லாமிய மதத்தை கம்மியூனிசத்தில் உள்ள பாட்டாளிகளின் சர்வாதிகாரத்திற்கு ஒப்பிடுகிறார். அங்கே கம்மியூனிஸ்ட் கட்சி அதிகாரங்களை எடுத்துக் கொண்டது வரலாறு.

சல்மாவின் நாவலான மனாமியங்களைப் படித்தபோது இப்படியான சர்வாதிகார அமைப்புகள் குடும்பங்களில் ஆண்களால் ஏற்படுகிறது என்பதும் இதை எதிர்த்து பெண்கள் திமிறுவதும், அடங்க மறுப்பதும், ஒத்துழையாமையும் தெரிகிறது.

மத நம்பிக்கை உள்ள ஆண்கள் மட்டுமல்ல, மதநம்பிக்கை இல்லாத ஆண்களும் ஒரு குட்டி சர்வாதிகாரிகள்தான். இதற்கு அவர்கள் உடலில் ஓடும் அண்ரோஜின் என்ற ஹோர்மோன் காரணம். ஆனால், மற்ற சமூகங்களில் கோட்பாடாக ஒருவிதியைச் சொல்லி கட்டுப்படுத்த முடியாது. ஆனால், ஷரியத், ஈமான் என்று சொல்லி கட்டுப்படுத்த இஸ்லாம் மார்க்கத்தில் முடியும்.

சல்மாவின் தமக்கையின் மகனால், தாய்க்கும் சிறிய தாய்க்கும் மதத்தை பாவித்து பல விடயங்களில் அறிவுரை சொல்லும் தகுதியை இஸ்லாம் மதம் கொடுத்திருக்கிறது. (சல்மா ஆவணப்படம்)

மற்றவர்கள் சொல்வதுபோல் மனாமியங்கள் பெண்களின் உலகமாக விரிகிறது என சிலர் எழுதியிருப்பது நாவலை புறந்தள்ளும் ஒரு செயலாகும். தற்காலத்தில் இஸ்லாமிய உலகம் மிகவும் நெருக்கடிக்குள்ளாகிறது. முக்கியமாக மேற்கத்திய முதலாளித்துவம் ஆணையும் பெண்ணையும் பொருளாதாரத்தின் உற்பத்திக் கருவிகளாக பார்க்கிறது. அப்படி உற்பத்தியில் ஈடுபடும்போது தொழில் நுட்பமும் கல்வியும் பெண்களுக்கும் தேவைப்படுகிறது. இதற்குப் பெண்கள் வெளியே செல்லவேண்டும். ஆண்களுடன் சேர்ந்து படிக்கவேண்டும். இதனை பாரம்பரிய இஸ்லாம் எதிர்க்கிறது.

அடிப்படைவாதமான வகாபிசத்தை தனது கொள்கையாகக் கொண்ட சவூதி அரேபியாவில் எண்ணெய் இருப்பதால் அவர்களால் பெண்களை தனியே வெளியே அனுப்பாமலோ, அல்லது வாகனம் செலுத்தவிடாமலோ வைத்திருக்கமுடியும். ஆனால், எண்ணெயற்ற நாடுகள் மற்றும் இஸ்லாமியர்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் இந்த வகாபிசக்கொள்கைகள் பிரச்சினையைக் கொடுக்கும்.

சல்மா தனது நாவலில் எடுத்த விடயங்கள் எல்லோருக்கும் பொதுவானவை.

‘ஹசன் சவூதியிலிருந்து வந்தபிறகுதான் அவனது அடாவடித்தனம் தாங்கவியலாமல் கூடிப்போயிற்று .
‘இனிப் பர்தாவோடு கண்ணுகூட வெளியில தெரியக்கூடாது என அங்கிருந்தே பர்தாவைக் கொண்டுவந்தான்
முன்பெல்லாம் அணிந்திருக்கும் நகைகளும் உடுத்தியிருக்கும் சேலைகளும் கொஞ்சமாவது வெளியில் தெரியும். இவளுக்கு மற்ற பெண்டுகளிடம் காட்ட சந்தோசப்பட ஏதுவாக இருக்கும்
பர்தா அணிய ஆரம்பித்த பிறகு எதற்காக நல்ல சேலை உடுத்தணும் என சலிப்புத்தான் உண்டாயிற்று.

ஹசன் சவூதியிலிருந்து திரும்பியபோது பணத்துடன் மட்டும் வரவில்லை. வகாபிசத்தை காவிக் கொண்டு வந்து தனது வீட்டை மட்டுமல்ல முழுக்கிராமத்தையும் நெருக்கடியில் தள்ளும்போது அங்கு அவனால் அவனது குடும்பம் குழந்தைகள் தங்கை அம்மா என சகலரும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் ஹசன் தனது பிள்ளைகளை மனைவியை இழக்கிறான். அவர்களது பாசத்தை இழப்பதை சல்மா காட்டுவது குடும்பக் கதையையோ பெண்களின் வலியையோ காட்டுவது மட்டுமல்ல தற்போதைய இஸ்லாமிய குடும்பங்களில் நடப்பது என்ன…? என்ற வட்டத்திற்கு அப்பால் சர்வதேசியமான விடயம்.

இதேவேளையில், ஆண்கள் செய்யும் விடயங்கள் அவர்கள் தெரிந்து செய்வதில்லை. ‘ஆம்பிளை எப்படி இருந்தால் பொட்டச்சிக்கு என்ன? இஸ்லாத்தில் நாலு கல்யாணம் செய்வது தப்பில்லைத்தானே ‘ என யோசித்தான்.

சிறுமிகளை பெரியவர்களுக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்துவைப்பது இஸ்லாமில் மட்டுமல்ல, இந்தியாவில் இந்துக்கள் மத்தியிலும் மற்றும் ஆபிரிக்க நாடுகளிலும் நடக்கிறது. இது மதம் சார்ந்த விடயமல்ல. பெண்களை சுமையாகக் கருதி அவர்களை தங்கள் பொறுப்பில் இருந்து வெளித்தள்ள காலம் காலமாக நடந்த நடக்கும் விடயம். இதற்கும் முக்கிய காரணம் வறுமையும் பெண்குழந்தைகளுக்கு கல்வியறிவற்ற சூழலுமே.

இந்நாவல், கல்வியறிவற்ற நிலையில் பெண்களிடம் வைத்தியர்கள் காசுக்காக எப்படி நடந்து கொள்ளுகிறார்கள் என்பதைச்சொல்வதன் மூலம் தற்போதைய மருத்துவத்தின் நிலையை தெரிவிக்கிறது. காதல் வரும்போது அதற்கு ஜாதி மதம் இனமென வேறுபாடு தெரிவதில்லை. சிவகாமி சபதத்தை முடித்துவிட்டாளா? என்பதுபோல் பர்வீனது காதலுக்கு என்ன நடந்தது? என ஒரு கேள்வி என்னுள்ளத்தில் எழுந்தது.

இந்நாவலில் எனக்குப் பிடித்த இடம் குழந்தைகளின் மனநிலையை கொண்டுவரும் காட்சிகள். முழுக்குடுப்பத்தின் அவலத்தினதும் காரணம், ஹசன் சவூதியில் இருந்து கொண்டு வந்த வஹாபியிசம் என்றாலும், சிறுபிள்ளையான சாஜிதாவுக்கு அப்பாவின் இரண்டாவது மனைவியான கதீஜா முண்டை மீதுதான் ஆத்திரம் வருகிறது. சிறுபிள்ளைகள் காரணத்தை எதிரில் உள்ள நிஜங்களில்தான் தேடுவார்கள். பெரியவர்கள்தான் அரூபங்களைத் தேடுவதும், அதற்காக வாழ்வியல் இன்பங்களை துறப்பதும் மட்டுமல்ல, உயிரைவிடுவதுமான காரியங்களிலும் ஈடுபடுவார்கள்.

நாவல்களில் மக்கள் மனதில் இடம்பெற அசாதாரண பாத்திரங்களை கொண்டுவருதல் நல்லது என படைப்பிலக்கிய நாவலாசிரியர்கள் நினைப்பார்கள். அசாதாரணமான சம்பவங்களை கோர்வையாக்கி, பிரபலமான நாவல்களை மற்றையோர் உருவாக்குவார்கள். இரண்டிலும் அற்று சமூகத்தில் சாதாரணமானவர்களை வைத்து சாதாரணமான சம்பவங்களைக் கொண்டு மனதில் இடம் பெறவைக்கும் நாவலும் படைக்கலாம் என்பதை சல்மா உணரத்தியுள்ளார்

சல்மாவின் நாவல் பல விடயங்களில் முக்கியமானது. பெண் எழுத்துகளில் முதன்மையானது. ஈழத்து எழுத்துகளில் காணப்படும் கத்தாசிஸ்(Catharsis) எனப்படும் வலியை எழுத்தில் எழுதிச் செல்கிறது.

என்னுடன் சல்மா பேசியபோது இந்நாவலில் பல பகுதிகளை சிலகாரணத்தால் நீக்க நேர்ந்தது என்றபோது எனக்கு கவலையாக இருந்தது. ஆனாலும் நிலவின் நிழலான மறுபக்கம்போல் இலக்கியத்தில் அதிகம் வெளிப்படாத பகுதியை எமக்கு வெளிப்படுத்தியதற்காக சல்மாவிற்கும் காலச்சுவட்டிற்கும் நன்றி கூறவேண்டும்.

(நன்றி: நொயல் நடேசன்)

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp