கணவன், மனைவி இருவரும் அலுவலகம் செல்லும் ஒரு நகரத்துக் குடும்பம். அந்தக் குடும்பத்தின் ஒரே வாரிசு தேவா. தனியார் பள்ளியில் இரண்டாவது படிக்கும் மாணவன்.
கணவன், மனைவி வேலைக்குச் செல்லும் பல குடும்பங்களைப் போல காலை நேரப் பரபரப்பு அந்தக் குடும்பத்திற்கும் வாடிக்கை. மாலையும் பெற்றோர் இருவரும் அலுவலகம் முடிந்து வீடு திரும்ப நேரம் ஆகுமென்பதால் வாரத்தின் மூன்று நாட்கள் இசை வகுப்பும், மூன்று நாட்கள் கராத்தே வகுப்புக்கும் அனுப்பப்படுகிறான். அவன் வீட்டுத் தோட்டத்தில் மலர்ந்துள்ள ஒரு ரோஜாப்பூவை ஆசையாய்த் தொட்டு ரசிக்க நினைக்கிறான். இது என்ன அவ்வளவு பெரிய பேராசையா? ஆனால் அவனுக்கு இருக்கும் இந்தச் சிறிய ஆசையை கூட நிறைவேற்ற இயலாத இச்சமூகக் கட்டமைப்பைப் பற்றி “ரோஸ்” என்னும் இந்நாவல் வலிக்க வலிக்கப் பதிவுசெய்கிறது. ஆயிஷா என்னும் நாவலில் நாயகி ஆயிஷா இறந்து போவதால் நமக்கு உண்டாகும் வலிக்கு எந்தவித குறைவும் கிடையாது இந்நாவலின் நாயகன் தேவாவிற்கு அவன் தோட்டத்தில் மலர்ந்த ரோஜாவை தொட்டு ரசிக்க முடியாததால் வரும் காய்ச்சல்.. இனி நாவலின் பாதையில் சற்று பயணிப்போம்.
வழக்கம்போல ஒரு பரபரப்பான காலை நேரம். படுக்கையிலிருந்து எழுந்த தேவா தன் தந்தையிடம் கேட்கிறான்.
“நேத்திக்கு நம்ம ரோஜா செடியில ஒரு மொட்டு இருந்திச்சிப்பா… இன்னிக்கு பூத்திருக்குமில்ல.”
அதற்கு அவன் அப்பா, “இன்னும் பிரஷ்ஷ பல்லுல வைக்கல… நீ போ.. பாத்ரூமுக்கு போயிட்டு வா” என்கிறார்.
இதற்கு தேவா , “ஜன்னல திறந்துவிடுங்கப்பா… பூப் பூத்திருக்கான்னு பாக்கனும்” என்கிறான்.
“நீ இன்னைக்கு உதை வாங்கப்போற” இது தேவாவின் அப்பா. எப்படியோ தன் தோட்டத்தில் பூத்திருக்கும் ரோஜாவை ஜன்னலிலிருந்து பார்த்து விடுகிறான். ஆசையாய் அதைப் பார்க்கச் செல்லும் தேவாவை “ஆமா ரோஜாவையே பாத்ததில்ல பாரு” எனக் கூறி அவன் அப்பா தடுத்து வி்டுகிறார். மொத்த குடும்பமும் பரபரப்பாய் கிளம்பி வெளியே வருகிறது. அப்போது ஆசையாய் ரோஜாவைப் பார்க்கச் செல்கிறான். இப்போது அவன் அம்மா “ஸ்கூல் விட்டு வந்ததும் பாத்துக்கலாம்.. இப்போ டயம் இல்ல..” என தேவாவை அள்ளிப்போட்டு அழைத்துச் செல்கின்றனர். போகும் வழியில் தேவாவிற்கு அழகான கலர் பென்சில் பெட்டி வாங்கித் தருகின்றனர். ஆனால் மனம் முழுக்க தேவாவிற்கு தன் வீட்டு ரோஜாவின் நினைவாகவே உள்ளது.
பள்ளிக்குச் செல்லும் தேவா, அங்கு காலை வணக்கக் கூட்டத்தில் பேப்பரைக் கொண்டு காகித ரோஜாவினை எவ்வாறு செய்வது என்பதை விளக்குகின்றனர்.
அடுத்து வகுப்புக்கு வந்து பூக்களைப் பற்றி பாடம் நடத்தும் ஆங்கில ஆசிரியையிடம், தேவா தன் வீட்டில் பூத்திருக்கும் ரோஜாவைப் பற்றிக் கூறுகிறான். அதற்கு அவர், “செடில ரோஸை பார்க்கிறது பெரிசில்ல…. ஆர்...ஓ...எஸ்...இ..ரோஸ்…. ரோஸ்னு எழுதிப்பாரு… ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம… கரெக்டா எழுதிப் பழகு… புரியுதா… உட்கார்…” என்கிறார்.
அடுத்த வகுப்பில் தமிழம்மாவிடமும் தன் வீட்டு ரோஜாவைப் பற்றி தேவா கூற அவர் , “ரோஜானு சொல்லக்கூடாது.. ஜ…. வடமொழிச்சொல்… ரோசானு வேணா சொல்லலாம்..” என்கிறார்.
அடுத்து வரும் அறிவியல் ஆசிரியையிடம் தேவா தன் வீட்டு ரோஜா பற்றி கூற, “கொஞ்சம் விட்டா நான்சென்ஸா கேள்வி கேப்பிங்களே… எடு.. புக்க… படி… ரோஸ் ஈஸ் எ ஃபிளவரிங் பிளான்ட்” என்கிறார்.
டிராயிங் ஆசிரியரோ வகுப்பில் ரோஜா படம் வரையச் சொல்ல, அவரிடமும் தன் வீட்டு ரோஜாவைப் பற்றி தேவா சொல்ல அவரோ, “ரோஜா செடின்னு இருந்தா…. ரோஜாப்பூவுன்னு ஒன்னு பூக்கத்தான் செய்யும்…. பெரிய அதிசயமாக்கும்… எவ்வளவு பெரிசா வரைஞ்சிருக்கேன் பாரு… நீட்டா… அதே மாதிரி வரைங்க பாப்போம்” என்கிறார்.
சமூக அறிவியல் ஆசிரியையிடமும் தன் வீட்டு ரோஜா பற்றி தேவா கூற, “மண் வளம் … சாயில் பவர் … நல்லாயிருந்தா ரோஜா பூக்கரதுக்கு என்ன? நல்லாவே பூக்கும்” என்கிறார். அவரிடம் ரோஜா கலர் என்ன மிஸ்… என்று தேவா கேட்கிறான். அதற்கு அவரோ, “ஏய் சாயில் பத்தி பாரு… கண்ட கண்ட கேள்வியெல்லாம் கேட்காதே” என்று அடுத்த பாடப்பகுதி செல்கிறார்.
இவ்வாறு அந்நாள் முழுவதும் தன் வீட்டு ரோஜா பற்றிய நினைவிலேயே இருக்கிறான் தேவா.
மாலையில் கராத்தே வகுப்பு முடிந்தும் தன்னை அழைத்துப்போக இன்னும் தனது பெற்றோர் வராததால் பள்ளி வாட்ச்மேன் தாத்தாவிடம் பேச்சு கொடுக்கிறான். அவரிடமும் ரோஜாப்பூ பற்றியே கேட்கிறான். அவரும் சில பதில்களுக்கு மேல் எதுவும் சொல்லவில்லை.
கால தாமதமாக வரும் பெற்றோர், அவனை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று உணவு வாங்கித் தந்து வீட்டுக்கு இருட்டில் அழைத்துச் செல்கின்றனர். வீட்டுக்குச் சென்றவுடன் தேவா தன் வீட்டு ரோஜாவைப் பார்க்க முயற்சி செய்ய, அவன் பெற்றோர் விடவில்லை. வீட்டின் உள்ளே சென்று ஜன்னல் வழியே ரோஜாவைப் பார்க்க அது வாடிக்கிடக்கிறது. வருத்தத்துடன் உறங்கச் செல்கிறான் தேவா. தூக்கத்தில் , “அம்மா நம்ம ரோஜா செடி இன்னொரு பூ பூக்குமாம்மா… ஏம்மா அந்தப் பூ வாடிப்போச்சு… அம்மா எனக்கு ரோஜாவ பாக்கணும்மா… நிஜ ரோஜா… மிருதுவான ரோஜா.. அதைத் தொட்டுப் பாக்கணும்மா…” என்று காய்ச்சலுடன் பிதற்றுகிறான்.
இந்நாவலில் தேவாவின் விருப்பமாக வரும் ரோஜா ஒரு குறியீடு. குழந்தைகளுக்குப் பிடிக்கும் எத்தனை எளிய விஷயங்களை நாம் இந்த வணிகமயமாக்கப்பட்ட மனப்பாடக் கல்வி முறையால் குழந்தைகளுக்குத் தர மறுக்கிறோம் என்பதை வலியுடன் பதிவு செய்திருக்கும் அழகிய பதிவு இந்நூல். இக்கதையில் வரும் ரோஜா போல, ம.நவீனின் வகுப்பறையின் கடைசி நாற்காலி நூலில் ஒரு மாணவன் பள்ளியின் விளையாட்டு அறையிலேயே கிடக்கும் ஒரு கால்பந்தை உதைத்துப் பார்க்கவும், உதைத்தால் அந்தப் பந்து எவ்வளவு செல்லும் என்பதையும் பாரக்க பெரு விருப்பு கொள்வான். அவனது ஆசை புதிதாக அப்பள்ளிக்கு வரும் ஒரு ஆசிரியரால் நிறைவேறும்.
ஆனால் இந்நாவலில் தேவாவின் எளிய ஆசை ஒரு நிறைவேறாத ஆசையாகவே நாவல் முடிந்து போகிறது. வலியுடனே எனது பதிவை நிறைவு செய்கிறேன். ஏற்கனவே சொல்லியபடி இந்நாவலும் ஆயிஷா போன்றதொரு நாவலே. உங்களை நிச்சயம் உலுக்கும். இது யாரையும் குறை கூறும் நாவலல்ல. நம்மை சுய பரிசோதனை செய்து கொள்ளச் சொல்லும் நாவல்.