[The Erasure of Islam from the Poetry of Rumi என்ற தலைப்பில் ரொஸினா அலீ கடந்த சில மாதங்களுக்கு முன்பு Newyorker பத்திரிகையில் எழுதியிருந்த கட்டுரையை தமிழில் பெயர்த்திருப்பது Ashir Mohamed.]
சில வருடங்களுக்கு முன்பு Coldplay (என்ற இசைக் குழுவைச் சேர்ந்த) கிறிஸ் மார்ட்டினை, நடிகை க்வினெத் பால்ட்ரோ விவாகரத்துச் செய்திருந்த சமயத்தில், துவண்டு போயிருந்தவரை ஊக்கப்படுத்தும் முகமாக அவரது நண்பர் ஒரு புத்தகத்தை அன்பளிப்பு செய்திருந்தார். அது கோல்மான் பார்க்ஸினால் மொழிபெயர்க்கப்பட்ட, பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாரசீகக் கவிஞர் ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைத் தொகுப்பு. “ஒரு விதத்தில் அது என் வாழ்வையே மாற்றிவிட்டது” என மார்டின் பிறகொரு நேர்காணலில் சொன்னார். கோல்ட்ப்ளேயின் மிகச் சமீபத்திய ஆல்பத்தில் வரும் பாடலொன்றில் பார்க்ஸ் அதிலிருந்து ஒரு கவிதையை வாசிப்பதும் பதிவாக்கப்பட்டிருந்தது:
“மனித இருப்பு என்பது ஒரு விருந்தினர் இல்லம்
ஒவ்வொரு காலையும் ஒரு புது வரவு
ஒரு மகிழ்ச்சி, ஒரு துயரம், ஒரு அற்பத்தனம்
ஒரு தற்காலிக விழிப்புநிலை
எதிர்பாராத விருந்தாளியைப் போல் வந்துபோகிறது.”
மடோனா, டில்டா ஸ்வின்டண் போன்ற பிற பிரபலங்களின் ஆன்மீகப் பயணத்திலும் ரூமி உதவியிருக்கிறார். அவர்களில் சிலர் தங்கள் படைப்புகளில் அவரது கவிதைகளைப் பயன்படுத்தியும் இருக்கிறார்கள். ஊக்கம் தரும் ரூமியின் பொன்மொழிகள் சமூக ஊடகங்களில் தினமும் சுற்றுக்கு விடப்படுகின்றன. “ஒவ்வொரு உராய்விலும் நீ எரிச்சலடைவாய் என்றால், பின் எவ்வாறு மெருகேற்றப்படுவாய்?” என்பது அவற்றில் ஒன்று. அல்லது, “ஒவ்வொரு கணமும் என்னுடைய விதியை நானே உளியைக் கொண்டு செதுக்கிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய ஆன்மாவின் ஆசாரி நான்.” குறிப்பாக பார்க்ஸின் மொழிபெயர்ப்புதான் இணையத்தில் பரவலாக பகிரப்படுகிறது. அவைதான் அமெரிக்க புத்தகக் கடைகளின் அலமாரியை நிரப்புவதாகவும், திருமண விழாக்களில் வாசிக்கப்படுவதாகும் இருக்கிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அதிகம் விற்பனையாகும் கவிஞர் ரூமிதான் என்று சொல்லப்படுகிறது. அவர் ஒரு மெய்ஞானி, மகான், சூஃபி என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். என்னதான் அவர் தனது வாழ்நாள் முழுவதும் ஒரு குர்ஆனிய-இஸ்லாமிய அறிஞராக இருந்திருந்தாலும், அவர் அபூர்வமாகவே ஒரு முஸ்லிம் என்பதாகக் குறிப்பிடப்படுவது உண்மையில் சுவாரஸ்யமே.
மார்ட்டின் தன்னுடைய ஆல்பத்தில் குறிப்பிட்டிருக்கும் வரிகள் ரூமியின் மஸ்னவியிலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கின்றன. ‘மஸ்னவி’ ரூமியின் இறுதிக் காலத்தில் அவரால் எழுதப்பட்டவோர் காவியம். அதன் ஐம்பதாயிரம் வரிகளும் பெரும்பாலும் பாரசீகத்தில் அமைந்திருந்தாலும், ஆங்காங்கே முஸ்லிம் மதப்பிரதிகளிலிருந்து எடுக்கப்பட்ட அரபு சொற்களும் ஊடுபாவி வருகின்றன. அறபோதனை வழங்கும் குர்ஆனிய சொற்றொடர்கள் இப்புத்தகத்தில் அடிக்கடி இடம்பெறுகின்றன. (சில முழுமையாகாதது என்று குறிப்பிடப்படும் இப்படைப்பு பாரசீக குர்ஆன் என்ற புனைபெயரில் அழைக்கப்படுகிறது) பாரசீக கற்கைகளின் பேராசிரியராக மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பாத்திமா கெஷாவர்ஸ் என்னிடம் இவ்வாறு கூறினார்:- குர்ஆனிலிருந்து இவ்வளவு அதிகமாக அவர் எடுத்தாண்டிருப்பதை பார்த்தால், ரூமி குர்ஆனை முழுவதுமாக மனனம் செய்தவராக இருந்திருக்க வாய்ப்புண்டு. ரூமியே ‘மஸ்னவியை’ “மதத்தின் (அதாவது இஸ்லாத்தின்) வேர்களின் வேர்களின் வேர்கள்” என்றும் “மேலும் குர்ஆனை விளக்குவது” என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனாலும் அமெரிக்காவில் வெகுவாக விற்றுக்கொண்டிருக்கும் மொழிபெயர்ப்பில் குறிப்பிட்ட மதத்தின் சாயல் பெரும்பாலும் இல்லை. “மக்களால் விரும்பப்படும் ரூமி ஆங்கிலத்தில் மிக அழகாக இருக்கிறார், ஆனால் அதற்குத் தரும் விலை என்பது கலாச்சாரமாகவும், மதமாகவும் இருக்கிறது,” என்று ரட்ஜர்ஸின் ‘ஆரம்ப கால சூஃபியிசம்’ குறித்த அறிஞர் ஜாவித் முஜத்திதி என்னிடம் கூறினார்.
ரூமி தற்போது ஆஃப்கானிஸ்தானில் இருக்கும் பகுதியில் பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்ககாலத்தில் பிறந்தார். பின்னர் அவர் தனது குடும்பத்துடன் தற்போதைய துருக்கியில் இருக்கும் கொன்யாவில் குடியமர்ந்தார். பிரச்சாரகராகவும், மத அறிஞராகவும் இருந்த அவரது தந்தைதான் ரூமியை சூஃபியிசத்துக்கு அறிமுகப்படுத்தியது. ரூமியை தனது இறையியல் கல்வியை சிரியாவில் தொடர்ந்தார். அங்கு சன்னி இஸ்லாமின் மிகப்பாரம்பரியமான சட்டத்துறைகளைக் கற்ற அவர், பின்பு சமயக்கல்வி பயிற்றுநராக கொன்யாவுக்குத் திரும்பினார். அங்குதான் வயது முதிர்ந்த பயணியும், பின்னாட்களில் தனது ஞானாசிரியர் ஆகப்போகிறவருமான ஷம்ஸ்-இ-தப்ரீஸைச் சந்தித்தார். அவர்களுக்கு இடையே எந்தளவு நெருக்கமான உறவு நிலவியது என்பது நிறைய விவாதிக்கப்பட்டிருக்கிறது, ஆனால் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு விடயம் என்னவென்றால் ரூமீயின் சமய செயல்பாடுகளிலும், கவிதையிலும் அவர் நீடித்த தாக்கம் செலுத்தியிருக்கிறார் என்பதுதான். ஷம்ஸ் எவ்வாறு ரூமியை அவரது வேதப்பிரதிகளின் மீதான கல்வியை மீளாய்வு செய்வதை நோக்கியும், மேலும் இறைவனுடன் ஒன்றிவிடுவதற்கான வழியாக இறைநேசத்தை கண்டடைவதை நோக்கியும் தள்ளினார் என்பதை ப்ராட் கூச் (Brad Gooch) விவரிக்கிறார். ரூமி தான் சூஃபியிசத்தில் கண்டடைந்த இறைவன் மீதான உணர்வுபூர்வமான நேசத்தையும், சன்னி இஸ்லாத்தின் சட்டவியலையும், மேலும் ஷம்ஸிடமிருந்து தான் கற்ற மெய்ஞான சிந்தனையையும் ஒன்றிணைத்தவர் ஆவார்.
ரூமியின் இந்த அரிதான சிறப்பியல்புதான் அவரது சமகாலத்தவரிலிருந்து அவரைத் தனியாகக் கொண்டு நிறுத்துகிறது என்று கெஷாவர்ஸ் (Keshawars) என்னிடம் கூறினார். இருந்தும் கூட, ரூமி சூஃபிகள், முஸ்லிம் நேர்பொருள்வாதிகள் மற்றும் இறையியல்வாதிகள், கிறித்தவர்கள், யூதர்கள் மற்றும் உள்ளூர் செல்ஜுக் ஆட்சியாளர்கள் என பலதரப்பினரில் இருந்தும் தனது பின்பற்றாளர்களாகக் கொண்டிருந்தார். ரூமியின் மீது தாக்கம் செலுத்திய அரசியல் நிகழ்வுகள் மற்றும் சமயக்கல்வி குறித்து “Rumi’s Secret” புத்தகத்தில் கூச் விவரிக்கிறார். “ரூமி ஒரு மதப்பற்றுள்ள குடும்பத்தில் பிறந்தவர், மேலும் அவர் தனது அன்றாட தொழுகைகளை நிறைவேற்றுபவராகவும் இருந்தார். இன்னும் தனது வாழ்நாள் முழுவதும் நோன்பை கடைபிடிப்பதை விடவில்லை,” என்று எழுதுகிறார் கூச். இருந்தாலும், கூச்சின் புத்தகத்தில் கூட ரூமி தனது பின்னணியைக் கடந்தார் என்றும்- அதை அவரது வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால்- “அவர் அமைப்பாக்கப்பட்ட எல்லா மதங்களையும் கடந்து ’அன்பின் மதத்தை’ கோரினார்” என்றும் முடிக்க விரும்பியிருக்கிறார். இவ்வாறு கூச்சின் புத்தகத்தில் (ரூமியின் ஆழ்ந்த மதப்பற்று) குறித்த உண்மைகளுக்கும், கூச் முடிக்க விரும்பிய விதத்திற்கும் இடையே ஒரு மோதல் நடக்கிறது. இத்தகைய வாசிப்பில், ரூமியின் முஸ்லிம் கல்வி தான் அவரது இத்தகைய கருத்துகளை கூட வடிவமைத்தது என்பதை தவறவிட்டுவிடுவர். முஜத்திதி குறிப்பிடுவது போல, கிறிஸ்தவர்களையும், யூதர்களையும் “வேதத்தை உடைய மக்கள்” என குர்ஆன் குறிப்பிடுவதுதான் பிரபஞ்சமயத்திற்கான ஆரம்பப் புள்ளி ஆகும். “ரூமியிடம் இன்று பலரும் வியந்தோதும் பிரபஞ்சமயம் (Universality) அவரது முஸ்லிம் உள்ளடக்கத்திலிருந்து தான் வருகிறது.”
ரூமியின் கவிதைகளை இஸ்லாமிய நீக்கம் செய்வது கோல்ட்ப்ளே வுக்கு நீண்ட காலம் முன்னரே ஆரம்பித்துவிட்டது. ட்யூக் பல்கலைக்கழகத்தில், மத்தியக் கிழக்கு மற்றும் இஸ்லாமிய கற்கைகளுக்கான துறையின் பேராசிரியர் ஒமைத் சஃபி விக்டோரிய காலத்தில் இருந்துதான் மேற்கு மெய்ஞானக் கவிதைகளை அதன் இஸ்லாமிய வேர்களில் இருந்து பிரித்தெடுக்கும் வேலையைத் தொடங்கியது என்று கூறுகிறார். அக்காலத்தைய மொழிபெயர்ப்பாளர்களும், இறையியலாளர்களும், (வித்தியாசமான ஒழுக்க விதிகள் மற்றும் சட்ட விதிகள் கொண்ட) பாலைவன மதத்தைப் பற்றி தாங்கள் கொண்டிருந்த கருத்துகளையும், ஹாஃபிஸ் மற்றும் ரூமியின் படைப்புகளையும் ஒருங்கே ஏற்க முடியவில்லை. சஃபி என்னிடம் கூறியது போன்று அவர்கள் கீழ்க்காணும் விளக்கத்திற்கு வரவேண்டியதாகிவிட்டது. “இவர்கள் இஸ்லாத்தின் காரணமாக மெய்ஞானிகளாக இல்லை. மாறாக இஸ்லாத்தில் இருந்தும் கூட மெய்ஞானிகளாக இருந்தார்கள்” (These people are mystical not because of Islam but inspite of it.) இத்தகைய காலகட்டத்தில் தான் சட்டரீதியான பாரபட்சம் காட்டப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார்கள். 1790 இல் ஐக்கிய அரசுகள் (United states) முஸ்லிம்கள் நுழைவதற்கான எண்ணிக்கையை குறைத்தது, மேலும் அதற்கு ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு அமெரிக்க உச்ச நீதிமன்றம் “முஸ்லிம் நம்பிக்கையில் இருக்கும் மக்கள், ஏனைய மக்கள் குழுக்கள் அனைவர் மீதும் கடுமையான குரோதம் காட்டக்கூடியவர்களாக இருக்கிறார்கள், குறிப்பாக கிறிஸ்தவர்களிடம்” என்று வர்ணித்தது. 1898 இல் மஸ்னவியின் மொழிபெயர்ப்புக்கான தனது முன்னுரையில் ஜேம்ஸ் ரெட்ஹவுஸ் இவ்வாறு கூறுகிறார், “மஸ்னவி கடவுளை அறியவும், அவரோடு ஒன்றவும் இந்த உலகத்தை விட்டு நீங்கி, தனது சுயத்தை அழித்து, ஆன்மீக தியானத்தில் ஈடுபடுபவர்களை நோக்கி பேசுகிறது” என்கிறார். மேற்கில் இருப்பவர்களுக்கு இஸ்லாமும் ரூமியும் பிரிக்கப்பட்ட வெவ்வேறானவை. இருபதாம் நூற்றாண்டில், RA நிக்கல்சன், AJ அர்பெர்ரி மற்றும் அன்னிமேரி ஸ்கிம்மெல் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக வந்து ஆங்கில மொழி படைப்பிலக்கியத்தில் ரூமியின் இருப்பை உறுதிப்படுத்தினார்கள். ஆனால் பார்க்ஸ் தான் ரூமியின் வாசகர் வட்டத்தை பாரிய அளவில் விசாலப்படுத்தியது. அவர் ஒரு மொழிபெயர்ப்பாளர் என்பதை விட விளக்கவுரையாளர் என்று சொல்வது தகும். அவருக்கு பாரசீக மொழி எழுதவோ படிக்கவோ தெரியாது. மாறாக அவர் பத்தொண்பதாம் நூற்றாண்டு மொழிபெயர்ப்பை கவிதை நடைக்கு மாற்றுகிறார்.
அது குறிப்பானதொரு கவிநடை சார்ந்தது. பார்க்ஸ் 1937 ஆம் ஆண்டு டென்னிஸி மாகாணம் சட்டநூகாவில் (Chattanooga) பிறந்தார். அவர் ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம்பெற்று, “பழரசம்” (The Juice) என்ற பெயரில் தனது முதல் கவிதைத் தொகுதியை வெளியிட்டார். ராபர்ட் ப்ளை (Robert Bly) என்ற இன்னொரு கவிஞர் அர்பெர்ரியின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ள ரூமியின் கவிதைகளை பார்க்ஸிடம் கையளித்து அதை “அவற்றின் சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். அப்போதுதான் பார்க்ஸே ரூமியைக் குறித்து முதன்முதலாக அறிகிறார் (ப்ளையும் ரூமியின் சில கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறார்). பார்க்ஸ் ஒருபோதும் இஸ்லாமிய இலக்கியங்களை கற்றுணர்ந்தவர் அல்ல. அதற்குப் பிறகு சில காலமே கழிந்திருந்த நிலையில் அவர் ஒரு கனவு கண்டதாக, அவரது ஜார்ஜியா இல்லத்தில் இருந்துகொண்டு என்னிடம் தொலைபேசியில் கூறினார். அந்தக் கனவில் ஆற்றோரத்தில் ஒரு சிறிய முகடின் மீது தான் நின்றுகொண்டிருப்பது போன்றும், ஒளிவட்டம் பொருந்திய ஒரு மனிதர் தோன்றி “நான் உன்னை நேசிக்கிறேன்” என்று தன்னிடம் சொன்னதாகவும் கூறினார். பார்க்ஸ் அந்த மனிதரை அதற்கு முன் சந்தித்ததில்லை, ஆனால் அதன்பிறகு ஃபிலடெல்ஃபியாவில் உள்ள சூஃபி தரீக்கா ஒன்றில் அவரை சந்தித்திருக்கிறார். அவர்தான் அந்த வழியமைப்பின் தலைவர். பார்க்ஸ் தனது மதிய பொழுதுகளை ப்ளை தன்னிடம் கொடுத்திருந்த விக்டோரிய காலத்து மொழிபெயர்ப்பை படிப்பதிலும் அதை நவீன மொழிக்கு ஏற்றவாறு மறுகட்டமைப்புச் செய்வதிலும் ஈடுபட்டார். அதற்குப்பிறகு, அவர் ஒரு டஜன் ரூமி புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார்.
எங்களது உரையாடலில் பார்க்ஸ் ரூமியின் கவிதைகளை “இதயத்தை திறக்கும் மந்திரம்” என்றும் “மொழியில் விவரித்துவிட முடியாத ஒரு பொருள்” என்றும் கூறினார். அந்த விவரிக்க முடியாத பொருளை அடைவதற்கு ரூமியின் படைப்புகளில் சில சலுகைகளை எடுத்துக்கொண்டிருக்கிறார். ஒன்று மட்டும் நிச்சயம், அவர் இஸ்லாமைக் குறித்த குறிப்புகளை குறைத்திருக்கிறார். பிரபலமான கவிதையான “இது போல” (Like this) ஐ எடுத்துக்கொள்வோம். “யாராவது ஒருவர் ஹூர் எப்படி இருப்பார்கள் என்று உன்னிடம் கேட்டால், உன் முகத்தை காண்பித்து இது போல் என்று சொல்” என்பதாக அர்பெர்ரி மூலத்துக்கு உண்மையாக மொழிபெயர்த்திருக்கிறார். ஹூர்கள் என்போர் இஸ்லாமின் படி வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்து கன்னியர்கள் ஆவர். பார்க்ஸ் அவ்வார்த்தியை அப்படியே அதன் நேர்பொருளாக கூட மொழிபெயர்க்கவில்லை. அவரது மொழிபெயர்ப்பில், “யாராவது உன்னிடம் பாலியல் வேட்கையின் பூரணமான திருப்தி எவ்வாறு இருக்கும் என்று உன்னிடம் வினவினால், உன் முகத்தை உயர்த்தி, ‘இது போல’ என்று சொல்”, என்று மாறுகிறது. இங்கு அதன் மத உள்ளடக்கம் நீக்கம் செய்யப்படுகிறது. ஆனாலும் இதே கவிதையில் வேறு இடங்களில், இயேசுவையும், ஜோசப்பையும் பற்றிய குறிப்புகள் வரும் இடங்களில் மூலத்தில் வருவது போன்றே அவற்றை விட்டுவிடுகிறார். நான் அவரிடம் இது குறித்து வினவியபோது, தான் வேண்டுமென்றே இஸ்லாம் சம்பந்தப்பட்ட குறிப்புகளை நீக்கியிருக்கிறேனா என்பதை தன்னால் நினைவுபடுத்திப்பார்க்க முடியவில்லை என்று சொன்னார். “நான் ஒரு ப்ரிஸ்பெட்டேரியனாக வளர்ந்தேன். அப்போதெல்லாம் நான் பைபிள் வசனங்களை மனனம் செய்துகொண்டிருப்பேன். மேலும் நான் குர்ஆனை விட புதிய ஏற்பாட்டை நன்றாக அறிவேன்” என்று கூறினார். மேலும் அவர் “குர்ஆன் வாசிப்பதற்கு கடினமாக இருக்கிறது” என்றும் சேர்த்துக் கொண்டார்.
பலரையும் போலவே, ஒமித் சஃபியும் ரூமியை லட்சக்கணக்கான வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியதற்காக பார்க்ஸை பாராட்டுகிறார்; ரூமியை அமெரிக்க கவிதை நடைக்கு மாற்றும் முயற்சியில், பார்க்ஸ் தனது குறிப்பிடத்தகுந்த நேரத்தை கவிஞரின் படைப்புகளையும், வாழ்க்கையையும் ஆராதிப்பதில் கழித்திருக்கிறார். மூலத்திலிருந்து இன்னும் அதிகமாக பிரித்தெடுக்கப்பட்ட வேறு பிரதிகளும் நிறைய இருக்கிறது. உதாரணத்திற்கு தீபக் சோப்ரா மற்றும் டேனியல் லேடின்ஸ்கியின் ‘நவ யுக’ புத்தகங்களைச் (New Age books) சொல்லலாம். அவை ரூமி என்ற பெயரால் சந்தைப்படுத்தப்பட்டு விற்கப்பட்டிருந்தாலும் கவிஞரின் படைப்புக்கும் அவற்றுக்கும் மிகக்குறைவான சம்பந்தமே இருக்கிறது. Spiritual works இன் ஆசிரியரும், மாற்று மருத்துவ முறை ஆர்வலருமான தீபக் சோப்ரா அவரது கவிதைகள் ரூமியின் வார்த்தைகள் அல்ல என்பதை ஒத்துக்கொள்கிறார். மாறாக, “ரூமியின் காதல் கவிதை”களுக்கு அவரது முன்னுரையில் அவர் எழுதியுள்ளபடி, அவையெல்லாம் “ஃபார்ஸி மூலத்திலிருந்து சிந்திய ஒளிச்சிதறல்களை வார்த்தைகளால் வடித்து, தேக்கிவைக்கப்பட்ட ‘உணர்வு நிலைகள்’ (moods). இவ்வாறு மூலத்தின் சாராம்சத்தை இருத்திவைத்துக் கொண்டே, ஒரு புதிய படைப்புக்கு உயிர் அளிக்கப்பட்டுள்ளது.”
இத்தகைய நவ யுக “மொழிபெயர்ப்புகள்” பற்றி பேசும்பொழுது சஃபி, “ஒரு வகையான ஆன்மீக காலனித்துவம் இதில் செயல்படுவதை நான் காண்கிறேன்: கடந்து செல்லுதல், நீக்கம் செய்தல், மற்றும் போஸ்னியா, இஸ்தான்புல், கொன்யா, ஈரான், மத்திய மற்றும் தென் ஆசியாவைச் சேர்ந்த முஸ்லிம்கள் வாழ்ந்து, சுவாசித்து தங்களுக்குள் அகவயப்படுத்திக் கொண்ட ஆன்மீக நிலப்பரப்பை ஆக்கிரமித்தல்” என விவரிக்கிறார். மத உள்ளடக்கத்தில் இருந்து ஆன்மீகத்தை வடிகட்டி எடுத்தல் மிகுந்த நெருக்கடியை அளிக்கக் கூடியது. டொனால்ட் ட்ரம்ப் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜெனரல் பொறுப்புக்கு தேர்ந்தெடுத்திருக்கும் மைக்கேல் ஃப்ளின் உட்பட (அமெரிக்காவின்) கொள்கை வகுப்பாளர்கள் நாகரீக வளர்ச்சிக்கு வெள்ளை அல்லாத குழுக்கள் பங்களிப்புச் செய்ததில்லை என்று இன்றும் கூட கூறுகிறார்கள். இந்த நிலையில் தான் இஸ்லாமும் தினம் தினம் “புற்று நோய்” போல கண்டறியப்பட்டு சிகிச்சை செய்யப்படுகிறது.
பார்க்ஸைப் பொறுத்தவரை அவர் ரூமியின் சாராம்சத்துக்கு மதத்தை இரண்டாம் பட்சமாக கருதுகிறார். “மதம் என்பது சர்ச்சைக்குரிய விவாதங்களின் புள்ளியாகத் தான் இந்த உலகில் இருக்கிறது,” என்று அவர் என்னிடம் சொன்னார். “நான் எனது உண்மையை பெற்றுக்கொண்டேன், நீங்கள் உங்களது உண்மையை பெற்றுக்கொண்டீர்கள்- இதெல்லாம் அர்த்தமில்லாதது. நாம் எல்லோரும் இதில் இருக்கிறோம் மேலும் நான் எனது இதயத்தை திறக்கப் பார்க்கிறேன், ரூமியின் கவிதை அதற்கு உதவுகிறது.” ஒருவர் இந்த தத்துவத்தில் ரூமியின் கவிதை குறித்த அணுகுமுறையின் கூறுகளை காணலாம். ரூமி கவிதையின் ராகத்துக்கு பொருந்தி வருவது போன்று குர்ஆனிய சொற்றொடர்களை மாற்றியமைத்தார்: ஆயினும் ரூமியின் பெரும்பாலான பாரசீக வாசகர்கள் இந்த உத்தியை கண்டறிந்து விடும்போது, மிகக்குறைவான பேர்களைத் தவிர ஏனைய அமெரிக்க வாசகர்கள் இந்தக் கவிதைகளின் இஸ்லாமிய சட்டகம் பற்றி அறியாதவர்களாகவே இருப்பார்கள். சஃபி குர்ஆனை விட்டுவிட்டு ரூமியை வாசிப்பதை, பைபிள் தெரியாமல் மில்டனை வாசிப்பதோடு ஒப்பிட்டார்: ரூமி வைதீகவாதியாக இல்லாமலேயே (Heterodox) இருந்தாலும் அவர் முஸ்லிம் உள்ளடக்கத்தில் தான் அவ்வாறு இருக்கிறார் என்பதையும், நூற்றாண்டுகளுக்கு முன்பேயே இஸ்லாமிய கலாச்சாரத்தில் இத்தகைய அவைதீகத்துக்கு இடமிருந்திருக்கிறது என்பதையும் அங்கீகரிக்க வேண்டும். ரூமியின் படைப்புகள் வெறுமனே மத அடுக்குகளின் தொகுப்பு அல்ல; மாறாக அவை இஸ்லாமிய புலமைத்துவத்தில் (Islamic Scholarship) நடந்த வரலாற்று முரணியக்கத்தையும் காட்டுகிறது.
ரூமி குர்ஆன், ஹதீஸ் மற்றும் மதத்தின் வழக்கமான வாசிப்பை (Conventional reading) கேள்விக்குட்படுத்தி வேறு வேறு தளங்களை நோக்கிய வாசிப்பில் ஆழ்ந்து சென்றார். பார்க்ஸின் பிரபலமான ஒரு மொழிபெயர்ப்பு இவ்வாறு செல்கிறது: “நன்மை செய்தல் மற்றும் தீமை செய்தல் ஆகிய கருத்துகளுக்கு அப்பால் ஒரு திணை இருக்கிறது. / அங்கு நான் உன்னை சந்திப்பேன்.”
ஆனால் மூலப்பிரதியில் “நன்மை செய்தல்” மற்றும் “தீமை செய்தல்” ஆகிய வார்த்தைகளே இல்லை. ரூமி எழுதிய வார்த்தைகள் ஈமான் (“மதம்”) மற்றும் குஃப்ர் (இறை நிராகரிப்பு). நம்பிக்கையின் அடிப்படை மதக்கோட்பாடுகளில் அல்ல, மாறாக அது ஒப்புறவு மற்றும் நேசித்தலின் உயர்ந்த தளத்தில் தான் இருக்கிறது என்று ஒரு முஸ்லிம் அறிஞர் சொல்வதை நினைத்துப் பாருங்கள். எதை நாமும், ஒருவேளை நிறைய முஸ்லிம் மதகுருமார்களும், தீவிரமான கருத்தாக (Radical) கருதுவோமோ, அதை ரூமி எழுநூறு வருடங்களுக்கு முன்பே சொல்லிவிட்டார்.
இத்தகைய வாசிப்புகள் எல்லாம் அப்படியொன்றும் அரிதான விஷயமாக அப்போது இருக்கவில்லை. ரூமியின் படைப்புகள் மதவகைப்பட்ட ஆன்மீகத்துக்கும், நிறுவன மயப்பட்ட நம்பிக்கைக்கும் நடுவில் நடந்த முரணியக்கம் ஆகும். அதை ஒப்பிலா கூர்மதியோடு அவர் செய்தார். “வரலாற்றுப் பூர்வமாக பார்த்தால், குர்ஆன் தவிர்த்து ரூமியும் ஹாஃபிஸும் போன்று வேறு எந்தப் பிரதியும் முஸ்லிம் சிந்தையை வடிவமைத்ததில்லை. இதனால் தான் எழுத்தர்கள் கையால் எழுதி நூலை பாதுகாக்க வேண்டிய காலத்தில் எழுதப்பட்ட, பெரிய அளவு கொண்ட ரூமியின் படைப்புகளால் உயிர் பிழைக்க முடிந்திருக்கிறது.
“மொழி என்பது வெறும் தொடர்புறுத்தலுக்கான ஊடகம் மட்டுமல்ல, அது நினைவின், பாரம்பரியத்தின், கலாச்சார முதுசத்தின் சேமிப்புக் களன்” என்கிறார் எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும் ஆன சினான் அண்ட்டூன் (Sinan Antoon). இரு கலாச்சாரங்களுக்கு இடையிலான இணைப்பு பாலமாக இருப்பதனால், மொழிபெயர்ப்பாளர்கள் மேற்கொள்வது ஒரு அரசியல் வேலைத்திட்டம் (Political project) ஆகிறது. பதின்மூன்றாம் நூற்றாண்டு கவிஞர் தற்கால அமெரிக்க வாசகருக்கு புரியும் வண்ணம் அவர்கள் தான் ஒரு வழி ஏற்படுத்த வேண்டும். ஆனால் அவர்கள் மூலப்பிரதிக்கு உண்மையாக இருக்க வேண்டும். அதன்மூலம், ரூமியின் விஷயத்தில், ஒரு ஷரியாத் துறை பேராசிரியரும் கூட உலகம் முழுக்க விரும்பி படிக்கப்படும் காதல் கவிதைகளை எழுத முடியும் என்று வாசிப்பவர்களால் அங்கீகரிக்க முடியும்.
ஜாவித் முஜத்திதி சில ஆண்டுகள் கோரும் வேலைத்திட்டமான ‘மஸ்னவி’யின் ஆறு புத்தகங்கள் அனைத்தையும் மொழிபெயர்த்தலில் ஈடுபட்டுள்ளார். அவற்றில் மூன்று ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. நான்காவது வரும் வசந்தத்தில் வெளியாகிறது. அவரது மொழிபெயர்ப்பில் குர்ஆன் வசனங்கள் வரும் இடங்களை வாசகர் அறிந்துகொள்ளும் பொருட்டு சாய்வெழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. அவரது புத்தகம் வேண்டிய அளவு ஏராளமான அடிக்குறிப்புகள் இடப்பட்டுள்ளது. அவற்றை வாசிப்பது முயற்சியையும், ஒருவரது முன்முடிவுகளைத் தாண்டி கற்றுக்கொள்ளும் ஆர்வத்தையும் கோருவதாகும். அந்நியமானதைப் புரிந்துகொள்ளுதல் (To understand the foreign), அதுதானே மொழிபெயர்ப்பின் நோக்கமும். கெஷாவர்ஸ் கூறுவது போன்று, மொழிபெயர்ப்பு என்பது ”எல்லாவற்றுக்கும் ஒரு வடிவமும், ஒரு கலாச்சாரமும், ஒரு வரலாறும் இருக்கிறது” என்ற நினைவுபடுத்தல் தானே. “ஒரு முஸ்லிமும் அவ்வாறு இருக்க முடியும்.”