சு. வெங்கடேசனின் 'காவல் கோட்டம்'

சு. வெங்கடேசனின் 'காவல் கோட்டம்'

யாரிடமோ பேசிக்கொண்டிருந்த போது அம்மா சொன்னார்.

"தேவிடியா வாக்கு...அப்படியே பலிக்கும் பாத்து நடந்துக்க". என் அம்மாவை இன்னொரு பெண்ணாக அன்றுணர்ந்தேன். அம்மா அப்படி சொன்னதன் திகைப்பு அடங்க நெடுநாள் ஆனது.

ஆண்களை திறனையும் பெண்களை பாலியல் ஒழுக்கத்தையும் மட்டுமே கொண்டு அளவிடும் ஒரு கிராமத்துப் பெண்ணிடமிருந்து அப்படி ஒரு வார்த்தை எதிர்பார்க்கக் கூடியது அல்ல.

இன்றைய இளைஞன் என்பவனின் அதிகப்டச கனவு ஒரு ஐரோப்பியனாகவோ அமெரிக்கனாகவோ தன்னை மாற்றிக் கொள்வது தான். ஒவ்வொருவரும் தன் வலுவுக்கும் வாய்ப்புகளுக்கும் ஏற்றவாறு ஒரு "உயர் நாகரிகத்தை" அடைய முயன்றபடியே உள்ளனர். அது பெரும்பாலும் இன்னொன்றாக இங்கில்லாத மற்றொன்றாக தன்னை மாற்றிக் கொள்வதில் போய் முடிகிறது. முற்போக்கானவர்களாக மூட நம்பிக்கைக்கு எதிரானவர்களாக நாகரிகமானவர்களாக தன்னை எண்ணிக் கொள்ளும் ஒவ்வொருவரும் வெற்றிகரமாக ஒரு ஐரோப்பிய கருத்தியலுக்குள் தன்னை பொருத்திக் கொள்ளக் கூடியதற்கான பயணத்தில் இருப்பவர்களே. நம் நவீன சமூகம் நாடு முழுக்க கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கல்வியால் உருவாக்கப்பட்டது. ஆகவே ஒரு சில குடும்ப பழக்கங்களைத் தாண்டி நவீன கல்வி கற்ற இரண்டு தலைமுறை மனிதர்களுக்கும் தேசம் குறித்த பார்வை பொதுவானதாகவே இருக்கும். அவற்றின் சரி தவறுகள் மிக திட்டவட்டமாக வகுக்கப்பட்டிருக்கும்.

அப்படி திட்டவட்டமாக வகுக்கப்பட்டவற்றின் மேலேயே ஒரு இளைஞன் தன் வாழ்வினை அமைத்துக் கொள்கிறான். ஒழிக்கப்பட்ட பழக்கங்களையும் நடைமுறைகளையும் எந்தக் கண் கொண்டு அன்றைய பிரிட்டிஷ் நிர்வாகம் பார்த்ததோ அதே கண்கள் வழியாகவே இவ்விளைஞனும் தரிசிக்கிறான். ஆகவே தன்னுடைய "உயர் நாகரிக" அடையாளத்தை தக்க வைக்க அவன் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் அப்பாற்பட்டு முந்தைய காலங்களின் நீதிகளை "தீங்கானவை" என ஒதுக்க வேண்டி இருக்கிறது. ஆனால் வரலாறு மேலு‌ம் துலக்கம் பெறும் போது மானுடவியல் இன வரைவியல் போன்ற துறைகளின் அறிவோடு வரலாற்றை அணுகும் போது விக்டோரிய ஒழுக்கவியலின் பிடி மெல்லத் தளரும் போது சமூகத்தை உற்று நோக்கும் ஒரு இளைஞன் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்த கருப்பு வெள்ளை சித்திரங்களைக் களைந்து உண்மைக்கு அருகே செல்ல முடிகிறது. அங்கிருந்து நோக்குகையில் இந்திய சமூகம் அடைந்திருக்கும் பரிணாம வளர்ச்சியை பிரிட்டிஷ் அரசு உருவாக்கிக் கொடுத்த அறிவடிப்படைகளைக் கொண்டு ஆராய முடிகிறது. வரலாற்றின் மீதான வெற்றுப் பெருமிதங்களை அல்லது வெறுப்புகளைக் கடந்து அதனை நெருங்கி ஆராயும் ஒரு மனநிலை உருவாகிறது. ஆய்வடிப்படையில் முடிவுகளை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற மனநிலை உருவாகும் போது புனைவுகளிலும் அது எதிர்பார்க்கப்படுகிறது. கறாரான புறவயமான தகவல்களைக் கொண்ட ஒரு பாவனையை புனைவு மேற்கொள்ள வேண்டி இருக்கிறது.

உலகளாவிய கல்வியின் பரவலாக்கத்திற்குப் பின் புனைவுகளில் நாவல் வடிவம் பெரும் பாய்ச்சலை அடைந்திருக்கிறது. பெருங்கதையாடல் (grand narration) எனும் கதை சொல்லல் முறை இன்று அதன் உச்சத்தை எட்டியிருக்கிறது என்றே சொல்லலாம். ஜெயமோகனின் விஷ்ணுபுரம் கொற்றவை எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி யாமம் போன்றவை பெருங்கதையாடல்களைக் கொண்ட சிறந்த படைப்புகள். போரும் வாழ்வும் நாவலின் வழி டால்ஸ்டாய் பெருங்கதையாடலின் வெற்றியைத் தொடங்கி வைத்தார். நெப்போலியன் ரஷ்யாவின் மீது படையெடுப்பது ரஷ்யா திருப்பித் தாக்குவது என பதினைந்து வருடங்கள் நீளும் இரண்டாயிரத்து நானூறு பக்கங்களைக் கொண்ட பெரு நாவல் போரும் வாழ்வும். சந்தோஷத்தோடு மட்டுமே வாழத் தெரிந்த ஒரு மிகச் சாமானிய பழங்குடி விவசாயி ஒருவனிலிருந்து ஜார் சக்ரவர்த்தி நெப்போலியன் என வரலாற்று மனிதர்கள் வரை அந்நாவல் விரிந்து பரவும். நான் வாசித்தவற்றில் அத்தகைய பெருங்கதையாடல் கொண்ட மற்றொரு முக்கியப் படைப்பு கேப்ரியல் கார்சியா மார்க்கேஸின் "தனிமையின் நூறு ஆண்டுகள்". ஸ்பெயினில் இருக்கும் மகோந்தா என்ற புனைவு நிலத்தின் நூறாண்டு வாழ்க்கையை அந்நிலத்தை கண்டறிந்தவரான ஹோசே அர்க்காதியோ புயேந்தியாவின் வம்ச வரலாறோடு இணைத்துச் சொல்லும் நாவல் அது. மகாபாரத மறு ஆக்க முயற்சியான ஜெயமோகனின் வெண்முரசு இதிகாச காலத்தின் இந்திய வரலாற்றையும் பண்பாட்டையும் மறு கட்டுமானம் செய்யும் பெரு முயற்சி. தமிழில் வெகு நாட்கள் நீடிக்கப் போகும் பெருநாவலாக வெண்முரசு இருக்கும்.

பெருங்கதையாடல்கள் ஏன் தேவைப்படுகின்றன? கவிதை நுண்மையைத் தேடும் வாசகர்களுக்கானது. அதன் வாசகப் பரப்பு சிறியதாகவும் தீவிரமானதாகவும மட்டுமே இருக்க முடியும். சிறுகதையை எவ்வளவு செறிவாகவும் விறுவிறுப்பாகவும் அமைத்தாலும் இறுதி திருப்பத்தில் தான் அது தன் உயிரை வைத்துள்ளது. மேலும் சிறுகதைகளை நிறைய வாசிக்கும் ஒரு வாசகன் சில ஆண்டுகளில் அந்த திருப்பத்தைக் கண்டறியக் கூடியவனாகி விடுகிறான். அதே நேரம் சிறுகதைக்கு புதுமையான கதைக்களங்கள் தேவைப்பட்டபடி இருக்கின்றன. மிக நுண்ணிய அவதானிப்புகளை நிகழ்த்தக் கூடியவர்களால் அதிலும் ஒரு முரணைக் கண்டறியக் கூடியவர்களால் மட்டுமே நிலைத்து நிற்கும் சிறுகதைகளை எழுத முடிகிறது. கவிதையைப் போல சிறந்த சிறுகதைகளும் வரும் காலங்களில் நுண்மை நோக்கியே நகரும் எனத் தோன்றுகிறது. ஆகவே வாசிப்பை கலை நுட்பத்தோடு அறிவுச் செயல்பாடாக தக்க வைக்க இன்றைய நவீன இளைஞனின் மொழியில் பேசி அவனை உள்ளிழுக்கும் வடிவமாக நான் நாவலைக் காண்கிறேன். தகவல்கள் கொட்டிக் கிடக்கும் இக்காலத்தில் ஒருவர் விரும்பாமல் இருந்தால் மட்டுமே தகவல்கள் செவிப்பறைகளை அறையாமல் இருக்கும். இவ்வளவு தகவல்களின் வழியாக சென்ற தலைமுறை மனிதர்களை விட விரிவான அவதானிப்புகளை இன்றைய இளைஞனால் நிகழ்த்த முடியும். அத்தகைய ஒருவனிடம் அவன் அறிந்தவற்றை ஒரு கோணத்தில் தொகுத்தளிக்கும் எளிய செயலில் தொடங்கி அக்காலகட்டத்தை நோக்கிய ஒரு மனச்சித்திரத்தை உருவாக்கும் நடுவாந்திர செயல்பாடுகளை நிகழ்த்தி அதைக்கடந்து நாவலுக்கே உரித்தான கால தரிசனத்தை அவனுள் நிகழ்த்துவது வரை ஒரு பெருங்கதையாடல் கொண்ட நாவல் பயணிக்கிறது.

ஆயிரத்து ஐம்பது பக்கங்களுடன் கெட்டி அட்டை கொண்ட ஒரு நாவலை இரண்டு வாரமாக நாற்பது கிலோமீட்டர் பேருந்து பயணத்தில் சுமந்து கொண்டே சென்று படிப்பதற்கான நியாயம் என்ன என்று என்னிடம் கேட்டால் மேற்கூறியதே என் பதில்.

கலை ஒருவனுள் நிகழ்த்தும் அனுபவங்கள் அகவயமானவை. அனைத்தையும் திட்டவட்டமான வார்த்தைகளில் தொகுத்துச் சொல்லி விட முடியாது எனினும் சொல்லக்கூடியவை என சில உண்டு. அதன் வழியே ஒரு நூல் குறித்து உருவாகி வரும் பொது சித்திரத்தினை ஊக்குவிக்கும் விதமாகவோ எதிர்க்கும் விதமாகவோ ஒரு விவாதம் உருவாகி அந்த நூல் மேலும் பல திறப்புகளை அளிக்கலாம்.

சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் முடி அரசு , குடிமக்கள் என இரண்டு பாகங்களும் பத்து பகுதிகளும் நூற்றுபதினைந்து அத்தியாயங்களும் கொண்ட பெருநாவல். மதுரையை மையப்படுத்தி குற்ற பரம்பரையினர் என முத்திரை குத்தப்பட்ட பிறமலை கள்ளர்களின் வரலாற்றையும் மதுரை நிர்வாகத்தையும் கதைக்களமாய் கொண்ட படைப்பு.

மாலிக்கபூர் படை கொண்டு வருகையில் மதுரையின் காவல் வீரன் ஒருவன் கொல்லப்படுவதுடன் கதை தொடங்குகிறது. அவன் மனைவி சடச்சி. மாலிக்கபூரின் படையெடுப்பை அவள் காண்கிறாள். கருத்தரித்து இருக்கிறாள். குமார கம்பணனும் கங்காதேவியும் மதுரையைக் கைப்பற்ற வரும் போது சடச்சி அவர்களையும் காண்கிறாள். இரண்டு வரலாற்று மனிதர்களுக்கிடையே நெளிந்து செல்லும் சடச்சியின் வரலாறு நாவல் முழுக்க ஒரு குறியீட்டுத் தன்மையுடன் நீடிக்கிறது. சமணர்களின் மலையான அமணமலையில் சடச்சியின் குலம் பெருகுகிறது. அங்கு அமைக்கப்பட்ட புனைவு நிலமான தாதனூர் வழியே விரிகிறது மதுரையின் வரலாறு.முடி அரசு பாகத்தின் வரலாறும் பெருக்கெடுக்கத் தொடங்குகிறது.

இஸ்லாமியர்களிடம் மத மாற்றம் செய்யப்பட்டு கணக்கர்களாக இருந்த ஹரிஹரரும் புக்கரும் எழுச்சி பெற்ற பின்பு நாயக்க குலங்கள் ஒன்றிணைந்து இன்றைய தெலுங்கானாவில் ஆட்சி அமைக்கின்றன. கொல்லவாருகள் பலிஜர்கள் வடுகர்கள் என பல பிரிவுகள் ஒன்றிணைந்து இஸ்லாமியர்களுக்கு எதிராக இணைந்து தென் இந்தியா முழுவதையும் கைப்பற்றும் வெற்றிச் சித்திரமும் அதன் வழியே கங்காதேவியும் குமார கம்பணனும் மதுரையை கைப்பற்றுவதன் சித்திரமும் மதுரா விஜயமாக விரிகின்றன. அதன்பின் மதுரையை மையமாகக் கொண்ட பாளையப்பட்டுகளும் அவற்றின் நிர்வாக முறையுமாக நாவல் விரிந்து செல்கிறது. கிருஷ்ண தேவராயரின் தலைமை காப்பாளனாக இருக்கும் விஸ்வநாத நாயக்கன் தன்னை சுதந்திரமாக அறிவித்துக் கொண்ட அவனது தந்தையிடம் இருந்து மதுரையை மீட்கப் புறப்படுகிறான். மதுரையை மீட்ட பின் விஸ்வநாதனே மதுரையின் பொறுப்பை ஏற்கிறான். மதுரை நகரின் விரிவாக்கமும் கோட்டை கட்டுதலும் என அசுர வேகத்தில் பயணிக்கிறது நாவல். சாளுவ கட்டாரி சந்திரஹாசம் எனும் நினைவுச் சின்னங்களும் அவை கண்டெடுக்கப்படும் விதமும் கவித்துவம் மிக்கவை.

இந்திய வரலாறு தொடர்ந்து மதுரையை பாதிக்கிறது. கிருஷ்ண தேவராயர் இறந்த பின் விஸ்வநாதன் மதுரையை சுதந்திரப்படுத்திக் கொள்கிறார். அதன் பிறகு அவர் மகன் கிருஷ்ணன் ஆட்சி பொறுப்பேற்கிறார். திருமலை நாயக்கர் காலத்தில் தாதனூரின் கழுவன் கொத்து மதுரை மன்னனின் அரண்மனையில் கன்னம் வைத்து பொருளைத் தூக்குகிறது. திகைத்துப் போகிறது அரண்மனை. மூன்று சவுக்கடிகளுடன் மதுரையை காக்கும் உரிமை தாதனூருக்கு போகிறது. மொண்டிக் கொம்பு , ஜல்லிக்கட்டில் சாடி மறையும் சிறுவனும் முதியவனும் என ஒரு தனித்த வரலாற்று அடையாளங்களோடு மதுரையின் மைய நில வரலாற்றோடு பிண்ணிப் பிணைந்து வளர்கிறது தாதனூரின் வரலாறு.

திருமலை நாயக்கர் சொக்கநாதன் மங்கம்மாள் ரங்க கிருஷ்ண முத்து வீரப்பன் விஜயரங்க சொக்கநாதன் மீனாட்சி என சிறந்தவர்களும் சோடை போனவர்களுமாக மதுரை வரலாறு விரிந்து பரவுகிறது. தஞ்சை கோட்டையை முற்றுகையிட்டு வென்று தஞ்சை இளவரசியை சொக்கநாதன் இழக்கும் இடம் பொருளின்மையின் உட்ச வறட்சியில் கொண்டு போய் நிறுத்துகிறது. கணவன் மகன் பேரன் என மூன்று தலைமுறை ஆண்களை சரிகட்டி பேரனால் சிறையிடப்பட்டு இறக்கிறாள் மங்கம்மாள். விஜயரங்க சொக்க நாதனின் மனைவியான மீனாட்சி அரசுப் பொறுப்பேற்று மராட்டியர்களின் சூழ்ச்சியால் கசந்து நஞ்சுண்டு உயிர் துறக்கிறாள்.

நாயக்கர்களின் படையெடுப்புகளில் தாதனூர் கள்ளர்களும் பங்கேற்கின்றனர். மராட்டியர்களின் வழியே மதுரை நிர்வாகம் ஆங்கிலேயரை நோக்கிச் செல்கிறது. பாளையப்பட்டுகள் ஒடுக்கப்பட்டு ஜமீன்தாரி முறையை பிரிட்டிஷ் அரசு அறிமுகம் செய்கிறது. கட்டபொம்மு ஊமைத்துரை என போராடி மடியும் பாளையக்கார வீரர்களை வேண்டிய தகவல்களுடன் நாவல் விரித்தெடுக்கிறது. பெரும் வீரத்துடனும் பெருமிதத்துடனும் போரிட்ட பாளையக்காரர்கள் மகளின் திருமணத்திற்கு பென்ஷன் கேட்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு கடிதம் எழுதுவதை ஜீரணிக்க நேரம் எடுக்கிறது. நாவல் முழுக்கவே இப்போக்கினை காண முடியும். இயல்பாக ஒழுகும் நடையின் வழி அடித்துச் செல்லப்படும் வரலாறு பிரமித்து நிற்க வைக்கிறது. இணையாகவே வளர்கிறது தாதனூரின் வரலாறும். மாயாண்டி சின்னானின் நட்பு கண்ணீரோடு களப்பலிக்காக சின்னானை அனுப்புவது வலிமை இழந்து வரும் பாளையப்பட்டுகளின் அற்பத்தனங்கள் என ஒரு மாற்றத்தை சித்தரிக்கிறது நாவல். மதுரை ஆட்சியர் ப்ளாக்பர்ன் நகர் விரிவாக்கத்துக்கென கோட்டையை இடிக்கிறார். கனத்த அத்தியாங்களாகவே இவை நகர்கின்றன.

கோட்டை இடிவது மதுரைக்கான செய்தியாகிறது. அதுவரை இருந்த நியாயங்களும் நம்பிக்கைகளும் தங்களை மாற்றி அமைத்து விரித்தெடுப்பதற்கென அகவயமான கோட்டைகளும் இடிந்து விழுகின்றன. ஏக்கப் பெருமூச்சினை எழுப்ப வைத்தபடி முடி அரசு பாகம் முடிவுற்று குடிமக்கள் பாகம் தொடங்குகிறது.

வரலாற்றுப் புனைவுகளை வாசிக்கும் ஒரு நவீன இளைஞனுக்கு இப்படி ஒரு கேள்வி தொடக்கத்தில் எழு வாய்ப்பிருக்கிறது.

வரலாற்றுப் புனைவுகள் உண்மையை நெருங்கிச் சித்தரிக்க முயன்றாலும் ஆசிரியனின் உள எழுச்சி கற்பனை வீச்சு இவை சார்ந்து ஏதோவொரு விதத்தில் வரலாற்றின் மீதான இனப் பெருமிதங்களை உருவாக்கி விடுகிறன்றன. அப்படியான பெருமிதங்கள் உருவாவது குறிப்பிட்ட சமூகத்தினரை மேன்மையாக எண்ண வைக்காதா? சமூகத்தின் மீதான மேலாதிக்கத்திற்கான வாய்ப்பினை இவ்வகை நூல்கள் உருவாக்கி விடாதா?

காவல் கோட்டம் பெரும்பாலும் கள்ளர்கள் மற்றும் நாயக்கர்களின் வரலாற்றை விரித்துச் சொல்லும் நூல். ஆனால் இச்சமூகங்கள் இந்நூலில் ஆய்வுக்களமாகவே எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இனப் பெருமிதங்களைச் சொல்லும் குறுகல் போக்குடைய ஒரு நூலில் இருந்து இத்தகையை வரலாற்றுப் புனைவுகள் வேறுபட்டு நிற்கும் இடம் இதுவே. அத்தனை நுண் தகவல்களுக்கும் வரலாற்று மனிதர்களுக்கும் சடங்குகளுக்கும் வீழ்ச்சிகளுக்கும் வெற்றிகளுக்கும் வஞ்சகளுக்கும் மையமென இருப்பது நூலாசிரியனின் மனவெழுச்சி. அதுவே ஒரு நூலின் தன்மையைத் தீர்மானிக்கிறது. ஒரு கறாரான வரலாற்று விசாரணை பாவனையை மேற்கொள்ளும் நூலை நாவலாக்குவது அத்தனை பாவனைகளுக்கும் உண்மைத் தகவல்களுக்கும் ஆழத்தில் இருக்கும் எழுத்தாளனின் மனவெழுச்சியே. அதுவே நெல்சன் தொடங்கி பலரால் விரித்தெழுதப்பட்ட மதுரை குறித்த அபுனைவுகளில் இருந்து புனைவான காவல் கோட்டத்தை வேறுபடுத்துகிறது.

நவீன சமூகத்தில் ஆங்கிலேயர் நமக்கு உருவாக்கி அளித்த ஆய்வுமுறைகளைக் கொண்டே நம்முடைய தொடக்க கால சமூகங்களும் (primitive tribes or elemental society) அதன் வளர்ச்சி நிலைகளும் ஆய்வு செய்யப்படுகின்றன. அவை ஏன் ஆய்வு செய்யப்பட வேண்டும்?

தன்னைக் குறித்த சரியான பார்வையைக் கொண்டுள்ள சமூகம் மட்டுமே உலகின் பொதுக் கருத்தியலுக்கு இசைந்து போக முடியும். சுயம் குறித்த உயர்வுணர்ச்சியோ தாழ்வுணர்ச்சியோ கொண்ட சமூகங்கள் முறையே அழிவை உருவாக்குபவையாக அழிந்து போகிறவைகளாக மாறிப் போகின்றன. உதாரணமாக ஒரு ஆப்பிரிக்க பழங்குடி குறித்த ஒரு சராசரி இந்தியனின் பார்வை எப்படி இருக்கும்? அவன் தன்னளவிற்கு இன்னும் உயரவில்லையே என அவனைக் கண்டு இரக்கம் கொள்வான். நம்மிடம் நிகழும் பெரும்பாலான "உச்" கொட்டல்கள் அவர்களை விட நான் உயர்ந்தவன் என்ற எண்ணத்தால் உருவாவதே. இதே ஒரு ஐரோப்பியனைக் காணும் இந்தியன் ஒரு வகை குன்றல் மனநிலையை அடைகிறான். அந்த கண்டம் போல தன் நாடு இல்லை என வருந்துகிறான். இவ்விடத்தில் அவன் கொள்வது தாழ்வுணர்ச்சி. இந்த மனநிலை பொது சமூகத்தில் பிரதிபலிப்பதைக் காணலாம். ஆப்பிரிக்காவின் உள்காடுகளுக்குள் அவர்களின் பழங்குடி தெய்வத்தை தேடிச் செல்லும் அமெரிக்கனை நாம் மனவெழுச்சியோடு நோக்குகிறோம்.

இவர்களும் அவர்களும் வேறு வகையான வாழ்க்கை கொண்டவர்கள் என்ற பிரக்ஞை இல்லாமல் எல்லோரையும் ஒரு ஏணியில் வரிசையாக நிற்க வைக்கிறோம். இந்தப் பொது மனநிலைக்கு எதிரானதாகவே மானுடவியல் இன வரைவியல் ஆய்வுகள் அமைகின்றன. ஒவ்வொரு சமூகத்திலும் இருக்கும் உற்பத்தி முறை நீதி வழங்கல் முறை மண உறவு முறை என அனைத்தையும் பிரித்து வகைப்படுத்தி அவற்றில் காணப்படும் பொதுக்கூறுகளை பட்டியலிடுகிறது. "அந்நியர்கள்" என எண்ணப்படுகிறவர்களை "அந்நியமானவை" என ஒதுக்கப்படுபவற்றை நவீன அறிவு தொடர்ந்து புரிந்து கொள்ள முடிகிறது.

சு.வேணுகோபாலின் ஆட்டம் குறுநாவலில் திருவிழா முடிந்த பிறகு குப்பையில் வீசப்படும் உணவையும் கறியையும் குறவர்கள் எப்படி பதப்படுததி மீண்டும் உண்கிறார்கள் என்பது சொல்லப்பட்டிருக்கும். ஒருவகையில் வெந்த சோற்றை மீண்டும் அரிசியாக்கும் வித்தை அது.அப்போது அவர்கள் "பொறுக்கித் திண்பவர்கள்" என்ற பொது மனநிலை சற்றே அசைக்கப்படுகிறது.

தேவரடியாள் முறையை "விபச்சாரம்" என்றும் களவு-காவல் உறவை "திருட்டு" என்றும் பொதுமைப்படுத்தி புரிந்து வைத்திருப்பதன் வழியாக நம்முடைய கடந்த காலம் குறித்த ஒரு குற்றவுணர்வும் அதனால் எழுந்த தாழ்வுணர்ச்சியும் நம்மிடம் எஞ்சுகிறது. இதன் மறுபக்கமாக உலகின் தொன்மையான நாகரிகம் ஒன்றின் சொந்தக்காரர்கள் இந்தந்த பேரரசர்களால் ஆளப்பட்டவர்கள் முதன்மையான மக்கள் என்பது போன்ற உயர்வுணர்ச்சியில் திளைக்கத் தொடங்குதல். இவை இரண்டுக்கும் இடையே நிகழ்ந்து போனவற்றை பதிவு செய்யப்பட்டவற்றை அறிவின் கண் கொண்டு பார்த்து நிகழ்ந்திருக்க வாய்ப்பிருப்பவற்றை பதிவு செய்யப்படாமல் விடப்பட்டவற்றை ஊகிக்கும் ஒரு அறிவார்ந்த தன்மை வரலாற்றுப் புனைவுகளில் உண்டு. ஆகவே வரலாற்றுப் புனைவுகளை இனப்பெருமிதம் என ஒதுக்குபவர்கள் பெருமிதத்துக்கும் தாழ்வுக்குமான அவற்றின் சமநிலையை மறுக்கிறார்கள் என்றே பொருள்.

தாதனூர் மதுரையை காவல் காக்கும் கிராமம். இரவின் வழிகளை அறிந்தவர்களாக தாதனூர்காரர்கள் சித்தரிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு தொழிலுக்கும் "செய் நேர்த்தி" என ஒன்றிருக்கும். மிக நுண்ணிய தகவல்கள் வழியே களவின் நேர்த்தியும் காவலின் நேர்த்தியும் வெளிப்பட்டபடியே இருக்கிறது. ரெட்டிய கெடுத்த வெள்ளி சாட்டைக்கம்பு வெள்ளி முழுநிலவு அம்மாவாசை வளசை போகும் பறவைகள் ஆந்தைகள் என இரவின் அத்தனை அசைவுகளும் அவர்களுக்கு சமிக்ஞைகளாகிறது. இருளில் இறங்கியதும் களவுக்கு போகிற அத்தனை பேரும் "கருப்பன்" ஆகி விடுகின்றனர்.

காவலுக்கு வரும் கருப்பன்களில் நினைவு ராமாயணச் சாவடியில் சுற்றித் திரிகிறது. காவல்கூலி கொடுக்கப்படாத தெருக்களில் வீடுகளில் அவர்களே களவுக்கும் இறங்குகின்றனர். காவலும் களவும் இருபுறமும் கட்டப்பட்ட சரடாக மதுரையின் இரவுகள் நீள்கின்றன. டெனில்சன் ப்ளாக்பர்ன் பென்னிங்டன் என ஆங்கில ஆட்சியாளர்களுக்கு இணையாக மாயாண்டி வீரணன் ஒச்சு என தாதனூர் பெரியாம்பிளைகளும் எழுந்து வருகின்றனர்.குடிக்காவல் முறையை ஒழிக்க விரும்புகிறது ஆங்கில அரசு. தேனி கம்பம் திருநெல்வேலி என மதுரைச் சூழ்ந்து பரவியிருக்கிறது குடிக்காவல் முறை. வெளியூர்களுக்கு காவலுக்கும் நாட்டாண்மைக்கும் செல்லும் குடும்பங்களின் சித்திரமும் ஊடே புகுகிறது. கிறிஸ்துவ மிஷனரிகளின் செயல்பாடுகளும் முல்லை-பெரியாறு அணை அமைப்பதற்கான தொடக்க கால பணிகளும் துரிதம் பெறுகின்றன.

குடிக்காவலர்கள் நகருக்குள் நுழையக்கூடாதென மதுரை நிர்வாகம் சட்டம் பிறப்பிக்கிறது. ஏட்டளவிலேயே இறந்து போகிறது சட்டம். சட்டத்தை நடைமுறைப்படுத்த நினைப்பவர்கள் களவு கொடுக்கிறார்கள். மீட்டு வர மீண்டும் தாதனூரையே நாடுகிறார்கள். தாதனூரின் வழியே விரிந்து பரவிய கள்ளர்களின் பழக்க வழக்கங்கள் உணவு முறைகளையும் உறவு முறைகளும் விரிவாகப் பதிவு செய்யப்படுகின்றன. சற்றே "தாராளமான" திருமண உறவுகள் காது வளர்த்தல் இஸ்லாமியர்களிடமிருந்து வந்த பழக்கமான கவரடப்பு என தாதனூர்காரர்களின் வாழ்க்கை வழியே ஒரு இனக்குழு வரலாறும் விரிகிறது.

களவுக் குற்றத்திற்கென மாயாண்டி பெரியாம்பிள கைது செய்யப்படுகிறார். தாதனூரின் பிடி காவலில் மெல்ல நழுவுகிறது. முல்லை-பெரியாறு அணைக்கட்டும் திட்டம் தொடங்கப்பட்டு கைவிடப்படுகிறது. காவல் முறையை ஒழிக்க முடியாமல் திணறுகிறது பிரிட்டிஷ் நிர்வாகம்.

தாதுவருடப் பஞ்சத்தை வெள்ளையானை எரியும் பனிக்காடு போன்ற நாவல்கள் விரிவாக பதிவு செய்திருக்கின்றன. பிரிட்டிஷ் காலத்திய பஞ்சங்களை பதிவு செய்த தமிழின் முன்னோடி படைப்பு என புதுமைபித்தனின் துன்பக்கேணியைச் சொல்லலாம். காவல் கோட்டம் பஞ்சம் நெருங்குவதை மெல்ல மெல்ல சூழ்ந்து கொள்வதைச் சொல்லி பஞ்சகாலத்தை தாண்டிச் செல்கிறது. எண்ணிப் பார்க்கவே முடியாத ஒரு காலகட்டமாகவே தாது வருடப் பஞ்சம் நெஞ்சடைக்க வைக்கிறது. பஞ்சத்தில் களவும் பெருகுகிறது. காவலும் வலுப்படுகிறது. செட்டியார் வீடுகளுக்கு கொண்டு செல்லப்படும் தானியங்களைக் காத்து தாதனூர் தப்பிக்கிறது. ஒருவேளை பெரியாறு அணை அப்பஞ்ச காலத்திற்கு முன்னரே கட்டப்பட்டிருந்தால் பலி எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கும் என்ற இயலா எண்ணத்தை மனதில் ஏற்படுத்திவிட்டு அத்தியாயங்கள் நகர்ந்து விடுகின்றன. மதுரை நகரம் மெல்ல மெல்ல பிரிட்டிஷின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது.

காவல்துறையின் பரிணாம வளர்ச்சியின் வழியே ஒரு நிர்வாகம் வடிவம் பெறுவதை அதன் பிடிகள் இறுகுவதை காண முடிகிறது. கால்சட்டைப் போட வெட்கப்படும் போலீஸ்காரர்கள் காவல் நிலையத்திற்கே காவக்கூலி கொடுக்கும் காவலர்களின் தோற்றம் மெல்ல மெல்ல மாறுகிறது. பெரியாறு அணையின் நீர் மதுரை நிர்வாகத்தை குளுமையடையச் செய்கிறது. மீண்டும் குடிக்காவல் முறையை ஒழிப்பதற்கான முயற்சிகள் தொடங்குகின்றன. வில்லியம் காரே தொடங்கி வைத்ததை பென்னிங்டன் தொடர்கிறார்.

களவிற்கான பயிற்சி அதன் மீதான நம்பிக்கை இருளில் நிகழ்த்தப்படும் பழி வாங்கல்கள் என சிம்ம சொப்பனமாகவே இருக்கிறது தாதனூர். முந்தைய நிர்வாகத்தின் உரிமையை இன்றைய நிர்வாகத்திடம் விட்டுக் கொடுக்க மறுக்கிறது. தாதனூரில் பிறந்து கிறிஸ்துவராக மாறிய டேவிட் சாம்ராஜைக் கொண்டே தகவல்களைத் திரட்டுகிறது பிரிட்டிஷ் நிர்வாகம். மக்கள் மெல்ல மெல்ல பிரிட்டிஷ் நிர்வாகத்தின் தினசரிகளில் அமிழ்ந்து போகின்றனர். கொலைகள் பழிவாங்கல்கள் என நீளும் படலத்தின் வழியே தாதனூரின் வீழ்ச்சி தொடங்குகிறது. தாதனூர் வரை சாலை அமைக்கப்படுகிறது. அதன்பிறகு காவல் நிலையம். அதிலேயே தாதனூர்காரர்கள் அடைக்கப்படுகிறார்கள். குற்றப் பரம்பரையினராக சித்தரிக்கப்படும் தாதனூர்காரர்களின் நினைவில் மாயாண்டிப் பெருசு பட்டசாமியாக எஞ்சுவதோடு நாவல் முடிகிறது.

இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு நூலில் ராமச்சந்திரா குஹா வரலாறு சமகாலத்தை நெருங்குந்தோறும் மேலு‌ம் நம்பகத் தன்மை கொள்ள வேண்டி இருக்கிறது என்று கூறியிருப்பார். காவல் கோட்டத்தின் சிறப்பென இதனையே நான் எண்ணுகிறேன். அதன் தொடக்கம் இஸ்லாமிய அரசுகள் விஜயநகர அரசு மதுரை நாயக்கர்கள் என இருந்தாலும் பக்கங்கள் நகர நகர அது மக்களை நோக்கி வருகிறது. மக்களை நெருங்க நெருங்க பெருங்கனவுகளுக்கான சாயங்களை அழித்துக் கொண்டு யதார்த்த தளத்தில் வந்து முடிகிறது.

நாவல் முழுக்க அடர்த்தியான மௌனங்கள் நிரம்பி வழிகின்றன. இருளின் மைந்தர்கள் மதுரையில் இருள் கிழிபடும் போதெல்லாம் இருள் துல்லியம் இழக்கும் போதெல்லாம் நிலையழிகின்றனர். வாழ்விற்கான ஓட்டத்தில் இறுதி ஆற்றல் வரை செலவழிக்கின்றனர். நகருக்குள் இருந்து வெளியேறி மூன்று திசைகளிலும் காவல் காப்பது "கருது கசக்குவதன்" வழியாக கிராமக் காவல்களைப் பிடிப்பது ரயிலில் களவாடுவது என மெல்ல மெல்ல தாதனூரின் பிடி தளரும் போதும் அவர்களின் நம்பிக்கைத் தளரவில்லை. இரண்டு "ஆஜர்களுக்கு" நடுவில் ஆட்டைத் தூக்கி வரும் திறமை இறுதி வரை அவர்களுக்கு கை கொடுக்கிறது. அந்த நினைவின் துயர்களையும் பெருமிதங்களையும் "பட்டசாமி"க்கு கொடுத்தப்படி தன்னை அழிவின்மைக்கு கொடுத்து விடுகிறது தாதனூர்.

கருமையான அங்கதங்கள் செங்கன் என்பவனிடம் தாதனூரே களவு கொடுத்தல் அதன் வழியே அது மதுரை மன்னனிடம் தன் ஊர் பெண் களவு கொடுத்ததை நினைவு மீட்பது பெண் எடுத்து வரச் செல்வது கல்லெறியக் கற்றுக் கொள்வதில் இருந்து காவல்காரனாக களவுக் கொத்துடன் செல்பவனாக நிலையாளாக பெரியாம்பிளையாக ஒருவன் உயர்வது என அந்த சூழலியே வாழ்ந்து எழுந்து வந்த அனுபவத்தை காவல் கோட்டம் அளிக்கிறது.

ஒரு வரலாற்றுப் புனைவாகத் தொடங்கி கால மாற்றத்தால் ஒழுக்க மதிப்பீடுகளின் மாற்றத்தால் வீழ்ந்து போகிறவர்களை சித்தரித்து முடிகிறது காவல் கோட்டம்.

சமூக மாற்றங்களும் முன்னேற்றங்களும் பல்வேறு வரலாற்று விசைகளால் இறுகப் பிணைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றும் மற்றொன்றைச் சார்ந்தே வளர்கிறது அல்லது வீழ்கிறது. இந்நாவலை முழுமையாக எடுத்துக் கொள்ளும் போது அந்த மாற்றங்களின் வழியே ஒரு பொதுத்தன்மையை நோக்கிச் செல்லும் போக்கு தெரிகிறது. குடிக்காவல் என ஒன்றைச் சொல்ல முயல்கையில் அது மொத்த மதுரையின் வரலாற்றை அதன் வழியே இந்திய வரலாற்றை அதன் வழியே உலகம் முழுக்க உருவாகியிருந்த காலணியாதிக்கத்தை கண்டு விட முடிகிறது. இந்த பெருந்தரிசனத்திற்கென ஒரு பெருநாவலை வாசிக்கலாம்.

(நன்றி: சுரேஷ் பிரதீப்)

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp