இந்தியப்பண்பாடு – கலாச்சாரம் – நாகரிகம் தொடர்பாய் ஆயிரம் நல்ல சங்கதிகள் சொல்லமுடிந்தாலும் இந்த மண்ணின் ஒற்றைக் கொடுமையானது அவற்றையெல்லாம் ஒன்றும் இல்லாமல் செய்ய முடிகிறது என்றால் அதன் பெயர், 'சாதி'.
உலக அளவில் சாதியை விட வீரியமும், விசமும் கொண்ட இன்னொரு சமூகக் கொடுமை இருக்கிறதா என்றால் சந்தேகமே.
இந்த சாதிக்கொடுமை குறித்து- அதைக் களைந்தெடுத்து மானுடம் பேணுவது குறித்து ஒட்டுமொத்த சமூகமும் கள்ளமௌனம் சாதிப்பதையே இங்கே காண முடிகிறது. குடும்பம், நட்பு, பொதுவெளி, கல்விக்கூடம், அரசு அமைப்பு, ஊடகம் என்று எல்லா சமூக நிறுவனங்களிடமும் வன்மம் மிகுந்த இந்த கள்ள மௌனத்தைக் காணமுடிகிறது.
இச்சூழலில் தேசம் ஊரும், சேரியுமாய் உடைபட்டுக்கிடக்கும் யதார்தத்தை ரத்தமும், சதையுமாய் கண்முன்னே நிறுத்துகிறது எவிடென்ஸ் கதிர் எழுதி விகடன் பிரசுரமாய் வெளிவந்திருக்கும் 'சாதி தேசத்தின் சாம்பல் பறவை'- புத்தகம்.
மனித உரிமைப் போராளியாக கடந்த இருபது ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருப்பவர் எவிடென்ஸ் கதிர். அந்த நெடும் போராட்டத்தில் சந்தித்த நபர்கள், சம்பவங்கள், சவால்கள், வெற்றி- தோல்விகள், படிப்பினைகளை தனக்கே உரித்தான பாணியான எவிடென்ஸ் உடன் கதைகளாகச் சொல்லியிருக்கிறார் கதிர்.
முழுப்புத்தகத்தையும் வாசித்து முடித்ததும் வரலாறின் மிக முக்கிய ஆவணத்தை வாசித்த உணர்வு ஏற்பட்டது. உலகம் முழுக்க வரலாற்று ஆசிரியர்கள் மன்னரை அடியொற்றிய மரபுரீதியான வரலாற்றுப்பதிவுகளைப் புறந்தள்ளுகிறார்கள். மாறாக சராசரி எளிய மக்களின் சமூக- பொருளாதார- அரசியல்- பண்பாட்டு வாழ்வியலை மட்டுமே வரலாறாய் முன் நிறுத்தும் அறிவியல்பூர்வமான மனித நேயப் போக்கு ஏற்பட்டிருக்கிறது. அந்த வகையில் 'சாதி தேசத்தின் சாம்பல் பறவை' – நம் மண்ணின் ஐம்பது ஆண்டு சமகால வாழ்வியலை- வரலாறை புனைவின்றி பேசும் ஒற்றை ஆவணம் என்றே அடையாளம் காண்கிறேன்.
கீழவெண்மணியில் தொடங்கி கௌசல்யா, விஷ்ணுபிரியாவில் நிறைவு பெற்றிருக்கும் இப்புத்தகத்தில் ஐம்பதாண்டு கால சமூக வரலாறு நூற்றுக்கணக்கான சம்பவங்களின் ஊடாக பயணப்படுகிறது.
கதிர் தனது 20 ஆண்டுகாலக் களப்பணியில் சந்தித்த பல்வேறு சம்பவங்களோடு தான் வாசித்த ஆய்வு செய்த சம்பவங்களையும் இணைத்திருப்பதால் இப்படியான முழுமை இந்த நூலுக்குக் கிடைத்திருக்கிறது. எனவே இவர் கால கட்டத்துக்கு முந்திய 1968 ஆம் ஆண்டுச் சம்பவங்களைப் பற்றியும் அறியமுடிகிறது. தமிழகத்துக்கு வெளியே நடத்த தலித் அடக்குமுறைச்சம்பவங்களான ரோஹித் வெமூலா, ஜிஷா போன்றவர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளையும் எழுதியிருக்கிறார்.
ஒவ்வொரு சம்பவங்களையும் உணர்வுத்தூண்டல்களோ அலங்கார வார்த்தைகளோ இல்லாமல் இயல்பாய் எழுதியிருக்கிறார் கதிர். தான் தாக்குதலுக்கு உள்ளான சம்பவத்தைக் கூட செயப்பாட்டு வினையில் சொல்லியிருப்பது ஒரு உதாரணம். ஒருவகையில் சம்பவங்களின் வீரியமே வாசிப்புக்குப் போதுமானதாக இருப்பதால் அத்தகைய மேல்பூச்சுக்கள் எதுவும் இல்லாமலேயே கரிசனம் கலந்த ஆர்வத்துடன் புத்தகத்தை வாசிக்க முடிகிறது.
சாதியையும் தாண்டி, கொத்தடிமை ஒழிப்பு, சித்திரவதை ஒழிப்பு, பெண்ணுரிமைப் போராட்டம் என்று ஆசிரியர் பரவலான மனித உரிமை மீட்புச் செயல்களில் ஈடுபட்டு வருவதால், புத்தகத்திலும் சாதி தாண்டி ஏனைய மனித உரிமைச் சங்கதிகளும் இடம் பெற்றிருக்கின்றன.
ஆரம்பத்தில் இந்தப் புத்தகத்தைக் குறித்து நான் வேறுமாதிரி நினைத்திருந்தேன். எவிடன்ஸ் அமைப்பிடம் உதவி கோரி வருபவர்களின் சிக்கல்கள் மற்றும் அவற்றைத் தீர்க்க எவிடென்ஸ் எடுத்துக் கொண்ட முயற்சி மற்றும் வெற்றியின் தொகுப்பாக புத்தகம் அமைந்திருக்கும் என்பதே எனது கணிப்பாக அமைந்திருந்தது. ஆகப்பெரும்பாலும் அப்படியான சம்பவங்களின் தொகுப்பாய் புத்தகம் இருந்த போதும், களப்பணி அனுபவத்தையும் தாண்டி தொலை நோக்குப் பார்வை கொண்ட சிந்தனையாளரின் கருத்துத் தொகுப்பாகவும் புத்தகம் அமைந்திருக்கிறது.
உதாரணமாக குடும்ப உறவு, கல்விக்கூடம், கோவில், அரசியல், அரசு, நீதிமன்றச் செயல்பாடுகள், என்கவுண்டர், காதல், இயற்கையை அழிக்கும் சுற்றுலா கட்டிடங்கள், தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றில் சாதியின்தாக்கமும், செயல்பாடும் குறித்து ஆசிரியரின் கருத்துக்கள் ஆழமானவை. தனித்துவமானவை. சமத்துவ சமுதாயத்தை உறுதிப்படுத்த அவசியம் எல்லோராலும் முன்னெடுக்கப்பட வேண்டியவை.
இத்தனை செறிவான சங்கதிகள் இருந்த போதும் கதைகள் படிப்பது போன்ற சுவாரஸ்யத்துடன் புத்தகமுழுமையும் அமைந்திருப்பது படைப்பின் வெற்றி.
சாதியம் எனப் பேசும் போது, பிற்படுத்தப்பட்டவரை விட தாழ்த்தப்பட்டவரே பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். அதிலும் தீண்டாமைக் கொடுமை என்பது தாழ்த்தப்பட்டவர்கள் மீது மட்டுமே திணிக்கப்பட்டிருக்கும் வன்கொடுமையாகும். எனவே இந்த இரு தரப்பினருக்குமான பாதிப்பு ஒரே தன்மையிலானது அல்ல.
மட்டுமல்ல.
நடைமுறையில் தலித் மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து வகையான சாதியக் கொடுமைகளும் பிற்படுத்தப்பட்ட மக்கள் தலித் மீது நிகழ்த்தும் வன்கொடுமைகளே.
இதையே, ஆசிரியர்,
“எல்லா கொடுமைகளுக்கும் உயர் சாதியினர் காரணம் என்று எளிதாக தப்பித்துக் கொள்ளும் கருத்தியல் தந்திரம் களத்தில் எடுபடாது. உயர்(?) சாதியினரைவிட இடை நிலை சாதியினர்தான் சாதிய வன்மத்தில் பெருமளவு ஈடுபடுகின்றனர். ஆனால் நாம் கருத்தியல் ரீதியாக உயர்சாதியினரை மட்டும் எதிர்த்து வருவோம். இடை நிலை சாதியினரை குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக்கமாட்டோம். ஆனால் களம் இதையெல்லாம் கண்டுபிடிக்கும். ஆகவே களத்தின் உண்மைகள் பலருக்கு கசப்புகளை ஏற்படுத்தும். ஆனால் கசப்பு என்பதனால் உண்மையைக் கூறாமல் இருக்க முடியாது.” – என்று கூறுகிறார்.
இந்தக் கருத்து, இடது சாரிகள், பெரியாரிஸ்ட், அம்பேத்கரிஸ்ட் மற்றும் இதர முற்போக்குச் செயல்பாட்டாளர்கள் மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய – செயல்பாடுகளை மறு ஆய்விட உதவும் கருத்தாகும்.
சாதி பற்றிய சம்பவங்களை மட்டுமல்லாமல் சாதியை ஆய்வு நோக்கில் பேசும் நெடும் புத்தகத்தில் சாதிக்குக் காரணமான வர்ணம் – மதம் பற்றியோ இதனை உருவாக்கிக் காப்பாற்றிவரும் பார்ப்பனியம் பற்றியோ ஒற்றைச் சொல் கூட இல்லாதது வியப்பினைத் தருவதாய் அமைந்திருக்கிறது.சாதியின்தோற்றத்தை, உயர் நிலையிலிருந்தபடியே அதைக் கட்டிக் காக்கும் பார்ப்பனியத்தைப் பேசுவதை விட பேசாமல் விடுவதே தலித்துக்கள் துயர் துடைக்க ஏதுவாய் இருக்கும் என்பது ஒருவேளை ஆசிரியரின் நம்பிக்கை போலிருக்கிறது.
“தீண்டாமை ஒரு குற்றம்- பாவச்செயல்” – என்று ஒற்றை வரியில் தனது கடமையை முடித்துக் கொள்ளும் பள்ளிக் கூடங்களில் கிடைக்காத வாழ்க்கைப் பாடத்தை தமிழனாய் பிறந்த ஒவ்வொருவரும் கற்றாக வேண்டும். அதை நீக்க செயல்பட்டாக வேண்டும். பிறிதின் நோய் தன்னோய் போல் கருதாத அறிவினால் ஆவது எதுவும் உண்டா? எனவே அதற்கான தொடக்கமாக தீண்டாமைக் கொடுமையை சரியான கோணத்தில் புரிந்துகொள்ள எல்லோரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம், 'சாதி தேசத்தின் சாம்பல் பறவை'.
அடுத்த தலைமுறைக் குழந்தைகளும் நமது தேசம் பற்றியும் சமூகம் பற்றியும் தெரிந்துகொள்ள வாய்ப்பாக கள ஆய்வு உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் சமகால சமூக வரலாறாய் வெளிவந்திருக்கும் 'சாதி தேசத்தின் சாம்பல் பறவை' -புத்தகம் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு பாடமாய் வைக்கப்படவேண்டும்.
மிக நல்ல தொடக்கம் இது கதிர். மிகச் சிறந்த படைப்பாய் வெளிவந்திருக்கிறது. கருக்கொண்ட வீரியம் போலவே எல்லோரையும் சென்றடையும். சமுதாயத்தில் நல்லதொரு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது திண்ணம்.
குரலற்றவர்களின் குரலாய் அமைந்திருக்கும் உங்கள் எழுத்துப்பணி தொடரட்டும். அடுத்தடுத்து இது போன்ற படைப்புக்களை எதிர்பார்க்கிறேன்.
“பாதிக்கப்பட்ட மக்கள் உயிரையும் மானத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்காக கதறுகிற போதெல்லாம் அவர்களோடு இருந்து நானும் கதறுவேன். ஒரு நாளும் அவர்களை என்னால் காப்பாற்ற முடியவில்லை.” – என்று கண்ணீர் விடும் சாம்பல் பறவையே… கவலையை விடு. எல்லோரும் இணைவோம். நம்பிக்கையுடன் உழைப்போம். சமத்துவத்தை நிலை நாட்டி உன் இறகுகளின் சாம்பல் உதிர்த்து மீண்டும் நீலமாக்குவோம்.
சேசசமுத்திரத் தேர்கள் எரிபடுவது நிற்கட்டும். இனி யாவரும் இணைந்து ஊர் கூடி சமூகநீதித் தேர் இழுப்போம்.
(நன்றி: மாற்று)