பயணங்கள் எப்போதுமே சுகமானவை. அதிலும் அனேக சிறுவர்களுக்கு பயணங்களின் மீது பெரும் காதலிருக்கும். பயணப்படும் ஊர் பற்றியோ, அங்கே காணப்போகும் அரிதான விஷயங்கள் பற்றியோ எவ்வித அக்கரையுமின்றி இருப்பதைக் காணமுடியும். அவர்களுக்குப் பயணங்கள் மட்டுமே புத்துணர்ச்சியைக்கொடுக்கும்.
ஒரு குடும்பம் கடல் வழிப் பயணம் மேற்கொள்கிறது. எதிர்பாராத விதமாகப் புயல் தோன்றக் கப்பல் உடைந்து நீர் உள்ளே வரத்தொடங்குகிறது. குடும்பத்தின் தலைவனும், தலைவியும் அவர்களது பிள்ளைகளுடன் சிறுபடகில் தப்பிக்க நினைக்கிறார்கள். அப்போது கப்பலில் இருக்கும் வளர்ப்பு பிராணிகளையும் காப்பாற்றவேண்டுமென்று ஒரு பிள்ளை கூற, அதற்கான ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, இவர்கள் தப்பி, பக்கத்தில் இருக்கும் ஒரு தீவில் கரை ஒதுங்குகிறார்கள்.
இதுநாள் வரை பழகப்பட்ட எதுவுமே அங்கில்லை. எல்லாவற்றையும் புதியதாகத் தொடங்கவேண்டிய நிலை. அக்குடும்பம் அங்கே தங்குவதற்கான வீடு கட்டிக்கொள்கிறது. வேட்டையாடுகிறது. உணவருந்துகிறது. உறங்குகிறது. வாழ்க்கையை புதியதாக அந்தத் தீவிலேயே தொடர்கின்றனர்.
அங்கே அவர்கள் சந்தித்த அனுபவங்கள், எதிர் கொண்ட புதிய மனிதர்கள் என்று வெகு சுவாரஸ்யமாக, ஜோகன் டேவிட் வைஸ்- எழுதி, 1812ல் வெளியான ‘swiss family robinson’ என்ற இளையோருக்கான நாவலின் கதைச்சுருக்கம் தான் மேலே சொன்னது.
இக்கதையை காமிக்ஸ் வடிவத்திலும் சினிமா, தொலைக்காட்சி தொடர்கள் வடிவத்திலும் மேலைநாட்டவர் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள்.
சுகுமாரன் தமிழாக்கத்தில், ‘கருணைத் தீவு’ என்ற பெயரில் வானம் பதிப்பகத்தின் வழியே வெளிவந்துள்ளது.
சாகசங்களில் ஈடுபாடுடைய பதின்ம வயது சிறுவர்கள் நிச்சயமாக இக்கதையை வாசிப்பதில் ஆர்வம் காட்டுவர்.