எதற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம் என்பதறியாமல் அல்லது அறிந்தும் ஏதும் செய்ய இயலாத நிலையில் வாழ்வைக் கடத்திக்கொண்டிருக்கும் நகரவாசிகள் அனைவர்களுக்குள்ளும் தங்களின் பாரங்களனைத்தையும் இறக்கி வைத்துவிட்டு சொந்த கிராமத்திற்கே திரும்பி நிம்மதியான, ஒரு எளிமையான வாழ்வை வாழும் கனவுகள் நிச்சயமிருக்கும். நினைப்பதனைத்துமே உள்ளங்கைக்குள்ளுள் சாத்தியப்படுத்திக் கொடுத்திருக்கும் வசதியான நகர வாழ்விலும் நம் பால்யகால நினைவுகள், பள்ளிக்கால நண்பர்கள், விளையாட்டு, பழைய சோறு சுட்ட கருவாடு என கிராமத்தின் நினைவுகள் என்றும் பசுமையானவையாக மனதில் இருக்கின்றன. கிராமத்தை முன்னிறுத்தி நாம் மறந்த, தொலைத்த கிராம வாழ்வின் நினைவுகளை மீட்டெடுக்கச் செய்கின்றன தமிழ்ச்செல்வனின் கதைகள்.
சிறுவர்களின் வாழ்வியலை, அவர்தம் மனநிலையை தமிழ்ச்செல்வன் அனாயசியமாக கதையாக்குகிறார். அம்மா அப்பா வேலை நிமித்தம் வெளியே சென்றிருக்க பசியோடு தீப்பெட்டி ஒட்டிக்கொண்டிருக்கிறான் அண்ணன். விளையாட்டு ‘இடைவேளை’யில் சாப்பிட வீட்டிற்கு வரும் தம்பி பசியால் அழுகிறான். இதுவே அம்மா வீட்டிலிருந்திருந்தால் பெரிய ஒப்பாரியே வைத்திருப்பான். கொஞ்சம் அரிசியை அள்ளிக்கொடுத்து மீண்டும் விளையாட அனுப்புகிறான் அண்ணன். ‘இவனிடம் அழுது லாபமில்லை’ என முடிவு செய்து தம்பியும் விளையாடச் செல்கிறான். மிக்சர்வண்டிக்காரன் தெருவிற்கு வரவும் அதனைச் சூழ்ந்து கொள்கிறார்கள். ‘நாலு சக்கர தள்ளுவண்டி. வகைவகையான பண்டங்கள். அழகழகாய் அடுக்கியிருக்கும். சுற்றிலும் கண்ணாடி அடைத்திருக்கும். உள்ளே எரியும் பெட்ரோமாக்ஸ் விளக்கொளியில் பண்டங்களெல்லாம் கண்ணாடி வழியே வெளித்தெரியும். தேர்போல மெல்ல நின்று அசைந்து நகரும்’. வண்டிக்குப் பின்னால் ஓடும் சிறுவர்களெல்லாம் இப்போது கிராமங்களில் கூட இல்லை. ‘பதினெட்டு ஜிலேபி தான் இருக்கு, நாலு வித்துப்போச்சுடா, யாருடா ஜிலேபி வாங்கிருப்பாங்க, தெட்சிணாமூர்த்தி தெருவுல யாராச்சும் வாங்கிருப்பாங்க’ என தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள். ஜிலேபி கைக்கெட்டாத பண்டமாகவே அவர்களுக்கு இருக்கின்றது. சிறுவர்களின் சின்ன சின்ன ஆசைகளையும் அதை நிறைவேற்ற முடியாத குடும்பத்தின் ஏழ்மையையும் பிரதிபலிக்கும் கதை. கதையின் இறுதியில் பாவனையாக அழும் தம்பியும், அவனைச் சமாதானப்படுத்த அண்ணன் சொல்லும் பொய்களும், அம்மாதானே அடித்தாள் அவளே வந்து சமாதானப்படுத்தட்டும் என போலியாக அழுகையைத் தொடர்வதும் உன்னதம் (‘பாவனைகள்’).
அறிவியலின் வளர்ச்சிக்கு தன்னைத் தின்னக் கொடுக்காமல், மூடநம்பிக்கை என பழக்கவழக்கங்களையும் கலாச்சாரத்தையும் ஒதுக்கிவிடாமல் இயங்கும் கள்ளங்கபடமற்ற இதயங்களின் மிச்சம் கிராமங்களில் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. கிராமங்களின் நிறமும் மணமும் முதல் மழையின் மண் வாசனையாக எப்பொழுதும் மனதிற்கு இணக்கமான ஒன்றாகவே இருக்கின்றன. செம்மண்ணால் எழுப்பப்பட்ட சுவர், ஓலை வேயப்பட்ட கூரை, சாணி மொழுகப்பட்ட தரை, கயிற்றுக்கட்டில், தலையணையாக துணிப்பொட்டலம், ஆட்டுப்புழுக்கையின் வாசம், எச்சில் ஒழுக அசைபோடும் பசு, தெருவில் வியாபாரத்திற்காக வருபவர்களின் பின்னால் கூச்சலிட்டபடி ஓடும் சிறுவர்கள், வெள்ளிக்கிழமைகளில் அடுப்பை மெழுகி கோலப்பொடியால் இரண்டு கோடு இழுக்கும் கரங்கள், மாமனின் மீது கண்மூடித்தமாக அன்பைப் பொழியும் பெண்ணின் மனம், பீத்திக்கொண்டு திரிவதைச் சாடும் பெருசுகள் – இன்னும் சில ஆண்டுகளில் இவையெல்லாம் ‘முன்பொருகாலத்தில்’ என நினைவுகளில் மட்டுமே எஞ்சியிருக்கும் அவலம் நேரும் என்பதை மறுக்கமுடியாது. இன்னும் சில நூற்றாண்டுகளில் இப்படியெல்லாம் இருந்ததை நம்ப மறுக்கவும் வாய்ப்புண்டு. அப்படியொரு காலத்தில் இதற்கெல்லாம் சாட்சியாக இருப்பக்கப்போவதில் தமிழ்ச்செல்வனின் கதைகளுக்குப் பெரும்பங்கு உண்டு.
தமிழ்செல்வன் படைத்த கதாப்பாத்திரங்களில் உச்சம் – ‘மாரி’ (‘அசோகவனங்கள்’ & ‘வெயிலோடு போய்’). தனது அன்பு உதாசீனப்படுத்தப்பட்ட போதும் அதற்கெல்லாம் சளைக்காமல் எவ்வித எதிர்பார்ப்புமின்றி பொழியும் மழையைப் போன்றது மாரியின் மனம். ‘மாரி’களின் அன்பிற்கு பாத்திரமானவர்களெல்லாம் பாக்கியவான்கள். அன்பின் ஸ்பரிசம் கிட்டாதவர்கள் மாரியை உணர நேர்ந்தால் பித்துப்பிடித்து அலையவும் வாய்ப்புண்டு. மஞ்சள் வெயிலின் கதிரவன், வெண்ணிற இரவுகளின் நாஸ்தென்கா, கன்னியின் அமலா அக்காவுடன் சேர்ந்து கொண்டவள் இந்த மாரி. தங்கராசின் மீது கண்மூடித்தனமான அன்பைக் கொண்டிருக்கிறாள். சிறுவயதிலிருந்தே மாமனென்றால் உயிர். வேலை மாற்றலாகி மாமன் வெளியூர் சென்ற பிறகு எப்போதும் மாமனின் நினைப்பு தான். ‘வருசம் ஓடினாலும் பஞ்சம் வந்தாலும் அய்யா செத்துப்போயி வயித்துப் பாட்டுக்கே கஷ்டம் வந்தாலும் அவனைப்பத்தின நினைப்பு மட்டும் மாறவே இல்லை’. ஊர் உறங்கிக்கொண்டிருக்கும் முன்னதிகாலையிலேயே எழுந்து அவசர அவசரமாக வீடு தெளித்து, ‘வெளியே’ போய், அடுப்பை மெழுகி, தூக்கில் பழையதை எடுத்துக்கொண்டு தீப்பெட்டி ஆபிஸிற்கு ஓடி, பின்பு வீடு திரும்பி, வீட்டு வேலைகளில் மூழ்கி அலுப்புடன் உறங்கச்செல்லும் மாரியின் ஒவ்வொரு செயலிலும் கணங்களிலும் தங்கராசைத் தவிர வேறு நினைப்பேதும் கிடையாது. வேலையில் கவனமில்லாமல் திட்டு வாங்குவதற்கும் தங்கராசின் நினைப்பு தான் காரணம். மாமனை நினைவில் கொண்டுவந்தபடியே தான் ஒவ்வொருநாளும் உறக்கத்திற்குள் செல்கிறாள். மாமனை வேறொருத்திக்கு தாரைவார்த்துக்கொடுத்த பின்பும் ரொம்பப்பிரியம் பொங்க ‘அக்கா அக்கா’ என உறவாடுகிறாள். தங்கராசின் மனைவி அவனை உதாசீனப்படுத்துவத்தைக் கண்டு உடைந்தழும் மாரியைப் படைத்த தமிழ்செல்வனுக்கு வாசகனின் முத்தங்கள் எப்போதும் கிட்டும்.
ச.தமிழ்ச்செல்வனின் கதைகள் குறித்து கீரனூர் ஜாகீர்ராஜா இவ்வாறு குறிப்பிடுகிறார்: ‘தமிழ்ச்செல்வன் தனது முப்பதுக்கும் அதிகமான கதைகளின் ஊடாக கரிசல் மண்ணையும் வறுமைப் பிடிக்குள்ளகப்பட்ட விதம் விதமான ஆண் பெண்களையும் சின்னஞ்சிறுவர்களின் ஆசை அபிலாஷைகளையும் காதல்வயப்பட்ட உள்ளங்களின் தகிப்பையும் தவிப்பையும் உறவின் விரிசல்களையும் கலாபூர்வமாகச் சித்தரித்தவர்’. இதில் இன்னும் ஒரு விஷயத்தைக் கூட சேர்த்துக்கொள்ள வேண்டும். குரல்வளையில் காலூன்றி எழ விடாமல் தடுக்கும் ஆதிக்க சாதியினரின் முன்னால் எழுந்து நிற்கத் துடிக்கும் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வையும் இவரது கதைகள் பேசுகின்றன. ‘இவர்கள் இப்படித்தான்’ என்றிருக்கும் பொதுப்புத்தியை உடைக்கவல்ல அவர்களின் மனதின் குரலும் ஆங்காங்கே ஒலிக்கின்றன. தனது மருமகன் நடராஜனை பள்ளியில் சேர்க்கவில்லை என தலைமை ஆசிரியரிடம் மாமன் முறையிட்டுக்கொண்டிருக்கையில் ஒரு ஆசிரியர் ரகசியமாக வந்து ‘பேசாம இதை சாதிப்பிரச்சனையாக மாத்துங்க. அப்பத்தான் இவன் சரிக்கு வருவான். சேர்க்க மாட்டேன்னு சொல்ல எந்த சட்டமும் கிடையாது’ என்பார். அவ்விடத்தில் எழுதுகிறார்: ‘மாமனுக்குச் சிரிப்பு வந்தது. ஆழமான வருத்தமும் கூடவே வந்தது. நம்மைப்பற்றி என்னதான் புரிந்து வைத்திருக்கிறார்கள் இவர்கள் என்கிற விரக்தியின் சிரிப்பு. சாதி எங்களுக்கு ஒரு மலிவான ஆயுதமல்ல; சுமை. எம்மைக் கீழே கிடத்தி மேலேறி அமுக்கும் சுமை. மாமனின் கண்கள் கசிந்தன’ (‘பதிமூணில் ஒன்னு’).
கிராமத்தில் மட்டுமே காணக்கிடைக்கும் விசித்திர மனிதர்களைப் பற்றிய கதைகள் ‘வாளின் தனிமை’யும், ‘கருப்பசாமியின் அய்யா’வும். நகர மனிதர்களின் தனித்துவம் பெரும்பாலும் அவர்களின் உடையலங்காரமும் பயன்படுத்தும் பொருட்களுமாகிப் போனது. வாளின் தனிமை சுப்பையாவும் கருப்பசாமியின் அய்யாவும் நாம் காணும் மனிதர்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமானவர்கள். அவர்களுக்கென்று ஒரு உலகம் இருக்கின்றது, ஒரு தனித்துவம் இருக்கின்றது. என்னதான் தினமும் மனைவியின் ஏச்சு பேச்சிற்கு ஆளாகினாலும், ஊரார்கள் எள்ளி நகையாடினாலும் அவர்களின் உலகத்தில் அவர்கள் ராஜாவாக இருக்கின்றனர். நாமும் நிச்சயம் இது போன்ற சிலரை ‘அவன் சரியான லூசுடா’ என்றொரு வாக்கியத்தில் கடந்திருக்கக் கூடும்.
கதைகளுக்குள் வெளிப்படும் அதீத அன்புதான் தமிழ்ச்செல்வனின் பலம். பொன்ராசு தனது மாமன் மகளைப் பார்க்கச் செல்ல ஆத்தாவிடம் பணம் கேட்கிறான். அவளது பாம்படத்தை கழட்டித் தர மல்லுக்கு நிற்கிறான். அவள் மசிய மறுக்கிறாள். ‘சோறு வேண்டாம்’ என்கிற தன் வழக்கமான ஆயுதத்தை விடிந்ததும் பிரயோகம் செய்தான். காலையிலும் மத்தியானமும் சாப்பிடாமல் படுத்தே கிடந்தான். சாயந்திரம் ஆத்தா பாம்படத்தைக் கழட்டிக் கொடுக்கிறாள் (‘பொன்ராசின் காதல்’). பள்ளிச்சுற்றுலா செல்ல மகன் சோலைக்காக பணம் கேட்டு அலைகிறான் அய்யா. எதிர்பார்த்த கூலியும் கிட்டாமல் கடனும் கிடைக்காமல் எப்படி சோலையின் மூஞ்சியைப் பார்ப்பது என மனம் வெதும்பி மடத்தில் முடங்கிக்கிடக்கிறான். வயிறு பசித்த போதிலும் சோலையின் முகத்தைப் பார்க்கிற தைரியத்தையும் பார்த்தும் சமாதானமாகச் சொல்வதற்கு ஒரு வார்த்தையையும் கண்டுபிடித்த பிறகுதான் அவன் வீடு திரும்ப முடியும் (‘வார்த்தை’). மகனின் சம்பாத்தியத்தை மட்டுமே நம்பி வாழும் முதிய தம்பதியினர், தனது சம்பாத்தியம் போதவில்லை என மகன் புலம்பும்போது மனமாரவே அவனுக்கு ஆறுதல் சொல்கின்றனர், ‘நீ எங்களுக்கு ரூவாயே தரவேண்டாமிய்யா. நானாக எப்பிடியும் பிழைச்சிக்கிடுவம். நீ நல்லாயிருந்தாய் போதும்’ என்கிறாள் சுப்பி. கரகரத்தக்குரலில் ‘ஆமய்யா’ என்கிறான் ராமுக்கிழவன் (‘வேறு ஊர்’). இம்மாதிரியான கதைகள் வாசகனுக்குள் அன்பின் போதாமையை உணரச்செய்பவை.
தமிழ்ச்செல்வனின் மொழிநடை எழுத்துவழக்கும் பேச்சுவழக்கும் கலந்த ஒன்று. வடிவத்திற்காகவும் வாக்கியங்களின் கச்சித்தத்திற்காகவும் மெனக்கெட்டதாகத் தெரியவில்லை. வாசிக்கையில் புத்தகத்தின் பக்கங்களிலிருந்து வாசகர்களின் மனதிற்குள் உணர்வினைக் கடத்துவதிலேயே அவரது கவனமெல்லாம் குவிந்திருப்பதான தோற்றம் தருகின்றது. இருப்பினும் அநேக கதைகளில் உரையாடல்களால் அல்லது வர்ணனைகளால் விவரிக்க வேண்டியதை ஓரிரு வாக்கியத்தில் ‘சொல்லி நகர்வது’ மிகப்பெரும் குறையே. உதாரணமாக ‘வெளிறிய முத்தம்’ கதையினைச் சொல்லலாம். கணவன் மனைவிக்கிடையே சிறப்பான உரையாடல்களை நிகழ்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் இக்கதையில் அதிகம். சிறப்பாக வந்திருக்க வேண்டிய இது போன்ற கதைகள் உணர்வு ரீதியாக எவ்விதத் தாக்கத்தையும் வாசகனின் மனதில் நிகழ்த்தாமல் ‘வெறும் கதை’களாக மட்டுமே எஞ்சியிருக்கின்றன. கிராமவாழ்வின் யதார்த்தம் என்பதில் மட்டுமே முனைப்புடன் புனையப்பட்டிருக்கும் இவரது கதைகளில் வடிவ ரீதியாகவோ, கோட்பாட்டு ரீதியாகவோ, மொழி ஆளுமையினாலோ புதிதாக ஒன்றுமில்லை என்பதாலேயே தமிழ்ச் சூழலில் மலிந்து கிடக்கும் ‘உணர்வுகளைக் கடத்துதல்’ என்றொரு வழமைக்குள்ளேயே இந்தக் கதைகளும் தம்மை இணைத்துக் கொள்கின்றன.
கிராம வாழ்வென்பது பலருக்கும் கனவாகத்தான் இருக்கின்றது. அசுரவேக தொழில்நுட்ப வளர்ச்சியும் பணத்தின் தேவையும் வாழ்வாதாரமும் வாழ்வின் தர உயர்வும் இன்னும் பல காரணிகளும் நம் கனவுகளின் மீது பாரத்தை ஏற்றி அவற்றை நசுக்கிக் கொண்டிருக்கின்றன. விரும்பியோ விரும்பாமலோ அதன் போக்கில் செல்வதும் தான் துரதிருஷ்டம். இத்தொகுப்பின் ஒவ்வொரு கதையும் நம்முடன் பயணித்து ஒரு நெகிழ்வான, எளிமையான வாழ்வை வாழச் செய்து நம் பாரத்தைப் பகிர்ந்து கொண்டு சற்றே இளைப்பாறுதல் தருபவையாக இருக்கின்றன. நம் கனவுகளின் ஆயுளைக் கொஞ்சம் நீட்டிக்கவும் செய்கின்றன.
(‘பேசும் புதிய சக்தி’ செப்டம்பர் 2016 இதழுக்காக எழுதப்பட்டது)
(நன்றி: சாபக்காடு)